செவ்வாய், 8 நவம்பர், 2016

சோ.சிவபாதசுந்தரம் -1

பேச்சும் எழுத்துப் பிரதியும்
சோ.சிவபாதசுந்தரம் நவம்பர் 8. சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் நினைவு தினம்.

ஈழத்தின் முன்னோடி எழுத்தாளரும், ஒலிபரப்பாளரும் ஆன சிவபாதசுந்தரத்தின் “ஒலிபரப்புக் கலை” என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை:
=====

ரேடியோப் பேச்சுக்கு எழுத்துப் பிரதி ஓர் ஆதாரமாக, பற்றுக்கோடாக மாத்திரம் இருத்தல் வேண்டும். படிப்பதற்கு எழுதும் எழுத்து வேறு, பேசுவதற்கு எழுதும் எழுத்து வேறு, ரேடியோப் பேச்சுக்கு எழுதப்படும் எழுத்துப் பிரதி படிப்பதற்காக அல்ல, பேசுவதற்காக என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். எந்த விதமான எழுத்தை நம் கை எழுதினாலும் அதனை இயக்கிய மனம் ஒலியை அடிப்படையாகக் கொண்டுதான் சொற்களைச் சிருஷ்டிக்கிறது. பேச்சாகிய ஒலியின் சின்னமே வரி வடிவான எழுத்து. சிந்தனையில் உருவான கருத்தை மீண்டும் உருவப்படுத்துவதற்கு இந்த வரி வடிவம் ஆதாரமாயிருக்கிறது. மௌன வாசிப்பிலேயும் (ஒலி பிறக்காத வாசிப்பில்) மனத்திலே அந்த ஒலி சகல விதமான அழுத்தம். குழைவு, நெளிவு, வலித்தல், மெலித்தல் முதலிய வேறுபாடுகளுடன் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆகவே, ஒலிதான் மூலம். எழுத்து அல்லதுவரி வடிவு அதற்கு ஓர் உபகரணம்.

ரேடியோப் பேச்சுக்கென்று எழுதும் எழுத்துப் பிரதியின் கட்டுக்கோப்பைப் பற்றி எத்தனையோ வகையாகச் சொல்லலாம். அது அவரவர் எழுத்துத் திறமையையும் விவேகத்தையும் பொறுத்தது. அநுபவம் பெற்றவர்கள் பின்வரும் முக்கிய விதிகளைக் கவனிக்க வேண்டும் என்பார்கள்.

முதலாவதாக. கட்டுரையின் ஆரம்பம் கவர்ச்சிகரமாயிருத்தல் வேண்டும். எப்பொழுதும் நேயர்கள் கவனத்தைப் பெற முயல வேண்டுமாகையால் ஆரம்ப வசனத்தை ஒரு தனி முறையில், புதிய கோணத்தில் அமைத்தல் வேண்டும். சிலர் ஒரு மேற்கோள் அல்லது ஒரு பழமொழியுடன் ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் நேயர்கள் எதிர்பாராத ஒரு கருத்தில் ஆரம்பித்து எடுத்துக் கொண்ட பொருளில் பொருத்தமாக வந்து சேருவார்கள். ஆரம்பத்திலேயே நேயர்களை நம் வசப்படுத்திக் கொண்டால் தான் நாம் சொல்வதை அவர்கள்விரும்பிக் கேட்பார்கள் அவர்கள் கவனம் ஆரம்பத்தில் கிடைக்கவில்லையானால் பேச்சிலே பயனில்லை. இன்னொரு வகையில், நாம் பேசப் போகும் சமயத்தில் கேட்க இருக்கும் நேயர்கள் மனத்திலே என்ன கருத்துக் காத்திருக்கிறது. அல்லது சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டு, அந்தக் கருத்தைத் தொட்டு ஆரம்பிப்பதும் ஒரு வழி. அதையே மிதி கல்லாக வைத்து வசனத்தை ஆரம்பித்து, பின் படிப் படியாக நாம் சொல்லவிருக்கும் விஷயத்தை வளர்க்கலாம். சொந்த அநுபவத்திலே ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பிப்பார்கள் சிலர். வேறு சிலர் அன்று காலைப் பத்திரிகையில் வெளிவந்த முக்கியமான செய்தியை ஞாபகப்படுத்திக்கொண்டு தமது கதையை வளர்ப்பார்கள். இப்படி எத்தனையோ தந்திரங்களை ஆளலாம். எப்படி ஆரம்பித்தாலும் நேயர்கள் கவனத்தைக் கௌவிப் பிடிக்கும் தந்திரமாயிருத்தல் வேண்டும்.

இரண்டவதாக, எடுத்துக்கொண்ட விஷயத்தைத் தாமதமில்லாமலே அறிமுகப்படுத்தி விட வேண்டும். முன்னுரையிலே மாத்திரம் அதிக நேரம் தாமதித்து, பிறகு எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்லப் போவது ரேடியோப் பேச்சில் அழகு தராது. நேயர்களுக்கு விஷயத்தை அறிமுகப்படுத்திய பின்தான் அதற்குரிய காரணங்கள், கருத்துக்கள், அநுபவங்கள் முதலியவற்றை வளர்த்துக் கொண்டுபோய் முடிக்க வேண்டும். ரேடியோப் பேச்செல்லாம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் அடங்க வேண்டியவை. சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிஷங்களே பொருத்தமான அளவு. சில சமயங்களில் இருபது நிமிஷங்களுக்கும் செல்லலாம். அதற்கு அதிகமானால் கேட்போருக்கு அலுப்புத் தட்டும். எப்படி இருந்தாலும் நிலையத்தவர் குறிப்பிடும் கால அளவுக்கு ஒரு சில விநாடிகள் தானும் கூடாமலும் குறையாமலும் பேச்சு நிகழ வேண்டுமாகையால், முன்கூட்டியே நமது பேச்சு வளரும் தன்மை எப்படி இருக்க வேண்டுமென்று குறிப்புக்கள் எழுதி வைத்துக் கொள்ளுதல் நல்லது. எல்லாக் கருத்தையும் சேகரித்துச் சிந்தனை செல்லும் ஒழுங்கிலே அமைத்துக்கொண்டு பேச்சை எழுதவேண்டும்.

மூன்றாவது, பேச்சுப் போய்க்கொண்டே இருக்கும்போது எடுத்துக்கொண்ட விஷயத்தின் மூலப்பொருளை அடிக்கடி நேயர்களுக்கு எடுத்து ஞாபகப்படுத்திச் செல்ல வேண்டும். வார்த்தைகள் வளர்ந்துவரும் போது மூலப் பொருளை விட்டு அங்கும் இங்கும் விலக நேரிடுமாகையால் நேயர்கள் கவனத்தை அடிக்கடி சரியான வழியில் கவர்ந்து செல்ல வேண்டும். உப கருத்துக்களை அமைக்கும்போதெல்லாம் மூலக் கருத்தும் பின்தொடர்ந்து வருதல் பேச்சிலே இன்றியமையாதது.

நான்காவது, முடிவுரை, ஆரம்பத்தில் எப்படி ஒரு புதிய கோணத்திலிருந்து தொடங்கி நேயர்கள் கவனத்தைத் தட்டி எழுப்பினோமோ, அதேபோல முடிவிலே நேயர்கள் கவனம் சலிக்காமல் இருக்கவும் பேச்சின் சுவை குன்றாமல் இருக்கவும் தக்கதாக இருக்கவேண்டும். பேச்சு முழுவதிலும் கையாண்ட கருத்துக்கள் அத்தனைக்குமுரிய தொகுப்பாக இரண்டொரு வசனங்களை அமைத்து முடிப்பது நல்லது. நேயர்களை வசீகரித்து, பேச்சாளரையும் பேச்சையும் அவர்கள் மறக்காமலிருக்க தக்கதாக முடித்தல் அவசியம். நேயர்களுக்கு முரண்பாடான கருத்து, அபிப்பிராய பேதம், விளக்கமில்லாத வார்த்தைகள் ஆகியவை பேச்சு முடிவில் நுழையாமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உருவமும் உள்ளுறையும்

ரேடியோப் பேச்குக்கு எழுத்துப் பிரதியிலுள்ள வசனங்களின் உள்ளுறையும் வடிவமும் முக்கியமானவை. அச்சுக்கு எழுதப்படும் பிரதியிலே இலக்கண விதிகளும் ஒழுங்கும் அவசியம். ஆனால், ரேடியோப் பேச்சில் இலக்கணம் ஒரு கண்டிப்பான அளவு கோலாக இருக்கவேண்டியதில்லை. கருத்து ஒழுங்கு இருக்கிறதா என்பதும், பொருள் விளங்கத் தக்கதாக வசனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதுமே முக்கியம். மனத்திலே பிறக்கும் கருத்துக்கள் வசனங்களாக, ஒன்றன் பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர்போல் ஆற்றொழுக்கில் வர வேண்டும். இடையிலே எவ்வித தடையும் இருத்தலாகாது, முக்கியமான கருத்துக்களை முதலில் அமைத்துக்கொண்டு உபகருத்துக்களை அவற்றுடன் கலக்காமல் வேறொரு சந்தர்ப்பத்துக்கு வைத்துக்கொள்ளுதல் வேண்டும். நேயர்களுக்கு நாம் என்ன பேசப் போகிறோம். எந்தப் பாதையில் அழைத்துச் செல்கிறோம். பேச்சின் லட்சியம் என்ன என்ற விவரங்கள் நமது பேச்சின் போக்கிலிருந்தே சட்டெனப் புலனாகவேண்டும். அப்பொழுதுதான் நேயர்கள் மனம் நம் கருத்துக்களைச் சுலபமாகக் கிரகிக்க முடியும். இடையிலே ஏதாவது சந்தேகமோ இடர்பாடோ ஏற்படுமாயின் கேட்டுக்கொண்டிருப்பவர் மனம் அந்த இடத்தில் தாமதித்து, சந்தேகத்தையோ இடர்பாட்டையோ தெளிவாக்கிக் கொள்ள எத்தனிக்கும். அதற்காக நமது பேச்சும் சிறிதுஅவகாசம் அளிக்கப்போவதில்லை. எழுத்திலே உள்ள கட்டுரையானால். மயக்கம் ஏற்பட்ட சமயத்தில் கண்களை மறுபடியும் அந்த இடத்தில் செலுத்தி, சரியான பொருளைக் கிரகித்த பின்னர் மீண்டும் தொடர்ந்து வாசிக்க இடமளிக்கும். ஆனால், பேச்சு நடந்து கொண்டே போகுமாகையால், கேட்டுக் கொண்டிருக்கும் கவனம் எங்காவது தாமதித்தால். பின்னால் தொடர்ந்துவரும் எத்தனையோ கருத்துக்கள் தவறிவிடும். ஆகையால். பேசும் வசனங்களெல்லாம் ஒன்றையொன்று தொடரக் கூடியனவாக, சந்தேகத்துக்கு இடமளிக்காமல். எளிதாயும் மயக்கமில்லாமலும் அமையவேண்டும். உதாரணமாக, பின்வரும் வசனத்தைப் பார்ப்போம்:

“பிரபஞ்சத்தின் அமைப்பைப்பற்றி ஆராயும்போது அந்தப் பெரியார் மேலும் சொல்லுகிறார், எத்தனையோ அரிய உண்மைகள் நமக்குப் புலப்படும் என்று”

இந்த வசனத்திலே, ‘பிரபஞ்சத்தின் அமைப்பைப்பற்றி’ என்று பேசத் தொடங்க, கேட்பவர் மனம் ‘பிரபஞ்சம்’ ‘அமைப்பு’ ஆகிய பொருள்களில் ஈடுபடுகிறது. ‘ஆராயும் போது’ என்ற சொல்லுக்கு வந்தவுடன் அதற்கு அடுத்துத் தெரிந்துகொள்ள வேண்டியபொருள் ‘ஆராய்ச்சி’யின் பயனாக இருந்தால்தான் கேட்பவர் இலகுவாகப் பின்பற்ற முடியும். அந்த இடத்தில், ‘ஆராயும்போது என்ன நடக்கிறது?’ என்ற கேள்வியின் விடையையே நமது மனம் எதிர்பார்க்கிறது. மனம் செல்லும் பாதை அது. இப்பாதையைத் தடுத்து, ‘அந்தப் பெரியார்’ என்று சம்பந்தமில்லாத வேறொரு புதிய பொருளைக் கொண்டுவந்து நிறுத்தியவுடன் ஒரு பெரிய இடைஞ்சல் ஏற்படுகிறது. சென்றுகொண்டிருந்த பாதையைத் தவறவிட்டுச் சிந்தனையானது ஒரு ‘பெரியாரை’ப்பற்றிச் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆகையால், அதே வசனத்தைச் சிந்தனை ஒழுங்கில் அமைத்துப் பார்ப்போம்:

“பிரபஞ்சத்தின் அமைப்பைப்பற்றி ஆராயும்போது, எத்தனையோ அரிய உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன என்று, அந்தப் பெரியார் மேலும் சொல்லுகிறார்”

இங்கே, ‘ஆராயும்போது’ என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக, ‘எத்தனையோ அரிய உண்மைகள்’ என்ற பலனைச் சொன்னவுடன் கேட்போர் சிந்தனையின் பாதை தவறாமல் செல்லுகிறது ஆகையால், வசனங்களை அமைக்கும்போது பொருள்தொடர்ச்சியாக வார்த்தைகள் அமைகின்றனவா என்றுபார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

கம்பராமாயணத்தில் ஓர் அழகான பாட்டு இருக்கிறது. அதை இலக்கிய விமரிசனங்கள் அடிக்கடி எடுத்து ஆளுவதை நாம் கேட்டிருக்கிறோம். இலங்காபுரியில் அசோக வனத்திலே சீதை சிறைப்பட்டிருந்ததை நேரில் கண்டு அவளுடன் பேசிவிட்டு அனுமான் திரும்பி வந்ததும் இராமனிடம் அந்தச் செய்தியைச் சொல்லிய முறையைக் கம்பன் சொல்லடுக்கில் காண்கிறோம்.

கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர்நா யகஇனித் துறத்தி ஐயமும்
பண்டுள துயருமென் றனுமன் பன்னுவான்

சீதையைப் பற்றியே முழுச் சிந்தனையுடன் இருக்கிறான் இராமன். அவன் உயிருடன் இருக்கிறாளா? அனுமான் அவளைக் கண்டானா, அல்லது காணவில்லையா? அவன் சென்ற விஷயம் காயா, பழமா? இவ்வாறெல்லாம் ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பவனுக்கு எத்தகைய வார்த்தை சொன்னால் சந்தேக நிவர்த்தி ஏற்படும் என்று கம்பரின் அநுபவப்பட்ட கவியுள்ளம் ஆராய்ந்து தேடிப் பார்க்கிறது. உடனே கண்டனென் என்ற சொல்லை எடுத்துக் கொண்டு அனுமானின் செய்தியைக் கூறி முடிக்கிறார். ‘கண்டெனென்’ என்றால் கண்டுவிட்டேன் என்பது பொருள். அந்த முதற் சொல்லிலேயே சீதை உயிருடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கையும், அனுமான் கண்டான் என்ற ஆறுதலும் இராமனுக்குக் கிடைத்து விட்டன. அதன் பின்னர், ‘கற்பினுக்கு அணியை’ என்று சொன்னபோது சீதை புனிதமாகவே இருக்கிறாள் என உறுதி கூறப்பட்டது என்று விமரிசனங்கள் காண்பிப்பார்கள். இந்த முக்கியமான தகவலைச் சொன்ன பின்னரே மற்றைய விவரங்கள் தொடருகின்றன. இதை விட்டு, ‘நான் இலங்காபுரிக்குச் சென்றேன்! அங்கே அசோக வனம் இருக்கிறது’ என்று ஆரம்பித்துப் பேசினால் இராமனின் மனம் எத்தனை எத்தனை எண்ணங்களையெல்லாம் கற்பனை செய்யத் தொடங்கும்? எத்தனை சந்தேகங்கள் உதயமாகும்?

இதிலே அனுமான் பேச்சாளன். இராமன் கேட்பவன். இந்தப் பேச்சுக்கு முக்கிய பொருள் சீதையைக் கண்ட, அல்லது காணாத, விஷயந்தான். அந்த முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிட்டே வேறு விஷயங்களைச் சொல்ல வேண்டும். பேச்சாளனாகிய அனுமான், ‘கண்டேன் சீதையை’ என்பதை மாற்றி, ‘சீதையைக் கண்டேன்’ என்றுகூடச் சொல்லவில்லை சீதை என்ற வார்த்தையில் ஆரம்பித்திருந்தால், சீதையைக் கண்டானா அல்லது காணவில்லையா என்று ஒரு கணம் இராமனின் மனம் துடிக்கும். அடுத்த வார்த்தை ‘காணவில்லை’ என்று தொடருமோ எனத் திகில்கொள்ளும். ஆகவே முக்கிய விஷயமான காட்சியை, கண்ட உறுதியை, எடுத்துக்கொண்டு, “கண்டனென் கற்பினுக் கணியை” என்று இராமனின் மனத்தை ஒரு கணத்திலேயே நிம்மதியடையச் செய்கிறான் அனுமான். அது அனுமானின் விவேகத்தைக் காட்டக் கம்பர் ஆண்ட ஒப்பற்ற சொற்சித்திரம்.

இந்த இலக்கியக் காட்சியில் பேச்சுத் திறமைக்குரிய ஒரு சிறந்த இலக்கணம் தோற்றுகிறது. கேட்போர் மனத்திலே சந்தேகமோ இடர்ப்பாட்டோ இல்லாமல் இலகுவில் கிரகிக்கவும், சொல்லும் பொருளை உடனுக்குடன் புரிந்து கொள்ளவும் ஏதுவான சொற்களில் அமைந்து, கருத்துத் தொடர்ச்சியுடன் எழுத்துப் பிரிதி இருக்க வேண்டுமென்பது நமக்குத் தெளிவாகிறது.

ரேடியோப் பேச்சின் கட்டுக்கோப்புக்கு நான்கு விதிகளை மேலே சொன்னோம். சிறந்த பேச்சுக்கு இந்தவிதிகள் இன்றியமையாதவை. 1938-ம் ஆண்டிலே அகில இந்திய ரேடியோ ஸ்தாபனத்தின் சென்னை நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் போது தமிழறிஞராகிய ராஜாஜி – சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியார் – மிகவும் பொருத்தமாக ‘வானொலி’ என்ற தலைப்பில் பேசினார். அந்தப் பேச்சு ‘ராஜாஜி கட்டுரைகள்’ என்ற நூலில் வெளிவந்துள்ளது. சிறந்த ரேடியோப் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் வேண்டுமானால் ராஜாஜியின் ”வானொலி”யைத்தான் எடுத்துக் காட்ட வேண்டும். நாம் மேலே சொன்ன விதிகளை இந்தப் பேச்சுக்கு அமைத்துப் பார்ப்போம்.

ஆரம்பத்தில் அழகான ஒருமுன்னுரை கொடுக்கிறார் அவர்: ‘வெகு தூரத்திலிருந்து பேசுகிறேன். என்னவானாலும் யந்திரம் யந்திரந்தான். ஆகையால் குரலிலிருந்து பேசுகிறவன் யார் என்று சொல்லுவது உங்களுக்குக் கஷ்டம். நான்தான் ராஜாஜி. சென்னை வானொலி மண்டபத்திலிருந்து பேசுகிறேன்’

நேயர்களின் கவனத்தைப் பற்றிப் பிடிக்க இதைவிட வேறு சிறந்த உத்தியைத் தேட முடியாது. ‘வெகு தூரத்திலிருந்து பேசுகிறேன்........... நான் தான் ராஜாஜி’ என்று தம் உருவத்தைக் கொண்டுவந்து எடுத்த எடுப்பிலேயே நேயர் முன்னிலையில் நிறுத்திவிடுகிறார். அந்த உருவத்தைக் கண்ட பின் எவர்தாம் விலகிப் போகமுடியும்?

இதற்குப் பிறகு நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்யும் கடமையில் இறங்கி, நேயர்களைக் காத்திருக்க விடாமல், ஆசி கூறிவிடுகிறார். அதிலும் ஒரு புதுமுறை:

“நான் பழைய தினுசு மனிதன். வைதிக மனப்பான்மை. புது நாகரிகங்கள் அவ்வளவாகப் பிடிக்காது. அநாகரிகங்களுக்குள் பழைய அநாகரிகங்களே தேவலை என்று எண்ணுகிறவன். ஜனங்களுக்குப் பேசும் படங்களாலும் வானொலிப் பேச்சாலும் உபதேசங்கள் அவ்வளவாக ஏறாது என்பது என் எண்ணம். ஆயினும், எதுவும் ஓரளவு பயன்படும் என்பது ஒரு புறமிருந்து கொண்டிருக்கிறது. ஆகையால், இந்த ரேடியோவுக்கு என்னுடைய பூரண ஆசி தருகிறேன்”

இந்த விதமாகத் தாம் நிலையத்துக்கு வந்த கடமையை நிறைவேற்றிவிட்டு, வானொலியைப் பற்றிப் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஞ்ஞான நுட்பங்களை எல்லாம், குழந்தைக்குக் கதை சொல்லும் தாய்போல, எளிய முறையில் தெளிவாகச் சொல்கிறார். அந்த விபரம் முடிந்ததும், தமது முடிவுரையைக் கச்சிதமாகத் தருகிறார்.

“இந்த ரேடியோ அமைப்பை நாம் நல்ல வழியில் உபயோகித்துக் கொண்டால் பெரும் பயன்கள் அடையலாம். கிராமத்தில் வசிக்கும் பணக்காரர்கள் ஒலி பிடிக்கும் பெட்டி வாங்கி வைத்துக் கொள்ளலாம். பாட்டையும் பேச்சையும் வேடிக்கையையும் ஊரார் எல்லாரும் அநுபவிக்குமாறு நல்ல தருமம் செய்யலாம். இம் மாதிரி ஒவ்வோர் ஊரிலும் கள்ளுக்கடைக்குப் பதில் சங்கீதமும், புராணமும், பஜனையும், ஆகாசவாணி மூலம் நடத்தலாம். பெரிய கனவு காண்கிறேன்”

சங்கீதக் கச்சேரிகளில் பாட்டு நன்றாக இல்லாவிட்டால் சபையிலுள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ ஆரம்பிப்பார்கள். பல்லவி பாடும்போதே சபை மெலிந்து விடும். ஆனால், பிரமாதமான பாட்டாயிருந்தாலும் மங்களம் பாடும் சமயத்தில் மெய்ம் மறந்திருக்கும் சபையைக் காண்பதரிது. ராஜாஜி பேச்சில் மேலே காட்டிய ‘மங்களத்’தைக் கேட்டுவிட்டு, வானொலிப் பெட்டியின் பக்கத்திலிருந்து நேயர்கள் எழுந்திருக்கச் சிறிது தாமதமாகும் என்று தான் சொல்லவேண்டும். சிறந்த பேச்சுக்கு இலக்கணம் எல்லாம் அவருடைய இந்தப் பேச்சில் தெளிவாகக் காணப்படுகின்றன.

வசன அமைப்பு

ரேடியோப் பேச்சிலே வசனங்களெல்லாம் மிகச் சிறியனவாக இருத்தல் வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அதாவது, பொருள் விளக்கத்துக்கும் கருத்தைக் கிரகித்துக் கொள்வதற்கும் சிறிய வசனங்கள் உதவியாயிருக்கும் என்பதுதான் காரணம். ஆனால், இதை ஒரு கண்டிப்பான நிபந்தனையாக எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சில சமயங்களில் இது பேச்சின் அழகைக் கெடுத்துவிடவும் கூடும். பொருள் தொடர்ச்சிதான் முக்கியமல்லாமல் வசனத்தின் நீளம் முக்கியம் அல்ல. கருத்துத் தொடரைப் பொறுத்துச் சில சமயங்களில் நீண்ட வசனமும் தேவையாயிருக்கும். ஆனால், ஆகையால், என, என்று – இப்படியான பல சொற்கள் தமிழில் இருப்பதால் கருத்துக்களை மலைபோல் தொடுப்பதற்கு இவை உபயோகமாயிருக்கின்றன. அளவுக்கு மிஞ்சி நிறுத்தி வசனங்களைச் சுருக்கினாலும் சிந்தனையின் வேகம் தடைப்பட்டு வேதனையைக் கொடுக்கும்@ பேச்சின் அழகும் குன்றிப்போகும்.

சட்டென்று பொருள் விளங்காத கடினமான பதங்களையும், உச்சரிக்கக் கஷ்டம் தரும் சொற்கூட்டங்களையும் ரேடியோ பேச்சில் அறவே தவிர்க்க வேண்டும். ல, ழ, ள ஆகிய எழுத்துக்கள் ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று நிறைந்திருக்கும் சொற்கள் உச்சரிக்க இடரைத்தரும். இதே விதமாக ரகர றகரத் தொடர்கள், டகர தகரத் தொடர்கள், ணகர னகரத் தொடர்கள் இனம் காரணமாக நாவைப் புரட்டிவிடும். ஆகவே, ரேடியோப் பேச்சை எழுதும்போது உச்சரிப்புக்குச் சுலபமான சொற்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். ரேடியோவில் உச்சரிக்கும் போது திரிந்து விழக்கூடிய சொற்களையும் அகற்ற வேண்டும். ‘போன்று’ என்றுசொல்வதைவிட, ‘போல’ என்பது சுலபம். ‘வாழ்பவர்கள்’ என்பதை விட ‘வாழ்வோர்’ என்பது உச்சரிக்க எளிது. பகர வகரத் தொகுதி அதிகமாயிருந்தாலும் உச்சரிப்பது கஷ்டம். உதாரணம்: ‘ஒப்புவிப்பவர்’ மிக நீண்ட சொற்றொடர்களும் ஆகா. கூடியவரையில் ரேடியோப் பேச்சுப்பிரதியில் சந்தி பிரித்து எழுதிக் கொள்வது நல்லது. பொருட்டொடர் – பொருள் தொடர், கல்வியிற்றேர்ந்தவர் – கல்வியில் தேர்ந்தவர், பற்றற – பற்று அற. வரிவடிவத்துக்கு அவசியமான இலக்கணம் பேச்சுக்கு அவசியமில்லை.

பிரதியின் வடிவம்

கையெழுத்துப் பிரதியில் எழுத்துப் பிழைகள், சொற்களும் வரிகளும் ஒழுங்கில்லாமல் தாறுமாறாயிருத்தல். சொற்களுக்கிடையில் சமமான வெளியில்லாமல் கூடியும் குறைந்துமிருத்தல் - இவையெல்லாம் மைக்கின் முன்னால் உட்கார்ந்து படிக்கும்போது கஷ்டத்தைத் தருமாகையால், பேச்சையும் உருக்குலைக்கும். அடிக்கடி தாமதிக்கச் செய்யும். ஆகையால் படிப்பதற்குச் சுலபமாயிருக்க, எழுத்துப் பிரதியின் வடிவம் அமையவேண்டும். மிக அகலமான கடுதாசியில் நீண்ட நீண்ட வரிகளாக எழுதலாகாது. நீண்ட வரிகளானால் இடது பக்கத்திலிருந்து வலது பக்க முடிவுவரை பிரயாணம் செய்யும் கண் மறுபடியும் இடது கோடிக்கு வரும்போது அடுத்த வரியைத் தேடுவதில் காலதாமதமேற்படும். சில சமயம் வரி தப்பிப் போய்த் தவறான வரியை வாசிக்கவும் நேரிடலாம். இந்தக் குற்றங்களைத் தவிர்க்க. காகிதத்தில் எப்பொழுதுமே அதிக நீளமில்லாத வரிகளாக எழுதுவது நல்லது. மேலும், வலது பக்கத்தில் காகிதத்தின் கரையிலே வந்து முடியும் வரியிலே பூரணமான சொற்கள்இருத்தல் வேண்டும். சொற்களை முறித்து வலது கரையில் பாதியும் மறுபாதி இடது கரையிலுமாக எழுதினால் கண்ணுக்கு வீண் சிரமம் தரும். கூடியவரையில் ஒரு கருத்துப் பூரணமாக இருக்கும்படி ஒவ்வொரு வரியும்முடியுமானால் மிக விசேஷம். படிக்கும்போது வலப் புறத்திலிருந்து திருப்பிக் கண்ணை இடது புறம் கொண்டுவரவேண்டுமாகையால், ஒரு கருத்து முடியும் இடமாயிருந்தால், அதில் தாமதிக்கும்போது இயல்பாகத் தொனிக்கும். முதல் முதலாக ரேடியோவில் பேசப் போகிறவர்கள் தமது எழுத்துப் பிரதியில் கருத்துக் கமைய நிறுத்த வேண்டிய இடங்களிலெல்லாம் கமாஅல்லது ஒரு கோடு போட்டு வைத்துக் கொள்வது உதவியாயிருக்கும். வின்ஸ்டன் சர்ச்சில் தம் மேடைப் பேச்சுக்களையெல்லாம் எழுதி வைத்துத்தான் பேசுவது வழக்கம். அவர், தமது பேச்சுநல்ல முறையில் அமைவதற்காக எழுத்துப் பிரதியில், பொருள் விளக்கத்துக்கு ஏற்ற சொற்கூட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு சொற்கூட்டத்தையும் தனித் தனி வரியாக எழுதிக்கொள்ளுவார். இதுபார்வைக்கு வசன கவிதை போலக் காட்சியளிக்கும். உதாரணமாக, பின்வரும் அமைப்பைக் கவனிக்க.

பேசும் பேச்சு
இனிமையாக இருக்க வேண்டும்
மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் பொருட்படுத்தாமல்
நடந்து கொள்ளக்கூடாது.
உள்ளத்தில் அன்பு இருந்தால்,
பேச்சு
அந்த அன்பில் தோய்ந்து
ஈரத்தோடு தானாக வெளிப்படும் என்று
வள்ளுவர் சொல்லியிருப்பது,
இனிய பேச்சுக்கு இலக்கணமும்
அதை அடையும் வழியுமாகும்.

மேலே காட்டியபடி தான் ரேடியோப் பேச்சின் எழுத்துப்பிரதி அமையவேண்டும் என்பது விதியல்ல. சொற்களைக் கொண்டு கூட்டுவதற்கு மாத்திரம் ஒரு நல்ல உதாரணம்.

மனிதன் குரலில் தோன்றும் சங்கீதம் பூரணத்தன்மை அடைவதற்கு, கருத்தும். மொழியும், ராகமும், தாளமும் - இந்த நான்கும் ஒன்றில் ஒன்று சரியாகப் பொருந்தி, ஒன்றை யொன்று பூரணப்படுத்தி நிற்க வேண்டும். வெறும் தாளத்தை மிருதங்கத்தில் கேட்டு மகிழ்ச்சி அடையலாம். ராகத்தையே தனியாகக் கேட்டும் இன்பம் பெறலாம். இசையில்லாமல் பாட்டைத் தனியாகக் கேட்டு, கருத்தும் மொழிகளும் சந்தோஷம் தரப்பெறலாம். கருத்தும் கவி உருவமின்றியே அறிவாளிக்குத் திருப்தி தரக்கூடும். ஆனால் கருத்து, மொழி, ராகம், தாளம் நான்கும் பொருத்தம் பெற்றால், பாமரரையும். கல்விகற்ற பெரியோர்களையும் ஒருங்கே பரவசப்படுத்துகிறது.

[ நன்றி:   ” ஒலிபரப்புக் கலை” நூல் ,    http://noolaham.net/project/04/340/340.htm ]


தொடர்புள்ள பதிவு:
சோ. சிவபாதசுந்தரம்: விக்கிப்பீடியாக் கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக