செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

திருப்புகழ் - 9

திருப்புகழ் நூலுக்கு ஒரு வாழ்த்துரை 
‘திருப்புகழடிமை’ சு. நடராஜன் 

அருணகிரிநாதர் அருளிய பாடல்களை பொதுவாக ஒன்பது மணிகளாய்ப் பிரிப்பர். அவை: திருப்புகழ், கந்தர் அலங்காரம்,  கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி, திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை. இவை யாவற்றையும் ஒரே நூலில் பலர் வெளியிட்டிருக்கின்றனர். அண்மையில் வெளிவந்த அத்தகைய ஒரு நூல் , சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை வெளியிட்ட நூல். அதில் ஒரு புதிய திருப்புகழையும் சேர்த்து வெளியிட்டிருக்கின்றனர். நூலின் சில பக்கங்களையும், அதற்குத் ’திருப்புகழ் அடிமை', சு. நடராஜன் அளித்த ஒரு சிறப்பான வாழ்த்துரையையும் இங்குக் காணலாம்.








செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உ.வே.சா -1

என் சரித்திரம் : சில துளிகள் 

பிப்ரவரி 19, 1855. உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம்.

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் எழுதிய ‘என் சரித்திரம்’ 1940 -ஆம் ஆண்டு ஜனவரியில் ’விகடனின்’ புத்தாண்டு இதழில் தொடங்கி 1942 மே மாதம் வரை  122 வாரங்கள் வெளிவந்தது.  தற்காலத்தில் பலரும் அந்த ‘விகடன்’ மூலப் பக்கங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்! அதனால், இரண்டு அத்தியாயங்களின் முதல் பக்கங்களின் படங்களை இங்கே இடுகிறேன். 





அருமையான படம் இல்லையா? ஏ. எஸ். மேனன்’ என்பவர் வரைந்ததாகத் தெரிகிறது. ( இவர் ஜெமினியில் தான் அதிகம் வரைந்தார், எனினும் விகடனிலும் அவ்வப்போது வரைந்தார் என்று தெரிகிறது.  ”அந்தக் காலத்தில்”  ஓவியரே தான் படத்தில் வரும் சொற்களையும் வரைவார். அதன்படி, இந்த ஓவியத்திலும் பார்க்கலாம்! மேனன் “ சுவாமிநாத ஐயர் “ என்று ...அவருக்கு விகடன் நிர்வாகத்தினர் சொன்னபடியோ, அவருக்குத் தோன்றியபடியோ -- வரைந்திருப்பார் என்று நினைக்கிறேன்! ஆனால், பொதுவில் உ.வே.சா.வின்  கட்டுரைகளில்  “ சுவாமிநாதையர் “ அல்லது “ சுவாமிநாதய்யர்”  என்று தான் பார்ப்போம்! 

இப்படி இன்னும் சில “ஓவியங்களில் “ சில  சொற்பிழைகள் வருவதுண்டு! ஒரு “மணியம்” சித்திரத்தில்  இருந்த ஒரு சொற்புணர்ச்சித் தவற்றைக் ‘கல்கி’ அற்புதமாய்த் தன் சித்திர விளக்கத்தில் சமாளித்திருக்கிறார்!  ஒரு சித்திரம் வரைந்தபின் , பிறகு அதன் சொற்களை மாற்றச் சித்திரத்தையே அல்லவா மீண்டும் வரையச் சொல்ல வேண்டும்! அதனால் இதை அந்தக் காலத்தில் தவிர்த்து விடுவார்கள்!   )  

முதல் அத்தியாயத்தை உ.வே.சா எப்போது எழுதினார் தெரியுமா? 
அவ்வப்போது தான் அத்தியாயங்களை எழுதுவது அவர் வழக்கம் என்று தெரிகிறது . 15-12-1939 அன்று தான் முதல் அத்தியாயத்தைக் ‘கல்கி’ அவர்களிடம் கொடுத்தார் உ.வே.சா. உடனே புத்தாண்டு இதழிலிருந்து ‘என் சரித்திரம்’ தொடங்கியது! 

அவருடைய ஊரான உத்தமதானபுரத்தைப் பற்றி அவர் முதல் அத்தியாயத்தில் எழுதினதிலிருந்து ஒரு துளி :  

” ....இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதானபுரத்துக்கும், 'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை. ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.



இவ்வளவு ரூபாயென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுரவாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் இருக்கவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்துவிடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் ஒரு சாந்தி இருந்தது. இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாகத் தேடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதே யொழியக் குறையவில்லை. “ 

பி.கு. 

அது சரி ... நான் இட்ட இந்த ‘என் சரித்திர’ப் பக்கங்களின் பின் பக்கங்களில் என்ன இருந்தன என்பதை அறிய ஆவலா? சரி, அந்தக் கால ‘விக’டனில் என்ன தான் வெளிவந்தன என்பதைத் தான் தெரிந்து கொள்ளுங்களேன்! இதோ! 



இது ஓவியர் ‘ரவி’ வரைந்தது. ( அவரைப் பற்றி சங்கீத சங்கதிகள் -23 என்ற பதிவில் எழுதியுள்ளேன்). “சித்திரக் குறும்பு” என்ற அவர் தொடர் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. 

இன்னொரு ‘பின் பக்கம்’ ”மாலி” எடுத்த புகைப்படம்! மாலி போட்டோ எடுப்பதிலேயே தன் சம்பளத்தில் பெரும்பங்கைச் செலவழித்தார் என்கிறார் கோபுலு! 


[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பி.ஸ்ரீ -4 : சித்திர ராமாயணம் -4

363. கழுகு மகாராஜா 
பி.ஸ்ரீ  
[ பி.ஸ்ரீ ]

‘கல்கி’ விகடனில் எழுதுவதற்கு முன்பே, பி.ஸ்ரீ. விகடனில் எழுத ஆரம்பித்து விட்டார். ’கல்கி’ விகடனின் ஆசிரியரான பின்னர், பி.ஸ்ரீ. அவர்களுக்கு மேலும் நிறைய எழுதும் வாய்ப்புகள் கொடுத்தார். அந்தக் காலத்தில் ’கல்கி’க்கு அடுத்தாற்போல் விகடனில் இடம்பெற்றவர் பி.ஸ்ரீ.யே என்கிறார் ’சுந்தா’. பி,ஸ்ரீ-யின் “இலக்கியப் பூஞ்சோலை”க் கட்டுரைகள், சித்திர விளக்கங்கள், “சிவநேசச் செல்வர்கள்”, ”கம்பசித்திரங்கள்” முதலிய நெடுந்தொடர்கள் அக்கால விகடனில் தான் வெளிவந்தன. (  இவை இப்போது நூல்களாக கிடைக்கின்றனவா? தெரியவில்லை! )

“ பி.ஸ்ரீ. யின் கட்டுரைகள் விகடனின் பொதுவான பொருளடக்கத்துடன் பொருந்தாமல் கனமாக இருந்தன. ஆயினும், தமிழ் இலக்கியத்தின் அருமை, பெருமைகளை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் , அவற்றைக் கல்கி ஆட்சேபணைகளுக்கு இடையே உறுதிப் பற்றுடனும் இடையறாமலும் வெளியிட்டு வந்தார் 
( சுந்தா, பொன்னியின் புதல்வர்)

சரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த கட்டத்திற்குத் தாவுவோம்! ஸம்பாதி சீதை இருக்கும் இடத்தை வானரர்க்குச் சொல்கிறது.








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

(தொடரும்) 

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 10 பிப்ரவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 32

மதுரை சோமு - 4 

              



பிப்ரவரி 9.  மதுரை சோமு அவர்களின் பிறந்தநாள்.

மதுரை சோமு அவர்களை நானும், என் குடும்பத்தினரும் ரசிக்கத் தொடங்கினது : திருப்புகழ் மூலமாக. 50-களில் என்று நினைவு. திருச்சி ரேடியோ ‘தில்லைநகரிலிருந்து’ என்று ஒரு அருணகிரிநாதர் விழாவை ஒலிபரப்பும். அதில்தான் நாங்கள் ஆலத்தூர் சகோதரர்கள் போன்றோரின் முழு நீளத் திருப்புகழ் கச்சேரிகளைக் கேட்டு மகிழ்வோம். மதுரை சோமுவும் அங்குப் பாடுவார். 

நான் கடைசியாய் அவர் கச்சேரியை ...80-களில் --கேட்டதும் ஒரு திருப்புகழ் விழாவில் தான். வடபழனியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 - சமயம் அருணகிரிநாதர் விழா நடக்கும். பிரபல இசைக் கலைஞர்கள் வந்து பங்கேற்பர். அந்த விழாவில் ஒரு நாள் மதுரை சோமு பெயரை ...அவரைக் கேட்காமலேயே --போட்டு விடுவார்கள்! அவரும் தவறாமல் வந்து பாடுவார். அத்தகைய கச்சேரி ஒன்றுக்குத் தான் நான் அந்த வருஷம் சென்றிருந்தேன். நான் போனபோது சோமு அவர்கள்  திருப்புகழ்களில் வெவ்வேறு அங்க தாளங்களில்  ‘ராகம் தானம் பல்லவி’-கள் எப்படி மறைந்திருக்கின்றன என்று விளக்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு , ஒரு திருப்புகழைப் பவானி ராகத்தில் , அமைத்து, முதலில் ராகத்தை விஸ்தாரமாய் ஆலாபனை செய்தபிறகு திருப்புகழைப் பாடினார் . அன்றைய ஸ்பெஷல் அதுதான்!  அப்படி ஒரு அற்புதமான பவானியை நான் அதற்குப்பிறகு கேட்கவில்லை! முதலில் ‘கர்நாடக’ முறையில் ஆலாபனை: பிறகு, ‘கைகளை நாகசுரம் வாசிப்பது போல் சைகை செய்து, நாகசுரப் பாணியில் ரவைச் சங்கதிகள்; பிறகு , கையை தூக்கி ( வடக்கு என்ற பொருளில்) காட்டி, ஹிந்துஸ்தானி இசை முறையில் ! அடடா! அடடா! என்று நான் வியந்துகொண்டிருந்தபோது, குடும்ப நண்பர் , வடபழனி திருப்புகழ் சபைத் தலைவர் அமரர் சம்பந்தம் ஒரு பாட்டு முடிந்ததும் என்னை சோமுவுக்கு ஒரு மாலை போடச் சொன்னார். நானும் மாலை போட்டு விட்டு, சோமு அவர்களை ‘நீலமணி’ ராகத்தைக் ‘கொஞ்சம்’ ஆலாபனை செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். எனக்கு ஒரு நப்பாசை: அவர் ஆலாபனை செய்துவிட்டுச்  ‘சடாரென்று’ ஒரு திருப்புகழை நீலமணியில் பாட மாட்டாரா என்று! அப்படி நடக்கவில்லை! நீலமணியில் ஓரிரு நிமிஷங்கள் நீந்திய சோமு , பிறகு ‘என்ன கவி பாடினாலும்’ என்ற ஆதிசேஷ ஐயரின் பாடலைப் பாடினார். 

மறக்கமுடியாத அனுபவம். அதுவே நான் கடைசியாகச் சோமு அவர்களைக் கேட்டது. 

இப்போது, 1989 -இல், தன் 70-ஆம் வயதில் மதுரை சோமு மறைந்தவுடன் விகடனில் வந்த ஒரு கட்டுரையைப் பாருங்கள் .

சங்கீத சிங்கம்
மதுரை சோமு பற்றி அவருடன் நெருக்கமாகப் பழகியவரும், இசை யிலும் எழுத்திலும் அறிஞருமான மீ.ப.சோமு சொன்னது...

"1941-ம் வருஷம், திருச்சி வானொலியில் நான் அறிவிப்பாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம் அது. ஒரு நாள், சங்கீத மேதை சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையின் நிகழ்ச்சியை அறிவிப்பு செய்யவேண்டிய பணி இருந்தது. சித்தூரார், தான் பாடவிருக்கும் கீர்த்தனையின் பெயரைச் சொல்லி விட்டு, தன் பின்னால் இருந்த ஒரு சிறுவனைப் பார்ப்பார். அந்தச் சிறுவன் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்ததும், அடுத்த கீர்த்தனையின் பெயரைச் சொல்வார். இப்படி அந்தச் சிறுவன் அங்கீகரித்தவைதான் அன்று பட்டியலாகியது. சித்தூராரின் நம்பிக்கைக்குரிய அந்தச் சிறுவன் - சிஷ்யன்தான் மதுரை சோமு என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்.

தனது குரு உட்கார இடம் பண்ணித் தருவதிலிருந்து, அவருக்கு வியர்க்கும்போது மேல் துண்டால் துடைத்துவிடுவதுவரை சோமுவின் குருபக்திக்கு எல்லையே கிடையாது.

ஒரு நாள், வானொலியில் கச்சேரி செய்ய குருவுடன் வந்த சோமுவையே கேட்டேன்... "நீங்கள் ஒரு தனிக் கச்சேரி செய்யவேண்டியது தானே?' என்று. அதற்கு சோமு, 'தலை இருக்க வால் ஆடக்கூடாது, சார்!' என்று மிகவும் அடக்கத்துடன் கூறினார். இது நடந்து சில காலம் கழித்து, ஒரு நாள் என்னைப் பார்க்க, சோமு வீட்டுக்கு வந்தார். 'நான் இப்போது தனிக் கச்சேரி செய்கிறேன். என் கச்சேரியைக் கேட்க நீங்கள் வரவேண்டும்' என்று அழைத்தார். அவர் கச்சேரியைக் கேட்டு மெய்ம்மறந்தேன். வெறும் தம்புரா மீட்டி, புன்சிரிப்பை மட்டுமே வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்குள் எப்பேர்ப்பட்ட அற்புதமான இசை வல்லமை குடிகொண்டிருந்தது என்பதை உணர்ந்தேன். இதை மனத்தில் கொண்டு, அவரை 'இசை பயில்வான்' என்று நான் குறிப்பிட்டதை அவர் மிகவும் ரசித்தார். பலவீனம் என்பதே இல்லாத சத்தான குரல்; எவ்வளவு உச்சத்துக்குப் போனாலும் அந்தக் குரல் சன்னமடையாது. கீச்சிடாது. அதேசமயம் கீழே இறங்கும்போது, சுருதி பிசகாமல் ஸ்வர ஸ்தானத்தை தொட்டு நின்று பேசும்.

1963-ல் இருந்து சென்னை தமிழிசைச் சங்கத்தின் நிபுணர் குழுவில் என்னோடு உடன் அங்கம் வகித்துப் பணியாற்றினார் மதுரை சோமு. 'இசைப் பேரறிஞர்' பட்டத்துக்குக் கலைஞர்களைத் தேர்ந் தெடுப்பது முதல் விழா நிகழ்ச்சிகளை அமைப்பதுவரை எல்லா செயல்களிலும் என்னோடும், தமிழிசை சங்க நிர்வாகிகளோடும் கருத்து ஒருமித்து மிகவும் பண்பாட்டுடன் நடந்துகொள்வார்.

மதுரை சோமு இசைப் புலமை, குரல் வளம் இரண்டும் இணைந்த ஒரு சிங்கம். அவர் கர்னாடக ரசிகர்களுக்கும் பாடினார்; ஜனரஞ்சக ரசிகர்களுக்கும் பாடினார். அவர் மறைந்துவிட்டாலும், கேட்பவர்களுக்குப் பொருள் புரியும்படி பாடிய அவருடைய கம்பீரமான குரல் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்!"

[ நன்றி : விகடன் ]


      


கடைசியாக, 2004 -இல் தினமணி கதிரில் வந்த ஒரு கட்டுரை .








[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:



புதன், 5 பிப்ரவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 31

எங்கள் ஊர் சங்கீதப் போட்டி 
‘கல்கி’ 



சங்கீத வித்வான்களுக்கே பொதுவாக நகைச்சுவை உணர்ச்சி அதிகம் என்பது என் அனுபவம். அப்படியிருக்கும்போது, இசைத்தொடர்பாக எழுதப்பட்ட நகைச்சுவைக் கதைகளை யாராவது தொகுத்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. [ எஸ். சங்கர நாராயணன் “ ஜுகல் பந்தி” என்ற தலைப்பில் கர்நாடக சங்கீதம் தொடர்புள்ள பல கதைகளைத் தொகுத்து ஒரு நல்ல நூலாகப் பதிப்பித்துள்ளார் என்று படித்திருக்கிறேன். மிக நல்ல முயற்சியே; ஆனால், அந்த நூல் விமர்சனம் ஒன்றிலிருந்து அவற்றுள் எதிலும் நான் தேடும் நகைச்சுவை மிளிர்வதாகத் தோன்றவில்லை. ]

அப்போது எனக்குக் ‘கல்கி’யின் ஞாபகம் வந்தது;  இசை விமர்சகர், ரசிகர், பாடலாசிரியான ‘கல்கி’ சங்கீதத் தொடர்புள்ள சிறுகதைகள் சிலவற்றை எழுதினதில் அதிசயம் ஒன்றுமில்லை ; இரு உதாரணங்கள், ‘வீணை பவானி’, ‘திருவழுந்தூர் சிவக்கொழுந்து’. ஆனால், ’கல்கி’ நகைச்சுவைக்கும் பேர்போனவர் ஆயிற்றே? நகைச்சுவை மிளிரும் அவருடைய சங்கீதச் சிறுகதை ‘எங்கள் ஊர் சங்கீதப் போட்டி’ என்ற ஒரே கதைதான் என்று தோன்றுகிறது. 

இந்தக்  கதையை ஆசிரியர் ரா.கி. “லாங்கூலன்” என்ற புனைபெயரில் 1941-இல் ‘கல்கி’யில் எழுதினார். 


 [ உங்களுக்குத் தெரிந்த நல்ல  ’இசை + நகைச்சுவை’க் கதைகள் இருந்தால் சொல்லுங்கள்! ]  இதோ அந்தக் கதை!


1

     "கேட்டீரா சங்கதியை" என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார். 

     அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது 'நெடி' அரை நாழிகைக்கு முன்னமே தெரிவித்து விட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் போது, "கேட்டீரா சங்கதியை" என்றார் மறுபடியும்.

     "போட்டால் தானே கேட்கலாம்!" என்றேன் எரிச்சலுடன்.

     "என்னத்தைப் போட்டால் கேட்கலாம்?" என்று சுந்தரமய்யர் முகத்தைச் சுளுக்கினார்.

     "சங்கதியைப் போட்டால் கேட்கலாம். நம் ஊர் சங்கீத சபையில் கச்சேரி நடந்துதான் ஒரு யுகம் ஆகிறதே! பாட்டு என்கிற நாமதேயத்தையே காணோம்; சங்கதிக்கு எங்கே போகிறது?" என்றேன்.

     "அதைத்தானே சொல்ல வந்தேன்!" என்றார் சுந்தரமய்யர்.

     "சொல்லிவிட்டுப் போங்களேன்!" என்றேன்.

     "நம் சங்கீத சபைக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது ஸார்! அனந்தராமன், ஐ.சி.எஸ். நம் ஊருக்கு மாற்றலாகி வரப் போகிறாராம்!" என்றார்.

     நான் உட்கார்ந்தபடியே ஒரு குதி குதித்து, "எந்த அனந்தராமன்! ஆபோஹி அனந்தராமனா?" என்று கேட்டேன்.

     "ஆமாம்; ஆபோஹி அனந்தராமனேதான்?"

     "சபாஷ்! அப்படியானால் என் ஆறுமாதத்துச் சந்தா பாக்கியையும் எடுத்துக் கொள்ளும்!" என்றேன்.

     சுந்தரமய்யர் போய்விட்டார். அவர் போன பிறகு ஒரு புட்டி மண்ணெண்ணெய் கொண்டுவரச் சொல்லித் தெளித்த பிறகு தான் ஜவ்வாது வாசனை போயிற்று. எனக்கும் வேலையில் மனத்தை செலுத்த முடிந்தது!

     கபாலி சுந்தரமய்யருக்கு சங்கீத வித்வான்களுடைய பழக்கத்தினால் தான் ஜவ்வாது பழக்கமும் ஏற்பட்டது. சென்ற முப்பது வருஷ காலமாக அவர் எங்களூர் சங்கீத சபையின் காரியதரிசி. பொறாமை கொண்ட சிலர் அவ்வப்போது அவரை அந்தப் பதவியிலிருந்து விரட்டி விட முயற்சி செய்ததுண்டு. ஆனால், மூன்று மாதத்துக்கெல்லாம் அவர்களே சுந்தரமய்யரிடம் சென்று காரியதரிசிப் பதவியை ஒப்புக் கொள்ளும்படி கெஞ்சுவார்கள்.

     சுந்தரமய்யரை சங்கீத உலகின் ஜாம்பவான் என்றே சொல்ல வேண்டும். "கோனேரி ராஜபுரம் வைத்தாவுக்கு இந்தக் கையால் பதினேழரை ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். திருக்கோடி காவல் கிருஷ்ணய்யருக்கு இருபத்தாறேகால் ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். இப்போது என்னடா என்றால் தம்பூராச் சுருதி கூட்டத் தெரியாதவன்களெல்லாம் வித்வான்கள் என்று வந்து 'நூறு வேணும், நூற்றைம்பது வேணும்' என்று கேட்கிறான்கள்" என்று சுந்தரமய்யர் அடிக்கடி புகார் சொல்வார். ஆனால் அந்த 'தம்பூரா' சுருதி கூட்டத் தெரியாத வித்வான்கள் வந்து விட்டால், அவர் படுத்துகிற பாடும், செய்கிற உபசாரமும், பக்கத்திலிருப்பவர்களை மிரட்டும் மிரட்டலும் அசாத்தியமாயிருக்கும். "காலத்துக்கேற்ற கோலம் போட வேண்டியிருக்கு ஸார்; நாய் வேஷம் போட்டால் குலைக்காமல் முடியுமா!" என்று சமாதானம் சொல்வார்.

     எப்போதும் சுந்தரமய்யருடைய சங்கீத ஊக்கம் ஒரே மாதிரியாயிருந்தாலும் எங்களூர் சங்கீத சபை சில சமயம் ரொம்ப ஜோராய் நடக்கும். சில சமயம் படுத்துத் தூங்கிப் போய்விடும். சபை ஜோராய் நடப்பதும், தூங்கி வழிவதும் அவ்வப்போது எங்கள் ஊருக்கு வரும் பெரிய உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தது என்று சொல்லலாம். ஜில்லா கலெக்டரோ, ஸெஷன்ஸ் ஜட்ஜோ, சங்கீத அபிமானமுள்ளவர்களாய் வந்து விட்டால், அப்போது சபை நடக்கிறவிதமே ஒரு தனிதான். மற்ற உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள் எல்லாரும் சபையில் சேர்வார்கள்; சந்தாவும் கொடுப்பார்கள். பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகள் நடக்கும் சபைக்கு ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்று யோசனை கூடக் கிளம்பும்.

     ஆகவே, ஆபோஹி அனந்தராமன் எங்களூருக்கு வரப் போகிறார் என்று தெரிந்ததில் சுந்தரமய்யருக்குப் பிரமாதமான குதூகலம் உண்டானதில் ஆச்சரியமல்லவா?

2

     ஸ்ரீ அனந்தராமன் ஐ.சி.எஸ்.ஸுக்கு 'ஆபோஹி' ராகம், என்றால் பிராணன். ஒரு கச்சேரியில் வித்வான் 'ஆபோஹி' ராகம் பாடவில்லையென்றால், அன்றைக்கு கச்சேரிக்கு முக்கால் பங்கு மார்க்குத்தான் கொடுப்பார். ஆபோஹியில் அப்படி என்ன விசேஷமென்று எனக்குத் தெரியாது. 'ஆ' எழுத்தில் ஆரம்பிப்பது விசேஷமென்றால் 'ஆரபி', 'ஆஹிரி', 'ஆனந்த பைரவி' முதலிய ராகங்கள் இருக்கின்றன. என்னைப் பொருத்தவரையில், பாடுகிறவர்கள் பாடினால் எந்த ராகம் பாடினாலும் நன்றாய்த் தானிருக்கிறது. ஆனால் அனந்தராமன் அபிப்பிராயம் அப்படியில்லை. அவர் ஒரு சமயம் ஒரு கச்சேரியில் பாராட்டுச் சொல்லும்படி நேர்ந்தது. அப்போது அவர் கூறியதாவது: "என்னமோ இந்தக் காலத்தில் சிலர் சுயராஜ்யம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்றெல்லாம் கூத்தாடுகிறார்கள். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு ஆபோஹி ராகத்தில் தான் நம்பிக்கை. 'இந்திய தேசம் வேண்டுமா, ஆபோஹி ராகம் வேண்டுமா?' என்று என்னை யாராவது கேட்டால், சிறிதும் தயக்கமின்றி 'எனக்கு ஆபோஹியைக் கொடுங்கள்; இந்தியாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்பேன். என்னவோ ஸோஷலிஸம் என்கிறார்கள். கம்யூனிஸம் என்கிறார்கள், பொதுவுடைமை அபேதவாதம் என்றெல்லாம் பிரமாதமாய்ப் பேசுகிறார்கள். ஆபோஹியை நானும் அனுபவிக்கிறேன்; நீங்களும் அனுபவிக்கிறீர்கள்; நடுத்தெரு நாராயணனும் அனுபவிக்கிறான்! இதைவிட மேலான ஸோஷலிஸம் வேறெங்கே இருக்கிறது என்று கேட்கிறேன். அரசியல்வாதிகள் பதில் சொல்லட்டும்!" (சபையில் பிரமாதமான கரகோஷம்)


     இந்தப் பிரசங்கம் செய்தபிறகுதான். அவருக்கு 'ஆபோஹி அனந்தராமன்' என்று பெயர் வந்தது. இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியும். ஆகவே சுந்தரமய்யரைப் போலவே நானும் எங்களூர் சங்கீத சபைக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நம்பினேன். எங்களுடைய நம்பிக்கை பொய்யாகப் போகவில்லை. அனந்தராமன் ஐ.சி.எஸ். வந்த உடனேயே எங்களூர் சங்கீத சபை எழுந்து உட்கார்ந்து "என்ன சேதி?" என்று கேட்கத் தொடங்கியது.

     சங்கீத அபிமானமுள்ள உத்யோகஸ்தர்கள் இதற்கு முன்னாலுந்தான் எங்களூருக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அனந்தராமன் விஷயத்தில் விசேஷம் என்னவென்றால், அவருடைய மனைவியும், சங்கீதத்தில் அபிமானம் உள்ளவராயிருந்தது தான்.

     ஒருவேளை ஏதாவது தலை போகிற காரியம் இருந்தால் அனந்தராமனாவது கச்சேரிக்கு வராமலிருப்பார்; மிஸ்ஸஸ் அனந்தராமன் ஒரு கச்சேரிக்காவது வரத் தவறுவதில்லை. கலெக்டர் சம்சாரம் சங்கீதத்தில் எப்போது சிரத்தை கொண்டாரோ, அப்போது ஜட்ஜின் மனைவி, முனிசீப்பின் பத்தினி எல்லோருக்குமே அந்தத் தொத்து வியாதி பிடித்துக் கொண்டது. வக்கீல்களின் மனைவிமார் இவர்களுக்குப் பின் வாங்கிவிடுவார்களா? கொஞ்ச நாளில் சபையில் ஸ்திரீகளுக்கென்று ஒதுக்கியிருந்த இடத்தை இரண்டு பங்கு விஸ்தரிக்க வேண்டியதாகி விட்டது. அப்படியும் இடம் போதவில்லை.

     சில ஸ்திரிகள் தைரியமாகப் புருஷர்களுக்கு மத்தியில் வந்து உட்கார ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்டதும், சில வயதான ஸநாதனிகள், "கலிமுற்றி விட்டது; ஆகையால் நாமும் இனிமேல் சங்கீதக் கச்சேரிக்குப் போக வேண்டியதுதான்" என்று தீர்மானித்து வரத் தொடங்கினர்.

     சுந்தரமய்யர் வீடு வீடாய்ப் போய்ச் சந்தாவுக்காக கெஞ்சிக் கூத்தாடிய காலம் மாறி, சுந்தரமய்யரிடம் நாங்கள் போய் 'ஸீட் ரிசர்வ்' செய்வதற்காகக் கெஞ்ச வேண்டிய காலம் வந்தது.

     மிஸ்ஸஸ் அனந்தராமன் கலை வளர்ச்சியில் ரொம்பவும் ஆர்வமுடையவர். வெறுமே கச்சேரிக்கு வந்து கேட்டதுடன் அவர் இருந்துவிடவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக்குச் சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். பரதநாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்துவந்தார். இதன் பயனாக வீட்டுக்கு வீடு தம்புரா சுருதி, பிடிலை 'கர்புர்' என்று இழுக்கும் சப்தம், 'தா-தை' சப்தம் எல்லாம் கேட்க ஆரம்பித்தன.

     இவ்வளவு தூரம் கலை வளர்ச்சிக்குக் காரணமாயிருந்த மிஸ்ஸஸ் அனந்தராமன் அவ்வளவுக்கும் சிகரம் வைத்தது போல் ஒரு காரியம் செய்யத் தீர்மானித்தார். சபை அங்கத்தினர்களின் வீட்டுக் குழந்தைகளுக்காக சங்கீத - நாட்டியப் போட்டிகள் ஏற்படுத்திப் பரிசுகள் வழங்க வேண்டுமென்று சொன்னார். ஊரில் உற்சாகம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. கலெக்டர் அனந்தராமன் சிறந்த பாட்டுப் பாடும் குழந்தைக்கு ஒரு வெள்ளிக் கோப்பை தருவதாகச் சொன்னார். இன்னொருவர் பரத நாட்டியத்துக்குப் பரிசு கொடுப்பதாக முன் வந்தார். ஒருவர் வீணைக்கு, ஒருவர் பிடிலுக்கு, இம்மாதிரி ஏகப்பட்ட பரிசுகள் ஏற்பட்டு விட்டன. சங்கீதப் போட்டிப் பரீட்சையில் கலெக்டர் அனந்தராமன் கட்டாயம் ஒரு ஜட்ஜாயிருப்பார் என்று எல்லாரும் எதிர் பார்த்தார்கள். ஆகவே, ஒவ்வொரு வீட்டிலும் 'மனஸு நில்ப... மதுரகண்ட' என்று ஆபோஹி அலறல் கேட்கத் தொடங்கியது.

3

     நவராத்திரிக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருந்தபோது ஒருவரும் எதிர்பாராத ஒரு துர்ச்சம்பவம் நேர்ந்தது.

     எங்கள் நகருக்கு முப்பது மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உற்சவம் சம்பந்தமாக ஹிந்து - முஸ்லீம் சச்சரவு ஆரம்பித்தது. அது வெகு சீக்கிரமாகப் பரவிற்று. அடிதடி, வெட்டுக் குத்து, வீட்டில் நெருப்பு வைத்தல், வைக்கோல் போரில் நெருப்பு வைத்தல் - இப்படியெல்லாம் செய்திகள் வரத் தொடங்கின. இது என்னமாய் முடியுமோ என்று எல்லோரும் கதி கலங்கினோம். நகரில் பரபரப்பு அதிகமாகக் கடைகள் எல்லாம் மூடப்பட்டன.

     'நவராத்திரி வரைக்கும் இப்படியே இருந்து விடுமோ, என்னமோ? இவ்வளவு ஏற்பாடுகள் செய்து சங்கீதப் போட்டி நடக்காமல் போய் விடுமோ?' என்று மிஸ்ஸஸ் அனந்தராமன் கவலைப்பட்டார். "நீ சும்மா இரு!" என்றார் அனந்தராமன். கலகம் நடக்கும் இடத்துக்கும் நேரில் கிளம்பிப் போனார்.

     அனந்தராமன் போய் இருபத்து நாலு மணி நேரத்துக்குள், கிராமங்களில் பூரண அமைதி நிலவியது. அவர் விரட்டிய விரட்டலில் போலீஸார் அதி தீவிரமாக வேலை நடத்தவே, 'கப்சிப்' என்று கலகம் அடங்கி விட்டது. தடைப்பட்ட மாரியம்மன் உற்சவத்தைக் கிட்ட இருந்து அனந்தராமன் நடத்தி விட்டு வந்தார்.

     கலெக்டர் அனந்தராமன் கலகம் அடக்கிய மகிமையைக் குறித்துத் தேசமெல்லாம் புகழ்ந்தது. அனந்தராமனும் வெகு குதூகலமாயிருந்தார். நாலு நாளைக்கெல்லாம் அவருக்கு மாற்றல் உத்தரவு வந்தது! வடக்கே, மழை மாரி, ஆறு குளம், சங்கீத சபை ஒன்றுமில்லாத ஒரு வறட்டு ஜில்லாவுக்கு அவர் அனுப்பப்பட்டார். இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே போய் 'சார்ஜ்' ஒப்புக் கொள்ளவேண்டுமென்று உத்தரவு!

     இந்த மாற்றல் அநேகருக்கு ரொம்பவும் ஆச்சரியமாயிருந்தது. ஆனால் எனக்கு அவ்வளவு ஆச்சரியம் தரவில்லை. அனந்தராமன் செய்தது பிரிட்டிஷ் அரசியல் தர்மத்துக்கு முற்றும் விரோதமான காரியம் அல்லவா? ஓரிடத்தில் ஹிந்து முஸ்லீம் சச்சரவு வந்தால், அதை உடனே அடக்கிப் போடுவது யாருக்குப் ப்ரீதி? நாலு நாள் பத்து நாள் கலகம் நடந்து, ஆடி ஓடி ஓய்ந்தால் சிரங்கைக் கீறி ஆற்றியது போலாகும். சட்டென்று ஒரே நாளில் அடக்கி விட்டால் கலகம் உள்ளடங்கிப் போகிறது. துவேஷம் உள்ளே கிடந்து குமுறுகிறது. இதனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்யமே அல்லவா ஆடிப் போய்விடும்?

     மிஸ்ஸஸ் அனந்தராமன் அழாக் குறையாக எங்கள் ஊரை விட்டுப் போனார். ஆனால் போகும் போது கடைசி வார்த்தையாகச் சுந்தரமய்யரிடம், "நான் எங்கே போனாலும் உங்கள் சபையை மறக்க மாட்டேன்; நவராத்திரியில் சங்கீதப் போட்டியை மட்டும் சிறப்பாக நடத்தி விடுங்கள்" என்று சொன்னார். ஆபோஹி அனந்தராமனும், தாம் எப்போதும் எங்கள் சபையின் போஷகராயிருந்து வருவதாக வாக்களித்தார்.

4

     நவராத்திரியில் குழந்தைகளின் சங்கீத - நாட்டியப் போட்டி நடத்துவதற்குப் பலமான ஏற்பாடுகள் சுந்தரமய்யர் செய்து வந்தார். ஜட்ஜுகளாக யாரை ஏற்படுத்துவது என்பதில் தான் சிரமம் ஏற்பட்டது. சங்கீத வித்வான்கள் எல்லோருக்கும் தனித்தனியே எழுதிப் பார்த்ததில், அவர்கள் எல்லோரும் சாக்குப் போக்குச் சொல்லி மறுத்து விட்டார்கள்.


     சுந்தரமய்யர் எங்களோடெல்லாம் கலந்தாலோசித்தார். கடைசியில் சென்னைப் பட்டணத்திலிருந்து இரண்டு பிரமுகர்களை ஜட்ஜுகளாக வரவழைக்கத் தீர்மானித்தோம். ஒருவர் பெயர் கைலாச சாஸ்திரி, இன்னொருவர் வைகுண்டாச்சாரியார். ஒருவர் பிரசித்தமான மாஜி சப்-ஜட்ஜு. இன்னொருவர் ஒரு காலத்தில் பிரசித்தமாயிருந்த வக்கீல். இரண்டு பேரும் 'சங்கீத நிபுணர்கள்' என்று பேர் பெற்றவர்கள். சங்கீதத்தைப் பற்றி ஏதாவது விவாதம் கிளம்பினால், உடனே இவர்கள் தினசரிப் பத்திரிகையில் தங்களுடைய அபிப்பிராயத்தை எழுதாமலிருக்க மாட்டார்கள். முடிவாக, இந்த இரண்டு பேரில் ஒருவருடைய கடிதத்துக்குக் கீழேதான், 'இந்த விவாதம் சம்பந்தமான கடிதங்கள் இனிமேல் பிரசுரிக்கப்பட மாட்டா' என்று போட்டுப் பத்திரிகாசிரியர்கள் விவாதத்தை முடிவு கட்டுவது வழக்கம். 

     அந்த இரண்டு பேரையும் ஜட்ஜுகளாக வரவழைத்து விடுவதென்று தீர்மானமாயிற்று. அவர்களும் நல்ல வேளையாகச் சம்மதித்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வந்தன.

     கடைசியில் எல்லோராலும் வெகு ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட தினம் வந்தது. அன்று காலையில் கைலாச சாஸ்திரிகளும், வைகுண்டாச்சாரியாரும் ரயிலில் வந்திறங்கினார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டன. மத்தியானம் மூன்று மணியிலிருந்து மாலை ஏழு மணி வரையில் போட்டி நடத்திப் பிறகு பரிசளிப்பது என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

     சரியாக இரண்டரை மணிக்கு என் மருமகள் ஸொஜ்ஜியையும் அழைத்துக் கொண்டு நான் சபா மண்டபத்துக்குப் போய் விட்டேன். ('ஸொஜ்ஜி'யின் முழுப் பெயர் சுலோசனா) அவளுக்கு அவள் தாயார், பரத நாட்டியம் கற்பித்திருந்தாள். எல்லாம் மிஸ்ஸஸ் அனந்தராமனின் வேலைதான் என்று சொல்ல வேண்டியதில்லை.


     மூன்று மணிக்கு சபா மண்டபத்தில் ஜே ஜே என்று கூட்டம் நிறைந்து விட்டது. ஆனால், ஜட்ஜுகள் வந்தபாடில்லை. மூன்றரை மணிக்கு கைலாச சாஸ்திரிகள் மட்டும் வந்து சேர்ந்தார். வைகுண்டாச்சாரியின் மூக்குக் கண்ணாடி கெட்டுப் போய் விட்டதாகவும் தெரிந்தது. போட்டிக்கு ரொம்பப் பேர் வந்திருந்தபடியால், அவர் வரும் வரையில் காத்திராமல் கைலாச சாஸ்திரியின் தலைமையில் சங்கீதப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

     சங்கீதப் போட்டி ஏறக்குறைய முடியும் சமயத்தில் வைகுண்டாச்சாரியார் வந்தார். அவர் பரத நாட்டியப் போட்டிக்கு ஜட்ஜாக இருந்து நடத்தினார். எல்லாம் முடிந்ததும், இரண்டு ஜட்ஜுகளும் சபைக் காரியதரிசி சுந்தரமய்யரை அழைத்துக் கொண்டு தனி ஆலோசனைக்குப் போனார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்து பரிசு பெற்ற குழந்தைகளின் பெயர்களைச் சொன்னார்கள். பரிசு பெற்ற குழந்தைகளின் வீட்டுக்காரர்களுக்கெல்லாம் பரம சந்தோஷம்; மற்றவர்களுக்கெல்லாம் ரொம்பவும் உற்சாகக் குறைவு. "இந்த ஜட்ஜுகளைப் போல் பொறுக்கி எடுத்த முட்டாள்கள் உலகத்தில் இருக்க முடியாது" என்பது அவர்களுடைய அபிப்பிராயம். இந்தப் பெரும்பான்மை அபிப்ராயத்தை நான் ஒத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் பரத நாட்டியத்துக்கு என் மருமகளுக்குப் பரிசு கிடைத்து விட்டபடியால், எனக்கு ரொம்ப உற்சாகமாயிருந்தது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் சிந்தனையைத் தூண்டிற்று. அதாவது பரிசு பெற்ற குழந்தைகளெல்லாம் பெரும்பாலும் சங்கீத சபைக்குச் சரியாகச் சந்தா செலுத்துவோர் வீட்டுக் குழந்தைகளாகவே இருந்தன.

     வைபவத்தின் முடிவில் கபாலி சுந்தரமய்யர் என்னைச் சென்னைப் பிரமுகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வைகுண்டாச்சாரியார், "உங்கள் மருமகளுக்குத்தான் பரத நாட்டியத்தில் முதல் பரிசு என்று மிஸ்ஸஸ் அனந்தராமன் அப்போதே சொல்லி விட்டாளாமே? அந்த அம்மாளுக்குத் தெரியாதது உண்டோ ? மகா புத்திசாலி!" என்றார். எனக்கு ஆச்சர்யம் அதிகமாயிற்று; மிஸ்ஸஸ் அனந்தராமன் அப்படி ஒன்றும் சொன்னதே கிடையாது! 

     அன்று ராத்திரி எனக்கு அவசரக் காரியமாகச் சென்னைக்குப் போக வேண்டி இருந்தது. ரயிலில் வேறு இடம் கிடைக்காதபடியால் கைலாச சாஸ்திரிகளும் வைகுண்டாச்சாரியாரும் இருந்த வண்டியிலே நானும் ஏற வேண்டியதாயிற்று.

     வண்டி ஏறினதும் வைகுண்டாச்சாரியைப் பார்த்து "நமஸ்காரம்" என்றேன். அவர் கண்ணைச் சுளித்துக் கொண்டு, "யாரையா நீர்?" என்றார். அரைமணி நேரத்துக்குள்ளேயே என்னை மறந்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு கைலாச சாஸ்திரிகளைப் பார்த்தேன். அவர் ஒரு காதைக் கையால் மடித்துக் கொண்டு "என்ன சொல்கிறீர்?" என்றார்.


     விஷயம் இன்னதென்று புரிவதற்கு எனக்கு ஐந்து நிமிஷம் ஆயிற்று. விஷயம் புரிந்த பின் அதை ஜீரணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஐந்து நிமிஷம் ஆயிற்று.

     அதாவது அன்று சங்கீத - நாட்டியப் போட்டிகளில் ஜட்ஜுகளாயிருந்தவர்களில் ஒருவருக்குக் கண் தெரியாது. இன்னொரு ஆசாமிக்குக் காது கேட்காது. குருடரும் செவிடருமாகச் சேர்ந்து சங்கீத நாட்டியப் போட்டியில் தீர்ப்பளித்து விட்டார்கள்.

     கபாலி சுந்தரமய்யருக்கு இதெல்லாம் தெரிந்து தானிருக்க வேண்டும். எமகாதகர்! எப்படியோ காரியத்தை ஒப்பேற்றிவிட்டார்.

     இதையெல்லாம் நினைக்க நினைக்க, என்னை அறியாமல் எனக்குச் சிரிப்புப் பீறிக் கொண்டு வந்தது.

     விஷயம் எனக்குத் தெரிந்து விட்டதென்று அவர்களுக்கும் தெரிந்து போயிற்று; உடனே அவர்களும் சிரிக்கத் தொடங்கினார்கள். 

     சென்னை போய்ச் சேரும் வரையில் நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டே போனோம்.

     ரயிலும் எங்களுடன் சேர்ந்து சிரித்தது! 

==============


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 


'கல்கி’ கட்டுரைகள்

சனி, 1 பிப்ரவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 30

மதுரை சோமு - 3 

( தொடர்ச்சி)

பிப்ரவரி 9. மதுரை சோமு அவர்களின் பிறந்த தினம்.

சோமுவின் நாதஸ்வரக் கச்சேரி 

அண்ணாமலையான் சந்நிதியில் சோமு ஒரு நாதஸ்வரக் கச்சேரி செய்தார். என்ன விழிக்கிறீர்கள்? அது நிச்சயமாக  சாரீரமே இல்லை. அது என்ன கல்யாணி , ஐயா? சோமுவின் தனி விசேஷம் என்னவென்றால், அவர் சாரீரம் வல்லின மெல்லினப் பிரயோகங்களில் வல்லமை கொண்டது. அதற்கு மேலாக அவர் இசை தியாகராஜர் சொன்னது போல், நாபியிலிருந்து கிளம்பி இருதயக்கமலத்தில் தோய்ந்து, கண்டம் வழியாக நாதப் பிரவாகமாய் வரும். கடனிழவே என்று பாடும் துர்க்குணம் அவருக்கு அறவே கிடையாது. ஆங்கிலத்தில் ஆடியன்ஸ் பார்டிஸிபேஷன் ( Audience Participation )  என்று சொல்வார்கள். அவையோரை அணைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்திலிருக்கும் பக்க வாத்தியக்காரர்களை ஊக்குவித்து கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் சூழ்நிலையை உண்டாக்கி விடுவார். இதோ, சாரீரம் தென்றல் காற்றுப் போல வீசுகிறது; மறு நிமிடம் அசைந்தாடுகிறது.அதன் பின்னர் ஆடிக் காற்று - பின் புயல் - அதன் பின் சூறாவளி. ஸ்வரங்கள் இரண்டு மூன்று கோர்வைகளாய்க் கைகோத்துக் கொண்டு அதிதுரித காலத்தில் ஸர்க்கஸ் வேலைகள் செய்கின்றன. நாம் தான் நாற்காலி நுனியில் உட்கார வேண்டியிருக்கிறது. அவர் அநாயாசமாகச் செய்கிறார். 

அன்று பாடிய கல்யாணி இந்த ரகத்தைச் சேர்ந்தது தான். ஒரு முழு நீள நாதஸ்வரக் கச்சேரி கேட்பது போன்ற பிரமை தட்டியது. அவையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. வயலின் கந்தசாமியை ஊக்குவித்து, ஜாம் ஜாம் பண்ணி விட்டார். இன்றைய கச்சேரி வித்வான்களின் அமுக்கும் மனப் பான்மையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சோமு ஒரு தனிப் பிறவி “               
             --- சுப்புடு, விகடன், 1976 [ “இசை நாட்டிய விமர்சனம் “ நூல் ]


மதுரை சோமு அவர்களுக்கு 1984 -இல் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் ஸொசைடியின் ‘சங்கீத கலா சிகாமணி ‘ விருது கிடைத்தது. அந்தச் சமயம் ‘கல்கி’யில் வெளியான ஒரு கட்டுரை இதோ!

சிகாமணி சோமு
[ நன்றி: கல்கி ]

இன்னொரு கச்சேரி விமர்சனக் கட்டுரையைப் பாருங்கள் !

அவசியங்களும் அனாவசியங்களும் !

‘கல்கி’யில் வந்த இன்னொரு கட்டுரை!

ஓடும் ரயிலில் ஒரு நேயர் விருப்பம் 


( தொடரும் )

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: