புதன், 4 மே, 2022

2101. தேவன் - 26

தேவன் தந்த சாம்பு!

வாதூலன்

 


மே 5தேவனின் நினைவு தினம்.

2017 -இல் வந்த கட்டுரை.

====

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தினரின் ஆசை, அபிலாஷைகளைத் தனது எழுத்துகளில் அற்புதமாகப் பதிவுசெய்தவர் தேவன். மிகைத்தனமோ பாசாங்கோ இல்லாமல் அதைச் செய்ததுதான் அவரது தனிச் சிறப்பு. ஓரிரு பக்கமே வருகிற பாத்திரங்களைக்கூட மறக்க முடியாதபடி சித்தரித்தவர் அவர். ஆடிட்டர் ஆதிசேஷன் நாயர் (ஸ்ரீமான் சுதர்சனம்) கீச்சுமூச்சுக் கொத்தனார் (ராஜத்தின் மனோரதம்) ராகவாச்சாரி (லக்ஷ்மி கடாட்சம்), ஆடுதுறை ரங்கநாதம் (மிஸ்டர் வேதாந்தம்) என்று பல பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கிராமத்தில் பிறந்து எழுத்தார்வத்தால் சென்னை வருகிறான் வேதாந்தம். அங்குதான் எத்தனை சிரமங்கள்! ‘டியூஷன்’ ஆசிரியராகப் பணியாற்றிய பெரிய மனிதர் வீட்டில் திருட்டுப் பட்டம். பத்திரிகை மோகம் காட்டிப் பணம் பறித்த வெங்கட்டும் ராமும். தனக்கு சென்னையில் உதவிபுரியும் ஸ்வாமியை வைத்து எழுதின கட்டுரை பரிசு பெற்றவுடன் ஏற்படும் தர்மசங்கடம் - அனைத்தையும் இந்த நாவலில் சுவைபட எழுதியிருக்கிறார். 1950-களிலேயே ஏழையான வேதாந்தத்தை ஏமாற்றிய (பத்திரம் பெற்று) பாத்திரங்கள் மறக்க இயலாதவர்கள்.

அசோகமித்திரனின் ஆதங்கம்

ஒரு நடுத்தர ‘ஏஜென்ஸி’ அலுவலகத்தில் படுகிற சிரமங்களை ‘ஸ்ரீமான் சுதர்சனம்’ நாவலில் விவரித்திருப்பார். திடீர் திடீரென்று விருந்தாளிகள் வரும்போது, இக்கட்டைச் சமாளிக்க சின்னத் திருட்டில் ஈடுபடுவதும், சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கிற அனுபவமும், மிக மிக இயல்புத் தன்மை கொண்டவை. தேவனின் படைப்புகளில் மனத்தைப் பறிகொடுத்த சுஜாதா, ‘தன்னை மிகவும் கவர்ந்த நாவல் இதுதான்’ என்று புகழ்ந்திருக்கிறார். நகைச்சுவை வறண்டுவிட்ட நாட்களில் ஆங்கில எழுத்தாளர் பி.ஜி.உட்ஹவுசுக்கு ஈடாகத் தமிழில் நகைச்சுவை எழுதியவர் என்ற தகுதியில், இலக்கிய வரலாற்றில் அவருக்கு இடம் நிச்சயம் உண்டு என்கிறார்.

தேவனுடைய நகைச்சுவை பெரும்பாலும் உரையாடல்களில் வெளிப்படும். ஜஸ்டிஸ் ஜகந்நாதன் முற்ற முழுக்க கோர்ட் சூழ்நிலை; சாட்சியங்கள்; ஜூரர்கள் இவற்றை வைத்தே பின்னப்பட்ட மிகப் புதுமையான நவீனத் தமிழில் மிகவும் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்று. இதை ஏன் விமர்சகர்கள் கண்டுகொள்ளவேயில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் அசோகமித்திரன் தமது முன்னுரையில் (ஆங்கில மொழிபெயர்ப்பு - லட்சுமி வெங்கட்ராமன்).

இன்றைக்கும் யார் வீடு கட்டினாலும் ஞாபகத்துக்கு வருவது ‘ராஜத்தின் மனோரதம்’. ஒப்பந்தக்காரருக்கும், வீடு கட்டுபவருக்கும் ஏற்படும் மன உரசல்கள்; சிறிய பணியாட்களின் கெடுபிடி; நண்பர்களிடம் யோசனை கேட்டுக் குழம்பும் மனநிலை - இத்தகைய அம்சங்கள் இப்போதும் நிலவுகின்றனவே? அந்த நாவலில் ஒவ்வொரு பக்கமும் இயல்பான ஹாஸ்யம் பரிமளிக்கும். லட்சுமி கடாட்சம் நாவலில் காற்றடிக்கும் திசை தெரிந்து பேசிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் நாசூக்கான வில்லன் சாரங்கபாணி. சட்ட விரோதமான ஒரு செயலைச் செய்வதற்கு முதலாளியைத் தூண்டியவர் அவர். இறுதியில் அரசு தடை போட்டவுடன் இடிந்துபோய் உட்கார்ந்திருக்கும் முதலாளியிடம் கூசாமல் பொய் பேசுகிறார். இந்தக் கட்டத்தில் முதலாளியும், சாரங்கபாணியும் பேசுகிற சம்பாஷணை அற்புதமாக இருக்கும்.

துப்பறியும் சாம்பு

மிகப் பிரபலமான துப்பறியும் சாம்புவைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. எல்லாமே தற்செயல் கண்டுபிடிப்புகள்தான் என்றாலும், சாம்புவுக்கு உள்ளபடிக்கே துப்பறியும் ‘மூளை’ இருந்தது. வங்கியில் வேலை செய்யும்போது - ஜவ்வாது வாசனை, காரின் ‘மைலேஜ்’, ‘டயல்’ இவற்றை வைத்து, ஆபீஸ் வண்டி ஒவ்வொரு விடுமுறை நாளன்றும் செங்கல்பட்டு போகிறதென்று மிகச் சரியாக ஊகிக்கிறான். ஆனால், அசட்டுத்தனமாகக் குற்றவாளியிடமே சொல்லிவிட, அவர் தப்பித்துவிடுகிறார். வங்கியின் இயக்குநர், சாம்புவை வேலையிலிருந்து நீக்க, துப்பறியும் வேலை கிடைக்கிறது. தேவனின் மிக மாறுதலான படைப்பு ‘பார்வதியின் சங்கல்பம்’. அதில் கதாநாயகி கொடுமைக்காரக் கணவனின் பிடியிலிருந்து விடுபட்டுத் தன் திறமையால், எழுத்தாளராகிறாள் (அந்த நாளில் இது போல் கற்பனை செய்திருப்பது அதிசயம்தான்).

பொதுவாக, தேவனின் சிறுகதைகளில் நடைக்கு முக்கியத்துவம் கம்மியாக இருக்கும்; வாரப் பத்திரிகையின் அவசரத்துக்கு எழுதப்பட்டவை அவை, ஆனாலும் 1950-களிலேயே மனோதத்துவத்தைப் பற்றி மல்லாரிராவ் கதைகளில் குறிப்பிட்டிருக்கிறார். ‘பெண் புலி’, ‘நண்பன் நாக நாகநாதன்’ போன்ற படைப்புகள் சிறந்த உதாரணங்கள்.

கட்டுரையிலும் முத்திரை

சம்பாதி, ஆர்.எம். போன்ற புனைபெயர்களிலும் கட்டுரைகள் எழுதிக் குவித்திருக்கிறார். தந்தையின் பழைய நண்பர் தன்னைச் சந்தித்து, வற்புறுத்தி ஒரு உதவியைக் கேட்கும் கட்டுரை மிக சுவாரஸ்யம் (என் மனமார்ந்த நன்றி); டெலிபோன் இணைப்பு முதல் முதலில் கிடைத்ததும் ஏற்பட்ட அனுபவம் (யார் பேசுகிறது?); தஞ்சை, திருச்சியில் புயலால் நிகழ்ந்த சேதங்கள் (புயலுக்குப் பின்).

பத்திரிகை ஆசிரியர் என்ற வகையிலும் தேவன் தன் புகழை நிலைநாட்டியிருக்கிறார். கல்கி விலகியவுடன், 15 ஆண்டுகள் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்று, வாரப் பத்திரிகைக்குத் தேவையான பல அரசியல் நிகழ்வுகளை எழுதியிருக்கிறார். ‘யுத்த டைரி’, ‘போடாத தபால்’, ‘சின்னக் கண்ணன்’ எழுதுகிறான் போன்ற தலைப்புகளில் நிறைய! இவ்வளவு வேலைகளுக்கு நடுவே தமிழ்நாட்டின் முக்கியமான கோயில்களுக்குச் சென்று, நடந்தது நடந்தபடியே என்று எழுதினார். ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ மிகப் பெரிய பயண நூல். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, பர்மா ஆகிய நாடுகளில் தனக்கு நேர்ந்த உணவுச் சிக்கல்கள், மொழி தெரியாத சிரமங்கள், சந்தித்த பிரமுகர்கள் என்று சுவாரசியமான 50 அத்தியாயங்கள் அடங்கிய நூல். அதிலும் நகைச்சுவை.

கே.எஸ்.நாகராஜன், தேவனின் பல படைப்புகளை நாடகமாக அரங்கேற்றி யிருக்கிறார். (திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ்); சில வருடங்களுக்கு முன் காத்தாடி ராமமூர்த்தி மீண்டும் சாம்புவை மேடையேற வைத்தார். 1990-களில் சென்னை தூர்தர்ஷன் ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’ ஆகிய இரண்டு நாவல்களின் நாடக வடிவை 13 வாரங்கள் ஒளிபரப்பியது. ‘கோமதியின் காதலன்’ திரைப்படமாக வந்து ஓரளவு வெற்றிபெற்றது ஆனால், தமது தொடர்கதைகள் நூல் வடிவம் பெறவில்லை என்ற குறை அவருக்கிருந்தது. நல்ல காலமாக தேவன் அறக்கொடையினர் எடுத்த முயற்சியின் விளைவாக அவரது அனைத்து எழுத்துகளும் புத்தகமாக வந்திருக்கின்றன #(அல்லையன்ஸ் பதிப்பகம்).

கல்கி ‘பிராண்ட்’ பொடிக்குக் காரம் மணம் - குணம் மூன்றும் உண்டு. தேவனிடம் முதலாவது கிடையாது என்று ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறார் குமுதம் அரசு. தேவன் படைப்புகளின் நறுமணம் இலக்கிய உலகில் என்றும் வீசிக்கொண்டே இருக்கும்.

[ நன்றி :https://www.hindutamil.in/news/opinion/columns/195341--3.html ]


# தேவனின் பல படைப்புகள் இன்னும் நூல்களாக வரவில்லை . (கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கும் 'யுத்த டைரி' 'போடாத தபால்' 'சின்னக் கண்ணன் கட்டுரைகள்'  உட்பட).  மற்றும் ' மிஸ்டர் ராஜாமணி', 'பிரபுவே உத்திரவு', 'புஷ்பக விஜயம்' 'அதிசயத் தம்பதிகள்' போன்ற தொடர்கள், பல தீபாவளி மலர்க் கதைகள், மேலும் பல புனை பெயர்களிலும், பெயரில்லாமலும் எழுதியவை  இன்னும் அச்சில் ஏறவில்லை. 

விகடன், தேவன் அறக்கட்டளை, அல்லயன்ஸ் சேர்ந்து முயன்றால் தான் நூற்றாண்டு கண்ட 'தேவ'னின் எல்லாப் படைப்புகளையும் நாம் படிக்க முடியும்.  

நடக்குமா?

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be

 found on the top right-hand side of my blog, the service , follow.it    

      will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

2 கருத்துகள்:

இராய செல்லப்பா சொன்னது…

தேவனின் படைப்புகள் பல இன்னும் அச்சில் வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

Pas S. Pasupathy சொன்னது…

@இராய.செல்லப்பா நன்றி. தொடர்களின் சில காட்டுகள் --- மிஸ்டர் ராஜாமணி, யுத்த டைரி, போடாத தபால், கண்ணன் கட்டுரைகள்..... என் வலைப்பூவில் இருக்கின்றன. இவை யாவும் அச்சில் இல்லை. இப்படி இன்னும் எத்தனையோ?