செவ்வாய், 27 ஏப்ரல், 2021

1857. எஸ்.ஏ.பி. -1

குமுதத்தின் வெற்றிக்குப் பின்னால்... எஸ்.ஏ.பி.அண்ணாமலை!

கலைமாமணி விக்கிரமன்  

====

1947-இல் குமுதம்தொடங்கியது. அப்போது 'ரவி'யின் அழகான கோட்டோவியங்களுடன் வந்த அவருடைய முதல் நாவல், 'பிரம்மசாரி'  என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. பிறகு, 'காதலெனும் தீவினிலே'. மணிமேகலைப் பிரசுரம் மூல ஓவியங்களுடன்  அவருடைய படைப்புகளை வெளியிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! 

=====

நாளிதழ்களின் முன்னோடி ஆசிரியர்கள் போன்று 20-ஆம் நூற்றாண்டில் வார இதழ்களில் புதுமை கண்டவர்களைக் குறிப்பிடுவதென்றால் "கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி, சாவி, எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்னும் மூவரைத்தான் முதலில் குறிப்பிடலாம். 

இவர்கள் படைப்பாளர்களாக இருந்ததுடன் புதிய வாசகர்களைப் படிக்கத் தூண்டி, பல எழுத்தாளர்களையும் அடையாளம் கண்டு வளர்த்தவர்கள். எஸ்.ஏ.பி.யின் தந்தையார் பெயர் பழனியப்ப செட்டியார். தாயார் லட்சுமி ஆச்சி. இவர் காரைக்குடியை அடுத்துள்ள கோட்டையூரில் 1924 -ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் தேதி பிறந்தார். எஸ்.ஏ.பி. ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையார் காலமாகிவிட்டார். 

எஸ்.ஏ.பி. அண்ணாமலைக்கு இளம் வயதிலேயே எழுத வேண்டும் என்னும் லட்சியம் இதயத்தில் கொழுந்துவிட்டது. எழுத்தாளராக வேண்டும் என்று தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம்.

ஒருநாள் அவருடைய மதிப்பிற்குரிய நண்பரும் உறவினருமான ஒருவர், ""ஏன் தம்பி, இப்படி சும்மா சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? கதை எழுதிப் பாருங்கள், ஏதாவது பத்திரிகைக்கு அனுப்புங்கள். பிரசுரமாகட்டும். நீங்கள் எழுத்தாளர் என்பது நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா?'' என்று அன்புடன் தூண்டினார். அந்த ஊக்கத்தால் "மளமள'வென்று மூன்று கதைகள் எழுதினார் எஸ்.ஏ.பி. இரண்டை "பிரசண்ட விகடன்' பத்திரிகைக்கும், ஒன்றை "சுதேசமித்திரன்' வார இதழுக்கும் அனுப்பினார். உடனே அவை பிரசுரமாயின.

அச்சில் பிரசுரமான கதைகள் எஸ்.ஏ.பி.யின் ஆர்வத்தை வளர்த்தன. கல்வியில் கவனம் செலுத்தி கல்லூரிப் படிப்பு முடித்துச் சட்டம் படித்துத் தேர்ந்த பிறகு அவருக்குள் மறைந்திருந்த எழுத்துத் தணல் ஊதப்பட்டு நெருப்பானது. சட்டக் கல்லூரியில் அவருடன் படித்த பி.வி.பார்த்தசாரதி, நாராயணன் ஆகிய இரு உயிர் நண்பர்களுடன் நாள்தோறும் புதிய பத்திரிகை ஒன்றைத் தொடங்குவதைப் பற்றியே ஆலோசித்தார்.

புதிய இதழ் தொடங்கும் திட்டம் முடிவானதும், தன் உறவினரையே பங்குதாரராகக் கொண்டு "தேவி அச்சகம்' என்னும் அச்சகத்தை விலைக்கு வாங்கினார் எஸ்.ஏ.பி. அச்சகம் மட்டுமே நடத்தும் நோக்கம் அவருக்கில்லை. அவருடைய லட்சியமான பத்திரிகை நடத்தும் ஆர்வத்தின் முதல்படி அது.

"குமுதம்' என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் "கல்கி' இதழைப் போன்று மாதம் இருமுறை வெளியிடத் திட்டமிட்டனர். மதிப்பும், மரியாதையும் பத்திரிகைக்கு ஏற்பட்டு மக்கள் விலை கொடுத்து வாங்க வேண்டுமென்றால், நாடறிந்த பெரிய மனிதர் ஒருவரின் ஆதரவு இருப்பது நலமென்று எஸ்.ஏ.பி.க்குத் தோன்றியது. எஸ்.ஏ.பி.யின் பெரியம்மா கணவர் டாக்டர் அழகப்ப செட்டியாரை அணுகினார். அழகப்ப செட்டியார் "வள்ளல்' என்று புகழப் பெற்றவர். "வள்ளல்' மட்டுமல்லர்; கல்வியிலும், ஈகையிலும் வள்ளல் அவர்.

எஸ்.ஏ.பி., தான் தனித்துவமுள்ள மனிதனாகத் தலைநிமிர்ந்து வாழ ஆசைப்படுவதை விவரித்து, நான்கு பக்கங்கள் அழகப்ப செட்டியாருக்குக் கடிதம் எழுதினார். தான் புதிதாகத் தொடங்க இருக்கும் பத்திரிகைக்கு அவர் கௌரவ ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடிதத்தைப் படித்த அழகப்ப செட்டியார் மனம் நெகிழ்ந்து, எஸ்.ஏ.பி.யைக் கூப்பிட்டு அனுப்பினார். ""ஏற்கெனவே நிறைய பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. நீ வேறு ஆரம்பித்தால் எப்படி நடக்கும்?'' என்று கேட்டார். நியாயமான கவலைதான்.

""மற்ற பத்திரிகைகள் மாதிரி இல்லாமல் நான் வித்தியாசமாக நடத்தப் போகிறேன்'' என்று எஸ்.ஏ.பி. உறுதியுடன் கூறினார்.

அழகப்பருக்கு அரைமனதுதான் என்றாலும், அந்த இளைஞரின் ஆர்வத்தையும் உள்ளொளியையும் புரிந்துகொண்டு ""சரி செய்'' என்று அனுமதி கொடுத்தார். இந்தச் செய்தியைத் தன் துணை ஆசிரியரிடம் எஸ்.ஏ.பி. சொன்னதாக நினைவு.

"குமுதம்' என்ற பெயர் சூட்டியாகிவிட்டது. சொந்த அச்சகம். போதிய பணவசதி இவை மட்டும் பத்திரிகை வெளியிடப் போதுமா? இதற்கு முன்பு பத்திரிகை நடத்திய அனுபவம் சிறிதுமில்லை. முதல் இதழை, அவர் பள்ளித் தோழர்கள் நாராயணன், ஆனந்ததீர்த்தன், சில எழுத்தாளர்கள் உதவியுடன் வெளிக்கொணர்ந்து விட்டார்.

எஸ்.ஏ.பி.யின் விடாமுயற்சி, தன்னால் முடியும் என்ற நம்பிக்கை, எழுத்தின் மீதுள்ள ஆர்வம் அவரை மகத்தான சாதனை புரிய வைத்தது. பிற்காலத்தில் விற்பனையின் உயர்வுக்கும், வடிவமைப்புக்கும், புதுமையான உள்ளடக்கம் தரும் புதுமைக்கும் மற்ற பத்திரிகைகள் "குமுதத்தைப் பார்' என்று பேசத்தொடங்கின.

"குமுதம்' வெற்றிக்கு, நிர்வாகத்தில் பெரும் பங்கு வகித்த பி.வி.பார்த்தசாரதியின் நட்புடன் கலந்த உழைப்பும் ஒரு காரணம். "ராமருக்கு லட்சுமணர் போல்' எஸ்.ஏ.பி.யின் லட்சியம் வெற்றிபெற பி.வி. பார்த்தசாரதி உதவினார் என்பது இலக்கிய உலகம் அறிந்த உண்மை.

இதழ் தயாரிப்பு ஒன்றையே சிந்தனையாகக் கொண்டு இரவு பகலாக உழைத்தார். புதிய புதிய பகுதிகளைக் கற்பனை செய்து ஒவ்வொரு பக்கத்தையும் தானே இருந்து எழுத்து எழுத்தாகப் பார்த்துப் படித்து "குமுதம்' என்னும் குழந்தையை வளர்த்தார். தொடக்க காலத்தில் எழுத்தாளர் சங்கம் போன்ற கூட்டங்களில் கலந்துகொண்டு நறுக்குத் தெறித்தாற்போல பேசுவது என்று வாசக மக்களிடையே தன் பெயரை நிலைநாட்ட விரும்பினார்.

1951-இல் மறுமலர்ச்சியுடன் மீண்டும் தொடங்கிய தமிழ் எழுத்தாளர்கள் சங்க நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டார். தன் மாநாடுகளின் வெற்றிக்குப் பாடுபட்டார். வரவேற்புக் குழுவில் சேர்ந்து உழைத்தார்.

விவேகானந்தரின் நூற்றாண்டு விழாக் கூட்டங்களுக்காகப் பல ஊர்களுக்குப் பேசச் சென்றார். "மிகச் சிறந்த பேச்சாளர்' என்று அவர் பெயர்பெறத் தொடங்கிய சமயம் திடீரென்று ஒருநாள் உதவி ஆசிரியர் ரா.கி.ரங்கராஜனிடம் ""இனிமேல் மேடைப் பேச்சுகளுக்குப் போகப் போவதில்லை'' என்று சொன்னார். ரா.கி.ரங்கராஜன் திகைத்தார். அதை "எஸ்.ஏ.பி.' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஏ.பி. அப்படியொரு முடிவுக்கு வரக்காரணம் -நான்தான்!

எஸ்.ஏ.பி. அத்தகைய முடிவெடுத்த சமயம்.. எஸ்.ஏ.பி.யை நான் இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குத் தலைமை வகிக்க அழைத்திருந்தேன். அறிஞர் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை பேசிய கூட்டம். இரண்டரை மணி நேரம் திரிகூடசுந்தரம் பேசினார், பேசினார், பேசிக்கொண்டே இருந்தார். எஸ்.ஏ.பி. இருக்கையில் தவித்தார், நெளிந்தார், கைக்கடிகாரத்தைப் பார்த்தார், கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த என்னைப் பார்த்தார். கடுமை இல்லை; பரிதாபம் இருந்தது. இப்படியாகிவிட்டதே என்ற கவலை இருந்தது. ஒரு வழியாகத் திரிகூடசுந்தரம் பேசி முடித்ததும், தலைமை உரையை எஸ்.ஏ.பி. சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் முடித்துக்கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு வழியனுப்ப வந்த என்னைத் தனியே அழைத்து, ""குமுதம் இப்போது வளர்ந்து வரும் பத்திரிகை. குறித்த நேரத்தில் எந்தப் பணியையும் செய்யும் வழக்கம் உடையவன் நான். எட்டரை மணிக்கு அலுவலகத்தில் இருந்து குமுதம் "பாரத்'தைச் சரி பார்த்து அச்சிடக் கொடுக்க வேண்டும். உதவி ஆசிரியர்கள் என்னைக் காணாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். கடமையிலிருந்து தவற ஒரு நாளும் நான் விரும்பமாட்டேன். பத்திரிகை அலுவலத்தில் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது என்பது உங்களுக்குத் தெரியும். பொதுக் கூட்டத்தில் கிடைக்கும் கை தட்டலுக்காக என் லட்சியம், கடமை சிதைந்து விடக்கூடாது. தயவுசெய்து இனி என்னை எந்தப் பொதுக் கூட்டத்துக்கும் பேசவோ, தலைமை வகிக்கவோ அழைக்காதீர்கள்'' என்றார். என் கண்கள் கலங்கின. அப்போது அவர் சொன்னதை இறுதிவரைக் கடைப்பிடித்தார்; வென்றார். விற்பனையில் இந்தியாவின் முதல் இடத்தைப் பெற்றார்; இமாலய சாதனையை செய்து காட்டினார்.

குமுதத்தின் தொடக்க காலத்தில் அவர் விறுவிறுப்பாகத் தொடர்கதைகள் எழுதினார். நூல் வடிவில் வந்தபோது அதன் சுவை மிகவும் கூடியிருப்பது தெரிந்தது. காதலெனும், தீவினிலே, நீ, சித்தி, இன்றே இங்கு இப்போதே போன்ற தொடர்கதைகளை எழுதினார்.

காதலெனும் தீவினிலே புதினத்தைப் படித்த ஏவி.எம்.செட்டியார், திரைப்படமாக்கும் யோசனையைத் தெரிவித்தார். ஆனால். எஸ்.ஏ.பி., சில காரணங்களைக் கூறி, ஒருநாளும் திரைப்படத்துக்குக் கதை எழுதுவதில்லை என்று கூறிவிட்டார்

தன் மனைவியார் கோதை ஆச்சியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு சென்றதும் எஸ்.ஏ.பி.யின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரியும் தன் ஒரே மகன் ஜவகர் பழனியப்பன் பணியாற்றிவந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி காலமானார். அமெரிக்காவிலிருந்து அவரது உடலைச்சுமந்து மகனும் மனைவியும் சென்னை வந்தனர்.

ஓர் இலக்கிய எழுத்தாளர், பிறப்பிலேயே செல்வந்தர், கண்டிப்பு, நேர்மை, காலந்தவறாமை, ஒழுக்கம், வெற்றியிலிருந்து மாறுபடாமல் வாழ்ந்த அவரை படைப்புலகம், பத்திரிகை உலகம், வாசகர் உலகம் எப்படி மறக்கும்?

 [ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

எஸ். ஏ. பி. யும் (நன்றியுடன்) நானும் - கடுகு 

எஸ்.ஏ.பி.

3 கருத்துகள்:

ஜீவி சொன்னது…

அமரர் எஸ்.ஏ.பி. அவர்களின் 'காதலெனும் தீவினிலே', 'நீ' இரண்டும் மணிமேகலை பிரசுரத்தால் வெளியிடப் பட்டது என்னிடம் உள்ளது.

Pas S. Pasupathy சொன்னது…

@ஜீவி. மூலப் படங்கள் இருந்திருக்காதே? :-(
( நீங்கள் இலங்கை இதழுக்கு எழுதிய க்ட்டுரையை எனக்கு அனுப்பினால் மீள்பிரசுரம் செய்வேன்..)

Pas S. Pasupathy சொன்னது…

@ஜீவி எஸ்.ஏ.பி. "பிரசண்ட விகடன்" " சுதேசமித்திரன்" இதழ்களில் எந்த வருடங்களில்/மாதங்களில் எழுதினார்? கதைகள் பெயர் என்ன? தெரிந்தால் சொல்லுங்கள். ( இவற்றிலெல்லாம் வேறு யாருக்கும் அக்கறை இல்லையோ? எனக்கு உண்டு! :-) என்றாவது கையில் சிக்கும்.