வியாழன், 6 மே, 2021

1864. கடுகு - 1

தேவனும் நானும்  

'கடுகு'====

'கடுகு' ( பி.எஸ்.ரங்கநாதன்) சாரை நான்  பார்த்தது மே 5, 2010 -இல். 

தேவன் நினைவு தினமான அன்று நான்  சென்னையில் நடந்த கூட்டத்தில் ' இணையத்தில் தேவன்' என்ற தலைப்பில் பேசும்போது, இந்தக் கட்டுரையைப் பற்றிச் சொன்னதைக் கேட்ட  பி.எஸ்.ஆர். நிகழ்ச்சிக்குப் பிறகு என்னைச் சந்தித்து தன் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். அன்று முதல் அவர் மறைவு வரை அவருடன் அவ்வப்போது மின்னஞ்சல் தொடர்பில் இருந்தேன். 

இன்று  இந்தக் கட்டுரையைக் கடுகு சாரின் நினைவில் இங்கிடுகிறேன்.

======

துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம். மல்லாரி ராவ் கதைகள் போன்ற நகைச்சுவைக் கதைகளையும், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான்      சுதர்சனம், லக்ஷ்மி கடாக்ஷம் போன்ற அற்பதமான குடும்ப நாவல்களையும் எழுதி, கல்கிக்கு அடுத்தபடியாக தனது பெயரை எழுத்துலகில் இடம்பெறச்  செய்திருப்பவர் திரு. தேவன். என் அபிமான எழுத்தாளர்.

பள்ளிக்கூட வயதிலேயே பத்திரிகை ஆர்வமும், ஓரளவு எழுத்து ஆர்வமும் இருந்த எனக்கு, தேவன் ஒரு எழுத்துலக 'ரஜினி! என் வயது ஒத்த இளஞர்கள் விஜயா, வாஹினி, ஏ.வி.எம் ஸ்டூடியோ - வாசல்களிலும்,, கோடம்பாக்கம் ரயில்வே  கேட்டருகேவும் (இன்றைய ஃப்ளை ஓவர் இருக்கும் இடத்தில் இருந்த  கேட் மூடியிருக்கும்போது யாராவது நடிகர், நடிகைகளின் கார் வந்து நிற்காதா என்று வாயைப் பிளந்து) காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்,, தேவனைச் சந்திக்க வேண்டும் என்ற வெறி எனக்கு  ஏற்பட்டது. (பின்னால் நான் ஒரு பிரபல(?)  நகைச்சுவை எழுத்தாளனாக ஆனதற்கு இது ஒரு அறிகுறி என்று நான் எழுதினால் "போடா தற்குறி" என்று நீங்கள் தூற்றக்கூடும்.

ஐம்பதுகளில் ஒரு நாள், ’சென்னை அரண்மனைக்காரத் தெருவில் ஒரு நிகழ்ச்சியில் தேவன் பேசுகிறார்’ என்ற செய்தியை தினசரியில் பார்த்தேன். எப்படியாவது அந்த கூட்டத்திற்குச்  சென்னை செல்லவேண்டும் என்ற தீவிரம் பற்றிக்கொண்டது. நான் செங்கல்பட்டுவாசி.  சென்னைக்குப் போய் வர இரண்டு ரூபாயாவது தேவைப்படும். என் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாத  என் அப்பா இரண்டு ரூபாய் கொடுத்தார். இது சற்று பெரிய தொகைதான். வேறு ஏதோ செலவைக் குறைத்துக் கொண்டு தான் அப்பா கொடுத்திருக்கிறார்.

மேரிஸ் ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடைசி வரிசையில் நிற்கத்தான் இடம் கிடைத்தது. மீட்டிங் முடிந்து வெளியே வந்த தேவனை மிக அருகில் சில நிமிடங்கள் பார்த்துப் பரவசம் அடைந்தேன். மாரிஸ் மைனர் காரில் விகடன் எழுத்தாளர் கோபுவைத் தன்னுடன் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

”ஆஹா,பார்த்துவிட்டேன் தேவனை! ஐயோ அவருடன் பேசவேண்டுமே!. (சரி, என்ன பேசப் போகிறேன்? அவருடன் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” - உற்சாகத்தில் குதித்தேன்! ஒரு நாள் விகடன் ஆபீசுக்குப் போய் அவரைப் பார்த்துவிட முடிவெடுத்தேன்.

\*              *                    *                           *

மவுண்ட்ரோடில், வாலாஜா ரோடு சந்திப்பு மூலையில் விகடன் அலுவலகம் இருந்தது. (இன்று அங்கு ஒரு இட்லி - வடை ஹோட்டல் இருக்கிறது என்று நினைக்கிறேன்).கீழே பிரஸ் ஒரே பயங்கர சப்தத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. படி ஏறி மாடிக்குச் சென்றேன். ஒரு கதவைத் திறந்து உள்ளே போனேன். நிறைய அறைகள். அரைக்கதவு போடப்பட்டவைகளாக இருந்தன. ஒரு வயதான ஆசாமி "யாருங்க வேணும்" என்று கேட்டார். "எடிட்டர் தேவனைப் பார்க்கணும்" என்றேன். ஒரு துண்டு காகிதத்தைக் கொடுத்து "பேர் எழுதிக் கொடுங்க" என்று சொன்னார்.  எழுதிக் கொடுத்தேன். தேவன் அறை பத்தடி தூரத்தில் தான் இருந்தது. உள்ளே போன பெரியவர்

அரை நிமிஷத்தில் வெளியே வந்தார். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே "சார் உள்ளே வரச் சொன்னார்" என்றார். அவர் என்னைப் பார்த்த விதமும் சொன்ன விதமும் சற்று வித்தியாசமாக இருந்தது.

”என்னடா  இந்த அரை டிக்கெட் பையன் . பெயரை எழுதிக் கொடுத்ததும் ஆசிரியர் ’உடனே வரச்சொல்’ என்று சொல்லிவிட்டாரே” என்று வியப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கவேண்டும்.

ஓரளவு அதற்கான காரணத்தை என்னால் ஊகிக்கமுடிந்தது. காரணம் அந்த துண்டு காகிதத்தில் நான் என் பெயரை எழுதிக் கொடுக்காமல் வேறு ஒன்றை எழுதிக் கொடுத்தேன்.

அது என்ன?

இருங்கள் முதலில் ஒரு சின்ன தகவலைக் கூற வேண்டும். அந்தகால விகடன் தலையங்கங்கள் சற்று வித்தியாசமாய் இருக்கும். விகடன் ஆசிரியரை ஸ்ரீமான் பொதுஜனம் சந்தித்து, அன்றைய நாட்டு நடப்பைப்பற்றி ஏதாவது கேட்க,. அதற்கு விகடன் ஆசிரியர் பதில் கூறுவது போல் (லேசான நகைச் சுவையுடன்) தலையங்கங்கள் இருக்கும்.

ஆகவே நான் என் பெயருக்குப் பதில் காகிதத்தில் "ஸ்ரீமான் பொதுஜனம்" என்று குறும்புத்தனமாக எழுதிக் கொடுத்திருந்தேன்..

நகைச் சுவை உணர்வு உள்ள தேவன் ”யார் இந்த விஷமக்காரன்” என்ற ஆர்வத்துடன்  "வரச் சொல்" என்று உடனே சொல்லிவிட்டார்.

தேவன் அறைக்குள் நுழைந்ததும், அவர் சட்டென்று எழுந்து நின்று உற்சாகமாக ”வாங்கோ, வாங்கோ” என்று என்னை அழைத்தார்.

மறக்கமுடியுமா அந்த அற்புத கணத்தை?. அறையில் வால் வாலாக "கேலி" புரூஃப்கள். அச்சு மையின் மணம். எங்கு நோக்கிலும் காகிதங்கள், புத்தகங்கள். எதிரே தூய கதர் அரைக் கைச் சட்டையில் என் அபிமான எழுத்தாளர்! இரண்டு கைகளையும் பிடித்து என்னை வரவேற்றார். அந்தக் கணம் அவரது எழுத்துத் திறமையும் நகைச்சுவை திறனும் மின்சாரம் போல் என் உடலில் பாய்ந்திருக்கவேண்டும்.

அப்போது நான் மாணவன்.. எழுதும் ஆர்வத்தைவிட பத்திரிகைகளைப் படிப்பதில் தான் மிக்க ஆர்வமுடையவனாக இருந்தேன்.

என்னைப் பற்றியும், அவருடைய கதைகளைப்  பற்றியும் சிறிது நேரம் பேசிவிட்டுப் புறப்பட்டேன். "அடிக்கடி வருவேன்" என்றேன். "வாருங்கள் " என்றார். அதன் பிறகு பல தடவை அலுவலகம் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன்.ஓவியர் கோபுலுவை அறிமுகம் செய்து வைக்கும்படி ஒரு சமயம் அவரைக் கேட்டுக்கொண்டேன். "அதுக்கென்ன . வாங்கோ " என்று அழைத்துக் கொண்டு போனார் கோபுலுவின் அறைக்கு! (அறை என்பதைவிட அரை என்பதே சரியாக இருக்கும். எவ்வளவு பெரிய மேதை அவர். அவ்வளவு குறுகிய இடத்தில் இருந்துகொண்டு அற்புதமான கார்ட்டூன்களையும். தெய்வ உருவங்களையும் வரைந்திருக்கிறார்.) அழைத்துக் கொண்டு போய் என்னை அறிமுகம் செய்து வைத்தார். கோபுலுவும் நானும் என்று கட்டுரை எழுதும் அளவுக்கு கோபுலுவிடம் என் நட்பு வளர்ந்தது! அதைப்  பிறகு பார்த்துக் கொள்ளலாம்.).

தேவனுடன் என் நட்பு மேலும் நெருக்கமடைய உதவியது விகடன் இதழில் வந்த கதையில் இருந்த ஒரு சிறிய தவறுதான்.

விகடனில் வந்த ஒரு கதையில் ” ....அன்று அமாவாசை.  ஆதலால் சுப்பிரமணிய ஐயர் இரவு பலகாரத்தை முடித்துவீட்டு, வாசலில் கயிற்றுக் கட்டிலை எடுத்துவந்து போட்டுக் கொண்டு, மேல் துண்டை சுருட்டித் தலைக்கு வைத்துக் கொண்டு விச்ராந்தியாகப் படுத்துக்கொண்டார்.  குளிர் காற்று லேசாக வீசிக்கொண்டிருந்தது. ­தூரத்தில் யாரோ பேசிக் கொண்\டிருந்தது லேசாக மிதந்து வந்து காதில் விழுந்தது.) ஆகாயத்தில் நக்ஷத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. பால் போல் இருந்த நிலவோளி  மனதுக்கு இதமாக இருந்தது.."

இதைப் படித்துக் கொண்டு வந்த நான் சட்டென்று படிப்பதை நிறுத்தினேன். "

என்னது? பாராவின் முதல் வரியில் அமாவாசை;. கடைசி வரியில் பால் நிலவா?

அடுத்த வாரம் தேவனைச் சந்திக்கச் சென்றேன். பொதுவாகப் பேசிவிட்டு "அமாவாசை " விஷயத்தைச் சொன்னேன்

அதிர்ச்சி அடைந்தார். குறிப்பிட்ட இதழைத் தேடி எடுத்துப் பார்த்தார்.

"ஆமாம் .... தப்பு தான் ...." என்று சொன்னார். ”ரொம்ப தேங்க்ஸ்... நல்லகாலம். எங்கிட்டே சொன்னீங்க .... இனிமே ஒண்ணும் செய்ய முடியாது."   என்றார்.

உதவி ஆசிரியரின் கவனக் குறைவு என்றாலும் பொறுப்பு தன்னுடையதாக அவர் கருதினார். மிகவும் சஞ்சலமடைந்தார்.

இந்தத் தவறு, எங்களுடைய நட்பிற்கு மேலும் நெருக்கம் தந்தது. அது மட்டுமல்ல. எதையும் எழுதி அவரிடம் கொடுக்காததால் என்னை நெருங்கவிட்டார் என்றும் நினைக்கிறேன்!

*                 *                  *                   *

செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள ஆத்தூர் கிராமத்தில் இருந்த ராமகிருஷ்ணா பள்ளியில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா நடத்துவார்கள், அந்த காலகட்டத்தில் ஆத்தூரில் விவசாயப் பண்ணை வைத்திருந்த திரு. ஸ்ரீனிவாச ஐயர் (சோவின் தந்தையார்) விழாவை தடபுடலாக நடத்த உதவி வந்தார். பிரபல பாடகர்களைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வார். கல்கி போன்றவர்களை தலைமை வகிக்கச் சொல்வார். அவருடைய பண்ணையில் தடபுடலாக விருந்து அளித்து உபசரிப்பார்.

அப்படி ஒரு நவராத்திரி விழாவின்போது. கல்கி தலைமை வகித்தார். அன்று தேவன் அவர்களையும் அழைத்திருந்தார். .தேவனும் வந்தார். அவ்வளவுதான் தேவனுடன் அப்படியே ஒட்டிக் கொண்டேன். விழா முடிந்ததும் இரவு உணவு இருந்தது. நான் சாப்பிடப் போகவில்லை. சாப்பிடச் சென்ற தேவன், என்னைக் காணாமல் வெளியே வந்து ”உள்ளே வாங்க” என்று கூப்பிட்டுப்போய் பக்கத்தில் உட்காரச் செய்தார்.

பல விஷயங்களைச் சொன்னார். தன் கதைகள் புத்தகமாக வராத வருத்தத்தையும் பேச்சுவாக்கில் சொன்னார். நிறைய பக்தி விஷயங்களைப் பேசினோம்..முருகன் பெருமைகளைச் சொன்னார். தன்னிடமிருந்த அரிய வலம்புரிச் சங்கைப் பற்றிச் சொன்னார். அவர் பேசிய பல விஷயங்கள் இப்போது நினைவில் இல்லை.  ”அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவேன், எனக்கும் அந்தத் தகுதி வரும்” என்று நான் அப்போது கனவிலும் கூட நினைத்ததில்லை. அரண்மனைக்காரத்தெரு செயின்ட் மேரீஸ் ஹாலுக்கு வெளியே நின்று ஆர்வத்துடன் பார்த்த அதே அரை டிக்கெட்டு பையனாகத் தான் அவருக்கு எதிரே எப்போதும் இருந்து வந்தேன்.

*    *    *        *        *    *

தேவன் தன் தொடர்கதை அத்தியாயங்களின் தலைப்பில் ஏதாவது ஒரு இலக்கியத்திலிருந்து அழகிய இலக்கியப் பாடலைப் போடுவார். அந்த பாடல்களை எல்லாம் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். உதாரணத்திற்கு ஒரு பாடலைத் தருகிறேன்.


தடித்தஓர் மகனை தந்தையீண்டு அடித்தால், 

     தாய்உடன் அணைப்பள்தாய்  அடித்தால்

பிடித்துஒரு தந்தை அணைப்பன்இங்கு எனக்குப் 

      பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு  மேனி அம்பலத் தாடும்  

     புனித நீ ஆதலால், என்னை

அடித்தது போதும் அணைத்திட வேண்டும்.  

     அம்மைஅப்  பாஇனி ஆற்றேன். (திரு அருட்பா.)

பக்திரசம் ததும்ப, வடபழனி முருகனைப் பற்றி இவர் எழுதிய பல வர்ணனைகளைப் படித்து, நான் முருகனின் தீவிர பக்தனாகிவிட்டேன். பின்னால்  டில்லி போனபிறகும் சென்னை வரும்போதெல்லாம்  வடபழனி முருகன் கோவிலுக்கு போகாமல் இருக்கமாட்டேன்.

தேவனின் கதாபாத்திரமான குடவாசலை மனதில் வைத்துக் கொண்டுதான்  என்னுடைய கமலா-தொச்சு கதைகளில் வரும் என் மைத்துனன் தொச்சுவை உருவாக்கினேன். தொச்சுவும் இன்று வாசகர்களின் அபிமானம் பெற்ற கேரக்டராகி விட்டான்!

"தேவன் அறக்கட்டளையினர் 2006'ல்,  எனக்கு தேவன் விருது அளித்தார்கள்,  இவ்வளவு பெரிய கௌரவம் எனக்கு கிடைக்கும்  என்று நான் கனவு கூட கண்டதில்லை!

இறைவா, தேவனுடன் பழக எனக்கு வாய்ப்பு தந்த உனக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?

பின் குறிப்பு. 1. தேவன் எழுதிய கதை. கட்டுரைகளை எல்லாம் சென்னை அல்லையன்ஸ் பிரசுரித்துள்ளார்கள்.

2.  இட்லி வடையில்  போடப்பட்ட கட்டுரை இது. . இ.வ.க்கு நன்றி

[ நன்றி; https://kadugu-agasthian.blogspot.com/2010/01/blog-post_06.html  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன்

கடுகு

3 கருத்துகள்:

R.S.KRISHNAMURTHY சொன்னது…

கல்கி எழுதாத பல விஷயங்களையும் (ஜஸ்டிஸ் ஜ்கன்னாதன்,ஸிஐடி சந்துரு)தொட்டுத் துலக்கியவர், தேவன் அவர்கள்! அவர்களைச் சந்திக்காத குறை எனக்கும் அதிகம்!கடுகு அவர்களின் இக்கட்டுரை அதை(ஒரு தலைக் காதல் போல!!) அதிகமாக்குகிறது. இன்னொன்று, இவ்வளவு நாட்களாகக் கிடைக்காமல் இப்போது கிடைத்திருக்கும் உங்கள் நட்புக்கும் ஆண்டவனுக்கு நன்றி!!

basu சொன்னது…

எனக்கு 59 வயது ஆகிறது..எனது தந்தையாரின் வாசிப்பும் ரசனையும் தொற்றிக்
கொண்டதால்,தேவன், கல்கி, நாடோடி மற்றும்"இவர்கள் வழி வந்த எழுத்தாளர் அத்தனை பேர்களையும் மனதாரப் பிடிக்கும். பசுபதி அவர்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கின்றேன்.தஙகளது தொண்டு மிக மிக உயர்வானது. தங்களைப்பற்றி முழுமையான விபரங்களைப் பதிவிட வேண்டுகிறேன்.
பாஸ்கரன்.

Pas S. Pasupathy சொன்னது…

பாஸ்கரன், நன்றி. தொடர்ந்து படியுங்கள்! உங்களைப் போன்றவர்க்கே என் வலைப்பூ! என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் இந்தப் பதிவில் உள்ளது.
http://s-pasupathy.blogspot.com/2018/12/1192.html

கருத்துரையிடுக