வியாழன், 6 செப்டம்பர், 2018

1151. காந்தி - 43

37. பேரிடி விழுந்தது!
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்)  என்ற நூலில்  வந்த   37-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
மகாத்மா காந்தி தம்முடைய தர்ம யுத்தத்தின் இறுதிப் போருக்குப் பிறகு பர்தோலியைக் குருக்ஷேத்திரமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி பர்தோலிக்குப் பிரயாணமானார். அன்று காலைப் பிரார்த்தனையின்போது சபர்மதி ஆசிரமவாசிகளிடம் மகாத்மா விடை பெற்றுக் கொண்டார். ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி உள்பட அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக மகாத்மாவுக்கு விடை கொடுத்தார்கள். பர்தோலிக்குப் போருக்குப் போகிறவர் எப்போது திரும்பி வருவாரோ என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாமலிருந்தது. திரும்பி வருவாரோ அல்லது வரவே மாட்டாரோ, யாருக்குத் தெரியும்? இந்த எண்ணத்தினால் அனைவருடைய உள்ளங்களும் கசிந்துருகிய போதிலும் அவர்கள் தங்கள் துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மகாத்மா இல்லாத சமயத்தில் ஆசிரமத்தின் வேலைகளை யெல்லாம் இயன்ற வரையில் சரிவர நடத்தி வருவதாக வாக்களித்தார்கள். மகாத்மாஜி அவர்களுக்கெல்லாம் பகவத் கீதையை வழிகாட்டியாகக் கொண்டு அவர்களுடைய கடமைகளை நிறைவேற்றி வரும்படியாக உபதேசித்தார்.

பர்தோலியில் மகாத்மாவுக்கு மகத்தான வரவேற்பு காத்திருந்தது. பர்தோலி வாசிகள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பும் பாக்கியமும் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பழைய கிரேக்க ராஜ்யத்தின் சுதந்திரத்துக்குப் பாரஸீகர்களால் ஆபத்துவந்தபோது தர்மாபைலே என்னும் கணவாயில் சில கிரேக்கவீரர்கள் நின்று போராடி தங்கள் உயிரை அர்ப்பணம் செய்து கிரேக்க நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டியது சரித்திரப் பிரசித்தமான சம்பவம். "பர்தோலி பாரதநாட்டின் தர்மாபைலே" என்னும் பல்லவியைக் கொண்ட சுதந்திர கீதம் ஒன்று அச்சமயம் பர்தோலியின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாடப்பட்டு வந்தது.

பர்தோலியில் மகாத்மாவுக்குத் துணை நின்று பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவதற்காகப் பம்பாயிலிருந்து ஸ்ரீவி.ஜே. படேலும் சூரத்திலிருந்து ஸ்ரீ தயாள்ஜி, கல்யாண்ஜி முதலியவர்களும் வந்துசேர்ந்தார்கள். 29 - ஆம் தேதி பர்தோலி தாலூகா மகாநாடு நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஆயினும் ஒருவிதமான குழப்பமோ, கூச்சலோ இல்லாமல் மகாநாடு நடந்தது. காந்தி மகான் எங்கே சென்று தங்கினாலும் அங்கே உள்ளூர் ஜனங்கள் வந்து கூட்டம் போடுவது சர்வசாதாரண வழக்கம் அல்லவா? ஆனால் பர்தோலியில் மகாத்மா காந்தி தங்கியிருந்த ஜாகைக்கு அநாவசியமாக யாரும் வரவேயில்லை.

பர்தோலி பிரதிநிதிகளில் முக்கியமான சிலரை மகாத்மாவே தமது ஜாகைக்குக் கூப்பிட்டனுப்பினார். பொதுஜனச் சட்ட மறுப்புக்குக் காந்திஜி விதித்திருந்த நிபந்தனைகளில் ஒன்று பர்தோலியில் வாழும் 88,000 ஜனங்களுக்கும் வேண்டிய துணியை அவர்களே இராட்டை - கைத்தறியில் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும், வெளியிலிருந்து ஒரு கஜம் துணிகூட வரவழைக்கக் கூடாது என்பது. இந்த நிபந்தனையைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கு இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுப்பதாக மகாத்மா கூறினார். ஆனால் பர்தோலி தலைவர்களோ "எங்களுக்குத் தவணைவெண்டியதில்லை" என்று சொல்லிவிட்டார்கள். பிப்ரவரி௴ 1 - ஆம் தேதியிலிருந்து ஒரு அங்குலத் துணிகூட வெளியூரிலிருந்து தருவிப்பதில்லையென்று சொன்னார்கள். கட்டை வண்டிகளில் இராட்டினத்தை ஏற்றிக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கிராமங் கிராமமாகச் சென்று வேண்டியவர்களுக் கெல்லாம் கொடுத்து வந்தார்கள். அப்போது பர்தோலி தாலூகா சாலைகளில் இது ஒரு அற்புதமான காட்சியாயிருந்தது.

ஜனவரி 29- நடைபெற்ற பர்தோலி தாலூகா மகாநாட்டில் நிறைவேறிய முக்கியமான தீர்மானம், "தேசத்தின் விடுதலைக்காக அந்தத் தாலூகா வாசிகள் தாவர - ஜங்கம சொத்துக்களை இழக்கவும், சிறைப்படவும், அவசியமானால் உயிரையும் தியாகம் செய்யவும் சித்தமாயிருக்கிறார்கள்" என்று பறையறைந்து சொல்லிற்று. அத்துடன் மகாத்மாவின் தலைமையில் அஹிம்சையைக் கடைப்பிடித்துப் பொது ஜனச் சட்ட மறுப்பைப் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தொடங்குவதென்றும் தாலுகா வாசிகள் சர்க்காருக்கு இனி நில வரியோ வேறு வரிகளோ கொடுக்கக் கூடாதென்றும் மேற்படி மகாநாடு தீர்மானித்தது.

பர்தோலி மக்களின் இத்தகைய கட்டுப்பாடும் உத்வேகமும் மகாத்மாவுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளித்திருந்தது. பம்பாய் மாகாணத்தில் பலபகுதிகளிலிருந்தும் பற்பல பிரமுகர்கள் பர்தோலிக்கு வந்தார்கள். ஆனால் மகாத்மாவின் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்ட கட்டுப்பாடு அவர்களில் சிலருக்கு சங்கடத்தை அளித்தது. உதாரணமாக, ஸ்ரீ வி.ஜே படேல் அவர்களுக்கு அதிகாலையில் எழுந்து பழக்கமில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் வாத நோயும் உண்டு. ஆசிரமத்திலோ காலை 4 மணிக்கே அனைவரும் எழுந்து பிரார்த்தனைக்கு வந்தாக வேண்டும். ஸ்ரீ வி.ஜே.படேலைக் காலை நாலு மணிக்கு எழுப்பியபோது, அவர், "நாராயணா! நாராயணா! இப்படியும் தொந்தரவு படுத்துவது உண்டா?" என்று புகார் செய்தார். ஆனால் புகாரை யார் கேட்கிறார்கள்? அவரும் கட்டாயமாகப் பிரார்த்தனைக்குப் போக வேண்டியதாயிருந்தது. ஆத்ம சாதனத்துக்கு இத்தகைய விரதங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை. "ஆத்ம சாதனம் இங்கே யாருக்கு வேண்டும்? இந்தியாவுக்குச் சுதந்திரம் அல்லவா வேண்டும்?" என்பது ஸ்ரீ படேலின் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை அவர் மகாத்மாவிடம் கேட்கவில்லை. இந்தியாவின் சுதந்திரம் மகாத்மாவின் தலைமையினாலேயே கிடைக்கக் கூடியதாயிருந்தது. எனவே, அதற்காக "ஆத்ம சாதனத்தைத் தேடக்கூட நான் தயார்!" என்றார் ஸ்ரீ வி.ஜே. படேல்.

இவ்விதம் ஒருவார காலம் சென்றது. ஒவ்வொரு நாளும் மகாத்மா பர்தோலி ஜனங்களுக்கு மேலே செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி அறிக்கைகள் விடுத்து வந்தார். ஜனங்கள் மகாத்மா காந்தியின் கட்டளைகளை அணுவளவும் வழுவாமல் நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகி வந்தார்கள்.


காந்திஜி வைஸ்ராய் ரெடிங்குக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்கு இந்திய சர்க்கார் 6-ஆம் தேதி பதில் அறிக்கை விட்டார்கள். அதில் மகாத்மாவின் மீது இல்லாத குற்றங்களையெல்லாம் சுமத்தியிருந்தார்கள். இந்தக் குதர்க்க அறிக்கைக்குப் பிப்ரவரி 7-ஆம் தேதி மகாத்மா ஒரு பதில் விடுத்தார். அந்தப் பதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும் படியான சக்தி வாய்ந்ததாயிருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தாரின் குதர்க்கங்களுக்கு மகாத்மா அவ்வளவு உத்வேகமான தீவிர மொழிகளில் பதில் சொல்லியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலைமையில், பிப்ரவரி 8-ஆம் நாள் எதிர்பாராத பேரிடி யொன்று விழுந்தது. சௌரி-சௌராவில் நடந்த கோர சம்பவத்தைப் பற்றிய செய்தி வந்தது. ஐக்கிய மாகாணத்தில் கோரக்பூர் ஜில்லாவில் சௌரி-சௌரா ஒரு சிறு பட்டணம். மேற்படி கோரக்பூர் ஜில்லாவில் முப்பத்திநாலாயிரம் தேசீயத் தொண்டர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று சில நாளைக்கு முன்பு ஒரு உற்சாகமான செய்தி வந்திருந்தது. அவர்களில் எத்தனை பேர் கதர் உடுத்தியவர்கள் என்று காந்திஜி விசாரித்ததற்கு 'நாலில் ஒரு பங்கு பேர் தான் கதர் உடுத்தியவர்கள்' என்று தகவல் கிடைத்தது. இந்த நிலை மகாத்மாவுக்குத் திருப்தியளிக்கவில்லை. நாலில் ஒரு தொண்டர்தான் கதர் உடுத்துகிறார் என்றால் அஹிம்சை நெறியை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும் என்ற கவலையை மகாத்மா தம் அருகிலிருந்தவர்களிடம் வெளியிட்டார்.

இப்படி மகாத்மாவுக்கு ஏற்கனவே கவலையளித்திருந்த அதே ஜில்லாவிலிருந்துதான் இப்போது அந்தப் பயங்கரமான செய்தி வந்தது. சௌரி-சௌராவில் வெறிகொண்ட ஜனக்கூட்டம் ஒரு போலீஸ் ஸ்டே ஷனைத் தாக்கி நெருப்பு வைத்து இருபத்தொரு போலீஸ் ஜவான்களை உயிரோடு கொளுத்திக் கொன்று விட்டது.

பம்பாயிலும் சென்னையிலும் நடந்த குற்றங்களுக்கு ஏதேனும் ஓரளவு சமாதானம் சொல்ல இடமிருந்தது. ஆனால் இந்தக் கோர பயங்கரச்செயலுக்கு என்ன சமாதானத்தைச் சொல்ல முடியும்? மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை மக்கள் கொஞ்சங்கூட அறிந்துகொள்ளவில்லை என்று தானே அதிலிருந்து ஏற்படும்! சௌரி-சௌராவில் நடந்ததுபோல் தேசமெல்லாம் நடக்காது என்பது என்ன நிச்சயம்? அதன் பயனாகத் தேசம் எவ்வளவு விபரீதமான தீங்குகளை அடைய நேரும்?

இத்தகைய வேதனை நிறைந்த எண்ணங்களைச் சௌரி-சௌரா நிகழ்ச்சி பற்றிய செய்திகள் மகாத்மாவின் மனதில் உண்டாக்கின. மிக முக்கியமான விஷங்களைக் காந்திஜி தம் அந்தராத்மாவின் புத்திமதிப்படி ஒரு நொடியில் தீர்மானித்து விடுவதுதான் வழக்கம். ஆகவே இப்போதும் பர்தோலி சட்ட மறுப்பைக் கைவிடுவது என்று ஒரே நிமிஷத்தில் மகாத்மாதீர்மானித்து விட்டார். இத்தகைய தீர்மானத்துக்கு வரக் கூடிய தீரபுருஷர் இந்த உலகத்திலேயே மகாத்மாவைத் தவிர யாரும் இருக்க முடியாது என்று சொன்னால், அது மிகையாகாது. ஏனெனில், முதல் நாள் 7-ஆம் தேதி தான் வைஸ்ராய்க்குக் கடுமையான முறையில் மகாத்மா பதில் அளித்திருந்தார். பர்தோலி ஜனங்கள் துடி துடித்துக் கொண்டிருந்தார்கள். தேசமக்கள் எல்லோரும் பர்தோலியை நோக்கிக்கொண்டிருந்தார்கள். சிறையிலே இருந்த பதினாயிரக் கணக்கான காங்கிரஸ் வாதிகளும் பர்தோலி இயக்கத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தை ஆரம்பியாமல் நிறுத்துவது என்று வேறு யாரால் முடிவு செய்ய முடியும். மகாத்மா முடிவுசெய்து விட்டாலும் அதைக் காங்கிரஸ் காரிய கமிட்டி மூலம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் அல்லவா? அதற்காகப் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பர்தோலியில் காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டத் தீர்மானித்துக் காரியக் கமிட்டி அங்கத்தினருக்குப் பின்வரும் கடிதத்தை மகாத்மா எழுதினார்:-
அந்தரங்கம் (பிரசுரத்துக்கு அல்ல)
பர்தோலி, 8-2-1922
பிரிய நண்பரே!

பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும் தறுவாயில் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தது இது மூன்றாவது தடவை. 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் முறையும், சென்ற நவம்பர் மாதத்தில் பம்பாயில் இரண்டாவது முறையும். அதிர்ச்சி பெற்றேன். இப்போது மறுபடியும் கோரக்பூர் ஜில்லாவில் நடந்த சம்பவங்கள் என்னைப் பெரிதும் கலங்க வைத்துவிட்டன. தேசத்தின் மற்றப் பகுதிகளிக் பலாத்காரக் குற்றங்கள் நிகழும் போது பர்தோலியில் அட்டும் அஹிம்சைப் போரினால் பலன் விளையாது. பூரண அஹிம்சையை நிலை நிறுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே நான் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தத் திட்டம் போட்டேன். பாதி பலாத்காரமும் பாதி அஹிம்சையுமாக நடக்கும் இயக்கத்தில் நான் சம்பந்தப்பட முடியாது. அத்தகைய இயக்கத்தினால் சுயராஜ்யம் வந்தாலும் அது உண்மையான சுயராஜ்யமாயிராது, ஆகையால் பர்தோலியில் 11 - ஆம் தேதி காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுகிறேன். இந்தக் கூட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நீடித்துத் தள்ளிப் போடுவதைப்பற்றி யோசிக்கப்படும். அப்படி நீண்ட காலம் தள்ளிப்போட்டால்தான் தேசத்தை நிர்மாண முரையில் தயார் செய்து அஹிம்சையை வேரூன்றச் செய்ய முடியுமென்று நான் கருதுகிறேன். தாங்கள் கூட்டத்துக்கு வர முடியாவிட்டால் தங்கள் அபிப்பிராயத்தை எழுதி அனுப்பக் கோருகிறேன்.இது விஷயமாகத் தங்கள் நண்பர்கள் பலரையும் கலந்து யோசித்து அவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
தங்கள்
உண்மையுள்ள,
(ஒப்பம்) எம். கே. காந்தி
காந்திஜியின் இந்த முடிவு தெரிய வந்ததும் ஆசிரமவாசிகளே திடுக்கிட்டார்கள் என்றால், மற்றவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மகாத்மாவினிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் மேற்படி செய்தியினால் மிக்க மனச்சோர்வு அடைந்தார்கள். மகாத்மாவை ஏற்கனவே விரோதித்தவர்களோ அளவில்லாத கோபத்தை அவர்மீது சொரிந்தார்கள்.

ஆயினும் மகாத்மா ஒரே பிடிவாதமாக இருந்தார். 11 - ஆம் தேதி கூடிய காரியக் கமிட்டியில் தீவிர விவாதம் நடந்தது. ஸ்ரீ கேல்கர் போன்ற சிலர் மகாத்மாவின் முடிவைப் பலமாக எதிர்த்தார்கள். மற்றவர்கள் மகாத்மாவிடம் உள்ள பக்தியினால் அடங்கி யிருந்தார்கள். விவாதத்தின் முடிவில், எல்லாவித சட்ட மறுப்புகளையும் நிறுத்தி வைத்துத் தேச மக்கள் நிர்மாண வேலையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் காரியக் கமிட்டியில் நிறைவேறியது.

மறுநாள் 12 - ஆம் தேதி அதாவது என்றைய தினம் பர்தோலி யுத்தம் தொடங்குவதாக இருந்ததோ அதே தினத்தில், மகாத்மா காந்தி சௌரி-சௌரா பயங்கர நிகழ்ச்சியை முன்னிட்டு ஐந்துநாள் உண்ணாவிரதம் தொடங்கினார்.

காரியக் கமிட்டி தீர்மானத்துடனும் மகாத்மாவின் உபவாசத்துடனும் காரியம் முடிந்துபோய்விடவில்லை. தேசமெங்கும் அதிருப்தி கடல்போலப் பொங்கியது. மகாத்மாவின் ஆத்ம சகாக்கள் என்று கருதப்பட்டவர்கள் பலர் அவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.

தென்னாப்பிரிக்காவில் ஒரு சமயம் மகாத்மா சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியபோது அவர் இந்தியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டதாக எண்ணி ஒரு பட்டாணியன் அவரை தடியால் அடித்து அவருடைய மண்டையை உடைத்துவிட்டான் அல்லவா? ஏறக்குறைய அத்தகைய சூழ்நிலை தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. "காரியத்தைக் கெடுத்து விட்டார் மகாத்மா!" என்று கூக்குரல் எங்கும் எழுந்தது. யாரும் அவரைத் தடியால் அடிக்கவில்லை; அவ்வளவுதான். தடியால் அடிப்பதைக் காட்டிலும் கொடுமையான குரோத மொழிகளை மகாத்மாவின் தலைமீது பொழிந்தார்கள். அவ்வளவையும் சத்தியத்துக்காகவும் அஹிம்சைக்காகவும் மகாத்மா சகித்துக் கொண்டார். கடல் கடைந்த போது எழுந்த விஷயத்தை விழுங்கிப் புவனத்தைக் காப்பாற்றிய நீலகண்டனைப்போல் அச்சமயம் காந்திஜி விளங்கினார்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக