வியாழன், 1 டிசம்பர், 2016

விக்கிரமன் -2

சரித்திரக் கதைச் செம்மல் விக்கிரமன் 
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்


டிசம்பர் 1. விக்கிரமனின் நினைவு தினம்.
===
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பல ஆண்டுகளாக இருந்தவர், அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகளாகப் பதவி வகித்தவர், சரித்திரக் கதைச் செம்மல் விக்கிரமன் மறைவு இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். விக்ரமன் பல எழுத்தாளர்களை உருவாக்கிய குருநாதர். எனக்கு ஒரு மலர் எப்படித் தயார் செய்ய வேண்டும்? பத்திரிகை நிர்வாகம் என்றால் என்ன? என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்த குருநாதர் ஆவார்.

1980ஆம் ஆண்டு தினமணியில் மதிப்புரை பகுதியும், நாடக விமர்சனமும் நான் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது தினமணிச்சுடரை சே.ரா. (இப்போது ஸ்ரீபெரும்புதூரில் ஜீயராக இருப்பவர்) அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஏ.என். சிவராமனின் (தினமணி ஆசிரியர்) உறவினர் என்பதை அறிந்து கொண்ட சே.ரா. அவர்கள் அமுதசுரபின்னு ஒரு பத்திரிகை வருது. அதனுடைய ஆசிரியர் வேம்பு அவர்களிடம் உன்னைப்பற்றி சொல்கிறேன். நீ அமுதசுரபிக்கும் எழுது என்று சொல்லி என்னைப் பற்றித் தொலைபேசியில் விக்கிரமனிடம் தகவல் தெரிவித்தார்.

நான் அமுதசுரபி ஆபீசுக்குப் போனேன். மாடிப்படியில் ஏறும்போது ஏ.வி.எஸ்.ராஜா அவர்கள் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். 'சார் இங்கே வேம்பு' என்பது யார்? தினமணி சே.ரா. பார்க்கச் சொன்னார்! ராஜாவிடம் நான் சொன்னபோது ”எங்கள் அமுதசுரபி ஆசிரியர். அவர் பெயர் விக்கிரமன். ரொம்பவும் அவரைத் தெரிந்தவர்கள்தான் வேம்பு என்று வீட்டில் வைத்த பெயரைச் சொல்லி அழைப்பார்கள்” என்றார் ராஜா.
” நீங்கள் விக்கிரமனைப் பார்க்க வந்து இருக்கிறீர்கள். உள்ளே போங்கள் நடுநாயகமாக உட்கார்ந்திருப்பவர்தான் விக்கிரமன்” என்றார் ராஜா. அந்த மாடிப்படியிலும் எனக்கொரு ஆலோசனையைச் சொன்னார் ராஜா. இளைஞர்கள் நிறைய எழுதவேண்டும். உன்னைப் போன்றவர்கள் அமுதசுரபியில் எழுத இடம் கொடுப்பார் விக்கிரமன் என்றார்.

அன்று விக்கிரமனுடன் நடந்த சந்திப்பு எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணியது. என் வீட்டிலும் என் கிராமத்திலும் அவர் வருவதற்குக் காரணமாயிற்று. பாமா கோபாலன், அசோகன், லட்சுமி ஸ்ரீனிவாசன் இன்னும் பலருடன் அமுதசுரபி தீபாவளி மலரை உருவாக்குவதற்கு எனக்கும் இடம் அளித்தார் விக்கிரமன்.

விக்கிரமன் சிறந்த எழுத்தாளர். கடிதம் எப்படி எழுதவேண்டும், ஒருவரிடம் எப்படி பேசி சமாளிக்க வேண்டும், இதையெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.

சித்ரா தியேட்டர் சமீபம் ஓர் அச்சகத்தில் தான் அமுதசுரபி மலர் அச்சாகும். அந்த அச்சக இடத்திற்கே போய் தீபாவளி மலரை அவருடன் பல ஊர்களுக்குப் பிரித்து அனுப்பும் பணியில் நானும் (இப்போதுள்ள குமரேசன் உள்பட) இன்னும் பலரும் ஈடுபட்டது உண்டு. ஒரு பத்திரிகை ஆசிரியருக்குப் பத்திரிகை அலுவலக வேலை எல்லாம் தெரிந்து இருக்கவேண்டும் என்று நினைப்பார் விக்கிரமன். இந்த எண்ணம் என் தாத்தா ஏ. என். சிவராமனுக்கும் உண்டு.

குன்றக்குடி பெரிய பெருமாள், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் ராமச்சந்திரன், அய்க்கண், கோவி. மணிசேகரன், வாசவன், த.கி. ராமசாமி, மெர்வின், ஏர்வாடி உமாபதி, பெருங்கவிக்கோ போன்ற பல எழுத்தாளர்கள் எனக்கு அமுதசுரபி மூலம்தான் அறிமுகமானார்கள்.

டெல்லியில் எழுத்தாளர் சங்கம் 1980களில் பெரிய மாநாடு ஒன்றை நடத்தியது. அதற்கு நாங்கள் எல்லோரும் டெல்லி போனோம். எழுத்தாளர்கள் பலரை (பிரபலமானவர் உள்பட) ஒரே குடும்பம் ஆக்கிய நிகழ்வு அது. எனக்கு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியும், ராஜாமணியும், கிருஷ்ணமூர்த்தியும் (தமிழ்சங்கம்), சேஷாத்திரியும் அப்போதுதான் நண்பர்கள் ஆனார்கள்.

விக்கிரமன் மாலை நேரம் சென்னை பீச் ஸ்டேஷனுக்கு வந்து விடுவார். அங்கிருந்து மேற்கு மாம்பலம் ரயிலில் பயணமாவார். அவருடன் பல நாள்கள் நானும் பயணமாகிப் பல விஷயங்களைக் கற்று இருக்கிறேன். விக்கிரமன், ராமச்சந்திரன் (இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ்) கணேசன் ஆகியோருடன் பல திரைப்படங்களை நான் பார்த்துண்டு. திரைப்படங்கள் பார்ப்பது நமக்குப் பொழுதுபோக்கல்ல! அது நமக்கு உத்யோகம். நம் உத்யோகத்திற்கு உறுதுணை செய்யக் கூடியது என்பார். சில திரைப்படங்களுக்கு ஏர்வாடியும் வந்ததாக ஞாபகம்.

என் தாயார் வேதனையுடன் சொல்வார்களாம். யார் சொல்வதைக் கேட்கிறான்? சில வயதிலேயே அப்பாவை இழந்த அவன் ஒழுக்கமாகப் பசியில்லாமல் வாழ்ந்து படித்து நல்ல உத்தியோகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. கதை எழுதாதே.. எழுதாதே என்று தலையில் அடித்துக் கொண்டேன். அவனைக் கண்டிக்கப் பெரியவர்கள் யாரும் இல்லை. கஷ்டப்பட்டுப் படித்துப் பள்ளிப்படிப்பு முடித்தவுடன் ஸ்பென்சரில் வேலையை அவனே தேடிக் கொண்டான். அங்கிருந்தபடியே வேறு பெரிய வேலைக்கு முயற்சி செய் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவன் மீட்டிங், சங்கம், கதை, கவிதை எழுதுவது என்று அலைவான். திடீரென்று ஒரு நாள் யாருக்கும் சொல்லாமல் ஸ்பென்சர் - வௌ்ளைக்காரர் கம்பெனியிலிருந்து விலகி பத்திரிகை ஆபீசில் சேர்ந்து விட்டான்.

குறைந்த சம்பளமானாலும் ஒரு தேதிக்குக் கொண்டு வருவான். எப்படியோ இரண்டு ஆண்டுகள் பசி, பட்டினி இல்லாமல் கிடைத்ததை வைத்துக் கொண்டு நானும் அவனும் வாழ்க்கையை ஓட்டி வந்தோம். இப்பொழுது பாருங்கள். நேரம், காலம் இல்லை. வேளைக்குச் சோறில்லை. பெயர், புகழ் என்ன வேண்டிக் கிடக்கிறது? உங்கள் பையனைப் பாருங்கள்... அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து மாதம் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வாங்குகிறான்.

(என் இளம் பருவத் தோழர் பாரதி சுராஜின் தாயார் எங்கள் குடும்ப நலத்தின் மீது அக்கறை கொண்டவர்கள். என் தாயாருடன் பேசிக் கொண்டிருக்கும்போது சொல்வார்களாம்; உங்கள் பிள்ளை மனதுக்கு உகந்த வேலையில் சேர்ந்துவிட்டான். பெயரும் புகழும் அடைந்து வருகிறான்! இதற்குத்தான் என் தாயார் மேற்கண்டவாறு பதில் தந்திருக்கிறார்)

என் தாயில் குரல் நியாயமானது என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. தவறு செய்து விட்டோமோ என்று சிலசமயம் நினைப்பேன். ஆனால் என் செய்கைக்கு ஆதரவு இருந்தது. அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர், இன்ஜினியராக இருப்பவர் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று என் மாமனார் - மாமியார் எதிர்பார்க்கவில்லை. அதிகச் சம்பளம் இல்லாத பத்திரிகை அலுவலகத்தில் எனக்கு வேலை என்றறிந்தும் அவர்கள் முழு மனதோடு ஏற்றார்கள்.

பல மேதைகளுடன் ஏற்பட்ட பழக்கம் - லட்சம் கோடி ரூபாய் கொடுத்தால்கூட ஏற்பட முடியாத அனுபவம் - எனக்குக் கிடைத்தது.
மேலேயுள்ள விக்கிரமனின் வாக்குமூலம். நிஜம்தான் அவருக்குப் பல பெருமைகள் கிடைத்தன. அவருடைய மனைவியும், அவருடைய மகன் கண்ணனும் அவருடைய மகளும் பெரும் துயருக்கு இப்போது உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு இதயப்பூர்வமான என் வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல எழுத்துலக வித்தகர்களை உருவாக்கி இருப்பவர் இலக்கியப் பீடமாக என்றும் திகழ்வார் கலைமாமணி டாக்டர் அமரர் விக்கிரமன்.


[ நன்றி : http://www.dinamalar.com/supplementary_detail.asp? ]id=28614&ncat=18&Print=1  ]

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக