ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

1228. ஓவிய உலா -1

எஸ்.ராஜம் -1 



பிப்ரவரி, 10. எஸ்.ராஜம் சாரின் பிறந்த நாள். இந்த வருடம் அவருடைய நூற்றாண்டு வருடம்.

நான் 2009-இல் எழுதியது :

'ராஜம்' ' ரா' 'ஜெம்' ( Raw Gem) இல்லை! நன்றாக பட்டை போடப்பட்டு, பல முகங்களில் பிரகாசிக்கும் மணி !

சினிமாவில் முன்னோடி, சித்திர வானில்
தனியொளி வீசும் சதுரர் -- தொனியில்
அரிய,பல பண்பாடும் ஆசார்யர் ராஜம் 
மரபினைக் காக்கும் மணி. 


அவர் நினைவில்  வெவ்வேறு இதழ்களில் வெளிவந்த அவருடைய சில ஓவியங்களை இங்கிடுகிறேன். 

டொராண்டோவில் நடந்த அவருடைய கச்சேரிக்கு (1982) வந்தபோது  அவர் எங்களுடன் தங்கிய நினைவுகள்  சென்னைக்குப் போகும்போதெல்லாம் அவரைப் போய்ப் பார்த்தபோது பேசியவை எல்லாம் நினைவுக்கு வருகிறது.

ஒரு துணுக்கு மட்டும் இப்போது :  என் தாயாரும், என் சகோதரர் தியாகராஜனும் அவருடைய திருமணம் நடந்தபோது   ( சேலத்தில் )   சென்று, அன்று அவரே  செய்த கச்சேரியைக் கேட்டிருக்கின்றனர்.  இதை  நான் ஒருநாள் அவரிடம் சொல்லிவிட்டு, “ஏன் சார், அன்றைக்கே நீங்கள் ஏதேனும் விவாதி ராகம் பாடினீர்களா?” என்று கேட்டேன் ஒரு முறை!

ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தார் ! அவ்வளவு தான்.  ( பெண் பார்க்கும் படலத்தின் போதும், அவர் பாடினார் என்று என் தாயார் சொல்லியிருக்கிறார். )

சில இதழோவியங்கள் இதோ:

கலைமகள் 1942 இதழ் அட்டைப்படம்:



 ”கல்கி” இதழின் தொடக்க காலத்தில் ,  கல்கி எழுதிய ”பார்த்திபன் கனவின்”  விளம்பரங்களை வரைந்தவர் ராஜம். ( கதையில் வரும் சித்திர மண்டப ஓவியத்தையும்  வரைந்திருக்கிறார். கீழே பார்க்கவும்) பிறகு பல வருடங்கள் அவர் கல்கியில் வரையவில்லை.

   

[ சித்திர மண்டபத்தில்'  பார்த்திப மகாராஜா வரைந்த சித்திரம்.   ]
     

பிறகு ,  50-களில் கல்கியில் பல அட்டைப்படங்கள் வரைந்துள்ளார் ராஜம்.  பிறகு தவறாமல் கல்கி தீபாவளி மலர்களில் அவருடைய வண்ண மடல் ஒன்று இருக்கும்.

டொராண்டோவிற்கு 1982 -இல் வந்திருந்தபோது நான் வைத்திருந்த  அவ்வட்டைகளில் தன் கையெழுத்தையும் பதித்தார்! அவற்றில் ஒன்று ( 57) :


மஞ்சரி 2004 அட்டைப்படம்.  வள்ளுவரும், வாசுகியும்.


விகடன் 1938 தீபாவளி மலரில்  ‘கோவில் காட்சி’ யை பழைய  பாணியில் வரைந்த ஓவியம் இதோ! 


ஹவாய் சைவ ஆதீனம் வெளியிடும் ‘  Hinduism Today" இல் ( 2014 )வந்த பல படங்களில் ஓர் உதாரணம் !



 1987-இல் நான் ‘ஸ்ருதி’ ( Sruti )  என்ற இசை-நடனம் பற்றிய ஆங்கிலப் பத்திரிகையின் 4-ஆம் ஆண்டுச் சிறப்பிதழில்  ” கர்நாடக இசையில் ராமாயணம்” என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதினேன்.  அதற்காக  இதழின் பின்னட்டையில் கோட்டோவியமாய் ராஜம் சார்  வரைந்த ராமாயணப் பட்டாபிஷேகக் காட்சி இதோ.  ( மூல  ஓவியம் ஒன்றிலிருந்து விரைவில் இப்படி அவர் வரைந்து விடுவார்! )

என் கட்டுரையிலும் சிறு ராமாயணக் காட்சிகளை வரைந்திருந்தார். அவர் ஓவியங்கள் என் கட்டுரையை அலங்கரிக்கும் என்பது எனக்கு இதழைப்  பார்த்தபின்னரே தெரிந்தது !  இது பெரும் பேறு!


தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

4 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ராஜம் அவர்களின் ஓவியங்களைப் பற்றிய அறிமுகமாக அமைந்த பதிவு. கல்கி எழுதிய ”பார்த்திபன் கனவின்” விளம்பரங்களை வரைந்தவர் ராஜம் என்பதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் சேமிப்பு. காணத் தந்தமைக்கு நன்றி.

rajee krishnan சொன்னது…

பல்கலைவாணர் என்னும் பெயருக்கு அவர் ஓர் உதாரணம்! தம்பியும் கூடவே :) என்ன ஒரு செறிவான வாழ்க்கை! கடைசி வரையிலும் கலையில் முனைந்து, கலைக்காகவே வாழ்ந்தவர். அப்படியொரு குடும்பத்திலே வந்தவரும் கூட.

நிறை வாழ்வு வாழ்ந்த மற்றொரு ஓவியரும் நினைவுக்கு வருகிறார்--கோபுலுவைத்தான் சொல்லுகிறேன்...

KAVIYOGI VEDHAM சொன்னது…

மிக அருமை. ஓவியம் கட்டுரை இரண்டும் சேர்த்தே சொல்கிறேன் கவியோகி வேதம்