ஞாயிறு, 4 டிசம்பர், 2016

ந.பிச்சமூர்த்தி - 1

ந.பிச்சமூர்த்தி: காலத்தை வென்ற தச்சன்!
சுப்பிரமணி இரமேஷ்

டிசம்பர் 4. ந.பிச்சமூர்த்தியின் (15.8.1900- 4.12.1976) நினைவு நாள்.

வால்ட் விட்மன் மற்றும் பாரதியாரின் படைப்புகளால் ஊக்கம் பெற்ற ந.பிச்சமூர்த்தி, தானும் அதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார். விளைவு, யாப்பைத் துறந்த புதுக்கவிதை எனும் வடிவம் தமிழுக்குக் கிடைத்தது. இப்புதிய வடிவத்தை முன்னிலைப்படுத்துவதில் ந.பிச்சமூர்த்தி எதிர்கொண்ட விமர்சனங்கள் அசுரத்தனமானவை.

1963ஆம் ஆண்டு "எழுத்து' இதழில் வெளியான பிச்சமூர்த்தியின் மிக நீண்ட கவிதை "வழித்துணை'. வழித்துணையின் புரிதல் குறித்த அடிப்படையான வினாக்களால் கல்விப்புலம் சார்ந்த இடங்களில் ந.பிச்சமூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

""என்றோ நமது புராணங்களில் படித்த ஒரு கதை இதற்கு ஆதாரம். கதையின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டேன். கருவுக்கும் உருவுக்கும் இடைப்பட்ட சப்த தாதுக்கள் என்னுடையவை'' என்ற அவிழ்க்க முடியாத முடிச்சுகளோடு இக்கவிதையை ந.பிச்சமூர்த்தி எழுதியுள்ளார். அந்தப் புராணக் கதை எது என்பதுதான் இக்கவிதையை அணுக முடியாதவர்களின் முதல் கேள்வி.

463 அடிகளைக்கொண்ட இந்நீண்ட கவிதை ஒரு காவியத்திற்குரிய அனைத்துத் தன்மைகளையும் பெற்றுள்ளதாக விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். "கற்பனை, படிமம், வர்ணனை, நடை, உத்தி, அமைப்பு, மதிப்பு ஆகிய ஏழும்தான் கருவுக்கும் உருவுக்கும் இடைப்பட்ட சப்த தாதுக்கள்' என்பது சி.சு.செல்லப்பாவின் கருத்து. இக்கவிதை எழுதப்பட்டு ஐம்பதாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றுவரை பாராட்டுதல்களையும் விமர்சனங்களையும் தொடர்ந்து சந்தித்து வருவதற்கு முதல் காரணம், அந்தப் புராணக் கதை எது என்று தெரியாமல் இருப்பதுதான். இக்கவிதை, ந.பிச்சமூர்த்தியைப் பல கோணங்களில் மதிப்பிடுவதற்கான வாசல்களைத் திறந்து வைத்துள்ளது.

பல ஆண்டுகளாக மனிதப் பாத்திரங்களைச் சிருஷ்டிக்கும் பணியைக் கடமையென செய்துவரும் பண்டைப் பழங்குயவனான பிரம்மன், தனது பணியினைச் செய்து கொண்டிருந்த வேளையில், அவன் செய்த மட்பாண்டங்கள் படைபோலத் திரண்டு எழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். அவனுடைய படைப்புகள் பூரணத்துவம் பெறாமல் அரைகுறையாக இருக்கின்றன. அவனால் சிருஷ்டிக்கப்பட்ட படைப்புகள் அவனை எதிர்த்துக் கேள்விகள் கேட்கின்றன.

அக்கேள்விகளைக் கேட்டு அதிர்ந்துபோன பண்டைப் பழங்குயவன் நிலைகுலைந்து மண்ணில் விழுகிறான். அவ்வாறு விழுந்தவன் குமரபுரக் காட்டில் கண் திறக்கிறான். குமரபுரத்தில் தச்சன் ஒருவன் வாழ்கிறான். குயவனுக்கு நேரெதிரான குணங்களை தச்சன் பெற்றிருக்கிறான். இவன் தச்சன், கொல்லன், கொத்தன், கலைஞன் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவன். எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒரு கைக்கோலைச் செய்ய மரம்தேடி வனத்திற்குச் செல்கிறான். நல்ல மரத்தைத் தேர்ந்தெடுக்க அவனுக்கு ஆறு மாத காலமாகிறது. இந்த ஆறுமாத காலத்தில் குயவனாக இருந்திருந்தால் ஆறு இலட்சம் பாண்டங்களை அறுத்துத் தள்ளியிருப்பான். இதுதான் குயவனுக்கும் தச்சனுக்கும் உள்ள வேறுபாடு. காலத்தின் குளம்படிக்குப் பயந்து கடமையாற்றுபவன் குயவன்; காலத்தைக் கடந்தும் கடமையாற்றுபவன் தச்சன்.

ந.பி., திருமணம் செய்துகொண்ட அடுத்த சில நாள்களிலேயே அவ்வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்பி, ரமண மகரிஷியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். "என்னைப் போல் குடும்பத் தளைகளில் சிக்கியவர்களுக்கு விடுதலை பெறும் வழி உண்டா?' என்று மகரிஷியிடம் கேட்டிருக்கிறார். "பழம் கனிந்தால் தானாக உதிர்ந்து விடும். அதைப்பற்றி இப்பொழுது ஏன் கவலை?' என்ற ரமண மகரிஷியின் பதில் அடுத்த ஐம்பது ஆண்டுகள் அவரை நம்பிக்கையோடு வாழ வைத்திருக்கிறது. இந்த நிகழ்வுகளெல்லாம் சேர்ந்துதான் "வழித்துணை' கவிதையைப் பின்னிருந்து இயக்குகின்றன.

 ந.பி.யின் தோற்றம் அவரை ஒரு வேதாந்தியாகக் காட்டுகிறது. ஆனால், இக்கவிதை வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்டதில்லை. பிரம்மன் வெல்லமுடியாத ஒருவனில்லை; மனிதனாலும் பிரம்மனை வெற்றிகொள்ள முடியும் என்பதுதான் இக்கவிதையின் மையம்.

பண்டைக் குயவனாக புதுக்கவிதை எதிர்ப்பாளர்களையும், தச்சனாக ந.பிச்சமூர்த்தியையும், கைக்கோலாக புதுக்கவிதையையும் குறியீடுகளாக மாற்றிப் பார்ப்பதற்கும் வழித்துணையில் இடமிருக்கிறது. காலம் கடந்தும் ந.பிச்சமூர்த்தி உருவாக்கிய கைக்கோலாக புதுக்கவிதை ஒளிர்கிறது.

தச்சனும் பிரம்மனால் உருவாக்கப்பட்டவன்தான். ஆனால், இவன் தன்னுடைய கலைப்படைப்பால் காலம் கடந்தும் நிற்கிறான். மனிதனுக்கும் பிரம்மனுக்குமான போராட்டத்தில் மனிதன் எவ்வாறு பிரம்மனை வெற்றி கொள்கிறான் என்பதுதான் வழித்துணையின் கரு. "வழித்துணை' எழுதிய ந.பிச்சமூர்த்தி மட்டுமல்ல கவிதையும் காலம் கடந்து நிற்கிறது.

[ நன்றி: தினமணி ] 

தொடர்புள்ள பதிவு:
ந.பிச்சமூர்த்தி

1 கருத்து:

கோமதி அரசு சொன்னது…

ந. பிச்சமூர்த்தி அவர்களைப் பற்றி நிறைய விவரங்கள் தெரிந்து கொண்டேன், நன்றி.