வியாழன், 6 ஜனவரி, 2022

2000. வெண்பா வீடு - 2: கவிதை

 எண்மையைக் காணல் எதற்கு?

                          


என் நண்பன் ‘நம்பி’, அவன் மனைவி ‘நங்கை, அவர்கள் குழந்தைகள் யாவரும் இருக்கும் வீட்டின் பெயர் ‘வெண்பா வீடு’.


இது என் வீட்டிற்கு அருகில்தான்  உள்ளது. எல்லோரும் அங்கே ‘வெண்பா’க்கள் மூலமாய்த்தான் பேசிக்கொள்வார்கள்.


ஒரு நாள் காலையில் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது , ஒரு புதிய தமிழ்த் திரைப்படம் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். வெண்பா வீட்டுக் குடும்பத்துடன் அப்படத்திற்குப் போகலாமே என்ற ஆசையுடன் வெண்பா வீட்டிற்குப் பத்திரிகையுடன் சென்றேன்.

என்ன ஆச்சரியம்! நம்பியும் அதே விளம்பரத்தை அப்போது பார்த்திருக்க வேண்டும்!  அவன் 'நங்கை'யிடம் கேட்டுக் கொண்டிருந்தான்:  

நம்பி:

ஆங்கிலத்தில் அன்றாடம் அக்கப்போர் கேட்டலுத்துத்
தாங்காத தாகம் தமிழைக் குடிக்க;
அரங்கை அணிசெய்தே அன்னைமொழி ஆர்க்கும்
திரைப்படம் காணலாம் சேர்ந்து.

இதற்குச் சுரீரேன்று உடனே பதில் சொன்னாள் நங்கை.
நங்கை:
தானுந்து நிற்பதற்குத் தண்டப் பணச்செலவு;
போனவுடன் சோளப் பொறிபானம் மாத்திருட்டு;
தண்டமிழ் மீனைத் தமிங்கலம் சாப்பிடும்
எண்மையைக் காணல் எதற்கு.
தானுந்து=automobile(நன்றி: C.R.Selvakumar)
தமிங்கலம்=தமிழ்+ஆங்கிலம் (நன்றி: an article in Kalki 100th yr malar)
எண்மை= இரங்கத்தக்க நிலை;பரிதாப நிலை.

பத்திரிகையைச் சுருட்டிக் கொண்டு வீட்டை விட்டு அவசரமாய் வெளியேறினேன்.

[ பல வருடங்களுக்கு முன்  எழுதியது, சிறு மாற்றத்துடன். முகநூல் தான் இதை எனக்கு நினைவூட்டியது! ]

 தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: