ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
செப்டம்பர் 30. ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பிறந்த தினம்.
முதலில், மேலே காணும் 43-இல் வந்த 'கல்கி'யின் அட்டைப்பட விளக்கம்.. ( 'கல்கி'யால் தான் இப்படியெல்லாம் எழுத முடியும்! )
அடுத்து, 'தினமணி'யில் 2018-இல் வந்த கட்டுரை.
[ தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.]
=====================
'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று பாரதியார் கல்வி நிறுவனங்கள் ஏதுமற்ற அந்த காலத்திலேயே பாடினார்.இந்திய மாநிலங்களிலேயே பல்வேறு சிறப்புகளை கொண்டது நம் தமிழகம் ஆகும். அத்தகைய தமிழகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தால் இன்றைக்கு தமிழகத்தில் பெரும்பாலானோர் கல்விச் செல்வத்தை பெற்றிருக்கின்றனர்.
இன்றைய அரசியல் தலைவர்கள் பெரும்பாலோனோர் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே! அவர்கள் மட்டுமா? ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என பலரும் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே! அத்தகைய சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர் ஒரு சிறப்பு வாய்ந்த மாமனிதர் ஆவார்.
தமிழகம் எத்தனையோ மா மனிதர்களை உருவாக்கியுள்ளது. அதேபோல் மாமனிதர்களால் பெருமையும் பெற்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதர்களுள் ஒருவரே டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆவார்.
சென்னைக்கு முதன் முதலில் வரும் எவரும் பாரிமுனையில் உள்ள "ராஜா அண்ணாமலை மன்றம்' என்ற இயல் இசை நாடக கலையை வளர்க்கும் பிரம்மாண்டமான அரங்கத்தை பார்த்திருக்கலாம். அவ் வாயிலிலேயே திரு அண்ணாமலை செட்டியார் அவர்களின் கம்பீரமான திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அச்சாலையில் செல்லும் எவரும் அத் திருவுருவச் சிலையை மரியாதையுடன் திரும்பிப் பார்த்து செல்வார்கள்.
அது அவர் ஆற்றிய அரும் பணிகளுக்காக மக்கள் செலுத்தும் மரியாதையாகும். இவரது அரும்பணிகளை பட்டியலிட இச்சிறிய கட்டுரைப் பகுதி போதாது. ஆனாலும் முன்னோடியாக திகழ்ந்த இவரை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
30.9.1881 அன்று திரு அண்ணாமலை செட்டியார் அவர்கள் கானாடு காத்தானில் பிறந்தார். இவரது தந்தை முத்தையா செட்டியார் தாம் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு பல கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து வந்தார்.
சிறுவனாய் இருந்த அண்ணாமலைக்கு ஆங்கிலம் கற்க விருப்பம்ஏற்பட்டது. எனவே கானாடுகாத்தானில் இருந்த திரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும் திரு பொன்னுசாமி பிள்ளை ஆகிய இருவரிடமும் ஆங்கிலம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பான புலமை பெற்றார்.
திரு அண்ணாமலை அவர்கள் தமது இளம் வயதிலேயே சுதேசமித்திரன் பத்திரிக்கையில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். 1901 ஆம் ஆண்டு இவரது தந்தையார் மறைந்தார். எனவே அவரது தொழில்களை கவனிக்கும் பொறுப்பு ஏற்பட்டது . எந்த முயற்சியை எடுத்தாலும் அதை திறம்பட செய்து முடிக்கும் இயல்பு கொண்டவர் திரு அண்ணாமலை ஆவார். இந்தியாவில் காசி முதல் கன்னியாகுமரி வரையிலும் பர்மா, இலங்கை, மலேசியா ,கிழக்கிந்திய தீவுகள் முதலிய அயல்நாடுகளிலும் தமது தொழிலை விரிவு படுத்தினார்.
அயராத உழைப்பினால் இளம் வயதிலேயே இவர் மாபெரும் செல்வந்தர் ஆனார். 1910 ஆம் ஆண்டு இவர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களை பார்வையிட்டார். உடனே அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இதுபோல நம் நாட்டிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை தோற்றுவித் தால்என்ன? என்பதுதான் அது!
இந்தியா திரும்பியவுடன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும் முயற்சிகளில் ஈடுபடலானார். இவரது சகோதரர் சிதம்பரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்றை துவக்கி இருந்தார். அந்த இடமே பல்கலைக்கழகம் அமைக்க சரியான இடம் என முடிவு செய்தார். சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் "திருவேட்களம்'என்ற கிராமம் ஒன்று இருந்தது. அந்த இடத்தில் தமது தாயார் திருமதி மீனாட்சி அம்மையார் அவர்களின் பெயரில் கல்லூரி ஒன்றை உருவாக்கினார்.
இவர் தமிழ் மொழியைப் போலவே வடமொழியையும் நேசித்தார். எனவே 1927 ஆம் ஆண்டு வடமொழி கல்லூரி ஒன்றையும் நிறுவினார். அவர் நிறுவிய தமிழ் மொழி கல்லூரிக்கு தலைவராக "தமிழ் தாத்தா' திரு உ.வே.சா அவர்களும் வடமொழி கல்லூரிக்கு திரு தண்டபாணி தீட்சிதர் அவர்களும் தலைவராக நியமிக்கப்பட்டனர்.
பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த திரு அண்ணாமலை செட்டியார் அவர்கள் இசை மீது பேரார்வம் கொண்டிருந்தார். இசைக்கென தனி கல்லூரி ஒன்றையும் நிறுவினார். 1928ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். அந்த சமயத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இவரது கல்வித் தொண்டை அறிந்த சென்னை கவர்னர் மற்றும் வைஸ்ராய் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளித்தனர். மேலும் இவர் நிறுவிய அத்தனை கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. அதுவே பின்னாளில் "அண்ணாமலை பல்கலைக்கழகம்' என்று அழைக்கப்பட்டது. அதுவரை "சர். அண்ணாமலை செட்டியார்' என்று அழைக்கப்பட்ட இவரை "ராஜா சர் அண்ணாமலை செட்டியார்' என்று அனைத்து மக்களும் பெருமிதத்தோடு அழைத்தனர்.
மனிதநேயம் கொண்ட இக்கொடை வள்ளல் தமது 67வது வயதில் காலமானார்.
அறிந்து கொள்வோம் வாருங்கள்.
(1) இவரது சகோதரர் திரு ராமசாமி செட்டியார் அவர்களுடன் இணைந்து இவர் தோற்றுவித்ததே "இந்தியன் வங்கி'ஆகும்.
(2) 1916 ஆம் ஆண்டு இவர் சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
(3) 1921 ஆம் ஆண்டு தில்லியில் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இப்பொறுப்பில் மூன்று முறை அங்கம்
வகித்தார்.
(4) கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் இவரது பங்களிப்பு அபரிமிதமானது ஆகும் . ஆகவே 1923ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவருக்கு "சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.
(5) 1.1.1929 அன்று இவரால் "அண்ணாமலை பல்கலைகழகம்' தோற்று
விக்கப்பட்டது. அன்று முதல் மக்கள் இவரை "செட்டிநாட்டு அரசர்' என்றும் போற்றினர்.
(6) சென்னையின் ஒரு பகுதிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதுவே ராஜா அண்ணாமலைபுரம் ஆகும்.
(7) இவரது சேவைகளை நினைவு கூறும் வகையில் இந்திய அஞ்சல் துறை 30.9.1980 அன்று இவரது திருவுருவப்படம் தாங்கிய சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.
(8) தமிழிசைக்கு இவர் மாபெரும் தொண்டாற்றியுள்ளார் .1941 ஆம் ஆண்டு தமிழிசை வளர்ச்சிக்கு என பெரும் தொகை ஒன்றை நிதியாக வழங்கியுள்ளார்.
(9) இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் இவரது பேரன் ஆவார்.
(10) இவ்வறிஞர் பெருமகனார் மாபெரும் செல்வந்தராக இருந்த பொழுதும் குறள் நெறிப்படி வாழ்ந்த பண்பாளர் ஆவார். எங்கு சென்றாலும் திருக்குறள் நூலை தன்னுடனேயே எடுத்துச் செல்வார். மேலும் உரையாற்றும்பொழுது திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசுவார்.
[ நன்றி: தினமணி ]