கணபதியும் மகிஷாசுர மர்த்தனியும்
ஐம்பதுகளில் ஆனந்த விகடனில் ‘தேவனும்’, ‘சில்பியும்’ இணைந்து அளித்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடருக்கு அடிமையான பல்லாயிரக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.
தேவனையும், சில்பியையும் நன்கு அறிந்த ஓவியர் ‘கோபுலு’வின் சொற்களிலேயே, இத்தொடர் எப்படித் தொடங்கியது என்று பார்க்கலாம்.
“ .... 1946-ஆம் ஆண்டு , டயாபடீஸ் முற்றிப்போனதன் காரணமாகப் படுத்த படுக்கையாகி, அமரராகிவிட்டார் மாலி. அதன்பின், எங்களை வழி நடத்தியவர் எழுத்தாளர் தேவன். சில்பியின் தெய்வீக ஓவியங்களுக்கு அவர் பரமரசிகர். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்கும் விக்கிரங்களின் நேர்த்தியை, சிற்பங்களின் அழகை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1948-இல் ஆனந்த விகடனில் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரைத் தொடங்கத் திட்டமிட்டார் ‘தேவன்’. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பிரபல கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைவதற்கு சில்பியைத் தயார்படுத்தினார். சில்பியும் மிக ஆர்வத்தோடு, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனே காஞ்சிபுரம் சென்று, காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார். “
இந்தத் தொடர் இன்னும் நூலாக வரவில்லை என்பதைக் குறிப்பிடவேண்டும்.*
எப்படித் தொடர்கதைகள் மூல ஓவியங்களுடன் அச்சில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அது போலவே ‘சில்பியின்’ அமர ஓவியங்களும் ‘தேவ’னின் எழுத்துகளுடன் வருவது தான் சிறப்பு என்பது என் கருத்து.
என்னிடம் உள்ள சில ‘ செல்வங்களை’ அவ்வப்போது இங்கிடுவேன். படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்!
கச்சேரியை முதலில் ‘வாதாபி கணபதி’யுடன் தொடங்கலாமா?
[நன்றி; விகடன்]
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
பி.கு.
எத்தனை பேருக்குக் ‘கல்கி’யின் ‘சிவகாமியின் சபதம்’ நினைவிற்கு வருகிறது? :-))
==================
இந்தக் கட்டுரையைப் படித்த கவிஞர் சிவசூரியின் கவிதைகள்:
இடையொரு புறமே சாய்த்தே
எழிலுற நிற்கும் வண்ணம்
படைபல ஏந்திக் காளி
பாரினைக் காக்க வந்து
தடையற இசையைக் கேட்டுத்
தண்டமிழ்த் திருவா ரூரில்
கடைவிழி கருணை சிந்தக்
கண்ணெதிர் சிலையாய் நின்றாள்!
மகிடனைக் கொன்ற தேவி
மங்கலச் சிலையைக் கண்டு
முகிலெனக் கருணை பெய்யும்
மோகனப் படமாய்த் தீட்டி
நகமொடு சதையும் கொண்டு
நம்மெதிர் நிற்கச் செய்தார்
அகவிழி கொண்டு நோக்கும்
அற்புதச் "சில்பி" யாரே!
புல்லெலாம் புலவர் போலே
புதுப்புதுப் பாடல் செய்யும்
வில்லெலாம் புருவம் ஆகும்
விழியெலாம் காதல் ஏந்தும்
கல்லெலாம் இசையைச் சொல்லும்
கழலெலாம் ஜதியைச் சொல்லும்
இல்லெலாம் இறைவன் நாமம்
இசைத்திடும் திருவா ரூரே!
சிவனாரின் பாதம் பட்டச்
சீர்மிகு திருவா ரூரில்
பவநோயும் அற்றுப் போகும்
பாரினில் இவ்வூர் தன்னில்
எவரேனும் பிறந்தால் போதும்
இன்பங்கள் எல்லாம் துய்த்துத்
தவயோகம் செய்தார் போலும்
தண்ணடி அடைவார் திண்ணம்!
முகமெலாம் மலர்ந்து நிறக
முக்தியும் அளிக்கும் ஊரைச்
சகமெலாம் அறியும் வண்ணம்
தண்டமிழ் மொழியும் சேர்த்து
மிகமிகச் சுவையாய் அன்று
விகடனில் வந்த தெல்லாம்
இகபர சுகத்தை ஈய
இட்டவர் வாழி வாழி!
கரமலர் இருந்த தத்தை
கழலடி நோக்க வேண்டி
தரையினில் அமரக் கண்டு
தாமரைக் கரத்தை நீட்டி
வரையிலா அன்பைக் காட்டி
வாவெனச் சொல்லல் போலும்
வரமதை நமக்கெல் லாமே
வழங்கிடும் எழிலைப் பாரீர்!
கழலடி அழகா இல்லை
கரமலர் அழகா இல்லை
விழிமலர் அழகா இல்லை
விரியருள் அழகா இல்லை
மொழிதமிழ் அழகா மக்கள்
முகமதி அழகா இல்லை
பொழியிசை அழகா என்றே
புள்ளது வியந்த வாறோ!
சிலையது அழகா இல்லை
சித்திரம் அழகா நிற்கும்
நிலையது அழகா இல்லை
நீள்விழி அழகா இல்லை
கலையது அழகா இல்லை
கவிதையின் அழகா என்றே
நிலமிதில் உள்ளோர் போலே
நின்றதோ கிளியும் அங்கே!
அக்கமும் கரத்தில் கண்டேன்
அழகிய கிளியும் கண்டேன்
சக்கரம் சங்கம் கண்டேன்
தனுவுடன் வாளும் கண்டேன்
முக்கணன் சூலம் போலும்
மூவிலை மின்னக் கண்டேன்
திக்கெலாம் காப்ப தற்காய்த்
திகழ்கரம் எட்டும் கண்டேன்.
கரத்திலே படைகள் கொண்டும்
கண்ணிலே கருணை கொண்டும்
வரத்தினை அளிக்க நிற்கும்
வலக்கர அழகைக் கண்டேன்
சரம்பல மார்பில் பூண்ட
தாயெனக் கண்ட தாலே
வரையிலா இன்பம் கொண்டேன்
வணங்கினேன் அம்மா நானே
தனுவுடன் வாளும் கண்டேன்
முக்கணன் சூலம் போலும்
மூவிலை மின்னக் கண்டேன்
திக்கெலாம் காப்ப தற்காய்த்
திகழ்கரம் எட்டும் கண்டேன்.
கரத்திலே படைகள் கொண்டும்
கண்ணிலே கருணை கொண்டும்
வரத்தினை அளிக்க நிற்கும்
வலக்கர அழகைக் கண்டேன்
சரம்பல மார்பில் பூண்ட
தாயெனக் கண்ட தாலே
வரையிலா இன்பம் கொண்டேன்
வணங்கினேன் அம்மா நானே
பஞ்சமுக ஆனைமுகன்
ஆயிரம் இதழ்கள் கொண்ட
அழகிய தாமரை தோன்ற,
சீயமும் அதன்மேல் தோன்ற,
சிறப்புடை மூத்தோன் ஆனைச்
சேயவன் அதன்மேல் இங்கே
செந்தமிழ்த் திருவா ரூரில்
தாயவள் தன்னைக் காணத்
தலைபல கொண்டு தோன்றும்.
சிங்கத்தின் மேலே ஆனை
திகழ்ந்திடும் அழகைக் கண்டே
அங்கத்தில் புளகம் தோன்ற
அருந்தமிழ் துணையாய்த் தோன்ற
சங்கத்தில் கவியும் தோன்ற
சந்தமும் உடனே தோன்ற
எங்கெங்கும் இன்பம் தோன்ற
ஐந்தலை ஐயன் தோன்றும்.
தண்மதி வானில் தோன்ற
தாமரை தரையில் தோன்றும்
மண்பதி திருவா ரூரில்
மனத்தினில் மகிழ்வு தோன்றக்
கண்ணெதிர் காளை தோன்றும்
கறையுடைக் கண்டன் தோன்றும்
விண்ணவர் கோடி கோடி
வியப்புடன் தோன்றும் தோன்றும்.
புவியுளோர் கூட்டம் தோன்றும்
புகழெலாம் செப்பத் தோன்றும்
கவியெலாம் கதறத் தோன்றும்
கரிமுகம் ஐந்தும் தோன்றும்
விமலனின் மகனைக் காண
விழியெலாம் விரியத் தோன்றும்
கமலமா குளமும் தோன்றும்
கவின்மிகு திருவா ரூரே.
எழுசுரம் காற்றில் தோன்றும்
இசையுடன் பாடல் தோன்றும்
முழுமதி வானில் தோன்றும்
முத்தமிழ் புவியில் தோன்றும்
பொழில்பல சூழும் கோயில்
பொலிவுடன் புதுமை தோன்ற
எழிலுடைப் பிள்ளை யாரின்
இன்னுரு தோன்றும் தானே.
. . . சிவ சூரியநாராயணன்.
ஆசுகவி சிவசூரிக்கு என் பாராட்டுகள், நன்றி!
தொடர்புள்ள பதிவுகள்:
தென்னாட்டுச் செல்வங்கள் : பிற கட்டுரைகள்
பின் குறிப்பு:
* இத் தொடர் 2013-இல் விகடன் நூல்களாக வெளிவந்தன.
’விகடனின்’ நூல்கள் : ஒரு விமர்சனம்