வியாழன், 13 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 4

பொழுது புலர்ந்தது !

முந்தைய பகுதிகள் :

பா.ம -1 , பா.ம -2 , பா. ம - 3

( தொடர்ச்சி)

நிதி சேர்ந்த வேகத்தைப் பார்த்த ‘கல்கி’ நூல் நிலையம் அமைப்பதென்ற முந்தைய திட்டத்தை மாற்றிக் கொண்டார்; பெரிதாக ஒரு நினைவாலயம் எழுப்பத் திட்டமிட்டு, எல்.எம்.சித்தலே என்ற புகழ் பெற்ற கட்டிடக் கலை நிபுணரிடமிருந்து அன்பளிப்பாக ஒரு வரைபடம் பெற்றார்.

1945-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற பாரதி மணிமண்டப அஸ்திவார விழா நிகழ்ச்சிகளைப் பற்றிப் “பொழுது புலர்ந்தது” என்ற கட்டுரையை எழுதினார் கல்கி.  அதிலிருந்து நான் ரசித்த சில காட்சிகள்:



பாரதியாரின் இரு புதல்விமார்களும், பேத்தியும்
                          முருகா முருகா முருகா
                            வருவாய் மயில் மீதினிலே
                           வடிவேலுடனே வருவாய்
என்று பாட,  பள்ளத்திலிருந்த அஸ்திவாரத்தில் செங்கல்களை வைத்துச் சுண்ணாம்பைத் தீற்றினார் ராஜாஜி.  அவர் பள்ளத்திலிருந்து மேலே வந்தவுடன், ‘கல்கி’ “ தங்களை அஸ்திவாரக்கல் மட்டும்தான் நாட்டச் சொன்னோம்.தாங்கள் கட்டிடத்தையே கட்டி விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று, சபையின் சிரிப்புக்கிடையே,  கூறினார் !




பிறகு ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் “பொழுது புலர்ந்தது” என்ற பாரதி பாட்டைப் பூபாளம், பிலஹரி முதலிய நாலு ராகங்களில் பாடினார்.

காந்தியிடமிருந்து வந்த , தமிழில் எழுதப் பட்ட

வாழ்த்துச் செய்தியை



ராஜாஜி படித்தார். பிறகு சுத்தானந்த பாரதியாரின் கடிதத்தின் ஒரு பகுதியைப் படித்த ராஜாஜி, “இதற்கு மேல் பெஹாக் ராகம் தெரிந்தவர்கள் படிக்கலாம்” என்று சபையின் பக்கம் கடி்தத்தை நீட்டினார்; சபையில் சிரிப்பு ஓய்ந்ததும், யாரும் முன் வராதலால், ராஜாஜியே அந்தக் கீர்த்தனத்தை வசன நடையில் படித்தார்!


ராஜாஜி, எட்டயபுரம் மகராஜா, டி.கே.சி, டாக்டர் ராஜன், டாக்டர் சுப்பராயன், நாமக்கல் கவிஞர், “கல்கி” ஆகிய தலைவர்களுக்கு “வாழ்த்துப் பத்திரங்கள் படிக்கப் பட்டபோது மேடையில் சில சமயம் துவந்த யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவரவர்கள் தங்களுக்குரிய் பத்திரங்களைப் படிக்க ஆரம்பிக்கும் போதே பிடுங்கிக் கொள்ள முயல்வதும், படித்துக் கொண்டிருந்தவர் மேலும் படிக்க முயல்வதுமாய் இருந்த போதுதான் மேற்படி துவந்த யுத்தம் நிகழ்ந்தது”.

ராஜாஜியின் முகவுரை, டி.கே,சியின் உரைக்குப் பின்னர், மதுரை வைத்தியநாத ஐயர் பேசினார்: “நான் பாரதியின் சிஷ்யன். அவரிடம் இரண்டு மாதம் தமிழ் படித்தவன் “ என்று தன் பேச்சை அவர் ஆரம்பித்தார். ( அவர் ஹைஸ்கூலில் படிக்கும்போது வழக்கமான தமிழ்ப் பண்டிதர் இரண்டு மாதம் லீவில் போனபோது, பாரதியார் அவருக்குப் பதிலாகத் தமிழ்ப் பாடம் கற்பிக்க வந்தாராம்.)


பிறகு பேசிய டாக்டர் ராஜன் “ பாரதியார் அமரத்வம் அடைந்த கவி என்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அமரத்வம் எப்படி அடைவது என்பது எனக்குத் தெரியாது . நான் ஒரு டாக்டர். என் கையால் வியாதியஸ்தர்கள் இறந்து போவதைத் தான் நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறியபோது, கொட்டகையே சிரிப்பால் அதிர்ந்தது.

பிறகு நாமக்கல் கவிஞர் எழுந்திருந்து “ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற பாட்டைக் கம்பீரத்வனியில் பாடிவிட்டு, அவர் பாரதியைச் சந்தித்த நிகழ்ச்சியை விவரித்தார்.

பாரதியிடம் ஓர் ஓவியன் என்று அவர் அறிமுகம் செய்து வைக்கப் பட்டவுடன், பாரதி  நாமக்கல் கவிஞரைப் பார்த்து
நீர் என்னை ஓவியத்தில் தீட்டும்; நான் உம்மைக் காவியத்தில் தீட்டுகிறேன்” என்றார். பிறகு அவர் கவிஞர் என்று அறிந்ததும் ஒரு பாட்டுப் பாடச் சொன்னவுடன்,  நாமக்கல் கவிஞர்
                தம்மரசை பிறர் ஆள விட்டுவிட்டுத்
               தாம் வணங்கிக் கைகட்டி நின்றபேரும்

என்ற பாட்டின் முதல் அடியைப் பாடியதும், பாரதியார் ஆவேசத்துடன்,
பாண்டியா! நீ புலவனடா!” என்றார்.

ஒரு சமயம்  நாமக்கல் கவிஞரும், பாரதியாரும் தூத்துக்குடியில் நடந்த ஒரு பாட்டுப் போட்டிக்குப் பாட்டுக்கள் அனுப்பினார்களாம். இருவர் பாடல்களும் பரிசுக்குத் தகுதியில்லை என்று தள்ளிவிட்டார்களாம்!  இந்த விஷயத்தில் தமக்கும், பாரதிக்கும்  ஒற்றுமை உண்டு என்று நாமக்கல் கவிஞர் சொன்னதைச் சபையோர் பெரிதும் ரசித்தனர்.

நாமக்கல் கவிஞர் பேசிய பின்னர், ராஜாஜி சுமார் முக்கால் மணி நேரம் பேசினார். 

(தொடரும்)

அடுத்த பகுதி

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள்

கருத்துகள் இல்லை: