வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

துப்பறியும் சாம்பு - 6: ‘கோபுலு’வின் கைவண்ணத்தில் . . .

1. ஒரு வேலை போய் ஒரு வேலை வருகிறது!  




இதழியல் துறையில் ‘ஆனந்த விகடன்’ முத்தமிழின் பல   துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது  . சித்திரத் துறையிலும் அப்படியே. ‘காரிகேசர்’ முதல் ‘காமிக்ஸ்’ வரை என்று விகடன் சித்திரங்களைப் பற்றித் தனியாக ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். உதாரணமாக, தமிழ்ப் பத்திரிகை உலகில் வந்த முதல் படக்கதை  ”முத்து” எழுதிய  “ஜமீந்தார்  மகன்” என்கிறது விகடன் 'காலப்பெட்டகம்' நூல்; ஆனந்த விகடனில் தான்  அது  1956-இல் வெளியானது. படங்களை வரைந்தவர் “மாயா” என்ற “ ’இன்னொரு’ மகாதேவன்”. ( அப்போது “தேவன்” விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்தார்.) "முத்து” என்ற பெயரில் பல அருமையான சிறுவர் கதைகளை எழுதியவர் விகடன் உதவி ஆசிரியர்களில் ஒருவரான, “கோபு” கோபாலகிருஷ்ணன்.
[ ஓவியர் ‘மாயா’ ஒரு நேர்காணலில் , தான் ”பாலபாரதி” என்ற பத்திரிகையில்  ஓவியங்கள் வரைந்த “ வீர சிவாஜி” என்பதுதான் தமிழில் வந்த முதல் படக்கதை என்கிறார். ]

1957-இல் “தேவன்” மறைந்தபிறகு,  “தேவனி”ன் “துப்பறியும் சாம்பு” படக்கதை வடிவில் 58 ஏப்ரல் முதல் விகடனில் பவனி வந்தது.  கோபுலுவின் கைவண்ணத்தில் படக்கதை மின்னியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய தலைமுறையில் பலருக்கு “ராஜு” என்ற ஓவியர் தான் முதலில் “சாம்பு” வுக்கு உயிரூட்டியவர் என்றே தெரியாது! (அதாவது, என் ”சாம்பு” பதிவுகளையும், ராஜுவின் படங்களையும் பார்க்காதவர்கள்!:-)  “சாம்பு” என்றவுடனே அவர்களுக்குக் “கோபுலு”வின் படங்கள் தான் நினைவுக்கு வரும்!

எனக்குத் தெரிந்து “கோபுலு”வின் கைவண்ணத்தில் இந்தப் படக்கதை மீண்டும் ஒருமுறை ஒரு விகடன் பிரசுரத்தில் ஜொலித்தது. எந்த இதழில் தெரியுமா? 1997- முதல் 99- வரை  மாலைக் கதிரவனாய் ஒளிவிட்ட ( மாலையில் வெளியான)  “ விகடன் பேப்பர்” என்ற நாளேடு! ( ”சுஜாதாட்ஸ்”, “சுப்புடு தர்பார்” போன்ற  பிரபலமான பத்திகள்  வந்ததும் அதில்தான்!)

படக்கதை என்று தெரிந்து ஒரு கதையை உருவகிப்பது ஒரு வழி; ஏற்கனவே பிரபலமான ஒரு சிறுகதைத் தொடரைப் படக்கதையாக்குவது இன்னொரு, மிகக் கடினமான விஷயம். அதுவும், “தேவ”னின் ஹாஸ்யம் குலுங்கும் சம்பாஷணைகள் நிறைந்த ஒரு கதை வேறு!  செய்யுளில் “உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்” என்ற ஒரு வகை என் நினைவுக்கு வருகிறது. செய்யுளின் நடு நடுவே உரைநடை வரும். சிலப்பதிகாரம் ஒரு நல்ல முன்னோடி, எடுத்துக் காட்டு. அப்படித்தான்,  நம் படக் கதைகளும்! “உரையிடை இட்ட படமுடைக் கதை” !

எனக்கு ஓர் ஆசை! பத்து ஓவியர்களை ஒன்றாய்த் திரட்டி, ஒவ்வொருவருக்கும் அதே ‘சாம்பு’ கதையைக் கொடுத்து, இத்தனை  படங்களுக்குள், இத்தனை மணிகளுக்குள்  கதையைச் சித்திரிக்கவேண்டும் என்று நிபந்தனை போட்டு, விளைவுகளைப் பார்க்க வேண்டும்.....  படக் கதைகள் மேலும் மேலும் வளர பல விதமான யுக்திகள் வெளியாகலாம்! தமிழ் காமிக்ஸ் இன்னும் தவழும் குழந்தையாகத்தானே இருக்கிறது !  மேலும் வளர வேண்டிய கலை அல்லவா?

சரி! ஓர் எடுத்துக் காட்டாகச் “சாம்பு”வின் முதல் கதையைப் பார்க்கலாமா?  பிறகு, நீங்களே புரிந்து கொள்ளலாம்.  இந்தச் சாம்புவைக் காமிக்ஸ் அவதாரத்தில் உலவ விடுவது  எவ்வளவு கடினம் என்று?  ( இந்தப் படக்கதை ஒரு நூலாக இன்னும் வெளிவரவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்! )

1. ஒரு வேலை போய் ஒரு வேலை வருகிறது!  
என்ற முதல் கதை இதோ!

மானேஜர் செய்தார்தி ருட்டு -- சாம்பு
  வாசனை மோந்துடைத் தானவர் குட்டு !
ஆனால் கிடைத்ததோ திட்டு! -- துப்(பு)
  அறியத் தொடங்கினான் வேலையை விட்டு!    









சரி, ‘சாம்புவை’ நெட்டுருப் போட்ட வாசகர்களுக்கு  ஒரு கேள்வி:

இந்த முதல் கதையில் சாம்புவை வேலையிலிருந்து நீக்கிய  அதே முதலாளி --- கதையில், பாங்கி டைரெக்டர் பரமேஸ்வர முதலியார்... பிறகு தனக்கு வந்த ஒரு பிரச்சினையிலிருந்து விடுபட, அப்போது பிரபல துப்பறியும் நிபுணனாகியிருந்த  சாம்புவைக் கூப்பிடுவார், தெரியுமா?

அது என்ன ‘கேஸ்’? எந்தக் கதையில் இது நடக்கிறது?


[நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

துப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்

தேவன் படைப்புகள்

18 கருத்துகள்:

ரெங்கசுப்ரமணி சொன்னது…

சுண்டைக்காய் கேஸ் இது :-). 10 கதைகள் சேர்த்திருக்கின்றேன். கிடைத்தால் ....

King Viswa சொன்னது…

//இதழியல் துறையில் ‘ஆனந்த விகடன்’ முத்தமிழின் பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்தது . சித்திரத் துறையிலும் அப்படியே. ‘காரிகேசர்’ முதல் ‘காமிக்ஸ்’ வரை என்று விகடன் சித்திரங்களைப் பற்றித் தனியாக ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். உதாரணமாக, தமிழ்ப் பத்திரிகை உலகில் வந்த முதல் படக்கதை ”முத்து” எழுதிய “ஜமீந்தார் மகன்” ;//

முற்றிலும் தவறான தகவல் இது.

ஆனந்த விகடன் தான் அரைகுறையாக ஒரு விஷயத்தை சொல்கிறது என்றால் நாமும் அதனையே கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்பது இல்லை.

அச்சில் பதிப்பிக்கப்படும் எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள். பல அரைகுறைகள் வரலாறு தெரியாமல் எழுதுவதால் வருகின்ற பிரச்சினை இது.

தமிழில் சித்திரக்கதை பற்றிய தகவல் மிகவும் குறைவு என்பதாலும், அதனை யாரும் (இதுவரையில்) ஆவணப்படுத்தவில்லை என்பதாலுமே இது போன்ற தவறுகள் அச்சேறுகின்றன.

இதைப்போலவே சென்ற ஆண்டு மாற்றுவெளி என்று ஒரு புத்தகம் பல அரைகுறைகளின் "ஆய்வு கட்டுரைகளோடு" வந்து வரலாற்று சிறப்பு பெற்றது.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது போல, நாம் என்ன எழுதினாலும் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் சிலர் எழுதுவதால்தான் இந்த பிரச்சினை.

பின்னாளில் இதனையே மக்கள் பலரும் நம்பி விடுவது மிகப் பெரிய சாபக்கேடு.

Pas S. Pasupathy சொன்னது…

@King Viswa
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. சரியான தகவல்களை நீங்கள் கொடுக்கலாமே? படிக்க ஆவலாக உள்ளேன்

Pas S. Pasupathy சொன்னது…

King Viswa எழுதியது குறித்து:
"ஆனந்த விகடன்” பொக்கிஷத்தில் “ஜமீந்தார் மக”னைப் பற்றிக் கூறியது: கல்கி, விகடன், குமுதம் போன்ற (சிறுவர் பத்திரிகைகளைச் சேராத) மற்ற இதழ்களில் வந்த முதல் சித்திரக் கதை அது என்று கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
மேலும் இதைப் பற்றி அறிய:
http://tinyurl.com/mezztap - என்ற சுட்டியில் வாசகர்கள் படிக்கலாம். comicstamil.blogspot.ca என்ற வலைப்பூ அது. தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரக் கதை என்று ஆராயும்போது, சிறுவர் இதழ்களில் அக்காலத்தில் வந்தவை பல ஆங்கில மூலத்திலிருந்து “மொழிபெயர்க்கப்” பட்டவை என்பதையும் மனத்தில் கொள்ளவேண்டும்.

King Viswa சொன்னது…

Kumudam has published comics series way before vikatan.

I have kumudam issues from 1955,56 'which has comics.

This proves that vikatan's wasn't the first one.

Pas S. Pasupathy சொன்னது…

Thanks, King Viswa. "Maya" is now 88 yrs old! Perhaps you can interview him and publish the interview in the Web..... It will be an important contribution..... ( By the way, "jamIndhar magan" in Vikatan for which Maya drew pictures started in Oct 56) . BTW, what are the names of comics ( was it serial like Jamindhar Magan?) and who drew them in Kumudam? Perhaps you can write about them in your blog and give a link here .... ( I'm looking for Raju's jokes which were published in Kumudam and some good pictures by Ravi...if you can spare them send them to me . Would appreciate it) ( Maya is supposed to be present on July 24th at MusicAcademy, Chennai during a Book -Jayakanthan stories-publication )

King Viswa சொன்னது…

சார்,

உங்கள் மெயில் ஐடி கொடுங்கள்.

அல்லது tamilcomicsulagam@gmail.com க்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள்.

மாயா அவர்களின் நேர்காணல், குமுதத்தில் வந்த காமிக்ஸ் கதைகள் பற்றிய லின்க் அனுப்புகிறேன்.

Los Angeles Swaminathan சொன்னது…

முதல்ல சித்திரக்கதை போட்டது இருக்கட்டும். போடத்தொடங்கி இன்னும் வந்து கொண்டிருக்கிற‌
சித்திரத்தொடர் பத்தி சொல்லுங்கள். தினத்தந்தில "சிந்துபாத்" தொடர் முடிஞ்சிடுத்தா ?

Pas S. Pasupathy சொன்னது…

@Swami ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் சிவாஜி ஒரு டயலாக் சொல்வார். “சிந்துபாத் கதையா? நான் பட்டாளத்துலே சேர்ந்தப்போ ஆரம்பமாச்சி. இப்போ ரிட்டையரும் ஆயிட்டேன். கதை மட்டும் முடிஞ்சபாடில்லே”. ..... http://www.luckylookonline.com/2012/12/blog-post_29.html

S.Sridharan சொன்னது…

even though i know tamil (my mother tongue) very well, because of my computer limitations i am writing now in English. There was a magazine Swadesha mitran in tamil. I have read several Cartoon stories in it way back in 1953..
By the by (I am now 77) I am crazy of Devan's novels and I can annotate from any of Devan's novels even now. I think Pasupathy sir is also like me. My e mail is >sridhsrinivasan@gmail.com<. I would love to establish email contacts with him

B.Narayanan சொன்னது…

'சுண்டைக்காய் கேஸ்' என்ற கதையில், பழைய பாங்க் மானேஜருக்கு உதவுகிறார் சாம்பு.

B.Narayanan சொன்னது…

ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?

Pas S. Pasupathy சொன்னது…

@B.Narayanan. நன்றி. >>ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா? >> உங்கள் கேள்வியைக் கொஞ்சம் விளக்குங்கள். புரியவில்லை.

B,Narayanan. சொன்னது…

'Your mail id deleted from this web" என்று எனக்கு ஒரு message இங்கேயே வந்தது, அதனால்தான் அப்படிக் கேட்டேன்.

Pas S. Pasupathy சொன்னது…

அப்படியா? கூகிள் ஏதோ ஒரு காரணத்தால் செய்திருக்கும்.

R.V.RAJU சொன்னது…

சாம்பு படக்கதை புத்தகமாக வந்திருக்கிறதா, Pas pasupathi, King Viswaa?

Pas S. Pasupathy சொன்னது…

வரவில்லை.

Pas S. Pasupathy சொன்னது…

நான் தேடியதில், 'சுதேசமித்திரன்' இதழில் 1937-இல் வந்த மரியாதைராமன் கதை "முதல் படத் தொடராய்" இருக்கும் என்று நினைக்கிறேன். இதோ ஒரு எடுத்துக் காட்டு:
http://s-pasupathy.blogspot.com/2017/08/802-5.html