வியாழன், 5 டிசம்பர், 2013

கல்கி -5 : தமிழுக்கு ஒருவர்!

தமிழுக்கு ஒருவர்! 
மீ.ப.சோமுடிசம்பர் 5, 1954. பேராசிரியர் ‘கல்கி’ மறைந்த தினம்.


டிசம்பர் 12, 1954 -ஆம் தேதி வெளிவந்த ‘கல்கி’ இதழ்  பேராசிரியர் ‘கல்கி’ பற்றிய உருக்கமான பல அஞ்சலி மலர்களைத் தாங்கி நின்றது. ராஜாஜி, ம.பொ.சி,  சாவி, ’கல்கி’யின் பல துணை ஆசிரியர்கள், மதுரை மணி ஐயர், காருகுறிச்சி அருணாசலம் என்று பற்பல பிரபலங்களின் கட்டுரைகள், கடிதங்கள் அவ்விதழில் இருந்தன.  பல இரங்கற் கவிதைகளும் அவ்விதழை துயரத்தில் ஆழ்த்தின. அவ்விதழில் வந்த கட்டுரைகளில் பலவும் பின்பு சுப்ர.பாலன் தொகுத்த, “ எழுத்துலகில் அமரதாரா”  என்ற கல்கி நூற்றாண்டு சிறப்பு வெளியீட்டில் வந்தன. ஆனால், அவ்விதழில் வந்த கவிதைகள் ? முக்கியமான தலையங்கம்? எனக்குத் தெரிந்து இவை எந்த நூலிலும் பதிவு செய்யப் பட்டனவாய்த் தோன்றவில்லை. அதனால் அவற்றுள் சிலவற்றை இங்குப் பதிவு செய்கிறேன். மேலும், இன்று கல்கி நினைவு தினம் அல்லவா?

முதலில், கவிதைகளிலிருந்து சில பகுதிகள்:

புத்தனேரி ரா. சுப்பிரமணியனின் “ஹாஸ்ய ஜோதி” என்ற இரங்கற் கவிதை:

மாய்ந்ததே வசன மேதை!
  மறைந்ததே ஹாஸ்ய ஜோதி!
காய்ந்ததே தமிழ்ப்ப்பூஞ் சோலை!
  கல்கியின் எழுது கோலே
ஓய்ந்ததே! மக்கள் உள்ளம் 
  உடைந்ததே, கண்ணீர் வெள்ளம்
பாய்ந்ததே கல்கி வைத்த
  பயிரெலாம் செழிக்கு மாறே! 

( புத்தனேரி சுப்பிரமணியன் ஒரு நீண்ட இரங்கற் கவிதையை அந்த வார “ஆனந்த விகட”னிலும் எழுதினார்.)

54-இல் முதலில் ரசிகமணி டி.கே.சி, பிறகு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மறைந்ததைச் சுட்டிச் சுத்தானந்த பாரதியார் சதாசிவத்திற்கு 7-12-54 என்ற தேதியிட்ட ஒரு கடிதத்தை வடலூரிலிருந்து அனுப்பி இருந்தார்:  ’கதைமணி’ கல்கிக்கு அஞ்சலியாய் அக்கடிதத்தில் இருந்த ஒரு வெண்பா இதோ:

கதைமணி கல்கி !

கம்ப ரசிகமணி கண்ணாங் கவிதைமணி 
இன்பக் கதைமணியும் ஏகினரோ -- உம்பரிலே
மூவர்க்கும் மூச்சான முத்தமிழின் பாநயத்தைத்  
தேவர்க்குஞ் சொல்லத் தெளிந்து! 

“கற்பனைச் சிற்பி” என்ற தலைப்பில் வந்த ஏ.கே.பட்டுசாமியின் கவிதையிலிருந்து ஒரு பகுதி:

சிந்தையைத் தூண்டும் சிறுகதைகள் - முதல்
  சீரிய பற்பல கட்டுரைகள் 
முந்தைத் தமிழக மேன்மையைச் சாற்றிடும்
  முடிமணியாகிய நீள்கதைகள் 

காவியங்கள் எழுத்தோவியங்கள் - நல்ல 
  கருத்துச் செறிந்த விமர்சனங்கள்
ஆவிபிரியும் வரையில் எழுதிய 
  அற்புதக் கற்பனைச் சிற்பியவன் ! 

“பாரதீயன்” என்பவர் எழுதிய ”வாடாத தனி மலர்” என்ற கவிதையின் ஒரு பகுதி:

பாரதியார் கவிப்பெருமை பாரில் உள்ளார்
  பற்பலரும் அறிதற்குப் பணிகள் செய்தார் 
ஊரறியக் கலைஞர்களை ஊக்கி இந்த 
  உலகெல்லாம் அறிவித்த உண்மை யாளர் !

எத்தனையோ பெருங்கதைகள் எழுதி வைத்தும்
  எண்ணரிய சிறுகதைகள் இயற்று வித்தும்
வைத்தபெரு மதிப்புலவர் வரிசை உள்ளே
  வாடாத தனிமலராய் வாழ்வார் கல்கி!  

“கல்கி” மறைந்ததும் ,  ’கல்கி’ பத்திரிகையின் ஆசிரியராய்ப் பணிபுரியும் தகுதி யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி/கவலை உடனே எழுந்தது. ஒரு கணமும் யோசிக்காமல், ராஜாஜி மீ.ப.சோமுவைத் தேர்ந்தெடுத்தார்.  அகில இந்திய ரேடியோவில் உயர்பதவி வகித்த சோமு, இரு பதவிகளையும் சில காலத்திற்கு ஏற்று நடத்த மத்திய அரசு விசேஷ அனுமதி வழங்கியது. பதினெட்டு மாதங்கள் சோமு ‘கல்கி’யின் ஆசிரியராய் இருந்தார்; அப்போது பல முறை ‘கல்கி’யைப் போற்றிக் கட்டுரைகள் எழுதினார். ஆனால், ’கல்கி’க்கு அஞ்சலி என்ற முறையில் ‘கல்கி’யில் சோமு அவர்கள் முதலில் எழுதியது டிசம்பர் 12-ஆம் தேதி இதழுக்கு வரைந்த  தலையங்கம் தான். கட்டுரையின் சிறப்புக் கருதி,  ’கல்கி’யை நன்கு அறிந்த சோமு அவர்களின் அந்த முழுத் தலையங்கத்தை இங்கிடுகிறேன்.

( அந்த சமயத்தில், “ஆனந்த விகடனி”லும் ஓர் அருமையான தலையங்கமும் , எஸ்.எஸ்.வாசனின் கையெழுத்து உள்ள ஒரு உருக்கமான “உபயகுசலோபரி”யும் வந்தன என்பதை இங்குக் குறிப்பிடத் தான் வேண்டும். அவற்றின் சில பகுதிகளை வேறொரு மடலில் பிறகு இடுகிறேன்.)

இப்போது மீ.ப.சோமு அவர்கள் எழுதிய தலையங்கம்:
[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவு:

கல்கி படைப்புகள்

கல்கியைப் பற்றி


2 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

நல்ல காரியம் செய்தீர்கள், திரு.பசுபதி. இவை பொக்கிஷங்கள்.

Soundar சொன்னது…

இந்த டிஸம்பர் 5-ம் தேதி இன்னும் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிட்டது இவ்வாண்டில். தென் ஆப்பிரிக்காவின் குடிமக்களைக் கடைத்தேற்றும் 'கல்கி' அவதாரமாய்த் தோன்றிய மண்டேலாவும் இதே நாளில் மறைந்துவிட்டார்.

பொதுவாக சாதனையாளர்களைப் பார்த்து 'You rock' என்று இந்நாளில் சொல்லும் வழக்கமிருந்தாலும், அந்நாளிலேயே, எழுத்துத்துறையில் சாதனை படைத்த கல்கி அவர்களுக்கு, "ரா.கி." என்ற பெயர் இயற்கையாகவே அமைந்திருந்தது சாலப் பொருத்தமே!

அருமையான செய்தித் தொகுப்பை இங்கே அளித்தமைக்கு நன்றி

சௌந்தர்

கருத்துரையிடுக