‘நகைச்சுவைத் திலகம்;’ கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
பேராசிரியர் இரா.மோகன்
=====
ஜூன் 12, 2019 -அன்று மறைந்த பேராசிரியர் இரா.மோகனுக்கு அஞ்சலியாய் இக்கட்டுரையை இடுகிறேன். (மோகன் ‘கல்கி’ பற்றிச் சாகித்திய அகாதமிக்காக ஒரு நூலை எழுதி இருக்கிறார்.)
டொராண்டோவில் அவரைச் சந்தித்த பின்னர் கடிதத் தொடர்பில் இருந்தேன். " அயலகக் கவிதைக் குயில்கள்” என்ற அவருடைய நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதும் பேறு கிட்டியது. பண்புள்ள இலக்கியவாதி மறைந்தது தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.
=====
“தமிழ் நடையில் ஒரு நகைச்சுவையையும், சரித நிகழ்ச்சிகளின் மீது ‘சமையல் கட்டு’க்குக் கூட ஒரு ஆவலையும் தூண்டிவிட்ட எழுத்தாளர்” என்பது அறிஞர் அண்ணா, எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்திக்குச் சூட்டியுள்ள புகழாரம். அறிஞர் ஏ.வி.சுப்பிரமணிய அய்யரும், “தமிழர், கல்கியின் மூலம் நகைச்சுவை இன்னதென்று அறிந்து அனுபவித்து வருகிறார்கள்” எனத் தம் ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கல்கியும் தம் பங்கிற்கு, “நேயர்கள் சற்றே சிரித்து மகிழ வேண்டும், கொஞ்சம் புன்னகையேனும் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனேயே தான் நான் எழுதி வருகிறேன்” என ஓர் இடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கல்கியின் வாழ்விலும் வாக்கிலும் நகைச்சுவை உணர்வு களிநடம் புhpந்து நின்ற பாங்கினைக் குறித்து இங்கே காணலாம்.
கல்கி என்றதும் நம் நினைவுக்கு மோனையைப் போல் முதலில் ஓடோடி வருவது அவரது இயல்பான நகைச்சுவை உணர்வே ஆகும். பேச்சு, எழுத்து, தனி-வாழ்க்கை என்னும் மூன்றிலும் நகைச்சுவையில் ஊறித் திளைத்தவர் கல்கி. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஓரிரு சான்றுகளை நாம் இங்கே சுட்டிக்காட்டலாம்.
· ஒரு முறை ஒரு கூட்டத்தில் கல்கியின் இரு புறத்திலும் ‘திருப்புகழ் மணி’ டி.எம்.கிருஷ்ணசாமி ஐயரும், ரசிகமணி டி.கே.சி.யும் அமா;ந்திருந்தார்கள். கல்கி பேசும்படி நேரிட்டது. அப்போது ‘மணி’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் ஒரு அருமையான நகைச்சுவை விருந்தை - சொல் விளையாட்டை (Pun) - வழங்கினார்.
“இந்தப் புறத்தில் திருப்புகழ் மணி; அந்தப் புறத்தில் ரசிகமணி. நானோ ஒரு பெண்மணி கூட இல்லையே? இவர்களுக்கு முன்னால் நான் என்ன பேச முடியும்?”
இங்ஙனம் கல்கி தம் பேச்சைத் தொடங்கியதும் அவையோர் சிரித்து மகிழ்ந்தனர்.
· ஒருமுறை சென்னை மாநிலக் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டிருந்தார் கல்கி. கல்லூரி முதல்வர் அவரை அறிமுகம் செய்யும் போது, “கல்கி, தமது நாவல்களுக்குக் கரு தேடி எங்கும் அலைய வேண்டாம். இங்கு வந்து விட்டால் போதும். இந்தக் கல்லூரி வளாகத்திலேயே ஏகப்பட்ட கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் அவர் காணலாம்” என்று கூறி, மாணவ மாணவியரை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அடுத்துப் பேச எழுந்த கல்கி தமது உரையைத் தொடங்கும் முன்னர், அவையோரைப் பார்த்து, “கதாநாயகர்களே! கதாநாயகிகளே!” என்று அழைக்கவும் எழுந்த கரவொலி கடற்கரை எங்கும் வியாபித்தது. சமயோசிதம் எனப்படும் சாதுர்யமான மனப்பாங்கு (Presence of Mind) ஒரு நகைச்சுவையாளருக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணrத்தும் அருமையான நிகழ்ச்சி இது!
மேடையில் பேசும்போது மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் பிறருடன் உரையாடும் போதும் நகைச்சுவை ததும்பப் பேசுவது என்பது கல்கிக்குக் கைவந்த கலை. ஒரு முறை கல்கி சென்னை நகரில் குறுகலான - மக்கள் நெருக்கடி மிகுந்த - ஒரு தெருவில் - ‘பிராட்வே’யில் - நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது பார்த்து ஒரு நடைபாதைவாசி அவரை நெருங்கி, “ஐயா! நீங்கள் எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கறீர்கள்?” என்று கேட்டு அவரது எரிச்சலைப் பெருக்கினார். உடனே கல்கி அவருக்குத் தந்த சூடும் சுவையுமான பதில்: “நான் எதற்காக நின்று கொண்டிருக்கிறேனா? என்னை யாரும் இங்கே உட்காரச் சொல்ல-வில்லை, அதனால் நின்று கொண்டிருக்கிறேன்!”
· பிறிதொரு முறை கல்கி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தார். “என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பி கொண்டு வரச் சொல்லட்டுமா? டீ கொண்டுவரச் சொல்லட்டுமா?” என்று கிருஷ்ணன், கல்கியிடம் இயல்பாகக் கேட்டார். கல்கி, சற்று யோசித்து விட்டு, “டீயே மதுரம்!” என்றார். என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவியின் பெயர் டி.ஏ.மதுரம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. நகைச்சுவை இமயமும் நகைச்சுவைப் பேரரசும் சந்தித்துக் கொண்டால் அங்கே அற்புதமான நகைச்சுவை தானாகவே பிறப்பெடுக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?
கல்கியின் வாழ்வில் மட்டுமன்றி, அவரது எழுத்திலும் ஆங்காங்கே நகைச்சுவை உணர்வு பளிச்சிடக் காண்கிறோம். சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ எதை எழுதினாலும், அதில் நகைச்சுவையைக் கலக்காமல் கல்கியால் எழுதவே முடியாது. பதச்சோறாக, ‘கைலாசமய்யா; காபரா’ என்ற சிறுகதையின் தொடக்கத்தில் பயந்த சுபாவம் உடைய கைலாசம் அய்யரைக் கல்கி தமக்கே உரிய நகைச்சுவை நடையில் பின்வருமாறு அழகுற அறிமுகப்படுத்தியுள்ளார்.
“எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், கைலாசமய்யரைப் பார்க்காத வரையில், சரியான பயந்த சுபாவத்தை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல முடியாது. பயப்படுகிற விஷயத்தில் அவரை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை. ஒரு சமயம், அவர் வீட்டு வாசலில் தேசியத் தொண்டர்கள், ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று பாடிக் கொண்டு போனார்கள். அந்தப் பயங்கரமான சத்தத்தைக் கேட்டு கைலாசமய்யர் பயந்து கட்டிலிலிருந்து கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டார்!”
· கல்கியின் முத்திரைப் படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் ஐந்தாம் பாகத்தில் ஓர் இடம். அதில் வரும் ஒரு வீர சைவருக்கும், வீர வைஷ்ணவர் ஆழ்வார்க்கடியானுக்கும் இடையே சமயம் தொடர்பாக நிகழும் ஒரு சுவையான வாக்குவாதம் இதோ:
“‘அப்பனே! உங்கள் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் தான். எங்கள் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர்! அதை ஞாபகம் வைத்துக் கொள்!”
‘ஓகோ! இப்படி வேறே ஒரு பெருமையா? பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர் தான்; துரியோதனாதியர் நூறு பேர் என்று பெருமையடித்துக் கொள்வீர் போலிருக்கிறதே!’
‘அதிகப் பிரசங்கி! எங்கள் நாயன்மார்களைத் துரியோதனன் கூட்டத்தோடு ஒப்பிடுகிறாயா? உங்கள் ஆழ்வார்களிலே தான் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எல்லோரும் உண்டு.’
‘உங்கள் சிவபொருமானடைய கணங்களே பூத கணங்கள் தானே? அதை மறந்து விட்டீராங்காணும்!’”
இவ்வுரையாடற் பகுதியைப் படிப்பவர் சைவராய் இருந்தாலும் சரி, வைணவராய் இருந்தாலும் சரி, அவர் முகத்தில் மெல்லிய புன்முறுவல் பூக்கும் என்பது உறுதி. “கல்கியினுடைய எழுத்திலே உயர்தரமான நகைச்சுவையை நாம் காணலாம். அது பிறரைக் கேலி செய்வதாக இல்லை. அது தன்னாலே தாக்கப்-படுபவர்களும் படித்துச் சிரிக்கக் கூடியதாகவே அமைந்திருக்கிறது” என்னும் அறிஞர் வி.செல்வநாயகத்தின் கருத்து இங்கே மனங்கொள்ளத்தக்கதாகும்.
இன்று பட்டிமன்ற மேடைகளில் பலத்த கர ஒலியைப் பெறும் நகைச்சுவைகளுக்கு மூலம் கல்கிதான்! பதச்சோறாக, ‘திருமணம்’ பற்றி ‘ஆனந்த விகடன்’ இதழில் (16.02.1936) எழுதிய தம் கட்டுரை ஒன்றில் கல்கி இயல்பான நகைச்சுவை உணர்வோடு குறிப்பிடுவதை இங்கே சுட்டிக் காட்டலாம்:
“நான் சிறு பையனாயிருந்த போது எங்கள் ஊரில் ஒரு கலியாணம் நடந்தது. கலியாணத்தில் வழக்கமாயுள்ளது போல் மேளம் தடபுடல் பட்டது. எங்கள் உபாத்தியாயர் ‘அதோ மேளச் சத்தம் கேட்கிறதே, அது என்ன சொல்கிறது. யாருக்காகவது தெரியுமா?’ என்று கேட்டார். பிறகு அவரே சொன்னார்: ‘நன்றாய்க் கேளுங்கள், ‘அகப்பட்டுக் கொண்டான், அகப்பட்டுக் கொண்டான்’ என்று அது அலறுவது தெரியவில்லையா?’ என்று.
அதாவது, ‘ஐயோ! பாவம்! ஒரு மனுஷன் அநியாயமாய்க் கலியாண வலையில் அகப்பட்டுக் கொண்டானே!’ என்று அந்த மேளம் அலறுகிறதாம். இது ரொம்ப உண்மைதான். கலியாணத்தில் ஒருவன் தன் விடுதலையை இழந்து விடுகிறான். பெரும் பொறுப்பு அவன் தலையில் அமர்கிறது”.
· பிறிதொரு சுவையான எடுத்துக்காட்டு: ஸ்ரீரங்க பட்டணத்தில் ‘கும்பஸ்’ என்னும் இடத்தில் அமைந்துள்ள ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரது சமாதிகளைப் பார்த்ததும் கல்கிக்குக் கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாம்! ஏன் தெரியுமா? “இவ்வளவு அழகான சமாதிகளை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று தானாம்!”
நிறைவாக, கல்கியின் வாழ்வில் நகைச்சுவை உணர்வு பெற்றிருந்த இடத்தினைக் குறித்துக் காணலாம். கல்கியின் புதல்வர் கி.ராஜேந்திரன் குறிப்பிடுவது போல், “சொற்பொழிவுகளில் மட்டுமல்ல, தமது எழுத்திலே மட்டுமல்ல, வாழ்க்கையையே நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் அனுபவித்து மகிழ்ந்தவர் கல்கி. சிரிக்காமலும் சிரிக்க வைக்காமலும் ஒருநாள் கூடக் கழிந்ததில்லை அவர் வாழ்விலே”. இதனினும் ஒரு படி மேலாக, நகைச்சுவை ஆசிரியரை ஒரு வேதாந்திக்கு நிகரானவராகக் கருதினார் கல்கி. இக் கருத்தினை அவரே, “நகைச்சுவை ஆசிரியனை ஒரு வேதாந்திக்கு ஒப்பிடலாம். வேதாந்தி இன்பங்களையும் துன்பங்களையும் சமமாகப் பார்க்கிறான். அதே மாதிரி நகைச்சுவை ஆசிரியன் எல்லா நிகழ்ச்சிகளிலும் சிரித்து மகிழ்வதற்குள்ள விஷயங்களைக் காண்கிறான்” என நகைச்சுவை எழுத்தாளர் நாடோடியின் ‘நாடகமே உலகம்’ என்ற நூலுக்கு எழுதிய முகவுரையில் குறிப்பிடவும் செய்தார். ‘வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளிலும் சிரித்து மகிழ்வதற்கான பொருள் புதைந்து கிடப்பதைக் கண்டுணரும் திறம் கல்கிக்கு இயல்பாகவே வாய்ந்திருந்தது’ என்பதை மெய்ப்பிக்கும் ஓர் உண்மை நிகழ்ச்சி:
· ஒருமுறை கல்கி தம் புதல்வி ஆனந்தியுடன் ரயிலில் ஏறும்போது ரயில் புறப்பட்ட வேகத்தில் ஒரு செருப்பு காலில் இருந்து கழன்று விழுந்து விட்டது. ரயில் பெட்டியில் ஏறியதும் கல்கி தம் காலில் மாட்டி இருந்த மற்றொரு செருப்பையும் ஜன்னலுக்கு வெளியே உடனே விட்டெறிந்தாராம். “என்ன அப்பா? ஒரு செருப்பு தானே விழுந்தது? மற்றொரு செருப்பையும் எறிந்து விட்டீர்களே?” என்று ஆனந்தி கேட்ட போது கல்கி, “அம்மா! ஒரு செருப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பயன்? இந்தச் செருப்பையும் விட்டெறிந்தால் அந்த ஜோடி யாருக்காவது பயன்படுமே?” என்று பதில் அளித்தாராம்! ‘இடுக்கண் வருங்கால் நகுக!’ என்ற வள்ளுவரின் வாய்மொழியை வாயளவில் மட்டுமன்றி, வாழ்க்கையிலும் என்றென்றும் கடைப்பிடிப்பவராக விளங்கினார் கல்கி என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமான சான்றாகும்.
· எழுத்தாளா; பகீரதன், ‘கல்கி நினைவுகள்’ என்ற தம் பெருநூலில் பதிவு செய்திருக்கும் ஓர் அரிய நிகழ்ச்சியும் இவ்வகையில் மனங்கொளத்தக்கதாகும். படிப்பவர் நெஞ்சை உருக்கும் அந்நிகழ்ச்சியைப் பகீரதனின் சொற்களிலேயே இங்கே காணலாம்:
“நோயின் கொடுமை கல்கியினுடைய உடலை மிகவும் பாதித்து விட்டது. டாக்டர்கள் அவர் உடலைப் பரிசோதனை செய்துவிட்டு ஒன்றும் புரியாமல் திகைக்கிறார்கள். கடைசியில் ஜெனரல் ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். அங்கு பல பெரிய டாக்டர்கள் கவனமாகப் பரிசோதனை செய்கிறார்கள்.
பரிசோதனை அறையிலிருந்து தம் அறைக்கு வருகிறார் கல்கி. உறுதியான நடையுடன் நோயே இல்லாதவர் போல வருகிறார். என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். ஆமாம்; ‘என் உடல்நலனை விசாரிப்பது போல் இருக்கிறது’ அந்தச் சிரிப்பு.
‘உடலில் ஒன்றுமில்லை என்கிறார்கள்’ என்றார்.
‘ரொம்ப சந்தோஷம்.’
‘உடலில் ஒன்றுமில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்களே?’
‘அதுதானே இப்பொழுது பிரச்சனையாக இருக்கிறது? என் உடலில் ஏதாவது கெடுதல் இருந்தால் அதைச் சரிசெய்து விடலாம். சரிப்படுத்த முடியாத அளவுக்கு என் உடல் இப்பொழுது கெட்டுவிட்டது! அதனால்தான் டாக்டர்கள் இனி செய்ய ஒன்றுமில்லை என்கிறார்கள்’ என்று சிhpத்துக் கொண்டே பரம அமைதியாகச் சொல்கிறார்.”
எழுத்தாளர் கல்கியின் மறைவை ஒட்டி ‘மாணிக்கத்தை இழந்தோம்’ என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக முடித்திருந்தார்.
“தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்குத் தண்ணீர; வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்து விட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி, உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாயிருந்தவர் மறைந்து விட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல. அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின் சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச்செல்வமாகத் தமிழுலகம் கண்டது.” கல்கியின் நகைச்சுவை உணா;வு பற்றிய சரியான மதிப்பீடாகவும், துல்லியமான கணிப்பாகவும் இவ் வார்த்தைகளைக் கொள்ளலாம்.