என் சரித்திரம் : சில துளிகள்
பிப்ரவரி 19, 1855. உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம்.
பிப்ரவரி 19, 1855. உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம்.
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் எழுதிய ‘என் சரித்திரம்’ 1940 -ஆம் ஆண்டு ஜனவரியில் ’விகடனின்’ புத்தாண்டு இதழில் தொடங்கி 1942 மே மாதம் வரை 122 வாரங்கள் வெளிவந்தது. தற்காலத்தில் பலரும் அந்த ‘விகடன்’ மூலப் பக்கங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்! அதனால், இரண்டு அத்தியாயங்களின் முதல் பக்கங்களின் படங்களை இங்கே இடுகிறேன்.
அருமையான படம் இல்லையா? ஏ. எஸ். மேனன்’ என்பவர் வரைந்ததாகத் தெரிகிறது. ( இவர் ஜெமினியில் தான் அதிகம் வரைந்தார், எனினும் விகடனிலும் அவ்வப்போது வரைந்தார் என்று தெரிகிறது. ”அந்தக் காலத்தில்” ஓவியரே தான் படத்தில் வரும் சொற்களையும் வரைவார். அதன்படி, இந்த ஓவியத்திலும் பார்க்கலாம்! மேனன் “ சுவாமிநாத ஐயர் “ என்று ...அவருக்கு விகடன் நிர்வாகத்தினர் சொன்னபடியோ, அவருக்குத் தோன்றியபடியோ -- வரைந்திருப்பார் என்று நினைக்கிறேன்! ஆனால், பொதுவில் உ.வே.சா.வின் கட்டுரைகளில் “ சுவாமிநாதையர் “ அல்லது “ சுவாமிநாதய்யர்” என்று தான் பார்ப்போம்!
இப்படி இன்னும் சில “ஓவியங்களில் “ சில சொற்பிழைகள் வருவதுண்டு! ஒரு “மணியம்” சித்திரத்தில் இருந்த ஒரு சொற்புணர்ச்சித் தவற்றைக் ‘கல்கி’ அற்புதமாய்த் தன் சித்திர விளக்கத்தில் சமாளித்திருக்கிறார்! ஒரு சித்திரம் வரைந்தபின் , பிறகு அதன் சொற்களை மாற்றச் சித்திரத்தையே அல்லவா மீண்டும் வரையச் சொல்ல வேண்டும்! அதனால் இதை அந்தக் காலத்தில் தவிர்த்து விடுவார்கள்! )
இப்படி இன்னும் சில “ஓவியங்களில் “ சில சொற்பிழைகள் வருவதுண்டு! ஒரு “மணியம்” சித்திரத்தில் இருந்த ஒரு சொற்புணர்ச்சித் தவற்றைக் ‘கல்கி’ அற்புதமாய்த் தன் சித்திர விளக்கத்தில் சமாளித்திருக்கிறார்! ஒரு சித்திரம் வரைந்தபின் , பிறகு அதன் சொற்களை மாற்றச் சித்திரத்தையே அல்லவா மீண்டும் வரையச் சொல்ல வேண்டும்! அதனால் இதை அந்தக் காலத்தில் தவிர்த்து விடுவார்கள்! )
முதல் அத்தியாயத்தை உ.வே.சா எப்போது எழுதினார் தெரியுமா?
அவ்வப்போது தான் அத்தியாயங்களை எழுதுவது அவர் வழக்கம் என்று தெரிகிறது . 15-12-1939 அன்று தான் முதல் அத்தியாயத்தைக் ‘கல்கி’ அவர்களிடம் கொடுத்தார் உ.வே.சா. உடனே புத்தாண்டு இதழிலிருந்து ‘என் சரித்திரம்’ தொடங்கியது!
அவருடைய ஊரான உத்தமதானபுரத்தைப் பற்றி அவர் முதல் அத்தியாயத்தில் எழுதினதிலிருந்து ஒரு துளி :
” ....இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள
உத்தமதானபுரத்துக்கும்,
'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும்
எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில்
இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான
அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை. ரோடுகள்
இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில்
திருப்தி இருந்தது; பக்தி
இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில்
லக்ஷ்மீகரம் விளங்கியது.
இவ்வளவு ரூபாயென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து
உத்தமதானபுரவாசிகளிடம் இல்லை;
ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன.
அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் இருக்கவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்துவிடவில்லை.
அவர்களுடைய உள்ளத்தில்
ஒரு சாந்தி இருந்தது.
இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாகத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.
நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தச்
சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதே யொழியக் குறையவில்லை. “
பி.கு.
அது சரி ... நான் இட்ட இந்த ‘என் சரித்திர’ப் பக்கங்களின் பின் பக்கங்களில் என்ன இருந்தன என்பதை அறிய ஆவலா? சரி, அந்தக் கால ‘விக’டனில் என்ன தான் வெளிவந்தன என்பதைத் தான் தெரிந்து கொள்ளுங்களேன்! இதோ!
இது ஓவியர் ‘ரவி’ வரைந்தது. ( அவரைப் பற்றி சங்கீத சங்கதிகள் -23 என்ற பதிவில் எழுதியுள்ளேன்). “சித்திரக் குறும்பு” என்ற அவர் தொடர் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது.
இன்னொரு ‘பின் பக்கம்’ ”மாலி” எடுத்த புகைப்படம்! மாலி போட்டோ எடுப்பதிலேயே தன் சம்பளத்தில் பெரும்பங்கைச் செலவழித்தார் என்கிறார் கோபுலு!

























