செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தி.ஜானகிராமன் - 3

கங்கா ஸ்நானம்
தி.ஜானகிராமன் 



தி,ஜா. விகடன் தீபாவளி மலர் ( 1956) -இல் எழுதிய கதை.
====

[ விகடன் - 56 தீபாவளி மலர் ] 


கங்கா நதி சுழித்து ஓடுவதைப் பார்த்துக்கொண்டு நின்றார் சின்னசாமி. முக்கால் தென்னை உயரம் இருக்கும் போலிருந்தது கரை. அங்கு உள்ள மாடி வீட்டு விளக்கின் நீலவொளி மங்கலாக நீர் மீது விழுந்திருந்தது. நீருக்கும் ஊருக்குமாக அலைந்தது நினைவு. காசி, கங்கை என்ற பிரக்ஞை இல்லை அவருக்கு.
''ஏன்னா?''
''ம்..?''
''ரண்டு கும்மாணம் காவேரி இருக்குமாங்கறேன் அகலம்?''
''ம்ம், இருக்கும்.''
துரையப்பா சிரிப்பது போலிருந்தது அவருக்கு. ஒரு தடவை முதுகு உதறிற்று.

''இன்னும் அதையே நினைச்சிண்டிருக்காப்போலிருக்கு?'' என்று நீரில் கால் அலம்பிக் கொண்டே அவர் முகத்தைப் பார்த்தாள் அவள்.
''ம்?''
''ஸ்நானம் பண்ணலியா? எத்தனை நாழி நிக்கறது?''
''ம்ம்'' என்று படி இறங்கினார் அவர். ''காசிக்குப் போனாலும் கர்மம் விடாதும்பா! இவன் நமக்கு முன்னாடியே வந்து நிக்கறானே! நினைக்க நினைக்க ஆச்சர்யமா இருக்கு. அந்த மூவாயிரம் போக, மிச்சம் ஆயிரம் ரூபாதானே இங்கே நம்மைக் கொண்டு வந்திருக்கு. அக்காவுக்காக நாம இங்க வரவாவது? அவன் முன்னாடியே வந்திருக்கவா வது? தெய்வம்தான் 'என்ன பண்ணப் போறார், பார்ப்போம்'னு விளையா டறதா?''
''எனக்கும் ஒண்ணும் புரியத் தான் இல்லை. ஸ்நானத்தைப் பண்ணிப்பிட்டு யோசிச்சுக்கலாமே! ஜாகைக்காரர் கிட்ட சொல்லி, சாமானை எடுத்துண்டு, வேறு இடம் பார்த்துண்டு போயிட்டாப் போறது. கங்கா மாதா ஏதாவது வழி கொடுப்பா!''


லடக் லடக்கென்று ஒரு படகு ஓசையிட்டுக் கொண்டே கடந்து போயிற்று.
சின்னசாமி படிகளில் இறங்கி முழுகினார்.
''அப்பாடா, ஸ்படிகம் மாதிரி இருக்கும் ஜலம்'' என்று நீரைக் கையில் எடுத்து விட்டார். உடம்பு புல்லரித்தது. நீரின் தட்பம், சந்தர்ப்பங்கள் கேலி செய்கிற விசித்திரம் - இரண்டும்தான்!
சாமான்களை வண்டியிலிருந்து உள்ளே கொண்டு வைத்து, 'அப்பாடா' என்று உட்கார்ந்ததும், ஜாகைக்காரர் வந்து பேச்சுக் கொடுத்தார்.
''எந்த ஊர் உங்க ளுக்கு?''
''சவுக்கநத்தம்.''
''தஞ்சாவூர் ஜில்லாவா?''
''ஆமாம்!''
''எங்களுக்கும் தஞ்சாவூர் ஜில்லாதான், ஸ்வாமி! சொல்லிக்கிறதுக்கு இப்ப ஒண்ணு மில்லை. தாத்தா நாள்ளேருந்து காசி மனுஷாளாப் போயிட் டோம். சப்தலோகம் போனா லும் குலதெய்வம் போயிடுமோ? காசி க்ஷேத்ரம்தான். இப்ப காசிதான் ஊரு. அதுக்காக? குடும்ப தெய்வம் வைத்யநாதன் இல்லியோ?''
மூன்று நாள் அழுக்கை உடம்பிலிருந்து தேய்த்துக்கொண்டு இருந்த சின்னசாமிக்குச் சிரிப்பு வந்தது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் மடியில் வளர்த்த ஊரை நினைத்து நினைத்து ஜாகைக்காரர் மாய்ந்து போனதும் ஏங்கியதும்...



''போன தடவை வைத்தீஸ்வரன் கோயில், சீயாழி, மாயவரம், கும்ப கோணம், திருவாரூர்... ஒரு ஊர் விடலை. திருவாரூருக்குப் பக்கம் தானேய்யா, நேத்திக்கு வந்திருக்காரே, அவர் ஊரு?'' என்று பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த உதவிக்காரரைக் கேட்டார்.
''ஆமாம். விளாஞ்சேரியாமே! உங்களுக்குத் தெரியுமோ?'' என்று சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடியை நிமிர்த்திக்கொண்டே திரும்பினார் உதவிக்காரர்.
''விளாஞ்சேரியா? என் அக்காவை அந்த ஊரில்தான் கொடுத்திருந்தது. அவ பணத்திலேதான் ஸ்வாமி நாங்கள் காசிக்கு வந்திருக்கோம்...''
''அப்படின்னா இவரையும் தெரிஞ்சிருக்கும்...''
''யாரு?''
''நேத்திக்குக் காலமே வந்தார் பிரயாகையிலிருந்து! துரையப்பானு பேராம். கோயிலுக்குப் போயிருக்கார், பூஜை பார்க்க.''
''துரையப்பாவா?'' - தலையில் இடியைத் தள்ளினாற் போலிருந்தது சின்னசாமிக்கு.
''ம்.''
''கறுப்பா, ரெட்டை நாடியா?''
''ம்.''
''நெத்தியிலே... வலது நெத்தியிலே தழும்பு இருக்கோ?''
''அவரேதான்! ஸ்வாமி விஸ்வேஸ்வரருக்கு ராத்திரி பூஜை பார்த்துட்டு வந்துடுவார்.''
''ஹ்ம்.''
சின்னசாமிக்கு ஒன்றும் ஓட வில்லை. துரையப்பா சிரிப்பது போல் இருந்தது. பேய் மாதிரி சிரிப்பு. ''இவன் எங்கே வந்தான்? இங்கு வரவேண்டும் என்று எப் படித் தோன்றிற்று? அதுவும் நான் வரும்போதா? அதே ஜாகையா?'' என்று மனம் கேள்வி கேள்வியாகக் கேட்டுக் கலங்கிற்று.

கரையேறித் தலையைத் துவட்டிக்கொண்டு, பையிலிருந்து பட்டை எடுத்து உடுத்திக்கொண்டு, மீண்டும் இறங்கிக் காலை அலம்பி விபூதியைப் பூசிக்கொண்டு ஜபத்திற்கு உட்கார்ந்தார்.
அக்கா 'காசி... காசி...' என்று புலம்பிக்கொண்டே இருந்தாள். விளாஞ்சேரியில் அவள் புருஷனுடன் வாழ்ந்து, மூன்று வருஷம் குடித்தனம் நடத்திவிட்டு, நாலாவது வருஷம் பிறந்த வீட்டுக்குத் திரும்பிவிட்டாள். நல்லவேளையாக அப்பா, அம்மா இல்லை இந்த வேஷத்தைப் பார்க்க! எண்ணி ஏழு நாள் படுக்கையில் கிடந்தார் அவள் புருஷன். எட்டாம் நாள்...
காட்டு வழியில் அலைகிற புது ஆளைப்போல, புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தாள் அவள். மூன்று வருஷம் வீட்டோடு முடங்கிக் கிடந்தவளை, 'துடைகாலி... துடைகாலி' என்ற அவமானத்தில் குன்றிக்கொண்டு இருந்தவளை, ஏக்கமும் நோயும் தின்று வந்த சுருக்கு...
புருஷனுக்கு இருந்த நிலத்தை விற்கச் சொன்னாள். அது நாலாயிரம் ரூபாயாக மாறி வந்தது.
முதல் நாள் வரையில் பிரக்ஞை இருந்தது.
''சின்னசாமி, நான் இப்படிக் கிடக்கிறது துரையப்பாவுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா வந்திருப்பார். அவருக்கு என்ன பாக்கி இவர் கொடுக்கவேண்டியது?''
கணக்குப் பார்த்ததில், மூவாயிரத்து நாற்பத்தேழு ரூபாய் என்று வந்தது.
''அவர்கிட்ட போய் தள்ளிக் கிள்ளிக் கேட்டு மன்றாட வாண்டாம். பைசாமாறா ஜாடாக் கொடுத்துவிடணும், தெரிஞ்சுதா?''
''உடம்பு தேறி வரட்டும், அக்கா! இப்ப என்ன அந்தக் கவலை?''
''தேறாதுடா, சின்னசாமி. எனக் குத் தெரியாதா? இந்தக் கடனைத் தீர்த்துக் கண்ணாலே பாத்துட்டுப் போயிடலாம்னு நெனச்சேன். நடக்கலே. கொண்டு கொடுத்துடு!''
''சரி.''
''அப்புறம்... காசி... காசின்னு கோட்டை கட்டிண்டிருந்தேன். அதுவும் நடக்கலே. நீயும் அவளுமாப் போய் கங்கா ஸ்நானம் பண்ணிப்பிட்டு என்னையும் நினைச்சிண்டு - ஆமாம்... ரயில் சார்ஜ், க்ஷேத்ரச் செலவு எல்லாம் இதிலேருந்து எடுத்துக்கவேண்டியது. நீ ஒரு பைசா உன் கையி லேருந்து போடப்படாது...''
மறுநாள், வீட்டில் ஒரு நபர் குறைந்துவிட்டது. அர்த்தமில்லாமல் பிறந்து, வாழ்ந்து, மடிந்து... புருஷன் வாங்கின இந்தக் கடனைத் தீர்க்கத்தான் பிறந்தாயா?
ஒரு மாதம் கழித்து, மூவாயிரத்துச் சொச்சத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார் சின்னசாமி.
விளாஞ்சேரிக்குப் போகும்போது அஸ்தமித்துவிட்டது. குளு குளுவென்று காற்று. துரையப்பா வீட்டுத் திண்ணையையும் வாச லையும் பார்த்துக்கொண்டே யிருக்கவேண்டும் - வழவழவென்று... சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார் துரையப்பா.
''யாரு?''
''நான்தான்.''
ஆளோடிக்கு மேல் அரிக்கேன் விளக்கு தொங்கிற்று.
''நான்தான்னா..?''
''சின்னசாமி.''
''அட, சின்னசாமியா?''
''ஆமாம், மாமா!''
''வா, வா, எப்ப வந்தே?''
''இப்பதான்.''
''என்னடாது? சுந்தராம்பா...''
''ஆமா! அவ்வளவுதான் பிராப்தம்.''
''என்ன உடம்புக்கு?''
''உடம்பு என்ன? ஏக்கம் தான்!''
''த்ஸ... என்னமோ போ! அவனும் கொடுத்து வைக்கல்லே, நீயும் கொடுத்து வைக்கல்லே...''
அரை மணி, ஊர்ப் பேச்செல்லாம் பேசினார்கள்.
''எங்கே இப்படி இவ்வளவு தூரம்?''
''கணக்குத் தீர்க்கலாம்னு வந்தேன், மாமா.''
''ஆமாம். பிரமாதக் கணக்கு!''
''முத நாள் கூப்பிட்டு கணக்கெல்லாம் பார்க்கச் சொன்னா அக்கா. கடனோட போறமேனு அவளுக்குக் குறைதான்.''
''த்ஸ... பிரமாத கடன்!''
''மூவாயிரத்து நாற்பத்தேழு ஆயிருந்தது அப்ப.''
''ம்.''
''அப்புறம் ஒரு மாசம் ஆயிருக்கே?''
''ஆமா, ஒரு மாச வட்டியிலே இன்னொரு கிராமம் வாங்கப் போறேன். அசடு! பணம் கொண்டு வந்திருக்கியா என்ன?''
''ஜாடா கொண்டு வந்திருக்கேன், மாமா.''
''இதுக்காகவா வந்தே இவ்வளவு தூரம்? ஒரு லெட்டர் போட்டா நானே வந்து வாங்கிண்டு போகமாட்டேனா... நன்னா அலைஞ்சே, போ!''
''அழகாயிருக்கே! நான் வந்து கொடுக்கிறது, மரியாதையா...''
''சரிடா சரி, காலமே வரவு வச்சுக்கலாம், போ.''
''அப்ப பணத்தை வாங்கி வெச்சுக்குங்கோ. காலமே வரவு வச்சுக்கலாம். நானே இங்கதான் படுத்துக்கப் போறேன். காத்து கொட்றது இங்கே.''
''இப்ப என்னைக் கிளப்பணும் உனக்கு. ம்... சரி, கொடு.''
சின்னசாமி பணத்தைக் கொடுத்ததும், உள்ளே போய்ப் பூட்டி வைத்துவிட்டு வந்தார் துரை யப்பா.
''சரி, உள்ள வாயேன். கால் அலம்பிண்டு சாப்பிட்டுடலாம்.''
சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் நடுநிசி வரையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஊர் ஆறரை மணிக்கே தூங்கிவிடுகிற வழக்கம். சலசலப்பு கூட நின்றுவிட்டது. சுவர்க்கோழி மட்டும் கத்திற்று. மாட்டு மணி எங்கோ ஒலித்தது. எங்கோ குழந்தை அழுதது.
திண்ணையில் படுக்க ஒரு ஜமக்காளத்தையும் தலையணையையும் கொடுத்துவிட்டு, கதவைத் தாழிட்டுக்கொண்டு போனார் துரையப்பா. சின்னசாமி படுத்துக் கொண்டார். நினைவு அலைந்தது. துரையப்பா பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான்! எவ்வளவு மரியாதை... விட்டுக் கொடுக்கிற தன்மை... சாயங்காலம் சின்னசாமி பஸ்ஸிலிருந்து விளாஞ்சேரி முக்கில் இறங்கி வந்தபோது, துரையப்பாவின் அன்னதானத்தைப் பற்றித்தான் யாரோ பேசிக் கொண்டு இருந்தார்கள். யார் எப்போது போனாலும் துரையப்பா வீட்டில் சாப்பாடு கிடைக்குமாம்.
ஜிலுஜிலுவென்று வீசின காற்று கூட நின்றுவிட்டிருந்தது. சின்னசாமி அயர்ந்துவிட்டார்.
காலையில் முறுக முறுக வார்த்துப் போட்ட தோசை நாலு. கடைசித் தோசைக்குத் தயிர். ஏன் என்று கேட்கிற காபி. எல்லாம் முடிந்து கூடத்திற்கு வந்தால், வெயில் தெரியாத ஜிலுஜிலுப்பு. வெயில் தெரியாத தரை. சின்னசாமிக்கு நெஞ்சு குளுகுளுவென்றது.
துரையப்பா உள்ளேயிருந்து பத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து எதிரே உட்கார்ந்து மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண் டார். பத்திரத்தைப் பார்த்தார். கணக்குப் போட்டுவிட்டு நிமிர்ந் தார்.
''வரவு வச்சுப்பிடலாமா?''
''ம்'' என்றார் சின்னசாமி.
''பணத்தை எடு.''
''நீங்கதானே வச்சிருக்கேள்?'' என்று, அவர் எங்கோ நினைத்துக் கொண்டு பேசுகிறதைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் சின்னசாமி.
''நான் வச்சிருக்கேனா?''
''ஆமாம், மாமா! ராத்திரி வாங்கி வச்சேளே?''
''என்ன வாங்கி வச்சேன்?''
''என்ன மாமா இது? மூவாயி ரத்து நாற்பத்தேழு கொடுத்தேனே! சேப்புக் கடுதாசியிலே, கனக் கடுதாசியிலே பொட்டணமா கட்டியிருந்துதே?''
''என்னடா சின்னசாமி விளையாடறே, பச்சைக்குழந்தை மாதிரி!''
''விளையாடறேனா? என்ன மாமா இது?''
''மாமாவாவது, மருமானாவது? எடுடா, நாழியாச்சு! நான் களத்துக்குப் போகணும்.''
''பீரோவைத் திறந்து பாருங்கோ, மாமா!''
''என்னடா இது, பணம் கொண்டு வரலையா நீ?''
சின்னசாமிக்கு வயிற்றைக் கலக்கிற்று. மாமா சும்மாவாவது விளையாடுகிறார் என்ற நினைவும் போகவில்லை.
''எடுத்துண்டு வாங்கோ, மாமா!''
''என்னடா, எடுத்துண்டு வாங்கோ, எடுத்துண்டு வாங்கோன்றியே... விளையாட்டு வேடிக்கைக்கு இதுவா நேரம்?''
''மாமா, நிஜமாவா சொல்றேள்?''
''சரி, நான் எழுந்து போகட்டுமா? எனக்கு வேலை இருக்கு.''
''மாமா... மாமா..!''
''நல்ல மாமா, போடா!''
சின்னசாமிக்குப் பகீர் என்றது.
''சேப்புப் பொட்டணம், மாமா...''
''சரிடா, ரயில்லே வந்தியோ, பஸ்ஸிலே வந்தியோ?''
''பஸ்ஸிலே!''
''எங்கே வச்சிண்டிருந்தே?''
''பையிலே..! ஜாக்கிரதையா வச்சுண்டு, உங்ககிட்டே கொடுத்தேனே! காலமே வரவு வச்சுக்கலாம்னு சொல்லி, நீங்க கூட 'என்னைக் கிளப்பணும் உனக்கு'னு சொல்லிண்டே வாங்கி உள்ளே கொண்டு பூட்டி வச்சேளே?''
''அடப் பாவி! நெஜம் மாதிரி சொல்றயே!'' என்றார் துரையப்பா. பேயறைந்தாற்போலிருந்தது அவர் முகம். ''இங்க வந்து பார்டா பாரு... உடம்பெல்லாம் கூசறதே எனக்கு...'' என்று உள்ளே போய் பீரோவைத் திறந்து போட்டார். இருப்புப் பெட்டியைத் திறந்து போட்டார். பெட்டிகளைத் திறந்து போட்டார். ''பார்றா, பாரு.... உன் கண்ணாலே பாரு.''
மண்டையில் ஓங்கி அடித்தாற் போல நின்றார் சின்னசாமி. அம்மாமியிடம் சொன்னார். வெளியே ஓடினார். கணக்குப் பிள்ளை, பட்டாமணியத்திடம் முறையிட்டார். நாக்கு உலர, உதடு துடிக்க, உடல் நடுங்கிற்று. ஊரில் இருக்கிற ஏழு ஆண்களும் வந் தார்கள். துரையப்பா பைத்தியம் பிடித்தாற்போல உட்கார்ந்திருந்தார் சாய்வு நாற்காலியில்! கூடத்திலுள்ள அலமாரிகள் திறந்து கிடந்தன. துணிகளும் பாத்திரங்களும் வெளியே கிடந்தன. யாரும் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.
''என்ன மாமா? என்னமோ சொல்றானே இவன்!'' என்றார் பட்டாமணி.
''என்னமோ விளையாடறான்னு நெனச்சேன் முதல்லே. நிஜம் நிஜம்னு சத்யம் பண்றான். எனக்கு இடி விழுந்தாப்ல ஆயிடுத்து. உக்காந்துட்டேன். நீங்க வீடு முழுக்கச் சோதனை போட்டுடுங்கோ.''
கர்ணமும் பட்டாமணியமும் எல்லாவற்றையும் மீண்டும் விசாரித்தார்கள். சின்னசாமி வாய்விட்டு அழுதுவிட்டார்.
''நீங்க இப்படி மோசம் பண்ணு வேள்னு நினைக்கலே, மாமா'' என்று குரல் கம்மித் தழுதழுத்தார் சின்னசாமி.
''அடப் பாவி! வாய் அழுகிப் போயிடும்டா! அன்னதாதாடா! மகான்டா! மலை மலையா அன்னத்தைக் கொட்டியிருக்கார் மனுஷன். சொல்லாதேடா!'' என்றார் கணக்குப் பிள்ளை.
தொலைவில் இருளில் கங்கைப் பாலத்தில் ரயில் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தது. அயலூரிலிருந்து வந்து விளாஞ்சேரியில் இப்படி மாட்டிக்கொண்டு... யார் யாரிடமோ முறையிட்டு, அழுது, கெஞ்சி... எது பலித்தது?
துரையப்பா கோர்ட் ஏறிவிட்டார். ஜட்ஜ் தீர்ப்பு செய்த லக்ஷணம்... வட்டியில்லாமல் முதலாவது கொடுத்துவிடுவது என்று ராஜியாகப் போகச் சொல்லி... அதற்கு மாட்டேன் என்று சொன்னபோது, முழுவதற்கும் செலவு உள்பட தீர்ப்புக் கூறி விடுவதாக அவர் பயமுறுத்தி... கடைசியில் ராஜிக்கு ஒப்புக்கொண்டு, தம் சொந்தப் பணத்தைக் கொடுத்து...
''நாலு வருஷமாகிவிட்டது இந்த நாடகம் எல்லாம் நடந்து! அக்காவின் இரண்டாவது ஆசையை நிறைவேற்றி விடவேண் டும் என்று வந்தால், தெய்வம் முதல் நாளே, அதுவும் அதே ஜாகையில் இவனை இறக்கிச் சிரிக்கிறதே...'' என்று சிந்தனையில் லயித்தார் சின்னசாமி.
''போகலாமா?'' என்று எழுந்தாள் மனைவி.
''ம்.''
சின்னசாமி எழுந்தார். இரண்டு படி ஏறியதும், ''இரு, நான் ஜபமே பண்ணவில்லை. துரையப்பாவை நினைத்து நினைத்து குரோதப்பட்டுண்டே இருந்தேன்'' என்று மீண்டும் இறங்கி ஸ்நானம் செய்தார். ''அவன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போடுங்கோ'' என்றாள் அவள்.
கரையேறி வரும்போது... ''அவரைப் பார்த்து பழசெல்லாம் கிளற வாண்டாம். 'உன் பாவத் துக்கும் முழுக்குப் போட்டுட்டேண்டா'ன்னு நினைச்சுண்டு சாதாரணமா பேசுங்கள். அவர் இன்னும் கோயில்லேருந்து வரலேன்னா, மூஞ்சியிலே முழிக்கிறதுக்கு முன்னாடி வேற ஜாகைக்குப் போயிடுவோம்'' என்றாள்.
''எப்படியிருக்கோ, வா பார்க்கலாம்'' என்று வடக்கே கண்ணைத் திருப்பி, ஒளிவீசும் ஸ்நான கட்டங்களைப் பார்த்துக்கொண்டு படியேறினார் சின்னசாமி.

[ நன்றி : விகடன்; ஓவியம் : ஸாரதி, கோபுலு ]
====
தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜானகிராமன்

திங்கள், 27 பிப்ரவரி, 2017

சுஜாதா - 2

ரஞ்சனி 
சுஜாதா





பிப்ரவரி 27. சுஜாதாவின் நினைவு தினம்.

இதோ அவர் ‘விகடனில்’ 1969-இல் எழுதிய ஒரு ’சங்கீத’க் கதை!

====



ஸார்! நான் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படிச்சேன். அதற்கப்புறம் படிப்பு ஏறலே. நான் எங்கப்பாவுக்கு இரண்டாவது பையன். என் அண்ணா நல்ல வேலையில் இருக்கான். படிச்சு நெட்டுருப் போட்டு, பரீட்சை எழுதிப் பாஸ் பண்ண எனக்குச் சிரத்தை இல்லை; பொறுமை இல்லை; வரலை. அம்மா அப்பாவுக்குக் கவலையா இருந்தேன். எங்க குடும்பத்திலே சங்கீதம் கிடையாது. ஆரத்தி எடுக்கறபோது கூட எங்கம்மா பாடினது கிடையாது. எங்கப்பா நியூஸ் கேக்கறதுக்கு மட்டும்தான் ரேடியோ வைத் திருப்புவார். அப்படி இருக்க எனக்கு எங்கேயிருந்து இந்த வாத்தியத்தின் மேலே மோகம் வந்தது? அது ஆச்சர்யம்.

எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு... நியூஸூக்கு ஒரு நிமிஷம் பாக்கியிருக்கிறபோது ரேடியோவிலே ஒத்தை வீணை மட்டும் வெச்சான். அப்பதான் தெளிவா எனக்கு ஆசை ஏற்பட்டுது. அது, ரஞ்சனி ராகம்னு கேள்விப்பட்டிருக்கேன்.

மறுநாள் உள்ளூர் ராமய்யங்காரிடம் போய், ''ஸ்வாமி! இந்த வீணை வாத்யம் கத்துக்கறதுக்கு எத்தனை நாளாகும்?''னு கேட்டேன்.

''யார் கத்துக்கணும்?'' என்று கேட்டார்.

''நான்தான்'' என்றேன்.

''முதல்லே நீ சிகரெட் குடிக்கிறதை நிறுத்தணும். வேஷ்டி கட்டிக்கொண்டு வரணும். வீணை தெய்விகமான வாத்யம். அதை அணுகறதுக்கு முன்னாலே மனுஷனுக்குச் சுத்தம் வேணும்...'' அப்படி இப் படின்னு சொன்னார். மாசம் நாப்பது ரூபாய் கேட்டார்.

அப்பா கிட்டப் போய், ''அப்பா, நான் வீணை கத்துக்கலாம்னு இருக்கேன்''னேன்.

''போடா, போய் மளிகைக் கடையிலே பொட்டலம் மடி. செப்டம்பருக்குப் படிக்கத் துப்பில்லை. வீணை கத்துண்டு என்ன வெங்கடேச பாகவதருக்கு சுருதி போடப் போறயா?'' என்றார்.


அண்ணாவுக்குக் கடிதம் எழுதினேன். ஐ.ஏ.எஸ். படிச்சுட்டு பீஹாரிலே என்னவோவா இருக்கான். ''உன் சகோதரன் போல நீயும் முன்னுக்கு வரவேண்டாமா? இண்டஸ்ட்ரியல் லய்னிங் இன்ஸ்டிட்யூட்டிலே சேர்ந்து, ஏதாவது தொழில் கத்துக்கொள்ளேன். அதுக்கு வேணா பணம் அனுப்பறேன்''னு பதில் எழுதி, நிறையப் பொன்மொழிகளும் எழுதி இருந்தான். 'சரி, தொழில் கத்துக்கறேன்; பணம் அனுப்பு'ன்னு எழுதினேன். பணம் அனுப்பலை. ஒரு அப்ளிகேஷன் ஃபாரம் அனுப்பினான்.

அம்மா கிட்ட கேட்டுப் பார்த்தேன். ''என்கிட்ட ஏதுடா காசு? ஒண்ணு செய்யேன். ஏதாவது வேலை பார்த் துக்கொள். அதிலே வர காசை நீ ஒண்ணும் எங்க கிட்டே கொடுக்க வேண்டாம்'' என்றாள். வேலையாவது கிடைக்கிறதாவது!

தைரியமா ஒரு காரியம் செஞ்சேன். ஒரு காயலான் கடையிலே எங்க வீட்டுச் சைக்கிளை வித்துட் டேன். திரும்பி வந்து அப்பா கிட்ட, மைதானத்திலே சைக்கிள் தொலைந்து போய்விட்டதுன்னு சொன்னபோது அவருக்கு ரொம்பக் கோபம் வந்துட் டுது. நான் சொல்றது பொய்னு அவ ருக்குச் சந்தேகம். ''வா, போலீஸ்லே போய்க் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க லாம்''னார். ஜாஸ்தி பொய் சொல்ல வரலை. இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கக் கேட்க, எனக்குக் கழண்டு போச்சு.

அப்பா ''எங்கேடா காசு?'' என்றார். பனியனுக்குள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தேன்.

''எதுக்குடா வித்தே?'' என்றார்.

''வீணை வாங்க'' என்றேன்.

அப்பா போலீஸ் ஸ்டேஷனிலே என்னை அடிக்கலை. வீட்டுக்கு வந்ததும் அடிச்சார். அம்மா தடுத்து, ''அவனுக்கு வர மாசிக்கு இருபது வயசாகப் போறது. அவனை அடிச்சா ஏதாவது ஒண்ணு கிடக்க, ஒண்ணு ஆய்டும். பேசாம விட்டுடுங்களேன். கத்துக்கட்டுமே! அவனுக்குப் புத்தி அதிலேதான் போறதோ என்னவோ'' என்றாள்.

''அப்பா, என்னை அடிக்க உங்க ளுக்கு உரிமை இருக்கு. நான் உங்களுக்கு உபயோகமில்லாம சுமையா இரக்கேன். ஆனா, நீங்க இந்தக் காசை கடன் மாதிரி எனக்குக் கொடுங்க. மாசாமாசம் கணக்கு வெச்சுக்குங்க. எப்படியாவது பிற்காலத்திலே சம்பாதிச்சு உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்றேன்.

அப்பா சிரித்தார். அப்பாவையும் குற்றம் சொல்ல முடியாது. மூத்த பையன் வசதி வந்ததும், அப்பா அம்மாவை மறந்துட்டான். சௌக்கியமா சௌக்கியமான்னு கடுதாசி எழுதுறானே ஒழிய, காசா, பணமா... ம்ஹும்! நான்தான் இருக்கவே இருக்கேன். நாங்க மூணு பேரும் அப்பா பென்ஷனிலே வாழணும். அதனாலே எப்படியாவது என்னை ஒப்பேத்தி விடணும்னு ஆசைப்படறார். நானானால் வீணை வாசிக்கணும் என்கிறேன்!

அப்புறம், ராமய்யங்கார் கிட்ட அப்பா பேசி, அதட்டி கிதட்டி மாசம் இருபத்தஞ்சு ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தார். நான் வீணை கத்துக்க ஆரம்பிச்சேன்.

இதுலே பாருங்க ஸார்... என் னுள்ளே ஒரு புயல் இருந்து, அதற்கு வெளியே வர ஒரு வாய்ப்பு கிடைச்சாப்பலே ஆய்டுத்து. நான் ஆரம்பிச்ச விதமே தப்பு. எனக்கு வாத்தியம் கையாளத் தொடங்கின வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கு. வாத்தியத்தை விழுந்து சேவிக்கச் சொன்னார். 'மாய மாளவ கௌள' வின் சுரங்களை எல்லாம் புள்ளி வெச்சு மார்க் போட் டிருந்தது. அந்த வீணையிலே ராமய்யங்கார் இதுதான் 'ஸ'ன்னு தட்டினார். என் கை விரலை மடக்கி அழுத்தி நாதம் பண்ணச் சொன்னார். எப்படி அழுத்தறதுன்னு தெரிஞ்சப்புறம், இரண்டு சுரம் பிசிறில்லாமல் சுத்தமாகக் கேட்டப்புறம், எனக்குச் சைக்கிள்லே பாலன்ஸ் கிடைச்சாப்பலே ஆய்டுத்து. அதையே 108 தடவை வாசிக்கச் சொல்லிட்டுப் பின்கட்டுப் பக்கம் போனார். அவர் போன உடனே மற்ற சுரங்களைத் தேட ஆரம் பிச்சேன். அந்தப் பெரிய கம்பியைத் தட்டிப் பார்த் தேன். அதிலே ஒரு ஸ்வரத் தைப் பிடித்துக்கொண் டேன். அது இனிமையா இருந்தது.

திரும்பி வந்த வாத்தியார் கேட்டுண்டே வந்தார். கோபித்துக் கொண்டார். 'நிதானம் வேணும். சாதகம்கிறது இந்த மாதிரி கன்னா பின்னா என்று தேடித் தேடி வாசிக்கிறதில்லை'ன்னு சொல்லி, சங்கீதத்திலே இருக்கிற ஆதார சுரங்களைப் பத்திச் சொன்னார். அஸ்தி வாரம் கட்டறதைப் பத்திச் சொன்னார். பொறுமை வேணும் என்றார்.

எனக்குப் பொறுமை இல்லை. அதுதான் என் கிட்டே இருந்த தவறு. அந்தச் சரளி ஜண்ட வரிசைகளையும் வர்ணங்களையும் நிதானமா பொம்மனாட்டி மாதிரி ஒவ்வொரு தடவையும் தாளக் கம்பிகளைச் சிதற அடிச்சுண்டு வாசிச்சுப் பழகப் பொறுமையில்லை. ஏதோ நாளன்னிக்குச் செத்துப் போய்விடப் போகிறேன், அதுக்குள்ள இந்த வாத்யத்தைக் கரை காண வேணும்ங்கறாப்போல அவசரம். நோட்டிலே எழுதி நெட்டுருப் போட முடியல்லை. அவரோட சேர்ந்து வாசிக்க முடியல்லை.

இரண்டு மாசம் பார்த்தார். எங்கப்பாவைக் கூப்பிட்டார். சொன்னார்... ''உங்க பையனுக்குக் கட்டுப்பாடு கிடையாது. அவனுக்குச் சங்கீதம் வராது ஸ்வாமி, உங்க பணம் வேஸ்ட்!''

எனக்கு அழுகை வந்தது. அப்படிச் சொன்னதால் இல்லை. என்னை வீணை வாத்யத்திலிருந்து பிரிச்சுப்புட்டார். என் விரல் பழகறதுக்கு முன்னே, என் மனசிலே வடிவம் வடிவமா இருக்கிற ஆசைகள் எல்லாம் விரல் வழியா ரூபம் பெறு வதற்கு முன்னாலே என்னைப் பிரிச்சுட்டார்.

அப்பதான் எனக்கு வேலை கிடைச்சுது. அதுவும் அப்பாவினாலேதான். உள்ளூர் கோ-ஆப ரேடிவ் ஸ்டோர் பிரஸிடெண்ட்டைத் தெரியும். அதிலே ஒரு கிளார்க்குக்கு டைபாய்ட் வந்து ரெண்டு மாசம் லீவ் போட்டிருந்தான். அந்த லீவ் வாகன்ஸியில் எனக்கு மன்றாடிக் கிடைச்சது. கிலோ 4-66 பைசா மேனிக்கு 6 கிலோ 75 கிராம்னு டெஸிமல் கணக்குப் போட ஆரம்பிச்சேன். எழுதறபோது ஆறு அஞ்சு முப்பது, ஆறு ஏழு நாப்பத்தி ரண்டுனு பெருக்கல் மெதுவா மெதுவா ராகமா மாறும். மாறி மனசில் சஞ்சாரம் பண்ணும். அந்தப் பெயரில்லாத, நம்பரில்லாத வடிவங்களைத் தேடுவேன். கணக்கிலே நிறையத் தப்புப் பண்ணி ராத்திரி 9.30 வரைக்கும் கூட்டிக் கழித்தும் சரியா வராது. அவாளுக்குப் பொறுமை இழந்து போக, எனக்கு வேலை போச்சு! அப்புறம் நானே சொந்த முயற்சியா முனிஸிபாலிடி சேர்மன் கிட்ட போய்க் கெஞ்சிக் கேட்டு, அவர் ஓனராக இருக்கும் பெட்ரோல் பங்க்கில் கணக்கு எழுதற வேலை கிடைச்சது. மறுபடி பெட்ரோல் டீஸல் லிட்டர் கணக்குத்தான். கொஞ்சம் கவனமா இருந்தேன். இந்த வேலை கொஞ்சம் நிலைச்சுது. அம்மா என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பித்து விட்டாள்.

நான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சதுக்கு முதல் காரணம் வீணை. 'அம்மா! எனக்கு சூட் வேண்டாம்; ரிஸ்ட் வாட்ச் வேண்டாம்; அவாளை ஒரு வீணை வாங்கிக் கொடுத்துடச் சொல்லு. வாத்தியார் காட்டற பொண்ணுக்குத் தாலி கட்டறேன்'னு சொல்லிட்டேன். அம்மா சிரிச்சா. எனக்குக் கல்யாணம் நடந்தது. நெருப்பிலே நெய்யை விடற போது நாதஸ்வர சங்கீதத்திலே ஆழ்ந்து, தவில் கருவி மாதிரி உருளுவதைக் கவனிச்சுண்டு, அவ பட்டுப் புடவையெல்லாம் நெய்யாக்கின ஒரே மாப்பிள்ளை நான்தான்னு நினைக்கறேன். அந்தப் பாவிப் பயல் மலய மாருதத்தை அப்படி வாசிச் சான்.

என் கல்யாணம் நடந்தது. அதுக்கு முன்னாலேயே ஒரு நல்ல தஞ்சாவூர் வீணையா வாங்கியாச்சு! புதிய வீணை. புதிய பெண். இரண்டும் எனக்கு மிகவும் புதுசு. இரண்டும் பெரிய சப்ஜெக்ட்! வீணையைப் பத்தியாவது பரிச்சயம் உண்டு. பெண்ணைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. நாங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளே படுத்துக்குற சந்தர்ப்பம் வந்தபோது, அந்த வீணை ஓரத்திலே இருந்தது. மூணு மணி நேரம் அவள் சும்மா உட்கார்ந்திருக்க, நான் ஸ்வரங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோதுதான் அவள் உட்கார்ந்திருந்தது ஞாபகம் வந்தது. அவள் கண்களில், 'என்னை வாசியுங்களேன்' என்று சொன் னது போல இருந்தது.

ஒரு வீணைக்காக கணவனான என் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்? கல்யாணம் என்கிறது ரொம்பப் பெரிய பொறுப்பு, ஸார்! எனக்கு அது முதல்லே தெரியலை. ஆனா, ஒரு வாரத்துக்குள்ளே, ''நாம எப்ப தனியா குடித்தனம் போகப் போறோம்?''னு கேட்டப்போ தெரிஞ்சது. பெட்ரோல் பங்க் கிளார்க் எப்படி வாடகை கொடுத்துண்டு தனியா இருக்க முடியும்? அம்மாவுக்கும் அவளுக்கும் கொஞ்சம் சரிப்பட்டு வரலை. அம்மாவைப் பத்தி அவ புகார் சொல்றது எனக்குப் பிடிக்கலை. என் அம்மா அம்மா தான். சீதாதேவியே மாமியாரா இருந்தாக்கூட ஒரு மருமகள் புகார்தான் சொல்வாள் போலிருக்கு. ஆதி காலத்திலிருந்தே ரஃபா இருக்கிற உறவு போலிருக்கிறது இது. நான் இதை யெல்லாம் கவனிக்கிறதில்லை. வீணை வீணை வீணைதான். காலையிலே அவசர அவசர மாகப் பல்லைத் தேய்த்து விட்டுக் காபி சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவேன். ஒன்றரை மணி நேரம் சாதகம். அப்புறம் பங்க்குக்குப் போய் வந்த உடனே... எட்டு மணி வரை. ஒரு சினிமா கிடையாது; விளையாட்டுக் கிடையாது. பெண்டாட்டிக்கு எப்படி இருக்கும்!

என் முதல் பெண்ணுக்கு 'ரஞ்சனி'ன்னு பேர் வெச்சேன். ரேடியோவிலே ஆடிஷனுக்குப் போய் வந்தேன். மிருதங்கத்துடன் வாசித்துப் பழக்கமே இல்லை. ''முழுசா மூணு நாலு கீர்த்தனம் வாசிக்கக் கத்துட்டு வாங்க''னு சொன்னான், அந்த அதிகாரியோ யாரோ. 'சரிதான், போய்யா'னு வந்துட்டேன். எனக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம்? ஆனால், என் வாசிப்பிலே நிச்சயம் இம்ப்ரூவ்மென்ட் இருந்தது.

பேசாம கணக்கு எழுதிண்டு இருந்தேனா இல்லையா? இந்தச் சிதம்பரம் வந்து வெறுப்பேத்திட்டுப் போய்ட்டான். சிதம்பரம் என் பழைய பள்ளிக்கூடச் சிநேகிதன். பட்டணத்திலே செயலா இருக்கான். ரொம்ப நாளைக்கப்புறம் தகப்பனாரைப் பார்க்க லீவிலே வந்தான். என்னை வந்து பார்த்தான். ''இப்ப என்ன பண்றே நீ?'' என்றான். 'பெட்ரோல் பங்க்கிலே கணக்கு எழுதறேன், கூடவே வீணை வாசிச்சிண் டிருக்கேன்'னேன். வாசிச்சுக் காட்டச் சொன்னான். ஒரு பாட்டு வாசிச்சேன்.

''என்னடா இது, இந்த மாதிரி வாசிப்பை வெச்சுண்டு பெட்ரோல் பங்க்கிலே கிளார்க்கா இருக்கியா? உன் வாசிப்பு என்ன லெவல் தெரியுமா? இப்ப முன்னணிலே இருக்கிறவாள்ளாம் (கையைக் கீழே காட்டி) இங்கே இருக்கான்னா நீ (உத்தரத்தைக் காட்டி) அங்கே இருக்கே! மெட்ராசுக்கு வாடா, ஒரு சபையிலே வாசி, போதும். காட்டுத் தீ மாதிரி பரவிடுவே. காசு, புகழ் வரும். பாவிப் பயலே, என்னமா வாசிக்கறே?'' என்றான்.

அவன் சொன்னதிலே ஒண்ணும் பொய்யோ, முகஸ்துதியோ இல்லேங் கறது தெரிஞ்சது. கிளம்பறபோது கூட அப்பாகிட்டே என்னைப் பத்தி 'ஓஹோ ஓஹோ'ன்னு சொன்னான். 'உங்க வீட்டிலே இருக்கறது ஒரு ஜீனியஸ்'னு சொன்னான். அப்பா மெட்ராஸ்லே மல்லாக்கொட்டை என்ன விலை விக்கறதுன்னு விசாரிச்சார்.

அவன் போனப்புறம், எனக்குக் கொஞ்சம் ஆசை ஏற்பட்டது. போய்த் தான் பார்க்கலாமேனு பட்டுது. பெட்ரோல் பம்புக்கும், டீஸல் பம்புக் கும், கம்ப்ரெஸ்ஸருக்கும், பேரேடு புத்தகத்துக்கும் பிரியா விடை கொடுத்துவிட்டு, சம்பளப்பாக்கியை எண்ணி வாங்கிண்டு (87 ரூபாய் சொச்சம்) வடக்கே சூலமில்லாத ஒரு நாளிலே பெண்டாட்டி குழந்தை வீணை சகிதமாகக் கிளம்பிட்டேன். சாமான் ஜாஸ்தி எடுத்துக்கொண்டு போகல்லே; ஏராளமான நம்பிக்கையைத்தான் எடுத்துண்டு போனேன்.

பழைய மாம்பலத்திலே ஒரு வீட்டிலே, ஒரு ஓரத்திலே இடம் பார்த்து வெச்சான் சிதம்பரம். சின்ன ரூம். வீணை வாசிக்கணும்னா க்ராஸா உக்கார்ந்தாத்தான் முடியும். அப்புறம் சிதம்பரம் தனக்குத் தெரிஞ்ச சபா செக்ரட்டரிகளையெல்லாம் என்னை அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்தி வெச்சான்.

எனக்குச் சான்ஸ் வந்து, நான் செய்த முதல் கச்சேரியைப் பத்திச் சொல்றேன். என் டர்ன் எப்ப வந்தது தெரியுமா? பஸ்ஸூக்கு நாழியாயிடும்னு எல்லோரும் எழுந்து போனதற்கப்புறம் லேட்டா வந்தது. கொடுத்த ஒண்ணே கால் மணி நேரத்துலே ஒரு பாட்டே பூரணமா வாசிக்கமுடியலே. மிருதங்கக்காரர் வேறு கொஞ்சம் ஸீனியர் ஆசாமி போல இருக்கு. என்னை பூச்சியா மதிச்சுத் தட்டிண்டிருந்தார்.முன் வரிசையில் யாரையோ பார்த்து அடிக்கடி சிரிச்சிண்டிருந்தார். நான் என்ன என்னவோ செய்ய இருந்தவன் எப்படி எப்படியோ காட்ட இருந்த திறமைகள் எல்லாம் அந்தச் சோம்பேறித்தனமான காலி நாற்காலி ராத்திரி யிலே கரைந்துவிட்டன. ஒரு ப்ரஸ் ஆளு வரப்போறார் வரப்போறார்னு எல்லாரும் எதிர்பார்த்திண்டிருந்தா. அவர் வேற ஏதோ பரதநாட்டியக் கச்சேரிக்குப் போயிட்டாராம். என் கச்சேரி முடிஞ்சதும் ஒரே ஒரு வய சானவர் வந்து என்னைத் தட்டிக் கொடுத்து, ''நானும் எவ்வளவோ கேட்டிருக்கேன். நீ ரொம்ப ரொம்பப் பேஷா வாசிக்கிறே. இந்த நூற்றாண் டின் மகாமேதை நீ''னு சொன்னார்.சொன்னா என்ன? பரவலா என் கச்சேரி ஏதும் சலனம் உண்டு பண்ணினாப் போல தெரியல்லே.

என்னவோ பட்டணம் பட்டணம்னு சொல்றாங்க. பிரதானம் வந்துடும், கச்சேரிக்கு 700, 800 எல்லாம் சர்வசாதாரணமா கிடைக்கும், அப்படி இப்படிங்கறாங்க. நான் ஒரு வருஷம் பூரா முயற்சி பண்ணிப் பார்த்தேன். அலையா அலைஞ்சேன். ஃப்ரீயா வாசிச்சேன். பத்து பேருக்கு வாசிச்சேன். தனியா வாசிச்சுக் காண்பிச்சேன். ஒரே ஒரு தடவை வார பத்திரிகையிலே என்னைப் பத்தி 'புது விதமான பாணிகள் எல்லாம் கையாள்றார்'னு வந்தது. ஒரு சினிமா நடிகையைப் பத்தின புது விதமான போட்டோ தகவலுக்குப் பக்கத்திலே சின்னதா ஒரு ஓரத்திலே வந்திருந்தது. என்னைப் பத்திப் போட்டிருந்தை நிறையப் பேர் படிச்சிருப்பாங்களானே சந்தேகம். என் வாசிப்பைக் கேட்ட எல்லாருமே, ''புதுவிதமாத்தான் வாசிக்கிறார். புரியாத ராகங்களிலே தைரியமா விளையாடறார். இருபத்து நாலு வயசுக்கு அற்புதமான வாசிப்பு''ன்னு ஒரு மனதாத்தான் சொல்றா. எல்லோருக்கும் என் திறமையோட ஆச்சர்யம் தெரியறது. என் வித்வத்தைப் பற்றி ஒருத்தருக்கும் சந்தேகமில்லை. முன்னுக்கு வரவேண்டியவர்னு சாமர்த்தி யமா பேறாங்க. ஆனா, எப்படி முன்னுக்கு வரது? எவ்வளவு நாள் பெண்டாட்டியோட தங்க நகைகள் தாங்கும்? வேறு என்ன வழி இருக்கு சொல்லுங்களேன்! என் கலையைப் பற்றிச் சந்தேகமிருந்தா வீட்டுக்கு வாங்க. 34-ஏ, கவரை ஸ்ட்ரீட், புள்ளையார் கோயிலுக்குப் பக்கத்திலே...வாசிச்சுக் காட்டறேன். கேளுங்க.

எங்கே ஸார் தப்பு? திரும்பிப் போயிடட்டுமா?

இவ்வளவு விஸ்தாரமா எழுதறனே, கடைசியிலே உங்க கிட்ட கைமாத்தா அஞ்சு பத்து கேக்கப் போறேன்னு நினைச்சுக்காதீங்க. இல்லை, ஸார். பகவான் என்னை அவ்வளவு தூரம் கொண்டு போகலே. கடைசியிலே வழி காட்டிட்டான். என் பணக் கஷ்டம் தீர்ந்துபோச்சு, என் வீணையாலே! எப்படின்னு சொல்றேன்.

நான் குடியிருக்கிற வீட்டு மாடி யிலே ஒரு 30, 32 வயசுக்காரக் கிறிஸ்தவர் இருக்கார். பேர் பெர்னாண்டஸ். பாச்சலர். ரொம்ப நல்ல மாதிரி. அவர் ஒரு நாள் வந்து, ''சார், நீங்கதான் தினம் தினம் வாத்தியம் வாசிக்கிறீங்களா?'' என்று கேட்டார். ''ஆமாம்''னேன். ''என்ன வாத்தியம், சித்தாரா?'' என்றார். ''இல்லை, வீணை''ன்னு சொன்னேன். ''சித்தார் மாதிரியே வாசிக்கிறீங்களே! ரொம்ப வேகமா இனிமையா இருக்குது ஸார்'' என்றார். ''தாங்க்ஸ்'' என்றேன். ''சித்தார் வாசிப்பீங்களா''னு கேட்டார். ''அதுவும் கம்பி வாத்தியமா?''ன்னேன். ''ஆமாம். மாடிக்கு வாங்க. என் கிட்டே ஒரு சித்தார் இருக்குது''ன்னு கூட்டிண்டு போனார். அந்த ஆறு கம்பி வாத்தியம் வீணையை விடச் சின்னதாக இருந்தது. கம்பி அமைப்பு தலைகீழா இருந்தது. கீழ்க் கம்பி சின்னதா இருந்தது. கீழ்க் கம்பி முன்னாலேயும், மேல் கம்பி கடைசிலேயும்! வாசிச்சு வாசிச்சுப் பார்த்தேன். அரை மணியிலே அந்த வாத்தியத்தை அலட்சியமா வாசிக்க ஆரம்பிச்சேன். அவர் ஆச்சர்யப்பட் டார். ''இன்னிக்குதான் முதல்லே வாசிக்கிறீங்களா, இதை?'' என்று கேட்டார். 'ஆமாம்'னேன்.

''உங்களுக்கு மேற்கத்திய சங்கீதம் பிடிக்குமா?''

''ஜாஸ்தி கேட்டதில்லை..''

''ஸார், நீங்க எதிலே வேலை செய்யறீங்க?'' என்று கேட்டார்.

''எனக்கு வேலையே கிடையாது'' என்றேன்.

''அப்ப, உடனே என்னோட வாங்க''ன்னார். கூடப் போனேன்.

தி.நகர்லே ஒரு வீட்டு மாடியிலே கீத்துக் கொட்டாய் போட்டிருந்தது. அதிலே பத்துப் பதினைஞ்சு பேர் உட்கார்ந்திருந்தாங்க. பெர்னாண்டஸ் அந்தக் க்ரூப்புக்கு என்னை அறிமுகப்படுத்தினார். ''வாத்தியார்கிட்ட விஷயம் இருக்கு. வீணையில் பூந்து விளையாடறாரு''ன்னார்.

அந்த இடத்திலே விதவிதமான வாத்யங்கள்ளாம் இருந்தது. எல்லாம் மேற்கத்திய வாத்தியம். அந்த வாத்தியங்களோட பேரேல்லாம் எனக்குப் பிற்பாடு அத்துப்படி ஆயிடுத்து. டபிள் பேஸ், எலெக்ட்ரிக் வேலையா மூணு சித்தார், ஸாக்ஸ் (காலுக்குப் போட்டுக்கறது இல்லை. ஸாக்ஸபோன். இதிலே டெனர், ஆல்டோன்னு ரெண்டு ஜாதி) ட்ரம்பெட், லாட்டின் தாள வாத்தியங்கள், அக்கார்டியன், அப்புறம் நம்ம தேசத்து சிதார், ஸரோட், தப்லானு ஒரே கதம்பம்.

அந்தக் கோஷ்டி ஃபிலிம்லே பின்னணி வாசிக்கிறாங்களாம். சில பார்ட்டிகள்லேயும் வாசிக்கிறாங்களாம். அட்வர்டைஸ்மென்ட் வேலைகள் வேற செய்யறாங்களாம். அவங்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டதாம். என்னைக் கேட்டாங்க. 'ஈக்வலா மாச வரும்படியை பேர் பண்ணிப்போம். 150, 200க்கு மாசம் தரோம்' னாங்க. சம்மதிச்சேன்.

சமீபத்தில் நான் ஒரு ஸோலோ ரிக்கார்ட் கூடக் கொடுத்திருக்கேன், ஸார்! வீணையில்தான். நீங்க கூட ரேடியோவிலே கேட்டிருப்பீங்களே...அதிலே முதல்லே டங் டங் டங் டங் டங்னு கீழ்த் தந்தியைத் தட்டறேன். அது முடிஞ்சதும், அந்த ஆள் ''மணி ஐந்தாகிவிட்டதே! என் தலைவலி இன்னும் தீரவில்லையே'' என்கிறான்.உடனே அந்தப் பெண், ''கவலைப்படாதீர்கள். ஒரு வில்லை --- மாத்திரை சாப்பிடுங்கள்'' என்கிறாள். நான் உடனே படபடவென்று சந்தோஷமாக கமாஸ் வாசிக்கிறேன். அவர்கள் இருவரும் சேர்ந்து ''எப்பொழுதும் உங்கள் வீட்டில் ஒரு புட்டி --- மாத்திரைகளை வைத்திருங்கள்'' என்கிறார்கள். அரை நிமிஷம் கூட இல்லை ஸார், அதற்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். யார் ஸார் சொன்னது, கலை சோறு போடாதுன்னு?

 [ நன்றி: விகடன் ]

பி.கு:

சுஜாதாவின் இசைசார்ந்த சிறுகதைகள் எவை? தலைப்பு, பத்திரிகை, வருடம், ஓவியர் ..என்ற பட்டியல் யாரேனும் தரமுடியுமா?



தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

தேவன் -22

கமலம் சொல்கிறாள்!
1. ஒரு சுபமான ஆரம்பம்
‘தேவன்’

தேவனின் பல புனைபெயர்களில் ஆர்.எம் -மும் ஒன்று! 40-களில் ‘விகடனில்’ அவர் எழுதிய ஆறு அத்தியாயச் சிறு தொடரின் முதல் அத்தியாயம் இது.







அல்லையன்ஸ் நூலில் மற்ற அத்தியாயங்களைப் படிக்கலாம்.



தொடர்புள்ள பதிவுகள்:
தேவன் படைப்புகள்

தேவன்: நடந்தது நடந்தபடியே

துப்பறியும் சாம்பு


தேவன்: மிஸ்டர் ராஜாமணி

தேவன்: மாலதி

தேவன்: கண்ணன் கட்டுரைகள்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

தென்னாட்டுச் செல்வங்கள் - 22

கஜ சம்ஹாரர் , பிக்ஷாடனர் 
சில்பி + தேவன்



மகா சிவராத்திரியை ஒட்டி ...ஒரு பதிவு.

விகடனில் 40 -களில்  ( 48/49 - என்று நினைக்கிறேன்) வந்த  ‘சில்பி’ யின் ஓவியங்களும், தேவனின்  விளக்கக் கட்டுரைகளும்  இதோ.



 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி

புதன், 22 பிப்ரவரி, 2017

கஸ்தூரிபாய் காந்தி -1

கஸ்தூரிபாய் மறைந்தார்! 

[ நன்றி: விகடன் ] 

பிப்ரவரி 22. கஸ்தூரிபாய் நினைவு தினம்.

1944-இல் அவர் காலமானவுடன் வந்த சில தலையங்கங்கள்.

முதலில், ‘சக்தி’ மார்ச் 44 இதழில் வந்த தலையங்கம்.


 இரண்டாவதாய், ஆனந்த விகடனில் வந்த தலையங்கம்:

சோக வெள்ளம்

காந்திமகான் பொறுமையின் சிகரமாக விளங்குபவர். வாழ்க்கையில் ஏற்படும் துன்ப துயரங்களை யெல்லாம் சகித்துக்கொள்ளும் ஆற்றலுடையவர். இத்தகைய மகாத்மாவே கண்ணீர் விடும்படியான சம்பவம் நேர்ந்துவிட்டதென்றால், சாதாரண மக்களின் துக்கத்துக்கு ஓர் எல்லைதான் ஏது? பூனா நகரின் அருகாமையிலுள்ள ஆகாகான் மாளிகைச் சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, தேசத்தின் அன்னையாக விளங்கிய கஸ்தூரிபாய் அம்மையார் காலமான செய்தியை நினைக்கும்போதெல்லாம் மயிர்க்கூச்செறிகிறது.

அன்று, வனவாசத்திற்குப் புறப்பட்ட ராமனை பின்பற்றிச் சென்ற சீதையைப் போல், சிறை வாசத்திற்குப் புறப்பட்ட காந்தி மகானைப் பின்தொடர்ந்து கஸ்தூரிபாயும் 1942-ல் சிறைவாசம் ஏற்றார். முதுமைப் பருவத்தில் இந்தத் தியாகத்தை மேற்கொண்டதற்குப் பலனையும் அடைந்தார்!

ஏற்கெனவே, மகாதேவ தேசாயைப் பிரிந்து மனம் வாடிய காந்திமகானுக்கு, கஸ்தூரிபாய் அருகிலிருந்தது ஆறுதலாயிருந்திருக்கும். இன்று அந்த ஆறுதலும் அவருக்கு இல்லாமற் போய் விட்டது. இதைக் குறித்து, ஞானியான மகாத்மாவே மனம் கலங்குகிறாரென்றால் அவரைத் தேற்றுவதற்கு வேண்டிய தகுதி யாருக்கு இருக்கிறது? எனவே, இந்தச் சம்பவத்தின் பலனாக மகாத்மா மனத்தளர்ச்சி பெறாமல் அவரைப் பாதுகாக்கக் கடவுள்தான் அருள் புரிய வேண்டும்!

கடைசியாய், 1964-இல் ‘பரணீதரன்’ விகடனில் கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றி எழுதிய தொடரில் ‘மாயா’ ( மகாதேவன்) வரைந்த ஓர் அழகு  ஓவியம்.


[ நன்றி: சக்தி, விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கஸ்தூரிபாய் காந்தி

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பதிவுகளின் தொகுப்பு : 601 - 625

பதிவுகளின் தொகுப்பு : 601 - 625 





601. சங்கீத சங்கதிகள் - 103
சிரிகமபதநி -2

602. சங்கீத சங்கதிகள் - 104
பாடலும், ஸ்வரங்களும் - 3
செம்மங்குடி சீனிவாச ஐயர்

603. சசி -12 : திருட்டுப்போன நகை
 திருட்டுப்போன நகை
 சசி

604. கொத்தமங்கலம் சுப்பு -17
கட்டபொம்மு கதை
கொத்தமங்கலம் சுப்பு

605. அ.சீநிவாசராகவன் -2
பன்முகப் பேராசிரியர் அ.சீ.ரா.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

606. சங்கீத சங்கதிகள் - 105
ஜி.என்.பியின் முதல் ரேடியோக் கச்சேரி!
நீலம்

607. சங்கச் சுரங்கம்
ஆடுகள மகள்
பசுபதி

608. லக்ஷ்மி -3
சித்தப்பாவின் சொத்து
லக்ஷ்மி

609. தென்னாட்டுச் செல்வங்கள் - 21
சந்தன நடராஜா

610. சங்கீத சங்கதிகள் - 106
தியாகராஜர் கீர்த்தனைகள் – 1

611. ம.பொ.சி - 5
திருவிழாக்கள்
ம.பொ.சிவஞானம்

612. அ.சீநிவாசராகவன் -3
தை அரசி
அ.சீ.ரா

613. கொத்தமங்கலம் சுப்பு -18
வாய் மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம் !
கொத்தமங்கலம் சுப்பு

614. பாரதிதாசன் - 5
பொங்கல் வாழ்த்து
பாரதிதாசன்

615. சங்கீத சங்கதிகள் - 107
தியாகராஜர் கீர்த்தனைகள் - 2
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.

616. ப.ஜீவானந்தம் -1
தேசத்தின் சொத்து ஜீவா
கலைமாமணி விக்கிரமன்

617. வி. ஸ. காண்டேகர் - 1
வி. ஸ. காண்டேகர்
அ.வெங்கடேசன்

618. ஜி.சுப்பிரமணிய ஐயர் - 1
பத்திரிகை உலகின் பிதா

619. பெரியசாமி தூரன் - 2
 கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன்
கலைமாமணி விக்கிரமன்

620. தி.வே.கோபாலயர் - 2
தி.வே.கோபாலய்யர் 10
ராஜலட்சுமி சிவலிங்கம்

621. சங்கீத சங்கதிகள் - 108
கண்டதும் கேட்டதும் - 1
நீலம்

622. பதிவுகளின் தொகுப்பு : 576 - 600

623. முதல் குடியரசு தினம் - 2
ஓவியம், கவிதை, கட்டுரை ...

624. சங்கீத சங்கதிகள் - 109
அகாடமியில் முதல் நாள்
ஜே. எஸ். ராகவன்

625. காந்தி - 5
காந்திஜி கண்ட தமிழ்நாடு -1
     ‘கோபு


தொடர்புள்ள பதிவு:

திங்கள், 20 பிப்ரவரி, 2017

சங்கீத சங்கதிகள் - 113

சங்கராபரணம் நரசையர்  
உ.வே.சாமிநாதய்யர் 
[ ஓவியம்: ஏ.எஸ்.மேனன் ]

பிப்ரவரி 19. உ.வே.சாமிநாதையரின் பிறந்த தினம்.
===
சங்கீதக்கலை தமிழ் நாட்டில் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர்களுள் தஞ்சாவூர் மகாராஷ்டிர மன்னர்கள் சிறந்தவர்களாவர்.  அவர்களுடைய ஆட்சியில் கர்நாடக சங்கீதப் பயிற்சி மிகவும் விரிவடைந்தது.  சங்கீத வித்துவான்கள் அதிகமாயினர்.  தமிழ்நாட்டாருக்குச் சங்கீத விருந்து மிகுதியாகக் கிடைத்தது.  அவர்கள் தங்கள் ஸமஸ்தானத்தில் சிறந்த பல சங்கீத இரத்தினங்களை வைத்துப் போற்றி ஆதரித்து வந்தார்கள்.  அதனால் தஞ்சை அக்காலத்தில் இசைக்கலையின் அரசிருக்கையாக விளங்கியது.

வித்துவான்களுடைய ஆற்றலை அறிந்து போற்றுவதும் வரிசையறிந்து பரிசளிப்பதும் பட்டமளிப்பதும் ஆகிய பலவகைச் செயல்களால் அம்மகாராஷ்டிர மன்னர்கள் பல வித்துவான்கள் மனத்தைக் கவர்ந்தனர்.  சங்கீதத்தில் ஒவ்வொரு வகையில் தேர்ச்சி பெற்ற பல வித்துவான்கள் அவ்வரசர்களால் அளிக்கப்பட்டனவும் தங்கள் தங்கள் ஆற்றலைப் புலப்படுத்துவனவுமாகிய பட்டப்  பெயர்களை யுடையவர்களாக விளங்கினர்.  வீணைப் பெருமாளையர், பல்லவி கோபாலையர், கனம் கிருஷ்ணையர்த்ஸௌகம் ஸ்ரீநிவாசையங்கார், தோடி சீதாராமையர் முதலிய பல பிரபல வித்துவான்களை ஊக்கப்படுத்திவிட்டவர்கள் தஞ்சை ஸ்மஸ்தானாதிபதிகளே. இவர்களுக்கும் வேறு பலருக்கும் ஆசிரியராகிய பச்சைமிரியன் ஆதிப்பையரென்னும் இணையற்ற சங்கீத வித்துவானை ஆதரிக்கும் புண்ணியமும் அவர்களுக்கு இருந்தது.

அவர்களுள், அருங்கலை விநோதராக விளங்கிய சரபோஜியரசர் காலத்தில் நரசையரென்னும் (*நரஸிம்ஹையரென்பதன் திரிபு*) சங்கீத வித்துவானொருவர் இருந்தார்.  இசையாற்றலில் அவர் ஏனைய வித்துவான்களுக்குச் சிறிதேனும் குறைந்தவரல்லர்.  ஒருநாள் அரசர் முன்னிலையில் பெரிய சபையில் அவருடைய வினிகை நடைபெற்றது.  அப்பொழுது சங்கராபரண ராகத்தை அவர் மிகவும் விரிவாக ஆலாபஞ் செய்து பல்லவி கற்பனை ஸ்வரம் முதலியன பாடி வரலானார்.  முறைப்படியே அதனைப் பாடி வருகையில் அரசரும் சபையோரும் அதில் மிகவும் ஈடுபட்டார்கள். 

அவர் இனிமையாகப் பாடப் பாடச் சபையில் இருந்த யாவரும் ஒன்றுபட்டு மனமுருகினர்; 'இதுகாறும் சங்கராபரணத்தை இப்படி நாம் கேட்டதேயில்லை!என்று வியந்து பாராட்டினார்கள்.  அரசர் அவருடைய ஆற்றலையுணர்ந்து மகிழ்ந்து பலவகைப் பரிசுகளையும் 'சங்கராபரணம் நரசையர்' என்னும் சிறப்பும் பெயரையும் அளித்தார்.  அக்கால முதல் அவர் அப்பெயராலேயே அழைக்கப்படலாயினர்.  எங்கேனும் அவரது சங்கீத வினிகை நடந்தால் அங்குள்ளவர்கள் முதலில் அவரைச் சங்கராபரணம் பாடச்சொல்லிக் கேட்டு  மகிழ்வதை ஒரு வழக்கமாகக் கொண்டார்கள்.  இதனால் அவருடைய ஆற்றல் மேன்மேலும் விளக்கமடைந்தது.

ஒருசமயம் நரசையருக்கு எதிர்பாராதவண்ணம் பெருஞ்செலவு உண்டாயிற்று. அதற்காகக் கடன் வாங்க வேண்டியிருந்தது.  தமக்கு வேண்டிய பொருளைத் தருவாரை அவர் காணவில்லை.  அக்காலத்தில் கபிஸ்தலத்தில்(*இவ்வூர் தஞ்சை ஜில்லாவில் பாபநாசத்துக்கருகில் உள்ளது*) இருந்த இராமபத்திர மூப்பனாரென்பவர் சங்கீத ரஸிகராகவும் சங்கீத வித்துவான்களுக்கு ஒரு பெருநிதியாகவும் விளங்கி வந்தார்.  அம்மூப்பனாரிடம் பொருள்பெற எண்ணிய நரசையர் கபிஸ்தலம் சென்று அவரைக் கண்டார்.  மூப்பனார் வித்துவானை உபசரித்துப் பாராட்டி அளவளாவினர்.  நரசையர் அங்கே சில தினம் இருந்தார்.  பிறகு ஒருநாள் தமக்குப் பொருள் வேண்டியிருத்தலை மெல்ல அவர் கூறலானார்:

நரசையர்:  எதிர்பாராத விதத்தில் எனக்குச் செலவு நேர்ந்துவிட்டது.
ஒருவரிடம் சென்று பொருள்கேட்க என் மனம் நாணமடைகிறது.  என்ன செய்வதென்று யோசிக்கையில் தங்கள் ஞாபகம் வந்தது.  தங்களிடம் கடனாகப் பெற்றுச்சென்று மீட்டும் கொடுத்துவிடலாமென்று வந்தேன்.

இராமபத்திரர்:  கடனா வேண்டும்எவ்வளவு வேண்டும்?

நரசையர்:  ஆம்; எண்பது பொன்.

இராமபத்திரர்:  கடன் வாங்கவேண்டுமென்கிறீர்களே; எதையாவது அடகு
வைப்பீர்களா?

நரசையர்:  (சிறிதுநேரம் யோசித்துவிட்டு): அப்படியே வைக்கிறேன்.

இராமபத்திரர்:  எதை வைப்பீர்கள்?

நரசையர்:  ஓர் ஆபரணத்தை.

இராமபத்திரர்:  எங்கேஅதை எடுங்கள் பார்க்கலாம்.

நரசையர்:  அந்த ஆபரணத்தைக் கண்ணால் பார்க்க முடியாது; காதினால் கேட்கலாம்; எக்காலத்தும் அழியாதது; இன்பத்தைத் தருவது.  என் உடைமையாகிய சங்கராபரண ராகமே அது.  அதையே நான் அடகு வைக்கிறேன்.  தங்களிடம் பெற்றுக்கொள்ளும் பொன்னைத் திருப்பிக்கொடுக்கும் வரையில் அதை நான் எங்கும் பாடுவதில்லையென்று உறுதி கூறுகிறேன்.

இராமபத்திரர்:  அப்படியானால் உங்களுக்கு வேண்டியது தருகிறேன்.

மூப்பனார் நரசையரிடம் ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு எண்பது பொன்னை அளித்தார்.  அத்தொகையை வாங்கிக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் சென்று செய்யவேண்டிய காரியங்களை நிறைவேற்றினார்.  அதுமுதல் எவ்விடத்தும் அவர் சங்கராபரணத்தைப் பாடுவதை நிறுத்தியிருந்தார்.  எங்கேனும் வினிகைகளுக்குச் சென்றால் அவர் வேறு ராகங்களையும் கீர்த்தனங்களையுமே பாடி வந்தார்.

அக்காலத்திலே கும்பகோணத்தில் அப்புராயரென்ற ஒரு செல்வர் இருந்தார்.  அவர் கம்பெனியாரிடம் பெரிய உத்தியோகம் பார்த்துவந்தார்.  தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி என்னும் இரண்டிடங்களின் தொடர்புடையவராதலின் அவர் உபய ஸமஸ்தான திவானென்னும் சிறப்புப்பெயரால் வழங்கப் பெற்றார். அக்காலத்திலிருந்த வாலீஸ் என்னும் துரைக்குப் பிரியமானவராக இருந்தது பற்றி வாலீஸ் அப்புராயரென்றே யாவரும் அவரை அழைப்பார்கள்.  கும்பகோணம் ரெட்டியார் அக்கிரகாரத்தில் குளத்தின் வடகரையில் அவருடைய வீடுகள் உள்ளன.

அவருடைய வீட்டில் ஒரு கல்யாணம் நடைபெற்றது.  அந்த வைபவம் பலவகையிலும் சிறப்புடையதாக இருக்கவேண்டுமென்றெண்ணி அதற்குரியவற்றை அவர் செய்தனர்சங்கீத வினிகையொன்று நடத்தவேண்டுமென்றும் அதற்கு மிகவும் சிறந்த வித்துவான்களை அழைக்கவேண்டுமென்றும் அவர் எண்ணினார்.  அங்ஙனம் அழைக்கப் பட்டவர்களுள் சங்கராபரணம் நரசையர் ஒருவர்.

குறிப்பிட்ட ஒரு வேளையில் நரசையருடைய வினிகை நிகழ்ந்தது.  ராயர் அவருடைய ஆற்றலைப் பர்ற்றி நன்றாக அறிந்தவராதலின், "உங்களுக்குப் பட்டம் அளிக்கச்செய்த சங்கராபரணத்தைப் பாட வேண்டும்" என்று விரும்பினார்உடனிருந்த அன்பர்களும் வேண்டிக்கொண்டனர்.

நரசையர்: தாங்கள் க்ஷமிக்க வேண்டும்; அதனை இப்போது நான் பாடமுடியாத நிலையில் இருக்கிறேன்.

ராயர்: ஏன்?

நரசையர்:  அதை ஒருவரிடம் அடகுவைத்து நான் கடன் வாங்கியிருக்கிறேன். அக்கடனைத் திருப்பிக் கொடுத்தபிறகுதான் அதை நான் பாடலாம்.

ராயர்:  என்ன ஆச்சிரியமாக இருக்கிறதுராகத்தை அடகுவைத்ததாக எங்கும் கேட்டதில்லை.  யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறீர்கள்சொன்னால் உடனே அதனை நாம் தீர்த்துவிடுவோம்.

சங்கராபரணத்தை அடகுவைத்த வரலாற்றை வித்துவான் கூறினார்.  உடனே ராயர் எண்பது பொன்னையும் அதற்குரிய வட்டியையும் தக்க ஒருவர்பால் அளித்து அவற்றை மூப்பனாரிடம் கொடுத்து அவரிடமிருந்து கடன் பத்திரத்தைச் செல்லெழுதி வாங்கிவரும்படி சொல்லியனுப்பினார்.  அன்று நரசையர் வேறு ராகங்களையே பாடினார்.

ராயரிடமிருந்து சென்றவர் இராமபத்திர மூப்பனாரிடம் பணத்தைக் கொடுத்துச் செய்தியைக் கூறினார்.  மூப்பனார் மிகவும் மகிழ்ந்து உடனே அந்தத் தொகையோடு பின்னும் சில தொகையை எடுத்துக்கொண்டு கும்பகோணம் வந்து அப்புராயரையும் நரசையரையும் கண்டார்.  அவரை அப்புராயர் கண்டவுடன், "பணம் வந்து சேர்ந்ததாவிடுதலையோலை எங்கே?" என்றார்.

இராமபத்திரர்:  ராயரவர்களும் சங்கீத சிகாமணியாகிய நரசையரவர்களும்
என்னுடைய செயலை அடியோடே மறந்துவிடவேண்டும்.  ஐயரவர்கள் என்னிடம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கேட்டு வாங்க உரிமையுடையவர்கள்.  அவர்களைப் போன்றவர்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு என்ன செய்வதற்கு நான் செல்வம் படைத்தேன்அவர்கள் பணம் வேண்டுமென்றால் உடனே கொடுத்திருப்பேன்.  'கடனாக வேண்டும்' என்று அவர்கள் கேட்டது எனக்குச் சிறிது வருத்தத்தை உண்டாக்கியது.  விளையாட்டாக அடகுண்டாவென்று கேட்டேன்.  அவர்கள் சங்கராபரணத்தை அடகு வைத்தார்கள்.  அன்றுமுதல் இன்று வரையில் அதனை எங்கும் பாடியதாக நான் கேட்டிலேன்.  இதனால் அவர்களுடைய உயர்ந்த குணமும் உண்மையும் புலப்படுகின்றன.  இந்தத் தொகை எனக்குரியதன்று.  அவர்களுக்கே உரியது. தாங்களே அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.  இதையல்லாமல் இவ்வளவு நாள் சங்கராபரணத்தைச் சிறைசெய்ததற்கு  அபராதமாக நான் கொடுக்கும் இந்தத் தொகையையும் தங்கள் திருக்கரத்தாலேயே அவர்களுக்கு வழங்கவேண்டும்.  இதோ விடுதலை ஓலையும் தந்து விட்டேன்.

மூப்பனாருடைய அன்புடைமை அப்பொழுது யாவருக்கும் வெளியாயிற்று.  'கடன் பெற்றவர் கடனைத் திருப்பிக்கொடுப்பதையும் கடன் தந்தவர் வட்டியுடன் பெற்றுக்கொள்வதையும் உலகத்தில் கண்டிருக்கிறோம்.  கடன் வாங்கினவர் திருப்பிக் கொடுத்தால், கொடுத்தவர் அதைப் பெற்றுக் கொள்ளாமல் பின்னும் தொகை சேர்த்துக் கொடுப்பது புதுமையிலும் புதுமை' என்று யாவரும் வியந்தார்கள்.

மறுநாள் கல்யாணப் பந்தலில் நரசையருடைய வாக்கிலிருந்து அமுததாரையைப்போல விடுதலை பெற்ற சங்கராபரணம் வெளிப்பட்ட காலத்தில் கேட்ட யாவரும் பதுமைகளைப் போலத் தம்மை மறந்து ஸ்தம்பிதமாயினரென்று கூறவும் வேண்டுமோ?

அக்காலமுதல் நரசையர் வாலீஸ் அப்புராயருடைய ஆஸ்தான வித்துவானாக  விளங்கினார்.






தொடர்புள்ள பதிவுகள்: 

சங்கீத சங்கதிகள்