சுவாமிஜியும் நேதாஜியும் !
ஜனவரி 23. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம். ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ஒரு கட்டுரை.
====
சுபாஷ் சந்திர போஸின் வாழ்வில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் அவரை ஆட்கொண்ட காலம் மிக முக்கியமானது. வாலிபத்தின் ஆரம்ப காலம். சுபாஷ் அந்த வயதினருக்கு உரிய உடல், உணர்வு சார்ந்த போராட்டங்களால் அல்லலுற்றார். இயல்பான உணர்ச்சிகளைக்கூட தவறானதோ, இயற்கைக்கு மாறானதோ என்றெல்லாம் கற்பனை செய்து அமைதி இழந்து தவித்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் தற்செயலாக சுவாமி விவேகானந்தரின் நூல்களை அவர் படித்தார். முதலில் சுவாமிஜியின் எழுத்துகளின் பூரண பரிமாணத்தைப் புரிந்து கொள்ள அவரால் முடியவில்லை. ஆனால் அவற்றின் அடித்தளமான தீவிர தெய்வப் பற்றும் மனித சேவையும் பிரிக்கமுடியாதவை நாட்டு மக்களுக்கான சேவை நாராயணனுக்குச் செய்யும் சேவை என்ற கூற்றுகளின் உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆன்மீகத்தையும் மனித நேயத்தையும் ஒன்றாக்கிய சுவாமிஜியின் மகத்தான செய்தி, கலங்கியிருந்த சுபாஷின் மனதிற்கு அரு மருந்தானது; வாழ்வில் புதிய பாதையைத் திறந்தது.
பின்னாளில் இதைப் பற்றி எழுதும்போது நேதாஜி உலக ஆசைகளை எல்லாம் தியாகம் செய்து எனது முக்திக்கும், மக்களின் சேவைக்கும் என்னை அர்ப்பணிக்க வேண்டுமென்ற ஒரு புதிய லட்சியத்தை என்னுள் ஏற்படுத்தினார் விவேகானந்தர் என்று கூறினார். சுவாமிஜியைத் தொடர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றியும் நேதாஜி அறிந்து கொண்டார். இந்த இருவரின் ஆன்மிகச் சிந்தனைகள் மலர்கின்ற பருவத்திலிருந்த அவரது மனதில் அற்புதத் தாக்கத்தை ஏற்படுத்தின. இயன்றவரையில் நான் இவர்களையே வாழ்க்கையின் முன்னோடிகளாகக் கொண்டு வாழப் போகிறேன். ஒரு போதும் உலகியலைத் தேட மாட்டேன் என்பது உறுதி என்ற அவரது எழுத்துகளே இதற்குச் சான்று.
சுவாமிஜியின் தாக்கத்தால் சுபாஷ் சமூக சேவையை ஆன்மிக வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதினார். அவர் தம் சுயசரிதையில் ஆன்மிக உயர்விற்குச் சமூகசேவை தேவை என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரியத் தொடங்கியது... இந்த உண்மை சுவாமி விவேகானந்தரிடமிருந்து எனக்குக் கிடைத்ததாக இருக்கலாம். ஏனெனில் சமூக சேவையை அவர் ஒரு லட்சியப் பாதையாகக் காட்டியவர். தேசசேவை சமுதாய சேவையின் ஒரு பகுதி: இறைவன் ஏழையின் உருவில் நம்மிடம் வருகிறார். எனவே ஏழையின் சேவையே இறை வழிபாடு என்றார் சுவாமிஜி. இதைப் படித்த பிறகு ஏழைகள், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு நான் தாராளமாக உதவலானேன்.
இவ்வாறு சுவாமிஜி நேதாஜியின் வாழ்வில் ஒரு புரட்சியை உண்டாக்கினார்.
சுபாஷ் இது பற்றி, விவேகானந்தரால் நான் முதன் முதலில் ஈர்க்கப்பட்டபோது எனக்கு 15 வயது இருக்கும். அதற்குப் பிறகு என் வாழ்வில் எல்லாமே மாறி ஒரு பெரும் புரட்சியே உண்டானது என்று குறிப்பிடுகிறார்.
விவேகானந்தரின் குறிக்கோள்
1912-13 இல் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமிஜியின் அறிவுரைகளை சுபாஷ் நடைமுறைப்படுத்த ஆர்வம் கொண்டார். ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் தம்மை ஒத்த கருத்துள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்தார். அம்முயற்சியால் புதிய விவேகானந்த சங்கம் உருவானது.
1914-இல் ஹேமந்த் குமார் சர்க்காருக்கு எழுதிய கடிதத்தில் விவேகானந்தரின் குறிக்கோளே என் குறிக்கோள் என்றார் சுபாஷ்.
இத்தகைய உன்னத லட்சியம் கொண்ட சுபாஷும் அவரது நண்பர்களும் தங்களுக்கு வழிகாட்ட ஒரு குருவைத் தேடினார்கள். ஆனால் ஒருவரும் கிட்டவில்லை.
(சுபாஷ் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரம்மசாரியாகச் சேர்வதற்கு முயன்றார் என்றும், ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்தர் நீ தேச சேவை செய்யப் பிறந்தவன் எனக் கூறித் தடுத்ததாகவும் சுவாமிகளின் நினைவுக் குறிப்புகளில் உள்ளது)
சுபாஷ் தம் பள்ளிக் காலப் பிற்பகுதியிலும், கல்லூரி நாட்களிலும் (1912-16) மக்கள் சேவையில் பல வழிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கொடிய காலரா நோயினால் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வதிலும் சுபாஷ் சிறிதும் தயங்கவில்லை. சுவாமி விவேகானந்தரின் தாக்கம் வேறொரு வகையிலும் அவரைத் தூண்டியது. ஆன்மிக மேம்பாட்டிற்குப் புரட்சியையும் ஏற்கலாம் என்று சுவாமிஜி ஒப்புதல் கொடுத்திருப்பதாகக் கருதினார்.
இதனால் ஆன்மிக, சமுதாயச் சேவைகளுக்குத் தடையிட்ட தம் குடும்பத்தினரை எதிர்த்தார். தந்தையின் கோபமோ, தாயின் கண்ணீரோ அவரைத் தம் லட்சியத்திலிருந்து திருப்ப முடியவில்லை. இந்த மனவுறுதியே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளாலும் செய்திகளாலும் எவ்வாறு அவர் கவரப்பட்டார் என்பதற்குச் சான்று.
அரசியல் முன்னேற்றம்
வளர்ந்த முழு மனிதனானபோது சுபாஷ் ஓர் இடதுசாரி அரசியல் தலைவரானார். அப்போது எதேச்சாதிகார எதிர்ப்பு, சமூக சமத்துவம் ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகளையே தம் கருத்தில் கொண்டிருந்தார். அந்த இருகொள்கைகளுக்கும் சுவாமி விவேகானந்தரின் தாக்கமே காரணம் என்பதை சுபாஷ் வெளிப்படையாகவே கூறி வந்தார்.
விவேகானந்தர் அரசியல் பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆனாலும் அவரைச் சந்தித்தவர்களும் அவரது எழுத்துகளால் கவரப்பட்டவர்களும், தேசப்பற்று மற்றும் அரசியல் மனப்பான்மை கொண்டவர்கள் என்பது அவரது கருத்து.
சுபாஷின் வாழ்வில் மிகத் தாமதமாகவே அரசியல் நுழைந்தது. இதற்கு ஒரு காரணங்கள். அரசியலை அவர் தந்தை, வீட்டில் நுழையவிடாதது ஒன்று. பள்ளி அதிகாரிகள் பள்ளியில் அரசியலைத் தடை செய்தது மற்றொன்று
சுவாமிஜி காட்டிய பாதையில் ஆன்மிக வாழ்விலும், சமூக சேவையிலும் ஈடுபட்ட இளம் சுபாஷ் ஆரம்பத்தில் அரசியல் பக்கம் திரும்பவில்லை.
வாலிபப் பருவத்தில் தேசம் விடுத்த அறைகூவல்களால் கவரப்பட்ட சுபாஷ் அரசியலில் நுழைய முடிவெடுத்தார். இதிலும் சுவாமிஜியின் தாக்கம், காந்திஜி, சி.ஆர். தாஸ் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய இயக்கம் ஆகியவை அவருள் தேசபக்திக் கனலைத் தூண்டின.
சுபாஷ் தம் அரசியல் வாழ்வில் எந்த இஸத்தையும் நம்பவில்லை. அவரின் ஒரே இஸம் தேசப்பற்றே. அவர் தம் தாய்நாட்டை ஆங்கிலேயே ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, சுதந்திர இந்தியாவைச் சமுதாயச் சமத்துவத்தின் அடிப்படையில் நிர்மாணிக்க விரும்பினார்.
சுவாமி விவேகானந்தரின் மனிதனை உருவாக்கும் லட்சியத்தைப் பற்றியே அடிக்கடி நினைவு கூர்ந்தார். சுவாமிஜியைப் பின்பற்றி மனிதனை உருவாக்க இரண்டு வழிகள் உண்டு என அவர் நினைத்தார்.
அதில் ஒன்று, சுதந்திர தாகம் கொண்ட மனிதர்களின் ஓர் இயக்கத்தைத் தோற்றுவிப்பது. இதற்கு அவர் சாம்யவாதி சங்கம் என்ற பெயரிட்டார். ஒவ்வொருவனும் அடிமைத் தளையிலிருந்து உண்மையிலேயே விடுதலை பெறும் வரை போராட வேண்டும் என்பதே இச்சங்கத்தின் நோக்கம்.
சுவாமிஜியைப் போலவே நேதாஜியும் நீண்ட உறக்கம், சோம்பல், போலியான திருப்தி, எதையும் போனால் போகிறது, பரவாயில்லை என்று விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றிலிருந்து மக்களைத் தட்டியெழுப்ப விரும்பினார்.
இதைச் சாதிக்க மக்களிடையே மிகுந்த மனோதிடமும் தியாக உணர்வும் தேவை என்று சுவாமிஜி போல அவரும் நம்பினார். சுவாமிஜி வலியுறுத்திய வீரம். தீரம், தியாகம் முதலியவற்றையே சுபாஷும் விடுதலைக்கு வேண்டிய குணங்களாக வலியுறுத்தினார்.
தேசத்தின் மறுமலர்ச்சி
விடுதலைக்குப் பிறகு புதிய பாரதத்தைச் சமுதாயச் சமத்துவத்தின் அடிப்படையில் உருவாக்க விரும்பினார் சுபாஷ். சுவாமிஜி புதிய பாரதம் பற்றிக் கூறும்போது தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சுபாஷின் சிந்தனையில் இது சமூகத்தில் அனைவருக்கும் கல்வி, பொருளாதார மேம்பாடு என்று விரிந்தது. சுவாமிஜியைப் போலவே இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் சுபாஷுக்கும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. இந்தியாவில் வெவ்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தபோதிலும், அவற்றின் ஒருமைப்பாடும் தேச ஒற்றுமையுமே முக்கியம் என்று தீவிரமாக நம்பினார்.
சுவாமிஜியும் நேதாஜியும் மனிதநேயவாதிகள் இருவரும் இந்தியாவில் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் சுதந்திரமாக, அமைதியுடனும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் ஹயாஷிதா என்ற ஜப்பானியர் விவேகானந்தரின் தாக்கத்தால் சுபாஷ் புரட்சியாளர் ஆனார் என்றார். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் உத்போதன் என்ற வங்காள மாதப் பத்திரிகையின் ஆசிரியராக சுவாமி சுந்தரானந்தர் இருந்தார். அவருக்கு சுபாஷ் எழுதிய ஒரு கடிதத்தின் கீழ்க்கண்ட பகுதி, அவரது வாழ்க்கையில் சுவாமிஜியின் செல்வாக்கை இவ்வாறு விவரிக்கிறது.
" ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் என்பதை எப்படி வார்த்தைகளால் விளக்க முடியும்? அவர்களின் புனித தாக்கத்தினால்தான் என் வாழ்வில் முதல் விழிப்புணர்வு ஏற்பட்டது. என் உயிர் உள்ள வரையில் அவர்களுக்கு நன்றியுணர்வோடு, அவர்கள் பாதம் பணியும் பக்தனாக இருப்பேன்."
[ நன்றி: https://www.dinamalar.com/news_detail.asp?id=617129 ]
தொடர்புள்ள பதிவுகள்:
சுபாஷ் சந்திர போஸ்
கதம்பம்