புதன், 9 நவம்பர், 2016

வல்லிக்கண்ணன் -1

சரித்திர நாவல் பற்றிச் சில சிந்தனைகள்
வல்லிக்கண்ணன்


நவம்பர் 9.  வல்லிக்கண்ணன் அவர்களின் நினைவு தினம். 

இதோ அவர் எழுதிய  ஒரு கட்டுரை! சரித்திர நாவல் ரசிகர்களுக்குச் சுவையாக இருக்கும்.
====

  சமீப நாட்களில், என் நண்பர் ஒருவர் தனது இளமைக் காலத்தில் தான் படித்திருந்த வடுவூரார், ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களை நினைவுகூர்ந்து ரசமாகக் கடிதங்கள் எழுதினார். 1930கள் 40களில் படித்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களின் நயங்களை இப்பவும் மறக்க முடியவில்லை என்று அவர் வியந்திருந்தார். இப்போது அவருக்கு வயது 76க்கு மேல் இருக்கலாம்.

இந்த நூற்றாண்டின் முப்பதுகள் நாற்பதுகளில், படிப்பதில் ஈடுபாடு கொண்ட வாசகர்கள் பலரும் கட்டாயமாக வடுவூரார், ஆரணி குப்புசாமி, ஜே.ஆர். ரங்கராஜூ, வை.மு. கோதைநாயகி நாவல்களைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள். எல்லாம் பெரிசு பெரிசாக - சில இரண்டு பாகங்கள் கொண்டதாக இருந்தன.

இருப்பினும், வடுவூராரின் திகம்பர சாமியார், கும்பகோணம் வக்கீல், தாசி துரைக் கண்ணம்மாள், திவான் லொடபடசிங் பகதூர் போன்ற நாவல்கள் பெரிதும் விரும்பிப் படிக்கப் பட்டன. வயது வித்தியாசம் இல்லாமல் வாசகர்கள் அவற்றை விழுந்து விழுந்து வாசித்து மகிழ்ந்தார்கள். நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் கூடத்தான்.

 விறுவிறுப்பான கதை சுவாரஸ்யமான சம்பவ விவரிப்புகள். அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வளர்க்கப்படும் கதைப்பின்னல். கிளுகிளுப்பூட்டும் காதல் நிகழ்ச்சிகள் அங்கங்கே ரசமாகச் சிதறிவைக்கப்படுகிற சிருங்கார (செக்ஸ் ) வர்ணிப்புகளும் விவரிப்புகளும் மற்றும் மர்மங்கள். திடுக்கிட வைக்கும் திகில் விஷயங்கள். இவ்விதமான உள்ளடக்கம் வாசகர்களை கிறுகிறுக்கச் செய்தன. –

இத்தகைய நாவல்களை விரும்பிப்படித்த பெரியவர்கள் கண்டிப்பாக ஒரு விதி செய்வது வழக்கம். சின்னவர்கள் (பள்ளியில் படிக்கிற பையன்கள்) இந்த நாவல்களை எல்லாம் படிக்கவே கூடாது என்று. ஆனாலும் பையன்கள் புத்தகங்களை மறைத்து வைத்துப் படித்து ரசித்து அவை பற்றிப் பேசி மகிழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள்.

 வடுவூரார், ஆரணி, ஜே. ஆர். ரங்கராஜூ முதலியவர்கள் எழுதியவை சமூக நாவல்களா, சரித்திர நாவல்களா, துப்பறியும் மர்ம நாவல்களா என்று யாரும் கவலைப்பட்டதில்லை. படிப்பதற்கு சுவையான - பொழுது போக்குவதற்கு ஏற்ற - விறுவிறுப்பு நிறைந்த கதைப்புத்தகங்கள் என்றுதான் அவை விரும்பிப் படிக்கப் பட்டன. அவற்றை ரொமான்டிக் நாவல்கள் என்று சொல்லலாம். மிகுகற்பனை கொண்ட கற்பனாலங்காரக் கதைகள். சகல விதமான சமாச்சாரங்களும் அவற்றில் சுவாரஸ்யமாகக் கலக்கப்பட்டிருந்தன.

அவை சொந்தச் சரக்குகளாக இருந்ததும் இல்லை. ஆங்கிலத்தில் கிடைத்த பல்வேறு மேல்நாட்டுக் கற்பனைகளையும் சொந்த அளப்புகளுடன், சுவையோடு கலந்து தந்தார்கள். அந்த நாட்களில் பிரபலமாகயிருந்த ஜி. டபிள்யு. எம். ரெயினால்ட்ஸ் நாவல்களின் வெற்றிகரமான தழுவல்களாக இருந்தன. மிஸ்டரீஸ் இன் தி கோர்ட் ஆஃப் லண்டன் என்பது காளிங்க ராயன் கோட்டை ரகசியங்கள் என்றும் பிரான்ஸ் ஸ்டேச்சுயூ ஆர் தி விர்ஜின் கிஸ் என்பது வெண்கலச்சிலை அல்லது கன்னியின் முத்தம் என்றும் தமிழில் வந்தன. அப்புறம் வடுவூரார் தேர்ந்துவிட்டார். இப்படி வெளிப்படையாகத் தழுவுவதில்லை. தமிழ்நாட்டு வாசகர்களின் டேஸ்டுக்குத் தக்கபடி கலப்பட சங்கதிகளைத் தயாரித்துக் கொடுப்பதில் மன்னரானார். கிளுகிளுப் பூட்டும் செக்ஸ் சமாச்சாரங்களைத் தாராளமாகச் சேர்க்கவும் தயங்கவில்லை.

வடுவூரார் சரித்திரநாவல் என்று எதுவும் எழுதவில்லை. காளிங்கராயன் கோட்டை ரகசியங்கள் என்பதை வேண்டுமானால் நாவல் அபிமானிகள் சரித்திர நாவல் என்று கருதியிருக்கலாம். ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களில் கற்கோட்டைகள் அபாயத்தீவுகள், கப்பற்படைகள், பாதாளச்சிறைகள் என்றெல்லாம் வரும் உக்கிரசேனர், வீரசிம்மன் போன்ற பெயர்கள் காணப்படும். அந்தக் காலத்தில் சரித்திர நாயகர்களுக்கு இப்படி எல்லாம் தான் பெயர் இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் எண்ணியதாகத் தெரிகிறது. சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றில் இவ்விதமான பெயர்கள் அதிகம் இடம் பெற்றன.

சரித்திரக்கதை என்றாலே ராஜாராணிக் கதைதான். ராஜாராணிகளின் வேலைத்தனங்கள் பற்றிக் கேட்பதிலும் படிப்ப திலும் ஜனங்களுக்கு எப்பவுமே தனிமோகம் உண்டு.

தமிழின் முதல் நாவல் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற பிரதாபமுதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நம் மக்களின் ரசனையைச் சரியாக அறிந்து நற்சான்று கூறியிருக்கிறார்.

ராஜா ராணிக் கதைகளைக் கேட்பதிலும் படித்தறிவதிலும் நம் நாட்டினருக்கு விசேஷமான ஈடுபாடு உண்டு. விசாலமான மாளிகைகளின் உப்பரிகைகளிலும், அழகான நந்தவனங்களிலும் ராஜாக்களும் ராணிகளும், இளவரசர்களும் இளவரசிகளும் நடப் பதையும் இருப்பதையும் படுத்து மகிழ்வதையும் அறிந்து கொள்வதில் ஜனங்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவது வழக்கம். அவர்களின் ரசனையைத் திருப்திப்படுத்தும் விதத்திலும் இந்த நாவலின் கதைப்போக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரீதியில் ( இது நேரடி மேற்கோள் இல்லை) வேத நாயகர் தனது நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நம் நாட்டு மக்களின் சுவையைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குத் தக்கபடி சுவை மிகுந்த நாவல்களை உருவாக்குவதில் மிகுந்த வெற்றிகண்டவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி,

கள்வனின் காதலி என்கிற ரொமான்டிக் நாவலையும் தியாகபூமி, மகுடபதி போன்ற சமூக தேசிய நாவல்களையும் தொடர்கதைகளாக எழுதிய பிறகு, கல்கி தன் கவனத்தைச் சரித்திரநாவல் மீது திருப்பினார்.

கல்கி தனது திறமையினால் தமிழ்நாட்டில் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பத்திரிகையின் சர்குலேஷனை வளர்ப்பதில் கருத்தாக இருந்தார். அதற்குத் தொடர்கதையை வெற்றிகரமான ஒரு சாதனம் ஆக்கினார். சாதாரண சமூக அல்லது அதீதக் கற்பனாலங்காரக் கதைகளைவிட சரித்திரப் போலிகளான தொடர்கதைகள் நன்கு பயன்படும் என்று அவர் உணர்ந்தார்.

சரித்திரநாவல் என்ற வடிவம் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கான சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்தது. கல்கி சரித்திர நாவலைப் பிரபலப்படுத்தவதற்கு முன்னரே தமிழில் சரித்திர நாவலும் சரித்திரக் கதைகளும் காலூன்றி மெது மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருந்தது. இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நாட்டு மக்களிடையே தேசபக்தி, வீர உணர்வு, எதிர்த்துப் போராடும் பண்பு முதலியவைகளை வளர்க்கவும் முயன்றார்கள். அதற்காக எழுத்தின் பல வடிவங்களையும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்கள். கதை, நாவல், நாடகம் முதலியன இந்த நோக்கத்துக்கு நன்கு உதவக்கூடும் என்று கருதினார்கள்.

சிறுகதைக்கு இலக்கிய வடிவம் கொடுத்தவர் என்று போற்றப்படுகிற வ.வே.சு. ஐயர் கதைகளின் மூலம் மக்களுக்கு வீர உணர்வைப் புகட்ட வேண்டும், அதற்காக வரலாற்றுப் புகழ் பெற்ற வீரர்களின் கதைகளை ரசமான முறையில் எடுத்தெழுத வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அவ்வகையில் அவர் சில கதைகளும் எழுதினார்.

 பிரஞ்சு நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகத் தன் உயிரை ஈந்த வீரன் அழேன் ழக்கே கதை வ.வே.சு.ஐயர் கதை களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று ஆகும். இந்திய வரலாற்றில் கீர்த்தி பெற்றுள்ள சந்திரகுப்தனை ஆதாரமாக்கியும் அவர் கதைகள் புனைந்தார். விடுதலைப்போராட்டம் விறுவிறுப்பு பெற்றிருந்த 1930களில் மொழி மறுமலர்ச்சியும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. அக் காலகட்டத்தில் இந்தியமொழிகள் பலவும் மறுமலர்ச்சி வேகம் பெற்று வளர்ச்சிப்பாதையில் சென்றன. தமிழிலும் மறுமலர்ச்சி போற்றத்தகுந்த விதத்தில் மணம் பரப்பலாயிற்று.

அந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்ச் சிறுகதை, இலக்கிய கனத்துடனும் பல்வேறு பரிமாணங்களுடனும் வளரத் தொடங்கியது. அப்போது சரித்திரக்கதைகளும் உரிய கவனிப்பைப் பெற்றிருந்தன.

வீரம், தன்மான உணர்வு, போராட்ட குணம், சுதந்திரப் போக்கு, தியாகம் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் சரித்திரக் கதைகள் பலரால் எழுதப்பட்டு, பத்திரிகைகளில் பிரசுரம் பெற்றன. எம்.எஸ். சுப்பிரமணியஐயர் எழுதிய இத்தகைய கதைகள் வாசகர் களால் அதிகம் ரசிக்கப்பட்டு வந்தன.

இத்தகைய சரித்திரக் கதைகளில், வரலாற்று அடிப்படை களைவிட உணர்ச்சி வேகமும் மிகுகற்பனையும் நடை அழகுமே மிகுதியாக இடம் பெற்றிருந்தன.

அவற்றைக் குறைகளாகக் கருதிய சிலர் சரித்திர உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு கதைகள் எழுதினார்கள். அவர்களில் தி.நா.சுப்பிரமணியன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். இவர் எழுதிய கதைகள் பின்னர் தோட்டியை மணந்த அரசுகுமாரிஎன்ற தொகுப்பாகவும், வேறு சில புத்தகங்களாவும் வெளிவந்தன. இவர் கட்டபொம்மு வரலாறு எழுதினார். நவயுகப் பிரசுரம் ஆக 1940களில் வெளிவந்த இந்த நூலில் வரலாற்று உண்மைகள் ஒரு வறண்ட தன்மையில் சொல்லப்பட்டிருந்தன. இதை, காயடித்த கட்டபொம்மு என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டார்.

மணிக்கொடி எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனும் சரித்திரச் சிறுகதைகள் எழுதினார். அழகிய முறையில் படைக்கப் பட்ட அவை காணாமலே காதல் என்ற தொகுதியாக பின்னர் பிரசுரம் பெற்றன. அந்நாட்களில் வீரம், போர்புரிதல், தியாகம், காதல் முதலிய வற்றைச் சித்திரித்த சரித்திரக்கதைகள் பெரும்பாலும் ராஜபுத்திர மன்னர்களையும் அரசிகளையும் பற்றியே அமைந்திருந்தன. சிவாஜி, புத்தர், விஜயநகர சாம்ராஜ்ய விஷயங்களும் அபூர்வமாகக் கதைப் பொருள்களாக ஆக்கப்பட்டது உண்டு.

அந்நாட்களில் வேறு இந்தியமொழிகளில் சரித்திர நாவல்கள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல நல்ல வெற்றியும் மிகுந்த கவனிப்பும் பெற்றதுமுண்டு. அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, புத்தகங்களாக வாசகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. தேவி செளது ராணி, துர்கேச நந்தினி பிருதிவி வல்லபன், ராஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் போன்ற நாவல் மொழிபெயர்ப்புகள் 1940களில் தமிழ் வாசகர்களின் பாராட்டுக் களைப் பெற்றிருந்தன.

ஆங்கிலம் படித்தவர்கள் சர் வால்டர் ஸ்காட் எழுதிய வரலாற்று நாவல்களையும், அலெக்சாண்டர் டுமாஸ் பிரஞ்சு மொழியில் எழுதி ஆங்கிலமொழி மூலம் உலகப் பிரசித்தி பெற்றுள்ள சரித்திர ரொமான்ஸ் படைப்புகளையும் விரும்பிப் படித்து மகிழ்ந்தார்கள்.

வால்டர்ஸ்காட் நாவல்களில் சரித்திர ஆதாரங்கள் அதிகம். அவர் எழுத்து நடை காம்பவுண்ட் சென்டன்ஸ்களையும் காம்ப்ளெக்ஸ் சென்டன்ஸ்களையும் மிகுதியாகக் கொண்ட சிக்கல் நிறைந்த நீளமான வாக்கியங்களும் நீண்ட பாராக்களும் கொண்டதாக இருக்கும். எனினும் சுவாரஸ்யமான கதைப்பின்னல்களும் ஈர்க்கும் சம்பவ அடுக்குகளும் வீரதீரப் போராட்டக் கட்டங்களும் வாசகருக்குத் தனி லயிப்பு ஏற்படுத்திவிடும். (தமிழில் சரித்திர நாவல்கள் எழுதத் தொடங்கிய சாண்டில்யன் இப்படிப்பட்ட ஒரு நடையைக் கையாண்டதை நினைவு கூரலாம்)

டுமாஸ் நாவல்கள் அதீத கற்பனாலங்காரத்தோடு, மர்மங்கள், சூழ்ச்சிகள், வீரக்கதாபாத்திரங்களின் சாமர்த்தியங்கள், தந்திரங்கள்  முதலியவற்றைக் கொண்ட ஜிலுஜிலு சிருஷ்டிகளாக இருக்கும். (கல்கி டுமாஸ் வழியைப் பின்பற்றினார் என்று கூறலாம்)

காலப்போக்கில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வலுப் பெற்று வந்தது. அது வடவர் எதிர்ப்பை வளர்த்தது. ராஜபுத்திர வீரத்தையும் மராட்டியவிரர் பெருமையையும் போற்றிப் புகழ்வதை விடுத்து, தமிழ்மன்னர்களின் - முக்கியமாக சோழப் பேரரசர்களின் - கீர்த்திகளை எடுத்துரைப்பதில் திராவிடத் தலைவர்கள் ஆர்வம்கொண்டார்கள். சோழ மன்னரின் வட நாட்டுப்படையெடுப்பும், இமயத்தில் தமிழ்க்கொடி பொறிக்கப் பட்டதும், திமிர்பிடித்த வடநாட்டு மன்னர்களான கனகவிசயர் தலைமீது கல் ஏற்றிக்கொண்டு வந்ததும் மேடைகளிலும் ஏடுகளிலும் முழக்கமிடப்பட்டன. தமிழ் மாமன்னரின் பொற்காலப் பெருமைகள் எடுத்துச் சொல்லப்பட்டன.

தமிழர்கள் தமிழ் மன்னர்களின் கீர்த்திகளை உணரலானார்கள்.

அந்நியர் ஆட்சியை எதிர்ப்பதற்கும், தமிழரின் தமிழ் உணர்வையும் தமிழர் மாண்பையும் வலியுறுத்துவதற்கும் சோழ சக்கர வர்த்திகளின் வரலாற்றுப்புகழையும் சரித்திர சாதனைகளையும் சாகசங்களையும் சுவையான நாவல்களாகப் புனைவது பொருத்தமாக இருக்கும், மக்களிடையே அவை நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எண்ணம் கல்கிக்கு ஏற்பட்டது. ஆகவே அவர் பார்த்திபன் கனவு படைத்தார். தொடர்ந்து சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய பெரிய பெரிய நாவல்களை எழுதினார்.

அவை வாசகர்களைக் கவர்ந்தன. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பத்திரிகையின் விற்பனையைப் பெருக்குவதற்கும் உதவின. சரித்திரம் என்பது மன்னர்கள் பற்றியும் அவர்கள் நடத்திய போர்களைப் பற்றியும் விவரிப்பது என்றே வெகுகாலம் வரை நம்பப்பட்டு வந்திருக்கிறது. அரண்மனை ரகசியங்களையும், மன்னர்கள் மற்றும் அரண்மனை சார்ந்த முக்கியஸ்தர்களின் போட்டி - பொறாமைகள், சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள், அந்தப்புர மகளிரின் காதல் அல்லது காமஈடுபாடுகளை வர்ணிப்பதும் வரலாற்றின் வேலையாகும் என்ற எண்ணமும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

இந்த அடிப்படையில்தான் சரித்திரக் கற்பனைகள் புனைவோரும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் - வருகிறார்கள். இவை மட்டுமே சரித்திரம் ஆகா. நாட்டுமக்களின் வாழ்க்கையையும், மன்னர்களின் போக்குகள் மற்றும் ஆட்சி முறைகளினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், அந்தந்த காலகட்டத்திய முக்கிய நிகழ்ச்சிகளையும், சமூக மாற்றங்களையும் பதிவு செய்வதும் சரித்திரத்தின் பணி ஆகும் என்ற கருத்து தோன்றி வலுப்பெறலாயிற்று.

மன்னர்கள் காலம் முடிந்துபோன பிறகு, நாட்டையும் மக்களையும் ஆளவந்தவர்களின் போக்குகளையும் தன்மைகளையும், அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளையும் பதிவு செய்யவேண்டியது சரித்திரத்தின் கடமை ஆயிற்று.

அவற்றை ஆதாரமாகக்கொண்டு, கற்பனையையும் கலந்து வரலாற்றுநாவல்கள் புனையும் முயற்சிகள் தோன்றி வளர்வதும் காலவகை ஆயிற்று.

இந்த ரீதியில் தமிழிலும் படைப்புகள் தோன்றியுள்ளன. வரலாற்று நிகழ்வுகளையும், அவற்றினால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்களையும், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விதங்களையும் நாவலாக எழுதும் முயற்சிகள் அவ்வப்போது மேற் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

இந்திய விடுதலைப்போராட்ட காலத்தையும், விடுதலைக்குப் பிந்திய காலகட்ட பாதிப்புகளையும் வைத்து அதிகமான நாவல்கள் - சமூகவரலாற்று நாவல்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் கவனம் வெகுகாலம்வரை இத்திக்கில் செலுத்தப்படவில்லை என்பது ஒரு குறைதான். ஆயினும், குறிப்பிடத்தகுந்த சில முயற்சிகள் இவ்வகையிலும் பிறந்துள்ளன என்று சொல்லலாம்.

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் அலை ஓசை நாவல் இவ்வகையில் எழுதப்பட்ட முதல் முயற்சி ஆகும். சுதந்திரப் போராட்ட காலம், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட இலக்கிய வாதிகளின் செயல்கள், அவர்களும் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்ட தன்மைகள், அவர்களின் உறவுகள், உணர்வுச் சிக்கல்கள் முதலியன இந்நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. ம.சீ. கல்யாணசுந்தரம் எழுதிய இருபது வருடங்கள். இதில் முதல் பகுதி விடுதலைப் போராட்ட கால அனுபவங்களை நன்கு விவரிக்கிறது. பிற்பகுதி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு டாக்டர் எங்கோ ஒரு தீவுக்குப் போய் வாழ்ந்து பெற்ற அனுபவங்களையும், அவர் தாய்நாட்டுக்குத் திரும்பிவந்ததும், தான் கற்ற புதிய சிகிச்சைமுறையைப் பிரபலப்படுத்துவதில் காட்டுகிற உற்சாகத்தையும் விவரிக்கிறது.

வல்லிக்கண்ணன் எழுதிய வீடும் வெளியும் சுதந்திரப் போராட்ட கால நிகழ்வுகளையும் உணர்ச்சி வேகத்தால் அவற்றில் ஈடுபட்ட மாணவர்களின் இயல்புகள், வீட்டுச் சூழ்நிலைகள், இவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்ட விதங்களையும் உணர்ச்சிகரமாகச் சித்திரித்துள்ளது. அப்படி உணர்ச்சி வேகத்தோடு  போராட்டத்தில் குதித்தவர்களின் பிற்கால நிலையையும் இந்த நாவல் விவரித்துள்ளது.

ந. சிதம்பரசுப்ரமணியன் எழுதிய மண்ணில் தெரியுது வானம்விடுதலைப்போராட்ட காலத்திய நிகழ்ச்சிகளைக் கூறினாலும், அது சமூக வரலாற்று நாவலாக எழுதப்படவில்லை என்றே சொல்லவேண்டும். அரசு உத்தியோகம் பார்க்கிற ஒரு தந்தை தன் மகனைப்பற்றிக் கண்ட கனவுகளையும், மகன் அவற்றுக்கு மாறாகத் தேசீய உணர்வோடு விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுவிடுவதையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்த நாவல் வர்ணித்துள்ளது.

நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள்விடுதலைப் போராட்ட காலச் சூழ்நிலையையும், நிகழ்வுகளையும் அடிப்படையாக்கி ஒரு நாவல் எழுதப்பட வேண்டும் என்ற ஆர்வத்தின் மலர்ச்சியாக இருந்தபோதிலும் ஒரு காந்தியவாதியையும் அவர்மீது காதல் கொள்ளும் ஒரு தாசி குலப்பெண்ணின் உணர்வுகளையும் ரசமாக விவரிக்கும், ரொமான்டிக் நாவலாகவே அமைந்துள்ளது.

சமீபகாலத்தில் வெளிவந்துள்ள சமூக வரலாற்று நாவல்கள் சில பாராட்டப்பட வேண்டிய படைப்புகள் ஆகும். –

பொன்னிலன் எழுதியுள்ள புதிய தரிசனங்கள்இவற்றில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது. இது அரசியல் நாவலின் தன்மையையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அமுலுக்கு வந்த அவசர காலச்சட்டம், அதனால் அரசியல் கட்சிகளிடத்தும், மக்கள் மத்தியிலும் ஏற்பட்ட பாதிப்புகள் முதலியன இந்த நாவலில் விரிவாகவும் உணர்ச்சியோடும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

அடுத்தது, செ. யோகநாதன் மிக விரிவாக எழுதத் திட்டமிட்டுள்ள அசுரவித்து' எனும் பெரிய நாவலின் முதல் பகுதியாக வெளியிட்டிருக்கும், ”நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே என்பது. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும், கிராமப்புற மக்களின் உணர்வுகளையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் கலைத் தன்மையுடன் விவரிக்கிறது. இது.


கவிஞர் தமிழ்நாடன் எழுதியுள்ள சாரா நாவல் வரலாற்றுப் பார்வையும், சமூக நோக்கும், உலகம் தழுவிய விசாலமான சிந்தனையும் கொண்ட புதியதோர் முயற்சியாகும். பண்பாட்டுப் பெருமையும் இனஉணர்வும் பேசுகிற மக்களின் வெறித்தன இயல்புகளையும், அவை விளைவிக்கிற பாதிப்புகளையும் எடுத்துச் சொல்கிற இந்த நாவல், ஆரம்பத்தில் சிந்தனைக்கனமும், வளர வளர காதல் சுவாரஸ்யமும், பிற்பகுதியில் மர்மநாவலின் விறு விறுப்பும் பெற்றுள்ள படைப்பாக இருக்கிறது. தமிழ் நாவலில் புதிய களம், புதிய கரு, புதிய போக்கும் நோக்கும் சேர்த்திருப்பதற்காக, கவிஞர் தமிழ் நாடனை பாராட்ட வேண்டும்.

[ நன்றி: ”வல்லிக்கண்ணன் கட்டுரைகள் “ நூல், அர்ச்சுனா பதிப்பகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
வல்லிக்கண்ணன்: விக்கிப்பீடியாக் கட்டுரை

வல்லிக்கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக