பாம்பன் சுவாமிகள்
மு.ஹரி காமராஜ்
மே 30. பாம்பன் சுவாமிகளின் நினைவு தினம்.
=====
பிரணவத்தின் பொருளாகவே தோன்றிய முருகப் பெருமானைப் போற்றி வணங்கிய பேரருளாளர்கள் காலம்தோறும் தோன்றி கந்தப்பெருமானின் புகழைப் பரப்பி வந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். நினைத்த நேரமெல்லாம் அழகன் முருகனின் புகழை கனியக் கனியப் பாடிப் பரவசமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் ஸித்தியடைந்த தினம் இன்று (30.5.18) அனுஷ்டிக்கப்படுகிறது. பாம்பன் ஸ்வாமிகளின் ஆராதனை நாளில் அவர்தம் திவ்ய சரிதத்தின் சில பகுதிகளை தரிசிக்கலாமே..!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய (1848 அல்லது 1850 என்கிறார்கள்) பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டைத் தீவிரமாக்கிய மகான். சாத்தப்பப் பிள்ளை, செங்கமலம் தம்பதியருக்கு ஞான மகவாக ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் `அப்பாவு’ என்கிறார்கள். தமிழையும் வடமொழியையும் கற்று 12 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றார். அருணகிரிநாதப் பெருமானை குருவாக வரித்துக்கொண்ட ஸ்வாமிகள் 'கங்கையைச் சடையில் பதித்து' என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார்.
திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனார் ஸ்வாமிகள். ‘சண்முகக் கவசம்’, ‘பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்’ போன்ற பாடல்களை இயற்றினார். துறவறம் இருக்க பழநிக்கு முருகப்பெருமான் வரச் சொன்னதாக தனது நண்பரிடம் பொய்யுரைத்தார் ஸ்வாமிகள். உடனே அவரது கனவில் காட்சி தந்த முருகப்பெருமான், பொய்யுரைக்குத் தண்டனையாக 'தாம் கட்டளையிடும் வரை பழநிக்கு வரவே கூடாது' என்று தடை விதித்தார். இதனால் ஸ்வாமிகள் தமது இறுதிக்காலம் வரை பழநியை தரிசித்ததே இல்லை என்கிறது வரலாறு. 1894-ம் ஆண்டு ராமநாதபுரம் அருகிலுள்ள பிரப்பன்வலசை என்ற இடத்தில் அமர்ந்து 35 நாள்கள் கடும் தவமிருந்து முருகப்பெருமானின் அருட்காட்சியைக் கண்டார். அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி. அன்றிலிருந்து பௌர்ணமி வழிபாட்டைத் தொடங்கினார். துறவறம் மேற்கொண்டு சொந்தங்களையும் சுகங்களையும் இழந்தார். அருணகிரிநாதரைப்போல தலம்தோறும் சுற்றி, பாடத் தொடங்கினார்.
6,666 பாடல்களையும், 32 வியாசங்களையும் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடினார். தமிழகம் மட்டுமின்றி பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா... என்று காசி வரை திருத்தல யாத்திரை மேற்கொண்டார். 1918-ம் ஆண்டு ஸ்வாமிகள் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது `குமாரஸ்தவம்’ எனும் ஆறெழுத்து மந்திர நூலை இயற்றினார். அந்தப் பாடலால் பூரண குணம் பெற்றார். “ 'ஓம் ஷண்முக பதயே நமோ நம:' எனத் தொடங்கும் இந்த மந்திரப் பாடல்களைப் பாடுவோர், சண்முகப் பெருமான் இரு தேவியர்களோடு மயில் மீது அமர்ந்த காட்சியை தரிசிப்பார்கள்” என ஸ்வாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார்.
முருகப்பெருமானை நாடிச் சென்ற இடமெல்லாம் மனமுருகிப் பாடினார். இவரது தமிழால் மயங்கிய முருகப்பெருமான் பலமுறை நேரிலும் கனவிலும் காட்சி தந்து, பல அருள்விளையாட்டுகளை நடத்தினார். வயதான காரணத்தால் ஸ்வாமிகள் சென்னையிலேயே தங்கியிருந்தார். 1923-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சென்னை தம்புசெட்டிதெருவில் நடந்து சென்ற ஸ்வாமிகளின் மீது குதிரை வண்டிச் சக்கரம் இடித்து கால் எலும்பு முறிந்து போனது. சென்னை சென்ட்ரல் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஸ்வாமிகள். ‘குணப்படுத்துவது கஷ்டம்’ என்று மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால், முருகப்பெருமான் கைவிடவில்லை. தினமும் பாடிய `சண்முகக் கவசம்’ அவரைக் காத்தது. 1924, ஜனவரி 6-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் தோன்றிய சண்முகக் கடவுள் ‘15 நாளில் குணப்படுத்துவேன்’ என்று வாய் மலர்ந்தார்.
அவ்வாறே ஸ்வாமிகளின் கால் எலும்புகளைச் சேர்த்து குணப்படுத்தினார். முருகன் காட்சியளித்த அந்த நாள் இன்றும் ‘மயூர வாகன சேவன விழா’ என மார்கழி மாத வளர்பிறை பிரதமை நாளில் கொண்டாடப்படுகிறது. ஸ்வாமிகள் உருவாக்கிய மகா தேஜோ மண்டல சபையினர் இந்த விழாவை நடத்துகிறார்கள். அப்போது பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய ‘அசோக சாலவாசம்’ என்ற பாடல்களை வாசிப்பார்கள். இன்றும் சென்னை பொது மருத்துவமனையின் (ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை) மன்றோ வார்டில் பாம்பன் ஸ்வாமிகளின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.
பூரண குணமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் 1926-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் நாள் ‘மகா தேஜோ மண்டல சபை அமைப்பு’ என்ற வழிபாட்டு அமைப்பை ஏற்படுத்தினார். தமது இறுதிக்காலம் நெருங்குவதை ஸ்வாமிகள் அறிந்துகொண்டார். படிப்போரும் கேட்போரும் பரவசம்கொள்ளும் 'குமாரஸ்தவம்' பாடியபடியே இருந்தார். கந்தபெருமானை அடையும் காலம் வந்ததை ஸ்வாமிகள் உணர்ந்தார். உணவை மறுத்தார். சதா சர்வ நேரமும் முருகப்பெருமானைத் துதித்தபடியே இருந்தார். 1929-ம் ஆண்டு மே 30-ம் தேதி காலை 7:15 மணியளவில் பாம்பன் ஸ்வாமிகள் மகா சமாதியடைந்தார். அவரது சீடர்களும் பக்தர்களும் கலங்கிப் போனார்கள். ஆனால், அவரது உபதேசப்படி முருகப்பெருமானின் பாடல்களைப் பாடியபடியே ஸ்வாமிகளின் இறுதி யாத்திரை முறைகளைச் செய்தார்கள். அடுத்த நாள் 1929-ம் ஆண்டு மே 31 அன்று அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் பாம்பன் ஸ்வாமிகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். அவர் விதித்தபடி வங்கக் கடலோரம் சென்னை, திருவான்மியூரில் ஸ்வாமிகளின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு, மகா சமாதி அமைக்கப்பட்டது.
இன்றும் பல ஆயிரம் மக்கள் கூடி வழிபடும் இடமாக ஸ்வாமிகளின் சமாதி ஆலயம் விளங்கிவருகிறது. இங்கு பௌர்ணமி வழிபாடு மிக மிக விசேஷமானது. `இங்கு வந்து முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களை பாம்பன் ஸ்வாமிகள் கைவிடுவதே இல்லை’ என பக்தர்கள் மெய்சிலிர்க்கக் கூறுகிறார்கள். எளிய மக்கள் 'தாத்தா கோயில்' என்றே இந்த ஆலயத்தைக் குறிப்பிட்டு வணங்கி வருகிறார்கள். திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலிருக்கும் ஸ்வாமிகளின் சமாதியைத் தரிசித்து, பாம்பன் ஸ்வாமிகளின் அருளுடன் ஆறுமுகனின் அருளும் சேர்த்து பெற்றுச் சிறப்புற வாழலாமே..!
[ நன்றி : https://www.vikatan.com/spiritual/news/126285-pamban-kumaraguru-dasa-swamigal-memories ]
தொடர்புள்ள பதிவுகள்:
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்: விக்கிப்பீடியா
பி.கு. I have now switched to a new service , follow.it which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog. If you are already a Follower of my blog , thanks for reading!