புதன், 23 நவம்பர், 2016

சுரதா - 2

சொன்னார்கள் 
சுரதா 


நவம்பர் 23. சுரதா அவர்களின் பிறந்த தினம்.

====  ”சொன்னார்கள்” நூலின் முன்னுரை 
சுரதா

சேக்கிழார் எத்தனையோ பொதுக்கூட்டங்களில் பேசியிருத்தல் கூடும். அக்காலத்து மக்களுக்கு அவர் எத்தனையோ அறிவுரைகள் கூறியிருத்தல் கூடும். அவ்வாறே, கவிச்சக்கரவர்த்தி கம்பனும், ஆசுகவி காளமேகமும், எல்லப்ப நாவலரும், இன்னும் பலரும் பேசியிருத்தல் கூடும். எனினும், அவர்களுடைய கவிதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றனவே யன்றி அவர் களுடைய சொற்பொழிவுகள்    நமக்குக் கிடைக்கவில்லை.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரின் சமுதாயச் சீர்திருத்தச் சொற்பொழிவுகளும் நமக்குக் கிடைக்கவில்லை.
நம் நாட்டைப் பொறுத்தவரையில் 1902-ல் வெளிவந்த நாகப்பட்டினம் சோ. வீரப்ப செட்டியார் அவர்களின் சொற்பொழிவு நூலே நமக்குக் கிடைத்திருக்கும் முதல்நூல் என்று நான் கருதுகிறேன். சென்ற நூற்றுண்டில் வாழ்ந்த பேச்சாளர்களில் நூற்றுக்குத் தொண்ணுறு பேர் ஆண்டவனைப் பற்றியும், அடிக்கடி அவதாரங்களைப் பற்றியுமே பேசி வந்தனர். இந்த நூற்றாண்டில் வாழும் பேச்சாளர்கள், அரசியலைப் பற்றியும், விஞ்ஞானத்தின் அவசியத்தைப் பற்றியும் அன்றாடம் பேசிவருகின்றனர்.

அன்றைய பேச்சாளர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும், இன்றைய பேச்சாளர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் நாட்டுக்குப் பயன்படும் நல்ல பல கருத்துக்களைத் தொகுத்து என் மகன் கல்லாடனிடம் கொடுத்தேன். அவன், அதனை இப்போது ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறான்.

சொன்னார்கள் என்னும் இந்த நாக்குநூல்" கற்றவர்களுக்கும் பயன்படும். மற்வர்களுக்கும் பயன்படும். மற்றவர்களுக்குப் பயன்படுவதைக் காட்டினும் மேடைப் பேச்சாளர்களுக்கு இது மிகவும் பயன்படும் என்றே கருதுகிறேன்.

சுரதா
====
நூலின் முதல் சில துளிகள் ;

சொன்னார்கள்

நான் இன்று உங்களுக்கு வழங்கும் இந்தக் கஸ்தூரியின் மணத்தைப்போல், என் மகனுடைய புகழ் இப்புவியெங்கும் பரவட்டும்.
             - ஹூமாயூன் (15-10-1542) (அக்பரின் தந்தை)

நாம் சமீபத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காரியங்களைப் பற்றி உலகத்தார் என்ன நினைப்பார்கள்? சற்று கவனியுங்கள். சந்திர நாகூரிலுள்ள கவர்னராலும், அவருடைய சபையோராலும் கேட்டுக்கொண்டபடி அவர்களுடைய பிரதிநிதிகள் மூலமாய் யுத்தமின்றி சும்மா யிருப்பதாய் ஒப்புக்கொண்ட மாதிரி உடன்படிக்கைகள் இருதரத்தார்க்கும் சம்மதங்களாய் நிற்கின்றன அல்லவா? நவாப்பு என்ன நினைப்பான்? வாக்குறுதிகள் செய்த பிறகு நாம் தவறினால் உலகத்தார் நம்மை அற்பர் என்றும், நியாயம் இல்லாதவர்கள் என்றும் தூற்றுவார்கள், ஆதலால், வாட்ஸனின் கருத்து எவ்வாறு இருப்பினும் அதைத் தள்ளிவிட்டு நாம் தீர்மானம் செய்தபடி உண்மையைப் பின்பற்றுவோம்.  
            - ராபர்ட் கிளைவ் (4-3-1757)

என்னுடைய வாரிசுகளைத் தருவித்து என் ஜமீனைக் கொடுக்க வேண்டும். என்னுடைய ஜமீன் சொத்துக்களே யாவும் என் சந்ததிகளுக்குக் கொடுத்து விடுவதாகவும், நான் அமைத்திருக்கிற தரும நிலையங்களுக்கு நான் ஏற்படுத்தியிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக நடத்தி வருவதாகவும். நீங்கள் இப்பொழுது எனக்கு உறுதிமொழி தரவேண்டும். அதற்கு அக்காட்சியாசுக் கவர்ன்மெண்டு கத்தியைப் போட்டுத் தாண்டி நீங்கள் சத்தியம் செய்து தரவேண்டும்.இது சத்தியம்.
      -மருதுபாண்டியர் (10-10-1801) (தூக்கிலிடப்படுவதற்கு முன் கொடுத்த மரணவாக்குமூலம்)

கவி வர்ணனை மூளையினின்று மறைந்து நீங்குவது போல, இராஜாராம் மோகன்ராய் நம் மத்தியிலிருந்து மறைந்து விட்டார். என்றாலும் அவரது சகவாசத்தால் உண்டான நற்பலன்கள் இந்த நாட்டிலும், அவரது தாய் நாடாகிய இந்தியாவிலும் என்றென்றும் அழியாமல் நிலை பெற்றிருக்கும். அம்மகான் காலஞ்சென்று விட்டாரென்றாலும், அவரது நல்வாழ்வும், நற்செயல்களும் நம்மை எப்போதும் அவரை நன்றியுடன் பாராட்டி, அவர் வழியில் நடக்கச் செய்யும் என்பதற்கு மில்லை.
        -பாக்ஸ் பாதிரியார் (27-9-1833) (இராஜாராம் மோகன்ராய் மறைந்த நாளன்று பிரிஸ்டல் நகரத்தில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில்)

நண்பர்களே! எனக்கு இவ்வுலக வாழ்க்கை முடிந்தது; விண்ணுலக வாழ்க்கை கிட்டிற்று நம் குருமார்களான நானக் முதலியோருடன் நானும் வாழும் பாக்கியத்தை யடையப் போகிறேன். என் மகன் காரக் சிங்கனே எனக்குப் பின் அரசாள வேண்டியவன். ஆதலின், நீங்கள் எனக்கு எப்படிக் கீழ்ப்படிந்து நாட்டை மேன்மையடையச் செய் தீர்களோ, அவ்வாறே இவனிடமும் நடந்து கொள்ளுங்கள்.
        -பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் (27-6-1839) 

தொடர்புள்ள பதிவுகள்: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக