செவ்வாய், 29 நவம்பர், 2016

எஸ்.வி.சகஸ்ரநாமம் -1

எஸ்.வி.சகஸ்ரநாமம்
ரவி சுப்பிரமணியம்


நவம்பர் 29.  சகஸ்ரநாமம் அவர்களின் பிறந்த நாள்.
 ====

நாடக நிகழ்வென்பது கூட்டு உழைப்பாலும் ஒத்திசையும் கூட்டு உடல் மொழியாலும் நிகழ்த்தப்படுவது. ஒலி ஒளி வண்ணங்கள், ஒப்பனைப் பிரதி என பல்கலையின் கூட்டு உச்சரிப்பு அது. அந்தக் கூட்டு உச்சரிப்பின் தனித்துவம் வாய்ந்த குரல்களில் ஒன்று தமிழ் நாடகக்கலையின் தலைமை ஆசான் என்று இன்றும் எல்லோராலும் போற்றப்படும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள்.பொழுதுபோக்கோடு, புராணம், இலக்கியம், வரலாறு, சமயம், கற்பனை, மொழிபெயர்ப்பு என எழுதி, நடித்து, நிகழ்த்திக்காட்டி தமிழின் தொன்மங்களை பாமரனுக்கும் நாடக வழியில் கொண்டு சேர்த்தவர் சுவாமிகள். இரணியன், இராவணன், எமதர்மன், சனீஸ்வரன் போன்ற பல கதாபாத்திரங்களில் அவரது அசாத்திய நடிப்புத் திறன் வெளிப்பட்டுள்ளது.

ஒப்பனையைக் கலைக்காமல், சனீஸ்வரன் வேஷத்தில் விடியற்காலை குளக்கரைக்கு வந்த சங்கரதாஸ் சுவாமிகளின் தோற்றத்தைக் கண்டு பயந்து நடுங்கி, உயிரையே விடுகிறாள் குளக்கரைக்கு துணி வெளுக்க வந்த சலவைக்காரக் கர்ப்பிணிப் பெண். தன்னால் இப்படி நேர்ந்ததே என்று மனம் வெதும்பிய சுவாமிகள், அன்று முதல் வேஷங்கட்டுவதை விட்டு, பல நாடகக் குழுக்களுக்கு ஆசானாக மாறுகிறார்.

தனது 24ஆம் வயதிலிருந்து நாடகக்கலையில் ஈடுபட்டு வந்த சுவாமிகள், 1918இல் தத்துவ மீனலோசனி வித்வ பாலசபாஎன்ற பாலர் நாடக சபையைத் துவக்குகிறார். அந்த நாடக சபாவில் சேர்ந்து சுவாமிகளிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்கள் டி.கே.எஸ். பிரதர்ஸ்.
சங்கரதாஸ் சுவாமிகளிடம் நான் நேரடியாகப் படிக்காவிட்டாலும் அந்தப் பரம்பரையில் வந்த, திருக்கூட்ட மரபினன் நான்என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார் எஸ்.வி. சகஸ்ர நாமம்.

சுவாமிகள் மறைந்த பின், அவர் நினைவாக டி.கே.எஸ். சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட, ‘மதுரை ஸ்ரீ பால ஷண்முகானந்தா சபாவில், ‘அபிமன்யூ சுந்தரிநாடகத்தில், டி.கே. ஷண்முகம் அற்புதமாக நடிப்பதையும் கைத்தட்டல் பெறுவதையும் கண்டு, தானும் அது போன்று நாடகத்தில் நடிக்க வேண்டுமென, தீராத மோகம் கொள்கிறார் சகஸ்ரநாமம்.

பொள்ளாச்சியில் பெரியப்பாவின் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த பதிமூன்றே வயதான அவர் தன் ஆங்கிலப் புத்தகங்களை எடைக்குப் போட்டுவிட்டு கோவைக்கு வந்திருக்கிற டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகக்குழுவில் சேர முடி வெடுத்து ரயிலேறிவிடுகிறார்.

நாடகக்குழுவின் மேலாளர் காமேஸ்வர அய்யர், “போ, போய் உன் பெற்றோரை கூட்டிவா, அல்லது உன் அப்பாவிடம் இருந்து கடிதம் வாங்கிவாஎன்கிறார்; நாடகத்தின் மீதிருந்த அதீத ஆசையால் அப்பாவைப் போலவே கடிதம் எழுதி வந்து கொடுக்கிறார் சகஸ்ரநாமம். அனுப்புநர் முகவரியில் இருந்த முகவரியைப் பார்த்து, அவர் அப்பாவுக்கு அஞ்சல் அட்டைப் போடப்பட்ட, அவர் அங்கு வந்து சேர, அவரைக்கண்டு பயந்து, அருகில் உள்ள படிக்கட்டு உள்ள ஒரு கிணற்றில் இறங்கி ஒளிந்து கொள்கிறார் சகஸ்ரநாமம்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம். ஒரு நாடகக்குழுவில் இருக்கிற ஒருவனுக்குக் குறைந்தது மூன்று கலைகளாவது தெரிந்திருக்க வேண்டும். உயர்வு தாழ்வு பாராது, எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும். சர்க்கஸ் டெண்ட் ஊருக்கு ஊர் மாறுவதுபோல, எல்லாவற்றையும் மூட்டை மூட்டையாய்க் கட்டிக்கொண்டு ஊருக்கு ஊர் பாணர்கள் போலப் பயணப்பட வேண்டும். இவற்றையெல்லாம் மீறி நிரந்தர வருமானமோ சமூக மதிப்போ கிடைக்காது. இந்த விஷயங்களை எல்லாம் உணர்ந்திருந்த அவரது தந்தை கடைசியில் என்ன படிப்பா, நடிப்பா?” எனக் கேட்க, “நடிப்பேஎன்று சகஸ்ரநாமம் சொல்ல, “உன் தலையெழுத்துப்படியே நடக்கட்டும்என ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிறார்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் 29.11.1913ஆம் ஆண்டு இரண்டு தமையர்களோடும் இரண்டு தமக்கைகளோடும் ஒரு இளைய தங்கையோடும் குடும்பத்தில் ஐந்தாவதாய் பிறந்தவர் சகஸ்ரநாமம். அன்று முதல் அவர் தந்தையாராலேயே நாடகத்துக்குத் தத்துக் கொடுக்கப்பட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி என்கிற நால்வரும் இவரைக் குகனோடு ஐவரானோம் என்பதுபோல் அணைத்துக் கொள்கின்றனர். நாடகக்கலையின் பல்வேறு நுணுக்கங்களை அவர் அங்கேதான் கற்கிறார். வீரபத்திரன் என்கிற பழைய நாடக நடிகரிடம் அடிவாங்கிப் பாடல் கற்கிறார். தன் நாடகப் பயிற்சியின் குருநாதர் என்று அவர் குறிப்பிடுவது, நடிகர் எம்.கே. ராதாவின் அப்பாவான எம். கந்தசாமி முதலியாரைத்தான். அவரிடம் பயின்ற மூன்றே மாதங்களில் அபிமன்யூ சுந்தரியில் சூரிய பகவானாக வேஷங்கட்டுகிறார். நடிப்பதில் மட்டுமன்றி சில கலைகளில் விற்பன்னராகவும் சில கலைகளில் பரிச்சயமுள்ளவராகவும் இருந்துள்ளார் எஸ்.வி. எஸ்.

சங்கீத மேதை டி.ஏ. சம்மந்த மூர்த்தி ஆச்சாரியாரிடம் ஆர்மோனியம் இசை கற்றுள்ளார். இலக்கிய வாசிப்பு அவருக்கு இயல்பில் கூடி வந்துள்ளது. மேடை அமைப்பில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். அதனால்தான், பின்னாளில் சென்னையில் கட்டப்பட்ட ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மன்றம்’, ‘ராணி சீதை ஹால்’, ‘கலைவாணர் அரங்கம்’, ‘சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம்ஆகியவை அவரது ஆலோசனையோடும் கட்டப்பட்டுள்ளன. ஆடை அணிகலன் உருவாக்கத்தில் பரிச்சயம் கொண்டவராக இருந்திருக்கிறார். வி.கே. ஆசாரி என்பவரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். கொல்லத்தில் குஸ்தி படித்திருக்கிறார். வாலிபால் போட்டியில் பங்கெடுத்துள்ளார். பேட்மின்டன் தெரியும். கோவை அப்பாவு பிள்ளையிடம் கார் மெக்கானிக் வேலை கற்றிருக்கிறார். கோவை சங்கமேஸ்வரன் செட்டியார் கம்பெனியில் சோப் சப்ளையராக வேலை பார்த்திருக்கிறார். சேலம் பஸ் கம்பெனி ஒன்றில் சிலகாலம் கண்டக்டராக வேலை பார்த்துள்ளார். கார் ஓட்டப் பயின்று, முறையாக லைசென்ஸ் எடுத்துள்ளார். அவரது சித்தப்பாவிடமே டிரைவர் வேலை பார்த்திருக்கிறார். சின்ன அண்ணனின் மாமனாரோடுச் சேர்ந்து, காப்பிக்கொட்டை மற்றும் பலசரக்கு வியாபாரம் செய்திருக்கிறார். பட்டியல் இன்னும் நீள்கிறது.

நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நாடகத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர். பாரதியின் பாடல்களில் பெரும் ஈர்ப்பு கொண்ட அவர் பாரதியின் வரியை இப்படி மாற்றிச் சொல்லிக் கொள்கிறார். எனக்குத் தொழில் நாடகம். நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.இதைச் சொல்லிவிட்டு அடுத்து சொல்கிறார்: நானும் மூல நட்சத்திரம். அவரும் மூல நட்சத்திரம். அவரும் கார்த்திகை மாசம் பொறந்தார். நானும் கார்த்திகை மாசம் பொறந்தேன். அவரும் என்னைப் போலத் தாயை இழந்தவர்”.

அதே பாரதியைப் போல் படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் எஸ்.வி.எஸ். என்பதற்குச் சில உதாரணங்களைச் சொல்ல முடியும்.

1959இல் நாலுவேலி நிலம்படம் எடுத்து நஷ்டம் அடைகிறார் எஸ்.வி.எஸ். சக நடிகர்களின் மேல் பிரியத்தோடு, அவர்களது எல்லா வசனங்களையும் மனப்பாடமாகப் பிராம்ட் செய்து உதவும் சகஸ்ரநாமம், சமயங்களில் தன் வசனத்தை தான் மறந்து நிற்கும் சோகம் போல, வியாபாரச் சூட்சுமம் தெரியாமல் படம் எடுத்து, அதனால் ஏற்பட்ட கடனுக்காக தன் வீட்டை அடமானம் வைக்கிறார். சில கடன்களை அடைக்கிறார். முழுவதும் அடைக்க முடியவில்லை. கடைசியில் கடனுக்காக வீட்டை ஏலம் விட தண்டோராப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவரோ மாடியில் நாடக ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார். தண்டோராக்காரன் தாண்டவராயன் தெரு வீட்டில் நோட்டீஸ் ஒட்டி விட்டுப் போகிறான். பின்பு சிலோனில் இருந்து கொஞ்சம் பணம் வருகிறது. பணம் வந்ததும் கோமல் சாமிநாதனையும் நடிகர் சாமிக்கண்ணுவையும் அழைத்துக்கொண்டு, காரைக்குடி கண்டவராயன்பட்டிக்குச் செல்கிறார். அங்கு தனக்கு பணம் தந்த செட்டியாரிடம் வட்டி உள்பட முழுப்பணத்தையும் திரும்பக் கொடுக்கிறார். செட்டியார் நெகிழ்ந்து சினிமாவில் நான் யார் யாருக்கோ பணம் தந்தேன். பல பேர் ஏமாத்தியிருக்காங்க. ஆனால் இந்த நிலையிலும் நீங்கள் இப்படி நடந்து கொள்வது என்ன சொல்றதுன்னு தெரியலஎன்று சொல்லியிருக்கிறார்.

அடுத்து பண்டரிபாய்க்கும் மைனாவதிக்கும் உள்ள பாக்கிக்காக அவர்களது வீட்டுக்குச் செல்கிறார். அவர்கள் நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சுருக்கிங்க. வேண்டாம்என்று மறுக்கிறார்கள். மறுப்பது உங்க பெருந்தன்மையம்மா. ஆனா, ‘நாலு வேலி நிலம்கதையே சாகும் போதும் யாருக்கும் கடன் வைக்கக் கூடாதுங்கிறதுதானே. பணத்தை நீங்க வாங்கிக்கத்தான் வேணும்எனக் கட்டாயப்படுத்தித் தந்துவிட்டு வருகிறார்.

தான் நன்றாக வாழ்ந்த காலத்தில் அவர் சில கலைஞர்களுக்கு உதவியிருக்கிறார். ஜீவா தலைமறைவு வாழ்க்கையில் இருந்த போது அடைக்கலம் தந்துள்ளார். முகவை ராஜமாணிக்கத்திற்கு உதவியிருக்கிறார். தன் கலை வாழ்வின் ஆரம்ப காலங்களில் வசனகர்த்தா இளங்கோவனிடம் எஸ்.வி.எஸ் உதவியாளராக வேலை பார்த்துள்ளார். மணிப்பிரவாள நடையில் ஒலித்துக்கொண்டிருந்த திரை மொழியை, தனது அழகு தமிழால் எழுதி, தமிழின் ருசியை திரை உலகத்திற்கு உணர்த்தியவர் இளங்கோவன். தணிகாசலம் என்ற இயற்பெயர் கொண்ட இளங்கோவன் உண்மையான அர்த்தத்தில் தமிழ் திரைப்பட வசனத்தின் திருப்புமுனை. திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அம்பிகாபதி அசோக்குமார், மகாமாயா, சுதர்ஸன் போன்ற படங்களில் வசனம் எழுதிய இளங்கோவனுக்கு, ஜுபிடர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரித்த கண்ணகிதான் பெரும் பெயரை பெற்றுத் தந்தது. அதில் அவரோடு உதவியாளராகப் பணியாற்றிவர் சகஸ்ரநாமம். அந்த இளங்கோவனின் கடைசிக் காலகட்டத்தில் அவருக்கு உதவியிருக்கிறார். இதையெல்லாம் அவர் எங்கும் குறிப்பிடவில்லை. அவரது நண்பர்களின் அவரது நாடகக்குழு நடிகர்களின் வழியேதான் இதையெல்லாம் அறிய முடிகிறது.

அவர் குழுவில் நடித்த நடிகர் நடிகைகள் பட்டியல் வெகு நீண்டது. ஒரு சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன். சிவாஜி, முத்துராமன், குலதெய்வம் ராஜகோபால், வி. கோபாலகிருஷ்ணன், கள்ளப்பார்ட் நட்ராஜன், ஏ.கே. வீராச்சாமி, ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இயக்குநர் கே. விஜயன், சத்யராஜ், பி.ஆர். துரை, மாஸ்டர் பிரபாகர், எஸ்.என்.லட்சுமி, எம்.என். ராஜம், பண்டரிபாய், மைனாவதி, தேவிகா, ஜி.சகுந்தலா, காந்திமதி என்று பட்டியல் நீள்கிறது.

கலைஞர்கள்பால் கொண்டிருந்த அதே அன்பைதான் அவர் எழுத்தாளர்களிடமும் கொண்டிருந்தார். வ. ரா. சகஸ்ரநாமத்தின் நடிப்பை, நாடக சேவையை பலமுறை புகழ்ந்துள்ளார். 1945-46களில், சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில், விதவை திருமணத்தை வலியுறுத்திய இவரது பைத்தியக்காரன்நாடகத்தைப் பார்க்க உடல் நலிந்த நிலையிலும் அடிக்கடி வந்துள்ளார். நாடகம் முடிந்ததும் ஒருநாள் அவர், “சபாஷ் சகஸ்ரநாமம். சபாஷ். பத்து நாளா இந்த நாடகத்தைப் பாக்க வரேன். முதல் நாள் அனுபவிச்ச அந்த நெகிழ்ச்சி குறையவே இல்ல. ஒரு நாடகம் சமூகத்துக்கு இதைத்தான் செய்யணும்என்கிறார்.

இது போன்ற அறிஞர்களது தொடர்புதான் அவரை இலக்கியத்தை நோக்கி நகர்த்தி உள்ளது. தனக்குப் பெரும் வழிகாட்டியாக விளங்கிய நூல்களாக அவர் குறிப்பிடுவது, மாஜினி, காரல் மார்க்ஸ், கிரீஸ் வாழ்ந்த வரலாறு போன்ற வெ. சாமிநாதசர்மாவின் நூல்களை. அதனால் தான் தன் சகோதரி மகன் என்.வி.ராஜாமணியின் உதவியோடு, தாகூரின் கதையை கண்கள்என்ற தலைப்பில் நாடகமாகப் போடுகிறார். நார்வேஜிய எழுத்தாளர் இப்சன் நாடகங்களால் கவரப்பட்டு எனிமி ஆப் பீப்பிள்ஸ்என்கிற நாடகத்தை மக்கள் விரோதிஎன்று நாடகமாக எழுதித் தரும்படி, தன் நண்பரும் பொது உடமைத்தலைவருமான ஜீவாவிடம் கேட்கிறார். பி.எஸ். ராமய்யா, தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ந. சிதம்பரசுப்ரமணியம் போன்ற மிகச்சிறந்த எழுத்தாளர்களை தன் அன்பின் வேண்டுகோளால் நாடகம் எழுத வைக்கிறார். உண்மையிலேயே இலக்கியவாதிகளைக் கொண்டாடி இருக்கிறார் எஸ்.வி.எஸ். தன் குழந்தைகள் தவிர எழுத்தாளர் பி.எஸ். ராமய்யா மகள் ரோஜா போன்ற நண்பர்களின் குழந்தைகளின் எட்டுப் பேருக்கு முழு செலவையும் ஏற்று கல்யாணம் செய்து வைத்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எம்.வி.வி ஒரு முறை சொன்னார். சகஸ்ரநாமம் அப்போது பெரிய புகழ் பெற்ற நடிகர். ஜானகிராமன் அவர் அலுவலகத்தில் கிறுக்கல் கிறுக்கலாக ஒவ்வொரு பக்கமாக ஸ்கிரிப்ட் எழுத எழுத அவர் பக்கத்திலேயே இருந்து அதை ஆசையாசையாய் சகஸ்ரநாமம் உடனுக்குடன் எடுத்துப் படிப்பதை நான் கண்டேன்.

இலக்கியவாதிகளை உண்மையில் மதித்து, அவர்களது ஆக்கங்களை நாடகமாக்கும் சினிமாவாக்கும் முயற்சிகள் இன்றுவரை மிக மிகச் சொற்பமானவை. அதனால்தான் தமிழ் சினிமா இன்று வரை அதிக அளவில் இந்தியாவைத் தாண்டி பெயர் பெறவோ, பரிசு பெறவோ முடிவதில்லை. ஆனால் எஸ்.வி.எஸ், அந்தக் காலத்திலேயே இது போன்ற பிரக்ஞையோடு செயல்பட்டது ஆச்சர்யமளிக்கிறது.

அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களோடு மதிப்போடும் அன்போடும் அவர் பழகியிருந்தாலும் அவர்களது நாடகங்களை அவர் தன் சேவா ஸ்டேஜுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. திராவிட இயக்க நாடக மொழியிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே தன் நாடக மொழியை வடிவமைத்திருக்கிறார் எஸ்.வி.எஸ்.

ஒரு வகையில் திராவிட இயக்க மேடை நாடகங்களுக்கான மௌனமான எதிர்ப்புக்குரலே எஸ்..வி.எஸின். நாடகப் பிரதிகள். அவரது நண்பர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களின் மூலம் இது உறுதிப்படுகிறது.

பல சமயங்களில் திராவிட இயக்க நாடக மேடைகளில் பயன்படுத்தப்படும் அதீத அலங்காரங் கொண்ட திகட்டும் மிகைத்தமிழ் சொல்லாடல்களையோ, வெற்று வார்த்தை ஜாலங்களையோ, ஆக்ரோஷ பிரச்சாரங்களையோ எஸ்.வி.எஸின். நாடகப் பிரதிகளில் காண முடியவில்லை.

எஸ்.வி.எஸ். தமிழின் காதலன். ராஜா சாண்டோ இயக்கத்தில் வந்த அவரது முதல் படத்தில் நடிக்க பம்பாய் செல்கிறார் எஸ்.வி.எஸ். அவர் இங்லீஷ் மோஸ்தரோடு இருப்பார். தமிழில் பேசமாட்டார் என்று நினைத்தேன். சரளமாகத் தமிழ் பேசினார். எழுதினார். அதைவிட ஆச்சர்யம் தமிழ் இலக்கண நூல்களான நன்னூல் போன்றவற்றை மனப்பாடமாகச் சொன்னார். அவர் தமிழ் இன உணர்வு உள்ளவர்என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பாரதி கவிதைகள், கட்டுரைகள் போன்ற தான் விரும்பிய சில தமிழ் இலக்கியங்களை மனப்பாடம் செய்திருந்த எஸ்.வி.எஸ், என்.எஸ்.கே. மறைந்தபோது வானம் மேகமூட்டத்தோடு இருந்ததை இப்படிச் சொல்கிறார்.

கதிரவனைக் காணாது கமல மலர் வாடுமென கவிகள் சொல்லக் கேட்டதுண்டு. கமலத்தைக் காணாததால் அன்று கதிரவனே வாடியிருந்தான்.என்.எஸ்.கேயுடனான அவரது உறவு ரொம்பவும் விசேஷமானது. என்.எஸ்.கே. இவருக்கு பதினாறு வயதில் பழக்கமாகிறார். அவரோடு இளம் வயதில் நாடகத்தில் நடித்த ஒரு சம்பவத்தை இப்படி குறிப்பிடுகிறார்.

சிலோனில் ஒரு முறை நாங்கள் நாடகங்கள் நடத்தச்சென்றோம். அங்கு நடத்தப்பட்ட கிருஷ்ணலீலா நாடகத்தில் நரகாசுரனாக என்.எஸ்.கே. நடிக்கிறார். அவர் மகன் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நரகாசுரன் வீழ்கிறான். அவர் வீழ்ந்ததும் அப்பா, எனக்கு ஒரு வழியும் காட்டாமப் போறீங்களேஎன்று அவர் மேல் நான் விழுந்து அழும் காட்சி. நான் அப்படி சொல்லி அவர் மேல் விழுந்து அழும்போது என்.எஸ்.கே. சொல்கிறார். மகனே கலங்காதே. அப்படியே தனுஷ்கோடி வழியா போஎன்கிறார். அது நான் அழ வேண்டியக் காட்சி. எனக்கோ சிரிப்பு வந்துவிட்டது. நல்ல வேளை முகத்தை உடனே, அந்தப் பக்கம் முகம் திருப்பிக் கொண்டு, நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது, இந்தப் பக்கம் பார்ப்பவர்களுக்கு நான் அழுவது போல் தெரிந்தது.

என்.எஸ்.கேயைப்பற்றி லக்ஷ்மிகாந்தன் அவதூறாக எழுதியபோது, அவரது இந்துநேசன் அலுவலகத்துக்கேச் சென்று அச்சு இயந்திரங்களை சுத்தியலால் அடித்து உடைத்துள்ளார் எஸ்.வி.எஸ். இந்தச் சம்பவத்துக்குப் பின், அவரை சந்தித்த எம்.ஆர். ராதா வாய்யா, பிராமண ரௌடிஎன்று செல்லமாக அழைத்தாராம். என்.எஸ்.கே. சிறையில் இருந்தபோது, வழக்குச் செலவுகளுக்குப் பணம் திரட்ட அவரது நாடகக்குழுவை எடுத்து நடத்தி, அவர் சிறையில் இருந்து திரும்பியதும் அதனை அவரிடமே ஒப்படைத்துள்ளார் எஸ்.வி.எஸ்.

நாடகப் பிரதிகளை அவர் புதுவிதமாய் மாற்றி அமைக்க இன்னொரு காரணம் காங்கிரஸ் அபிமானமும் தேசபக்தியும். தக்கர் பாபா ஆஸ்ரமப் பொன் விழாவில் காந்தியையும் 1936இல் விருதுநகரில் நேருவையும் பார்த்து பரவசம் கொள்கிறார். 1935லேயே கோவையில் காங்கிரசில் உறுப்பினர்களைச் சேர்க்கப் பாடுபடுகிறார். யுத்த நிதிக்காக ஐயாயிரத்து ஒரு ரூபாயை காமராஜரிடம் கொடுத்தது மட்டுமில்லாமல் அதுவரை தான் பெற்ற தங்கப்பதக்கங்கள், வெள்ளி குத்துவிளக்கு, சந்தனப்பேலா போன்ற பல பொருட்களைக் கொடுத்துவிட்டு வருகிறார்.

முழுநேரத் தொழில் முறை நாடகக் கலைஞனாக அவர் இருந்ததும் புதுமைகளை ஏற்கும் மனோபாவமும் தேர்ந்த இலக்கியவாதிகளின் உறவும் ஸேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையம் அமைத்து நாடக மாணவர்களை உருவாக்கும்படி செய்தது. ஏராளமான அறிஞர்களின் ஆலோசனைகளும் அவர் தன் நாடகங்களில் மேலும் மேலும் புதுமை செய்யும் பாதையை அவருக்குத் தந்துள்ளது. டி.கே. ஷண்முகத்தின் ஆலோசனையோடு அவர் போட்ட பாரதியின் பாஞ்சாலி சபதம்என்ற கவிதை நாடகம் மிகப்பெரும் வெற்றிபெறுகிறது. அதையும் தாண்டி பரிக்ஷார்த்த நாடகங்களுக்குச் செல்கிறார்.

பாரதியின் குயில் பாட்டை நாடகமாக்கியபோது பார்த்த ஒரு பார்வையாளர் ஏற்கனவே ஜனங்களுக்கு நாடகம் போட்டேள். இப்போ வெறும் புலவர்களுக்காக மட்டும் போடுறேள் போலேருக்குஎன்றாராம்.

சமகாலத்தின் இந்தக் கேள்விதான் ஒரு கலைஞன் தன் கலை எல்லைகளைக் கடக்கிறான் என்பதை புரியவைக்கும் சாட்சி. இப்படி தனது நாடகப் பிரதிகளின் உருவாக்கத்தின் மூலம் அவர் சூழலுக்கு எதிர்வினை புரிந்துகொண்டே இருந்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தன் சக நாடகக் குழுக்களிடம் தன் செயல்பாடுகள் மூலமாக சதா ஒரு உரையாடலை உருவாக்கவே முயன்றுள்ளார். கேட்டும் கேளாத செவிகளுக்கும் பார்த்தும் பாராத விழிகளுக்கும் புதியதாய் ஒன்றைக் காட்டவே எஸ்.வி.எஸ் அர்ப்பணிப்பாய் இயங்கி உள்ளார்.

தனது 18ஆம் வயதில் 13 வயதான மாமன் மகள் ஜெயலக்ஷ்மியை மணந்து கௌரி, லலிதா, சாந்தி என்ற மூன்று பெண் குழந்தைகளையும் குமார் என்ற மகனையும் பெற்றவர் சகஸ்ரநாமம். தன் கடைசி நாடகமான நந்தா விளக்குக்கு, வாரத்தின் துவக்கத்தில் எல்லோருக்கும் தொலைபேசியில் பேசி, ஞாயிற்றுக் கிழமை ஒத்திகைக்கு வரச்சொல்லிவிட்டு வெள்ளிக் கிழமையே அவர் மறைந்தார். அது அவர் நமக்குக் காட்டிய கடைசிக் காட்சி.

அந்த ஞாயிற்றுக் கிழமையில் அவர் நிகழ்த்தாமல் நிகழ்த்திய ஒத்திகை வழியேயும் சொல்லாமல் சொன்ன பாடங்களின் வழியேயும் தேர்ந்தெடுத்த கதைகள் வழியேயும் இன்றும் நம் நாடகக்காரர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

(11.2.2013 அன்று சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரிஹாலில் நடைபெற்ற சகஸ்ரநாமம் நூற்றாண்டு விழாவில் வாசித்த கட்டுரை.)


[ நன்றி : http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15592&ncat=21

தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக