அறிமுகம்
‘அறிவியல்’ என்ற சொல் அறிவு ( Knowledge) என்ற சொல்லில் பிறந்தது. பண்டைய காலத்தில் மொழி,இலக்கியம் தொடர்பில் மட்டுமே ‘அறிவு’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டது; இன்றோ , அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் அச்சொல் பொருந்துகிறது. மொழியைக் கையாளுவதிலும், அறிவியல் அறிவைச் சுட்டுகிறது இலக்கியம். சான்று; கடலைக் ‘கார்கோள்’ என்கிறது திருமுருகாற்றுப்படை. கார் என்ற மேகம் கடலிலிலிருந்து தான் நீரைக் கொள்கிறது என்ற அறிவியல் உண்மையை அன்றே தமிழர் அறிந்திருந்தனர் என்பதை இது காட்டுகிறது.
அறிவியல் என்றால் ‘விஞ்ஞானம்’ ( Science); ‘தொழில் நுட்பம்’ என்றால் (‘Technology’ ). அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது.. இந்தக் கட்டுரையில் தமிழ் இலக்கியத்தில் உள்ள அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த சில தகவல்களைப் பார்க்கலாம். கூடவே, நம் இலக்கியத்தில் ‘. ‘வலவன் ஏவா வானூர்தி’ ( புறம் 27-8 ) போன்ற அறிவியல்சார் கனவுகளும் இருக்கும். அவற்றையும் நம் கண்ணோட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
முற்காலம்
புறநானூற்றில் ஒரு பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் வானியல் அறிஞர்கள் இருந்தனர் என்று சொல்கிறார்; தொல்காப்பியம் உலகத்தின் அடிப்படை ‘நிலம் நீர் தீ வளி விசும்பு’ என்ற ஐம்பூதங்கள் என்கிறது; பதிற்றுப் பத்து கரும்பு பிழியும் எந்திரங்களைப் பற்றியும், பெருங்கதை ஆழ்துளைக் கிணற்றையும், மணிமேகலை எந்திரவாவி ( நீச்சல் குளம்) யையும், பெருங்கதை எந்திர யானையையும் குறிப்பதைப் படிக்கிறோம். மேலும், நேரத்தைக் கணக்கிட தரையில் நடப்பட்ட கம்பின் நிழல் உதவியதைப் பற்றிக் குறிக்கிறது இலக்கியம். நீரைக் கொண்டு நாழிகை அறியும் ‘நாழிகை வட்டில்’ என்ற கருவியும் அக்காலத்தில் இருந்தது.
கபிலர் ஒரு பாடலில் எப்படி ஏரிகள் எட்டாம் பிறை வடிவில் ஒரு சிக்கன அமைப்பில் இருக்கவேண்டும் என்ற சுற்றுச் சூழல் அறிவைப் புகட்டுகிறார் . குளத்தைத் தோண்டியும், மரங்களை நட்டும், மக்கள் நடமாட்டத்திற்கான வழிகளை ஏற்படுத்தியும், மேடுகளைத் தோண்டி உழும் வயலாக்கியும், கிணற்றைத் தோண்டியும் இவ்வைந்து அறச் செயல்களை எவர் செய்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார் என்கிறது சிறுபஞ்ச மூலத்தில் உள்ள ஒரு பாடல்.
கணக்கதிகாரம் என்று நூலில் ‘வட்டத்தின் பரப்பளவு’ என்ன என்று சொல்லும் ஒரு குறள் வெண்பா.
வட்டத் தரைகொண்டு விட்டத்தரை தாக்க
சட்டெனத் தோன்றுங் குழி.
[ பொருள்: வட்டப்பகுதியின் அரைப்பங்கு நீளத்தை விட்டத்தின் அரைப்பங்கு நீளத்தால் பெருக்கினால் வட்டமப் பரப்பு பெறப்படும்.]
இக்கணக்கில் மறைந்திருக்கும் ‘பை’ ( Pi ) பற்றிய ஒரு வெண்பா:
மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப்
பாவை அழகுகண்டு 'பை'யென்று சொன்னானோ?
வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின்
பட்டென்று பம்பிடுவாள் பை. ( பசுபதி )
[ மார்ச் 14 (3/14) 'பை' தினம். * முதல் மூன்று சீர்கள் பையின் தோராய மதிப்பாம் 3.14-ஐக் குறிக்கிறது. பை = அழகு ]
கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
போதையனாரின் சூத்திரம் ஒன்று ( 3,4,5 ) , ( 5,12, 13 ) என்ற இரண்டு எண்கூட்டங்களில் ( அல்லது அவற்றின் மடங்குகளில்) மட்டும் இருக்கும் செங்கோணங்களில் வர்க்கமூலம் இல்லாமல் ‘கர்ணங்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
காளமேகத்தின் ” எட்டொரு மா” என்று தொடங்கும் பாடலால் தமிழர் பின்னங்களை வாழ்க்கையில் சகஜமாய்ப் பயன்படுத்தினர் என்பது தெரிகிறது. அதுபோலவே நெய்தல் குவளை ஆம்பல் சங்கம் வெள்ளம் போன்ற பேரெண்களையும் பாடல்களில் நாம் பார்க்கிறோம்.
” புல்லாகி பூடாய்” என்ற மணிவாசகரின் பாடலுக்கும் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கும் , விஷ்ணுவின் தசாவதாரங்களுக்கும் உள்ள ஆச்சரியமான ஒற்றுமையைப் பார்த்து நாம் வியக்கிறோம்.
16-17 நூற்றாண்டில் வாழ்ந்த போகர் என்ற சித்தரின் பாடல்கள் மூலம் அவருடைய தொழில் நுட்ப அறிவு, பொறியியல் அறிவு வெளிப்படுகிறது. சீனாவிற்குச் சென்று சாதனைகள் செய்ததாய்ப் பாடியிருக்கிறார். நீராவிக்கப்பல், புகைரதம், ’பலூன்’ போன்றவற்றைப் பற்றிப் பாடியுள்ளார். போகர் சீனாவில் கல்வி பயின்றபோது யாவரும் வியக்கும் வண்ணம் பாரசூட் செய்ததை, ‘குடைவித்தை’ என்று 9 பாடல்களால் விளக்கியுள்ளார்.
திருக்குறளில் ‘மருந்து’ என்று ஒரு அதிகாரமே இருக்கிறது
கைகேயி தன் இதயத்தில் பாய்ச்சின வரம் எனும் கூர்வேல், இன்று இராமனைத் தழுவியதனால், அவன் மார்பாகிய காந்தம் அதனை வாங்கிவிட்டது என்று தசரதர் கம்பம் காதையில் கூறுவதைப் படிக்கிறோம்.
திருப்புகழில் பல பாடல்களில் அருணகிரிநாதர் அக்காலத்தில் இருந்த நோய்களைப் பட்டியலிடுகிறார். ஒரு சான்று:
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு ...... முளநோய்கள்
அகத்தியரின் ஐந்து சாஸ்திரம் என்ற நூலில் 18 வித மனநோய்களைப் பற்றியும், அதற்குரிய மருத்துவம் பற்றியும் சொல்லியிருக்கிறது என்று படிக்கிறோம்
நிகழ்காலம்
கவிதைகள் மூலமாய்ப் பல அறிவியல் உண்மைகளைச் சுட்டும் வழக்கம் காணப்படுகிறது. முக்கியமாய், பல அறிவியல் உணமைகளைப் படித்தறிந்த பாரதியின் கட்டுரைகளிலும், பல கவிதைகளிலும் அறிவியலைப் பற்றிய சிந்தனையைக் காண்கிறோம்.
நகைச்சுவை கலந்த சில கவிதைகள் சில அறிவியல் கருத்துகளைச் சொல்வதையும் பார்க்கிறோம்.
உதாரணம்: ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாடு ( Special Theory of Relativity ) மிக விரைவாகச் செல்லும் ஊர்தியினுள் காலம் தாமதமாக ( Time Dilation ) நடக்கும். இதைச் சொல்லும் ஒரு குறும்பா:
ஐன்ஸ்டீனின் பெரும்விசிறி ஆண்டாள்
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு,
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னிரவு வீடுவந்து சேர்ந்தாள் ! ( பசுபதி )
நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமன் கண்டுபிடித்த ‘ராமன் விளைவு’ பற்றி அவரே சொன்ன ஒரு நகைச்சுவைத் துணுக்கு இங்கே ஒரு கவிதையாய் மாறுகிறது.
ராமன் விளைவு ( Raman Effect )
===========
பார்புகழ் நோபல் பரிசுவென்று பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்.
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்.
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன்.
இதற்கென்ன காரணம் என்றவர்க்(கு) உரைத்தார்:
"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!" ( பசுபதி )
திரைப்படப் பாடல்களில் அதிகமாக அறிவியல் சார்ந்த பாடல்களை நாம் பார்ப்பதில்லை. இருப்பினும், , ’நல்ல தம்பி’ (1949) படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் பாடிய அறிவியல்-நகைச்சுவை கலந்த “ விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி” போன்ற பாடல்கள் பிரபலமானவை.
அறிவியல் நூல்கள்
அறிவியல் தமிழ் ஆக்க முயற்சியில் முதல் கட்டம் : அறிவியல் நூல்கள் எழுதப்பட்டது, இரண்டாம் கட்டம்: கலைச் சொல்லாக்கப்பணி 19-ஆம் நூற்றாண்டின் முதற் பாதிப்பகுதியில், 1-8 வகுப்பு வரை தாய்மொழியில் பல இடங்களில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அதனால் பல அறிவியல் நூல்கள் எழுதப்பட்டன.
நூற்றொகை விளக்கம் என்பது 1888 ஆம் ஆண்டில் பேராசிரியர் ‘மனோன்மணியம்’ பெ. சுந்தரனார் எழுதினார். இந்த நூலில் "இவ்வுலக வாழ்க்கைக்கு மனிதனின் அறிவு வளர கணிதம், இரசாயணம், உயிரியல் உளநூல், வானவியல், சோதிடம், புவியியல், இலக்கணம், அறம், சிற்பம், கடற்பயணம், போர்க்கலை, மருத்துவம் என்று பல்வேறு துறைகளை அக்காலத்தில் வழங்கிய சொற்களைக் கொண்டு விளக்குகிறார்.
கலைச்சொல்லாக்கப் பணிகள் முறையாக 20-ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியது எனலாம். ராஜாஜி, வெங்கடசுப்பையருடன் சேர்ந்து 1916-இல் ‘தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’ என்ற இதழைத் தொடங்கினார். “ கலைச்சொல்லாக்கப் பணியில் இது முதல் கூட்டு முயற்சி “ என்கிறார் வே.செ.குழந்தைசாமி. ராஜாஜி ‘திண்ணை ரசாயனம்’ ’தாவரங்களின் இல்லறம்’ என்ற நூல்களை ( 46/47 -இல் ) எழுதியது நினைவுக்கு வருகிறது. அறிவியல் வளர்ச்சியில் ‘ கலைக்கதிர்’, ‘விஞ்ஞானச் சுடர்’, ‘ வளரும் வேளாண்மை’ போன்ற இதழ்களின் பணி குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வா.செ.குழந்தைசாமி, சுப்பு ரெட்டியார், மணவை முஸ்தபா போன்றோர் பல நூல்களையும், பெ.நா.அப்புசாமி, பொ.திருகூடசுந்தரம் பிள்ளை போன்றோர் பல அறிவியற் கட்டுரைகளையும் எழுதியுள்ளனர்.
=====
[ If you have trouble reading some of the images, right click on each such image , choose 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
தொடர்புள்ள பதிவுகள்:
பசுபடைப்புகள்
சங்கச் சுரங்கம்