புதன், 5 ஏப்ரல், 2017

685. அன்பு - ஆற்றல் : கவிதை

அன்பு -ஆற்றல்
பசுபதி 






கணையிற் சிறந்தது காகுத்தன் கணையென்பர்;
இணையற்ற வாழ்விற்(கு) இலக்கணம் ராமனென்பர் .

வன்மீகர் ராமனை வர்ணித்த இருசொற்கள்:
அன்புமய 'குணவான்' ; ஆற்றலுள்ள 'வீரியவான்'.

பஞ்சமமும்  ஸட்ஜமும் பண்ணிசைக்(கு)  ஆதாரம் 
அஞ்சாமை அன்புடைமை நல்வாழ்வின் ஆதாரம். 

கருணையற்ற ஆண்மை கரையில்லாச் சினப்புனல்;
விறலற்ற காருண்யம் வீணாகும் மனப்புனல்.

அரனுடன் இணைந்திடும்  அன்னையின் உருவங்கள் 
கருணையும் வீரமும் கலந்திடும்  கோலங்கள்.

சக்திகிரி சிவகிரியைத் தாங்கிவந்த காவடியால் 
பக்தன் இடும்பனன்று பகர்ந்தமெய்த் தத்துவமென்?

அன்னைகுணம் அன்புடைமை; ஆண்மையோ தந்தைகுணம்.
மண்ணுலகில் சமமாகப்  பண்பிரண்டும் வளர்த்திடுவோம்!


[ கோபுர தரிசனம் 2004 தீபாவளி மலரில் வந்த கவிதை ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

கருத்துகள் இல்லை: