குருவும் சிஷ்யனும்
’கலைமகளில்’ 1938 -இல் வந்த இந்தப் படம் தான் , இதழ்களில் வந்த எஸ்.ராஜம் அவர்களின் முதல் ஓவியம் என்கிறார் இசை விமர்சகர், ஆய்வாளர் நண்பர் ‘லலிதாராம்’. ( 1942-இல் அவர் ‘கலைமகள்’ நவம்பர் இதழுக்கு வரைந்த அட்டைப் படம் ஓவிய உலா-1 -இல் உள்ளது .)
இந்திய ஓவிய மரபின் இலக்கணத்தைக் காத்து, தமிழ் இதழ்களில் அதை வளர்த்தவர் ராஜம். எனவே தமிழிதழில் வந்த அவருடைய முதல் படமும் தமிழின் ஒரு முக்கியமான இலக்கண நூலின் வரிக்கு வரையப்பட்டது என்பது அருமையான பொருத்தம் தானே!
மேலும், சங்கப் பாடல்கள் முதல் பாரதி பாடல்கள் வரை பல பாடல்களுக்குப் படங்கள் பார்த்திருக்கிறேன்! ஆனால் ஓர் இலக்கண நூலின் வரிக்குப் படம்? ஊஹும், இதுவே முதல் தடவை! ( கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனின் தேர்வு என்று நினைக்கிறேன்! )
அந்த நூல் பவணந்தி முனிவரின் நன்னூல்.
படத்திற்குப் பொருந்திய வரி வரும் முழு நூற்பாவும், உரையும் இதோ!
நூல் கற்றலின் வரலாறு:
கோடல் மரபே கூறும் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்,
குணத்தொடு பழகி அவர் குறிப்பிற் சார்ந்து
’இரு’ என இருந்து ’சொல்’ எனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தனாகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவிவாயாக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்துப்
’போ’ எனப் போதல் என்மனார் புலவர்
பவணந்தி முனிவர் : நன்னூல்: 40
காண்டிகையுரை
கோடல் மரபு கூறுங்காலை – பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது ,
பொழுதொடு சென்று – தகும் காலத்திலே போய் ,
வழிபடல் முனியான் – வழிபாடு செய்தலின் வெறுப்பு இல்லாதவனாகி ,
குணத்தோடு பழகி – ஆசிரியன் குணத்தோடு பொருந்தப் பயின்று ,
அவன் குறிப்பிற் சார்ந்து – அவன் குறிப்பின் வழியிலே சேர்ந்து ,
இரு என இருந்து – இரு என்று சொன்னபின் இருந்து ,
சொல் எனச் சொல்லி – படி என்று சொன்னபின் படித்து ,
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி = பசித்து உண்பவனுக்கு உணவின் இடத்துள்ள ஆசை போலப் பாடங் கேட்டலில் ஆசையுடையவனாகி ,
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி – சித்திரப் பாவையைப் போல அவ் அசைவுஅறு குணத்தினோடு அடங்கி,
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக-காதானது வாயாகவும் மனமானது கொள்ளும் இடமாகவும் ,
கேட்டவை கேட்டு – முன் கேட்கப்பட்டவற்றை மீண்டுங் கேட்டு
அவை விடாது உளத்து அமைத்து – அப்பொருள்களை மறந்துவிடாது உள்ளத்தின்கண் நிறைத்துக்கொண்டு,
போ எனப் போதல் – போ என்ற பின் போகுதல் ஆகும்
என்மனார் புலவர் – என்று சொல்லுவர் புலவர்.
1 கருத்து:
இங்கு, ’போ எனப் போத’லாவது – சீடன் குறைவறக் கற்று நிரம்பியவன் என்று கண்டபின் ஆசான் அவன் தன்னிடம் கற்க வேண்டியது இனி யாதுமில்லை எனக்கருதிச் சீடனைத் தான் கற்றதைப் பிறருக்குப் போதிப்பதற்கோ அல்லது, மேலும் கற்க வேறொரு குருவிடம் செல்வதற்கோ அனுப்பிவைப்பதெனக் கொள்ளலாம்.
அனந்த் 5-5-2019
கருத்துரையிடுக