திங்கள், 17 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 7

தமிழ் உயர்ந்தது
'கல்கி'


முந்தைய பகுதிகள்:


பகுதி 1,  பகுதி 2 ,  பகுதி 3 ,  பகுதி 4 ,  பகுதி 5 ,  பகுதி 6


( தொடர்ச்சி)

பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அக்டோபர்,13, 1947 -ஆம் தேதி நடந்தன. அந்த விழாவிற்குக் கட்டியம் கூறுவது போல்,  12-ஆம் தேதி பிரசுரமான ‘கல்கி’ சிறப்பிதழில் ஓர் உணர்ச்சி மிக்க தலையங்கத்தைத் தீட்டினார் ஆசிரியர் ‘கல்கி’.



அதிலிருந்து ஒரு பகுதி:

”நம் கண் முன்னே இதோ ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது! அதுவும் நமது செந்தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது!

தேச மகாகவிக்கு ஒரு ஞாபகச் சின்ன மண்டபம் இதோ எழுந்திருக்கிறது! தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளித்த கவியரசருக்குத் தமிழ் மக்கள் சமர்ப்பித்த காணிக்கை இதோ காணப்படுகிறது!

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மகாகவிக்கு ஞாபகார்த்த மண்டபம் கட்டிய பெருமையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது!

இதோ அமரர் பாரதியார் ஆகாசத்தில் வந்து நிற்கிறார். “ தலை நிமிர்ந்து நில்”, என்றும் “மார்பை நிமிர்த்தி நட”, என்றும் தம் வாணாளெல்லாம் உபதேசித்த தீர மகாகவி முதன் முதலாகத் தலை குனிந்து நோக்குகிறார்.
. . . // . .
“ஆகா! நாம் கண்ட கனவுகளிலே இதுவுமா பலித்து விட்டது?” என்று வியப்படைகிறார்.
. . . // . .
கவியரசரின் கனவைத் தமிழ் மக்கள் இன்று நிறைவேற்றி விட்டார்கள்! காணி நிலத்திலே ஒரு கவின்பெறு மாளிகை கட்டித் தந்து விட்டார்கள்! “

பின்னர் வந்த அக்டோபர் 26, ‘கல்கி’ இதழில் “தமிழ் உயர்ந்தது!’ என்ற தலைப்பில் விழாவைப் பற்றி ஆறு பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதினார் ‘கல்கி’.

அதன் முதல் பகுதி:

”தமிழ்நாடு உயர்ந்தது! தமிழ் மக்களின் சீர் உயர்ந்தது! தமிழும் தமிழ் நாடும் தமிழ் மக்களின் பேரும் இமயத்தைப் போல் உயர்ந்தன! இமயத்துக்கப்பாலும் ஆசியாக் கண்டம் முழுவதிலும் சிறந்தன! 

“இதுகாறும் ஆசியாவிலேயே இம்மாதிரி ஒரு கவிஞருக்கு ஞாபகச் சின்ன மண்டபம் கட்டியதில்லை! இவ்வளவு சிறப்பாக விழாவும் நடந்ததில்லை!’ என்று பேராசிரியர் திரு சோமசுந்தர பாரதியார் பாரதி மணி மண்டப மேடைமீது கூறினார். “


விழாவில் நடந்த இன்னிசை நிகழ்ச்சிகள் என்ன?


12-ஆம் தேதி மாலை, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் இன்னிசைக் கச்சேரி. பெரும்பாலும் பாரதி பாடல்களைக் கொண்டு விளங்கியது. எம்.எஸ்.ஸின் பின்னணி இசையுடன் ராதா, ஆனந்தி இருவரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

13-ஆம் தேதி அன்று, பாரதியாரின் புதல்வியர் “ வாழிய செந்தமிழ்” பாட, ராஜாஜி மண்டபத்தைத் திறந்து வைத்தார்.  விழாவிற்கு முன்னாள் ஒரு கச்சேரி செய்த எம்.எஸ். சுப்புலக்ஷ்மி விழாவன்று பாரதியின் “ பொழுது புலர்ந்தது” பாடலையும் , கல்கியின் “தெய்வத் தமிழ் நாட்டினிலே” என்ற பாடலையும் பாடினார். சொற்பொழிவுகளுக்கிடையே சகுந்தலா பாரதி தாம் இயற்றிய அகவற்பா ஒன்றைப் பாடினார். டி.கே.ஷண்முகம் இறுதியில் “ ஜயபேரிகை கொட்டடா!” என்ற பாடலைப் பாடினார். குளிக்கரை பிச்சையப்பப் பிள்ளையின்  நாகஸ்வரமும்,  தண்டபாணி தேசிகரின்  கச்சேரியும்  விழாவைச் சிறப்பித்தன. ”நிறைவுக் கட்டத்தில் கச்சேரி செய்த தண்டபாணி தேசிகர் “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்ற கவிமணியின் பாடலை எடுத்ததும், ஆயிரம் குரல்கள் அவருடன் சேர்ந்து பாடின” ( சுந்தா, “பொன்னியின் புதல்வர்” )



 ‘கல்கி’க்கு நன்றி சொல்லும் வகையில், அதே மண்டபத்தில்,  ‘கல்கி’ காலமானதற்கு அடுத்த ஆண்டில் , என்.எஸ். கிருஷ்ணனின் பொறுப்பில் நடந்த பாரதி விழாவில் ‘கல்கி’யின் படத்தைத் திறந்து வைத்தார் பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டர்.

பிறகு 1958-இல் சிவாஜி கணேசன் நடத்திய பாரதி விழாவில், அதே மண்டபத்தில் ‘கல்கி’யின் வர்ணப் படத்தை எஸ்.எஸ்.வாசன் திறந்துவைத்தார்.

ஆம், பாரதி மணிமண்டபம் கல்கியின் மகத்தான சாதனைகளில் ஒன்று.


( முற்றும் )

தொடர்புள்ள சில பதிவுகள்:

இன்றைய மணிமண்டபம்: சில படங்கள்

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள்

2 கருத்துகள்:

ananth சொன்னது…

பெரும் முயற்சி எடுத்து இத்தொடரை வெளியிட்டதற்கு நன்றி.

பாரதி மணிமண்டபத் திறப்பு விழா பற்றி, "தமிழ் உயர்ந்தது" என்னும் தலைப்பில் கல்கி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று 'அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்" என்னும் தலைப்புக் கொண்ட சாரதா பதிப்பக வெளியீட்டில் உள்ளது. அதில் பல சுவாரசியமான செய்திகளைக் கல்கி தமது சரளமான நடையில் தந்துள்ளார்.

...அனந்த்

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அனந்த்.

ஆம், அந்தக் கட்டுரையும் என்னிடம் இருக்கிறது. “வாழ்க நீ எம்மான்” என்று மந்திரி பக்தவத்சலம் பற்றிப் பாடியிருப்பார் ‘கல்கி’! :-))ஆனால், திறப்பு விழாப் பற்றிய படங்கள் எனக்குக் கிட்டவில்லை. இது ஒரு குறையே. என் கருத்தில்: எல்லாக் கட்டுரைகள், நாவல்கள், கதைகள் யாவும் மூல ஓவியங்கள், படங்கள் இவற்றுடன் மீண்டும் பதிப்பிக்கப் பட வேண்டும்.