சனி, 18 மே, 2019

1287. சாவி - 22

'அல்டாப்' ஆறுமுகம் 
 சாவி

[ ஓவியம்: நடனம் ]


அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு விசிலடித்தால், அது அந்த வட்டாரம் முழுவதுமே எதிரொலிக்கும். அந்தச் சீட்டியின் சாயலிலிருந்தே தங்கள் வாத்தியார் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை ஆறுமுகத்தின் சகாக்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். 

டீக்கடை, சலூன், சினிமாக் கொட்டகை, ரிக்ஷா ஸ்டாண்டு - இம்மாதிரி இடங்களில்தான் அவனுடைய சீடர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். 'சலாம் வாத்தியாரே!' என்று ஆறுமுகத்தை அன்புடன் வரவேற்பார்கள். அவனிடத்தில் அவர்களுக்கு ஒரு தனி மரியாதையும் பக்தியும் உண்டு. 
இரவு 'நைட்ஷோ' ஆரம்பித்து ஊர் அடங்குகிற நேரத்தில்தான் ஆறுமுகத்தின் அட்டகாசம் ஆரம்பமாகும். 

''டாய்......கேட்டுக்கினீங்களாடா, நம்ப வெங்கடேசன் கதையை; பொறுக்கிப் பையன் புத்தியைக் காமிச்சுட்டாண்டா...நேத்து ராத்திரி மணி ஒண்ணு இருக்கும்; நாடார் கட்டைத் தொட்டி இருக்குதுல்வே, அந்தச் சந்துலே வாரன்...கும்முனு இருக்குது இருட்டு! நாயர் கடை இன்னம் மூடியாவல்லே. அங்கே போய் ஒரு பீடியைப் பத்த வச்சுக்கிட்டு ஜைலண்டா நடக்கறேன். தபால் பொட்டி பக்கத்துலே முருங்கமரம் இல்லே, அந்தக் குடிசைக்குள்ளாற யாரோ பொம்பளை அழுவற சத்தம் கேக்குது. நடுப்புற ஆம்பளைக் குரலும் கேக்குது. 

[ ஓவியம்: சு.ரவி, மூலம்: கோபுலு ]


''கம்மலைக் கழட்டிக் குடுக்கப் போறயா, இல்லே உதை வாங்கப் போறயான்னு' ஒரே அடியா கலாட்டா பண்றான் அவன். அதுவோ 'லபோ திபோ'ன்னு அடிச்சுகிணு அழுவுது; பாவம்! 

''நீ என்னை வீட்டைவிட்டு அடிச்சித் துரத்தி ஆறுமாசம் ஆவுது. இங்கே ஏன் வரே நீ? எங்கண்ணங்காரன் சேஞ்சு போட்ட கம்மல் இது. நீ என்னை வெட்டிப் போட்டாலும் சரி, குடுக்கமாட்டேன்'னுது . 

''இவன் அத்தோட வுட்டுட்டுப் போக வேண்டியதுதானே? கம்மலைக் கழட்டிக் குடுத்தாத்தான் ஆச்சுன்னு அடாவடித்தனம் பண்றான். இன்னாடா அக்குரும்பு இது? எனக்குப் பொறுக்கல்லே; நான் ரவுடிதான். ஆனா நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். உள்ளே அப்படியே பாஞ்சி அவனை இழுத்து வந்து வெளியே போட்டேன். இவன் என்னைக் கண்டுட்டுத் திக்குமுக்காடறான். 'இன்னாடா சோம்பேறி! கம்மலா வோணும் ஒனக்கு? இந்தா வாங்கிக்கோன்னு' உட்டேன் பாரு ஒண்ணு, அப்படியே கீழே குந்திக்கினான். 

''டேய், மரியாதையா இந்த இடத்தை உட்டுப் போயிடு. இல்லாட்டி நான் பொல்லாதவனாயிருப்பேன். யாரும் இல்லாத நேரத்திலே ஒரு பொம்பளை கிட்டே வந்து கலாட்டாவா பண்றே? சோமாறி! பாவம், பச்சைப் பொண்ணு! அதை வெச்சுக் காப்பாத்தத் துப்பு இல்லே உனக்கு. போடா கைராத்து! இன்னாடா மொறைக்கிறே? நீ பெரிய சீமானா? சார்பட்டா பரம்பரை வஸ்தாதா? போடாஆ! கையிலே இன்னா இருக்குதுனு பார்த்துகினியா? அப்படியே சீவிடுவேன், சீவி! நம்பகிட்டயா கமால் காட்றே நீ? நட்டைக் கயிட்டிடுவேன் ராஸ்கோல்னேன்!'' 

''இதுக்குள்ளே அக்கம்பக்கமெல்லாம் 'ஜேஜே'ன்னு கூடிப்போச்சு. 

''டேய், அல்டாப்! உனக்கு வெக்கறேன் இருடா 'வேலை'ன்னு சொல்லிக்கினே சைக்கிள்ளே குந்திக்கினு பறந்துட்டான் அந்தத் துடை நடுங்கி! 
 
''போடா கய்தே! எங்கிட்டே ஒரு கும்மாகுத்து தாங்குவியா நீ...உனக்கு ஓர் அடையாளம் பண்ணி வெக்கறேன் இரு'ன்னு சவால் விட்டுட்டு வந்துட்டேன். பாவம், அந்தப் பொண்ணு மொகத்தைப் பார்த்தேன்; அப்படியே மனசு எளகிடுச்சுப்பா! நான் ரவுடிதாம்பா. ஆனா, நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். நாயம் அநியாயம் பார்க்கணும்பா எதுக்கும் இவனாட்டமாவா? செங்கல் சூளை தன்சேகரன்கிட்டே போய், அநியாயமா வலுச்சண்டைக்கு நிக்கறானே; அது இன்னா யோக்யதை...? அடடே! அந்தக் கதை தெரியாதா உனக்கு? சொல்றேன் கேளு. தாய் தவப்பன் இல்லாத பொண்ணுப்பா அது. தெளஜன் லைட்லே ரொட்டிக் கடை வெச்சுருக்குது. இந்தத் தன்சேகரன் பையன் மல்லு ஜிப்பா போட்டுக்கினு, கழுத்திலே ஒரு தங்க சையினை மாட்டிக்கினு அந்தப் பொண்ணை 'டாவு' அடிக்கிறான். அது இவனைச் சட்டை பண்லே. பள்ளிக்கூடம் படிக்கிற அந்தப் பையனும் அதுவும் சிநேகிதம். செங்கல் சூளையானுக்கு அது ஆவலே. அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனை மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டான். இந்தப் பொறிக்கி வெங்கடேசன்தான் அவனுக்குக் கையாளு. தன்சேகரன்கிட்டே துட்டை வாங்கித் துன்னுக்கினு தினம் போய் வரான் இவன். ஒண்ணுப் பையனை அடிக்கணும்; இல்லாட்டி துட்டைத் திருப்பிக் கொடுத்துடணும். துட்டை வாங்கிக்கினு ஆளை அடிக்காம ஏமாத்தறது எந்த நாயத்தைச் சேர்ந்தது? அவனைச் சும்மா உடலாமா? இது ஒரு பொழைப்பா? இன்னைக்கு ஆவட்டும்...அவனுக்கு வெக்கறேன் வேலை!'' 

சினிமாக் கொட்டகை வாசலில் ஒரு பெரிய கூட்டம். 

அந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பலம் வாய்ந்த கை பிச்சுவாவை உயர்த்திக்கொண்டு நிற்கிறது. அந்தக் கையை வேறொரு கை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. கத்தி மேலாக எந்தத் திசையில் நகருகிறதோ, அந்தப் பக்கமே அந்தக் கூட்டமும் சாய்கிறது. அந்தக் கத்திக்குரியவன் வேறு யாருமல்ல; 'அல்டாப்' ஆறுமுகந்தான். வெங்கடேசன் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டான். ஆறுமுகம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க்கொண்டிருக்கிறான்! 

''ரெளடியாயிருந்தா என்ன? அதுக்காவ அக்கிரமம் செய்யலாமா? அதான் கீறிட்டேன். ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லே. டாய்! எவனாச்சும் தப்புத்தண்டா சேஞ்சிங்க, திரும்பி வந்ததும் தீர்த்துப்புடுவேன். ஆமாம், சொல்லிட்டேன். இந்த 'அல்டாப்' நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன்!'' 


[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக