செவ்வாய், 12 டிசம்பர், 2017

933. சங்கீத சங்கதிகள் - 140

நாதஸ்வர சக்கரவர்த்தி
கல்கி

டிசம்பர் 12. டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு தினம்.
===

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நெடுங்காலம் நடந்து வந்த போர்களைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே மாதிரியாக ஸ்வரங்களுக்கும் அபஸ்வரங்களுக்கும் நீடித்த பெரிய யுத்தம் ஒரு காலத்தில் நடந்தது. இந்த யுத்தத்தில் அபஸ்வரங்களின் கட்சி ஜெயித்துவிடுமோ என்று ஒரு சமயம் பீதியுண்டாயிற்று. ஏனெனில் ஸ்வரங்களின் சைன்யம் கணக்குக்கும் வரையறைக்கும் உட்பட்டது.

இத்தனை வீரர்கள்தான் என்று எண்ணிவிடலாம். இந்த வீரர்கள் இன்னின்ன ஸ்தானத்திலே நிற்க வேண்டும் என்ற வரையறையும் இருந்தது. ஆனால் அபஸ்வரங்களின் சைன்யமோ இராவணனுடைய மூலபலத்தைப் போல அளவிட முடியாத எண்ணிக்கை கொண்டதாயிருந்தது. புற்றிலிருந்து கிளம்பும் ஈசனைப் போல அபஸ்வரசேனா வீரர்கள் முடிவில்லாமல் வந்து கொண்டிருந்தார்கள்.

வரையறை, ஒழுங்கு, கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் நினைத்த நினைத்த வேளைகளிலெல்லாம் கிளம்பிக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் புகுந்து தாக்கினார்கள். ஸ்வரங்களின் பாடு மிக ஆபத்தாய்ப் போய்விட்டது. இந்தப் பூவுலகத்திலிருந்து அடியோடு அழிந்து போக வேண்டியதாக நேருமோ என்று ஸ்வரங்கள் பீதியுற்றுத் தங்களுடைய தாயாகிய சங்கீத தேவதையிடம் சென்று முறையிட்டன.

சங்கீத தேவதையும் அபஸ்வரங்கள் படுத்திய பாட்டினால் மிகவும் நொந்து போயிருந்தாள். “வாருங்கள்; குழந்தைகளே! நாத பிரம்மமாகிய நம் இறைவனிடம் போய் முறையிடுவோம்!” என்று ஆறுதல் சொல்லி அழைத்துப் போனாள். நாதஸ்வரத்தின் சந்நிதிக்குச் சென்று சங்கீத தேவதையும் அவளுடைய குழந்தைகளாகிய ஸ¤ஸ்வரங்களும் முகாரி ராகத்தில் தங்களுடைய சோகக்கதையைச் சொல்லிப் புலம்பினார்கள்.

அதனால் மன மிரங்கிய நாதப் பிரம்மம் தமது சந்திதானத்தில் நின்ற வீரர்களில் சிலரைப் பார்த்து, “நீங்கள் பூவுலகத்தில் போய்ப் பிறந்து அபஸ்வரங்களைச் சதம் செய்து ஸ¤ஸ்வரங்களின் ஆட்சியை நிலை நாட்டி வாருங்கள்!” என்று அருள்புரிந்தார். அவ்வாறு நாதப் பிரம்மத்தின் கட்டளைக்கு உட்பட்டுப் பூலோகத்தில் பிறந்த கான வீரர்களில் ஒருவர். அந்தக் கான வீரரின் பெயர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை.

இந்த நாளில் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் பலவிதங்களில் கொடுத்து வைத்தவர்கள். சிறப்பாக, சங்கீத உணர்ச்சி வாய்ந்தவர்களுக்குத் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர கானத்தைக் கேட்பது வாழ்வில் ஒரு மிகச் சிறந்த அநுபவமாயிக்கும். அவருடைய வாசிப்பைக் கேட்டு ஆனந்திக்கக் கொடுத்து வைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். நம்மைக் காட்டிலும் கர்நாடக சங்கீதக் கலை அதிக அதிர்ஷ்டசாலி. கர்நாடக சங்கீதத்திலும் தோடி ராகத்தின் அதிர்ஷ்டத்தை இவ்வளவென்று சொல்லி முடியாது.

இதற்கு முன்னால் தென்னாட்டில் எவ்வளவோ வித்வான்கள் தோடி ராகத்தைச் சிறப்புற கையாண்டு புகழ் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையோ தோடி ராகத்தைச் சக்கரவர்த்தியின் சிம்மாசனத்திலேயே ஏற்றி வைத்துவிட்டார். மற்றப் பெரிய வித்வான்களெல்லாம் தோடி ராகத்தைக் கையாண்டதனால் தாங்கள் புகழ் பெற்றார்கள். ஆனால் ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளை தோடியைக் கையாண்டதினால் தோடி ராகம் புகழ் பெற்றது.

ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையின் தோடி ஆலாபனையை முதன் முதலில் கேட்டபோது, அவருடைய கற்பனையை விட்டுத் தள்ளுங்கள்- நம்முடைய மனதில் என்னென்ன இன்பமயமான கற்பனைகள் எல்லாம் உதித்தன!

குழந்தை தாயிடம் கெஞ்சும் குரலைக் கேட்டோம்; அன்னை குழந்தையிடம் கொஞ்சும் குரலைக் கேட்டோம்; ரதியும் மன்மதனும் பேசிக்கொண்ட காதல் மொழிகளைக் கேட்டோம்; முருகன் சிவபெருமான் செவி குளிர மொழிந்த உபதேசத்தைக் கேட்டோம்; கலைமகள் கவிஞனுக்கு அருளிய ஆசி மொழிகளைக் கேட்டோம்; நாரத முனிவருடைய தம்புரா சுருதியைக் கேட்டோம்; இராவணன் தன் எலும்பை ஒடித்து வீணையாகச் செய்து வாசித்த கானத்தைக் கேட்டோம்; கானப் பறவைகளின் கல கல த்வனியைக் கேட்டோம்; கோலக் குயில்களின் குரல் இனிமையைக் கேட்டோம்.

இவ்விதம் ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளை தோடி வாசித்துக் கொண்டிருந்த வரையில் நம்முடைய உள்ளமும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் களித்துக்கொண்டிருந்தது. அவர் வாசிப்பை நிறுத்தியதும் நாமும் இந்தப் பூவுலகத்துக்கு வந்த இத்தனை நேரமும் நாம் அனுபவித்த இன்பங்களை எல்லாம் கனவோ, நினைவோ என்ற வியப்பில் முழுகுகிறோம்.

கர்நாடக சங்கீதத்தில் தோடி ஓர் ஆபூர்வமான ராகம். அந்த ராகத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு பூரண ஸ்வரங்களுடன் ஜீவகலை தோன்ற வாசிப்பதும் அபூர்வமான சாதனை. ஆகையினாலேயே தோடி ராகத்தை விசேஷமாகக் குறிப்பிட்டுச் சொன்னோம். அந்த ராகத்தை அவ்வளவு அற்புதமாக ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளை கையாளுகிறார் என்றால், அவர் மற்ற ராகங்களை எப்படி விந்தைகள் தோன்ற வாசிக்கிறார் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

கல்யாணி, காம்போதி போன்ற பழமையான ராகங்களை வாசித்தாலும் சரி, அல்லது ஜகதலப் பிரதாப பிரியா, ஜவஹர்லால் மனோகரி போன்ற புதிய ராகங்களை வாசித்தாலும் சரி, ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையின் தனி மெருகு வாய்ந்த கற்பனைத் திறனையும் இனிய மழலை ஓசையையும் அவருடைய வாசிப்பில் காண்போம்; கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்து உலகத்தை மறப்போம்.

ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நண்பர்கள் அவருக்கு ‘அகில உலக நாதஸ்வர ஏக சக்கராதிபதி’ என்ற பட்டத்தைச் சூட்டியிருக்கிறார்கள். இதை ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையும் ஏற்றுக்கொண்டு கடிதத் தலைப்புகளில் அச்சடித்திருக்கிறார். இவ்வளவு படாடோபமான பட்டத்தைக் குறித்து ‘நாஸ¤க்’ மனிதர்கள் புன்னகை புரிவார்கள். நாமும் அந்தப் பட்டங்களை அவ்வளவாக ரஸிக்கவில்லைதான். ஏனெனில் இந்தக் காலத்தில் ‘ராஜா’ ‘மன்னர்’ ‘சக்கரவர்த்தி’ முதலிய பட்டங்கள் அவ்வளவு மதிப்பு பெற்றிருக்கவில்லை. மதிப்பை இழந்த பட்டங்களுக்கும் ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையினால் அல்லவா அநாவசியமாக மதிப்பு உண்டாகி வருகிறது.

மற்றபடி. ‘ராஜா’ ‘சக்கரவர்த்தி’ என்னும் பட்டங்களுக்கு மதிப்புள்ள காலமாயிருந்தால் ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளை ‘அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி’ என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர் என்பதில் ஐயமில்லை. கர்நாடக சங்கீத உலகத்தில் நாதஸ்வர வாத்தியம் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. அந்த ராஜ வாத்தியத்தை இணையில்லாத கற்பனைத் திறனுடன் கையாண்டு அந்த வாத்தியத்துக்கு முன் எப்போதுமில்லாத பெருமையை ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளை அளித்திருக்கிறார். அப்படியிருக்கும் போது ‘நாதஸ்வர சக்கரவர்த்தி’ என்று அவரை ஏன் சொல்லக்கூடாது?

சமூக வாழ்க்கையையொட்டிய லெளகிக விவகாரங்களில் ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையைப் பற்றிச் சில குறைகள் சொல்லப்படுவதுண்டு. “கச்சேரிக்கு ஒப்புக் கொண்டு வராமலிருந்து விடுவார்” என்பார்கள். “வந்தாலும் சரியான சமயத்துக்கு வந்து சேர மாட்டார்” என்பார்கள். “சரியான சமயத்துக்கு வந்தாலும் மனது வைத்து வாசிக்க மாட்டார்; ஏமாற்றிப் போடுவார்!” என்பார்கள்.

இந்த மாதிரி குறைகள் சொல்வதற்கு இடமில்லாதபடி ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளை நடந்துகொண்டால் நல்லதுதான். ஆனால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் ஸ்ரீ ராஜரத்தினம் பிள்ளையிடம் அவருடைய கலை மேதையும் கற்பனைத் திறனும் இல்லாமலிருந்தால் நாம் திருப்தியடைய முடியுமா? ஒரு நாளும் இல்லை. “பூலோகத்துக்கு வரும்போது அவரிடம் இம்மாதிரி குறைகள் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சங்கீத உலகில் சஞ்சரிக்கும்போது அவர் கற்பனையின் உச்சியில், கலையின் சிகரத்தில் இப்போதுள்ளது போல் எப்போதும் இருக்க வேண்டும்” என்றுதான் ரஸிகர்கள் ஒருமுகமாய்க் கூறுவார்கள். அவ்விதமே நாமும் சங்கீத தேவதையிடம் விண்ணப்பம் செய்து கொள்கிறோம்.

தொடர்புள்ள பதிவுகள்:

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

டி. என். ராஜரத்தினம் பிள்ளை: விக்கிப்பீடியா

சங்கீத சங்கதிகள்

1 கருத்து:

Bhanumathy Venkateswaran சொன்னது…

ஊரே ரஜினிகாந்தின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கையில் ராஜரத்தினம் பிள்ளையை நினைவு படுத்தியதற்கு நன்றி! அவரைப் பற்றிய பதிவு சுநாதமாக இருந்தது.