வெள்ளி, 2 டிசம்பர், 2016

எஸ்.ஜி.கிட்டப்பா - 1

திரையில் நிகழ்ந்த கிட்டப்பா அவதாரங்கள்
வாமனன் 


டிசம்பர் 2. எஸ்.ஜி.கிட்டப்பாவின் நினைவு தினம்.  

====
இசையே அரியணையாக இருந்த, தமிழ் நாடக மேடையின் பொற்காலத்தில், நாடக உலக சக்ரவர்த்தியாக விளங்கியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. தமிழில் பேசும் படம் வந்த இரண்டு ஆண்டுகளில், அவர், தனது 28 வயதில் மறைந்துவிட்டதால், அவர் தமிழ் திரைப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால், அவருடைய இசையின் ரீங்காரம், பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கேட்டுக்கொண்டே இருந்தது.


எஸ்.ஜி.கிட்டப்பா

எழுபதுகளில் கூட, 'கிட்டப்பா வின் பாட்டை கேட்டேன்; சின்னப்பாவை நேரில் பார்த்தேன்' என்று கவிஞர் கண்ணதாசன் எழுதினார். பியு.சின்னப்பாவும், கிட்டப்பாவின் பாதிப்பால் தான், சின்னசாமி என்ற தன் பெயரை, சின்னப்பா ஆக்கினார். வியாபாரிகள் தங்கள் பொருட்களை, அவர் பெயரை வைத்து விளம்பரப்படுத்தினர். கர்நாடக இசைவாணர்களோ, அவரது பாட்டின் அபாரமான கற்பனையை வியந்தனர். மேடைக்கும் திரைக்கும் வந்த இளம் நடிகர்களுக்கு, 'கிட்டப்பா அவதாரம்' என்று பட்டம் சூட்டப்பட்டது.

யாருக்கும் தலை வணங்காத கே.பி.சுந்தராம்பாள், தன் இலைக்குப் பக்கத்தில் இலை போட்டு, காலமெல்லாம் கிட்டப்பாவிற்குப் பரிமாறிக் கொண்டிருந்தார். கிட்டப்பா தனது அதிசயக் குரலில், 60 பாடல்களை இசைத்தட்டுக்களில் பதிவு செய்யாமல் போயிருந்தால், அவரின் அருமை நண்பர் ஆக்கூர் அனந்தாச்சாரி, அவரது அதிசய வாழ்க்கை சரிதத்தை எழுதாமல் போயிருந்தால், இன்னொரு மகா கலைஞனின் சுவடுகள், மறதி என்ற பாலைவனத்தில் மறைந்தே போயிருக்கும்.


சென்ற நூற்றாண்டின் முதல் பாதியில், ஏழைப் பையன்கள், சின்னஞ்சிறார் நடிக்கும், 'பாய்ஸ் நாடகக் கம்பெனியில்' தஞ்சம் அடைவது வாடிக்கையான ஒன்றாக இருந்தது. அப்படி வந்து சேர்ந்தவர் தான், ராமகிருஷ்ணன் என்று பெயரிடப்பட்டு, பொங்கப்பா என்றும், நண்பர்களால் கிட்டன் என்றும், நாடக உலகத்தில் கிட்டப்பா என்றும் அழைக்கப்பட்ட எஸ்.ஜி.கிட்டப்பா.

வாழ்ந்து கெட்டவரான கங்காதர அய்யரின் பத்து குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் கிட்டப்பா. தனது தமையன்மார்களான சுப்பையா, செல்லப்பா ஆகியோரின் அடியொற்றி நாடக உலகத்திற்கு வந்தார். ஆறு வயதில், சங்கரதாஸ் சுவாமிகளின், 'சமரச சன்மார்க்க நாடக சபை' மதுரையில் நடத்திய நாடகத்தில், பிரார்த்தனை கீதம் பாடியபடி மேடையேறினார்.

ஆறு வயதிலேயே சிங்கப்பூர் சென்று, அங்குள்ள தமிழ் ரசிகர்களைக் கொள்ளை கொண்டார். அற்புதமான குரல்வளமும், அதிசயமான சங்கதிகளை தெய்வ பலத்தால் அழகாகப் பாடும் திறனும், ராக்கெட் வேக முன்னேற்றத்தைக் கொடுத்தன. எட்டு வயதில் கொழும்பு சென்று, இலங்கையில் வெற்றிக் கொடி நாட்டினார்.

வாலிபரான பிறகு, சுந்தராம்பாளுடன் அதே கொழும்புவில் அவர், 'வள்ளி திருமணம்' நடித்தபோது, மேடைக் காதலர்கள், வாழ்க்கையிலும் இணைந்தனர். மின்சார ஜோடனைகளுடனும், பிரமிக்க வைக்கும் அரங்க நிர்மாணத்துடனும், கன்னையா நாயுடு தந்த தசாவதாரம், ஆண்டாள் கல்யாணம் போன்ற நாடகங்களில் நடுநாயகமாகவும், அவற்றின் நாதஜீவனாகவும் விளங்கினார் கிட்டப்பா.



இத்தகைய நாடகங்களில், கிட்டப்பா இசைத்த, 'கோபியர் கொஞ்சும் ரமணா' உடனும், பாமா விஜயத்தில் அவர் பாடிய, 'காமி சத்யபாமா' உடனும், பிற்காலத்தில் திரையில் ஒலித்த அதே பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், கிட்டப்பாவின் இசை வல்லமை விளங்கும்.

கிட்டப்பாவின் பாணியை முக்கால்வாசி தன் பாட்டில் கொண்டு வந்ததால், டி.ஆர்.மகாலிங்கம், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்த்திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டினார். 'ஸ்ரீவள்ளி' படத்தில் அவருக்கு கிடைத்த முதல் வெற்றிக்கும், கிட்டப்பாவின் சங்கீத நாதத்திற்கும் மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு ஒரு முக்கிய காரணம்.n



தொடர்புள்ள பதிவுகள்:


Elloraiyum - SG Kittappa

கோபாலக்ருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம் நாடகத்திற்காக S.G.கிட்டப்பா பாடிய

'நாளைப்போகாமல் நான் இருப்பேனோ'







'ஆண்டவன் தரிசனமே' . ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் கிட்டப்பாவிற்கே என்று

இயற்றிக் கொடுத்த ( முத்திரை இல்லாத ) பாடல்.





'



கருத்துகள் இல்லை: