வெள்ளி, 28 செப்டம்பர், 2018

1158. லா.ச.ராமாமிருதம் -17: சிந்தா நதி - 17

22. சாக்ஷி : கற்பூரம் 
லா.ச.ராமாமிருதம்




அப்போது எனக்கு வயது ஆறு இருக்கலாம். ராயப்பேட்டையில் முத்து முதலித் தெருவில் குடியிருந்தோம்.

எதிர் வீட்டுப் பின் கட்டில், ஒரு தச்சனார் குடும்பம். பின்கட்டு பெரிய கட்டு. அதில் குடும்பமும் பெரிய குடும்பம். அப்பா தச்சனார், அம்மா தச்சனார், மூன்று பிள்ளைகள் தச்சனார்- அவர்கள் சம்சாரம். பெரியவர் வாட்டசாட்டமாக, வண்டு விழியும் கிருதா மீசையுமாய்ப் பின்னால் நான் பார்த்த சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி கம்பீரமாக அகன்ற நெற்றியை அரைப் பங்குக்கு மேல் அடைந்த தென்கலை நாமம்.




வீட்டினுள்ளேயே முற்றத்தில் தகரக் கொட்டகை போட்டு அதுதான் பட்டறை. மூன்று மகன்களைத் தவிர இரண்டு சின்னப் பையன்கள் வேலை செய்தார்கள். இவர்களுடைய உற்பத்தி அனேகமாகக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான், சமையலறைப் பண்டங்கள்பொம்மை வண்டி, சொப்புகள் மரப்பாச்சி, உப்பு மரவை, அரிவாமணை, துருவலகாய், மத்து, மனை, ஸ்டுல், இத்யாதி, பெரிய சாமான்களில் இறங்குகிற மாதிரி அவர்களிடம் சாதனங்கள் இல்லை. பண்ணவும் தெரியுமோ தெரியாதோ?

இங்கு நான் எப்படிச் சேர்ந்தேன்? எதிர் வீடுதானே! பின்கட்டுக்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். இதெல்லாம் எப்படிச் செய்யறது? என்று அவர்களைத் தொணப்புவேன். அண்ணா-அப்பாவை அண்ணாவென்றுதான் அழைப்போம் அண்ணாவும் தச்சரும் ஒருநாள் அளவளாவுகையில், 'பையன் உங்கள் தொழிலில் அக்கறை காட்டுகிறான்; சும்மா உங்களிடம் வந்துபோய்க் கொண்டிருக்கட்டுமா?' என்று கேட்டு, அவரும் உடனேயே சம்மதித்தார். நான் பள்ளிக்கூடம் இன்னும் சேரவில்லை. வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து எழுதப் படிக்கத் தெரியும்.

ஐயர் வீட்டுப் பையன் பட்டறையில் வேலை செய்வதில் அவர்களுக்கும் பெருமை. ("வெள்ளைக்காரன் தோத்தான், என்ன நிறம் பாத்தியா' எனக்கு ஒரு இடத்துக்கு வேளையாகப் போய், வேளையாகத் திரும்பி வருவதாக ஒரு ஒழுங்கு படிபட்டுமே! பின் என்ன, தச்சுத் தொழிலா என் பிழைப்பாக இருக்கப்போகிறது? ஏதோ பொழுது போக்கு.

தாத்தா பட்டறையில் உட்கார்ந்து நிரந்தரமாக வேலை செய்யமாட்டார். ஏன் செய்யனும்? மேல் பார்வை பார்ப்பார். தப்புத் திருத்துவார். சத்தம் போடுவார். கோபத்தில், கல்யாணமான தன் பையன்களைச் சில சமயங்களில் கைமிஞ்ச அஞ்சமாட்டார். பட்டறையிலேயே ஒரு ஒரமாக ஒரு குட்டி விமானத்தில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் பெருமாளுக்குப் பூஜை செய்வார். சின்ன விக்ரகங்கள். அவருடைய தாத்தா நாளிலிருந்து இருக்கிறதாம். இரண்டு பக்கங்களிலும் தேவிகள். சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நாழிகை கட்டைக் குரலில் துதிகள் பாடிக் கொண்டிருப்பார். திடீரெனத் தோத்திரங்கள் அடங்கி, குறட்டை பட்டறையைத் துரக்கும்.

இவர்கள் உற்பத்தியை விற்பனை செய்யக் கடை யென்று ஒன்று எங்கோ வைத்திருந்தார்கள். என்றாலும், அது ஒழுங்காக வேலை செய்த மாதிரித் தெரியவில்லை. ஆங்காங்கே கோயில்களில் நடக்கும் பிரம்மோற்சவங்களில் அவர்கள் விரித்த கடையையே நம்பியிருந்தார்கள். கபாலி கோயில், பார்த்தசாரதி கோயில், கந்தசாமி கோயில் தவிர, ஒரு ஐந்தாறு மைல் வட்டாரத்தில், பட்டணத்தில் அவர்களுக்குத் தெரிந்தபடி வெவ்வேறு மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் கோயில்கள் இருந்தன. இரவு எப்படியும், மிச்ச சரக்குடனும், வசூலுடனும் வீடு திரும்பி விடுவார்கள். முற்பகல் வேளைக்குப் பையன்கள் பட்டறையில் இருப்பார்கள். பிற்பகலில் வியாபாரத்தைக் கவனிப்பார்கள்.

மாலை விளக்கு வைக்கும் நேரத்துக்கு, அல்லது இரவு வீடு திரும்பியதும் விற்பனைத் தொகையை அப்பாவிடம் ஒப்புவிப்பார்கள். அவர் வெகு ஜாக்கிரதையாக எண்ணி, உள்ளே அலமாரியில் பூட்டி வைத்துக் கொள்வார்.

அன்றாடச் செலவுக்கு, அரிசியிலிருந்து எண்ணெய் வரை, அவருக்கும் பாட்டிக்கும் ஆயிரம் தர்க்கங்களுக்கிடையே அலமாரியிலிருந்து வழங்குவார். கடை கண்ணிக்குப் போவதெல்லாம் பாட்டிதான். ஆட்சி, இன்றைய பாஷையில், இரும்புக் கரம்தான். ஐயாவுக்கு நடந்தது, இதுவும் இன்றைய பாஷை தான்.

வெள்ளிக்கிழமையன்று மாலை பெருமாளுக்கு விசேஷ பூஜை, தேங்காய், சீப்புப் பழம், பொரிகடலை நிவேதனம். பட்டறையில் வேலை செய்வோருக்குப் பட்டுவாடா, பையன்களுக்குக் கைச் செலவுக்குத் தலா இரண்டனா. எனக்குக் கிடையாது. காசு வாங்கக் கூடாதுன்னு ஆத்தில உத்தரவு. பொரிகடலை போனாப் போறது. கொடுத்தா வாங்கிக்கோ நீயே மொக்க வேண்டாம். உன் தம்பிகளுக்கும் கொடு.

இங்கே நான் என்ன வேலை செய்தேன்னு யாரும் கேட்கமாட்டேங்கறாளே! சரி, நானே சொல்றேன்.

காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு, பட்டறைக்கு வந்துவிடுவேன். சுவரில் எல்லோரையும்போல் ஆணியில் சொக்காயை மாட்டிவிட்டுச் சக்கரம் வெட்டுவேன்.

அதாவது, ஒரு மெல்லிசுப் பலகையில் ஒரு வட்டம் பென்சிலால் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்தக் கோட்டு மேலேயே விளம்பின மாதிரி உளியால் செதுக்கிக் கொண்டே போகணும், வெட்டிக் கொண்டிருக்கையிலேயே விண்டுபோகும். போவட்டும், இன்னொண்ணு வெட்டு.

உளி பிடித்து, அதன்மேல் கொட்டாப்புளியால் தட்டுவதில் கண்டிப்பாகத் தனிக் குஷிதான். டொக் டொக், லொட் லொட்- இதுதான் என் வேலை.

அனேகமாக, கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என்கிற மாதிரிதான்.

இது தச்சன் பட்டறை. ஆனால் பலன் என்னவோ ஒண்ணுதான்.

அபூர்வமாக, ஒன்று பூரா வட்டம் கண்டுவிட்டால் என்னைக் கட்டிப் பிடிக்க முடியாது.

("மூஞ்சியிலே செழுப்பு எப்படி ஏறுது பார்த்தியா?")

அன்னிக்குக் கனாவுலே நான் வெட்டின சக்கரம், மாட்டு வண்டி சக்கரம் பெரிசுக்கு. அதன் சிரங்குப் பொருக்கு விளிம்புடன் வந்து கிறுகிறுன்னு சுற்றும்.

நான் வெட்டின சக்கரம். விஷ்ணு சக்கரம்.

ஒரு நாள்.

காலை. அப்போதுதான் பட்டறையில் கூடியிருக்கிறோம்.

அறை உள்ளிருந்து பெரியவர் வெளிப்பட்டார் என்னென்னவோ வாயில் வந்தபடி பிதற்றிக்கொண்டு. அம்மா! அந்த மாதிரிக் கோபத்தை நான் பார்த்ததில்லை உடம்பெல்லாம் ஆடுகிறது. வேட்டி அவிழ்ந்து போனது தெரியவில்லை. அவரைப் பிடிக்க முயன்று, முடியாமல் பாட்டி அவர் தோளில் தொங்குகிறாள். வாயில் துரை தள்ளுகிறது.

என்ன ஆச்சு? என்ன நடந்தது?

எங்களுக்குள்ளேயே கிசுகிசுவில், படிப்படியாக என் குழந்தை அறிவுக்குப் புரிந்தவரை, நேற்று எண்ணி, அலமாரியில் பூட்டி வைத்த பணத்தில், பத்து ரூபாயைக் காணோமாம்.

"பூ!" யாரேனும் உதட்டைப் பிதுக்கறேளா?

அப்போ, பவுன் பதின்மூன்று ரூபாய்க்கு வித்தது. இப்போ விலை ரூ.2000-

அந்நாளைய பத்து ரூபாய் பாய்ந்த வேகத்தையும், வீச்சையும் இதைவிட ருசுப்படுத்த எனக்குத் தேவை யில்லை. மேலே போகிறேன்.

பெரியவர் புயல் வீசுகிறார். சாமான்கள் உருள்கின்றன. மகன்கள் மேல் தனித் தனியாகப் பாய்கின்றார்.

"இருங்க நைனா! பொறுங்க நைனா சாந்தமாவுங்க நைனா!" மூத்தவன் கெஞ்சுகிறான். "தயவு செய்து கேட்டுக்கங்க! நீங்க எண்ணி வெக்கறதுலே கணக்குப் பிரண்டு போயிருக்கலாமா? இல்லே, உங்கள் குறிப்பேடுலே கூட்டல் கழித்தல்லே-"

"என்னடா பேமானி, எனக்குக் கணக்கு சொல்லித் தரவா வரே!" நோட்டைத் தூக்கி அவன் முகத்தில் சுழற்றி அடித்தார். "ஒரு பத்து ரூபா நோட்டுடா!

நேத்திக்கு ரூவா சில்லரையோடு பிஸ்கட் டப்பியிலே வெச்சிருக்கேன், இன்னிக் காலையிலே காணம்னா, எனக்குப் பாடம் படிக்க வரானே! அந்த நோட்டிலே, ராஜா தலையிலே மச்சம் மாதிரி ஏதோ துரு இருந்தது. சுரண்டிப் பார்த்தேன் வரல்லே. சரி, நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்னடா, எனக்குக் காதா குத்தறே! கடுக்கன் தொங்குது பார்த்தியா?"

இன்னும் என்னென்னவோ புதுசு புதுசா அர்த்தம் புரியாத வார்த்தைகள். இப்போ புரிகிறது. ஆனால் சொல்வதற்கில்லை.

விசாரணை, வீட்டுப் பெண்டிரையும், பிள்ளைகளையும், கூட்டாயும், தனித் தனியாகவும், உள்ளே கூப்பிட்டும் பட்டறையிலுமாக நடக்கிறது.

"நேத்திக்கு மறதியா அலமாரிக் கதவுலேயே சாவி நின்னுபோச்சு. இருந்தால் என்ன? இது குடும்பமா, குடித்தனமா? இதென்னடா வீடு! எத்தினி நாளா, இந்த சமயத்துக்கு எவன்டா காத்திருந்தான்? என்னால் ஜெரிக்கவே முடியல்லியே!"

இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்குமாக அலைகிறார்; திகைத்து நிற்கிறார். கண்களில் காங்கை அடிக்கிறது. மனிதன் மாறிவிட்டான்.

பெருமாளுக்குப் பூஜை நடக்கவில்லை சாமி வாயில் மண். ஏன், வீட்டில் எல்லார் வாயிலுமே அதுதான். அடுப்பு ஒழுங்காகப் புதைந்ததோ? அன்றைய வயிறு அலும்பலுக்குப் பணம் கேட்க யாருக்குத் தைரியம் இருக்கு?

மத யானை, நெருங்கவே பயமாயிருக்கே! குளிக்கக் கூட இல்லை.

இத்தனை நாழிக்கு இட்லிக்கடை நடந்துகொண்டிருக்கும். சட்டினி, சாம்பார், சர்க்கரையுடன் குழந்தைகள் கண்டபடி வாரியிறைத்துக் கொண்டு.

இருக்கிற ஒன்று அரை அரிசியைத் திரட்டிப் பொங்கி, நீராகாரத்தைக் கலக்கி- அது ஆண்களுக்கு ஆச்சு. பெண்கள்?

பாட்டி அவரிடம் இரு கைகளிலும் பயபக்தியுடன் ஏந்திக் கொணர்ந்த தம்ளரை அப்படியே தட்டி வீசி அடித்தார்.

பட்டறையில்தான் என்ன வேலை நடக்கும்? பேசவே அஞ்சினோம்.

மத்தியானச் சாப்பாட்டுக்கு நான் போய்த் திரும்பி வந்தபோது, அவர் விமானத்துக்கெதிரே, கண்ணை மூடிய வண்ணம், நிமிர்ந்த முதுகுடன் அசைவற்று உட்கார்ந்திருந்தார்.

மணி ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு- அப்படியே தூங்கிப்போயிட்டாரா? தூங்க முடியுமோ?

ஐந்தரை, ஆறு மணி வாக்கில், கலைந்தார். ஏதோ முடிவுக்கு வந்தாற் போல் முகத்தில் ஒரு தெளிவு.

பிள்ளைகளை விளித்தார். எதிரே வந்து நின்றனர்.

"துட்டை நீங்க எடுக்கல்லே இல்லியா?"

மூவரும் சேர்ந்தாற்போல் தலையை ஆட்டினர்.

"சரி, பெருமாளுக்குக் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்து அணையுங்க."

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மூவருக்கும் முகம் ஒரே மாதிரியாக வெளிறி விட்டது.

"நான் செய்யற மாதிரியே செய்யணும். ருக்மிணி, குத்து விளக்கை ஏத்து."

விளக்கை ஏற்றுகையில், கிழவிக்குக் கை நடுங்கிற்று. சுடர் குதித்தெழுந்தது. நாங்கள் பையன்கள் பார்த்துக் கொண்டு நின்றோம்.

பெரியவர், கற்பூர டப்பாவிலிருந்து கணிசமான ஒரு கட்டியெடுத்து, பெருமாளுக்கு எதிரே வைத்து ஏற்றினார்.

"அலமாரியிலிருந்து சத்தியமா, நான் ரூபாய் எடுக்கல்லே!" என்று உரக்கக் கத்திக் கையைப் பட்டென்று தட்டினார். கற்பூரம் அவிந்து விக்ரஹம் பொட்டென விழுந்தது. எடுத்து நிமிர்த்தினார்.

"உம், பாண்டுரங்கா- ஆகட்டும்!"

பட்டெனத் தட்டி, பெருமாள் குப்புறக் கவிழ்ந்ததும், எனக்குப் பயத்தில் அரை நிஜார் நனைந்துவிட்டது.

"விஜய ரங்கா! அடுத்தது," பட் பகீர்-

"ரங்கநாதா!"

முடிந்தது.

பெரியவர், அங்கேயே இழைப்புளி பெஞ்சில், இடுப்பு வேட்டியை முகம்வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு காலை நீட்டி விட்டார்.

"போங்கடா போங்க. இங்கே என்ன வேடிக்கை பார்த்துகிட்டு! இன்னிக்கு இனிமேல் வேலை கிடையாது."

அன்றிரவு படுக்கும்வரை, ராத்திரி, வீட்டில் எனக்கு இதே பேச்சுத்தான். அம்மா எனக்கு விபூதி இட்டாள்.

மறுநாள் காலை, பட்டறைக்குக் கிளம்ப, சொக்காயைத் தலைமேல் மாட்டிக்கொள்கையில் ஜேபியிலிருந்து ஏதோ பறந்து விழுந்தது. அதைப் பார்த்ததும் எனக்குப் பயமாப்போச்சு,

"அண்ணா! அண்ணா!" அலறினேன். அண்ணா வந்தார். ஒரு நொடியில் புரிந்துகொண்டுவிட்டார். என் கையைப் பிடித்துக் கொண்டார்.

"பயப்படாதே. நானும் வரேன்."

பெரியவர் தனியாக இருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்று எதிரே அமரச் சொன்னார்.

அண்ணா அவரிடம் கையை நீட்டினார்.

நோட்டைப் பிரித்து, இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு, வெகுநேரம் அதையே வெறித்துக் கொண்டிருந்தார். பிறகு- "நான் குழந்தையைச் சந்தேகிக்கிறேன்னு நினைக்கிறீங்களா?"

"நாயக்கர்வாள், இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? நோட்டு கெட்டுப்போனது. உங்கள் குடும்பச் சொந்த விஷயம். அது அகப்பட்டது என் பையன் சொக்காய்ப் பையில். அவரவர் மனசு அவரவருடையது. உள்ளே புகுந்தா பார்க்க முடியும்? இந்த சந்தேகம் இருக்கே, இது ராமாயண காலத்திலிருந்தே வேலை செய்கிறது."

மறுபடியும் மெளனம்.

அவர் விழிகளிலிருந்து ரெண்டு பெரிய துளிகள் புறப்பட்டு வழிந்து, மோவாயில் உதிர்ந்தன.

"சாமி, எடுத்ததோடு அல்லாமல் ஒரு குழந்தை பழி ஆவட்டும்னு அதன் மேலே சுமக்கற அளவுக்கு இந்த வீட்டுலே கலி தனியா முத்திப்போச்சு, நஷ்டம் எனக்குப் பெரிசு இல்லே. துரோகம்தான் தாங்க முடியல்லே. சரி, போய் வாங்க."

அன்று நான் பட்டறைக்குப் போகல்லே. அன்றிலிருந்தே போகல்லே.

அன்று மாலை, எதிர்வீட்டு வாசலில் ஒரு ஜட்கா வந்து நின்றது. பெரியவரும் பாட்டியும் ஏறிக்கொண்டனர். வண்டி கொள்ளவில்லை.

போய்விட்டார்கள்.

திரும்பி வரவேயில்லை.

சிந்தா நதியில் ஒர் அலையெழுச்சி.
--------------------------
[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 27 செப்டம்பர், 2018

1157. காந்தி - 45

39. கைதிக் கூண்டில்!
கல்கி




கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த  39-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

டில்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலிருந்து மகாத்மா சபர்மதி சத்யாக்கிரஹ ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். அவருடைய உள்ளம் அமைதி இழந்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முடிவாக மகாத்மாவின் தீர்மானத்துக்கு அதிக வோட்டுக்கள் வந்தது பற்றி அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை.

தெரிந்தோ, தெரியாமலோ, பலருடைய மனதிலும் பலாத்காரம் குடியிருப்பதைக் கண்டேன். ஆகவே, எனக்குத் தோல்வி ஏற்படவேண்டும் என்றே பிரார்த்தித்தேன். நான் அதிகமாகப் பயப்படுவது பெரும்பான்மை வோட்டுப் பலத்தைக் கண்டுதான். என்னை ஆதரிப்பவர்கள் வெகு சிலராயிருக்கும் சமயங்களிலேயே என்னால் மிகவும் முக்கியமான வேலை செய்ய முடிந்திருக்கிறது" என்ற காந்திஜி டில்லியிலிருந்து திரும்பி வந்ததும் "எங் இந்தியா"வில் குறிப்பிட்டார். மேலும் காந்திஜி எழுதியதாவது:--

"காங்கிரஸ் ஊழியர்களில் ஓரளவு ஏமாற்றத்தையும் உற்சாகக் குறைவையும் நான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படிப்பட்ட சண்டமாருத எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் ஊளியர்களிடையில் நிர்மாண திட்டத்தை நிறை வேற்றுவதில் உற்சாகத்தையே காணவில்லை. 'இது என்ன சமூக சீர்திருத்த இயக்கமா?' என்று கேட்டார்கள். இம்மாதிரி ஜீவகாருண்யத் தொண்டுகளைச் செய்து பிரிட்டிஷாரிடமிருந்து ஆதிகாரத்தைக் கைக்கொள்ள முடியுமா?' என்றும் கேட்டார்கள். ஆகவே அஹிம்சையின் அடிப்படையைப் பெரும்பாலோர் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை யென்றே ஏற்பட்டது. அ.இ.கா. அங்கத்தினர்களுக்கு நான் எச்சரிக்கை செய்தேன்:- 'உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் என் தீர்மானத்தை ஒப்புக்கொள்ள வேண்டாம்; நிராகரித்து விடுங்கள்' என்று. அப்படி எச்சரிக்கை செய்த பிறகும் பெரும்பான்மையோர் என்னுடைய பிரேரணையை மாறுதல் ஒன்றுமின்றி ஒப்புக் கொண்டார்கள். ஆகவே அவர்கள் இனித் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். சட்ட மறுப்புப்போரை இப்போதைக்கு மறந்துவிட்டு நிர்மாண வேலையில் ஈடுபட வேண்டும். நம்முடைய கால் தவறியபடியால் வழுக்கி விழுந்து விட்டோம். இப்போதாவது நாம் ஜாக்கிரதையடைந்து நமது காலை ஊன்றி வைக்காவிட்டால் வெள்ளம் நம்மை அடித்துக் கொண்டே போய்விடும்"

இவ்வாறு காந்திஜ காங்கிரஸ் தீவிரவாதிகளையும் அவசரக்காரர்களையும் நிதானப்படுத்துவதில் தமது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கையில், அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆயுதத்தைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். தேசமெல்லாம் சோர்வு குடிகொண்டிருக்கும் இந்தச் சமயமே மகாத்மாவைக் கைது செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஒருவாறு வெளிப்பட்டுப் போயிற்று. "மகாத்மாவைக் கைது செய்யப்போகிறார்கள்" என்ற வதந்தி பரவியது. இது மகாத்மாவின் காதிலும் விழுந்தது. உடனே காந்திஜி "நான் கைது செய்யப்பட்டால்" என்ற கட்டுரையை எழுதினார். மார்ச்சு 9-ஆம் தேதி "எங் இந்தியா" வில் இக்கட்டுரை வெளியாயிற்று.


நாம் சுதந்திரத்துக்குத் தகுதியானவர்கள் தான் என்பதை நிரூபிப்பதற்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் அதிகார வர்க்கம் எதிர்பார்ப்பதுபோல் கலகமும் குழப்பமும் உண்டானால் அதிகார வர்க்கத்துக்கு அத வெற்றியாகும். 'அஹிம்சைப் புரட்சி யென்பது ஒருநாளும் நடவாத காரியம்' என்று சொல்லும் மிதவாத நண்பர்களின் கட்சிக்கும் அது ஜயமாகும். சர்க்காரும் சர்க்காரை ஆதரிப்பவர்களும் கொண்டிருக்கும் பயம் வீண் பயம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். என்னைக் கைது செய்தால் அதற்காக ஹர்த்தால்களோ, ஊர்வலங்களோ, கோஷங்களுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களோ எங்கும் நடக்கக் கூடாது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் பூரண அமைதி குடி கொண்டிருக்குமானால் அதை என்னுடைய தேசத்தார் எனக்குச் செய்த மகத்தான மரியாதையாகக் கருதுவேன். அதற்கு மேலே, காங்கிரஸின் நிர்மாண திட்டங்கள் எல்லாம் 'பஞ்சாப் எக்ஸ்பிரஸ்" வேகத்தில் நடைபெற்றால் மகிழ்ச்சி அடைவேன். அஹிம்சை, சமூக ஒற்றுமை, தீண்டாமை விலக்கு, கதர், இந்த நாலு திட்டங்களும் சுயராஜ்யத்தின் நாலு தூண்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.


இவ்விதம் பொது மக்களின் கடமையைக் குறிப்பிட்டு விட்டு மகாத்மாஜி மேற்படி கட்டுரையைப் பின்வருமாறு முடித்திருந்தார்.:--

"தற்சமயம் என்னை மக்களின் மத்தியிலிருந்து நீக்கிச் சிறைக்கு அனுப்புவதினால் பல நன்மைகள் விளையும் என்று கருதுகிறேன். முதலாவது என்னிடம் 'மாயமந்திர சக்திகள்' இரப்பதாகச் சலெர் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கை போகும். இரண்டாவதாக ஜனங்கள் என்னுடைய தூண்டதலினாலேதான் சுயராஜ்யம் வேண்டுகிறார்கள். அவர்களுக்காகச் சுதந்திரப் பற்று இல்லை என்ற கூற்று பொய்யாகும். மூன்றாவது, என்னை அப்புறப்படுத்திய பிறகும் மக்கள் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றினால் சுயராஜ்யம் ஆளுவதற்கு மக்களின் தகுதி நிரூபணமாகம். நாலாவது சுயநல காரணம் ஒன்றும் இருக்கிறது. ரொம்பவும் அலுப்படைந்திருக்கும் என்னுடைய துர்ப் பல சரீரத்துக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இவ்வளவு நாள் நான் செய்த வேலையின் காரணமாக இந்த ஓய்வுக்கு நான் தகுதி பெற்றிருக்கிறேன் அல்லவா?". காந்திஜி இவ்விதம் எழுதிய கட்டுரை வெளியான இரண்டு தினங்களுக்கெல்லாம் அந்த மகான் கோரிய ஓய்வை அவருக்குக் கொடுக்க அதிகார வர்க்கத்தார் முன் வந்தார்கள்.

மார்ச்சு 8-ஆம் தேதியன்று மகாத்மா கைது செய்யப்படுவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் அதைக் குறித்து ஆசிரமவாசிகள் சிறிதும் பரபரப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். ஜனாப் சோடானி சாகிப்பின் கோரிக்கையின் பேரில் 8-ஆம் தேதி மகாத்மா ஆஜ்மீருக்குச் சென்றார். 10-ஆம் தேதி திரும்பி வந்தார். அன்றைக்கு ஆஜ்மீரிலிருந்து ஆசிரமத்துக்கு வந்த தந்திச் செய்தி சந்தேகாஸ்பதமா யிருந்தபடியால் ஆசிரமவாசிகள் சிறிது பரபரப்பை அடைந்தார்கள். எங்கேயோ வெளியூரில், தாங்கள் இல்லாத இடத்தில், மகாத்மாவைக் கைது செய்து கொண்டுபோய் விடுவார்களோ என்ற கவலை உண்டாயிற்று. ஆகையினால் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி முதலியவர்கள் மகாத்மாஜி திரும்பி வரவேண்டிய வண்டியை எதிர்நோக்கிச் சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து சென்றார்கள்.


ஒரு சமயம் காந்திஜி பின்வருமாறு எழுதினார்:- "எனக்கும் ஹிந்து மதத்துக்குக் உள்ள பாந்தவ்யம் எனக்கும் என் பத்தினிக்கும் உள்ள பாந்தவ்யத்தைப் போன்றது. ஸ்ரீமதி கஸ்தூரிபாயிடம் நான் பல குறைகளைக் காண்கிறேன். ஆனாலும் அந்தக் குறைகளையுடையவளிடம் அசைக்க முடியாத நேசமும் பற்றும் எனக்கு உண்டு. இதுபோலவே ஹிந்து மதத்தில் நான் பல குறைகளைக் கண்டாலும் அதனிடம் எனக்குள்ள அபிமானம் மிக ஆழ்ந்த அபிமானம், அதை ஒரு நாளும் அசைக்க முடியாது."

காந்திஜி இவ்வாறு ஸ்ரீமதி கஸ்தூரிபாயை ஹிந்து மதத்துக்கு ஒப்பிட்டது ஹிந்து மதத்துக்கே கௌரவம் அளிப்பதாகும் என்று நாம் கருதுகிறோம். காந்தி தமது பத்தினியிடம் பல குறைகளைக் கண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய அன்னை கஸ்தூரிபாயிடம் நாம் ஒரு குறையையும் காணவில்லை. நாம் காண்பதெல்லாம் அவருடைய பெருமைதான். காந்திஜி தேசத்தின் முடிசூடா மன்னராய் விளங்கியபோதும் தேசமெல்லாம் காந்திஜியைக் குற்றங் கூறிக் கோபித்துக்கொண்ட போதும் அன்னை கஸ்தூரிபாயின் பக்தி அவரிடம் ஒரேவிதமாக மாறாமலிருந்தது. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் கஸ்தூரி பாய் உட்பட்டார். அவர் கொடுத்த கஷ்டங்களை யெல்லாம் மகிழ்ச்சியுடன் அநுபவித்தார். ஆனால் தமக்குத் தெரியாமல் தம் கணவரைச் சிறைக்குக் கொண்டுபோய் விடுவார்களோ என்ற எண்ணம் மட்டும் அவரைத் துணுக்கத்துக்கு உள்ளாக்கியது. சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து ஓடினார். நல்லவேளையாக, பயந்தபடி ஒன்றும் நடைபெறவில்லை. காந்திஜி குறிப்பிட்ட ரயிலில் வந்து இறங்கினார். சின்னஞ்சிறு குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டும் தமாஷ் செய்து கொண்டும் காந்திஜி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.

அன்று மாலைப் பிரார்த்தனை ஆசிரமத்தில் வழக்கத்தைக் காட்டிலும் அதிக சிரத்தையும் உருக்கமும் உள்ளதாக நடை பெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் பலருடைய கண்களில் நீர் ததும்பியது. ஆனால் மகாத்மாவோ வழக்கத்தைக் காட்டிலும் அதிக குதூகலத்துடன் ஆசிரமத்துக் குழந்தைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு அவர்களில் தாமும் ஒரு குழந்தையைப்போல் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு, வழக்கம்போலக் கடிதங்களுக்குப் பதில் எழுதத் தொடங்கினார். அச்சமயம் ஆமதாபத்திலிருந்து பல நண்பர்கள் வந்து ஊரில் பரவியுள்ள வதந்தியைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் காந்திஜி தைரியம் சொல்லித் திருப்பி அனுப்பினார்.

அப்படி வந்தவர்களில் கடைசியாகத் திரும்பிப் போனவர்கள் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஜனாப் ஷுவாயிப் குரேஷீ, ஸ்ரீமதி அனசூயாபென் ஆகியவர்கள். இவர்களில் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் "எங் இந்தியா" பத்திரிகையின் பதிப்பாளர். இவர்கள் மூவரும் இரவு பத்து மணிக்கு மகாத்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். இவர்கள் போனவுடனே மகாத்மாவும் வேலையை நிறுத்திவிட்டுப் படுக்கப் போக எழுந்தார். சில நிமிஷங்களுக்கெல்லாம் ஜனாப் குரேஷியும் ஸ்ரீமதி அனசூயாபென்னும் மட்டும் திரும்பி வந்தார்கள். ஆசிரம எல்லையிலிருந்து ஆமதாபாத் புறப்படும் இடத்தில் போலீஸ் சூபரிண்டெண்டும் போலீஸ் ஜவான்களும் வந்திருக்கிறார்கள் என்றும், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரைக் கைது செய்து விட்டார்கள் என்றும், மகாத்மாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்கள். இந்தச் செய்தி ஒரு நிமிஷத்துக்குள் ஆசிரமம் முழுவதும் பரவிவிட்டது. ஆசிரமத்தில் வசித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் வந்து மகாத்மாவைச் சூழ்ந்து கொண்டார்கள்.

மகாத்மா நீண்டகாலமாகச் செய்த தவம் நிறைவேறியவரைப்போல் சந்தோஷமடைந்தார். ஜனாப் ஷுவாயிப் குரேஷியிடம், "இராஜகோபாலாச்சாரியார் விடுதலையாகி வருகிற வரையில் நீங்கள் 'எங் இந்தியா' வைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வந்ததும் அவரிடம் ஆசிரியப் பொறுப்பை ஒப்புவித்து விடுங்கள்!" என்று சொன்னார்.

ராஜாஜி டிசம்பர் கடைசியில் வேலூரில் 144-வது உத்திரவை மீறியதற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை அடைந்தார். அவர் விடுதலையாகும் தேதி நெருங்கியிருந்தது. காந்திஜி தீர்க்கமாக யோசித்து, "நான் சிறைப்பட்டால் என் கொள்கைக்கு இணங்க 'எங் இந்தியா'வை நடத்தக்கூடியவர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார்தான்" என்று முடிவுகட்டித் தெரிவித்திருந்தார். அதையே இப்பொழுதும் சொன்னார்.

பிறகு ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேசி அவர்களை உற்சாகப்படுத்தி சிரிப்பூட்டி விடைபெற்றார். இது முடிந்ததும் எல்லாரும் சேர்ந்து "வைஷ்ணவ ஜனதோ" கீதத்தைப் பாடும்படி சொன்னார். பிள்ளைப் பிராயத்தில் மகாத்மாவின் உள்ளத்தில் பதிந்த இந்தக் கீதத்தை ஒவவொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் மகாத்மா பாடச் சொல்வது வழக்கம். அவ்வாறே இச் சமயத்திலும் அந்தக் கீதத்தைப் பாடச்சொல்லிக் கேட்ட பிறகு மகாத்மா பிரயாணமானார்.

அந்தச் சமயத்தில் மௌலானா ஹஸரத் மோஹினி வந்த சேர்ந்தார். இவர் மகாத்மா காந்தியைப் பலதடவையும் எதிர்த்துப் போராடியவர். ஆமதாபாத் காங்கிரஸிலேகூட எதிர்த்தார். அப்படிப்பட்டவர் இப்போது கண்ணுங்கண்ணீருமாக வந்தார். இச்சமயத்தில் அவர்வந்தது மகாத்மாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இருவரும் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அஹிம்சை அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு இனிப் பூரண ஆதரவு தருவதாக மௌலானா கூறினார்.

காந்திஜியையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் சபர்மதி சிறைக்குக் கொண்டு போனார்கள். அங்கே பலமான இரும்புக்கம்பிக் கதவுகள் போட்ட இரு அறைகளில் அவர்கள் அடைக்கப் பட்டார்கள். ஒவ்வொரு அறையிலும் ஒரு இரும்புக் கட்டில், ஒரு கயிற்று மெத்தை, ஒரு தலையணை, ஒரு ஜமக்காளம், ஒரு கம்பளம் இவை இருந்தன. அறைகளுக்கு வெளியே தாழ்வாரம் இருந்தது.

இந்தச் சிறை வாசல் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் இன்னம் சில ஆசிரமவாசிகளும் சென்றார்கள். சிறைக்குள்ளே காந்திஜியை அனுப்பிக்தைவைச் சாத்திப் பூட்டும் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் தமது பதியின் அருகில் இருந்துவிட்டுப் பின்னர் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.

காந்திஜியின் உள்ளத்தில் அன்றிரவு அமைதி குடிகொண்டிருந்தது. ஆனால் அன்னையின் உள்ளம் எப்படித் தத்தளித்தது என்பதை யாரால் விவரிக்க முடியும்? "இன்னம் எத்தனை காலம், எத்தனை தடவை, இப்படியெல்லாம் இந்தக் கிழவர் சிறைபுக வேண்டும் இந்த நாட்டுக்காக!" என்று அன்னையின் மனம் கஷ்டப்பட்டிருந்தால் அதில் வியப்பு ஒன்று மிராது. ஆனால் அவ்விதம் மனம் கஷ்டப்பட்டதாக ஸ்ரீமதி கஸ்தூரி பாய் அணுவளவும் காட்டிக்கொள்ளவில்லை.

மறுநாள் மார்ச்சு 11 - ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி.எஸ். அவர்களின் கோர்ட்டுக்கு மகாத்மாவையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் அழைத்துச் சென்றார்கள். "எங் இந்தியா" பத்திரிகையில் 29-9-'21, 15-12-'21, 23-2-'22 தேதி இதழ்களில் வெளியான மூன்று கட்டுரைகளுக்காக 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்படுகிறதென்று தெரியவந்தது. மேற்படி கட்டுரைகளின் தலைப்புகள் "இராஜ விசுவாசத்தைக் கெடுத்தல்", "புதிரும் விடையும்", "சிங்கத்தின் பிடரி குலுங்குகிறது" என்பவையாகும். இந்தக் கட்டுரைகள் கோர்ட்டில் படிக்கப்பட்டன. இவை "எங் இந்தியா"வில் வெளியாயின என்பதற்கும் "எங் இந்தியா" வின் ஆசிரியர் மகாத்மாகாந்தி, பதிப்பாளர் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் என்பதற்கும் சம்பிரதாயமான சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் சார்பீல்டு, ஜில்லா போலிஸ் சூபரிண்டெண்ட் மிஸ்டர் ஹீலி, ஒரு ஸப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஸி.ஐ.டி. உத்தியோகஸ்தர் ஆகியவர்கள் சாட்சி சொன்னார்கள். சாட்சியங்களைப் பதிவுசெய்த பிறகு மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி,எஸ். குற்றப் பத்திரிகையைப் படித்தார். ஆமதாபாத் செ ஷன்ஸ் ஜட்ஜு மிஸ்டர் சி. என். புரும்பீல்டு ஐ.சி.எஸ். மன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடை பெற வேண்டும் என்று முடிவு கூறினர்.

1922-ஆம் வருஷத்திலே கூட ஒரு ஜில்லாவின் பிரதம உத்தியோகஸ்தர்கள், ஜட்ஜுகள் முதலியோர்கள் ஐரோப்பியர்களாகவே இருப்பதை வாசகர்கள் கவனிப்பார்களாக. அதைக் கவனித்தால்தான் மகாத்மாஜியின் தலைமையில் இந்தியாவின் விடதலைப் போர் வெற்றி அடைந்து இன்று நம்மை நாமே ஆண்டுகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பது எவ்வளவு மகத்தான சாதனை என்பது தெரியவரும்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

1156. காந்தி - 44

38. நெருப்பைக் கொட்டினார்கள்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த  38-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

சௌரி சௌரா பயங்கரச் சம்பவத்துக்காக மகாத்மா பிப்ரவரி 12 - ஆம் தேதி உபவாசம் ஆரம்பித்து ஐந்து நாள் விரதம் இருந்தார். 17 - ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகாத்மாவின் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் உண்ணாவிரத பூர்த்தி பாரணைக்காகக் கொஞ்சம் பாலும் சில திராட்சைப் பழங்களும் ஆரஞ்சு ரஸமும் கொண்டு வந்தார். காந்திஜி ஸ்ரீமத் ராமதாஸ் என்னும் இன்னொரு சீடரை அழைத்துப் பகவத் கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கவனமாகச் சிரவணம் செய்தார். அச்சமயம் பாபு ராஜேந்திர பிரஸாத், சேத் ஜம்னாலால் பஜாஜ், ஸ்ரீமதி அனசூயாபென் முதலியவர்கள் மகாத்மாவின் அருகில் இருந்தார்கள். மகாத்மாவின் கண்ணில் என்றுமில்லாத வண்ணம் சில கண்ணீர்த் துளிகள் துளிர்த்து வழிவதை அவர்கள் பார்த்து மனம் உருகினார்கள். சௌரி – சௌரா காந்திஜியின் மனதை எவ்வளவு புண்படுத்தி யிருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார்கள். ஆம்; அதில் வியப்பு என்ன? எந்த இயக்கத்தினால் இந்தியாவக்குக் கதிமோட்சத்தை அளிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டு மகாத்மாகாந்தி அல்லும் பகலும் அனவரதமும் வேலை செய்து வந்தாரோ, அந்த இயக்கத்தை இப்போது ஆரம்பிக்க முடியாமற் போய்விட்டதல்லவா?

இதனால் மகாத்மாவின் மனம் எவ்வளவு தூரம் புண்ணாகி யிருக்கவேண்டும் என்று அறியாது அரசியல் வாதிகளும் தேசபக்தர்களும் அவருடைய தலைமீது நெருப்பைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் காந்திஜி பொறுமையாகச் சகித்துக்கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் பரிகாரமான ஒரு நிகழ்ச்சியும் ஏற்பட்டது. மகாத்மா உபவாசம் நிறுத்திய மறுநாள் அதாவது பிப்ரவரி 18௳ மௌலானா முகமதலியையும் டாக்டர் கிச்லூவையும் பீஜப்பூர் சிறையிலிருந்து தூலியா சிறைக்குக் கொண்டு போனார்கள். அந்த ரயில் பாதையின் மத்தியில் பர்தோலி ரயில்வே ஸ்டேஷனும் இருந்தது. இதை அறிந்த மகாத்மா ரயில்வே நிலையத்தில் அவர்களைப் பார்த்து விட்டு வரும்படி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரை அனுப்பினார். ஸ்ரீ கிருஷ்ண தாஸ் சில ஆரஞ்சுப் பழங்களையும் எடுத்துக்கொண்டு பர்தோலி ரயில் நிலையத்துக்குப் போனார். மௌலானாவைச் சந்தித்துக் காந்திஜி முதல் நாள்தான் உபவாச விரதத்தை முடித்திருந்தபடியால் அவர்களைப் பார்க்க வரவில்லை யென்று கூறினார்.

ஆனால் மௌலானாவுக்கு இது சமாதானம் அளிக்கவில்லை. மகாத்மாவை ரயில் நிலையத்தில் சந்திக்க அவர் எவ்வளவோ ஆவலாயிருந்தார். மகாத்மா வரவில்லை யென்று அறிந்ததும் மௌலானா அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. பர்தோலியை விட்டுப் புறப்படுவதற்குள் எப்படியாவது மகாத்மாவைப் பார்க்க விரும்புவதாக ஸ்ரீகிருஷ்ணதாஸிடம் மௌலானா கூறினார். ஸ்ரீ கிருஷ்ணதாஸ் ஓடோடியும் சென்று காந்திஜியினிடம் மௌலானாவின் விருப்பத்தைத் தெரிவித்தார். மகாத்மா தம்முடைய பலவீனத்தை மறந்து உடனே புறப்பட்டு ரயில் நிலையத்துக்குச் சென்றார். மகாத்மாவைக் கண்டதும் மௌலானா முகம்மதலியும் டாக்டர் கிச்லூவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காந்திஜி அருகில் வந்ததும் அவரை அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்டு கண்ணீர் உகுத்தார்கள். தாங்கள் சிறையாளிகள் என்பதையும் போலீஸ் பாதுகாப்பில் இருப்பதையும் ஒரு நிமிஷம் மறந்தே விட்டார்கள். ஆரம்ப உணர்ச்சிப் பெருக்குக் கொஞ்சம் குறைந்ததும் மௌலானா "பாபுஜி! 'சௌரி-சௌராவின் பாதகம்' என்ற கட்டுரையைத் தங்களைத் தவிர இந்த உலகத்திலேயே வேற யாரும் எழுதியிருக்க முடியாது. அவ்விதம் நம்மிடமுள்ள குறையைச் சங்கோசமின்றித் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளக் கூடியவர் வேறு யார்? சௌரி-சௌராவுக்குப் பிறகு பர்தோலி இயக்கத்தைத் தாங்கள் தள்ளிப்போட்டது ரொம்ப சரியான காரியம்" என்றார். இரண்டு மூன்று நிமிஷத்துக்குள்ளே ரயில் புறப்பட்டு விட்டது. "மகாத்மா காந்திக்கு ஜே!" என்று திரும்பத் திரும்ப மௌலானா கோஷித்துக்கொண்டே போனார். தலைவரிடம் இத்தகைய அன்பையும் நம்பிக்கையையும் கண்டவர்கள் கண்களிலெல்லாம் கண்ணீர் தளும்பியது.

இந்த நிகழ்ச்சியினால் மகாத்மாவுக்கு ஓரளவு மனச்சாந்தி ஏற்பட்டது. ஆனால் இவ்வாறு மகாத்மா கைக்கொண்ட முறையே சரியானது என்று கருதியவர்கள் மிகச் சிலர் தான். மற்றவர்கள் அதை ஒபபுக்கொள்ளவில்லை. மகாத்மா காந்தி செய்தது பெரிய தவறு என்றும், காரியசித்தி அடையும் சமயத்தில் மகாத்மா தேசத்தைப் பின்னுக்கு இழுத்து விட்டார் என்றும் சொன்னார்கள். மகாத்மாவுக்கு இந்தியாவின சுதந்திரத்தைக் காட்டிலும் அஹிம்சா தர்மப்பிரசாரமே பெரிது என்றார்கள். தேசமெங்கும் பரிபூரண அஹிம்சை நிலவும் வரையில் காத் திருப்பது என்றால், இந்த யுகத்தில் இந்தியா சுதந்திரம் அடையப் போவதில்லை என்று சொன்னார்கள்.

இந்தமாதிரி குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர தேசத்துப் பத்திரிகைகளிலே அதிகமாக வெளியாயின. டில்லியில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் காந்திஜியின் பூரண நம்பிக்கைக்கு உகந்த சகாக்களும் அவரைப் பலமாகத் தாக்கினார்கள்.

பர்தோலி வரிகொடா இயக்கத்தையும் இந்தியா முழுவதிலும் தனிச் சட்ட மறுப்பையும் கூட நிறுத்தி வைத்து நிர்மாண வேலையில் கவனம் செலுத்துவது என்று காரியக் கமிட்டியில் தீர்மானம் செய்யப்பட்டது அல்லவா? அதை ஊர்ஜிதம் செய்வதற்காக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி டில்லியில் பிப்பரவரி 24-ஆம் தேதி கூடியது. அதற்காக 22-ஆம் தேதியன்று மகாத்மா காந்தி டில்லிக்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னால் பர்தோலி மக்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார்.

"பொதுஜனச் சட்ட மறுப்பை இப்போது ஆரம்பிக்க முடியாமல் நீடித்துத் தள்ளிப்போட நேர்ந்ததற்கு நீங்கள் பொறுப்பாளிகள் இல்லை. உங்கள் கடமையை நீங்கள் நன்கு நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால் இந்தியா ஒரு தேசம். எங்கேனும் ஒரு இடத்தில் தவறு நேர்ந்தால் அது தேசம் முழுவதையும் பாதிக்கிறது. ஆகையினாலேயே சௌரி-சௌரா நிகழ்ச்சி காரணமாக பர்தோலி இயக்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. இதற்காக நீங்கள் மனச் சோர்வு அடையக்கூடாது.

பலாத்கார யுத்தத்தில் தலைவன் படைகளை 'முன்னேறுங்கள்' என்றால் முன்னேற வேண்டும். 'பின்வாங்குங்கள்' என்றால் பின்வாங்கியே தீர வேண்டும். இது அஹிம்சைப் போருக்கும் பொருந்தும். ஆகையால் கொடுக்கவேண்டிய வரிகளையெல்லாம் காலாகாலத்தில் கொடுத்துவிடுங்கள். எந்தச் சட்டத்தையும் மீறாதீர்கள். நிர்மாணத் திட்டத்தில் முழு உற்சாகம் காட்டி வேலை செய்யுங்கள். நிர்மாண வேலையின் மூலமாகச் சுதந்திரத்தின் சாராம்சத்தை நாம் அடைந்தவர்களாவோம்!*


பர்தோலி வாசிகளுக்கு எவ்வளவோ ஏமாற்றமும் மனத்தாங்கலும் இருந்த போதிலும் அவர்கள் மகாத்மாவின் கட்டளையை நிறைவேற்றினார்கள். பர்தோலி வாசிகளைப்போல் இந்தியா முழுவதும் காந்தி மகாத்மாவின் போதனைக்குக் கட்டுப்பட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை.

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்காக மகாத்மாஜி டில்லிக்குப் பிப்ரவரி 23-ஆம் தேதி வந்துசேர்ந்தார். அங்கே அவருக்குப் பல கடிதங்கள் காத்திருந்தன. சிறைக்குள்ளேயிருந்து பல நண்பர்களும் சகாக்களும் கடிதம் எழுதியிருந்தார்கள். டில்லி, லக்நௌ, ஆக்ரா முதலிய ஊர்களின் சிறைகளிலிருந்து கடிதங்கள் வந்திருந்தன. அவையெல்லாம் பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்துக் கண்டிப்பதாகவே இருந்தன. அந்தச் சமயத்தில், அவ்வளவு தூரம் சர்க்காரை அறை கூவி அழைத்த பிறகு பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடுவதை யாரும் ஆதரிக்கவில்லை. அ.இ.கா. கமிட்டி கூட்டத்துக்கு நேரில் ஆஜரானவர்களும் அவ்விதமே மகாத்மாவுடன் மாறுபட்டார்கள். சுவாமி சிரத்தானந்தர், "இந்தியா முழுவதும் அமைதியை எதிர்பார்ப்பது என்பது நடவாத காரியம்; ஆகையால் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டு வேறு முறைகளைப் பார்க்க வேண்டியதுதான்!" என்றார். வங்காளத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் மிக்க அதிருப்தி தெரிவித்தார்கள். மகாத்மா நிர்மாணத் திட்டத்தை அளவுக்கு மீறி வற்புறுத்துவதாக அவர்கள் சொல்லி, "மிட்னாபூரில் ஜனங்கள் கதர் கட்டிக் கொள்ளாமலே சர்க்காருடன் போர் நடத்தி யூனியன் வரியை ரத்து செய்வதில் வெற்றி பெற்றுவிட்டார்கள்." என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினார்கள். இதனாலெல்லாம் மகாத்மா முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் கூடத் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் சரிவர அறிந்து கொள்ளவில்லை யென்ற நம்பிக்கையை அடைந்தார். ஆகையால் பர்தோலி சட்டமறுப்பை நிறுத்தி வைத்தது ரொம்பவும் சரியான காரியம் என்ற முடிவுக்கு வந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஹக்கீம் அஜ்மல்கானின் அக்கிராசனத்தின் கீழ் கூடியது. மகாத்மா முதலிலேயே தம்முடைய கருத்தை வெளியிட்விட்டார். "பரிபூரண அஹிம்சையில்லாமல் என்னால் இயக்கத்தை நடத்த முடியாது. உங்களுடைய கருத்து மாறுபட்டிருந்தால் நான் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்றார். இதை அநேகர் விரும்பவில்லை. மகாத்மாவின் தலைமை இல்லாமல் இந்தியாவின் விடுதலை கை கூடாது, எந்த இயக்கத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்று அவர்கள் கருதினார்கள். பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்த சுவாமி சிரத்தானந்தரே இந்தக் கூட்டத்தில் "மகாத்மாஜி! நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன இயக்கம் நடத்த முடியும்? தங்களுடைய தலைமையை இழக்க நாங்கள் தயாராயில்லை!" என்றார். ஆனால் காந்திஜியின் தலைமையை இழப்பதற்கம் ஒரு சிலர் தயாராயிருந்தார்கள். மகாராஷடிரத்தைச் சேர்ந்த டாக்டர் மூஞ்சேயும் கல்கத்தாவிலிருந்து வந்த ஸ்ரீ ஜே. என். சென்குப்தாவும் மகாத்மாவின் பேரில் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

ஒரு கமிட்டி நியமித்து, ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த பிறகு, தேசத்துக்கு நேர்ந்த தீமைகளையெல்லாம் விசாரிக்கச் சொல்லவேண்டும் என்று டாக்டர் மூஞ்சே பிரேரணை செய்தார். ஸ்ரீ அப்யங்கர், மௌலானா ஹஸரத் மோகினி முதலியவர்கள் தீவிரமாக டாக்டர் மூஞ்சேயை ஆதரித்தார்கள். வேறு சிலர் மகாத்மாவை ஆதரித்துப் பேசலானார்கள். வாதப் பிரதி வாதங்கள் முற்றி மனக் கசப்பு வளரும் போலிருந்தது.

இச்சமயத்தில் ஹக்கீம் அஜ்மல்கான் உடம்பு சரியாயில்லையென்று சொல்லி எழுந்து போனார். மகாத்மாவையே தமக்குப் பதிலாகச் சபையை நடத்தும்படி ஏற்படுத்திவிட்டுப் போனார். மகாத்மா தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் நிலைமையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. ஏனெனில், தம்மைத் தாங்கிப் பேச விரும்பிய யாரையம் மகாத்மா பேசவதற்கு அனுமதிக்கவில்லை. தம்மீது குற்றங் கூற விரும்பியவர்கள் தங்களுடைய மனதைத்திறந்து சொல்ல விரும்பியதெல்லாம் சொல்ல அநுமதித்தார். இதனால் சபையில் ஒர பெரிய மாறுதல் ஏற்பட்டது. குற்றங் கூறியவர்களுக்கும் கொஞ்ச நேரத்தக் கெல்லாம் அலுத்துப் போய்விட்டது. டாக்டர் மூஞ்சே தங்கள் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மகாத்மாஜி தமது கட்சியை எடுத்துச் சொல்லவேண்டும் என்றம் கேட்டுக்கொண்டார். மகாத்மாஜி அதற்க இணங்க வில்லை. "நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. சபையோர் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை யொட்டித் தீர்மானிக்கட்டும். என்னுடைய திட்டம் பிடிக்காவிட்டால் நான் விலகிக் கொள்ளத் தயார்" என்ற மட்டும் சொன்னார். வோட்டுக்கு விடப்பட்ட போது டாக்டர் மூஞ்சேயின் தீர்மானமும் ஸ்ரீ ஜே. எம். சென்குப்தாவின் தீர்மானமம் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்தன. பர்தோலி தீர்மானம் மகாத்மாவே ஒப்புக்கொண்ட சிற்சில மாறுதல்களுடன் நிறைவேறியத. இதன் பிரகாரம் பொதஜனச் சட்டமறுப்பு யோசனை இப்போதைக்குக் கைவிடப்பட்டது. மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தனிப்பட்ட சட்டமறுப்புத் தொடங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது; அதற்குரிய நிர்மாணத் திட்ட நிபந்தனைகள் முன்னைவிடக் கடுமையாயின.

டில்லியிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதிக்குத் திரும்பி வந்தார். இனி கதர் உற்பத்தி, தேசீயக் கல்வி, தீண்டாமை விலக்கு, ஹிந்து மஸ்லிம் ஒற்றுமை ஆகிய நிர்மாணத் திட்டங்களில் தம்முடைய பூரண கவனத்தையும் செலுத்தத் தீர்மானித்து மகாத்மா அந்த வேலைகளைத் தொடங்குவதற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மகாத்மாஜி பிறருடைய பாவங்களக்கு உண்ணாவிரத பிராயச்சித்தம் செய்து, அஹிம்சா தர்மத்தைப் பாதுகாப்பதற்காகப் பொதுஜனச் சட்ட மறுப்பையும் நிறுத்தி வைத்த பிறகு அவரைக் கைது செய்து விசாரணை நடத்த முன்வந்தனர். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் இந்த இழிதகைமையான செயலைக் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வியாழன், 20 செப்டம்பர், 2018

1155. சங்கீத சங்கதிகள் - 160

கண்டதும் கேட்டதும் - 6
“ நீலம்”



இந்த 1943 சுதேசமித்திரன் ரேடியோ விமர்சனக்  கட்டுரையில் : 
மதுரை மணி, ராஜலட்சுமி சந்தானம், ஸி.எஸ்.சீதாராமன் 




 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


சங்கீத சங்கதிகள்

புதன், 12 செப்டம்பர், 2018

1154. பாடலும் படமும் - 47

மதுரை ஊர்த்துவ கணபதி,  
ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய கணபதி

‘சில்பி’  
                                                       



ஐங்கரனையொத்த மனம்,

ஐம்புலமகற்றி வளர், 
அந்தி பகலற்ற நினைவருள்வாயே - அருணகிரிநாதர்

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய்.  - பாரதி 

                                  




[ நன்றி: ‘சக்தி’ விகடன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி
பாடலும், படமும்

சனி, 8 செப்டம்பர், 2018

1152. பாடலும் படமும் - 46

இராமாயணம் - 18
யுத்த காண்டம், மீட்சிப் படலம்

[ ஓவியம்: கோபுலு ]

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை, 

பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை 

தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை, 

அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். 


[ அத் தலைவனும் - அந்த தலைமையான நாயகனாகிய இராமனும்;
கற்பினுக்கு அரசினை- கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாக 
உள்ளவளை; 
பெண்மைக் காப்பினை- பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாக உள்ளவளை; 
பொற்பினுக்கு அழகினை- அழகிற்கு அழகாக விளங்குகின்ற பிராட்டியை; புகழின் வாழ்க்கையை- புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை; 
தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை - தனி நாயகனாகிய
தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை; 
அற்பின்- அன்பினால்; 
அமைய நோக்கினான் - நன்றாகப் பார்த்தான்.]

 மர்ரே ராஜம் ‘கம்பராமாயணம்’ நூல்களின் அட்டைகளில் வந்த 18 படங்களைக் கொண்ட இந்தத் தொடர் இத்துடன் நிறைவேறுகிறது.) 

[ பொருத்தமான பாடல்களுக்கு நன்றி: அமுதசுரபி தீபாவளி 
மலர் 2004

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

1153. ஏ.எஸ்.பி. ஐயர் -1

மாய வித்தையில் நம்பிக்கை இல்லாதவன்
ஏ.எஸ்.பி. ஐயர்



என் சிறுவயதில் மதராஸ் உயர்நீதி மன்ற நீதிபதியாய் இருந்த ஏ.எஸ்.பி.ஐயர் ( 1899-1963)  ( அயிலம் சுப்பிரமணிய பஞ்சாபகேச ஐயர் ) சங்கீதக் கச்சேரிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் தலைமை தாங்கிப் பேசியதைக் கேட்டதுண்டு. நசைச்சுவையுடன் பேசுவார். ஒரு நல்ல கதை சொல்லி!  53-இல்  நடந்த ஆளவந்தார்  கொலை வழக்கில் அவர்தான் நீதிபதி.

சுதேசமித்திரனில் 1941-இல் வந்த  அவருடைய  ஒரு கதை இதோ!


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஏ.எஸ்.பி. ஐயர்

வியாழன், 6 செப்டம்பர், 2018

1151. காந்தி - 43

37. பேரிடி விழுந்தது!
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்)  என்ற நூலில்  வந்த   37-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
மகாத்மா காந்தி தம்முடைய தர்ம யுத்தத்தின் இறுதிப் போருக்குப் பிறகு பர்தோலியைக் குருக்ஷேத்திரமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி பர்தோலிக்குப் பிரயாணமானார். அன்று காலைப் பிரார்த்தனையின்போது சபர்மதி ஆசிரமவாசிகளிடம் மகாத்மா விடை பெற்றுக் கொண்டார். ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி உள்பட அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக மகாத்மாவுக்கு விடை கொடுத்தார்கள். பர்தோலிக்குப் போருக்குப் போகிறவர் எப்போது திரும்பி வருவாரோ என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாமலிருந்தது. திரும்பி வருவாரோ அல்லது வரவே மாட்டாரோ, யாருக்குத் தெரியும்? இந்த எண்ணத்தினால் அனைவருடைய உள்ளங்களும் கசிந்துருகிய போதிலும் அவர்கள் தங்கள் துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மகாத்மா இல்லாத சமயத்தில் ஆசிரமத்தின் வேலைகளை யெல்லாம் இயன்ற வரையில் சரிவர நடத்தி வருவதாக வாக்களித்தார்கள். மகாத்மாஜி அவர்களுக்கெல்லாம் பகவத் கீதையை வழிகாட்டியாகக் கொண்டு அவர்களுடைய கடமைகளை நிறைவேற்றி வரும்படியாக உபதேசித்தார்.

பர்தோலியில் மகாத்மாவுக்கு மகத்தான வரவேற்பு காத்திருந்தது. பர்தோலி வாசிகள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பும் பாக்கியமும் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பழைய கிரேக்க ராஜ்யத்தின் சுதந்திரத்துக்குப் பாரஸீகர்களால் ஆபத்துவந்தபோது தர்மாபைலே என்னும் கணவாயில் சில கிரேக்கவீரர்கள் நின்று போராடி தங்கள் உயிரை அர்ப்பணம் செய்து கிரேக்க நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டியது சரித்திரப் பிரசித்தமான சம்பவம். "பர்தோலி பாரதநாட்டின் தர்மாபைலே" என்னும் பல்லவியைக் கொண்ட சுதந்திர கீதம் ஒன்று அச்சமயம் பர்தோலியின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாடப்பட்டு வந்தது.

பர்தோலியில் மகாத்மாவுக்குத் துணை நின்று பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவதற்காகப் பம்பாயிலிருந்து ஸ்ரீவி.ஜே. படேலும் சூரத்திலிருந்து ஸ்ரீ தயாள்ஜி, கல்யாண்ஜி முதலியவர்களும் வந்துசேர்ந்தார்கள். 29 - ஆம் தேதி பர்தோலி தாலூகா மகாநாடு நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஆயினும் ஒருவிதமான குழப்பமோ, கூச்சலோ இல்லாமல் மகாநாடு நடந்தது. காந்தி மகான் எங்கே சென்று தங்கினாலும் அங்கே உள்ளூர் ஜனங்கள் வந்து கூட்டம் போடுவது சர்வசாதாரண வழக்கம் அல்லவா? ஆனால் பர்தோலியில் மகாத்மா காந்தி தங்கியிருந்த ஜாகைக்கு அநாவசியமாக யாரும் வரவேயில்லை.

பர்தோலி பிரதிநிதிகளில் முக்கியமான சிலரை மகாத்மாவே தமது ஜாகைக்குக் கூப்பிட்டனுப்பினார். பொதுஜனச் சட்ட மறுப்புக்குக் காந்திஜி விதித்திருந்த நிபந்தனைகளில் ஒன்று பர்தோலியில் வாழும் 88,000 ஜனங்களுக்கும் வேண்டிய துணியை அவர்களே இராட்டை - கைத்தறியில் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும், வெளியிலிருந்து ஒரு கஜம் துணிகூட வரவழைக்கக் கூடாது என்பது. இந்த நிபந்தனையைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கு இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுப்பதாக மகாத்மா கூறினார். ஆனால் பர்தோலி தலைவர்களோ "எங்களுக்குத் தவணைவெண்டியதில்லை" என்று சொல்லிவிட்டார்கள். பிப்ரவரி௴ 1 - ஆம் தேதியிலிருந்து ஒரு அங்குலத் துணிகூட வெளியூரிலிருந்து தருவிப்பதில்லையென்று சொன்னார்கள். கட்டை வண்டிகளில் இராட்டினத்தை ஏற்றிக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கிராமங் கிராமமாகச் சென்று வேண்டியவர்களுக் கெல்லாம் கொடுத்து வந்தார்கள். அப்போது பர்தோலி தாலூகா சாலைகளில் இது ஒரு அற்புதமான காட்சியாயிருந்தது.

ஜனவரி 29- நடைபெற்ற பர்தோலி தாலூகா மகாநாட்டில் நிறைவேறிய முக்கியமான தீர்மானம், "தேசத்தின் விடுதலைக்காக அந்தத் தாலூகா வாசிகள் தாவர - ஜங்கம சொத்துக்களை இழக்கவும், சிறைப்படவும், அவசியமானால் உயிரையும் தியாகம் செய்யவும் சித்தமாயிருக்கிறார்கள்" என்று பறையறைந்து சொல்லிற்று. அத்துடன் மகாத்மாவின் தலைமையில் அஹிம்சையைக் கடைப்பிடித்துப் பொது ஜனச் சட்ட மறுப்பைப் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தொடங்குவதென்றும் தாலுகா வாசிகள் சர்க்காருக்கு இனி நில வரியோ வேறு வரிகளோ கொடுக்கக் கூடாதென்றும் மேற்படி மகாநாடு தீர்மானித்தது.

பர்தோலி மக்களின் இத்தகைய கட்டுப்பாடும் உத்வேகமும் மகாத்மாவுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளித்திருந்தது. பம்பாய் மாகாணத்தில் பலபகுதிகளிலிருந்தும் பற்பல பிரமுகர்கள் பர்தோலிக்கு வந்தார்கள். ஆனால் மகாத்மாவின் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்ட கட்டுப்பாடு அவர்களில் சிலருக்கு சங்கடத்தை அளித்தது. உதாரணமாக, ஸ்ரீ வி.ஜே படேல் அவர்களுக்கு அதிகாலையில் எழுந்து பழக்கமில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் வாத நோயும் உண்டு. ஆசிரமத்திலோ காலை 4 மணிக்கே அனைவரும் எழுந்து பிரார்த்தனைக்கு வந்தாக வேண்டும். ஸ்ரீ வி.ஜே.படேலைக் காலை நாலு மணிக்கு எழுப்பியபோது, அவர், "நாராயணா! நாராயணா! இப்படியும் தொந்தரவு படுத்துவது உண்டா?" என்று புகார் செய்தார். ஆனால் புகாரை யார் கேட்கிறார்கள்? அவரும் கட்டாயமாகப் பிரார்த்தனைக்குப் போக வேண்டியதாயிருந்தது. ஆத்ம சாதனத்துக்கு இத்தகைய விரதங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை. "ஆத்ம சாதனம் இங்கே யாருக்கு வேண்டும்? இந்தியாவுக்குச் சுதந்திரம் அல்லவா வேண்டும்?" என்பது ஸ்ரீ படேலின் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை அவர் மகாத்மாவிடம் கேட்கவில்லை. இந்தியாவின் சுதந்திரம் மகாத்மாவின் தலைமையினாலேயே கிடைக்கக் கூடியதாயிருந்தது. எனவே, அதற்காக "ஆத்ம சாதனத்தைத் தேடக்கூட நான் தயார்!" என்றார் ஸ்ரீ வி.ஜே. படேல்.

இவ்விதம் ஒருவார காலம் சென்றது. ஒவ்வொரு நாளும் மகாத்மா பர்தோலி ஜனங்களுக்கு மேலே செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி அறிக்கைகள் விடுத்து வந்தார். ஜனங்கள் மகாத்மா காந்தியின் கட்டளைகளை அணுவளவும் வழுவாமல் நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகி வந்தார்கள்.


காந்திஜி வைஸ்ராய் ரெடிங்குக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்கு இந்திய சர்க்கார் 6-ஆம் தேதி பதில் அறிக்கை விட்டார்கள். அதில் மகாத்மாவின் மீது இல்லாத குற்றங்களையெல்லாம் சுமத்தியிருந்தார்கள். இந்தக் குதர்க்க அறிக்கைக்குப் பிப்ரவரி 7-ஆம் தேதி மகாத்மா ஒரு பதில் விடுத்தார். அந்தப் பதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும் படியான சக்தி வாய்ந்ததாயிருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தாரின் குதர்க்கங்களுக்கு மகாத்மா அவ்வளவு உத்வேகமான தீவிர மொழிகளில் பதில் சொல்லியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலைமையில், பிப்ரவரி 8-ஆம் நாள் எதிர்பாராத பேரிடி யொன்று விழுந்தது. சௌரி-சௌராவில் நடந்த கோர சம்பவத்தைப் பற்றிய செய்தி வந்தது. ஐக்கிய மாகாணத்தில் கோரக்பூர் ஜில்லாவில் சௌரி-சௌரா ஒரு சிறு பட்டணம். மேற்படி கோரக்பூர் ஜில்லாவில் முப்பத்திநாலாயிரம் தேசீயத் தொண்டர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று சில நாளைக்கு முன்பு ஒரு உற்சாகமான செய்தி வந்திருந்தது. அவர்களில் எத்தனை பேர் கதர் உடுத்தியவர்கள் என்று காந்திஜி விசாரித்ததற்கு 'நாலில் ஒரு பங்கு பேர் தான் கதர் உடுத்தியவர்கள்' என்று தகவல் கிடைத்தது. இந்த நிலை மகாத்மாவுக்குத் திருப்தியளிக்கவில்லை. நாலில் ஒரு தொண்டர்தான் கதர் உடுத்துகிறார் என்றால் அஹிம்சை நெறியை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும் என்ற கவலையை மகாத்மா தம் அருகிலிருந்தவர்களிடம் வெளியிட்டார்.

இப்படி மகாத்மாவுக்கு ஏற்கனவே கவலையளித்திருந்த அதே ஜில்லாவிலிருந்துதான் இப்போது அந்தப் பயங்கரமான செய்தி வந்தது. சௌரி-சௌராவில் வெறிகொண்ட ஜனக்கூட்டம் ஒரு போலீஸ் ஸ்டே ஷனைத் தாக்கி நெருப்பு வைத்து இருபத்தொரு போலீஸ் ஜவான்களை உயிரோடு கொளுத்திக் கொன்று விட்டது.

பம்பாயிலும் சென்னையிலும் நடந்த குற்றங்களுக்கு ஏதேனும் ஓரளவு சமாதானம் சொல்ல இடமிருந்தது. ஆனால் இந்தக் கோர பயங்கரச்செயலுக்கு என்ன சமாதானத்தைச் சொல்ல முடியும்? மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை மக்கள் கொஞ்சங்கூட அறிந்துகொள்ளவில்லை என்று தானே அதிலிருந்து ஏற்படும்! சௌரி-சௌராவில் நடந்ததுபோல் தேசமெல்லாம் நடக்காது என்பது என்ன நிச்சயம்? அதன் பயனாகத் தேசம் எவ்வளவு விபரீதமான தீங்குகளை அடைய நேரும்?

இத்தகைய வேதனை நிறைந்த எண்ணங்களைச் சௌரி-சௌரா நிகழ்ச்சி பற்றிய செய்திகள் மகாத்மாவின் மனதில் உண்டாக்கின. மிக முக்கியமான விஷங்களைக் காந்திஜி தம் அந்தராத்மாவின் புத்திமதிப்படி ஒரு நொடியில் தீர்மானித்து விடுவதுதான் வழக்கம். ஆகவே இப்போதும் பர்தோலி சட்ட மறுப்பைக் கைவிடுவது என்று ஒரே நிமிஷத்தில் மகாத்மாதீர்மானித்து விட்டார். இத்தகைய தீர்மானத்துக்கு வரக் கூடிய தீரபுருஷர் இந்த உலகத்திலேயே மகாத்மாவைத் தவிர யாரும் இருக்க முடியாது என்று சொன்னால், அது மிகையாகாது. ஏனெனில், முதல் நாள் 7-ஆம் தேதி தான் வைஸ்ராய்க்குக் கடுமையான முறையில் மகாத்மா பதில் அளித்திருந்தார். பர்தோலி ஜனங்கள் துடி துடித்துக் கொண்டிருந்தார்கள். தேசமக்கள் எல்லோரும் பர்தோலியை நோக்கிக்கொண்டிருந்தார்கள். சிறையிலே இருந்த பதினாயிரக் கணக்கான காங்கிரஸ் வாதிகளும் பர்தோலி இயக்கத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தை ஆரம்பியாமல் நிறுத்துவது என்று வேறு யாரால் முடிவு செய்ய முடியும். மகாத்மா முடிவுசெய்து விட்டாலும் அதைக் காங்கிரஸ் காரிய கமிட்டி மூலம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் அல்லவா? அதற்காகப் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பர்தோலியில் காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டத் தீர்மானித்துக் காரியக் கமிட்டி அங்கத்தினருக்குப் பின்வரும் கடிதத்தை மகாத்மா எழுதினார்:-
அந்தரங்கம் (பிரசுரத்துக்கு அல்ல)
பர்தோலி, 8-2-1922
பிரிய நண்பரே!

பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும் தறுவாயில் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தது இது மூன்றாவது தடவை. 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் முறையும், சென்ற நவம்பர் மாதத்தில் பம்பாயில் இரண்டாவது முறையும். அதிர்ச்சி பெற்றேன். இப்போது மறுபடியும் கோரக்பூர் ஜில்லாவில் நடந்த சம்பவங்கள் என்னைப் பெரிதும் கலங்க வைத்துவிட்டன. தேசத்தின் மற்றப் பகுதிகளிக் பலாத்காரக் குற்றங்கள் நிகழும் போது பர்தோலியில் அட்டும் அஹிம்சைப் போரினால் பலன் விளையாது. பூரண அஹிம்சையை நிலை நிறுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே நான் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தத் திட்டம் போட்டேன். பாதி பலாத்காரமும் பாதி அஹிம்சையுமாக நடக்கும் இயக்கத்தில் நான் சம்பந்தப்பட முடியாது. அத்தகைய இயக்கத்தினால் சுயராஜ்யம் வந்தாலும் அது உண்மையான சுயராஜ்யமாயிராது, ஆகையால் பர்தோலியில் 11 - ஆம் தேதி காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுகிறேன். இந்தக் கூட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நீடித்துத் தள்ளிப் போடுவதைப்பற்றி யோசிக்கப்படும். அப்படி நீண்ட காலம் தள்ளிப்போட்டால்தான் தேசத்தை நிர்மாண முரையில் தயார் செய்து அஹிம்சையை வேரூன்றச் செய்ய முடியுமென்று நான் கருதுகிறேன். தாங்கள் கூட்டத்துக்கு வர முடியாவிட்டால் தங்கள் அபிப்பிராயத்தை எழுதி அனுப்பக் கோருகிறேன்.இது விஷயமாகத் தங்கள் நண்பர்கள் பலரையும் கலந்து யோசித்து அவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
தங்கள்
உண்மையுள்ள,
(ஒப்பம்) எம். கே. காந்தி
காந்திஜியின் இந்த முடிவு தெரிய வந்ததும் ஆசிரமவாசிகளே திடுக்கிட்டார்கள் என்றால், மற்றவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மகாத்மாவினிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் மேற்படி செய்தியினால் மிக்க மனச்சோர்வு அடைந்தார்கள். மகாத்மாவை ஏற்கனவே விரோதித்தவர்களோ அளவில்லாத கோபத்தை அவர்மீது சொரிந்தார்கள்.

ஆயினும் மகாத்மா ஒரே பிடிவாதமாக இருந்தார். 11 - ஆம் தேதி கூடிய காரியக் கமிட்டியில் தீவிர விவாதம் நடந்தது. ஸ்ரீ கேல்கர் போன்ற சிலர் மகாத்மாவின் முடிவைப் பலமாக எதிர்த்தார்கள். மற்றவர்கள் மகாத்மாவிடம் உள்ள பக்தியினால் அடங்கி யிருந்தார்கள். விவாதத்தின் முடிவில், எல்லாவித சட்ட மறுப்புகளையும் நிறுத்தி வைத்துத் தேச மக்கள் நிர்மாண வேலையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் காரியக் கமிட்டியில் நிறைவேறியது.

மறுநாள் 12 - ஆம் தேதி அதாவது என்றைய தினம் பர்தோலி யுத்தம் தொடங்குவதாக இருந்ததோ அதே தினத்தில், மகாத்மா காந்தி சௌரி-சௌரா பயங்கர நிகழ்ச்சியை முன்னிட்டு ஐந்துநாள் உண்ணாவிரதம் தொடங்கினார்.

காரியக் கமிட்டி தீர்மானத்துடனும் மகாத்மாவின் உபவாசத்துடனும் காரியம் முடிந்துபோய்விடவில்லை. தேசமெங்கும் அதிருப்தி கடல்போலப் பொங்கியது. மகாத்மாவின் ஆத்ம சகாக்கள் என்று கருதப்பட்டவர்கள் பலர் அவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.

தென்னாப்பிரிக்காவில் ஒரு சமயம் மகாத்மா சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியபோது அவர் இந்தியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டதாக எண்ணி ஒரு பட்டாணியன் அவரை தடியால் அடித்து அவருடைய மண்டையை உடைத்துவிட்டான் அல்லவா? ஏறக்குறைய அத்தகைய சூழ்நிலை தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. "காரியத்தைக் கெடுத்து விட்டார் மகாத்மா!" என்று கூக்குரல் எங்கும் எழுந்தது. யாரும் அவரைத் தடியால் அடிக்கவில்லை; அவ்வளவுதான். தடியால் அடிப்பதைக் காட்டிலும் கொடுமையான குரோத மொழிகளை மகாத்மாவின் தலைமீது பொழிந்தார்கள். அவ்வளவையும் சத்தியத்துக்காகவும் அஹிம்சைக்காகவும் மகாத்மா சகித்துக் கொண்டார். கடல் கடைந்த போது எழுந்த விஷயத்தை விழுங்கிப் புவனத்தைக் காப்பாற்றிய நீலகண்டனைப்போல் அச்சமயம் காந்திஜி விளங்கினார்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

திங்கள், 3 செப்டம்பர், 2018

1150. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -3

கின்னரகிரி சுந்தரவதி 
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் 



‘சக்தி’ இதழில் 1942-இல் வந்த ஒரு கதை.




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

1149. பாடலும் படமும் - 45

இராமாயணம் - 17
யுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்


[ ஓவியம்: கோபுலு ]

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ?


[ இலக்குவற்கு   முன்  வீடணன் புகும் - இலக்குவனுக்கு
முன்னர் வீடணன் செல்வான்; 
இருவரையும் விலக்கி அங்கதன் மேற்செலும் - அவ்விருவரையும்  விலக்கி  விட்டு  வாலி மகன் அங்கதன்   முன்  புகுவான்;  
அவனையும்  விலக்கி  வானரக் காவலன் கலக்கும்- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம் சுக்கிரீவன்  முந்துவான்;  
அனுமன் முன்  கடுகும்  - அனுமன் விரைந்து செல்வான்; 
அலக்கண் அன்னதை  -   அப்படிப்பட்ட துன்பத்தை; 
இன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது என்று கூற முடியுமா? ]

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 1 செப்டம்பர், 2018

1148. காந்தி - 42

36. வைஸ்ராய்க்கு இறுதிக் கடிதம்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2ஆம் பாகம்) என்ற நூலில்  வந்த  36-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
பம்பாயில் மகாநாடு கூட்டிய தலைவர்கள் அந்த மகாநாட்டின் தீர்மானத்தை வைஸ்ராய் ரெடிங் ஏற்றுக்கொள்ளுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆகையால் வைஸ்ராயிடமிருந்து பதில் வருவதற்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று மகாத்மா காந்தியைக் கேட்டுக் கொண்டார்கள். மகாத்மாவும் அதற்குச் சம்மதித்தார். ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரையில் காத்திருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆகவே பம்பாயிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கே அம்மாதம் 28-ஆம் தேதி வரையில் காத்திருந்தார்.

ஆனால் வைஸ்ராய் ரெடிங் சாதகமான பதில் அனுப்புவார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்குக் கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜி ஏற்பாடு எதுவும் நடப்பதை மகாத்மா விரும்பவும் இல்லை. அப்படி ராஜி ஏற்படுமானால் அதை வகிப்பதற்குத் தேசம் தகுதி பெறவில்லை என்று மகாத்மா கருதினார். (இன்றைக்குக்கூட நம்மில் பலர் தேசம் பூரண தகுதி பெறுவதற்குச் சிறிது முன்னாலேயே சுயராஜ்யம் வந்துவிட்டது' என்று கருதுகிறோம் அல்லவா?)

மகாத்மாவின் உள்ளம் அக்காலத்தில் எப்படித் தத்தளித்துக் கொண்டிருந்தது என்பதை "நவஜீவன்" பத்திரிகைக்கு அவர் அப்போது எழுதிய ஒரு கட்டுரையினின்றும் அறியலாம். அக்கட்டுரையில் மகாத்மா எழுதியதாவது:-

ராஜி வந்துவிடப் போகிறதே என்ற பயத்தினால் நான் உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருக்கிறேன். ராஜி ஏற்பட்டுவிட்டால், அதன் பலனாக என்ன நேரிடுமோ? ராஜி ஏற்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நழுவவிட மாட்டேன். ஆயினும் இந்தியாவின் பலம் இவ்வளவுதான் என்பதை நான் அறிந்திருப்பதால், ராஜியை நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. நாம் சரியானபடி சோதனைக்கு உள்ளாகி அதில் தேறி வெளி வந்தாலன்றி, ராஜியினால் நம்முடைய கதி என்ன ஆகும் என்று சொல்ல முடியாது.

தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து குழந்தை பிறக்க வேண்டும். முன்னாலேயே பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து போய்விடும். போர்ச்சுகல் தேசத்தில் மின்னல் புரட்சி நடந்து ஒரு நொடியில் அரசாங்கம் மாறிவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு அங்கே அரசாங்கம் அடிக்கடி மாறிக்கொண்டே யிருக்கிறது. நிலையான அரசியல் அமைப்பு இன்னமும் ஏற்பட்ட பாடில்லை. 1909-ஆம் வருஷத்தில் துருக்கியில் திடீர்ப் புரட்சி நடந்து அரசாங்கம் மாறியது. அது குறித்து உலகமெல்லாம் துருக்கிக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பின. ஆனால் அது ஒன்பதுநாள் விந்தையாக முடிந்து மாயக்கனவைப்போல் மறைந்து விட்டது. அதற்குப் பிறகு துருக்கி எவ்வளவோ அனுபவங்களுக்கு உள்ளாக நேர்ந்திருக்கிறது. அந்தத் தேசம் இன்னும் என்னென்ன அநுபவிக்க வேண்டுமோ, யார் கண்டது? இதையெல்லாம் நினைக்கும் போதுதான் இந்தியாவில் நாம் தயாராவதற்கு முன்னால் ராஜி ஏற்பட்டு விடப் போகிறதே என்று பயப்பட வேண்டி யிருக்கிறது."

இவ்விதம் "நவஜீவன்" பத்திரிகையில் மகாத்மா எழுதினார். இந்திய மக்கள் இன்னும் சுதந்திரத்துக்குத் தகுதி பெறவில்லை. சுயராஜ்யம் ஆளுவதற்கு வேண்டிய வலிமையும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் பெறவில்லை என்ற எண்ணம் மகாத்மாவுக்கு இருந்தது. லார்ட்ரெடிங்கும் வேறொரு விதத்தில் இதே எண்ணம் கொண்டவராயிருந்தார். ஆகையால் அவர் பம்பாய் மகாநாட்டின் தீர்மானத்துக்கு இணங்கி வரவில்லை. பம்பாய் மகாநாட்டை நடத்தியவர்களுக்கு ஜனவரி 30-ல் லார்ட் ரெடிங்கினிடமிருந்து பதில் வந்தது. அந்தப் பதில் "இல்லை" என்பது தான். அதாவது வட்ட மேஜை மகாநாடு கூட்ட முடியாது என்பதுதான். அது விஷயமாக வைஸ்ராயைச் சந்தித்துப் பேச அநுமதி வேண்டுமென்று மிதவாதத் தலைவர்கள் கோரியிருந்தார்கள். அந்தக் கோரிக்கையைக்கூட வைஸ்ராய் ரெடிங் மறுதளித்துவிட்டார்.

ஜனவரி 27-ஆம் நாள் மகாத்மா பர்தோலி போய்ச் சேர்ந்திருந்தார். 31-ஆம் நாள் சூரத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது. அதற்குள் வைஸ்ராயின் பதிலும் தெரிந்து போய்விட்டது. ஆகவே பர்தோலியில் பொதுஜன சட்டமறுப்பு ஆரம்பிப்பதற்கு மகாத்மாவுக்குக் காரிய கமிட்டி அதிகாரம் கொடுத்தது.

மறுநாள் அதாவது 1922-ஆம் வருஷம் பிப்ரவரி மீ 1 தேச சரித்திரத்தில் பிரசித்திபெற்ற இறுதிக் கடிதத்தை மகாத்மாகாந்தி வைஸ்ராய்க்கு எழுதினார். அந்த முக்கியமான கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு:-
மேன்மை தங்கிய வைஸ்ராய் அவர்களுக்கு

ஐயா ,

பம்பாய் மாகாணத்தில் சூரத் ஜில்லாவில் பர்தோலி ஒரு சிறு தாலுகா. அதன் ஜனத்தொகை ஏறக்குறைய 87,000 தான். பிப்ரவரி 29 பர்தோலி தாலுகா வாசிகள் ஸ்ரீவித்தல் பாய் படேல் அவர்களின் தலைமையில் மகாநாடு கூடினார்கள். சென்ற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்த தீர்மானத்தின் பேரில் நிபந்தனைகளை நிறைவேற்றித் தகுதி பெற்று விட்டபடியால் பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பது என்று தீர்மானம் செய்தார்கள். இந்தத் தீர்மானத்துக்கு நானே பெரிதும் பொறுப்பாளியானபடியால், எதற்காக பர்தோலி வாசிகள் இத்தகைய தீர்மானத்தைச் செய்தார்கள் என்பதைத் தங்களுக்கும் பொது மக்களுக்கும் விளக்கிக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கிலாபத், பஞ்சாப், சுயராஜ்யம் ஆகிய இந்த மூன்று பிரசனைகள் விஷ்யமாகவும் இந்தியாவின் கோரிக்கையை இந்திய சர்க்கார் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த மறுப்பு சர்க்காரின் பெருங் குற்றமாகும். இப்படிப்பட்ட குற்றவாளி சர்க்காரை எதிர்த்துப் புரட்சி செய்ய இந்தியா தேசம் தீர்மானித்திருக்கிறது. அந்தத் தீர்மானத்துக்கு ஒரு அறிகுறியாகவே மேற்படி அ.இ.கா. கமிட்டி நிபந்தனைகளுக்குட்பட்டு முதன் முதலில் பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்க முடிவு செய்திருந்தோம்.

துரதிர்ஷ்டவசமாக, பம்பாயில் சென்ற நவம்பர் 17 கலவரங்கள் நிகழ்ந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தின. அதன் காரணமாக பர்தோலி சட்ட மறுப்பு இயக்கத்தை ஒத்திப்போட நேர்ந்தது. இதற்கிடையில் தேசமெங்கும் இந்திய சர்க்காரின் உடந்தையின் பேரில் கொடுமையான அடக்குமுறை நடந்திருக்கிறது. வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், ஐக்கிய மாகாணத்திலும், பஞ்சாப்பிலும், டில்லியிலும் அத்தகைய அடக்குமுறை அமுல் நடந்திருக்கிறது. அதிகாரிகளின் மேற்படி நடவடிக்கைகளை 'அடக்குமுறை' என்று சொல்வதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் அவசியத்துக்கு அதிகமான நடவடிக்கைகள் எல்லாம் 'அடக்குமுறை' தான் என்பதில் சந்தேகம் இல்லை. சொத்துக்களைச் சூறையாடுதல், குற்றமற்ற ஜனங்களைத் தாக்குதல், சிறையில் கைதிகளுக்குக் கசையடி முதலிய குரூர தண்டனைகள் – இவையெல்லாம் சட்டத்துக்குட்பட்ட நாகரிக நடவடிக்கைகள் ஆகமாட்டா. ஹர்த்தால் விஷயத்தில் சில இடங்களில் ஒத்துழையாதார் பயமுறுத்தலைக் கையாண்டிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதற்காக அதிகாரிகள் கையாண்ட கொடிய முறைகளை எந்தவிதத்திலும் நியாயம் என்று சொல்லமுடியாது. பலாத்கார நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஏற்பட்ட சட்டங்களை, சாத்வீக தொண்டர் படைகளைக் கலைக்கவும் பேச்சு சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பறிக்கவும் சர்க்கார் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் அடக்குமுறை என்றுதான் சொல்லியாக வேண்டும்.

ஆகவே இப்போது தேசத்தின் முன்னால் உள்ள அவசரப்பிரச்னை பேச்சு சுதந்திரம் - பத்திரிகை சுதந்திரம் - கூட்டம் கூடும் சுதந்திரம் ஆகியவற்றை நிலைநாட்டுவதுதான். தற்போதைய நிலையில் பம்பாயில் கூடிய மாளவியா மகாநாட்டில் எவ்விதத்திலும் கலந்துகொள்ள ஒத்துழையாதார் விரும்பவில்லை. ஆயினும் தேச மக்களுக்கு வீண் துன்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அந்த மகாநாட்டின் முடிவுகளை ஒப்புக் கொள்ளும்படி காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு நான் யோசனை கூறினேன்.

ஆனால் தாங்கள் அந்த மகாநாட்டின் முடிவுகளை அடியோடு நிராகரித்து விட்டீர்கள். இத்தனைக்கும் தங்களுடைய கல்கத்தா பிரசங்கத்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளை யொட்டியே அம் முடிவுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆகவே மக்களின் மூலாதார உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு தேசம் சாத்வீக சட்ட மறுப்பு முறையை ஏதேனும் ஒரு விதத்தில் கையாளும்படி ஏற்பட்டு விட்டது. வேறு வழி ஒன்றுக்கும் இடமில்லாமல் தாங்கள் செய்துவிட்டீர்கள். அலி சகோதரர்கள் தங்கள் பேச்சுக்காக வருத்தம் தெரிவித்த காலத்தில் இந்திய சர்க்கார் ஒரு வாக்குறுதி அளித்தனர். அதாவது ஒத்துழையாதார் பலாத்காரத்தில் இறங்காத வரையில் அவர்களுடைய நடவடிக்கைகளில் குறுக்கிடுவதில்லை யென்று கூறினார்கள். அந்த வாக்குறுதி காற்றிலே போய்விட்டது. அதைச் சர்க்கார் கடைபிடித்திருந்தால் பொதுஜன சட்ட மறுப்பை இன்னும் கொஞ்ச காலம் தள்ளிப் போட்டிருக்கலாம். அதற்குத் தாங்கள் இடம் வைக்கவில்லை. சட்டமில்லா அடக்குமுறைச் சட்டங்களைச் சர்கார் கையாளுவதினால் பொது ஜனச் சட்ட மறுப்பை உடனே ஆரம்பிப்பது அவசியமாகிவிட் டது. நான் பொறுக்கி எடுக்கும் பிரதேசங்களில் மட்டும் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி அநுமதி கொடுத்திருக்கிறது. நான் இப்போதைக்குப் பர்தோலியைத் தேர்ந்தெடுக்கிறேன். தவிர, குண்டூர் ஜில்லாவில் சுமார் நூறு கிராமங்கள் கொண்ட பிரதேசத்துக்கும் சட்ட மறுப்பைத் தொடங்குவதற்கு நான் ஒருவேளை அநுமதி கொடுக்ககூடும்.

ஆனால் பொதுஜனச் சட்டமறுப்பு உண்மையில் ஆரம்பமாவதற்கு முன்பு கடைசி முறையாகத் தங்களை வேண்டிக் கொள்கிறேன். இந்திய அரசாங்கத்தின் தலைவராகிய தாங்கள் அரசாங்கத்தின் முறையை மாற்றிக் கொள்ள இணங்குங்கள். பலாத்காரமற்ற நடவடிக்கைகளுக்காகச் சிறைப்பட்டிருக்கும் கைதிகளை யெல்லாம் விடுதலை செய்யுங்கள். அத்தகைய பலாத்காரமற்ற நடவடிக்கைகளைத் தடை செய்வதில்லை யென்று உறுதி சொல்லுங்கள். பத்திரிக்கைகளுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றுங்கள். அபராதங்களையும் சொத்துப் பரிமுதல்களையும் திருப்பி அவரவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்யும்படி தங்களைக்கேட்கும்போது உலகத்தில் நாகரீகமடைந்த தேசங்களின் அரசாங்கங்கள் செய்வதைத்தான் தாங்களும் செய்யும்படி நான் கோருகிறேன்.

இந்தக் கடிதம் கிடைத்த ஏழு தினங்களுக்குள் மேற்கண்டவாறு தாங்கள் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடும்படி நான் யோசனை சொல்லுவேன். சிறைப்பட்டிருக்கும் தலைவர்கள் விடுதலையாகித் தேசத்தின் புதுநிலைமையைப் பற்றி யோசித்து முடிவு செய்யும்படி கூறுவேன். அரசாங்கத்தார் மேற்கண்டவாறு அறிக்கை பிறப்பித்தால், பொதுஜன அபிப்பிராயத்தை அங்கீகரிக்க அரசாங்கத்தார் உண்மையான விருப்பமுள்ளவர்கள் என்பதற்கு அது அறிகுறியாயிருக்கும் ஆகவே பொதுஜனச் சட்டமறுப்பைத் தள்ளி வைத்துப் பொதுஜன அபிப்பிராயத்தை மேலும் உறுதிப்படுத்தும் வேலைகளிலே மேலும் ஈடுபடும்படி தேசத்துக்கு நான் யோசனை சொல்வேன்.
இங்ஙனம்
தங்கள் உண்மை ஊழியனும் நண்பனுமான பர்தோலி, 1-2-1922 எம்.கே.காந்தி

இந்த இறுதிக்கடிதம் பிப்ரவரி 4-ஆம் தேதி தேசமெங்கும் பிரசுரமாயிற்று. பொதுஜனங்களிடையில் மின்சார சக்தி பரவியதைப் போன்ற உற்சாகம் உண்டாயிற்று. மிதவாதத் தலைவர்களோ "வைஸ்ராய்க்கு இப்படியும் கடிதம் எழுதலாமா?" என்று தேள்கொட்டியவர்களைப்போல் துடித்தனர். வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதும்போது 'May it please Your Lordship' என்று ஆரம்பிப்பது வழக்கம். வெறும் சம்பிரதாய மரியாதைகளை அனுசரிக்க அது காலமில்லையென்று கருதி மகாத்மா, "ஸார்!" என்று கடிதத்தை ஆரம்பித்திருந்தார். இதையும் சில மிதவாதப் பிரமுகர்கள் கண்டித்தார்கள். இன்னும் கொஞ்ச காலம் மகாத்மா அவகாசம் கொடுத்திருந்தால் லார்ட் ரெடிங்கைச் சரிக்கட்டி வட்டமேஜை மகாநாடு கூட்டும்படி செய்திருக்கலாம் என்றும் மிதவாதப் பிரமுகர்கள் வெகுகாலம் சொல்லி வந்தார்கள்.

பிப்ரவரி 4-ஆம் தேதி பிரசுரமான மகாத்மாஜியின் கடிதத்துக்குப் பதிலாக இந்திய சர்க்கார் பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார்கள். அதிகார வர்க்கத்தினர் குதர்க்க சாமர்த்தியம் அதிகம் உள்ளவர்கள் என்பது தெரிந்த விஷயந்தானே? ஆகையால் குற்றங்களை யெல்லாம் காங்கிரஸின் மீது சுமத்தும் முறையில் மேற்படி அறிக்கையில் வாதமிட்டிருந்தார்கள். மகாத்மாவின் கோரிக்கைகள் எவ்வளவு அநியாயமானவை என்று நிரூபிப்பதற்குப் பிரயத்தனம் செய்திருந்தார்கள். அத்தகைய அநியாயமான கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள முடியாதென்றும், அவற்றைக் குறித்து விவாதிக்கவும் முடியாதென்றும் சொல்லிவிட்டு அவற்றைக் குறித்து தேசத்தில் அபாயகரமான குழப்பம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டுவதற்குப் பொதுமக்கள் சர்க்காருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையை முடித்திருந்தார்கள்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]