வியாழன், 27 ஏப்ரல், 2017

709. கு.ப.ராஜகோபாலன் - 1

"சிறுகதை ஆசான் “ கு.ப.ரா.
 பி.தயாளன்   


ஏப்ரல் 27. கு.ப.ராஜகோபாலனின் நினைவு தினம்.
===

சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்பட்டும் கு.ப.ராஜகோபாலன்.

 கும்பகோணத்தில், 1902-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பட்டாபிராமையர்- ஜானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

 கு.ப.ரா.வுக்கு 6 வயதானபோது அவர்களது குடும்பம் திருச்சிக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயிலத் தொடங்கினார். 1918-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷனில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். பிறகு, திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அப்போது, தந்தையார் இறந்துவிட்டார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் மீண்டும் கும்பகோணத்துக்கே குடிபெயர்ந்தது.

 கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்து, வடமொழியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலான பெரும் கவிஞர்கள்களின் கவிதைகளையும், வடமொழியில் வால்மீகி, காளிதாசர், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். இக்கல்வியே பிற்காலத்தில் அவர் தமது ஒவ்வொரு படைப்புகளிலும் தனி முத்திரையைப் பதிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.

 ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர், கு.ப.ரா., படித்த கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது, கவிஞர் தமது சில கவிதைகளைப் பாடிக் காட்டினார். தாகூரின் வங்கக் கவிதைகள் கு.ப.ரா.வின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. வங்க மொழியின் சிறப்பு அவருடைய உள்ளத்தை ஆட்கொண்டது. அதன் விளைவாக, அவர் வங்க மொழியைப் பயின்றார். கிருஷ்ணமாசாரியார் என்ற வடமொழி அறிஞருடன் இணைந்து "காளிதாசர்' என்னும் பெயரில் ஒரு மாத இதழை நடத்தினார். "ஷேக்ஸ்பியர் சங்கம்' என்ற இலக்கிய அமைப்பிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.

 கு.ப.ரா.வும், ந.பிச்சமூர்த்தியும் இணைந்து, கும்பகோணத்தில், "பாரதி சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் பல ஆண்டுகள் பாரதி விழாவை நடத்தி, பாரதியின் பெருமையைப் பறைசாற்றினார்கள்.


 கு.ப.ரா. தம் 24-வது வயதில் அம்மணி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலூர் தாலுகா அலுவலகத்தில் கணக்கராகப் பணியில் சேர்ந்தார். இலக்கியங்களைப் படிப்பதிலும், படைப்பதிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட அவருக்குத் தாலுகா அலுவலகப் பணி சிறிதும் பிடிக்கவில்லை. ஆனாலும், தாலுகா அலுவலகக் கணக்கராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

 கு.ப.ரா. தம் 32-வது வயதில் "கண்புரை' நோயால் பாதிக்கப்பட்டார். தமது அரசுப் பணியைவிட்டு விலகி, கண் சிகிச்சைக்காகக் கும்பகோணம் சென்றார்.

 கண் பார்வை மங்கிய நிலையிலேயே அவர், "மணிக்கொடி' போன்ற இதழ்களுக்குக் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். பின்னர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கண் பார்வை பெற்றார்.

 பின்னர் சென்னைக்கு வந்து, முழுநேர எழுத்தாளராகவே, தம் வாழ்க்கையைத் தொடங்கினார். எழுத்து ஒன்றையே தொழிலாகக்கொண்டு வாழ முற்பட்டபோது, கு.ப.ரா.வின் வாழ்க்கையில் துன்பங்கள் பல தொடர்ந்து வந்தன.

 நிலையான வேலை எதுவும் கிடைக்காதபோதும் அவர் மனம் தளராமல், மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் முதலிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பலவற்றை எழுதிவந்தார்.

 வ.ரா.வை ஆசிரியராகக் கொண்டு 1939-ஆம் ஆண்டு வெளிவந்த "பாரத தேவி' என்ற வார இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். அதில், அவரது இயற்பெயரிலும், "பாரத்வாஜன்', "கரிச்சான்', "சதயம்' என்னும் புனை பெயர்களிலும் பற்பல கதைகள் படைத்தார். கட்டுரைகளும் எழுதினார். பின்னர், கா.சீ.வேங்கடரமணி நடத்திய "பாரதமணி' என்னும் இதழில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.

 இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, சென்னையிலிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சொந்த ஊரான கும்பகோணத்துக்கே திரும்பினார். அங்கு, "மறுமலர்ச்சி நிலையம்' என்னும் பெயரில் புத்தக நிலையம் ஒன்றைத் தொடங்கினார். வானொலியில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சிறுகதைகள் பல வானொலியில் ஒலிபரப்பாயின. அப்போது அவருடைய திறமையை வானொலி நிலையத்தார் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்பினர். ஆனால் கு.ப.ரா., வானொலியில் பணியாற்ற மறுத்துவிட்டார். இறுதிவரை எழுத்தை நம்பி வாழ்வது என்று முடிவு செய்துவிட்டதாக உறுதியாகக் கூறிவிட்டார்.

 சுதந்திர சங்கு, மணிக்கொடி, பாரத தேவி ஆகிய இதழ்களில் ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார். கு.ப.ரா. எழுதிய 13 ஓரங்க நாடகங்களின் தொகுப்பான "அகலியை' அவர் மறைந்து 20-ஆண்டுகளுக்குப் பிறகு 1964-ஆம் வெளிவந்தது. "இலக்கியத் திறனாய்வு' என்னும் நோக்கில் கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து எழுதிய நூல் "கண்ணன் என் கவி'. "பாரதியார் மகாகவி அல்லர்' என்னும் கல்கியின் கூற்றை மறுத்து, "பாரதியே மகாகவி' என்பதை நிலைநாட்டும் நன்முயற்சியாக இந்நூலை கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து படைத்தளித்தனர்.


 "எதிர்கால உலகம்' என்பது கு.ப.ரா.வின் சிந்தனை நூல். உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் பெரியோர்களில் முக்கியமான ஆறு பேரைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ளார். ஆங்கில மொழியிலிருந்து ஸ்டீவன்ஸனின் "டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்னும் நாவலை தமிழில், "இரட்டை மனிதன்' என்ற தலைப்பில் கொண்டுவந்தார். ரஷ்ய மொழியிலிருந்து டால்ஸ்டாய் சிறுகதைகளையும், வங்க மொழியில் பெரும் புகழ்பெற்ற பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் ஆகியோரின் நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.



 சரத் சந்திர சட்டர்ஜி, சியாராம் சரண குப்தர், வி.ச.காண்டேகர், லியோ டால்ஸ்டாய், ரமேச சந்திர தத்தர் ஆகிய ஐந்து தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற ஆறு நாவல்களை "ஆறு நவயுக நாவல்கள்' என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.

 "ஸ்ரீஅரவிந்த யோகி', "டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்' என்னும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரண்டு படைத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும், பல கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அவை இன்னும் நூல் வடிவம் பெறாதது தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும்.

 துறையூரிலிருந்து வெளிவந்த "கிராம ஊழியன்' என்ற இதழின் சிறப்பாசிரியர் பொறுப்பை 1943-ஆம் ஆண்டு ஏற்றார். கிராம ஊழியனில் ஆசிரியர் பொறுப்பை 1944-ஆம் ஆண்டு ஏற்றபோது, "காங்க்ரின்' என்னும் கொடிய நோய் கு.ப.ரா.வின் கால்களைத் தாக்கியது. உணர்ச்சியற்றுப் போனதால், முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் உடனடியாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், உடல் நலிவுற்று, 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி காலமானார்.

 அவர்தம் இறுதிக் காலத்தில் "வேரோட்டம்' என்ற நாவல் ஒன்றை எழுதத் தொடங்கி, ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதினார். ஆனால், அந்நாவல் முடிவதற்குள், அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. அந்த முற்றுப் பெறாத நாவல், கு.ப.ரா.வின் பெயரையும் பெருமையையும் தமிழ் நாவல் உலகில் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

கு.ப.ராஜகோபாலன்: பசுபதிவுகள்

கு. ப. ராஜகோபாலன்: விக்கிப்பீடியாக் கட்டுரை

1 கருத்து:

Angarai Vadyar சொன்னது…

An excellent writer of courage and conviction, now in permanent peace.