புதன், 14 நவம்பர், 2012

குறும்பா - 2,3: காசி, தாரை

குறும்பா - 2,3 : காசி, தாரை

பசுபதி

                                                                     2.   காசி
                                                                           



ஊரிலுளோர் ஊமையெனுங் காசி
ஆரிடமும் பேசாச்சங் கோசி !
. . காரிருளில் பெண்நின்றாள் ;
. . 'காட்டெனக்கு வழி 'யென்றாள்.
மாறிவிட்டான் மங்கையுடன் பேசி!



                                                                      3.  தாரை



உணவுக்குப் பின் 'பாதாம் கீரை '
உறிஞ்சிடுமோர் மங்கைபெயர் தாரை!
. . அணங்கினெடை ஏறிடவே
. . அருந்துகிறாள் 'மடக் 'கெனவே
உணவுக்குப் பதிலாய்த்தண் ணீரை !

~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவு:

குறும்பா -1

குறும்பாக்கள் : மற்றவை

திங்கள், 12 நவம்பர், 2012

மலர் மோகம் : சிறுகதை

மலர் மோகம்
பசுபதி




அன்றைக்குப் பிடித்த மோகம் இன்னும் விடவில்லை.

ஒவ்வொரு தீபாவளியிலும் நான் 'வழி மேல் விழி' வைத்துக் காத்துக் கொண்டிருப்பது  தீபாவளி மலர்களுக்குத் தான். வீட்டிற்கு எப்போதும் 'ஹிந்து' 'தினமணி' கொண்டுவரும் வேலுவிற்கு   முன்னமே சொன்னால் சைக்கிள் மணியோடு மலர்களும் வந்து இறங்கும். முக்கியமாய்க் ’கல்கி’, ’விகடன்’ மலர்கள் வாங்குவோம். பிடித்த பக்ஷணங்களைக் கொறித்தபடி, பிடித்த எழுத்தாளர்களின் புதுப்  படையல்களை அன்றே 'ஸ்வாஹா' செய்துவிடுவேன்.

எனக்குப் பத்து, பன்னிரெண்டு வயதிருக்கும். ஒரு தீபாவளியன்று  அப்பாவிடம் எனக்கு வந்ததே பார்க்கணும் ஒரு கோபம்! தீபாவளியன்று வீடு தேடி வந்த விருந்தாளியிடம் வழக்கம்போல, போட்டோ ஆல்பம் காட்டிக் கொண்டிருந்த தந்தையிடம் , "எப்போதும் என் பிறந்த மேனிப் போட்டோவையே எல்லோருக்கும் காட்டி என் மானம் வாங்குவதற்குப் பதிலாய், நான் பிறந்த வருடத் தீபாவளி மலர்கள் ..ஒன்றிரண்டாவது காப்பாற்றி வைத்து என்னிடம் கொடுத்திருக்கக் கூடாதா? " என்று சண்டை போட்டேன்.

என் கோபம் அடங்கவே இல்லை. என் அபிமான எழுத்தாளர்களான 'கல்கி' 'தேவன்' இருவரும் விகடனில் இருந்த காலம் அல்லவா அது? அடடா, எவ்வளவு 'த்ரில்' லாக இருக்கும் அக்கதைகளைப் படிக்க? தீபாவளி விளம்பரங்களைப் பார்க்க ?   

சில நாள்களுக்குப் பின் திடீரென்று ஒர் எண்ணம். 'விகடன்' அலுவலகத்திற்கே சென்று, பழைய மலர்களைக் காட்டச் சொல்லி, அங்கேயே படித்துவிட்டு வந்தால் என்ன? அவ்வளவுதான், உடனே மௌண்ட் ரோடு பஸ்ஸில் ஏறி விட்டேன்.விகடன் காரியாலயத்தில் வெளியே இருக்கும் காவலாளியே என்னை ஓரங்கட்டி விட்டான். "தம்பி, இதெல்லாம் போகாத ஊருக்கு வழி. அதெல்லாம் உன்னைப் போன்றவர்க்கு இல்லை" என்று சொல்லி விட்டான். ஒரே ஏமாற்றம்.

சில வருடங்கள் கழிந்தன. நான் திடீரென்று, பழைய புத்தகக் கடைகள் என்ற சங்கநிதி, பதுமநிதிகளைச் சென்னையில் கண்டுபிடித்தேன். அதுவும், மூர் மார்க்கெட் முத்து என் ஆப்த நண்பனாகி விட்டான். சரோஜா தேவி முதல் 'ஸாடர்டே ஈவினிங் போஸ்ட்' வரை எல்லாம் அவன் தயவு. அவனிடம் என் ஆசையைத் தெரிவித்தேன். "நான் தேடித் தருகிறேன் " என்ற அவன் வாக்குறுதி எனக்குத் தேனாகத் தித்தித்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்..திடீரென்று முத்து கூப்பிட, நான் தண்டையார்ப் பேட்டைக்கு ஓடினேன்.அதே, அதே தான்! என் பிறந்த வருட 'விகடன்' மலர் ! கடைக் காரனிடம் என் இதயத் துடிப்பைக் காட்டாமல் ( பாவி, விலை ஏற்றிவிடுவானே!) பேரம் செய்து வீட்டிற்குக் கொணர்ந்தேன்.சில பக்கங்கள் இல்லை. அதனால் என்ன? முழுக்க, முழுக்க பொக்கிடங்கள் ! உ.வே.சாமிநாதய்யர்  என்னமோ சங்க நூல்கள் கிடைத்தவுடன் ஆனந்தத்தில் மிதந்தார் என்பார்கள். ஊஹும், ஐயா கிட்ட நெருங்க முடியாது. அன்று தர்மனின் தேர்போல வானில் பறந்தேன்.

மலரில் என்ன இருந்தன, என்கிறீர்களா? இதோ, சில ஐடம்கள்.

உ.வே.சாவின் 'அம்பலப் புளி' கதை. டி.கே.சி இரு போலிக் கம்பன் கவிகளைக் கிழித்திருந்தார். 'ரைட் ஆனரபிள்' வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரியாரின் முதல் தமிழ்க் கட்டுரை. சென்னை மேயரான சத்யமூர்த்தியின்  'சௌந்தர்ய நகரம்' சென்னையை 'சிங்காரச் சென்னை'யாக்கும் வழிகளைச் சொன்னது. பாரதி சொன்ன ஒரு சின்னக் கதையை அவர் நண்பர் வரகவி அ.சுப்ரமண்ய பாரதி எழுதியிருந்தார். வையாபுரி பிள்ளையின்  ஒரு கவிதை.(அட, கவிதை கூட எழுதுவாரா?)

பாகவதர், என்.எஸ்.கே ..படங்கள். கல்கி, துமிலன், தேவன், நாடோடி...யின் கதைகள். 'கடல் கடந்த ஹிந்துக்கள்' என்ற கட்டுரை. தேசிக விநாயகம் பிள்ளை, சோமு கவிதைகள்.

ஆனால், எனக்கு மலரில் மிகவும் பிடித்தது ராஜாஜியின் 'சிவப்பு அனுமார்' கதை**. மகம்மது கவுஸ் உஸ்தாது புலியாட்டத்தில், ஆவேசம் வந்து, சங்கிலியை மீறி, போலீஸ் ஹெட் வரதராஜுலுவின் தலையில் இறங்கி, பின் கரடி வேஷச் சுப்பனின் தோளைக் கவ்வ... திருப்பித் திருப்பி அந்தக் கதையை எவ்வளவு முறை படித்திருப்பேன், கணக்கிட முடியாது!

போன வருடம். என் மகளின் தலை தீபாவளி. வீட்டிற்கு வந்தவளிடம் , அந்த மலரைக் காட்டி, மலர் கிடைக்க நான் பட்ட பாடெல்லாம் சொன்னேன்.

"அதெல்லாம் சரி, நான் பிறந்த வருட தீபாவளி மலர் ஒன்று எனக்குக் காட்டு " என்றாள்.

என் அப்பாவிடம் நான் ஐம்பது ஆண்டுகளாகக் கொண்டிருந்த கோபம் தணிந்தது.
**********
 
[ இது ‘தென்றல்’ இதழில் நவம்பர் 2006-இல் வெளிவந்தது..]

அந்தத் தீபாவளி மலரின் முழுப் பொருளடக்கம் என்னவென்று அறிய விருப்பமா? கீழே பாருங்கள்!



 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தீபாவளி மலர் 

வியாழன், 8 நவம்பர், 2012

பி.ஸ்ரீ. -1 : சித்திர ராமாயணம் - 1

தமிழகத்தி்லே ராமதூதர்கள்
பி.ஸ்ரீ.


சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் ஆனந்த விகடனில் 40/50-களில் வந்த ‘சித்திர ராமாயணம் ‘என்ற தொடர்தான்  என்னைப் போன்ற அன்றைய பல இளைஞர்களுக்குக் கம்பனை அறிமுகம் செய்து வைத்தது. பி.ஸ்ரீ என்று அழைக்கப் பட்ட பி.ஸ்ரீநிவாசாச்சாரி எழுதிய தொடர் அது. அவர் எழுதிய பல படைப்புகள் இன்று பதிப்பில் இருந்தாலும், ‘சித்திர ராமாயணம்’ இன்னும் முழு நூலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சித்திரலேகாவின் இயற்பெயர் நாராயணசாமி .


அந்தத் தொடரிலிருந்து இதோ ஓர்  அத்தியாயம்!






 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

ஒப்பிலக்கியச் செம்மல்!

ஞாயிறு, 4 நவம்பர், 2012

தீரக்கனல் : கவிதை

தீரக் கனல்
பசுபதி




அம்மன் தரிசனம்’ 2001- ஆம் ஆண்டு தீபாவளி மலரில்  வெளிவந்த  ஒரு கவிதை.






















       

      நரகாசுரன் செயலால்விளை ஞாலத்துயர் நீக்க 
      அரிமாவென  எழுந்தான்திரு அரியாகிய கண்ணன்; 
      பரியோட்டிட வருவேன்துணை எனும்பாமையை  
       நோக்கி      
      சிரித்தேசரி என்றானவன் திரிகாலமும் தெரிந்தே.  (1) 

மாபாதகன் அசுரேசனின் மாயக்கொடும் போரில்

கோபாலனும்  சோர்வுற்றபின் குதிரைக்கயி  றேந்திக்
கோபாக்கினி  நிறையம்பினால் கொடுங்கோலனை  மாய்த்த 
தீபாவளி வீராங்கனை சீபாமையை மறவோம்.   (2) 

   அறவாழ்வினில் அரைப்பங்குடன் ஆணுக்கொரு  நிகராய்ப்

    பெரும்போரினில் நரகன்வதம் பெண்மைக்கொரு வெற்றி;
    விறலாயிழை வில்லேந்திய வீரச்செயல் போற்றும் 
    திருநாளொளிர் தீபச்சுடர்  தீரக்கனல் அன்றோ?  (3).    


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

பசுபடைப்புகள்


வெள்ளி, 2 நவம்பர், 2012

சின்ன அண்ணாமலை -1 : தாரா சிங் -கிங்காங் போட்டி!

விளம்பர வெற்றி
சின்ன அண்ணாமலை




சின்ன அண்ணாமலை ஒரு தேச பக்தர்; ராஜாஜி, கல்கி போன்றோருக்கு மிக நெருங்கியவர். காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்தியவர். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவராய் இருந்தவர். நகைச்சுவையாகப் பேசுவார்; எழுதுவார்.  சென்னையில் 50-களில் தி.நகரில்  பனகல் பார்க் அருகில், ‘தமிழ்ப்பண்ணை’ என்ற ஒரு நூல் பதிப்பகம் நடத்தியவர். ராஜாஜி, நாமக்கல் கவிஞர், ம.பொ.சி போன்றவரின் நூல்களை மிக நேர்த்தியான முறையில் வெளிட்டவர். ஒரு நூலகமும் ( லெண்டிங் லைப்ரரி )  வைத்திருந்தார்; அதிலிருந்து பல நூல்களைச் சிறு வயதில் நான் வாங்கிப் படித்திருக்கிறேன்.

அண்மையில் பிரபல மல்யுத்த வீரர், நடிகர் (தொலைக்காட்சி ராமாயணத் தொடரில் அனுமான்!) தாரா சிங் காலமானவுடன்,  எனக்குத் தாரா சிங் -கிங்காங் மல்யுத்தப் போட்டியும், கூடவே சின்ன அண்ணாமலையின் நினைவும் வந்தது. அவர் எழுதிய ஒரு கட்டுரையும் நினைவுக்கு வந்தது.
( அந்த மல்யுத்தப் போட்டிப் பப்ளிசிடி பொறுப்பு சாவி, சின்ன அண்ணாமலை இருவரிடம் இருந்தது)

1978-இல் ’குமுத’த்தின் இலவச இணைப்பான ‘சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ என்ற ஒரு சிறு  நூலில் வந்த அந்தக் கட்டுரை இதோ!
( அது சின்ன அண்ணாமலை எழுதிய ‘ சொன்னால் நம்பமாட்டீர்கள்!’ என்ற நூலிலிருந்து  ஒரு தொகுப்பு.)





[ நன்றி : குமுதம் ]

பி.கு.

ஆசுகவி சிவசூரியின் பின்னூட்டம்:

மல்லருக்கும் மல்லர் சின்ன அண்ணாமலை!

சின்னஅண் ணாமலை செய்த தனைப்பார்த்தென்
சிந்தையி லேஇன்பம் தோன்றுதடா!
மன்னும் புவியினில் மல்லரைக் கூடவும்
மண்ணையும் கவ்விடச் செய்யுகிறார்!


விற்பனை செய்திடும் மார்க்கத்தைக் பேசிடும்
விற்பனர்க் கெட்டாத சிந்தையடா!
கற்பனை இப்படி ஊறிடும் மானிடர்
காசினி காணாத விந்தையடா!

சிவ சூரியநாராயணன்.
===============

பி.கு.2 

 A classmate recollects:

Krishnan Sevel Venkataraman due to the initiative taken by our Head Master, both King Kong and Dara Singh visited our School and met the students. they spent more than 45 minutes with us. When King Kong appreciated the tamil songs, he felt he could not enjoy it fully as he is unable to undertand the lyrics, our teacher Margabandhu Iyer sang DING DONG BELL in a carnatic ragam which was appreciated by him

(I recall that DING DONG BELL was sung in the tune of Tyagaraja's " sarasa sama dhana" made famous by Madurai Mani Iyer. - Pasupathy )

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை