வியாழன், 5 டிசம்பர், 2013

கல்கி -5 : தமிழுக்கு ஒருவர்!

தமிழுக்கு ஒருவர்! 
மீ.ப.சோமு



டிசம்பர் 5, 1954. பேராசிரியர் ‘கல்கி’ மறைந்த தினம்.


டிசம்பர் 12, 1954 -ஆம் தேதி வெளிவந்த ‘கல்கி’ இதழ்  பேராசிரியர் ‘கல்கி’ பற்றிய உருக்கமான பல அஞ்சலி மலர்களைத் தாங்கி நின்றது. ராஜாஜி, ம.பொ.சி,  சாவி, ’கல்கி’யின் பல துணை ஆசிரியர்கள், மதுரை மணி ஐயர், காருகுறிச்சி அருணாசலம் என்று பற்பல பிரபலங்களின் கட்டுரைகள், கடிதங்கள் அவ்விதழில் இருந்தன.  பல இரங்கற் கவிதைகளும் அவ்விதழை துயரத்தில் ஆழ்த்தின. அவ்விதழில் வந்த கட்டுரைகளில் பலவும் பின்பு சுப்ர.பாலன் தொகுத்த, “ எழுத்துலகில் அமரதாரா”  என்ற கல்கி நூற்றாண்டு சிறப்பு வெளியீட்டில் வந்தன. ஆனால், அவ்விதழில் வந்த கவிதைகள் ? முக்கியமான தலையங்கம்? எனக்குத் தெரிந்து இவை எந்த நூலிலும் பதிவு செய்யப் பட்டனவாய்த் தோன்றவில்லை. அதனால் அவற்றுள் சிலவற்றை இங்குப் பதிவு செய்கிறேன். மேலும், இன்று கல்கி நினைவு தினம் அல்லவா?

முதலில், கவிதைகளிலிருந்து சில பகுதிகள்:

புத்தனேரி ரா. சுப்பிரமணியனின் “ஹாஸ்ய ஜோதி” என்ற இரங்கற் கவிதை:

மாய்ந்ததே வசன மேதை!
  மறைந்ததே ஹாஸ்ய ஜோதி!
காய்ந்ததே தமிழ்ப்ப்பூஞ் சோலை!
  கல்கியின் எழுது கோலே
ஓய்ந்ததே! மக்கள் உள்ளம் 
  உடைந்ததே, கண்ணீர் வெள்ளம்
பாய்ந்ததே கல்கி வைத்த
  பயிரெலாம் செழிக்கு மாறே! 

( புத்தனேரி சுப்பிரமணியன் ஒரு நீண்ட இரங்கற் கவிதையை அந்த வார “ஆனந்த விகட”னிலும் எழுதினார்.)

54-இல் முதலில் ரசிகமணி டி.கே.சி, பிறகு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மறைந்ததைச் சுட்டிச் சுத்தானந்த பாரதியார் சதாசிவத்திற்கு 7-12-54 என்ற தேதியிட்ட ஒரு கடிதத்தை வடலூரிலிருந்து அனுப்பி இருந்தார்:  ’கதைமணி’ கல்கிக்கு அஞ்சலியாய் அக்கடிதத்தில் இருந்த ஒரு வெண்பா இதோ:

கதைமணி கல்கி !

கம்ப ரசிகமணி கண்ணாங் கவிதைமணி 
இன்பக் கதைமணியும் ஏகினரோ -- உம்பரிலே
மூவர்க்கும் மூச்சான முத்தமிழின் பாநயத்தைத்  
தேவர்க்குஞ் சொல்லத் தெளிந்து! 

“கற்பனைச் சிற்பி” என்ற தலைப்பில் வந்த ஏ.கே.பட்டுசாமியின் கவிதையிலிருந்து ஒரு பகுதி:

சிந்தையைத் தூண்டும் சிறுகதைகள் - முதல்
  சீரிய பற்பல கட்டுரைகள் 
முந்தைத் தமிழக மேன்மையைச் சாற்றிடும்
  முடிமணியாகிய நீள்கதைகள் 

காவியங்கள் எழுத்தோவியங்கள் - நல்ல 
  கருத்துச் செறிந்த விமர்சனங்கள்
ஆவிபிரியும் வரையில் எழுதிய 
  அற்புதக் கற்பனைச் சிற்பியவன் ! 

“பாரதீயன்” என்பவர் எழுதிய ”வாடாத தனி மலர்” என்ற கவிதையின் ஒரு பகுதி:

பாரதியார் கவிப்பெருமை பாரில் உள்ளார்
  பற்பலரும் அறிதற்குப் பணிகள் செய்தார் 
ஊரறியக் கலைஞர்களை ஊக்கி இந்த 
  உலகெல்லாம் அறிவித்த உண்மை யாளர் !

எத்தனையோ பெருங்கதைகள் எழுதி வைத்தும்
  எண்ணரிய சிறுகதைகள் இயற்று வித்தும்
வைத்தபெரு மதிப்புலவர் வரிசை உள்ளே
  வாடாத தனிமலராய் வாழ்வார் கல்கி!  

“கல்கி” மறைந்ததும் ,  ’கல்கி’ பத்திரிகையின் ஆசிரியராய்ப் பணிபுரியும் தகுதி யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி/கவலை உடனே எழுந்தது. ஒரு கணமும் யோசிக்காமல், ராஜாஜி மீ.ப.சோமுவைத் தேர்ந்தெடுத்தார்.  அகில இந்திய ரேடியோவில் உயர்பதவி வகித்த சோமு, இரு பதவிகளையும் சில காலத்திற்கு ஏற்று நடத்த மத்திய அரசு விசேஷ அனுமதி வழங்கியது. பதினெட்டு மாதங்கள் சோமு ‘கல்கி’யின் ஆசிரியராய் இருந்தார்; அப்போது பல முறை ‘கல்கி’யைப் போற்றிக் கட்டுரைகள் எழுதினார். ஆனால், ’கல்கி’க்கு அஞ்சலி என்ற முறையில் ‘கல்கி’யில் சோமு அவர்கள் முதலில் எழுதியது டிசம்பர் 12-ஆம் தேதி இதழுக்கு வரைந்த  தலையங்கம் தான். கட்டுரையின் சிறப்புக் கருதி,  ’கல்கி’யை நன்கு அறிந்த சோமு அவர்களின் அந்த முழுத் தலையங்கத்தை இங்கிடுகிறேன்.

( அந்த சமயத்தில், “ஆனந்த விகடனி”லும் ஓர் அருமையான தலையங்கமும் , எஸ்.எஸ்.வாசனின் கையெழுத்து உள்ள ஒரு உருக்கமான “உபயகுசலோபரி”யும் வந்தன என்பதை இங்குக் குறிப்பிடத் தான் வேண்டும். அவற்றின் சில பகுதிகளை வேறொரு மடலில் பிறகு இடுகிறேன்.)

இப்போது மீ.ப.சோமு அவர்கள் எழுதிய தலையங்கம்:




[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவு:

கல்கி படைப்புகள்

கல்கியைப் பற்றி


புதன், 4 டிசம்பர், 2013

சங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை

சங்கத் தமிழ்வளர்த்த நங்கை
பசுபதி



[ Picture Source : Wikipedia ] 

கோபுர தரிசனம்2013 தீபாவளி மலரில் வெளியான கவிதை.



சங்கத் தமிழ்வளர்த்த நங்கை


பண்டைத் தமிழகத்தின் பாவலர்கள் பலர்நடுவில்
வண்டமிழ் ஒளிபரப்பும் மங்கைமணி ஒருவருண்டு.
சங்கத் தமிழ்வளர்த்த நங்கையந்த ஔவையின்
மங்காப் புகழ்மழையில் மனம்நனைப்போம்; மகிழ்வுறுவோம்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றாலும்
மற்றோரைப் புழ்ந்திடுவோர் வையகத்தில் ஒருசிலரே.
பரணரென்ற பெரும்புலவர் தரமறிந்து புகழவ்வை
பெருமையைப் போற்றிடுவோம்; கரங்களைக் குவித்திடுவோம்.

புலவரவ்வை சென்றிருந்தார் புரவலனின் அவைக்களம்;
பலமணிகள் காத்திருந்தும் பரிசொன்றும் கிட்டவில்லை.
ரவுத்திரம் பழகென்ற புதுமொழிக் கிலக்கணமாய்
அவதாரம் அன்றெடுத்தார் ஔவைப் பிராட்டியார்!
தனைமறந் தானோ?வேந்தன் எனைத்தான் அறியானோ?
வனத்திலோர் மரமிலையா மழுவேந்து தச்சருக்கு?
வித்தையுண்டு என்கையில்!வீறுகொண்டு கூவினார்.
எத்திசையில் சென்றாலும் எமக்குண்டு சோறென்ற
செருக்குள்ள புலமைமுன்நம் சிரங்களைத் தாழ்த்திடுவோம்!
அறச்சீற்றம் அன்றுகண்டோம்; ஆனந்தம் இன்றுமுண்டு!

அதியனுடன் போர்தொடுக்க ஆசைகொண்டான் தொண்டைமான்;
அதையறிந்த ஔவையார் அங்குச்சென்றார்; தொண்டையனின்
போர்க்கலங்கள் குவியல்கண்ட புலவர் புகழ்ச்சியென்னும்
போர்வையுள்ள பாடலொன்றால் புத்திமதி புகட்டினார்.
பார்வையிட்ட வேல்வாள்கள் பளபளத்தல் புகழ்ந்தார்!
போரறிந்த படைக்கலங்கள் கூர்மின்னு மாஎன்ன?
புரிந்துகொண்ட தொண்டைமான் போர்தொடங்கா முடிவுசெய்தான்.
அரசியலில் பாடலொன்றால் ஔவைசெய்த புரட்சியிது!
பார்வரலா றின்றுவரை பாராத அருமையது!
போர்மேகம் விரட்டுகவிப் புயலவ்வை பெருமையிது!

                   (வேறு)
துங்க நெல்லி பெற்ற அவ்வை தூது சென்று பண்டைநாள்
அங்க தத்தால் போர்நி றுத்தி அற்பு தம்நி கழ்த்தினாள்.
சங்க கால அவ்வை முன்பெம் தலைகள் என்றுந் தாழுமே
தங்க மான பாக்கள் தந்த நங்கை நினைவு வாழுமே!  

=========================  


தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

இந்த மண் பயனுற வேண்டும் : கவிதை

இந்த மண் பயனுற வேண்டும்
பசுபதி

”சண்முக கவசம்” என்ற மாத இதழின் 2013 தீபாவளி மலரில் வெளியான என் கவிதை.


கூழ்வேண்டிக் கெஞ்சுபவர் குழிவிழுந்த கண்ணில்
. . கொடுங்காலன் கண்டுளம் கொதிப்பவர் வேண்டும்;
ஊழ்வினையால் வறுமையெனும் உளுத்தபழங் கருத்தை
. . உதறிடநல் அறிவுரை உரைப்பவர் வேண்டும்.
வாழ்வினிலே வளமென்று வாக்குறுதி கூறி
. . வாய்கிழியும் அரசியல் வாதிகள் ஒதுக்கி
ஏழ்மையெனும் இருளதனை இல்லையெனச் செய்யும்
. . இளைஞரால் இந்தமண் பயனுற வேண்டும்.

விதவிதமாய் வண்ணங்கள் விரித்தாடும் வெண்மை
. . வேற்றுமையுள் ஒற்றுமை மிளிர்ந்திடும் உண்மை;
இதயங்கள் அனைத்திலுமே இரத்தநிறம் சிவப்பு;
. . இறையொன்றே என்றிட ஏன்மிகக் கசப்பு ?
மதமென்னும் புதரினிலே மறைந்திருந்து வெறியை
. . வளர்த்துவிடும் தீவிர வாதிகள் விலக்கி
மதஇனநல் இணக்கமெனும் மரத்தினிலே மலரும்
. . மக்களால் இந்தமண் பயனுற வேண்டும்.

தொன்மரபை, செந்தமிழின் சொல்லழகைத் துகைக்கும்
. . தொலைக்காட்சித் தொல்லையைத் தொலைப்பவர் வேண்டும்.
இன்னிசையும் இலக்கியமும் இறவாமல் காக்கும்
. . இலக்குடனே இல்லறம் ஏற்பவர் வேண்டும்.
சின்னதென்றும் பெரியதென்றும் செந்தழலில் உண்டோ ?
. . சீரழிக்கும் சிறுதிரைப் பெட்டியைத் தவிர்த்துப்
பண்பாட்டுப் பழந்தேனைப் பாலோடு புகட்டும்
. . பாவையரால் இந்தமண் பயனுற வேண்டும். 
====
தொடர்புள்ள பதிவுகள் :

புதன், 27 நவம்பர், 2013

இந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ

’தேவன் நூற்றாண்டு விழாவில் நான் செப்டம்பர், 2013 -இல் சந்தித்த எழுத்தாளர் ‘அம்பை’ , 25 ஆண்டுகளாக அரும் பணியாற்றிவரும்  ‘ஸ்பேரோ’ ( SPARROW) என்ற ஒரு சிறந்த காப்பகத்தைப் பற்றிச் சொன்னார்; இப்போது அந்நிறுவனத்திற்கு எல்லோரிடமும் நன்கொடை கேட்டு , ஒரு வேண்டுகோளை எனக்கு அனுப்பியுள்ளார்.

இது ஒரு முக்கிய வேண்டுகோள் என்பதால் அதை அப்படியே இங்கு இடுகிறேன்.

சொல்வனம் இணைய இதழ் இந்தக் காப்பகத்தைப் பற்றி அண்மையில் எழுதியதை இங்கு மீண்டும் பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுவே என் வேண்டுகோளும் ஆகும்.

“ இது இந்தியப் பெண்களின் படைப்புகளைக் காக்கும் ஒரு அரிய கருவூலம். பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்களும், படைப்பாளிகளும் தன்னார்வலர்களும், கலைஞர்களும் ஆதரித்து, தம் படைப்புகளை நன்கொடையாகக் கொடுத்து, உழைப்பையும் நல்கிக் கட்டமைத்த ஒரு ஆவணக் காப்பகம் இது.  அம்பை அவர்களும் இந்த அரிய அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இதன் 25 ஆண்டுகளிலும் அதன் கட்டமைப்புக்கும், பராமரிப்புக்கும் மிக்க பாடுபட்டதோடு, தனது சலியா உழைப்பையும் இதற்கு நல்கியிருக்கிறார்.
இந்த ஆவணக்காப்பகத்தை நிலைநிறுத்தி அதன் தொடர்ந்த பராமரிப்புக்கும், தன் நடவடிக்கைகளை அது விஸ்திகரிக்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது இந்தியாவின் வரலாற்றை எழுத முற்படுவோருக்கு வருங்காலத்திலாவது நியாயமான ஆழமான முறையில் அதை எழுத, மிகுந்த உதவியாக இருக்கும்.
படிப்பறிவு பெற்ற ஒவ்வொரு இந்தியரும் இத்தகைய முயற்சிகளைத் தம்மால் ஆன வகைகளில் ஆதரிப்பது இந்தியாவின் எதிர்காலம் வளமாக அமைய நாம் செய்யக் கூடிய எளிய ஆனால் உருப்படியான செயலாக இருக்கும்” 




ஞாயிறு, 24 நவம்பர், 2013

சாவி - 9: ’சிக்கனம்’ சின்னசாமி

’சிக்கனம்’ சின்னசாமி
 சாவி 

[ ஓவியம்: நடனம்]

சைக்கிள் என்ற நாமதேயத்தில் உயிர் வைத்துக் கொண்டிருக்கும் அந்த ஜங்கமப் பொருளுக்குப் பச்சை வர்ணம் ஒரு கேடு!

பெடலின் வலது பாதம் தேய்ந்து மாய்ந்து கழன்று விட்டதால், அந்த நஷ்டம் மரக்கட்டையால் ஈடு செய்யப்பட்டிருந்தது. 'லொடக் லொடக்' என்று சத்தம் போடும் பல், ஆடிப் போன பெல். காயலான் கடை 'வா வா' என்று அழைக்கும் கிழடு தட்டிப்போன தோற்றம்.

'கர்க்க்.... சர்க்க்.... கிறீங்... சர்ர்ர்...!' - அந்தச் சைக்கிள் ஒரு தபாலாபீஸ் முன்னால் போய் நிற்கிறது.

அதோ, அந்த அபூர்வ வாகனத்திலிருந்து கீழே இறங்கிச் செல்கிறானே அவன் வேறு யாருமில்லை. 'சிக்கனம்' சின்னசாமிதான்! வெளியே போகும்போது வரும்போதெல்லாம் போஸ்டாபீசுக்குள் நுழைந்து அங்கே சும்மா கொடுக்கப்படும் மணியார்டர் பாரத்தை வாங்கி வருவது அவன் வழக்கம்.
[ மூலம்: கோபுலு நகல்: சு.ரவி ]

மணியார்டர் பாரத்துக்கு விலை கிடையாதல்லவா? இனாமாக எது கிடைத்தபோதிலும் சின்னசாமி அதை விட மாட்டான். அது மட்டுமல்ல; மலிவாக எந்தப் பொருள் எங்கே கிடைத்தாலும் வாங்கத் தவற மாட்டான். அந்தப் பொருள் தேவைதானா, அவசியந்தானா என்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை கிடையாது. எப்போதாவது உபயோகப்படாமலா போய் விடும்? காயலான் கடையிலும், மூர் மார்க்கெட்டிலும் அவன் வாங்கி வாங்கிச் சேகரித்து வைத்துள்ள பொருள்களைக் கொண்டே ஒரு பொருட்காட்சி நடத்திவிடலாம். அந்தச் சைக்கிள்கூட, பல பாகங்களைத் தனித் தனியாக வாங்கி, ரிப்பேர் ஷாப்பில் கொடுத்து உருவாக்கப்பட்டதுதான்.

காலையில் எழுந்ததும் சின்னசாமி டி.யு.சி.எஸ்.(1)  வாசலில் போய் உட்கார்ந்துகொண்டு, அங்கு வரும் தினப்பத்திரிகையை இலவசமாகப் படித்துவிட்டு, அப்படியே கறிகாய் மார்க்கெட்டுக்குப் போய் ஒவ்வொரு கடையாக, காய்களின் விலையை விசாரித்து வாங்கி வருவான். அன்று மார்க்கெட்டில் எந்தெந்தக் காய்கள் மலிவு என்பதைச் சுலபமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சின்னசாமி வாங்கும் கறிகாய்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
           
சின்னசாமி துணிகளைச் சலவைக்குப் போடமாட்டான். தானே துவைத்துத் தானே இஸ்திரி போட்டுக் கொள்வான். அந்த இஸ்திரிப் பெட்டிகூட அவனுடைய சொந்த 'மேக்'தான்!
மளிகைக் கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வந்தால் சாமான்கள் கட்டப்பட்டு வரும் காகிதங்களைக் கிழியாமல் மடித்து வைப்பதோடு சணல் கயிற்றையும் பத்திரமாகச் சுற்றி வைப்பான்.

தனக்கு வரும் தபால் கவர்களைக்கூட அவன் வீணாக்குவதில்லை. உறைகளைப் பிரித்து அடுக்கி வைத்துக்கொண்டு அவற்றின் பின்பக்கத்தை குறிப்பு எழுத உபயோகப்படுத்திக் கொள்வான்.

ஞாயிற்றுக்கிழமை வந்தால் சின்னசாமியை ஏலக் கம்பெனி ஏதாவது ஒன்றில்தான் பார்க்க முடியும். நூறு ரூபாய் பெறுமானமுள்ள பொருளை மிகத் துணிந்து ஐந்து ரூபாய்க்குக் கேட்பான். சில சமயம் அவன் கேட்கும் விலைக்கே அவை சல்லிகாசுக் கிடைத்து விடுவதும் உண்டு.

தெருவில் போகும்போது அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு போக மாட்டான். கீழே ஏதாவது கிடக்கிறதா என்றுதான் பார்த்துக்கொண்டு செல்வான். ஆணி, குடைக்கம்பி, இரும்புத் துண்டு எது கிடைத்தபோதிலும் அவற்றைப் பொறுக்கிப் பையில் போட்டுக் கொண்டு வந்து சேர்ப்பான்.

சின்னசாமி குற்றாலத்துக்குப் போகும்போதுதான் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வது வழக்கம். காரணம், குற்றாலம் அருவியில் எண்ணெய் ஸ்நானம் செய்வதென்றால் சீயக்காய்த் தூளுக்குச் செலவு கிடையாதல்லவா?
           
சின்னசாமியிடம் வெகு காலமாக ஒரு பழைய டைம்பீஸ் இருந்தது. ரயில் தண்டவாளத்தில் வைத்து நசுக்கி மோட்சம் கொடுக்க வேண்டிய அந்த வஸ்துவை அவன் தானாகவே ரிப்பேர் செய்து எப்படியோ ஓட வைத்து விட்டான்.

கடிகாரம் பழுது பார்ப்பதற்கு வேண்டிய உபகரணங்களையும், கடியாரத்துக்கு வேண்டிய ஸ்பிரிங் முதலிய கருவிகளையும் எங்கெங்கோ அலைந்து கடை கடையாகத் தேடி, பேரம் பேசி விலைக்கு வாங்கி வந்தான்.

ஒரு சனிக்கிழமை அந்தக் கடியாரத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து எதிரில் பரப்பிக்கொண்டான். ஏதோ ஒரு ஸ்பிரிங்கை எடுத்து மாட்டினான். அதிலிருந்து பல் சக்கரங்களை கழற்றினான். வேறு இரண்டைப் பொருத்தினான். கடைசியில் பழையபடியே கடியாரத்தை மூடிச் சாவி கொடுத்து ஓட்டினான். கடியாரம் ஓடத் தொடங்கிவிட்டது! ஆனால், என்ன ஆச்சரியம்! சாமான்களில் நாலு மிஞ்சி விட்டன. அப்படியும் கடியாரம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது! சின்னசாமிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சாமான்களிலும் நாலு மிஞ்சி, கடியாரமும் ஓடினால் மகிழ்ச்சி இருக்காதா?

''ஜெர்மன் டைம்பீஸ்; இப்போதெல்லாம் இந்த மாடல் வருவது கிடையாது. விலை கொடுத்தாலும் கிடைக்காது'' என்று பெருமையோடு சொல்லி மகிழ்ந்து கொண்டான் அவன்.
ஆனால், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் டைம்பீஸைப் பார்த்தபோது பெரிய முள் அப்பிரதட்சணமாகச் சுற்றிக் கொண்டிருந்தது!

மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு இப்போது சாமான்கள் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறான். பழைய ஹாரன், பல்பு ஒன்று மூர்மார்க்கெட்டில் (2) மலிவான விலைக்குக் கிடைத்து விட்டது. விடுவானா? இனி மற்ற பாகங்கள் கிடைக்க வேண்டியதுதான் பாக்கி!

சிக்கனம் சின்னசாமிக்குச் சிக்கனமாக இரண்டே குழந்தைகள்தாம். தீபாவளி வந்தால் அந்தக் குழந்தைகளுக்குப் பட்டாசு, மத்தாப்பு எதுவூம் வாங்கித் தரமாட்டான். அடுத்த வீட்டுச் சிறுவர்கள் வெடிக்கும்போது தன் குழந்தைகளை அங்கே அழைத்துச் சென்று வேடிக்கை காட்டிவிட்டு வந்து விடுவான்!

அஸ்ஸாம் காடுகளில் மலிவாக யானை கிடைக்கிறது என்று யாரோ கூறினார்களாம். அஸ்ஸாமுக்குச் சைக்கிளிலேயே போய் யானையைத் தன் சைக்கிளின் பின்சீட்டில் உட்கார வைத்துக்கொண்டு வந்துவிடலாமா என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறான்
=====

பி.கு.
(1)  சாவியின் ஒவ்வொரு கட்டுரையிலும் மிகச் சுவையான வரலாறுகள் பொதிந்துள்ளன என்றால் மிகையாகாது. உதாரணம், டி.யூ.சி.எஸ் . அப்படி என்றால் என்ன? திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் ( Triplicane Urban Co-operative Society) .
இது 1904-இல் சென்னையில்   தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம்,  பண்டகசாலை !  அதைப் பற்றிய ஒரு  பதிவை இங்கே பார்க்கலாம்.

(2) மூர்மார்க்கெட். அடடா!  இந்தப் பேரைக் கேட்டாலே என்முன் பொக்கிஷங்கள் நிறைந்த ஒரு தேவலோகமன்றோ தெரிகிறது! 50-களில் மூர்மார்க்கெட் புத்தகக் கடைகள் இல்லாமலிருந்தால் என் உலகே இருண்டிருக்கும்! மூர் மார்க்கெட் பற்றி இங்கே படியுங்கள் .

[நன்றி: ‘சாவி’யின் ‘கேரக்டர்’ நூல்  ]

தொடர்புள்ள பதிவுகள்: 

சாவியின் படைப்புகள்