செவ்வாய், 6 ஏப்ரல், 2021

1842. கி.வா.ஜகந்நாதன் - 32

தொல்காப்பியம்

கி.வா.ஜகந்நாதன்


“பழைய காலத்தில் உரை நடையில் நூல்கள் இருந்தனவா? ஆங்கிலேயர்கள் இந்த நாட்டுக்கு வந்த பிறகு தான் உரைநடை நூல்கள் எழுந்தனவா?”

இப்படி ஒரு கேள்வி.

“பாட்டும் பாட்டுக்கு உரையுமாக இருக்கலாம். தனியே உரைநடையில் நூல்கள் இருந்தன என்று தெரியவில்லை."

இப்படி ஒரு சமாதானம். . . இந்தச் சமாதானம் சரியா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? தக்க ஆதாரத்துடன் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

"பாட்டுக்கு உரை எழுதுவது அல்லாமல் உரை. நடையில் நான்கு வேறு வகைகள் இருந்தன. பாட்டும் உரை நடையுமாகச் சில நூல்கள் உண்டு. அவற்றில்   பாட்டுக்களுக்கு இடையில் உரைநடை வரும். அது ஒரு வகை. பாட்டே இல்லாமல் கருத்தைத் தொடர்ந்து உரை நடையில் தெரிவிப்பது ஒரு வகை. புனைந்துரையாக அமைந்த கதை ஒரு வகை. உள்ளதைப் பரிகசித்து எழுதியது ஒரு வகை. இப்படி நான்கு வகையில் உரை நடை பயன்பட்டது; உரைநடை நூல்கள் இருந்தன.”

இப்படிச் சொன்னால், 'எந்த நூற்றாண்டில்?’ என்று கேள்வி உடனே எழும். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழில் இப்படி உரைநடை நூல்கள் நான்கு வகையாக இருந்தன" என்றால் நம்பாதவர்களே பெரும் பான்மையாக இருப்பார்கள்; நம்புபவர்கள் மூக்கின் மேல் கை வைப்பார்கள். 

உரைநடையைப் பற்றிய இந்தக் கருத்து உண்மையானது; கற்பனை அன்று. ஆதாரம் வேண்டுமா? தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை எடுத்துப் பாருங்கள்.

தொல்காப்பியனார் என்ற பெரும் புலவர் இயற்றியது தொல்காப்பியம் என்ற இலக்கணம். அதுதான் இப்போது கிடைக்கும். தமிழ் நூல்களில் மிக மிகப் பழமையானது. அதன் காலத்தைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சங்க காலத்து நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. அவற்றுக்கும் முந்தியது தொல்காப்பியம்; இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டு முதல் மூவாயிரம் ஆண்டுவரை முந்தியது என்று சொல்லலாம்.

தொல்காப்பியர் அகத்தியருடைய மாணாக்கர் என்று ஒரு வரலாறு உண்டு. அகத்தியர் மூன்று தமிழுக்கும் ஒர் இலக்கணம் இயற்றினார். அதற்கு அகத்தியம் என்று பெயர். அவருடைய மாணாக்கராகிய தொல்காப்பியர் இயல் தமிழுக்கு இலக்கணம் இயற்றினார். ஆசிரியர் பெயர் காரணமாகத் தொல்காப்பியம் என்ற பெயரை அது பெற்றது. மிகப் பழங்காலத்தில் அது தோன்றினாலும் இன்றும் புலவர்கள் படிக்கும் நூலாகவும், இலக்கண அமைதியைத் தெரிந்து கொள்வதற்கு ஏற்ற ஆதார நூலாகவும் அது விளங்குகிறது.

எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பெரும் பகுதிகளை உடையது அது. ஒவ்வொரு பகுதியையும் அதிகாரம் என்ற பெயரால் வழங்குவர். எழுத்ததிகாரம் முதலிய மூன்று அதிகாரங்களிலும் தனித்தனியே ஒன்பது ஒன்பது பிரிவுகள் உள்ளன. அவற்றை இயல்கள் என்று சொல்வார்கள்.

எழுத்ததிகாரத்தில் தனியெழுத்துக்களின் பெயர் தன்மை, பிறப்பு முதலியவற்றைக் காணலாம். எழுத்தும் எழுத்தும் சேர்வதைப் புணர்ச்சி என்று சொல்வது இலக்கண பரிபாஷை. அவ்வாறு சேரும்போது உண்டாகும் மாற்றங்களை மூன்று இயல்கள் சொல்கின்றன. விழா-ஆட்டம்-விழாவாட்டம்; மரம்+ஒடிந்தது=மரமொடிந்தது; இலை+தடுக்கு=இலைத்தடுக்கு; கால்+தடுக்கிற்று = காறடுக்கிற்று. இப்ப்டி யெல்லாம் ஏன் மாற வேண்டும்? இவற்றுக்குரிய விதிகளை இந்தப் பகுதிகளில் காணலாம். எந்த எழுத்துக்கும் பின்னால் எந்த எழுத்தும் வரலாம் என்று பொதுவாக நமக்குத் தோன்றும், க் என்ற எழுத்துக்குப் பின் ழ வருமா? வராது. க் என்ற எழுத்தும் க என்ற எழுத்தும் தக்க என்பதில் சேர்ந்து வருகின்றன. அப்படியே சகரம் தச்சன் என்பதில் வருகிறது. ழகரம் அப்படி வருமோ? பழ்ழம் என்பது போலச் சொல் உண்டா? இல்லை. இதைப் பற்றி யோசிக்கிறபோதுதான் உண்மை தெரிகிறது. இவற்றையெல்லாம் எழுத்ததிகாரத்தில் காணலாம்.

 சொல்லதிகாரத்தில் பெயர், வினை, இடை, உரி என்று உள்ள நால்வகைச் சொற்களைப் பற்றிய இலக்கணம் வருகிறது. மனிதர்களில் ஆண் பால் என்றும். பெண் பால் என்றும் வேறுபாடு தெரிகிறது. இரண்டு பாலும் அல்லாத அலி ஒருவர் இருக்கிறார். அவரை எந்தப் பாவில் சொல் கிறது? இது ஒரு சிக்கல். ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இருந்தாலும் அந்தப்பேர்வழி ஒன்று ஆணோடு சேர்ந்திருப்பார்; அல்லது பெண்களோடு சேர்ந்திருப்பார், அலி யென்று தனியாக இருப்பது வழக்கம் அன்று. எந்தப் பாலோடு சேர்கிறாரோ அந்தப் பாலைச் சொல்வி விடு என்று தொல்காப்பியம் வாழ்க்கையை ஒட்டி வழி வகுக்கிறது. கடவுள் ஆண் பாலா, பெண் பாலா, ஒன்றன் பாலா? அவர் எல்லாம் கடந்தவர். எப்படிச் சொல்வது? எப்படிச் சொன்னாலும் ஏற்பார். எப்படி வழக்கமோ அப்படியே சொல்லலாம்; தவறு இல்லை. இப்படிப் பல செய்திகள் சொல்லதிகாரத்தில் வருகின்றன.

 மூன்றாவது பகுதியாகிய பொருளதிகாரந்தான் பெரியது. பொருள் இலக்கணம் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது என்று சொல்வார்கள். பொருளை அகப் பொருள் என்றும், புறப்பொருள் என்றும் பிரிப்பார்கள், காதலைப் பற்றிச் சொல்வது அகப்பொருள். பெரும் பாலும் வீரத்தைப் பற்றிச் சொல்வது புறப்பொருள். அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லும் உறுதிப் பொருள்கள் நான்கில் இன்பத்தைப் பற்றிச் சொல்வது. அகம் என்றும் மற்ற மூன்றையும் பற்றிச் சொல்வது புறம் என்றும் ஒரு வகையில் கூறுவது வழக்கம்.

 ஒருவனும் ஒருத்தியும் சந்திக்கும் போது; முன் பிறவிகளில் அமைந்த தொடர்பினால் அவர்கள் உள்ளத்தே அன்பு உண்டாகும். யாரும் அறியாமல் அவர்கள் மனம் ஒன்றிக் காதல் செய்வார்கள். இந்தக் காதலுக்குக் களவுக் காதல் என்று பெயர். பிறகு அவர்கள் மணந்து கொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்வார்கள். அதைக் கற்பொழுக்கம் என்று சொல்வார்கள். இந்த இரண்டையும் பற்றிய இலக்கணங்களைப் பொருள் அதிகாரத்தில் காணலாம். காதலனைத் தலைவனென்றும், காதலியைத் தலைவி யென்றும் வழங்குவது மரபு. காதலிக்கு ஓர் உயிர்த் தோழி இருப்பாள். காதலியைப் பெற்ற தாயை நற்றாய் என்றும், வளர்த்த தாயைச் செவிலி என்றும் சொல்வார்கள். காதலனுக்கும் தோழன் உண்டு. அவனுக்குப் பாங்கன் என்று பெயர். காதல் வரலாறாகிய நாடகத்தில் வரும் இத்தகைய பாத்திரங்களின் இயல்புகளை யெல்லாம் விரிவாகத் தொல்காப்பியம் சொல்கிறது.

 புறப்பொருளைப் பற்றிச் சொல்லும்,பகுதியில் போர் பற்றிய பலவேறு நிலைகளைக் காணலாம். "சண்டைக்கு எடு பிடி மாடு பிடி “ என்பது ஒரு பழமொழி. போர் நிகழ்வதற்கு முன்பு, பகைவர் நாட்டில் உள்ள மாடுகளை பிடித்துக்கொண்டு வருவார்கள். இதை வெட்சித்திணை என்பார்கள். பாரதத்தில் விராட பர்வத்தில் வரும் கதை போல் இருக்கிறதல்லவா? மாட்டைப் பகைவர் பிடித்துப் போகும்போது அவற்றை மீட்டு வருவதும், பின்பு போர் மூளுவதும், மதிலை முற்றுகையிட்டுச் சண்டையிடுவதும் போன்ற பலவேறு உத்திகளும் நிலை களும் இந்தப் பகுதியில் விரிக்க்ப்பெறுகின்றன. காதலுக்கும் வீரத்துக்கும் எவ்வளவு சிறப்பை அளித்தனர் தமிழர் என்பதை அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்கள் காட்டுகின்றன.

இவற்றை யன்றிக் கவியின் இலக்கணம், நூல்களின் இலக்கணம், இலக்கியங்களின் வகை, உவமைகளின் வகை, குணங்களைக் காட்டும் பாவங்களாகிய மெய்ப்பாடுகளின் இலக்கணம், எந்தப் பொருளை எந்த எந்தச் சொல்லால் சொல்ல வேண்டும் என்ற மரபு ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்களையும் பொருளதிகாரத்தில் காணலாம். இலக்கிய வகைகளைப் பற்றிச் சொல்லும் பகுதியில் அடி வரையறை இல்லாதவை இவை என்று ஒரு பிரிவு வருகிறது. அதில்தான் உரைநடையைப் பற்றிய இலக்கணம் வருகிறது. முதலில் சொன்ன நால் வகை உரைநடைகளைப் பற்றிய செய்திகள் அங்கேதான். இருக்கின்றன. -

 பொருளதிகாரத்தில் உள்ள சில கருத்துக்கள்:

பெண்களோடு கடலைக் கடந்து செல்லக் கூடாது.

 . காதலன் தன் காதலியோடு வாழும்போது அவள் உணவு பரிமாறுகிறாள். வேப்பங் காயைப் போலக் கசப்பாக உணவு இருந்தாலும், 'நீ கை தொட்டது. வானோர் - அமுதத்துக்கு ஒப்பானது" என்று பாராட்டுகிறான்.

 அப்பர் என்பது ஆட்டுக்குப் பெயர். புறத்தில் வயிரம் உடைய மரங்களுக்குப் புல் என்று பெயர், அகத்தில் வயிரம் உடையவை மரமெனப் பெயர்பெறும். நிலம், தீ, நீர் வளி, விசும்பு ஆகிய ஐந்தும் கலந்த கலப்பு உலகம்.

 - 1610 . சூத்திரங்களை உடையது. தொல்காப்பியம். அது தமிழ்ப் புலவர்களுக்கு ஆணை நூலாக வழங்குகிறது.

 “ தொல்காப்பியன் தன் ஆணையின் தமிழ் நூல் அறிந்தோர்க்குக் கடனே' என்று ஒரு புலவர் சொல்கிறார்.


தொடர்புள்ள பதிவுகள்: 

கி.வா.ஜகந்நாதன்

கருத்துகள் இல்லை: