திங்கள், 10 ஆகஸ்ட், 2020

1598. சா. கந்தசாமி -1

தி.ஜானகிராமன்
 சா. கந்தசாமி  



31 ஜூலை , 2020 அன்று காலமான  பிரபல எழுத்தாளர் சா கந்தசாமிக்கு அஞ்சலியாக அவர் எழுதிய ஒரு கட்டுரையை இடுகிறேன்.

 தினமணியில் 2019-இல் "என்றும் நிற்பவர்கள்" என்ற தொடரில் வந்த  கட்டுரை இது.  தி,ஜா.வின் நூற்றாண்டிற்கும் பொருந்தும் ஒரு பகுதியுள்ள கட்டுரை.

=========


எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதை விட எப்படி எழுத ஆரம்பிக்கும் நிலைக்கு வருகிறேன் என்று சொல்வது தான் இன்னும் பொருந்தும். புகையிலையை மென்று கொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றிச் சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற, வழி காணாமல் தவிக்கிற, வழி காண பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கிறேன். சாப்பிடும் பொழுது, யாருடனோ பேசும் பொழுது, வேறு ஏதோ எழுதும் பொழுது இந்த அமர்க்களமும் தவிப்பும் நடந்து கொண்டே தானிருக்கிறது. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுத முடிகிறது.
- தி.ஜானகிராமன்

சென்னை ராமேஸ்வரம் செல்லும் போட்மெயில் ரயில்வே தடத்தில் மாயவரம் என்னும் மயிலாடுதுறை இருக்கிறது. அது ஒரு நூற்றாண்டு கண்ட ரயில்பாதை. சென்னை எழும்பூரில்  டிக்கெட் எடுத்தால் கடலூர் சிதம்பரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை வழியாக ராமேஸ்வரம் போய்விடலாம். அங்கிருந்து நேராகச் சென்று கடற்கரையில் நிற்கும் போட்டில் ஏறி, கடலில் பயணித்து இலங்கையில் உள்ள கொழும்புக்குப் போய்விடலாம். போட்டை இணைக்கும் மெயில் எனவே ரயில் "போட்மெயில்' என்று அழைக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் புறப்பட்ட போட்மெயில் காவிரி ஆற்றைத் தாண்டி வந்து நிற்குமிடம் மயிலாடுதுறை சந்திப்பு. அது பல நடைமேடைகள் கொண்டது. கடைசி நடைமேடை நீண்டது. அகலமான அதில் நிழல் தரும் புங்கை மரங்கள் வளர்த்து இருந்தார்கள். சிமெண்ட் பெஞ்சுகள் போட்டிருந்தார்கள்.

வெளியூர் போக பகல் வண்டி பிடிக்க வந்தவர்கள்; வேலையற்ற உள்ளூர்வாசிகள், தலைவர்களை வரவேற்க வந்த அரசியல் கட்சித் தொண்டர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். இரவு பொழுதில் சில நாட்கள் இசைக் கச்சேரி நடைபெறும். பெரிய பெரிய சங்கீத வித்வான்கள் ஜமக்காளத்தில் அமர்ந்து பாடுவார்கள். ஏராளமான ரசிகர்கள் கூடி சங்கீதம் கேட்பார்கள். நான் என் இளம் பருவத்தில் மயிலாடுதுறை ரயில்வே நடைமேடையில் சங்கீதம் கேட்டிருக்கிறேன்.

1946-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி மதுரையில் இருந்து ரயிலில் மயிலாடுதுறை வருகிறார் என்று அத்தை, சகோதரர்கள் எல்லாம் காலைப் பொழுதில் ரயிலடிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். நான் காவிரி கரையில் வந்து ரயில் நிலையம் சென்றேன். பெரிய கூட்டம். ஆண்கள், பெண்கள், நெசவாளர்கள் குடியானவர்கள், சமூகப் பிரமுகர்கள், காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் என்று பலரும் கூடி இருந்தார்கள். அவர்களோடு நானும் நின்றேன். ஆறு வயதாகி இருந்தது. காந்தியைப் பார்க்கும் ஆவலில் கூட்டத்தில் புகுந்து முன்னே சென்று நடைமேடையின் விளிம்பில் நின்று கொண்டேன்.

மதுரையில் இருந்து புறப்பட்ட ரயில் மெதுவாக வந்து மயிலாடுதுறையில் வந்து நின்றது. மக்கள் "மகாத்மா காந்திக்கு ஜே' "மகாத்மா காந்திக்கு ஜே' என்று கோஷம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து கொண்டு நானும் குரல் கொடுத்தேன். முன்னே சென்ற என்னை யாரோ பின்னால் இழுத்துவிட்டார்கள்.

தலை நிமிர்ந்து பார்த்தேன். மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியின் வாசலில்-இரண்டு கம்பிகளையும் பிடித்துக் கொண்டு நின்ற மகாத்மா காந்தி புன்னகைப் பூத்தார். கீழே இறங்கி கரம் குவித்து வணக்கம் தெரிவித்தார். கூட்டம் கட்டுக்கடங்காமல் மகாத்மா காந்திக்கு ஜே போட்டுக் கொண்டிருந்தார்கள்.

மக்கள் வாழுமிடம் என்பது மண் தரையோ; செங்கல் பரப்பப்பட்டதோ; கருங்கல் வேயப்பட்டதோ இல்லை. அது கலாசாரம் சார்ந்தது. பண்பில் வளர்ந்தது. கவிஞர்கள் எழுத்தாளர்கள் தன் படைப்புகளின் களமாக்கிக் கொண்டு விடுகிறார்கள். எனவே ஊர், நகரம், நாடு எழுத்துகளால் நிரந்தரமாக்கப்படுகிறது. பின்னால் அதுவே அடையாளமாக்கப்பட்டு வருகிறது.


தமிழின் மிகச் சிறந்த நாவலாசிரியரும், சிறுகதையாசிரியருமான தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் என்னும் தி.ஜானகிராமன் மயிலாடுதுறையில் பிறந்தவர் இல்லை.  ஆனால்,  மயிலாடுதுறையை உள்ளடக்கிய காவிரியாறு பாயும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் படைப்புகளில் காவிரியும், மயிலாடுதுறையும் இடம் பெற்று இருக்கிறது.
அவரின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று "சிலிர்ப்பு'. அது தமிழின் மகத்தான சிறுகதை. இந்திய மொழி சிறுகதைகளில் ஒன்றென சொல்லத்தக்கது. சிலிர்ப்பு ரயில் கதை. ரயிலில் தொடங்கி ரயிலில் முடியும் சிறுவர், சிறுமியின் கதை. உளவியல் சார்ந்தது. அன்பும் நேசமும் வயதால் வருவதில்லை என்பதைச் சொல்வது. அவரின் முழு படைப்பாற்றலும், ஆளுமையும் சிறுகதைகளில் தான் வெளிப்படுகிறது.

ஜானகிராமன் சமூகப் பிரச்னைகள், அரசியல் போராட்டங்கள் பற்றி எழுதியவர் இல்லை. அவர் குடும்பம், குடும்பத்தில் உள்ள பெண்கள், ஆண்கள் பிரச்னைகள், காதல், காமம் பற்றி கலாபூர்வமாக மனங்கவரும் முறையில் மொழியின் வசீகரத்தோடு எழுதியவர். அதுவும் திருமணமான பெண்களின் காமம், அவர்களின் இச்சை. அதனை அடையச் செய்யும் சாகசங்களை மிகையில்லாமல்-ஆபாசம் என்று சொல்ல முடியாதத் தொனியில் சொல்கிறார். ஒரு விதத்தில் கு.ப.ராஜகோபாலன் வாரிசு என்றும் அவரைக் குறிப்பிட வேண்டும். ஆனால் அவரை விட பரந்ததொரு களத்தில் சிறுகதைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார்.

அவர் தஞ்சாவூர் எழுத்தாளர் என்று பெயர் பெற்று உள்ளார். அதற்கு முக்கியமான காரணம் மொழி பேச்சுத் தமிழை மெருகு குலையாமல் எழுதி இருக்கிறார். அவர் தஞ்சாவூரின் எல்லா மக்களையும் கதாபாத்திரமாகக் கொண்டு எழுதவில்லை. ஆனால் சிலரை அடையாளம் காணும் விதமாக எழுதியிருக்கிறார். எழுதப்பட்ட வகையில் சிறப்பாகவே எழுதியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவரை முதன்முதலாக லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டத்தில் தான் சந்தித்தேன். படித்து  மகிழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. அவர் வேட்டிக்கட்டிக் கொண்டு இருந்தார். வெற்றிலைப் போட்டுக் கொண்டும் இருந்தார். சப்தமில்லாத விதத்தில் காது கொடுத்து கேட்கும் விதமாகப் பேசினார். கிருத்திகா, எம்.வி.வெங்கட்ராம் போன்றோர் அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள்.

நான் அவர் சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பது பற்றி, "கொட்டு மேளம்", "சிவப்பு ரிக்ஷா'  சிறுகதைத் தொகுப்புகள், "அமிர்தம்' நாவல் படித்திருப்பது பற்றி சொன்ன போது, பேச்சை என் பக்கம் திருப்பினார். படிப்பு, எழுத்து பற்றி விசாரித்தார். மயிலாடுதுறை என்றதும் தனக்குப் பிடித்தமான ஊரென்றும், துலா கட்டத்தில் காவிரியில் நீராடியிருப்பதாகவும் கூறினார்.
சென்னையில் நாங்கள் நடத்திய இலக்கியச் சங்க கூட்டங்கள் சிலவற்றுக்கு வந்திருக்கிறார். பேச அழைத்த போது மறுத்துவிட்டார். ஆனால் 1968-ஆம் ஆண்டில் நாங்கள் வெளியிட்ட "கோணல்கள்' விழாவில் கலந்து கொண்டார். "கோணல்கள்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றினார்.
1967-ஆம் ஆண்டில் அவரின் "அம்மா வந்தாள்'  வெளிவந்தது. அவரின் எல்லா நாவல்களும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தவை தான். ஆனால் "அம்மா வந்தாள்'- மொத்தமாக எழுதப்பட்டு வெளிவந்தது. இலக்கிய விமர்சனங்கள், பெண் எழுத்தாளர்கள் சிலர் அதனை ஆபாசமாக இருக்கிறது என்று தி. ஜானகிராமனையும், வெளியிட்ட லட்சுமி கிருஷ்ணமூர்த்தியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இலக்கியவாதி சி.சு.செல்லப்பா தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினார்.

"ஓர் இலக்கியவாதிக்கு எதிர்ப்பு வரும் போது, பதில் சொல்ல வேண்டியது அவசியமில்லை. ஆனால், இலக்கியம் என்பதன் பேரால் அவதூறு செய்யப்படும் போது பதில் சொல்வதும் அவசியமாகிறது. அம்மா வந்தாளின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், நான் பார்த்த ஏழெட்டுப் பாத்திரங்களின் சேஷ்டைகள் ஒருமித்து இருக்கின்றன. அந்த அம்மாள் நான் கண்ட ஐந்தாறு பெண்களின் கலவை. அகண்ட காவேரி, வேதபாடசாலை சென்னையின் பெரிய மனிதர்கள், சம்ஸ்கிருதமும் வேதாந்தமும் படிப்பது, தஞ்சை மாவட்டத்துப் பெரிய மிராசுதாரர்களின் லெüகீக அடாவடிகள் இப்படி எத்தனையோ சேர்ந்து எப்படியோ ஓர் உருவமாக வந்தன' என்று பதில் சொன்னார்.

எழுத்தாளர்கள் தன் படைப்புகள் பற்றி சொல்லும் நியாயத்தை யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுக்குத் தாங்கள் சொல்வதை சமூகம் ஏற்கும் படியாகத்தான் செய்வதில் ஆர்வம் இருக்கிறது. அவரின்" மரப்பசு' என்ற இன்னொரு நாவல் வெளிவந்தது. அதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. "அம்மா வந்தாள்'  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு  "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' யில்  வெளிவந்தது.

1979-ஆம் ஆண்டில் அவருக்கு ஐம்பத்தெட்டாகி இருந்தது. மிகச்சிறந்த எழுத்தாளர் என்று பெயர் பெற்று இருந்தார். அவர் மக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளராக இருந்தார். பல சமயங்களில் சாகித்ய அகாதெமி விருது பெறுவார் என்று கருதப்பட்டது. அது கடைசியாக "சக்தி வைத்தியம்'  என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

சாகித்ய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினராக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருந்த ராஜம் கிருஷ்ணன் ஆபாச எழுத்தாளருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று, சாகித்ய அகாதெமி தமிழ் ஆலோசனைக்குழுவில் இருந்து விலகிவிட்டார்.
உலகத்தில் இலக்கியம் என்று ஒன்று தான் இருக்கிறதே தவிர அற இலக்கியம், ஆபாச இலக்கியம் என்பது எல்லாம் கிடையாது. சனாதனிகள் தங்களுக்கு உகக்காததை மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதையெல்லாம் என்னென்னவோ பெயர் சூட்டி கீழே இறக்குகிறார்கள். புறந்தள்ளுகிறார்கள். தமிழில் ஆபாச எழுத்தாளர் என்று அறியப்பட்ட இலக்கிய எழுத்தாளர் ஜி.நாகராஜன். அவர் கம்யூனிஸ்டு முற்போக்கு எழுத்தாளர் என்ற முத்திரையுடன் எழுதியவர்.

ஓர் எழுத்தாளர் தானே குத்திக் கொள்ளும் முத்திரையும் மற்றவர்கள் குத்தும் முத்திரையும் எப்பொழுதும் அவரோடு இருப்பது இல்லை. சில முத்திரைகளை அவரே பிடுங்கி எறிந்து விடுகிறார். சிலவற்றை மற்றவர்கள் பறித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். அது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருவது தான்.

ஒர் எழுத்தாளனால் தான் எழுத்து, இலக்கியம் உருவாக்கப்படுகிறது என்றாலும், எழுத்தும், அதனைப் படைக்கும் எழுத்தாளனும் ஒன்று கிடையாது. உத்தமர்கள் போல வாழ்கிறவர்கள்; "அறமே வெல்லும்'  என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் பாலியல் வன்முறை சார்ந்தும், ஆபாசமாக எழுதுவதும் உண்டு. சம்பிரதாய வாழ்க்கை என்பதைத் தாண்டி கொலை, கொள்ளை, வன்முறைகளில் ஈடுபட்டவர்கள், சிறை சென்றவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், விலை மகளிர் எல்லாம் புனிதமாக- அறம் சார்ந்து எழுதுவது உண்டு. இரண்டும் மனித வாழ்க்கைதான். புற வாழ்க்கையை உபதேசத்தை வைத்துக்கொண்டு எதையும், யாரையும் மதிப்பிடக்கூடாது என்பது தான்.


ஜி.நாகராஜன் சம்பிரதாயமான வாழ்க்கை வாழவில்லை. பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நிரம்பப் படித்தவர். ராணுவத்தில் பணியாற்றியவர். கல்லூரியில் பாடம் போதித்தவர். ஆங்கிலம் அருமையாகச் சொல்லிக் கொடுக்கக்கூடியவர் என்று பெயரெடுத்தவர்.
அவரை முதன் முதலாக ஜெயகாந்தன் ஆழ்வார்பேட்டை மடத்தில் தான் சந்தித்தேன். வேட்டி கட்டிக்கொண்டு வெள்ளைச் சட்டைப் போட்டுக் கொண்டிருந்தார். இரண்டும் அழுக்காக இருந்தன. சுத்தமாகப் பேசினார். பேச்சில் பிசிறு இல்லை. முகவரி வாங்கிக் கொண்டார். ஒரு முறை வீட்டிற்கு வந்திருக்கிறார். நான் இல்லை. என் மனைவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவர் டீ போட்டுக் கொடுத்ததும் புத்தக அலமாரியில் இருந்த "சாயாவனம்' நாவலை எடுத்துக்கொண்டு "நான் மறுபடியும் படிக்கப் போறேன்' என்று போய்விட்டார்.

அசோகமித்திரன் தியாகராயநகர் வீட்டிற்கு இரண்டு முறை ஆட்டோவில் அழைத்துச் சென்று இருக்கிறேன். மிரண்டு போன அவர் பின்னர் நெடுநேரம் பேசினார்.ஜி.நாகராஜன் நாவல் "நாளை மற்றொரு நாளே'. தமிழ் நாவல் பரப்பில் முற்றிலும் வேறானது. விபசாரிகள்,  தரகர்கள் என்று வாழும் மக்கள் வாழ்க்கையை நேர்த்தியாக அவதூறு செய்யாமலும், ஆபாசம் மிளிராமல் சொல்வது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். செய்யும் தொழிலால் கெட்டவர்கள்-நல்லவர்கள் என்று மதிப்பிட முடியாது என்பது தான் நாவல்.

ஜி.நாகராஜன் எனக்கு உற்ற நண்பராகத்தான் இருந்தார். அவரின் அலைச்சல் நிறைந்த நாடோடி வாழ்க்கையில் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சந்தித்த போதெல்லாம் இனிமையான தருணங்களாகவே இருந்தன.

அவர் அதிகம் எழுதவில்லை. "நாளை மற்றொரு நாளே' என்ற நாவலை அண்ணாசாலையில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து எழுதினார். அதனை இப்ராகிம் நடத்தி வந்த "ஞானரதம்' என்ற மாத இதழ் வெளியிட்டது. ஞானரதத்தில் சில ஆண்டுகள் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்தார்.

"நாளை மற்றொரு நாளே'- போலவே என்றும் ஜி.நாகராஜனும் இருப்பார் என்பது மிகையல்ல.


[ நன்றி: தினமணி ]


தொடர்புள்ள பதிவுகள்:

சா. கந்தசாமி: விக்கிப்பீடியா

தி.ஜானகிராமன் : பசுபதிவுகள்

1 கருத்து:

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிக அருமையான பதிவு.
எழுத்தாளர் சா.கந்தசாமி மறைந்ததே தெரியாது.
அவர் அமைதி பெற வேண்டுகிறேன்.

தி.ஜானகிராமன் கதைகள்
சுவை நிறைந்தவை. இயல்பாக நடக்கும் வாழ்க்கையை அவர் சொல்லும்போது
எனக்கு மறுப்பே இருப்பதில்லை.
அம்மா வந்தாள் பட அம்மாவை நான் பார்த்திருக்கிறேன்.

ஜி.நாகராஜன் அதிகம் படித்ததில்லை;