செவ்வாய், 31 ஜூலை, 2012

'தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி

’கல்கி’ என்னும் காந்த சக்தி 
தேவன்




பேராசிரியர் ' கல்கி’ ‘ஆனந்த விகட’னில் நிறைய எழுதி இருக்கிறார்; ‘கல்கி’யிலும் தான் ! ‘ தேவன்’ ஆனந்த விகடனில் நிறைய எழுதியதும் நமக்குத் தெரிந்ததே.

 ஆனால், ’கல்கி’யின் முதல் ‘மாணவ’ரான ‘தேவன்’ எப்போதாவது ‘கல்கி’ பத்திரிகையில் எழுதியிருக்கிறாரா?

எனக்குத் தெரிந்து, ஒரு முறையாவது எழுதியிருக்கிறார். ஆம், பேராசிரியர் ‘கல்கி’ மறைந்தவுடன், டிசம்பர் 1954 ‘ கல்கி’ இதழ் ஒன்றில், அப்போது விகடன் பொறுப்பாசிரியராக இருந்த  ‘தேவன்’ தன் ஆசானைப் பற்றி எழுதிய மிக அருமையான  கட்டுரை இதோ: ஆடம்பரம் அற்ற சொற்கள், உள்ளத்திலிருந்து எழுந்த உணர்வுகள், சுவையான நிகழ்ச்சிகளைப் பற்றிய சொற்சித்திரங்கள்.

அதுதான் ‘தேவன்’.



[ நன்றி: கல்கி ]











 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள சில பதிவுகள்:

'கல்கி’ கட்டுரைகள்
தேவன் படைப்புகள்
கல்கியைப் பற்றி . . .

வியாழன், 19 ஜூலை, 2012

சசி - 3 : அதிர்ஷ்டசாலி!

அதிர்ஷ்டசாலி! 
சசி

''அத்திம்பேரே!'' என்று உரக்கக் கூப்பிட்டுக்கொண்டே மிகுந்த குதூகலத்துடன் ஓடி வந்தான், என் மைத்துனன் வைத்தி.


''போன காரியம் என்னடா ஆயிற்று? காயா, பழமா?'' என்று நான் ஆவலோடு கேட்டேன்.
''பழம்தான், அத்திம்பேரே! ராமாமிர்தம் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தைப் பார்த்ததும் செட்டியாருக்கு ரொம்பத் திருப்தி! நாளைக்கே வேலைக்கு வந்து விடும்படி சொல்லிவிட்டார்!''
''நிஜமாகவா..?''

''பின்னே பொய்யா சொல்லுவேன்? இதோ பாருங்கள், அவர் கொடுத்த 'வேலை உத்தரவு'. சம்பளம் மாதம் 100 ரூபாய் என்றும் தெரிவித்திருக்கிறார்.''


அதைக் கேட்டதும் எனக்கு உண்டான சந்தோஷம் இவ்வளவு அவ்வளவில்லை!
ராமாமிர்தம் யாரென்று சொல்லவில்லையே? திவால் கம்பெனியின் மானேஜர்தான் அவர். அவருடைய கம்பெனியில்தான் என் மைத்துனன் வைத்தியை வேலைக்கு விட்டிருந்தேன். ஒரு சமயம், உடம்பு சரியில்லை என்று என் மைத்துனன் ஒரு மாத லீவு கேட்டபோது, அவர் கோபித் துக்கொண்டு அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.


அதற்குப் பிறகு, மைத்துனனுக்காக வேலை தேடி ஊரெல்லாம் அலைந்து திரிந்தேன். கடைசியில் என் நண்பர் ஒருவர் மூலமாக, ஒரு செட்டியார் கம் பெனியில் வேலை கிடைக்கும் போலிருந்தது. ஆனால், சிபாரிசுக் கடிதம் ஏதாவது கொண்டு வரும்படி சொன்னார்கள். முன்பு என் மைத்துனன் வேலை செய்து வந்த கம்பெனியிலிருந்தே கடிதம் வாங்கி வந்தால் ரொம்ப நல்லது என்றும் தெரிவித்தார்கள்.
ராமாமிர்தத்திடம் கேட்ட போது அவரும் மனமிரங்கி ஒரு லெட்டர் கொடுத்தார். அதிர்ஷ்ட வசமாக அந்த லெட்டருக்கு மதிப்பு வைத்து, செட்டியார் கம்பெனியில் என் மைத்துனனுக்கு வேலையும் கொடுத்துவிட்டார்கள். எனக்குச் சந்தோஷமாக இராதா? ராமாமிர்தத்திற்கு நன்றி செலுத்தவேண்டியதும் நியாயந்தானே? அதற்காகத்தான் அவரைத் தேடிக்கொண்டு உடனேயே ஓடினேன்.

ராமாமிர்தம் என்னைப் பார்த்துவிட்டு, முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டார். மறுபடியும் ஏதாவது என் மைத்துனனுக்கு வேலை வேண்டும் என்று நான் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டாரோ என்னவோ?


''அந்த சிபாரிசுக் கடிதம் கொடுத்தீர்களே... அந்த லெட்டரைப் பார்த்ததும், அவனுக்கு உத்தியோகம் கொடுத்துவிட்டார்கள், சார்! அதற்கு நன்றி சொல்லத்தான் நான் வந்தேன்'' என்றேன்.
''என்ன! உத்தியோகம் கொடுத்து விட்டார்களா! ஆச்சரியமாக இருக்கிறதே! கடிதத்தை ஏதாவது மாற்றி எழுதிவிட்டானோ, உம் மைத்துனன்?'' என்றார் அவர்.


''கடிதத்தில் அப்படி நீங்கள் என்ன ஸார் எழுதியிருந்தீர்கள்?'' என்றேன் புரியாமல்.
''என்ன எழுதியிருந்தேனா? உம் மைத்துனனுடைய குட்டை நன்றாக வெளிப்படுத்தியிருந்தேன்! நன்றாக துரை மாதிரி டிரஸ் பண்ணிக்கொண்டு வரத் தெரியும்; துளி தலையை வலித்தாலும், உடனே கண்ணால் ஜலம் விட்டு அழுவான்; உடம்புக்கு ஏதோ பெரிய ஆபத்து வந்தது போலப் பாசாங்கு செய்வான். ஆசாமி வெறும் வேஷக்காரன்; அவனை நம்பவே நம்பாதீர்கள். நாடகமாடுவதில் சமர்த்தன் என்று எழுதியிருந்தேன்.''


''அப்படிச் சொல்லுங்கள்! அதனால்தான் செட்டியார் உடனேயே வேலை கொடுத்து விட்டார்! அவர் வைத்திருப்பது நாடகக் கம்பெனி, ஸார்! நடிப்பவர்கள் என்றால் அவருக்கு லட்டு மாதிரியல்லவா? அப்போதே சொன்னார்கள், என் மைத்துனன் அதிர்ஷ்டசாலி என்று!''
[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள சில பதிவுகள் :

தந்திரம் பலித்தது

பெயர் மாற்றம்

சசி: மற்ற சிறுகதைகள்

ஞாயிறு, 15 ஜூலை, 2012

தேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி

எனது மனமார்ந்த நன்றி
தேவன்



’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ஸம்பாதி’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ஹாஸ்யக் கட்டுரைகள் புனைந்திருக்கிறார்” என்கிறார் தம்பி ஸ்ரீநிவாசன்.

 அந்தப் பெயரில் அவர் எழுதிய பல கட்டுரைகளில் இதோ ஒன்று. [  “தேவனின் எழுத்துலகம்” என்ற நூலை ( வானதி  பதிப்பகம்; 1995) எழுதிய கவிஞர் எஸ். வைதீஸ்வரன் தன்  நூலில் குறிப்பிடும் தேவனின் கட்டுரைகளில் இதுவும் ஒன்று  ]

எனது மனமார்ந்த நன்றி

தேவன்
   
என்னுடைய நண்பர் ஒருவர் பத்திரிகாசிரியராக இருக்கிறார். அவருக்கு வந்த கடிதம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. முன் பின் பார்த்திராத யாரோ ஒருவர் விகடத் துணுக்கு ஒன்றை அனுப்பி, "தயவு செய்து இதைப் பிரசுரிக்க வேணும்; அதற்காக என் ஆயுள் பூராவும் நான் தங்களுக்குக் கடமைப்பட்டவனாஇருப்பேன்" என்றும் எழுதி இருந்தார். விகடத் துணுக்கு என்ன என்பது பற்றி எனக்குச் சிந்தனை ஓடவில்லை. "அடேயப்பா, ஒரு மனுஷன் ஒரு சின்ன விஷயத்துக்காக யாரோ ஒரு ஆசிரியருக்கு இப்படி ஆயுள் பூராவும் கடமைப்பட்டு விடுகிறாரே!... இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் இருப்பதென்றால் ஜீவிப்பது எப்படி சாத்தியம்?" - என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.

"இதெல்லாம் சும்மா 'உளஉளாக் கட்டி'க்காக எழுதப்படுபவைதான்" என்று அப்புறம் சமாதானமும் அடைந்தேன்.

நன்றி தெரிவிப்பதென்பது மனிதர்கள் குணத்தில் சேர்ந்தது. நாய் இதை வெகு அழகாகச் செய்கிறதாலோ என்னவோ, மனிதன் நன்றி கெட்ட காரியங்கள் செய்யும் போது நாய்க்கும் கேவலமாக மதிக்கப்பட்டு விடுகிறான்! தற்கால நாகரிகத்தில் ஒருவர் மற்றவருக்கு ஏதேனும் சேவை செய்தவுடன், பெற்றுக்கொண்டவர் 'தாங்க்யூ' என்கிறார். செய்தவர் 'நோ மென்ஷன்' என்கிறார். 'ஐஸா பைஸா' என்று காரியம் தீர்ந்து விட்டது. அப்புறம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும் வேண்டாம். முன் காலத்திலெல்லாம் அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த 'நன்றி' என்ற குணம் மனிதனிடம் மட்டும் இல்லாமல், இதர ஜீவராசிகள் எல்லாவற்றுக்குமே இருந்திருப்பதாகவும், நன்றிக்குப் பதில் நன்றி செய்தாலொழிய அவை உட்காருவதில்லை என்றும் நினைக்கிறேன்!

ஒரு எறும்பு ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு விடுகிறது; தத்தளிக்கிறது இதைப் பார்த்த ஒரு புறா ஓர் இலையைக் கிள்ளிப் போட, அதை ஓடமாக உபயோகித்து எறும்பு கரை சேர்ந்து விடுகிறது. மறுநாள் ஒரு வேடன் அந்தப் புறாவின்மீது அம்பு போடவிருக்கும் சமயம் எறும்பு அவன் காலில் கடித்துக் குறி தவறச் செய்கிறது. புறா இதற்குள் ஓடி விடுகிறது. நன்றி மறவாத எறும்பின் சமாசாரம் இப்படியாச்சா? நன்றி மறவாத சிங்கம்கூட ஒரு கதையில் வருகிறது. ஒருவன் அதன் காலில் தைத்த முள்ளை எடுத்து விட்டதற்காக, அகோரப் பசியுடன் அவிழ்த்து விடப்பட்ட போதும்கூட அவனைக் கொல்ல அது மறுத்து, நாய்க்குட்டி மாதிரி நடந்து கொள்கிறது!

கீழே வார்த்த ஜலத்தை உச்சந்தலையால் கொடுக்கும் தென்னை மரங்களுக்குத்தான் நம் ஊரில் குறைவே இல்லை!

இப்படியாக ஒரு நற்காரியம் செய்தால், அது பதிலுக்கு இன்னொரு நற்காரியத்திற்கு ஆதாரமாக நிற்கிறது என்று பழங்கதைகள் கூறுகின்றன. ஆனால் எந்தக் கதையும் நன்றிக்குப் பதில் நன்றியை அடித்து வாங்கு என்று சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. தானாக ஏற்பட வேண்டிய குணம் அது. அவ்வளவுதான்!

எனக்குத் தெரிந்த ஒருவர் எங்கள் ஊரிலிருந்து வந்திருந்தார். அவரை என் குழந்தைப் பருவத்தில் நான் பார்த்திருக்கிறேன்.

"என்னடா, ஸம்பாதி! செளக்கியமாக இருக்கிறாயா?" என்று கேட்டார்.

"இருக்கிறேன்" என்றேன்.

"உனக்கு ஞாபகம் இருக்குமோ இல்லையோ, அந்த நாளில் உன் அப்பா முறுக்கென்றால் என்னிடம் வந்து விடுவான்... அநேகமாக நம் வீட்டில் ஒரு வேளை காபி சாப்பிட்டு விட்டுத்தான் போவான்."

"ஓஹோ!"

"அந்த நாளில் நாங்கள் சகோதரர் மாதிரி வளர்ந்த பேர்... எத்தனை ஒத்தாசை செய்திருக்கிறேன் தெரியுமா அவனுக்கு!... உனக்கு மூணு வயசு இருக்கும், கபவாத ஜுரம் வந்து நினைவு தெரியாமல் கிடந்தாய். நம் வீட்டில் ஒற்றை மாட்டு வண்டி இருந்தது. உன் அப்பாவோ அழுகிறான்... 'கட்டடா வண்டியை' என்றேன். கும்பகோணத்திலே அப்போ டாக்டர் கணபதி இருந்தார். ராத்திரி பன்னிரண்டு மணிக்குப் போய்க் கதவைத் தட்டினேன்... மருந்து கொடுத்தார்... நீ பிழைத்தாய்."

"ஓஹோ!"

"நீ செளக்கியமாக இருக்கிறாய் என்று கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நமக்கு வேண்டியவாள் நன்றாக இருந்தாலே ஒரு ஆனந்தம்தானே?... நான் இப்ப வந்தது எதற்குன்னா..." என்று தொடங்கி, என்னால் ஆகாத ஒரு காரியத்தைச் செய்து தரும்படி சொன்னார்.

நான் திணறினேன். நான் இன்று பிழைத்திருப்பதே அவரால்தான் என்று அவர் ஸ்தாபித்துவிட்ட பிறகு, அந்தக் காரியத்தைச் செய்து தராவிட்டால் இந்த ஜன்மம் வீண்தான் என்பதாக என்னை ஒரு பார்வையும் பார்த்தார்.

"ஏதோ முயன்று பார்க்கிறேன்" என்றேன்.

"அதெல்லாம் சொல்லாதே! உன் அப்பா இன்றைக்கு இருந்தானானால், அடித்து 'அடே, செய்துவிட்டு அன்னண்டே போடா!' என்பேன். அத்தனை சுவாதீனம் எனக்கு உண்டு!"

"நிச்சயம் பார்க்கிறேன்."

"அப்படிச் சொன்னால் போதாது... நீதான் செய்து வைக்க வேண்டும். உன்னால் ஆகாத காரியம் இல்லை என்று சொல்லுகிறார்கள்."

"அதெல்லாம் சரியில்லை... நான் என்னாலான வரையில் முயன்று பார்க்கிறேன்."

"உன்னை நம்பி விட்டேன், எனக்கு வேறே யாரையும் தெரியாது."

"ஷண்முகா!" என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டேன். நான் இதைச் செய்யாவிட்டால் என் பெயர் எப்படி அடிபடும் என்பது எனக்குத் தெரியும். என் தகப்பனார் உயிருடன் இருந்தால், "ஐயோ அப்பா! நீ நிஜமாகவே இவர்கள் வீட்டில் காபி குடித்தாயா? ஏன் குடித்தாய்?... இன்று என் உயிரை இவர் குடிக்கிறாரே!" என்று கதறிக் கண்களில் நீர் விடுவேன்.

நன்றியை அடித்து வாங்கிக் கொள்வது எத்தனை பிசகோ, அத்தனை பிசகு நன்றியை வர்த்தகம்போல் நடத்துவதே. "நீ என் கதை நன்றாயிருக்கிறதென்று பிரசாரம் பண்ணு; அதற்குப் பதிலாக நீ எழுதுவதெல்லாம் பேஷாயிருக்கிறதென்று நான் சொல்கிறேன்" என்று இரண்டு எழுத்தாளர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டால் எத்தனை அபத்தம்!

ஆனால் எத்தனை பேர் இம்மாதிரி ஒரு வலையில் விழுந்து விடுகிறார்கள்! "ஸம்பாதி, நீ எழுதி இருக்கிறது நன்றாய் இருக்கிறது?" என்று யாராவது சொன்னால், பதிலுக்கு அதையே அவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டும் நான் பயப்படுவதில்லை. இப்படிப் பாராட்டுகிற நண்பர், சில காலத்திற்குப் பிறகு "நீ எழுதுவதெல்லாம் முன்னைப்போல் இல்லை இப்போ! நீதான் என்ன பண்ணுவாய்! உனக்கும் வாரா வாரம் விஷயம் அகப்பட வேண்டாமா?" என்று கேட்கத் தொடங்கி விடுவாரே என்றுதான் பயப்படுவேன்.

( மேலுள்ள வரிகளை “நினைவில் நின்ற சில வரிகள்” என்ற அத்தியாயத்தில் மேற்கோள் காட்டுகிறார் எஸ். வைதீஸ்வரன் )

எப்போதுமே, நம்மைப் புகழ்ந்து பேசுகிறவர்கழ்ந்து பேசும் ஸ்தானத்தையும் லகுவாக அடைந்துவிட முடியும். புகழ்வது என்பது மதிப்புப் போடுவதுதானே? மதிப்புப் போடுபவர் பண்டத்தைவிட உயர்வானவர் தானே? நல்லதைக் கேட்பவன் கெட்டதைக் கேட்கவும் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

நன்றி என்பது மனிதனின் உள்ளத்தில் உதயமாக வேண்டிய பூ, காய், அல்லது பழம். இதற்கும் உலகத்தில் இதர செடி கொடிகளில் வளரும் பழங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. செடி கொடிகளில் வளர்பவைகள் நாளுக்கு நாள் பருத்து வரும். உள்ளத்தில் முளைக்கும் நன்றி நாளுக்கு நாள் சிறுக்கும்!

ஒருவர் நமக்கு எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நம் உள்ளம் நன்றியினால் பூரித்துப் போகிறது. அந்தச் சமயத்தில், "இவரைப்போல் உண்டா? காமதேனு, கல்பக விருட்சம் எல்லாமே இவர் பக்கத்தில் நிற்க அருகதை அற்றவையாச்சே!" என்று எண்ணுகிறான் மனிதன். ஒரு வருஷம் கழித்து அதே பேர்வழியிடம் கேளுங்கள். பழைய உற்சாகம் மிகக் குறைந்து போய்த்தான் இருக்கும்! "என்னமோ செய்தார்!.... அவர் கையால் அடைய வேண்டும் என்று நமக்குப் பிராப்தம் இருந்தது. இல்லாவிட்டால், நம்மைப் பார்த்துச் செய்வானேன்?" என்று வேதாந்த பரமாகப் பதில் கிடைக்கும்.

வெகு காலமாக எனக்குப் பரிச்சயமான ஒருவர் காசிக்குப் போய் வர வேண்டுமென்றும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.எனக்குத் தெரிந்த ஒரு பெரிய மனிதர் காசிக்குப் போவதாக அறிந்து, இவரை அவருடன் சேர்த்து விட்டேன்.

அதுமட்டுமல்ல; பெரிய மனிதர் மற்றவரின் சகல செலவுகளையும் தாமே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி விட்டார்! கேட்க வேண்டுமா, நன்றிப் பெருக்கை? "நீங்கள் சாட்சாத் பரமேச்வரன்தான்!" என்று பழைய பேர்வழி புகழ்ந்து விட்டுப் போனார்; திரும்பியும் வந்தார். வந்ததும் நன்றியின் அறிகுறியாக எனக்கு ஒரு குடம் அளவு பெரிசாக ஒரு கங்கைச் செம்பு கொண்டு வந்திருப்பதாகவும் அதை வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார்.

வேலைத் தொந்தரவினால் நான் போகவில்லை. மறுபடி சந்தித்தபோது கை ஜாடையாக ஒரு சொம்பளவு காண்பித்து, "கங்கையை எடுத்துப் போக வேண்டாமா?" என்றார்.

மேலும் ஒரு வாரம் எனக்கு ஒழியவே இல்லை. இப்போது அவர் என்னைப் பார்த்து, இரு கைகளாலும் ஒரு சிறிய உரித்த தேங்காய் அளவு காட்டி, "என்ன! இன்னும் எடுத்துக் கொள்ளவில்லையே!" என்றார்.

அடுத்த வாரம் ஒரே கையினால் கிச்சிலிப் பழ அளவு. காட்டி, "உங்களுக்கு வேண்டாமா? ரொம்பப் பேர் கேட்கிறார்கள்! நீங்கள் இன்றாவது வராவிட்டால்,போய் விடும்!" என்று எச்சரித்தார். அதற்கு மறுநாள் போய், சுமார் எலுமிச்சம்பழ அளவில் இருந்த காசிச் சொம்பைப் கொண்டு வந்தேன்.

விசாரித்தபோது உண்மை வெளியாயிற்று : அவர் பெரிய குடம் அளவிலிருந்து எலுமிச்சம்பழ அளவு வரையில் பல கங்கைச் செம்புகள் கொண்டு வந்திருந்தார். வந்த புதிதில், நான் செய்த உதவி மனத்தில் நன்றாகப் பதிந்திருந்தது. பிரதி உபகாரமாகப் பெரிய சொம்பைக் கொடுத்து விட மனம் இடங் கொடுத்தது. நாளாக ஆக நன்றியுணர்ச்சி குன்றக்குன்ற, அது கங்கைச் செம்பையும் உடனுக்குடன் பாதித்து விட்டது!

இந்த உலகத்தில் ஒரு பொருளை மற்றவரிடமிருந்து காரணமாகவோ, இனாமாகவோ அடைந்து விட்டால், இந்த நன்றிப் பிரச்னை கிளம்பி விடுகிறது. நன்றி பெரிதாக ஆரம்பித்து, சிறுகச் சுருங்கிப் போகும் சுபாவம் கொண்டதாகையால், முதலில் உதவிய ஆசாமிக்கு மனத்தாங்கல் ஏற்படுவதும் சகஜம்தான்! ஆகையால்தான் புத்திசாலிகளாக இருந்த நம் முன்னோர்கள், "எந்தக் கர்மம் செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்காதே!" என்று சொன்னார்கள். இது கடுமையான நிபந்தனைதான். எனவே பிரதிபலனே இல்லாமல் போய்விட்டால் உலகமே அழிந்துவிடப் போகிறதே என்று பயந்து, அதே மூச்சில், "உப்பிட்டவரை உள்ளளவும் நினை!" என்றும் சொல்லி, சமையலில் சர்க்கரையைவிட உப்புக்கு அதிகப் பிராதான்யம் கொடுத்து விட்டார்கள்!

மாப்பிள்ளைகளுக்கு ஏன் கெட்ட பெயர் வருகிறது? மாமனார்களிடம் பல இனாம்கள் வாங்குகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள்! பிறகு, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பதிலாக, "இது எங்கள் உரிமை" என்று வழக்குப் பேசுகிறார்கள். நன்றி என்கிற அம்சமேயின்றி நடந்து கொள்கிறார்கள்!

மனித சுபாவம், கடவுளானாலும் பிரதிப் பிரயோசனத்தை எதிர்பார்க்கிறது. ஒரு காரியம் ஆக வேண்டுமா? ஒரு பரீட்சை பாசாக வேண்டுமா? உத்தியோகத்துக்கு செலக்ஷன் ஆக வேண்டுமா? உடனே "பிள்ளையாரே உனக்கு 108 மோதகம் செய்து நிவேதனம் செய்கிறேன்" என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த நிவேதனத்துக்குக் கடவுள் உடனே நன்றி செலுத்துவதுபோல் நமக்கு நினைத்த காரியத்தில் சித்தி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்... எப்படி இருக்கிறது நியாயம்!

நவக்கிரகப் பிரீதிகள், சாந்திகள் எல்லாம் செய்கிறார்களே... எதற்கும் அடிப்படைத் தத்துவம் என்ன? " தெய்வங்களே, உங்களுக்குத் நான் மறக்காமல் படைக்கிறேன்... பதிலுக்கு நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள்!" என்று எச்சரிக்கை போல் அமைகிறது நம் காரியம்! தெய்வங்கள் நன்றி தெரிவிக்காவிட்டால், முணுமுணுத்து விட்டுப் போகிறோம். அவைகள் நம் கையில் அகப்படுதில்லையே!

எனக்கு ஒரு பெரிய குறை உண்டு. அதாவது நான் எவ்வளவு செய்தாலும் பிறர் எனக்கு நன்றி தெரிவிப்பதில்லை. நேர் எதிராகக்கூட நடந்து கொள்கிறார்கள். ஒருவருக்கு நான் அடிக்கடி கைமாற்று கொடுப்பதுண்டு. ஒருபோது மட்டும், அவர் கேட்ட சமயம் என் கையில் பணம் இல்லை. உள்ளதைச் சொன்னேன். அவர் கோபித்துக் கொண்டு, "கிடக்கிறான்! இவன் பணம் குப்பைக்குச் சமானம் எனக்கு! எனக்கு வேண்டியதில்லை!" என்று சொல்லி விட்டார். அதற்குப் பிறகு என்னைக் கண்டால் பேச மாட்டேனென்கிறார்; முகத்தை திருப்பிக் கொள்கிறார். 'முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்' என்று நினைத்து நானும் மனத்தைச் சமாதானம் செய்து கொள்கிறேன்.

என்ன செய்து கொண்டிருந்தும் பழசையெல்லாம் மறந்துவிட்டாரே என்ற தாபமே உண்டாகிறது, "வீசு வீசு வாடைக் காற்றே வீசு! மனிதனின் நன்றி கெட்ட தனத்தைப்போல் அத்தனை கொடுமை உன்னிடம் இல்லை" என்று யாரோ கவி பாடியது ஞாபகத்துக்கு வந்தது.

இதெல்லாம் கேட்ட என் மனைவி, "நீங்கள் முதல் முதலாகக் கேட்டபோதெல்லாம் உங்கள் சிநேகிதருக்குக் கொடுத்தது பிசகு!" என்று முடிவாகச் சொல்லி விட்டாள், அப்படியும் என் சஞ்சலம் தீரவில்லை. கொடுத்தது பிசகா. நன்றியை எதிர்பார்த்தது பிசகா என்ற கொந்தளிப்பு என் மனத்தில் ஓயவே இல்லை.

அது போகட்டும்; இதுவரை தொடர்ந்து வாசித்த நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இதை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்களே!

[ நன்றி : ’’ஏன் இந்த அசட்டுத்தனம்’’ நூல் , அல்லயன்ஸ் ]


பின்னூட்டம்:

நண்பர் பொன்பைரவி எழுதியது:

நன்றி பற்றிய தேவன் கட்டுரைக்கு ஒரு தொடர் சிந்தனை 

சராசரி மனிதன் ஏன் நன்றி கெட்டவனாக இருக்கிறான் ?


ஒருவரிடம் பெற்ற உதவியின் காரணமாக ஆழ் மனதில் ஏற்படும் நன்றி உணர்வு ஒரு "கடனாக "ச் சுமையாகச் சராசரி மனிதனை வாட்டுகிறது. ஆகவே தான் சாதாரண மனிதன் தான் யாரிடமிருந்து மிகுந்த பயன் அடைந்தானோ அவரைவிட தான் யாருக்கு ஒரு சிறிய உதவி செய்தானோ அவரிடமே உறவு ,ஒட்டுதல் காட்டுகிறான் என்கிறார் பிரெஞ்சு நாடகாசிரியர் LABICHE. 

தற்கால உலகில் நம்மிடமிருந்து உதவி பெற்ற உறவினர்கள், நண்பர்கள் நம்மிடமிருந்து விலகி வேறு ஒருவரிடம் மிக ஒட்டுதலாகப் பழகுவதை புரிந்து கொள்ள உதவுகிறது இந்த ஆழ்ந்த கருத்து.

தொடர்புள்ள சில பதிவுகள்:


ஸரஸ்வதி காலெண்டர்

ஐயோ! சுண்டெலி!

தேவன்: வாழ்க்கை வரலாறு

தேவன் மறைவு: விகடன் தலையங்கம்

தேவன் நினைவு நாள் , 2010

தேவன் படைப்புகள்