செவ்வாய், 9 ஏப்ரல், 2019

1265. தலைவன்: கவிதை

தலைவன்
பசுபதி


தாதை காந்தி பெயரைத் தாங்கித்
. தன்னை உயர்த்து சாலையில்
தாதன் என்னைத் தலைவன் என்னும்
. சனங்கள் கூடும் வீடிது.                (1)

அம்பைப் போல்நேர்க் கோட்டில் போகும்
. அகலம் அற்ற சாலையில்
தும்பைப் பூவின் வெண்ணி றத்தைத்
. தோற்க டிக்கும் வீடிது.                (2)

வேலி ஏதும் அற்ற என்றன்
. வீட்டில் யாரும் நுழையலாம்
நாலு திசையுள் சன்னல் மூலம்
. நல்ல காற்றும் வீசலாம்.                (3)

எட்டுப் பத்து மொழிகள் பேசும்
. என்கு டும்பம் பெரியதே
கட்டுக் கதைகள் சொல்லிக் காலம்
. கழிக்கும் ஆட்கள் இல்லையே.            (4)

சென்னி தாழ்த்தி மாலை ஏற்றுத்
. திறப்பேன் மார்பைக் கல்லுக்கு 
என்கை யுறையில் உள்ள பட்டென் 
. இரும்புக் கையை மறைக்குமே.           (5)

அண்டை வீட்டுக் கார ருடனே
. அருமை நட்பெ னக்குண்டு
பண்டைச் சண்டை நெஞ்சில் வைத்துப்
. பழிகள் தீர்ப்ப தில்லையே.                 (6)

வீட்டுப் பணியைச் சொந்தப் பொறுப்பாய்
. விரும்பும் ஏவல் வேண்டுமே
தேட்டம் ஒன்றே நாடு வோர்கள்
. தேவை வீட்டில் இல்லையே                (7)

தலையை ஆட்டும் பொம்மைக் கொலுவுள்
. தர்பார் இங்கு வைத்திலேன்.
கலைகள் ஆன எண்ணும் எழுத்தும்
. கண்கள் ஆமென் வீட்டிலே.                (8)

மனையின் தூய்மை கெடுக்கும் சூழல்
. மாசு யாவும் நீக்குவேன்
எனது பணியாள் கையில் மாசாய்
. இருக்கும் அரிப்பைப் போக்குவேன்.          (9) 

வீட தற்குத் தலைவன் என்று 
. விரும்பி என்னைக்  காட்டினும்
நீடு புகழை உங்கள் மனைக்கு 
. நித்த மளிப்போர் நீங்களே!                  (10)

தொடர்புள்ள பதிவுகள் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக