சனி, 11 ஆகஸ்ட், 2018

1136. காந்தி -39

33. தாஸ் - ஆஸாத் தலையீடு
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( இரண்டாம் பாகம்)  என்ற நூலில் வந்த  33-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே இந்நூலில் உள்ளன ]
===

இந்தியாவின் சரித்திரத்திலேயே மிக முக்கியமான வருஷம் 1921-ஆம் வருஷம். அந்த வருஷத்திலேதான் இந்தியா தேசத்தில் இமயமலை முதல் கன்னியா குமரி வரையில் மக்கள் விழித்தெழுந்தனர். அன்னிய ஆட்சியை எதிர்த்து நிற்கத் துணிந்தனர். அந்தத் துணிச்சலை மக்களுக்கு உண்டாக்கிய ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தியவர் மகாத்மா காந்தி. அந்த வருஷத்தில் மகாத்மாவுக்கு அடுத்தபடியாக இந்திய மக்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவராயிருந்த தலைவர் யார் என்று கேட்டால், வங்காளத்தின் முடிசூடா மன்னராக அப்போது விளங்கிய தேசபந்து சித்தரஞ்சனதாஸ் அவர்கள்தான். அவர் நெடுநாளைய தேசபக்தர். ஸ்ரீ அரவிந்த கோஷ் மீது புரட்சி இயக்க வழக்கு நடந்த போது அவர் பக்கம் ஆஜராகி வாதித்துப் புகழ் பெற்றவர். வருஷத்திற்கு ஆறு லட்சம் ரூபாய் வக்கீல் தொழிலில் அவருக்கு வருமானம் வந்தது என்பது தேசத்தில் பிரசித்தமாயிருந்தது. அப்படிப் பட்ட வருமானமுள்ள தொழிலை அவர் ஒத்துழையாமை இயக்கங் காரணமாகக் கைவிட்டார் என்பது இந்திய மக்களை ஆச்சரியக் கடலில் மூழ்க அடித்து, அவரிடம் எல்லையற்ற பக்தியையும் மதிப்பையும் அளித்திருந்தது. அத்தகைய மாபெருந் தியாகி அந்த வருஷத்தில் ஆமதாபாத்தில் நடப்பதற்கிருந்த காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். நாகபுரி காங்கிரஸுக்குப் பிறகு 1921-ஆம் வருஷம் முழுவதும் அவர் மகாத்மாவைப் பரிபூரணமாக ஆதரித்து நின்றார். இதனால் வங்காளம் ஒத்துழையாமை இயக்கத்தில் முதன்மை ஸ்தானம் வகித்தது. நெடுகிலும் அவருக்குப் பக்க பலமாக நின்று வேலை செய்த முஸ்லிம் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத். தேசபந்து தாஸ் வங்காள மாகாண காங்கிரஸுக்கும் மௌலானா ஆஸாத் வங்காள கிலாபத் கமிட்டிக்கும் தலைவர்களா யிருந்தார்கள்.

வேல்ஸ் இளவரசர் டிசம்பர் கடைசி வாரத்தில் கல்கத்தா வருவதாகத் தேதி குறிப்பிடப் பட்டிருந்தது. இளவரசர் சென்றிருந்த மற்ற இந்திய நகரங்களில் போலவே கல்கத்தாவிலும் மாபெரும் ஹர்த்தால் நடத்தும்படி காங்கிரஸ் – கிலாபத் ஸ்தாபனங்கள் ஏற்பாடுகள் செய்துவந்தன. இந்த நிலையில் வங்காள மாகாண சர்க்கார் தேசீயத் தொண்டர் படைகளைச் சட்ட விரோத ஸ்தாபனங்கள் என்று தெரியப்படுத்தினார்கள். இதற்காக 1906-ஆம் வருஸத்தில் பலாத்காரப் புரட்சி ஸ்தாபனங்களைப் கலைப்பதற்காகச் செய்யப்பட்ட 'கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் ஆக்ட்' என்னும் சட்டத்தை உபயோகப் படுத்தினார்கள். இளவரசர் விஜயம் செய்யும்போது ஹர்த்தால் நடப்பதைத் தடுக்கவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம்.

அந்த நோக்கத்தை அறிந்து, மேற்படி அநியாயச் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்யக் காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தார்கள். ஒவ்வொரு நகரத்திலும் பிரபல காங்கிரஸ் தலைவர்கள் தங்களைத் தொண்டர் படையில் பதிவு செய்து கொண்டு அதை விளம்பரப் படுத்தினார்கள். பண்டித நேரு முதலியவர்கள் ஐக்கிய மாகாணத்தில் செய்ததுபோல் கல்கத்தாவில் தேசபந்துதாஸ், மௌலானா ஆஸாத் முதலியவர்கள் சட்டத்தை மீறினார்கள். அவர்கள் உடனே கைது செய்யப்பட்டார்கள். வங்காளிகள் உணர்ச்சி மிக்கவர்கள்; தேசீயப் போரில் எப்போதுமே முன்னணியில் நின்றவர்கள். தேசபந்து தாஸும் அவருடைய மனைவியும் சகோதரியும் கைது செய்யப்பட்ட போது வங்காளிகளின் மனோநிலை எப்படியிருக்கும் என்று கேட்கவேண்டுமா? ஒரே கொந்தளிப்புத்தான். ஆகவே நாட்டின் மற்ற எந்தப் பகுதியைக் காட்டிலும் அதிகமான தேசத் தொண்டர்கள் டிசம்பரில் சிறைப்பட்டார்கள்.

வருஷந்தோறும் டிசம்பர் கடைசியில் கவர்னர் ஜெனரல் பதவி வகிப்பவர் கல்கத்தாவுக்குச் சென்று அங்கு வசிக்கும் ஏராளமான ஐரோப்பியர்களின் மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி லார்டு ரெடிங் கல்கத்தா சென்றார். வேல்ஸ் இளவரசர் விஜயமும் அதே சமயத்தில் சேர்ந்து கொண்டது. கவர்னர் - ஜெனரல் லார்ட் ரெடிங்கும், வங்காள கவர்னர் லார்ட் ரொனால்ட்ஷேயும் காங்கிரஸ் தலைவர்களைத் தாக்கிப் பேசினார்கள். அந்தப் பேச்சில் ஒன்றில் தான் லார்ட் ரெடிங் "எனக்கு ஒன்றும் புரியவில்லை; என் மனம் குழம்புகிறது" என்றார். மொத்தத்தில் அவர்களுடைய பேச்சுக்களில் கவலை தொனித்தது. கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரம் நடைபெறுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற ஆவலும் வெளிப்பட்டது.

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலேதான் பண்டிதமாளவியா ராஜி பேசுவதற்காகக் கல்கத்தா சென்றார். அங்கே மூன்று முறை லார்ட் ரெடிங்கைப் பேட்டிகண்டு பேசினார். அந்தப் பேச்சுகளிலிருந்து ராஜிசெய்து வைக்க இடம் இருக்கிறது என்று கருதினார். மகாத்மாவிடமிருந்து பதில் இன்னும் வரவில்லை. பதில் வரும் வரையில் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. சிறைக்குள்ளேயிருந்த தேச பந்து தாஸ்- மௌலானா ஆஸாத் இவர்களைப் பார்த்துப் பேசுவதற்குச் சென்றார். ரெடிங்குடன் தாம் நடத்திய சம்பாஷணையைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தார். மாளவியாவின் மத்தியஸ்தப் பேச்சுக்கு அவர்கள் செவி கொடுத்தார்கள். ஒருவாறு அவருடைய கட்சியை ஒப்புக்கொண்டார்கள். "அப்படியானால், உங்கள் அபிப்பிராயத்தை மகாத்மாவுக்குத் தெரிவியுங்கள்" என்றார் மாளவியா. "சரி" என்றார்கள் தாஸும், ஆஸாதும். மகாத்மாவுக்கு ஒரு தந்திச் செய்தி எழுதினார்கள். அது வங்காள கவர்மெண்டின் அநுமதியடன் அவசர 'லைன்கிளியர்' தந்தியாக மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்டது. அந்த அவசரத் தந்தியின் வாசகம் பின் வருமாறு:--

கல்கத்தா
19-12-29
பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தியானால் ஹர்த்தாலை வாபஸ் பெறலாம் என்று நாங்கள் சிபார்சு செய்கிறோம்:--

(1) காங்கிரஸ் எழுப்பியிருக்கும் எல்லாப் பிரச்னைகளையும் பற்றி ஆலோசிக்கச் சர்க்கார் மகாநாடு கூட்டவேண்டும்.
(2) சமீபத்தில் வெளியான சர்க்கார் அறிக்கையையும் போலீஸ் மாஜிஸ்ட்ரேட் உத்தரவுகளையும் வாபஸ் வாங்க வேண்டும்.
(3) புதிய சட்டத்தின் கீழ்ச் சிறைப்பட்ட எல்லாக் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

கல்கத்தா பிரஸிடென்ஸி ஜெயில் சூபரிண்டெண்டு மேற்பார்வைக்கு உடனே பதில் அனுப்புங்கள்.
சி. ஆர். தாஸ்
ஏ.கே. ஆஸாத்
மேற்கண்ட தந்தி மகாத்மாவைத் திடுக்கிடச் செய்து விட்டது.

மாளவியாவிடம் மகாத்மாவுக்கு மிக்க மதிப்பு உண்டு. தாஸ் - ஆஸாத் இவர்களிடம் மிக்க அபிமானம் உண்டு. ஆயினும் அவர்கள் மூவரும் லார்ட் ரெடிங்கின் மாய வார்த்தையில் ஏமாந்துபோய் விட்டார்கள் என்றே காந்திஜி கருதினார். காந்தி மகானுக்குச் சத்தியமே தெய்வம். அஹிம்சையே மதம். நேர்மையே உயிர். ஆயினும் அவர் அரசியலில் மகா நிபுணத்துவம் வாய்ந்தவர். சூழ்ச்சி செய்து அவரை ஏமாற்றி விட முடியாது.

தாஸ் - ஆஸாத் தந்தியில் உள்ள குறை என்ன என்பது மகாத்மாவுக்கு அதைப் படித்த உடனே தெரிந்துவிட்டது. ரெடிங் - ரோனால்ட்ஷே கூட்டத்துக்குத் திடீரென்று காங்கிரஸ் தலைவர்களிடம் அன்பு பிறந்துவிட வில்லை. வேல்ஸ் இளவரசர் பகிஷகாரத்தினால் அவர்கள் பெரிதும் சங்கடத்துக்கு உள்ளாகியிருந்தனர். அதிகார வர்க்கத்தின் மதிப்பே அதனால் போய்விடுவதாயிருந்தது. கல்கத்தா ஒரு நகரத்திலாவது பகிஷ்காரம் தடுக்கப்பட்டால் அவர்களுடைய மதிப்பு ஓரளவு காப்பாற்றப்படும்.

இதற்காக அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அந்தச் சூழ்ச்சியில் மாளவியா விழுந்தது மட்டுமல்ல; தாஸையும், ஆஸாதையும்கூட விழப்பண்ணிவிட்டார். வேல்ஸ் இளவரசர் விஜயத்தை முன்னிட்டே தொண்டர் படைகளைச் சட்டவிரோத ஸ்தாபனங்கள் என்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவை மீறிச் சட்ட மறுப்புச் செய்து காங்கிரஸ் தலைவர்கள் சிறை புகுந்தனர்.

பகிஷ்காரத்தைக் காங்கிரஸ் தலைவர்கள் வாபஸ் வாங்குவதாயிருந்தால், சர்க்கார் தொண்டர் படைகளை ஆட்சேபிக்க வேண்டிய அவசியமே இல்லை. தடை உத்தரவை வாபஸ் வாங்குவதில் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. இளவரசர் பகிஷ்காரத்தைத் தடுப்பது அவர்களுடைய முக்கிய நோக்கம். காங்கிரஸே பகிஷ்காரத்தை எடுத்துவிடும் பட்சத்தில் சர்க்காரின் நோக்கம் நிறைவேறி விடுகிறது. தடை உத்தரவுக்கு அவசியம் என்ன?

ஆகவே மாளவியாவின் ராஜியை ஒப்புக்கொண்டால் காங்கிரஸ்தான் விட்டுக் கொடுத்ததாகுமே தவிர, சர்க்கார் எந்த விதத்திலும் விட்டுக் கொடுத்தது ஆகாது.

வட்டமேஜை மகாநாடு கூட்டுவதாகச் சர்க்கார் ஒப்புக் கொள்வதைப் பற்றி எந்தவித நம்பிக்கையும் கொள்ளமுடிய வில்லை. வெறும் ஏமாற்றமாகவே முடியலாம். சர்க்கார் கூட்டும் வட்டமேஜையில் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலரையும் மிதவாதிகள் - அதிகார வர்க்க பக்தர்கள் பலரையும் அழைக்க லாம். அழைத்து "சட்ட மறுப்பைக் காங்கிரஸ் கைவிட வேண்டும்; சர்க்கார் கொடுக்கும் சீர்திருத்தங்களைப் பெற்றுத் திருப்பியடைய வேண்டும்" என்று ஒரு அத்தியாயம் உபதேசம் செய்து அனுப்பலாம். இதனால் தேசம் அடையும் நன்மை என்ன? இத்தனை நாளும் தேச மக்கள் செய்த தியாகமெல்லாம் வீண் போனது ஆகாதா?

எனவே, தாஸ் - ஆஸாத் யோசனையை மகாத்மாவினால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆயினும் அவர்கள் பேரில் மகாத்மாவுக்குப் பெருமதிப்பு இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றிக்கு அவர்கள் பெரிதும் காரணமானவர்கள். எனவே, "உங்கள் யோசனையை நிராகரிக்கிறேன்" என்று பதில் அனுப்பிவிட வில்லை. அவர்களுடைய நிபந்தனைகளோடு இன்னும் சில நிபந்தனைகளையும் சேர்க்க வேண்டும் என்று மகாத்மா காந்தி பதில் அனுப்பினார். அந்தப் பதில் தந்தியின் வாசகம் பின்வருமாறு:--

சபர்மதி
19-12-21
உங்கள் தந்தி கிடைத்தது. வட்டமேஜை மகாநாட்டின் தேதியும், மகாநாட்டுக்கு யார் யார் அழைக்கப்படுவார்கள் என்பதும் முதலிலேயே சொல்லப்பட வேண்டும். கராச்சி கைதிகள் உள்பட, 'பத்வா' கைதிகளையும் சர்க்கார் விடுதலை செய்யவேண்டும். உங்களுடைய நிபந்தனைகளோடு மேற்கண்ட நிபந்தனைகளும் நிறைவேற்றப் பட்டால் ஹர்த்தாலை வாபஸ் பெறலாம்.
எம். கே. காந்தி

இந்தத் தந்தியில் மகாத்மா காந்தியின் அரசியல் திறத்தோடு அவருடைய சிநேக தர்மத்தின் சிறப்பையும் நேயர்கள் காணலாம்.

மகாநாடு கூட்டும் தேதி, மகாநாட்டுக்கு யார் அழைக்கப்படுவார்கள் என்பதை லார்ட் ரெடிங் சொல்ல வேண்டி ஏற்பட்டால் அவருடைய நோக்கம் உண்மையானதுதானா என்பது தெரிந்துவிடும். பின்னால் சால்ஜாப்புகள் சொல்லி ஏமாற்ற முடியாது.

அடுத்தபடியாக, உண்மையில் காங்கிரஸின் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் லார்ட் ரெடிங்குக்கு இருக்குமானால், இப்போது கைதியானவர்களை மட்டும் விடுதலை செய்வது போதாது. ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த பிறகு சிறைப் பட்டவர்கள் எல்லாரையும் விடுதலை செய்யவேண்டும். முக்கியமாக, அலி சகோதரர்களை விடுதலைசெய்ய வேண்டும், என்று மகாத்மா வற்புறுத்தினார்.

'பத்வா கைதிகள்' என்பவர்கள் பிரிட்டிஷ் சைன்யத்திலிருந்து உண்மையான முஸ்லிம்கள் ராஜினாமாச் செய்ய வேண்டும் என்றும், சைன்ய சேவை செய்வது மதத்துரோகம் என்றும் அறிக்கை பிறப்பித்த முஸ்லிம் உலமாக்கள் மௌல்விகள் முதலியோர் இதே விதமான குற்றத்துக்காவே அலி சகோதரர்கள் முதலிய கராச்சி கைதிகளும் தண்டிக்கப் ட்டார்கள். அலி சகோதரர் முதலியோரை விட்டு விட்டு மற்றவர்களின் விடுதலையை மட்டும் கோருவதை மகாத்மா விரும்பவில்லை. அது சரியான அரசிய் முறையும் அல்ல, சிநேக தர்மத்துக்கு உகந்ததுமல்ல என்று கருதினார். லார்ட் ரெடிங்குக்கு உண்மையில் காங்கிரஸுடன் ராஜி செய்துகொள்ளும் எண்ணம் இருந்தால் அலி சகோதரர்களை விடுதலை செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் வரவில்லை. சர்க்கார் சார்பில் லார்ட் ரெடிங்கும் சொல்லவில்லை; மத்தியஸ்தம் செய்ய முயன்றவர்களும் சொல்லவில்லை. ஆனால் எல்லாருக்கும் மகாத்மாவின் பேரில் கோபம் வந்தது! தேசபந்துவுக்குக்கூடப் பிரமாத கோபம் வந்தது! "நாம் சொன்னதை மகாத்மா காந்தி உடனே அப்படியே ஒத்துக்கொள்ள வில்லையே?" என்று ஆத்திரப்பட்டார். அப்பேர்ப்பட்ட மகா தியாகியான தேசத் தலைவருக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு கோபமும் ஆத்திரமும் ஏன் ஏற்பட்டன என்று யாரால் சொல்லமுடியும்?

ஸ்ரீ தாஸ் சிறைக்குள் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், வெளியிலே அவருடைய ஸ்தானத்தை வகித்து வந்த ஸ்ரீ சியாமசுந்தர சக்கரவர்த்தி என்னும் வங்கத்தலைவர் ஸ்ரீ தாஸைப் பேட்டி காணச் சென்றார். அவரிடம் தேசபந்து தம் மனோ நிலையை வெளியிட்டார். தேசபந்துதாஸ் அச்சமயம் வங்க நாட்டின் முடிசூடா மன்னராக விளங்கியவர். அவருடைய கருத்தை ஆதரிப்பது தம் கடமை யென்று ஸ்ரீ சியாமசுந்தர சக்கரவர்த்தி கருதினார். ஆகையால் பின்வரும் தந்தியை அவர் மகாத்மாவுக்குக் கொடுத்தார்.

கல்கத்தா
20-1-21
வங்காளத்தின் அபிப்பிராயம் வட்ட மேஜை மகாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தைக் கைப்பற்றவேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஜனங்களின் சார்பாகப் போரை நிறுத்தி வைக்கிறோம் என்று உறுதி கொடுக்க வேண்டியது நியாயமேயாகும். நீங்கள் கோரும் கைதிகளின் விடுதலையை மகாநாடு கூடுவதற்கு முன்னால் எதிர்பார்க்கலாம். உடனே பதில் தெரிவிக்கவும்.
சியாமசுந்தர்.

இதே மாதிரி இதே தேதியில் பண்டித மாளவியாவும் மகாத்மாவுக்குத் தந்தி கொடுத்தார். "வட்ட மேஜை மகாநாடு பற்றிய விவரங்கள் முடிவானால் ஹர்த்தாலை வாபஸ் பெறவும் ஒத்துழையாமை நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவும் ஒப்புக் கொள்ளவேண்டும்; ஒப்புக்கொள்வதாக உங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டார்.

இதற்குள் கல்கத்தா வந்து சேர்ந்த ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும், "மாளவியாவுக்கு நீங்கள் கொடுத்த தந்தியைப் பார்த்து எங்கள் இருதயம் உடைந்து போய்விட்டது! உங்களிடம் சம்பாஷித்ததிலிருந்து ராஜிப் பேச்சுக்கு நீங்கள் தயார் என்ற எண்ணத்துடன் திரும்பி வந்தோம். தயவு செய்து யோசியுங்கள்" என்று தந்தி அடித்தார்கள்.

மேற்கூறிய எல்லாத் தந்திகளுக்கும் ஏறக்குறைய ஒரே விதமாகவே மகாத்மா காந்தி பதில் அனுப்பினார்.

"வட்டமேஜை மகாநாட்டுக்கு நான் நிபந்தனையின்றி வரத் தயார். ஆனால் என்னிடத்திலும் நிபந்தனை எதுவும் கேட்கக் கூடாது. சர்க்காரின் அதிகாரத் துஷ்பிரயோகம் நின்றால் இப்போது நடக்கும் தனிப்பட்ட சட்டமறுப்பு தானே நின்று போகும். வட்டமேஜை மகாநாட்டின் மூலம் காங்கிரஸ் கோரிக்கைகள் நிறைவேறினால் ஒத்துழையாமை இயக்கமும் நின்றுவிடும். மற்றப்படி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக இப்போது ஒப்புக்கொள்ள முடியாது. அப்படிக் கேட்பது நியாயமும் இல்லை."

மகாத்மாவின் இந்தப் பிடிவாதம் மிதவாதிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. லார்ட் ரெடிங்குக்கு அது பெரும் ஏமாற்றமாகவே இருந்திருக்க வேண்டும். ஏன்? தேசபந்துதாஸ் முதலிய சில காங்கிரஸ் தலைவர்கள் கூட மகாத்மாவின் மீது மனஸ்தாபப் பட்டார்கள். "நல்ல சந்தர்ப்பத்தைக் காந்திஜி கைநழுவ விட்டு விட்டார்" என்று சொன்னார்கள். இதிலிருந்து பிற்காலத்தில் பல அரசியல் விளைவுகள் முளைத்து எழுந்தன.
-----------------------------------------------------------

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

1135. பாரதி சுராஜ் -1

சுவை மிக்க கவிதைகள்: திருக்குறள் இரண்டு
பாரதி சுராஜ்

[ 2011-இல் என் நூல் வெளியீட்டு விழாவில் என் சோதரர்களுடன் பாரதி சுராஜ் ] 

இறைவனடி சேர்ந்த முதுபெரும் அறிஞர், கவிதைகளின் காதலர், பாரதி அன்பர்,  பாரதி கலைக்கழக நிறுவனர் பாரதி சுராஜ் ( சௌந்தரராஜன்) அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி. அவர் என்னிடம் காட்டிய அன்பும், என் ” கவிதை இயற்றிக் கலக்கு” நூலை வெளியிட அவர் காட்டிய உற்சாகமும் மறக்க முடியாதது.



இது ‘பாரதமணி’யில் 2015 -இல் அவர் எழுதிய ஒரு கட்டுரை.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:


பாரதி சுராஜ்

புதன், 8 ஆகஸ்ட், 2018

1134. சி.சு.செல்லப்பா - 4

"எழுத்து” சி.சு.செல்லப்பா - 3
வல்லிக்கண்ணன்

( தொடர்ச்சி )
7
பண விஷயத்தில் செல்லப்பா விசித்திரமான ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தார். அவருக்கு பணத்தேவை அதிகம் இருந்தது. வாழ்க்கை நடத்துவதற்கும், எழுத்துக்களை புத்தகங்களாக்கி வெளியிடவும் எப்பவும் அவருக்குப் பணம் தேவைப்பட்டது. இருப்பினும், நிறுவனங்களும் நல்மனம் கொண்டோரும் விரும்பி அளித்த பரிசுகளையும் பணத்தையும் அவர் பிடிவாதமாக மறுத்து வந்தார்.
அவருடைய வாழ்நாளில் வெவ்வேறு சமயங்களில் இப்படி பரிசுகள், அன்பளிப்புகள் அவரைத் தேடி வந்தன. எவர் தரினும் சரியே, அவற்றை நான்பெற்றுக்கொள்ள மாட்டேன்; இது என் கொள்கை என அவர் உறுதியாகத் தெரிவிப்பதை வழக்கமாக்கினார். கோவை ஈ.எஸ். தேவசிகாமணிதந்த முதுபெரும் எழுத்தாளருக்கான பாராட்டுப் பணம், சென்னை அக்னி அட்சரவிருது, சிந்து அறக்கட்டளை தமிழ்ப்பணி விருது, இலக்கியச் சிந்தனை தர முன்வந்த ஆதிலெட்சுமணன் நினைவுப் பரிசு... இப்படி பல.
ஒருசமயம், செல்லப்பாஉடல்நலம் இல்லாது சிரமப்படுவதை அறிந்த கோவை ஞானி அன்புடன் அவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினார். நான் எவரிடமும் அன்பளிப்புப் பெறுவதில்லை என்று எழுதி அதை நண்பருக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதையும் செல்லப்பா என்னிடம் சொன்னார். ஞானி ரொம்பகால நண்பர்தான்; ஆனாலும் என் கொள்கையை நான் விடுவதற்கில்லை என்றார்.
1999 மே மாதம் கோவையில் ஞானியைக் கண்டுபேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எங்கள் நண்பரான செல்லப்பாவின் மரணம் குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். அதை அவர் திருப்பி அனுப்பிவிட்டார்.
‘என்னிடம் செல்லப்பா சொன்னார். நீங்கள் பணம் அனுப்பியதையும் சொன்னார். அதை அவர் திருப்பி அனுப்பி விட்டதையும் சொன்னார். என்ன பண்ணுவது! நான் என் கொள்கைப்படி நடந்து கொண்டேன் என்றும் சொன்னார்.”
‘என் விஷயத்திலும் அவர் அப்படி நடந்து கொள்வார் என்று நான் எண்ணியதில்லை. என்மனசுக்கு கஷ்டமாக இருந்தது என்றார் ஞானி.
அன்பளிப்புகள் விஷயத்தில் மற்றவர்கள் மனஉணர்வுகள் பற்றி செல்லப்பா கவலைப்பட்டதில்லை. அவர் தனது உள்மனசின் குரலுக்கே செவிசாய்த்தார். அதன்படி செயல் புரிந்தார்.
அமெரிக்காவின் குத்து விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு முதல்முறையாக அறிவிக்கப்பட்டு செல்லப்பாவுக்கு வழங்கப் பெற்ற போதும், அவர் அதை ஏற்க மறுத்தார். ஆனால் நண்பர்கள் பணத்தைப்பெற்று அவருடைய எழுத்துக்களை புத்கமாக வெளியிட உபயோகிக்கலாமே என்று வலியுறுத்தினார்கள். நீங்களே அதைச் செய்யுங்கள் என்று செல்லப்பாகூறிவிட்டார். நாடக வெளி’ ரெங்கராஜன் பொறுப்பேற்று, செயல்புரிந்து செல்லப்பாவின் என் சிறுகதைப் பாணி என்ற நூலை வெளிக் கொணர்ந்தார்.
8
அவரது 75-85 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் சி.சு. செல்லப்பா புரிந்துள்ள சாதனைகள் பெரிது- பெரிது என வியக்கச் செய்வனவாகும்.
‘என் சிறுகதைப் பாணி’, ‘பிச்சமூர்த்தியின் கவித்துவம் ‘ஊதுவத்திப் புல் (ந.பி. கவிதைகள் பற்றியது), எழுத்து களம்: ‘எழுத்து பத்திரிகை அனுபவங்கள்), பி.எஸ். ராமையாவின் கதைக் களம் இப்படி அநேகம் எழுத்துப் பிரதிகளை உருவாக்கினார். ஒவ்வொன்றும் 800 பக்கங்கள், ஆயிரம் பக்கங்கள் என்று வரும். ஒவ்வொன்றும் தனித்தனி சாதனை தான்.
இவற்றில் முதல் மூன்றும் புத்தகங்களாக வந்து விட்டன. ராமையாவின் சிறுகதைக்களம்’ நூலை செல்லப்பா தனது இறுதி நாட்களில் சிரமப்பட்டு புத்தகமாக கொண்டு வந்தார். அவர் கடைகியாகப் பிரசுரித்த நூல் அதுதான்.
இவற்றை எல்லாம் விட முக்கியமானது - மகத்தான சாதனை என்று குறிப்பிட வேண்டியது - தனது விடுதலைப் போராட்ட கால அனுபவங்களை அடிப்படையாக்கி செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம்’ எனும் இரண்டாயிரம் பக்க நாவல் ஆகும்.
அதைத் தனது தள்ளாத வயதிலும் எழுதி முடித்தது ஒரு பெரும் சாதனை. பெரும் சிரமங்களுக்கிடையிலும் அதை மூன்று பாக நூலாக அச்சிட்டு வெளியிட்டது உண்மையிலேயே மாபெரும் சாதனைதான்.
செல்லப்பா இலக்கியத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார் என்று சொல்லலாம். எப்போதும், எவரிடமும் அவர் இலக்கிய விஷயங்கள் பற்றியே பேசினார். தமிழில் இதுவரை செய்யபட்டிருப்பவை போதாது; இன்னும் அதிகம் செய்யப்படவேண்டும்; என்னஎன்ன செய்யலாம், அவற்றை எப்படிச் செய்யவேண்டும் என்று அவர்கதா சிந்தித்து வந்தார். அவற்றை நண்பர்களிடம் ஆர்வத்தோடு எடுததுச்சொல்வதில் உற்சாகம் கண்டார். -
தமிழில் விமர்சனம் வளரவேண்டும் என்பதற்காகவே செல்லப்பா எழுத்து பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அது நின்றுவிட்ட பிறகு, சில வருடங்கள் கழித்து, இலக்கிய விஷயங்களை விளக்குவதற்காகவே பார்வை (Perspective) என்ற இதழைத் தொடங்கினார். இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டிருந்த அதுஅவர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மூன்று இதழ்களுடன் நின்று விட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், ‘கவை’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். அதுவும் மூன்று இதழ்களுக்கு மேல் வளரவில்லை.
செல்லப்பா ஆய்வுமுறை விமர்சனத்தை (Analytical Criticism) கைக் கொண்டிருந்தார். ஆயினும் சிலரது படைப்புகளை அவர் அப்படி ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வில்லை என்றே சொல்லவேண்டும்.
அவர் பிடிவாதமாகச் சில கருத்துக்ளைக் கொண்டிருந்தார். அவற்றை அவர் மாற்றிக்கொண்டதே யில்லை. மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்குப் பிறகு சிறந்த சிறுகதைப் படைப்பாளிகள் தமிழில் தோன்றவேயில்லை என்பது அவற்றில் ஒன்று. ‘எழுத்துக்குப் பிறகு விமர்சனம் கவனிக்கப்படவில்லை என்றும் அவர் கருதினார்.
அனைத்தினும்மேலாக, பி.எஸ். ராமையா சிறுகதைகள் பற்றி அவர்மிக உயர்ந்த கருத்துகொண்டிருந்தார். ‘படைப்புக் களத்தில் ராமையாஸ்தானம் தான் முதல். வேர்ல்ட் ஃபிகர் அவர். அவ்வளவு வைரைட்டி. தீம்ஸ். யாராலும் கன்சீவ் பண்ணமுடியாது. ஐரணிக்கு அவர் தான் ராஜா. உலகத்திலேயே’ என்று ஓங்கி அடித்துச் சொல்லி வந்தார்.
பி.எஸ். ராமையா கதைகளைப் பற்றி வேறு விதமான கருத்து தெரிவித்தவர்களை விரோதிகளாக மதித்தார் அவர்,
‘ராமையாகதைகள் பற்றி நீங்கள் இப்படி உயர்வாகப் பேசுவது உங்களுடைய வத்தலக்குண்டு ஊர் அபிமானத்தினால் தான்’ என்று சி. கனகசபாபதி ஒரு சமயம் செல்லப்பாவிடம் சொல்லிவிட்டார்.
செல்லப்பாவுக்கு கோபம்வந்தது. கனகசபாபதியுடன் மேலும் பேச விரும்பாமல் அவரைவிட்டு வேகமாக நடந்து போய்விட்டார்.
இப்படிஅவர்கள் பேசிக்கொண்டது ஒரு ஒட்டல் வாசலில் சி.க. ஒட்டலைவிட்டு வெளியே வரக்காத்து நிற்க வில்லை செல்லப்பா.
கனகசபாபதி பின்னர்வந்து பேசமுயன்றபோதும், செல்லப்பா அவருடன் பேச மறுத்துவிட்டார். ராமையா சிறுகதைகள் பற்றி தரக்குறைவாகப் பேசுகிற ஒருவரோடு எனக்கு நட்பு தேவையில்லை’ என்று உறுதியாகத் தெரிவித்தார் அவர்.
சி. கனகசபாபதி எழுத்துவில் புதுக்கவிதைகளில் தேர்ந்து எடுத்து புதுக்குரல் தொகுப்பாக உருவாவதற்கும், அது மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகத் தேர்வாகி இடம்பெறுவதற்கும் காரணமாக இருந்தவர். எழுத்துவில் அரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர். செல்லப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். ஆயினும், ராமையாவின் எழுத்து பற்றி அவர் மாறுபட்ட கருத்து கொண்டிருந்ததை செல்லப்பாவால் மன்னிக்கமுடியவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சி. கனகசபாபதியுடன் செல்லப்பா நட்புறவு கொள்ளவேயில்லை.
இதைப்போலவே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை திருப்பூர் கிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார். அவருடைய அனுபவம் இது -
‘அன்று பி.எஸ். ராமையாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ராமையாவைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகமெல்லாம் பளபளவென ஜொலிக்கும். ராமையாவிடம் அவர்கொண்டிருந்த அன்பு மட்டுமல்ல, ராமையாவின் இலக்கியத்தின் மேல் அவர் வைத்திருந்த மதிப்பும் கூட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
ராமையா படைப்புகள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் புத்தகமாக வெளியிட வேண்டும் என்றார் என்னிடம். ராமையா உன்னதமான எழுத்தாளர் என்பதையும், ஆகச் சிறந்த படைப்புகள் பலவற்றையும் எழுதியிருக்கிறார் என்பதையும் நான்மறுக்கவில்லை. ஆனால் குங்குமப் பொட்டுக்குமாரசாமி என்றெல்லாம் அவர் எழுதிய படைப்புகள் சாதாரணமானவை. அவரின் பொருளாதாரத் தேவைக்காக அவர் எழுதிக் குவித்தவை. அவற்றை நீக்கிவிட்டு, காலத்தை வென்று நிற்கும் மற்ற ராமையா படைப்புகளை செல்லப்பாவே தேர்வு செய்துதொகுக்க வேண்டும் என்பது என் வாதம்.
 திடீரென்று செல்லப்பா சுவரைப்பார்க்கத் திரும்பி உட்கார்ந்து கொண்டுவிட்டார். அறையில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தோம். இப்போது மூன்று பேர் ஆகிவிட்டோம். நான், அவர், சுவர் :
  ‘ஏன் சுவரைப் பார்த்து உட்கார்ந்து விட்டீர்கள்?”
‘ஏ சுவரே வந்திருக்கும் இந்த ஆளுடன் பேசுவதை விட, எனக்கு உன்னுடன் பேசுவது திருப்தியாக இருக்கிறது.
ஆமாம். ஏனென்றால் சுவருக்கு அபிப்பிராயங்கள் கிடையதால்லவா!’
‘ராமையாவை விமர்சிக்கும் நபருடன் எனக்கு பேச்சு வார்த்தை கிடையாது.”
‘நாம் ஒர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். பி.எஸ். ராமையாவை விட்டு விட்டு மற்றவற்றைப்பற்றி மட்டும் இனிமேல் பேசுவோம்.”
சரி என்று சொல்லிவிட்டு மறுபடி என்பக்கமாகக் திரும்பி உட்கார்ந்து கொண்டார். என் உதட்டோரத்தில் சிரிப்பு ஒளிந்து கொண்டிருந்ததை அவர் கவனித்திருக்க வேண்டும். என்னடா பண்ணுவேன். உன்னோட பேசாம என்னால் இருக்கமுடியாதேடா என்றார்.
என் மனம் நெகிழ்ந்தது.”
('பாரதமணி செப்டம்பர் 2001) 
அவர் ராஜமய்யரது நூற்றாண்டு விழாவை அவ்வூரில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தார். நடத்திக்காட்டினார். அய்யர் எழுதிய ரேம்பிள்ஸ் இன் வேதாந்தா என்ற ஆங்கில நூலை உயர்ந்த பதிப்பாக வெளியிட்டு மகிழ்ந்தார்.
அதே போல ராமையாவின் பெருமையையும் வத்தலக்குண்டுக்காரர்கள் அறியவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். சென்னையிலேயே வசித்த செல்லப்பா ஒரு கால கட்டத்தில், இனி வத்தலக்குண்டில் வசிப்பது என்று தீர்மானித்து, மனைவியுடன் அவ்வூர் போய்ச்சேர்ந்தார். சில வருடங்கள் அங்கு அமைதியாகவாழ்ந்தார். பிறகு மீண்டும் சென்னையிலேயே வசிப்பது என்று வந்து சேர்ந்தார்.
 அந்த ஊரில் இலக்கியச் சூழ்நிலையே இல்லை. அங்கே இருப்பவர்களுக்கு இலக்கிய உணர்வும் ரசனையும் கொஞ்சம் கூட இல்லை. என்னால் இயன்ற அளவு முயன்றேன். அவர்கள் விழிப்படைவதாகத் தெரியவில்லை. ராமையாவின் மதிப்பைத் தெரிந்துகொள்ளவே மறுக்கிறார்கள். சின்ன வயசில் ராமையா அவர்களிடையே வளர்ந்து, வறுமையில் கஷ்டப்பட்டது இதுகளையே பெரிதாகச்சொல்லி, ராமையாவை இளப்பமாகக் கருதிப் பேசுகிறார்கள். அவர்களோடு இருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. சென்னைக்கே வந்துவிட்டேன் என்று அவர் சொன்னார்.
சில வருட சென்னை வாசத்துக்குப் பின்னர் அவர் மனைவியுடன் மதுரை சேர்ந்து மகனுடன் வசிக்கலானார். அவருடைய முதுமை, அவரைப் படுத்திய நோய்கள், இவற்றால் அம்மாவும் அப்பாவும் படுகிற சிரமங்களை கவனித்து அவர்களின் ஒரேமகன் சி. மணி இருவரையும் தன்னுடன்வந்து தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டேதே காரணம். மணி பேங்கில் பணிபுரிகிறார்.
அவருக்கு உத்தியோக நிமித்தமாக பெங்களூருக்கு இடமாறுதல் ஏற்பட்டது. அவர் குடும்பத்தோடு செல்லப்பாவும் பெங்களுர் சென்றார். தமிழ்நாட்டை விட்டுப்போய் வேற்றுமாநிலத்தில் வாழ வேண்டியிருக்கிறதே என்ற மனக்குறை செல்லப்பாவுக்கு இருந்தது.
எனினும், வாய்த்த தனிமையை செல்லப்பா நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவர் எழுத எண்ணியிருந்த பலவற்றையும் எழுதி முடித்தார். முக்கியமாக, அரைவாசி எழுதிக் கிடப்பில் போட்டிருந்த சுதந்திரதாகம்’ நாவலை எழுதி நிறைவு செய்ய முடிந்தது அவரால்.
இருப்பினும், அந்த சூழ்நிலை அவருக்கு ஒத்துப்போகவில்லை. குடும்பத்தில் சகஜமாக எழக்கூடிய சிறு சிறு பிணக்குகள் அவர் உள்ளத்தை பாதித்தன. அதனால் மகனோடு சண்டை பிடித்துக்கொண்டு அவர் மீண்டும் தனி வாழ்க்கை நடத்த சென்னைக்கே வந்து சேர்ந்தார்.
சென்னையில், அதுவும் திருவல்லிகேணிப்பகுதியில் வசிக்கையில் கிடைக்கிற சூழலும் மனநிம்மதியும் மற்றஇடங்களில் எனக்குக்கிடைக்கவில்லை. இனி சாகிற வரை இங்கேதான் என்று சொன்னார் செல்லப்பா.
அவ்வாறே நிகழ்ந்தது. 1998 டிசம்பர் 18ஆம் நாளன்று, திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் முதல் தெருவில் அவர்வசித்த வீடடில் செல்லப்பாவை மரணம் தழுவியது.
9
மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு கிராமத்தில், 1912 செப்டம்பர் 29ஆம் நாள் பிறந்தார் செல்லப்பா. -
அவரது தந்தை பெயர்கப்பிரமணிய அய்யர். ஊர்சின்னமனூர். ஆகவே சி.சு. என்பதைத் தனது பெயரின் முதல் எழுத்துகளாகக் கொண்டார்.
வெகுகாலம் வரைஅவர் சி.எஸ். செல்லப்பாஎன்றே பெயரை எழுதி வந்தார். பாரததேவி மாத இதழில், கு.ப. ராஜகோபாலுடன் அவர்பணியாற்றியபோது, பத்திரிகை ஆசிரியர் வ.ரா. பெயரை தமிழில் எழுதவேண்டும் என்று குறிப்பிடவும், சி.சு. செல்லப்பா என்று எழுதலானார்.
மதுரைகல்லூரியில் செல்லப்பா பி.ஏ. படித்தார். அப்போதே, மகாத்மா காந்தியின் வழிகாட்டலினால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டார். சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுசிறை சென்றார். விடுதலை பெற்று வெளியே வந்தபிறகு, காந்திய வாழ்க்கைமுறைகளைக் கடைப்பிடித்து எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். கைராட்டையில் நூல்நூற்றல், கையால் செய்யும் காகிதம் தயாரித்தல், போன்றவற்றில் அவர்உற்சாகம் கொண்டு ஊக்கத்துடன் செயல்பட்டார். அப்போதே எழுத்து முயற்சியிலும் முனைத்திருந்தார்.
1930களில் புகழ் பெற்று விளங்கிய “சுதந்திரச்சங்கு” வாரப்பத்திரிகையில் சி.சு.செல்லப்பாவின் முதல் கதை வெளிவந்தது. 1934ம் ஆண்டில். அது முதல் அவர் ஆர்வத்தோடு சிறுகதைகள் எழுதலானார். ‘மணிக்கொடி இதழில் அவருடைய கதைகள் தொடர்ந்து இடம் பெற்றன. கலைமகள், பாரததேவி, தினமணி, சத்திரோதயம் முதலிய பத்திரிகைகளில், தனித்தன்மை உடைய சிறுகதைகளை அவர் எழுதினார். அதன்மூலம் இலக்கிய ரசிகர்களின் கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றார்.
‘மணிக்கொடி நடந்துகொண்டிருந்த காலத்தில் (1930 களில்) சி.சு. செல்லப்பா சென்னைக்கு வந்து பத்திரிகைத் துறையில் பணிபுரியலானார். ‘மணிக்கொடி"க்குப்பிறகு, ‘பாரததேவி மாத இதழில் வேலை பார்த்தார். 1947 முதல் 1953வரை ‘தினமணி’ நாளிதழில் சஞ்சிகைப்பகுதியின் பொறுப்பேற்று செயல்புரிந்தார். ‘தினமணி சுடர் தினமணி கதிர் என்று பெயர் மாறுவதற்கும் அவரே காரணமாக இருந்தார். கருத்து வேற்றுமையால் அவர் தினமணியிலிருந்து வெளியேறினார்.
1959ல் இலக்கிய விமர்சனத்துக்காகவும், புதிய சோதனை முயற்சிகளைப் பரப்பவும் அவர் எழுத்து என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். புதுக்கவிதை வளர்ச்சி பெறுவதற்கு எழுத்து’ வெகுவாக உதவியது.
சி.சு. செல்லப்பா நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவற்றை,பிற்காலத்தில் அவரே தொகுத்து எழுத்து பிரசுரம் வெளியீடுகளாகப் பதிப்பித்தார். செல்லப்பா சிறுகதைகள் என்று ஏழு தொகுதிகள் வந்தன. அவை தவிர, சிறு சிறு புத்தகங்களாக கைதியின் கர்வம், செய்த கணக்கு, பந்தயம், ஒரு பழம், நீர்க்குமிழி, பழக்கவாசனை ஆகியனவும் வெளியிடப்பட்டன.
தனது சிறுகதைகள் பற்றி, என்சிறுகதைப் பாணி என்ற பெரிய நூலை சி.சு. செல்லப்பா எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ஆங்கிலத்திலிருந்து சிறந்த சிறுகதைகள் பலவற்றையும் அவர்தமிழாக்கி பத்திரிகைகளில் பிரசுரம் செய்தார். எழுத்து’ காலத்தில் செல்லப்பா கவிதைகள் எழுதுவதில் ஈடுபட்டார். ‘மாற்று இதயம் என்ற நீண்ட கவிதையும், மகாத்மா காந்தி பற்றிய நீ இன்று இருந்தால் குறுங்காவியமும் நூல்களாக வந்துள்ளன.
காற்று உள்ளபோதே, ஏரிக்கரை, குறித்த நேரத்தில், எல்லாம் தெரியும் ஆகியவை அவருடைய கட்டுரைத் தொகுப்புகள், இவற்றுடன், தமிழில் சிறுகதை பிறக்கிறது. தமிழ் சிறுகதை முன்னோடிகள், இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம், ந.பிச்சமூர்த்தியின்கவிதைகள் பற்றி ஊதுவத்திப்புல் மாயத்தச்சன், எனது சிறுகதைப் பாணி, பி.எஸ். ராமையாவின் கதைக்களம் ஆகிய விமர்சன நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
செல்லப்பா நாடகத்திலும்ஆர்வம் காட்டினார். எழுத்து நாடக அரங்கம்’ என்ற பெயரில் ஒன்றிரு நாடகங்கள் அரங்கேற்றம் செய்தார். அப்போது, மதுரைமாவட்ட மறவர்வாழ்க்கையை அடிப்படையாக்கி முறைப்பெண் என்ற நாடகத்தை எழுதி, நூலாக வெளியிட்டார்.
 ஜல்லிக்கட்டுவை ஆதாரமாகக்கொண்ட வாடிவாசல் எனும் குறுநாவல் தனிப்புத்தகமாக வந்துள்ளது. எழுத்து'வில் சோதனை ரீதியில் அவர்எழுதிய ஜீவனாம்சம் நாவலும் பிரசுரமாயிற்று. அவருடைய இறுதி நாட்களில் சுதந்திர தாகம்’ என்கிற மாபெரும் நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்தது.
இவை எல்லாம் தமிழ் வாசகர்களிடையே உரிய கவனத்தைப் பெறவில்லை. அது செல்லப்பாவின் குறை அன்று.
சி.சு. செல்லப்பா சதா பேச்சிலும் செயலிலும் இலக்கிய உணர்வுடனேயே வாழ்ந்தார். வாழ்க்கையில் முன்னேற விரும்பிச் செயலாற்றுகிற பலரைப் போல, எழுத்து வேறு, வாழ்க்கை வேறு என்று அவர் நடந்து கொண்டதில்லை. அதனால் வறுமை நிலையை விரும்பி ஏற்றுக்கொண்டார். எச்சமயத்திலும் அவர் மனஉறுதி யோடும் பிடிவாதத்துடனும் நேர்மையுடனும் வாழ்ந்து காட்டினார். ஒரு போதும் அவர் நம்பிக்கை இழந்ததில்லை. கடுமையாக உழைப்பதில் அவர் உற்சாகம் கொண்டிருந்தார். உயர்ந்த எண்ணங்களும் எளிய வாழ்க்கை முறைகளும்கொண்டு வாழந்து, மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும், தனிமாண்பும் சேர்க்கும் உயர்ந்த மனிதர்களில் சி.சு. செல்லப்பாவும் ஒருவர்.
‘நான் தேர்ந்து கொண்ட கொள்கைகளிலிருந்து வழுவாமல், கடைசிவரை, நேர்மையாக வாழ்ந்து விட்டேன். இந்த திருப்தி எனக்கு இருக்கிறது என்று செல்லப்பா தனது இறுதிக்கட்டத்தில் என்னிடம் சொன்னார்.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவர் எழுதி வைத்துள்ள ‘எழுத்துக்களம் விமர்சனத் தோட்டம்'ஆகிய நூல்கள் அச்சுவடிவம் பெறவில்லையே என்ற மனக்குறை செல்லப்பாவுக்கு இருந்தது.
ஆயினும், அவர் செய்து முடித்துள்ள இலக்கிய சாதனைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சி.க. செல்லப்பாவுக்கு சிறப்பானதனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பதில்சந்தேகம் இல்லை.
( நிறைவுற்றது )
தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

1133. பாடலும் படமும் - 41

இராமாயணம் - 13
யுத்த காண்டம், முதற்போர்புரி படலம்


[ ஓவியம்: கோபுலு ]

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

[ஆள்  ஐயா-  அரக்கரை  ஆள்கின்ற  ஐயா; 
உனக்கு அமைந்தன - உனக்குத்  துணையாக அமைந்திருந்த படைகள்
அனைத்தும்; 
மாருதம் அறைந்த  பூளை ஆயின கண்டனை-  பெருங்காற்றினால்  தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து  போயினமையைக் கண்டாய்;  
இன்று போய் நாளை போர்க்கு வா- இன்று உன் இலங்கையரண்மனைக்குச் சென்று, (மேலும்    போர்புரிய  விரும்பினால்)   போர்க்கு   நாளைக்கு வருவாயாக; 
என- என்று; 
நல்கினன் -(இராவணனுக்கு) அருள் புரிந்து   விடுத்தான்;  (யார்  என்னில்) நாகு இளங்கமுகின் - மிகவும் இளைய கமுக மரத்தின்மீது; 
வாளை தாவுறும் கோசல நாடுடை  வள்ளல் - வாளை  மீன்கள்  தாவிப் பாயும் (நிலம், நீர்வளம்  மிக்க)   கோசல   நாட்டுக்கு  உரிய  வள்ளலாகிய
இராமபிரான்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 4 ஆகஸ்ட், 2018

1132. காந்தி -38

32. மாளவியா மத்தியஸ்தம்.
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி 2) என்ற நூலில் வந்த 32-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===


காந்தி மகாத்மா இந்தியாவின் அரசியல் தலைமை ஏற்றதிலிருந்து மிதவாதிகளின் மனதில் நிம்மதி யில்லாமற் போய்விட்டது. பெஸண்ட் அம்மையாரும் மிதவாதிகளுடன் சேர்ந்துகொண்டார். மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் மிகப் பெரும் தவறான இயக்கம் என்று அவர்கள் கருதினார்கள்.

ஆரம்பத்தில் மிதவாதிகள் ஒத்துழையாமை இயக்கம் நாட்டில் செல்வாக்குப் பெறாமல் புசுபுசுத்துப் போய்விடும் என்று நினைத்தார்கள். மூன்று வகைப் பகிஷ்காரம் எதிர் பார்த்த அளவு வெற்றியடையாதது குறித்து ஓரளவு மகிழ்ச்சியுடன் அலட்சியமாய்ப் பேசினார்கள். ஆனால் 1921-ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அந்த இயக்கம் பொது ஜனங்களிடையில் அடைந்து வந்த செல்வாக்கு மிதவாதிகளைத் திகைப்படையச் செய்தது. நாளுக்கு நாள் ஒத்துழையாமை இயக்கம் பலம் பெற்று வருவதை எழுத்துக்களும் பாமர ஜனங்களின் மனதில் கிளர்ச்சி எழுப்பி வந்ததையும் அவர்கள் நல்லதென்று நினைக்கவில்லை. ஆயினும், இதனாலெல்லாம் என்ன நடந்து விடப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நவம்பர் கடைசியிலும் டிசம்பர் ஆரம்பத்திலும் நாட்டில் நிகழ்ந்த சம்பவங்கள் மிதவாதிகளைத் திக்கு முக்காடும் படி செய்துவிட்டன.

வேல்ஸ் இளவரசர் விஜயத்தைப் பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்தது மற்றொரு பெருந்தவறு என்று மிதவாதிகள் கருதினார்கள். அந்தப் பகிஷ்காரம் ஒருநாளும் காரியத்தில் நிறைவேறாது என்றும் சொல்லி வந்தார்கள். ஆனால் வேல்ஸ் இளவரசர்போன இடமெல்லாம் பொதுமக்கள் பூரண பகிஷ்காரத்தைக் கைக்கொண்டது மிதவாதிகளைக் கொஞ்சம் விழிப்படையச் செய்தது. "ஓகோ! ஜனங்களின் உணர்ச்சி இப்படி இருக்கிறதா? மகாத்மாவின் செல்வாக்கு இவ்வளவு பெருகியிருக்கிறதா!" என்று அதிசயித்தார்கள்.

பின்னர் அதிகார வர்க்கத்தார் கையாண்ட தீவிர அடக்குமுறைகள் மிதவாதிகளை வேறொரு வகைக் கலக்கத்துக்கு உள்ளாக்கின . அடக்குமுறைகளினால் மக்களின் எழுச்சியை அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தோன்றியது. மேலும் பண்டித மோதிலால் நேரு முதலிய பிரமுகர்கள் சிறைப்படுத்தப் படுவதைப் பார்த்துக்கொண்டு அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. பலர் உண்மையிலேயே வேதனை அடைந்தார்கள். வேறு சிலருக்கு "இப்போது நாம் இந்த அடக்கு முறைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா யிருந்துவிட்டோமானால் நாளைக்கு எப்படிப் பொதுமக்களின் முன்னால் நம்மடைய முகத்தைக் காட்டமுடியும்!" என்ற கவலை உண்டாயிற்று.

ஆகக்கூடி, மிதவாதிகள் தீவிரமாக யோசனை செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டில் அப்போது ஏற்பட்டிருந்த நிலைமையில் தாங்கள் தலையிட்டு ஏதேனும் செய்யவேண்டும் என்று கருதினார்கள். ஆகவே, "நாங்கள் ராஜி செய்து வைக்கிறோம்" என்று முன்வந்தார்கள். "இரண்டு தரப்பிலும் சிற்சில பிசகுகள் நடந்திருக்கின்றன. போனதெல்லாம் போகட்டும். அவற்றை மறந்துவிடுவோம். எல்லோருமாகச் சேர்ந்து உட்கார்ந்து வட்டமேஜை மகாநாடு யடத்துவோம் ஒரு சமரசமான முடிவுக்கு வருவோம்!" என்றார்கள்.

அதாவது தேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் மகா தியாகங்களினால் ஏற்பட்டிருந்த நிலைமையில், தாங்கள் அடியோடு இழந்து விட்டிருந்த செல்வாக்கை மீண்டும் ஒருவாறு நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று பார்த்தார்கள். மிதவாதப் பத்திரிகைகள் முதலில் எழுதத் தொடங்கின:- "இரண்டு தரப்பிலும் விட்டுக்கொடுத்து சமரசமாகப் போக வேண்டும். இல்லாவிட்டால், தேசம் குட்டிச்சுவராகப் போய் விடும்" என்று.

பிறகு மிதவாதச் சங்கங்கள் அதே கருத்துடைய தீர்மானங்கள் செய்தன. இந்திய சட்டசபையில் அங்கத்தினராயிருந்த மிதவாதக் கட்சியினர் சிலர் "காங்கிரஸுக்கும் சர்க்காருக்கும் சமரசம் ஏற்படுவது மிக அவசியம்" என்று வற்புறுத்தி ஓர் அறிக்கை விட்டார்கள்.

ஆனால் இதெல்லாம் போதாது என்று மிதவாதிகள் கண்டார்கள். 'கழுவுக்கேற்ற கோமுட்டி' யாக யாராவது ஒருவரைப் பிடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள். அவ்விதம் பண்டித மதனமோகன மாளவியாவைப் பிடித்தார்கள். பண்டித மாளவியா அச்சமயத்தில் ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒரு காலுமாக இருந்தார். காந்திஜியிடத்தில் அவருக்கு அன்பும் மதிப்பும் உண்டு. அவருடைய தேச பக்தி தீவிரமானது. அவர் மிதவாதக் கட்சியில் சேர்ந்தவர் அல்ல; காங்கிரஸிலேயே ஒட்டிக்கொண்டிருந்தவர். ஆனால் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. முக்கியமாக, கலாசாலைப் பகிஷ்காரத்தை அவர் ஆட்சேபித்தார். பல கோடி ரூபாய்கள் நன்கொடைகள் வசூல் செய்து பண்டித மாளவியா காசி சர்வகலாசாலையை ஏற்படுத்தியிருந்தார். மகாத்மாவே அந்தச் சர்வகலாசாலைக்குச் சர்க்காருடன் இருந்த தொடர்பை ரத்து செய்துவிட்டுப் பூரண தேசீய சர்வகலாசாலை ஆக்கிவிடவேண்டும் என்று சொன்னார். இதற்கப் பண்டித மாளவியா இணங்கவில்லை.

மற்ற மிதவாதத் தலைவர்களின் உள்ளங்களைக் காட்டிலும் மாளவியாவின் உள்ளம் சர்க்காரின் அடக்குமுறையினால் அதிகம் கலங்கிக் கொந்தளித்தது. ஆகையால் எப்படியாவது ஒரு சமரசம் ஏற்பட்டுவிட்டால் அவருக்கு அதில் ரொம்ப சந்தோஷம் உண்டாகும். இதை அறிந்த மிதவாதிகள் பண்டித மாளவியாவைத் தங்களுடைய கருவியாக்கிக்கொள்ளத் தீர்மானித்தார்கள்.

ஸ்ரீ ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் பம்பாய் நகரைச் சேர்ந்தவர். டாக்டர் பெஸண்ட் அம்மையின் சிஷ்யர். பண்டித ஹிருதயநாத் குன்ஸ்ரூ ஐக்ய மாகாணவாசி; அப்போதும் இப்போதும் மிதவாதி. (இன்றைக்கு அவர் ஸ்ரீ கோகலே ஆரம்பித்த இந்திய ஊழியர் சங்கத்தின் தலைவர்.) இவர்கள் இருவரும் பண்டித மாளவியாவைப் பார்த்துப் பேசினார்கள். மகாத்மாவுக்கும் சர்க்காருக்கும் சமரசம் உண்டு பண்ணிவைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

ஏற்கனவே இன்னொரு நண்பர் பண்டித மாளவியாவிடம் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார். (மாளவியா பிறகு விடுத்த அறிக்கையில் 'ஒருநண்பர்' என்று குறிப்பிட்டருக்கிறார். இவ்விதம் அவர் குறிப்பிட்டிருப்பது அச்சமயம் வைஸ்ராய் நிர்வாக சபையில் அங்கத்தினராயிருந்த ஸர் தேஜ்பகதூர் சப்ரூவாக இருக்கலாம் என்பது சிலருடைய ஊகம். நேரு, ஸப்ரூ, மாளவியா மூவரும் அலகாபாத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் என்பது ஞாபகம் இருக்கவேண்டும்.)

வேல்ஸ் இளவரசர் காசி ஹிந்து சர்வகலாசாலைக்கு டிசம்பர்- 14 விஜயம் செய்தார். அதே சமயத்தில் லார்ட் ரெடிங்கும் வந்திருந்தார். லார்ட் ரெடிங்குடன் மாளவியா பேட்டி கண்டு பேசினார். அதன்பேரில் அவருக்குச் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. சர்க்காருக்கும் காங்கிரஸுக்கும் ராஜி செய்து வைக்கத் தாம் ஒரு முயற்சி செய்யவேண்டியதுதான் என்று தீர்மானித்தார். உடனே அலகபாத்துக்க வந்து சில நண்பர்களிடம் கலந்து பேசிவிட்டு மகாத்மாவுக்கு ஒரு தந்தி கொடுத்தார். அந்தப் பிரசித்திபெற்ற தந்தியின் விவரம் வருமாறு:--

அலகாபாத்
16-12-21
வருகிற 21-யன்று வெஸ்ராயைப் பேட்டி கண்டு வட்டமேஜை மகா நாடு கூட்டும்படி வற்புறுத்தப் போகிறோம். ஏழு பேர் அடங்கிய பிரதிநிதிக் கூட்டமாக வைஸ்ராயைப் பார்ப்போம். இதை முன்னிட்டுக் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நிலைமையை நேரில் உங்களுக்கு விளக்கிச் சொல்வதற்காக ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும் அங்கே வருகிறார்கள். சர்க்கார் வட்டமேஜை கூட்ட ஒப்புக்கொண்டு தலைவர்களையும் விடுதலை செய்ய இணங்கினால் வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தை வாபஸ் வாங்கவும் சட்ட மறுப்பை நிறுத்தி வைக்கவும் உங்கள் சார்பில் நான் வாக்குறுதி கொடுப்பதற்கு அநுமதிவேண்டும். 21-வரையில் கல்கத்தா விலாசம் நெம்பர் 31, பர்தோலா தெரு.

மாளவியா.

இந்தத் தந்தி மகாத்மாவைத் தூக்கி வாரிப் போட்டது. தேசமெங்கும் சட்ட மறுப்பு இயக்கம் மகாத்மாவின் மனதுக்கு உகந்த முறையில் நடந்துகொண்டிருக்கும்போது இந்த ராஜிப் பேச்சு குறுக்கிடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. லார்ட் ரெடிங்கின் அந்தரங்க சுத்தியில் பல காரணங்களினால் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ராஜிப் பேச்சும் வட்டமேஜை மகா நாடும் அச்சமயத்தில் வெறும் ஏமாற்றமாக முடியும் என்று அவர் கருதினார். கல்கத்தாவுக்கு வேல்ஸ் இளவரசர் 24- வருவதாக இருந்தது. கல்கத்தா நகரம் ஒன்றிலாவது இளவரசர் பகிஷ்காரம் இல்லாமலிருந்தால் அதிகார வர்க்கத்துக்கு மிகவும் திருப்தியாயிருக்கும். அந்த விஜயம் சரிவர முடிந்த பிறகு லார்ட் ரெடிங் வட்டமேஜை மகாநாட்டில் "ஒன்றும் செய்ய முடியாது" என்று கையை விரித்துவிடக்கூடும் அல்லவா? அப்படித்தான் நடக்கும் என்று மகாத்மாவின் அந்தராத்மா அறிவுறுத்தியது. ஏனெனில், ரெடிங் சர்க்கார் உண்மையிலேயே மனம் மாறி சமரசத்துக்கு வரவேண்டிய அளவுக்குத் தேசத்தில் இயக்கம் இன்னும் பலம் பெறவில்லை என்று மகாத்மா கருதினார். அப்படிச் சர்க்கார் இறங்கி வருவதற்கு மேலும் தீவிர இயக்கம் நடத்தியாகவேண்டும். பொதுமக்கள் அதில் ஏராளமாகப் பங்கு எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.


ஆகவே அப்போதிருந்த நிலைமையில் சமரசப் பேச்சுத் தொடங்குவதற்கு மகாத்மா சிறிதும் இஷ்டப்படவில்லை. ஆயினும் பண்டித மாளவியாவின் தந்திக்கு உடனே பதில் அனுப்பாமல் ஜம்னாதாஸும் குன்ஸ்ரூவும் வரட்டும் என்று காத்திருந்தார்.

அவர்களும் வந்தார்கள். வந்து மகாத்மாவிடம் சமரஸ முயற்சியின் நோக்கம் என்னவென்பதைச் சொன்னார்கள். "நீங்கள் ஒரு பக்கம் பிடிவாதமாயிருக்கிறீர்கள்; சர்க்கார் இன்னொரு பக்கம் பிடிவாதமாயிருக்கிறார்கள். இரண்டு பக்கத்துப் பிடிவாதத்துக்குமிடையில் தேசம் குட்டிச்சுவராகப் போகிறது. அப்படி அடியோடு தேசம் குட்டிச்சுவராகாமல் தடுத்துக் காப்பாற்ற நாங்கள் இந்த ராஜி முயற்சி தொடங்கியிருக்கிறோம். அதற்காகக் கல்கத்தாவில் லார்ட் ரெடிங்கைப் பேட்டி காணப் போகிறோம். நீங்கள் உங்கள் பக்கத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதற்கு முன்வந்தால் லார்ட் ரெடிங்கும் விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துவோம்" என்று அவர்கள் சொன்னார்கள்.

"லார்டு ரெடிங் விட்டுக்கொடுக்க முன் வருவார் என்பதற்கு உங்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிகிறதா? அதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா?" என்று காந்திஜி கேட்டார். "ஆமாம்; இருக்கிறது. ஆனால் நீங்களும் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்றார்கள் சமரசத் தூதர்கள். "நான் எந்த விதத்திலே விட்டுக்கொடுக்கவேண்டும்?" என்று மகாத்மா காந்தி கேட்டார்.

"இப்போது தேசத்தில் நடக்கவேண்டும் சட்ட மறுப்பை நீங்கள் நிறுத்த வேண்டம். வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தையும் நிறுத்தவேண்டும். இந்த இரண்டையும் நீங்கள் செய்தால் சர்க்காரை அடக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்கச் செய்வோம். அதோடு அரசியல் பிரச்னையைத் தீர்த்து வைக்க வட்டமேஜை மகாநாட்டைக் கூட்டும்படியும் வற்புறுத்துவோம்" என்றார்கள்.

இதற்கு மகாத்மா சொன்னார்:-- "நீங்கள் சொல்லும் சமரச யோசனை அவ்வளவு நியாயமாகத் தோன்றவில்லையே? 'நீ அரிசி கொண்டுவா! நான் அவல் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்போம்' என்பதுபோல அல்லவா இருக்கிறது? சர்க்காரின் அடக்குமறைச் சட்டங்களினாலேதான் இப்போது நடக்கும் தனி நபர் சட்ட மறுப்பு நடந்து வருகிறது. 'தொண்டர் படை சேர்க்கக்கூடாது' 'பொதுக் கூட்டம் நடத்தக்கூடாது' என்பது போன்ற சட்டங்களைச் சர்க்கார் பிரயோகிக்காவிட்டால், இப்போது நடக்கும் சட்ட மறுப்பும் நடைபெறாது. ஆகவே 'சட்ட மறுப்பை நிறுத்தினால் அடக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்குகிறோம்' என்பதில் அர்த்தமில்லை. ஒத்துழையாமை இயக்கமும் நான் பர்தோலியில் ஆரம்பிக்கப்போகும் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கமும் வேறு விஷயங்கள். பஞ்சாப்-கிலாபத் அநீதிகளை நிவர்த்தித்துச் சுயராஜ்யம் தரவும் அரசாங்கத்தார் ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்த இயக்கங்களை நிறுத்தமுடியும். இல்லாவிட்டால் நடத்தியே தீரவேண்டும். வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தையும் நிறுத்த முடியாது. வேல்ஸ் இளவரசர் சொந்த முறையில் இங்கே வரவில்லை. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்துக்குப் பலம் கட்டுவதற்காகவே வருகிறார். ஆகவே தேசத்தின் கோரிக்கைகள் நிறைவேறினால் அன்றி வேல்ஸ் இளவரசர் பகிஷ்காரத்தை நிறுத்தமுடியாது!"

இவ்விதம் மகாத்மா சொன்னதைக் கேட்ட ஜம்னாதாஸூம் குன்ஸ்ரூவும் மேலும் தங்களுடைய வாத சக்தியையெல்லாம் உபயோகப்படுத்தினார்கள். கடைசியில் "நீங்கள் சமாதானப்பிரியர் என்று நினைத்தோமே? அதற்கு மாறாகப் பேசுகிறீர்களே? சமாதானப் பேச்சுப் பேசுவதினால் என்ன கெட்டுப் போய்விடும்?" என்றார்கள்.

"ஒன்றும் கெட்டுப்போகாது. நியாயமான சமாதானத்துக்கு நான் எப்போதும் தயார்" என்றார் மகாத்மா. "அப்படியானால் வட்டமேஜை மகாநாடு கூடுவதில் உங்களுக்கு ஆட்சேபம் என்ன?" என்று கேட்டார்கள். "ஒரு ஆட்சேபமும் இல்லை" என்று சொன்னார் மகாத்மா.

"கூடினால் நீங்களும் அதில் கலந்து கொள்வீர்கள் அல்லவா?"

"தனிப்பட்ட முறையில் பே ஷாகக் கலந்து கொள்வேன். ஒரு நிபந்தனையும் போடாமல் வட்டமேஜை மகாநாட்டுக்கு வர நான் தயார். அது போலவே என்னிடமும் நிபந்தனை எதுவும் கேட்கக் கூடாது" என்றார் மகாத்மா.

இந்தப் பதில் ஜம்னாதாஸூக்கும் குன்ஸ்ரூவுக்கும் மகிழ்ச்சி அளித்தது. "மகாத்மா வட்ட மேஜை மகாநாட்டுக்கு வரச் சம்மதித்து விட்டார். வேறு என்ன வேண்டும்?" என்ற மனத் திருப்தியுடன் அவர்கள் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்றவுடனே காந்தி மகாத்மா பண்டித மாளவியாவின் கல்கத்தா விலாசத்துக்கு ஒரு தந்தி அடித்தார். அது வருமாறு:-

சபர்மதி
19-12-21
ஜம்னாதாஸையும் குன்ஸ்ரூவையும் பார்த்துப் பேசினேன். தயவு செய்து அடக்கு முறையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அரசாங்கத்தார் உண்மையிலேயே மன மாறுதல் பெற்று பஞ்சாப், கிலாபத், சுயராஜ்ய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கவலைகொண்டால் அல்லாமல் வட்டமேஜை மகாநாட்டினால் பயன் ஒன்றும் விளையாது.
காந்தி.
பண்டித மதன்மோகன் மாளவியாவிடம் மகாத்மாவுக்கு மிக்க மதிப்பு உண்டு; பக்தியும் உண்டு. மாளவியா தேச விடுதலைக்கு விரோதமாகப் பிரிட்டிஷாரோடு சேர்ந்து விடுவார் என்ற எண்ணம் மகாத்மாவுக்கு அணுவளவும் இல்லை. ஆனால் தேசமெங்கும் பெரிய பெரிய தலைவர்கள் - நேரு, தாஸ் போன்றவர்கள் - சிறை புகுந்ததினால் மாளவியாவின் மனம் கனிந்திருந்தது என்பது மகாத்மாவுக்குத் தெரிந்திருந்தது. "ஐயோ! இப்பேர்ப்பட்ட பிரமுகர்கள் எல்லாரும் சிறைக்குப் போகிறார்களே?" என்ற கவலையினால், மாளவியாஜி இந்த மத்தியஸ்த முயற்சியில் தலையிட்டிருக்கிறார் என்று காந்தி மகாத்மா நம்பினார்.

ஆனால் சத்தியாக்கிரஹ இயக்கத்தின் பெருமையே நேரு, தாஸ் போன்றவர்கள் சிறைக்குச் சென்றதுதான். அதனாலேயே சத்தியாக்கிரஹ இயக்கம் தேசத்தில் அளவிலாத பலம் பெற்று வந்தது. சிறைக்குச் சென்ற தலைவர்களும் தங்களுடைய தியாகத்தைக் குறித்து எல்லையற்ற பெருமிதத்தோடுதான் இருப்பார்கள். சிறைக் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் சலித்துவிட மாட்டார்கள். புடம்போட்ட தங்கத்தைப் போல் சிறைக் கஷ்டங்களினால் அவர்களுடைய ஆத்ம சக்தி மேலும் பிரகாசத்தை அடையும் - இத்தகைய கொள்கைகளில் நிலைபெற்ற காந்தி மகான் பண்டித மாளவியாவின் மனக்கவலையைத் தீர்க்கும் பொருட்டே "அடக்கு முறையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்று தந்தி கொடுத்தார்.

மகாத்மா காந்தி மாளவியாவுக்குத் தந்தி அடித்த அதே 19-ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து மகாத்மாவுக்கு இன்னொரு தந்தி வந்தது. அது சிறைக்குள்ளிருந்த தேசபந்து தாஸ், மௌலானா ஆஸாத் இருவரும் கையொப்பமிட்டு வந்தது. அந்தத் தந்தியில் கண்ட விஷயம் மகாத்மாவின் மனதை உண்மையாகவே திடுக்கிடச் செய்து விட்டது. தாஸ்-ஆஸாத் தந்தியில் கண்ட விஷயம் என்ன வென்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]