புதன், 21 ஏப்ரல், 2021

1855. பாடலும் படமும் - 136

இராமாயணம் - 20
பால காண்டம் - 1


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் முதல் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடல்களையும் பார்ப்போம். 

இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.  ( 1933-இல் வந்த முதல் பதிப்புக்கு ஓவியங்கள் வரைந்தவர் பிரபல ஆந்திர ஓவியர் கே.ராம்மோகன் சாஸ்திரி. அவ்வோவியங்களில் ஒன்று எனக்குக் கிட்டியுள்ளது. பின்னர் ஓர் பதிவில் இடுவேன்.   )

நூலின் அட்டைகளிலும் ராஜம் அவர்களின் 'கைவண்ணம்' !

[ ஓவியங்கள்: எஸ்.ராஜம் ] 

இந்த இரண்டாம் பதிப்பைத் தேடி நான் கலைமகள் காரியாலயத்திற்கு  ஒரு வருடம் கோடை விடுமுறையில் சென்னைக்குச் சென்றபோது, அது அச்சில் இல்லை என்று சொல்லித் தன் பிரதியை எனக்கு அன்பளிப்பாய்த் தந்தவர்  அமரர் 'லெமன்'  ( எஸ்.லக்ஷ்மணன்; முன்னாள் மஞ்சரி ஆசிரியர்; அமரர் சாருகேசியின் சோதரர் ) .




அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

ततो वै  यजमानस्य पावकादतुलप्रभम। 
                                   प्रादुर्भूतं   महद्भूतं  महावीर्यं   महाबलम।।


அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு: 
     
         (Then , from the fire of the sacrifice , arose a great being of matchless radiance and possessed of great valour and strength.)


இதைக் கூறும் கம்பனின் பாடல்கள்:

ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.

ஆயிடை   கனலின்  நின்று  -  அப்போது  அந்த  வேள்வித் தீயிலிருந்து;
தீ எரிப்பங்கியும் சிவந்த  கண்ணுமாய்  -  தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக;
பூதம் ஒன்று - ஒரு   பூதமானது; 
அம்பொன்  தட்டம்  -  அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே;
தூய சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை;
ஏந்தி  ஏயென எழுந்தது - தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.

சுதை: அமுதம்.  பிண்டம்: சோற்றுத்திரள் (பொன்தட்டிலே  பாயசத்தை ஏந்தி அப்பூதம் வந்தது என்பது வான்மீகி கூற்று). பூதம்: தோற்றம்   என்னும் பொருள்   கொண்ட  வட  மொழிச்  சொல்லாம்.  )

வைத்தது தரைமிசை. மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும். வேந்தனை.
‘உய்த்த நல் அமிர்தினை; உரிய மாதர்கட்கு.
அத் தகு மரபினால். அளித்தியால்’ என்றான்.

பூதம்    தரை மிசை வைத்தது - (அவ்வாறு தோன்றிய) அந்தப்
பூதம்  அப்பொன்  தட்டத்தைத்  தரையின் மேல் வைத்தது;
மறித்தும் அவ்வழி  தைத்தது  -  திரும்பவும்   வந்த விதமே அந்த வேள்வித் தீயினுள் சென்று மறைந்தது;
அத்தவனும் உய்த்த நல்  அமிர்தினை- அந்தக்  கலைக்  கோட்டு முனிவனும் பூதம் கொடுத்த நல்ல  அமுதுப் பிண்டத்தை; 
உரிய    மாதர்கட்கு    -   உனக்குரிய பட்டத்து அரசியர்களுக்கு;
அத்தகு மரபினால் - மூத்தவள். இளையவள் என்ற முறைப்படியே;    
அளித்தியால்    என்றான்.-கொடுப்பாயாக என்று கூறினான்.

[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]

 தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

கருத்துகள் இல்லை: