கவிதை எனக்கோர் ஆனந்தம் !
பசுபதி
கோபுர தரிசனம் 2014 தீபாவளி மலரில் வந்த கவிதை .
பசுபதி
கோபுர தரிசனம் 2014 தீபாவளி மலரில் வந்த கவிதை .
உண்மை ஒளிர
வேண்டுமென்ற
உறுதி யுடன்தான் உட்கார்வேன்;
வண்ணப் புனைவும்
உணர்ச்சியையும்
மண்டை முழுதும் தேடிடுவேன்;
எண்ணப் பரியோ
சண்டிசெய்தும்
என்னைத் தள்ளிப் பரிகசித்தும்
கண்ணா மூச்சி
ஆடினுமே
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (1)
வேலன் மீதோர்
படைதொடங்கி
மேலும் சங்கம் ஈந்தனபோல்
மாலைப் போற்றி
ராமகதை
மாலை தொடுத்த கம்பனைப்போல்
பாலில் மூன்றும்
சிலம்புமெனப்
பாடி மகிழ்ந்த பாரதிபோல்
கால வெள்ளம்
கரைக்காத
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (2)
சந்தம் என்னும்
பொக்கிடத்தைத்
தந்து தமிழ்க்கு வளம்சேர்த்த
எந்தை அருண
கிரிநாதர்
எடுத்து ரைத்த அவிரோதம்
சிந்தை தன்னை
அவ்வழியில்
தினமும் சுண்டி இழுப்பதனால்
கந்தன் புகழைப்
பாடுமந்தக்
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (3)
சின்னஞ் சிறிய
வயதுமுதல்
சிறந்த பாடல் பலவற்றை
இன்னி சையாய்க்
கேட்பதுதான்
இன்பம் என்று நினைத்தாலும்
கன்னல் தமிழைக்
கந்தலெனக்
கன்னா பின்னா எனக்குதறிக்
கன்னம் குழியப்
பேரன்சொல்
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (4)
பசப்புச் சொல்பச்
சோந்தியெனப்
பதவி பெற்ற பின்தேசம்
நசித்துப் போகும்
வழிதனிலே
நாளும் நடத்தும் அரசினர்மேல்,
நிசத்தை மறைத்து
முழுங்காமல்
நேர்மை யுடனே பயமின்றிக்
கசையைச்
சொடுக்கிச் சிலர்தீட்டும்
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (5)
மனதின் ஆழ்ந்த
தடாகத்தில்
மறைந்து கிடக்கும் நிழலொன்று
தனிமை என்னும்
கல்லடியால்
தருணம் பார்த்துத் தலைதூக்கும்;
புனைவும்
உணர்வும் இசைபாடும்;
புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின்
விளிம்பில் உதிக்குமொரு
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (6)
=====
தொடர்புள்ள பதிவுகள்: