ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

694. அநுத்தமா - 1

தமிழ்நாட்டின் "ஜேன் ஆஸ்டென்' - அநுத்தமா
 பரிபூர்ணா


 ஏப்ரல் 16. பிரபல எழுத்தாளர் ‘அநுத்தமா’ ( ராஜேஸ்வரி பத்மநாபன் ) அவர்களின் பிறந்த நாள்.
====

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் உள்ள குடும்பம் ஒன்றில் பிறந்தவர் பிரிட்டானியப் பெண் எழுத்தாளரான ஜேன் ஆஸ்டென்.  இவரது எழுத்துப் பணியை அவருடைய குடும்பத்தினர் பெரிதும் ஊக்குவித்தனர். இளம் வயதிலேயே பலதரப்பட்ட இலக்கியப் பாணிகளில் பரிசோதனையாக எழுதிப்பார்த்த ஆஸ்டின், பின் தனக்கே ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். இவர் எழுதிய நடுத்தர மக்களைப் பற்றிய நேசப் புனைவுகள், ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைப் பெற்றுத்தந்தன.

17-ஆம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த "உணர்ச்சிகரமான புதின'ப் பாணியை நிராகரித்த ஆஸ்டினது படைப்புகள் 18-ஆம் நூற்றாண்டு ஆங்கிலப் பெண்கள் சமூகத்தில் முன்னேறவும், பொருளாதார ஆதாயத்துக்காகவும், ஆண்களையும் திருமணத்தையும் சார்ந்திருந்ததைச் சுட்டிக்காட்டின. 1811 முதல் 1816 வரை வெளியான சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி, பிரைட் அண்ட் பிரிஜுடிஸ், மான்ஸ்ஃபீல்டு பார்க், எம்மா ஆகிய நான்கு புதினங்கள் ஆஸ்டினுக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தன.

இவர் ஆங்கில பெண் எழுத்தாளர்களுள் மிகச்சிறந்த எழுத்தாளராகக் கருதப்பட்டார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. உலகெங்கும் ஆங்கில இலக்கியப் பாடங்களிலும் இவரது படைப்புகள் இடம்பெற்றன.

தமிழ் எழுத்தாளர் பற்றிய வரலாற்றுக் குறிப்பில் ஆங்கிலப் பெண் எழுத்தாளரைப் பற்றிய தேவையில்லாத முகவுரை எதற்கு என்று கேட்டுவிடாதீர்கள். ஜேன் ஆஸ்டெனுக்கும் தமிழ் எழுத்தாளர் அநுத்தமாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆம்! ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டென் போன்ற எழுத்தாளுமை மிக்கவர் தமிழ் பெண் எழுத்தாளர் அநுத்தமா. சிறந்த சமூகப் புதின ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் ராஜேஸ்வரி பத்மநாபன் என்ற இயற்பெயர் கொண்ட அநுத்தமா.

1950-60-களில் நடுத்தர குடும்பத்துப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் விதமாக பல படைப்புகளை எழுதினார். இவர், "தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென்' என்றே புகழப்பட்டார் என்றால், இவருடைய எழுத்தாளுமை எப்படிப்பட்டது என்று பார்த்துக் கொள்ளுங்கள். இவர் எழுதிய  மணல் வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம், மாற்றாந்தாய் போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைப் போக்கும் நோக்கத்தோடு எழுதப்படுபவைதான் சமூகப் புதினங்கள். இவ்வகைப் புதினங்கள் சமுதாயச் சிக்கல்கள், சீர்திருத்தங்கள், பிரசாரங்கள் என்னும் போக்குகளை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வகையான புதினங்களை, மு.வ., வ.ரா., கு.வேங்கடரமணி, கல்கி, நாரண துரைக்கண்ணன், கொத்தமங்கலம் சுப்பு, நா.பா., லட்சுமி, அநுத்தமா, இராஜம் கிருஷ்ணன், வாஸந்தி, அனுராதா ரமணன் முதலியோர் படைத்துள்ளனர்.

ராஜேஸ்வரி பத்மநாபன், ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1922-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தார். மெட்ரிகுலேஷன் வரை படித்த இவர், தனது சொந்த முயற்சியால் தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.


12-ஆம் வயதிலேயே பத்மநாபன் என்பவரை மணந்தார். புகுந்த வீட்டில் மாமனார் அவரை மகள்போல் நடத்தினார். தனது 22-வது வயதில் எழுதத்தொடங்கினார். தான் எழுதிய முதல் சிறுகதையான "ஒரே ஒரு வார்த்தை'யை மாமனாரிடம் படிக்கக் கொடுத்தார். அதைப் படித்துவிட்டு ""பலே'' என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி பாராட்டியவர், லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து, "அநுத்தமா' என்ற பெயரை தெரிவுசெய்து, மகள்போல் இருந்த மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டி மகிழ்ந்தார்.
மாமனார் புனைபெயர் சூட்டிய பிறகுதான் அநுத்தமா என்ற பெயரில் எழுதிக் குவிக்கத் தொடங்கினார் ராஜேஸ்வரி பத்மநாபன். இவருக்கு வாய்த்த கணவர் பத்மநாபன், தவம் இருந்து கிடைத்த வரமோ என்பதுபோல் அநுத்தமாவுக்கு உற்ற துணையாகவும், உதவும் கரமாகவும் விளங்கினார்.


இவரது முதல் படைப்பான "அங்கயற்கண்ணி', கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது "மணல்வீடு' புதினம் முதல் பரிசு பெற்றது. இதன்பிறகு பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. அநுத்தமா எழுதிய கதைகள் அனைத்தும் குடும்பக் கதைகள். ஒவ்வொரு இல்லத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளைத்தான் அவை பிரதிபலித்தன.

ஆங்கிலத்திலும் சிறந்த புலமை வாய்க்கப் பெற்றிருந்தார் அநுத்தமா. மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர். அவருடைய இத்தகைய புலமைக்குக் கணவரே காரணம் என்றால் மிகையில்லை.


தன் எழுத்துகளுக்குச் சிறப்பு சேர்த்த, வளர்த்த கி.வா.ஜகந்நாதன் மீது அநுத்தமாவுக்கு அளவுகடந்த பக்தியும் மரியாதையும் இருந்தது. கி.வா.ஜ., எல்லோரிடம் அநுத்தமாவை அறிமுகப்படுத்தும்போது "எனது தங்கை' என்று சகோதரப் பாசத்துடனேயே அறிமுகப்படுத்துவாராம்.

ஒருமுறை கி.வா.ஜ., கலைமகள் இதழுக்கு ஒரு நாவல் எழுதித் தரமுடியுமா எனக் கேட்க, அநுத்தமாவும் உடனே ஒப்புக்கொண்டாராம்.

""எத்தனை நாட்களில் தரமுடியும்?'' என்று கி.வா.ஜ. கேட்க, ""பத்து நாட்களில்'' என்று அநுத்தமா வாய்தவறிச் சொல்லிவிட்டாராம்.

""அது எப்படி ஒரு முழு நாவலைப் பத்து நாட்களில் உன்னால் எழுத முடியும்?'' என்று  கேட்டாராம்.

அன்றிரவே அநுத்தமா எழுதத்தொடங்கினார். எழுத எழுத; அந்தக் காகிதங்களிலேயே பிழை திருத்தி, கணவரிடம் கொடுப்பாராம். அநுத்தமா புதிய பக்கங்களை எழுதிக்கொண்டிருக்கும்போதே, ஏற்கெனவே எழுதித் திருத்திய பக்கங்களை, பத்மநாபன் திருத்திய பிரதியாக எடுப்பாராம்.

பெண்கள் எழுத்தாளராகப் பிரகாசிப்பது என்பது நமது தமிழ்ச் சமுதாயத்தில் கொஞ்சம் சிரமம்தான். காரணம், சில பெண் எழுத்தாளர்களுக்கு அவர்களது குடும்பமே முதல் எதிரியாக இருந்துள்ளது. ஆனால், மனைவியின் குறிப்பறிந்து நடந்துகொண்ட கணவர் பத்மநாபனின் குணத்தையும், புனைபெயர் வைத்து ஊக்கப்படுத்திய மாமனாரின் பண்பையும் என்னவென்று சொல்வது!

கி.வா.ஜ.விடம் சொன்னபடி, சரியாகப் பத்தே நாள்களில் நாவலை முடித்துக் கொடுத்தபோது கி.வா.ஜ. நிஜமாகவே அசந்து போனாராம்.

1956-இல் இவர் படைத்த "பிரேமகீதம்' என்ற புதினம், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருதைப் பெற்றது. ஒரே ஒரு வார்த்தை, வேப்பமரத்து பங்களா ஆகிய புதினங்கள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுக் கதைகளைத் தவிர, பறவை இனங்களைப் பற்றி ஆராய்ந்து, நான்கு புதினங்களைக் குழந்தை இலக்கியத்துக்கு நல்கியுள்ளார். மோனிகா ஃபெல்டன் எழுதிய "ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு' என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15-க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதிக் குவித்திருக்கிறார் அநுத்தமா.

"கேட்ட வரம்' என்ற நாவல், பாளையம் என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிக் கூறும் நாவல். இந்நாவலை காஞ்சி மகா பெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளே பாராட்டியுள்ளார் என்றால், இதைவிட மிகப்பெரிய விருது ஒரு படைப்பாளிக்குத் தேவையா என்ன?

அநுத்தமாவின் "ஒரே ஒரு வார்த்தை' எனும் நாவல் மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியதாயிற்று.

""சமையலுக்கும் நாவலுக்கும் அடுக்களையில் இருந்தே பாத்திரங்களை எடுக்கிறீர்களே'' என்று பாராட்டுவாராம் அகிலன்.


ஆல மண்டபம், நைந்த உள்ளம், ஒன்றுபட்டால், ஜயந்திபுரத் திருவிழா, துரத்தும் நிழல்கள், சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு), மாற்றாந்தாய், முத்துச் சிற்பி, சுருதிபேதம், கௌரி, லட்சுமி, தவம், பூமா, ஒரே ஒரு வார்த்தை, ருசியான கதைகள், அற்புதமான கதைகள், பிரமாதமான கதைகள், படுபேஷான கதைகள், அழகான கதைகள் ஆகியவை இவருடைய பிற படைப்புகள்.


ஓர் எழுத்தாளனுக்கு அவசியம் தேவை, அமைதியான சூழல், எழுத்துக்கு ஆக்கம் சேர்க்கும் குடும்பத்தாரின் ஒற்றுமை. எழுத ஊக்குவிக்கும் நல்ல நட்பு உள்ளங்கள், படைப்புகளைப் பாராட்டும் சிறந்த வாசகர்கள். இவை அனைத்தும் அநுத்தமாவின் வாழ்க்கையில் வரமாகக் கிடைத்தவை.

குடும்பத்துக்கும் எழுத்துக்கும் செழுமை சேர்த்த அநுத்தமா, 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவு, தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு மாபெரும் இழப்பு என்றாலும், காலத்துக்கும் அழியாத காவியங்களை அல்லவா விட்டுச்சென்றிருக்கிறார்!

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
அநுத்தமா

7 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Pride and Prejudice - கல்லூரியில் Non-detail பாடமாக இருந்தது.

அனுத்தமா அவர்களின் புத்தகம் படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது இப்போது.

Unknown சொன்னது…

தனித்தன்மையுடன் எளிதான மொழியில் எழுதிய படைப்பாளி. அவர் படைத்த பாத்திரங்களைப்போல் தம்மை உருவாக்கிக் கொண்ட பெண்மணிகளை நான் அறிவேன். லக்ஷ்மி, வசுமதி ராமஸ்வாமி,அநுத்தமா,ஜோதிர்லதா கிரிஜா ஆகிய நால்வரும் பெண்பாற் கதை நவீனங்கள் படைப்பாளிகளாய்த் தமிழ்க்கட்டுக்கதை இலக்கியத்தில் அரசோச்சிய காலம் அவ்விலக்கியப்பொற்காலமென்பேன்!

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, கணேசன் ஸ்ரீநிவாசன், வெங்கட் நாக்ராஜ்.

( நிச்சயம் படியுங்கள். மணல் வீடு, கௌரி, கேட்டவரம் .... படித்துள்ளேன். கட்டுரையில் “பாளையம்” என்கிறது “கேட்டவரம் பாளையம்” என்றிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பில் ஒரு நாமாவளி இருக்கும் என்று நினைவு. )

ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி எழுதியதையும் படியுங்கள்.
http://www.jeyamohan.in/10733#.WPSvscgrJPY

Geetha Sambasivam சொன்னது…

ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, ஆர்.சூடாமணி ஆகிய மூவருமே எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள். "கேட்டவரம்" கதை நடந்த அந்த ஊர் கட்டவரம்பாளையம் என்னும் பெயரில் இப்போது அந்த ஊர் அழைக்கப்படுவதாக அறிந்தேன்.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி. “ கேட்ட வரம்” நாவலில் வரும் பல நாமாவளிகளை எங்கள் பள்ளியில் கேட்டு மகிழ்ந்த நினைவுகள்.

Unknown சொன்னது…

'கேட்டவரம்' நாவலின் களமாகிய கேட்டவரம்பாளையம் திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 45 கி.மீ தூரத்தில் உள்ள மத்தியதர கிராமம். என் சொந்த ஊர் காரப்பட்டு. இங்கிருந்து 20 கி.மீ. தூரத்தில் கேட்டவரம்பாளையம்.
என் நண்பர்களையும், உறவினர்களையும் காண அந்த ஊருக்கு அடிக்கடி செல்வேன். அந்த கிராமத்தை மையப்படுத்தி வந்த நாவல் என்பதால், எஸ்.எஸ்.எல்.சி விடுமுறையில்(1977) அந்த நாவலை படித்திருக்கிறேன். அந்த ஊரில் நடக்கும் பத்துநாள் ராமநவமியும், கோடைகாலத்தில் கிராமங்களின் தினசரி வாழ்க்கையும் அந்த நாவலில் மிக இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது நினைத்தாலும் என் நினைவுகளில், நான் அந்த நாவலை படிக்கும்போது என் 17,18 வயது நினைவுகள் வந்துவிடும்.

Unknown சொன்னது…

பெயரை பதிவிட மறந்துவிட்டேன்.
என் பெயர்: எம்.எஸ்.ராஜேந்திரன்.
(unknown என்பதை நீக்கிவிட்டு பெயரை போடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)