இந்த 1936-ம் வருஷத்தில் சங்கீத வானத்தில் ஒளி வீசும் புதிய
நட்சத்திரம் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள். சென்னையில் இவ் வருஷம் அடிக்கடி
ஏதேனும் ஒரு சபையில் இவருடைய கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில்
மயிலாப்பூர் சங்கீத சபையிலும், கோகலே ஹாலிலும் இவர் செய்த கச்சேரிகள், இவ் வருஷ ஆரம்பத்தில் நமக்கு இவரைப் பற்றி ஏற்பட்ட
நம்பிக்கையை மெய்ப்படுத்தின.
தென்னிந்தியாவில் ரஸிகத் தன்மை சரியான நிலையில்தான் இருக்கிறது. ஒருவரிடம் நல்ல வித்வத் மட்டும் இருந்தாலும், கட்டாயம் மேன்மையடைந்தே தீர்வார் என்பதற்குச் செம்மங்குடி சீனிவாசய்யர் ஒரு சிறந்த உதாரணமாவார்.
மூன்று வருஷத்துக்கு முன்னால், சென்னையில் நடந்த இரண்டு பெரிய சங்கீத உற்சவங்களில் ஒன்றுக்கும் அவரைக் கூப்பிடவில்லை. இப்போது அவரை யார் முதலில் கச்சேரி வைப்பது என்று போட்டியாக இருக்கிறது.
பொதுவாக, நமது சங்கீத உலகில், ரஸிகர்களுடைய செல்வாக்குத்தான் மேலோங்கி நிற்கிறது என்பதற்குச் செம்மங்குடி சிறந்த உதாரணம் என்றால், சிறு அளவில், ஸ்ரீமதி பட்டம்மாளும் அதற்கு உதாரணமாகிறார்.
காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் எஸ்.சத்தியமூர்த்தி அவர்களுக்கு சங்கீதத்தில் ரொம்பக் ‘கிறுக்கு’ உண்டென்பது நேயர்கள் அறிந்ததே. சட்டசபையில் பக்கத்து ஆசனத்தில் படுத்திருந்தவரைப் பார்த்து, “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா!” என்று இவர் பாடத் தொடங்கியதாகக் கேள்வி. சங்கீதம் சம்பந்தமாகச் சில திட்டமான அபிப்ராயங்கள் அவருக்கு உண்டு. அவைகளை அப்பட்டமாகப் போட்டு அவர் உடைத்தும் விட்டார்.
சென்ற வருடம் கடைசியில் காங்கிரஸ் மண்டபத்தில் நடந்த சங்கீத விழாவின்போது, ஒருநாள் அவர் “ஸ்திரீகள்தான் பாடவேண்டும்; புருஷர்கள் பாடக் கூடாது; புருஷர்கள் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாம்! “ என்றார். அதற்கு, ஸம்ஸ்கிருத ஸ்லோகத்திலிருந்து ஆதாரமும் எடுத்துக் காட்டினார். ஸ்திரீ சாரீரத்தில் தான் இனிமை உண்டென்பது அவர் கருத்து.
இது ஒரு கட்சி. இதற்கு மாறான கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள், “சிவ சிவா! ஸ்திரீகள் பாடுவதும் பாட்டா? வழவழ குழகுழவென்று இழுத்தால் பாட்டாகி விடுமா? தாளம் வேதாளம்தான்! தாளக்கட்டு இல்லாத பாட்டு என்ன பாட்டு ?” என்பார்கள்.
இந்த இரண்டு கட்சிக்காரர்களும் ஸ்ரீமதி பட்டம்மாள் பாட்டில் திருப்தி அடைய இடமுண்டு. நலங்கிலும், ஊஞ்சலிலும் தவிர , ஸ்திரீகள் பாட்டு என்று வாய் திறக்கக் கூடாது என்று சொல்பவர்கள் கூட, ஸ்ரீமதி பட்டம்மாள் பாடலாம் என்று ஒப்புக் கொள்வார்கள்.
உயர்தர
சங்கீதத்தில் செவிக்கு இன்பமும், மூளைக்கு உற்சாகமும் இருதயத்துக்கு உணர்ச்சியும்
அளிக்கும் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று பார்த்தோம். இந்த மூன்று முக்கிய
அம்சங்களுக்கும் அஸ்திவாரம், ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் அமைந்திருக்கிறது.
சாரீரம்:-
இவருடைய சாரீரத்தில் இனிமையும் கம்பீரமும் கலந்திருப்பதைக் காண்கிறோம்.
ஸ்திரீகளுக்குள் இத்தகைய சாரீரம் அமைவது மிகவும் துர்லபம்.
எது இனிமையான சாரீரம் என்பதைப் பற்றிக்கூட , அபிப்ராய பேதத்துக்கு இடமுண்டு என்று சொல்லியிருக்கிறேன். சிலருக்குக் கீச்சுக் குரல்தான் இனிமையான குரலாகத் தோன்றும். வேறு சிலரோ கீச்சுக் குரலைக் கேட்டால் காதைப் பொத்திக் கொள்வார்கள். இரட்டை நாத சாரீரத்தில் தான் சிலர் பூரண சுகபாவத்தைக் காண்பார்கள். வேறு சிலர் இதையே “மூக்கால் பாடுவது” என்பார்கள். அபிப்பிராய
பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் சிலருக்குத்தான் உண்டு.
ஸ்திரீகளுக்குள் இன்னும் இது அருமை. உதாரணமாக, ஸ்ரீமதி பாலசரஸ்வதியின் தாயார் ஸ்ரீமதி ஜயம்மாள் அத்தகைய மேலான சாரீரம் பெற்றிருக்கிறார்.
அதுபோலவே, அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் ஸ்ரீமதி பட்டம்மாளுடையது. கீச்சுக் குரல் இல்லாமல் சுகபாவம் உள்ளது. துரித காலத்தில்
பிர்காக்கள் போடுவதற்கும், சவுக்க காலத்தில் நின்று பாடுவதற்கும் ஏற்றதாய்
அமைந்தது. பெரிய சபைகளில் கடைசி வரையில் கேட்கும்படியான கம்பீரமும்
பொருந்தியது.
வித்தை:-
சுருதி, லயம் இரண்டிலும் அணுவளவு குறை சொல்வதற்கும் இடமில்லாமலிருப்பது மட்டுல்ல; ஸ்வரங்களைக் கையாளுவதிலும், தாள வித்தையிலும் இவரிடம் சில அபூர்வ வேலைப்
பாடுகளைக் காண்கிறோம்.
இவர் ஸ்வரஜதிகள் பாடும்போது, ஸ்ரீமான் ராஜரத்தினத்தைப் போல், இனிமை குன்றாமல் வக்கிரமான ஸ்வரங்களைச் சேர்க்கும் சக்தி வெளியாகிறது. நாலு
களைச் சவுக்கப் பல்லவி மூன்றாவது அட்சரத்தில் எடுத்து, அதை மூன்று காலங்களிலும் பாடுகிறார். சதுச்ர
நடையிலிருந்து திச்ர நடைக்கும், திச்ர நடையிலிருந்து சதுச்ர நடைக்கும் மாறுகிறார்.
இது மிகவும் அபூர்வமான திறமை! காலஞ் சென்ற நாயனாப் பிள்ளை அவர்களினால் சமீப காலத்தில் திறமையுடன் கையாளப்பட்டு அவருக்கு இது அழியாத புகழைத் தந்தது. உண்மையில் ஸ்ரீமதி பட்டம்மாள், தாள வித்தையைப் பொறுத்தவரை நாயனாப் பிள்ளையைப் பின்பற்றுகிறார் என்று சொல்லலாம்.
|
[ படம்: மாலி நன்றி : விகடன் ] |
ஸ்ரீமதி
பட்டம்மாளின் மற்றொரு விசேஷ திறமையையும் காண்கிறோம். உயர்தர வித்வான்களை
அப்படியே பின்பற்றிப் பாடும் சக்தி அவரிடம் இருக்கிறது.
ஸ்ரீமான்கள்
நாயனாப் பிள்ளை, அரியக்குடி இராமானுஜ அய்யங்கார், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் இவர்களிடம் நாம்
ரொம்பவும் அநுபவித்திருக்கும் பாட்டுக்கள் சிலவற்றை இவர் போட்டோ
பிடித்ததுபோல் பாடுகிறார். சுய ஞானம் இல்லாமல் வெறும் 'இமிடிஷேன்' செய்வதாக மட்டுமிருந்தால், நமக்குச் சிரிப்புத்தான் உண்டாகும். அப்படியின்றி
இவர் அந்தச் சரக்குகளையெல்லாம் தம்முடையதாகவே ஆக்கிக்கொண்டு அநுபவத்துடன்
பாடுகிறபடியால், நமக்கு வியப்பும் உவகையும் உண்டாகின்றன. ஒவ்வொரு வித்வானிடத்தும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் ஏற்க வேண்டுமென்னும் ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் அந்த ‘போட்டோ’ பாட்டுக்கள் அறிகுறியாகின்றன. மேற்கண்ட வித்வான்களுடைய பாணிகளெல்லாம் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு நிற்பவை. அப்படி மாறுபட்ட வழிகளையெல்லாம் கற்றுக் கொண்டு, பாடி வெற்றியடைவது ஓர் அதிசயமான திறமையென்பதில் சந்தேகமில்லை.
ஹிருதய பாவம்:- பிரசித்த வித்வான்களில்கூட இரண்டொருவரிடந்தான் நாம் கண்டிருக்கும் இந்த அம்சத்தை இந்த யுவதியிடம் எதிர்பார்க்க
முடியாது. ஆனால், இந்த அம்சமும் வருங் காலத்தில் இவருடைய
பாட்டில் நன்கு பிரகாசிக்கும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஸாஹித்யத்தில் கவனம் செலுத்தி அக்ஷரங்களைச் சுத்தமாக உச்சரித்துப் பாடுகிறார்.
அவற்றின் பொருளையும் உணர்ந்து, சொற்களை இசையுடன் கலந்து பாடத் தொடங்கும்போது, உயர்தர சங்கீதத்தில் நாம் எதிர்பார்க்கும் எல்லா
அம்சங்களும் இவருடைய பாட்டில் பொருந்தி விளங்குவதைக் காண்போம்.
இளம்
வயதிலேயே சங்கீத வித்தையில் பிரசித்தியடைபவர்களின் அபிவிருத்திக்கு ஒரு
பெரிய தடை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு அடிக்கடி கச்சேரிகள் கிடைக்கின்றன; பக்கத்திலுள்ளவர்கள் அசாத்தியமாய்ப் புகழ்கிறார்கள். ஆகவே, மற்ற சிறந்த வித்வான்களின் பாட்டுக்களைக்
கேட்பதற்குச் சந்தர்ப்பமும், ஊக்கமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றன. ஆகவே, ஓரிடத்திற்கு வந்ததும் அதற்கு மேல்
அபிவிருத்தியடையாமலே நின்றுவிடுகிறார்கள். ஸ்ரீமதி பட்டம்மாள் விஷயத்தில்
அப்படி ஏற்படக்கூடாதென்பது நம்முடைய கோரிக்கை. இது வரையில் அத்தகைய தடை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சென்ற ஒரு வருஷ காலத்தில் இவருடைய
கச்சேரிகளில் சிறந்த அபிவிருத்தியைக் காண்கிறோம். 'முன்னு ராவணா', 'சிவே பாஹிமாம்', 'மானஸ குரு குஹ', 'அக்ஷயலிங்க விபோ' முதலிய கீர்த்தனங்கள் வர வர மெருகு பெற்று வருகின்றன.
கல்யாணி, தோடி, கரகரப்ரியா, ஜகன் மோஹினி, மலய மருதம் முதலிய ராகங்களின் ஆலாபனமும் நாளுக்கு
நாள் சிறப்படைந்து வருகிறது.
புதிய கீர்த்தனங்களும் கற்றுப் பாடி வருகிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு கச்சேரிகளில் ஸ்ரீமான் கோடீசுவரய்யர் அவர்களின் ‘வாரணமுக’ என்னும் ஹம்ஸத்வனி கீர்த்தனமும், ‘ஐயனே - எனை ஆட்கொள் மெய்யனே” என்னும் காம்போதி கீர்த்தனமும் மிகவும் நன்றாய் சோபித்தன. இப்படியே அபிவிருத்தியடைந்து வந்தால், சங்கீத உலகத்தில் ஸ்ரீமதி பட்டம்மாள் தனிச் சிறப்பு
வாய்ந்த பதவியை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.
|