ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

712. பி.ஸ்ரீ. - 19

சீடரும் குருவும் 
பி.ஸ்ரீ 

ஏப்ரல் 30, 2017. பல இடங்களில் ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி கொண்டாடப் படுகிறது.


சுதேசமித்திரனில் 1948 -இல் பி.ஸ்ரீ ‘பிரபந்த சோலையில் இராமானுஜர்’ என்ற ஒரு சிறு தொடர் எழுதினார்.  அதில் இது ஒரு கட்டுரை:


[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

711. சிறுவர் மலர் - 2

பரம்பரைக் குணம்
உ.வே.சாமிநாதய்யர் 

‘அசோகா’ என்ற இதழில் ‘பாப்பா கதை’ப் பகுதியில்  1948 -இல் வெளிவந்த  சிறு கட்டுரை இதோ!



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
சிறுவர் மலர்
உ.வே.சா 

710. உ.வே.சா. - 8

கும்பிடுவோம் 
கி.வா.ஜ 


ஏப்ரல் 28. உ.வே.சா -வின் நினைவு தினம்.

6.3-1948 -இல் தமிழ்த் தாத்தாவின் உருவச்சிலை  சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டது.



அந்த விழாவைக் கொண்டாடியது ‘அசோகா’ என்ற ஒரு தமிழ்ப் பத்திரிகை.
 அந்த இதழ் வெளியிட்ட பல ‘உ.வே.சா’க் கட்டுரைகளிலிருந்து சில துண்டுகள் இதோ!


முதலில் , ஒரு தலையங்கக் குறிப்பு :
அடுத்ததாய், கி.வா.ஜ. வின் ஒரு பாடல்.



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள் :

வியாழன், 27 ஏப்ரல், 2017

709. கு.ப.ராஜகோபாலன் - 1

"சிறுகதை ஆசான் “ கு.ப.ரா.
 பி.தயாளன்   


ஏப்ரல் 27. கு.ப.ராஜகோபாலனின் நினைவு தினம்.
===

சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்பட்டும் கு.ப.ராஜகோபாலன்.

 கும்பகோணத்தில், 1902-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பட்டாபிராமையர்- ஜானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

 கு.ப.ரா.வுக்கு 6 வயதானபோது அவர்களது குடும்பம் திருச்சிக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயிலத் தொடங்கினார். 1918-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷனில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். பிறகு, திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அப்போது, தந்தையார் இறந்துவிட்டார். தந்தையாரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் மீண்டும் கும்பகோணத்துக்கே குடிபெயர்ந்தது.

 கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்து, வடமொழியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். ஆங்கிலத்தில் கீட்ஸ், ஷெல்லி, ஷேக்ஸ்பியர் முதலான பெரும் கவிஞர்கள்களின் கவிதைகளையும், வடமொழியில் வால்மீகி, காளிதாசர், பவபூதி முதலியவர்களின் படைப்புகளையும், வங்காளத்தில் தாகூர், பங்கிம் சந்திரர் முதலானோரின் நூல்களையும் கற்றார். இக்கல்வியே பிற்காலத்தில் அவர் தமது ஒவ்வொரு படைப்புகளிலும் தனி முத்திரையைப் பதிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.

 ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர், கு.ப.ரா., படித்த கல்லூரிக்கு வருகை புரிந்தார். அப்போது, கவிஞர் தமது சில கவிதைகளைப் பாடிக் காட்டினார். தாகூரின் வங்கக் கவிதைகள் கு.ப.ரா.வின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. வங்க மொழியின் சிறப்பு அவருடைய உள்ளத்தை ஆட்கொண்டது. அதன் விளைவாக, அவர் வங்க மொழியைப் பயின்றார். கிருஷ்ணமாசாரியார் என்ற வடமொழி அறிஞருடன் இணைந்து "காளிதாசர்' என்னும் பெயரில் ஒரு மாத இதழை நடத்தினார். "ஷேக்ஸ்பியர் சங்கம்' என்ற இலக்கிய அமைப்பிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.

 கு.ப.ரா.வும், ந.பிச்சமூர்த்தியும் இணைந்து, கும்பகோணத்தில், "பாரதி சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் பல ஆண்டுகள் பாரதி விழாவை நடத்தி, பாரதியின் பெருமையைப் பறைசாற்றினார்கள்.


 கு.ப.ரா. தம் 24-வது வயதில் அம்மணி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலூர் தாலுகா அலுவலகத்தில் கணக்கராகப் பணியில் சேர்ந்தார். இலக்கியங்களைப் படிப்பதிலும், படைப்பதிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட அவருக்குத் தாலுகா அலுவலகப் பணி சிறிதும் பிடிக்கவில்லை. ஆனாலும், தாலுகா அலுவலகக் கணக்கராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

 கு.ப.ரா. தம் 32-வது வயதில் "கண்புரை' நோயால் பாதிக்கப்பட்டார். தமது அரசுப் பணியைவிட்டு விலகி, கண் சிகிச்சைக்காகக் கும்பகோணம் சென்றார்.

 கண் பார்வை மங்கிய நிலையிலேயே அவர், "மணிக்கொடி' போன்ற இதழ்களுக்குக் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். பின்னர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கண் பார்வை பெற்றார்.

 பின்னர் சென்னைக்கு வந்து, முழுநேர எழுத்தாளராகவே, தம் வாழ்க்கையைத் தொடங்கினார். எழுத்து ஒன்றையே தொழிலாகக்கொண்டு வாழ முற்பட்டபோது, கு.ப.ரா.வின் வாழ்க்கையில் துன்பங்கள் பல தொடர்ந்து வந்தன.

 நிலையான வேலை எதுவும் கிடைக்காதபோதும் அவர் மனம் தளராமல், மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் முதலிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பலவற்றை எழுதிவந்தார்.

 வ.ரா.வை ஆசிரியராகக் கொண்டு 1939-ஆம் ஆண்டு வெளிவந்த "பாரத தேவி' என்ற வார இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். அதில், அவரது இயற்பெயரிலும், "பாரத்வாஜன்', "கரிச்சான்', "சதயம்' என்னும் புனை பெயர்களிலும் பற்பல கதைகள் படைத்தார். கட்டுரைகளும் எழுதினார். பின்னர், கா.சீ.வேங்கடரமணி நடத்திய "பாரதமணி' என்னும் இதழில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.

 இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, சென்னையிலிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சொந்த ஊரான கும்பகோணத்துக்கே திரும்பினார். அங்கு, "மறுமலர்ச்சி நிலையம்' என்னும் பெயரில் புத்தக நிலையம் ஒன்றைத் தொடங்கினார். வானொலியில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சிறுகதைகள் பல வானொலியில் ஒலிபரப்பாயின. அப்போது அவருடைய திறமையை வானொலி நிலையத்தார் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்பினர். ஆனால் கு.ப.ரா., வானொலியில் பணியாற்ற மறுத்துவிட்டார். இறுதிவரை எழுத்தை நம்பி வாழ்வது என்று முடிவு செய்துவிட்டதாக உறுதியாகக் கூறிவிட்டார்.

 சுதந்திர சங்கு, மணிக்கொடி, பாரத தேவி ஆகிய இதழ்களில் ஓரங்க நாடகங்களை எழுதியுள்ளார். கு.ப.ரா. எழுதிய 13 ஓரங்க நாடகங்களின் தொகுப்பான "அகலியை' அவர் மறைந்து 20-ஆண்டுகளுக்குப் பிறகு 1964-ஆம் வெளிவந்தது. "இலக்கியத் திறனாய்வு' என்னும் நோக்கில் கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து எழுதிய நூல் "கண்ணன் என் கவி'. "பாரதியார் மகாகவி அல்லர்' என்னும் கல்கியின் கூற்றை மறுத்து, "பாரதியே மகாகவி' என்பதை நிலைநாட்டும் நன்முயற்சியாக இந்நூலை கு.ப.ரா.வும் சிட்டியும் இணைந்து படைத்தளித்தனர்.


 "எதிர்கால உலகம்' என்பது கு.ப.ரா.வின் சிந்தனை நூல். உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணும் பெரியோர்களில் முக்கியமான ஆறு பேரைப் பற்றிச் சுருக்கமாக எழுதியுள்ளார். ஆங்கில மொழியிலிருந்து ஸ்டீவன்ஸனின் "டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்னும் நாவலை தமிழில், "இரட்டை மனிதன்' என்ற தலைப்பில் கொண்டுவந்தார். ரஷ்ய மொழியிலிருந்து டால்ஸ்டாய் சிறுகதைகளையும், வங்க மொழியில் பெரும் புகழ்பெற்ற பங்கிம் சந்திரர், சரத் சந்திரர் ஆகியோரின் நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.



 சரத் சந்திர சட்டர்ஜி, சியாராம் சரண குப்தர், வி.ச.காண்டேகர், லியோ டால்ஸ்டாய், ரமேச சந்திர தத்தர் ஆகிய ஐந்து தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற ஆறு நாவல்களை "ஆறு நவயுக நாவல்கள்' என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.

 "ஸ்ரீஅரவிந்த யோகி', "டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்' என்னும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரண்டு படைத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும், பல கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். அவை இன்னும் நூல் வடிவம் பெறாதது தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும்.

 துறையூரிலிருந்து வெளிவந்த "கிராம ஊழியன்' என்ற இதழின் சிறப்பாசிரியர் பொறுப்பை 1943-ஆம் ஆண்டு ஏற்றார். கிராம ஊழியனில் ஆசிரியர் பொறுப்பை 1944-ஆம் ஆண்டு ஏற்றபோது, "காங்க்ரின்' என்னும் கொடிய நோய் கு.ப.ரா.வின் கால்களைத் தாக்கியது. உணர்ச்சியற்றுப் போனதால், முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் உடனடியாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், உடல் நலிவுற்று, 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி காலமானார்.

 அவர்தம் இறுதிக் காலத்தில் "வேரோட்டம்' என்ற நாவல் ஒன்றை எழுதத் தொடங்கி, ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதினார். ஆனால், அந்நாவல் முடிவதற்குள், அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. அந்த முற்றுப் பெறாத நாவல், கு.ப.ரா.வின் பெயரையும் பெருமையையும் தமிழ் நாவல் உலகில் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

கு.ப.ராஜகோபாலன்: பசுபதிவுகள்

கு. ப. ராஜகோபாலன்: விக்கிப்பீடியாக் கட்டுரை

புதன், 26 ஏப்ரல், 2017

706. மு.வரதராசனார் -3

உலகத்தின் வேலி 
மு.வரதராசனார்


ஏப்ரல் 25. மு.வரதராசனார் பிறந்த தினம்.

1946 -இல் ‘சக்தி’ இதழில் அவர் எழுதிய ஒரு கட்டுரை.






 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

மு.வரதராசனார்



708. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை - 2

ஆசிரியர் சுந்தரம் பிள்ளை 
வையாபுரிப் பிள்ளை 


ஏப்ரல் 26. சுந்தரம் பிள்ளையின் நினைவு தினம்.

’சக்தி’ இதழில் 1954-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:










   [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

707. சங்கீத சங்கதிகள் - 118

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 2
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 





ஏப்ரல் 26. சியாமா சாஸ்திரிகளின் பிறந்த தினம்.

சுதேசமித்திரனில் 1943-இல்  வந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் இரண்டு  கட்டுரைகள்.









[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

திங்கள், 24 ஏப்ரல், 2017

705. ஜி.யு.போப் - 1

ஜி.யு.போப் 10
ராஜலட்சுமி சிவலிங்கம்


 ஏப்ரல் 24. ஜி.யு.போப்பின் பிறந்த தினம்.
===

ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (1820) பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

l தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார்.

l தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.

l தான் போற்றிக் கொண்டாடும் மேலைநாட்டு மெய்ஞானிகளின் வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.

l இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

l புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிப்பித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக எழுதினார்.

l தமிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். இவரது நூல்கள் பல பதிப்புகள் வெளிவந்தன. பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.

l தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து ‘செய்யுள் கலம்பகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.



l இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதிவிட்டுதான் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை அவ்வாறு பாடல் எழுதியபோது, உள்ளம் உருகி கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்தது என்பார்கள்.

l தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் 88 வயதில் (1908) மறைந்தார். இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் இவரது கல்லறை உள்ளது. ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.


[ நன்றி: http://tamil.thehindu.com

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

704. ஷேக்ஸ்பியர் - 1

உலக கவி 
ச.நடராஜன்


ஏப்ரல் 23. வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு தினம்.

‘திருமகள்’ இதழில் 1942-இல் வெளியான ஒரு கட்டுரை இதோ!




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

சனி, 22 ஏப்ரல், 2017

703. கந்தர்வன் -1

இலக்கியப் போராளி இனிய கந்தர்வன்
 முனைவர் சி.சேதுபதி  


ஏப்ரல் 22. எழுத்தாளர், கவிஞர் கந்தர்வனின் நினைவு தினம்.
===
காந்தியவாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான சிக்கல் கணேசன் - கனகம்மாள் தம்பதியருக்கு 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி பிறந்தவர் நாகலிங்கம். நாகலிங்கத்துக்கும் முற்போக்குத் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு பலர் அறியாதது.

 மாடு மேய்த்து, ஜவுளிக்கடை, மளிகைக் கடை, டீக்கடைகளில் வேலை பார்த்து, பிறகு எப்படியோ படித்து, அரசாங்க வேலைக்கு வந்து, பணிநிமித்தம் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து, இறுதியாய் தென் சென்னைக்கு வந்து சேர்ந்த க.நாகலிங்கம் என்கிற தொழிற்சங்கவாதியின் புனைபெயர் சொன்னால் அனைவர்க்கும் புரிந்துவிடும். அவர்தான் கந்தர்வன்.

 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ரா.வை, "நைனா' என்றும், இளங் கவிஞர்களைத் "தம்பிகள்' என்றும் பாசத்தோடு அழைத்த இனிய தோழர். இலக்கிய உறவையும் இயக்கத்தையும் சுற்றமாய்க் கொண்டு இறுதிவரையிலும் இயங்கிய படைப்பாளி. 70-களின் தொடக்கத்தில் உருவான "மக்கள் எழுத்தாளர் சங்க'த் தோற்றத் தூண்களுள் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர்.


 கிழிசல்கள், மீசைகள், சிறைகள், கந்தர்வன் கவிதைகள் ஆகிய 4 கவிதைத் தொகுப்புகளையும், சாசனம், பூவுக்குக் கீழே, கொம்பன், ஒவ்வொரு கல்லாய், அப்பாவும் மகனும் ஆகிய 5 சிறுகதைத் தொகுதிகளையும், இன்னும் முழுமையாகத் தொகுக்கப்பெறாமல் இருக்கும் பல்வேறு இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அணிந்துரைகள் ஆகியவற்றையும் முற்போக்கு முகாமில் இருந்து தமிழுக்கு நல்கிய இலக்கியவாதி இவர். கவிஞர் எனப் பரவலாய் அறியப்பட்டாலும் தேர்ந்த கதைசொல்லி. அவர்தம் கவிதைகளுக்குள்ளும் கதைத் தன்மையே மிகுந்திருப்பது கண்கூடு.

 பேசுவதுபோலவே எழுதுவதும், எழுதுவதுபோலவே வாழ்வதும், இயக்கத்திற்காகவே இவை அனைத்தையும் அர்ப்பணித்து இறுதிவரைக்கும் இயங்கிய கந்தர்வன், இலக்கியப் போராளியாக என்றும் மிளிர்பவர்.

 பள்ளிப் பருவத்திலேயே கணக்குப்போட வைத்திருந்த சிலேட்டில், வெண்பா யாப்பில் கவிதை எழுதக் கற்றிருந்த நாகலிங்கத்தைக் "கந்தர்வன்' என்று அறிமுகப்படுத்தியது "கண்ணதாசன்' இதழ். திருலோகசீதாராம் எழுதிய "கந்தர்வ கானம்' படித்த உணர்வில் அவருக்குள் உதயமான பெயர் அது. உண்மையிலேயே, காண்போரை வசீகரிக்கும் கந்தர்வத் தோற்றம். நல்ல படைப்பொன்றை வாசித்துவிட்டால் குதூகலித்துக் கொண்டாடும் தீவிர ரசிகர்.

 ஒரு விமர்சகராகத் தமிழ் இலக்கிய உலகிற்குள் அறிமுகமாகிக் கவிஞராகி, இறுதியில் சிறுகதையாளராக நிலைத்துவிட்டவர் கந்தர்வன். சி.சு.செல்லப்பாவுடன் ஏற்பட்ட பரிச்சயமும், "எழுத்து' இதழில் படித்த ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளும் ஏற்படுத்திய தாக்கத்தில் மரபில் எழுத விரும்பாமலும், புதுமை வடிவம் பிடிபடாமலும் தவித்த கந்தர்வனைப் பரமக்குடியில் ஏற்ற கவியரங்கத் தலைமை, மக்களுக்கான மொழியில் கவிதை எழுதக் காரணமாயிற்று. அன்று தொடங்கி இறுதிவரையிலும் அவர் எழுதிய கவிதைகள் அலங்காரமற்ற, எளிய கவிதைகளாக உலவிவந்தன. "பிரசாரக் கவிதைகள்' என்றும் கூறப்பட்டன.

 ""என் கவிதைகள் மிகுந்த இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ, அவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றோ நான் கவலைப்படுவதில்லை. எளிய மொழியில், மக்களுக்குக் கருத்துகளை எடுத்துச் சொல்கின்ற கருவியாகத்தான் நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார் கந்தர்வன்.

 பாதிக்கப்பட்ட மக்களின், துயரப்பட்ட பெண்களின் உணர்வுகளை உள்வாங்கி, கவிதைகளாகவும் களத்தில் கற்ற அனுபவங்களைக் கதைகளாகவும் வடிக்கத் தெரிந்த கந்தர்வனின் "கயிறு' கவிதை, பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

 எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மகேந்திரன் இவரது "சாசனம்' சிறுகதையைத் திரைப்படமாக்கவும் முனைந்தார்.

 கந்தர்வன் கதைகளில், கி.ரா., வண்ணதாசன்; கவிதைகளில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்ஒளி, தணிகைச் செல்வன் ஆகியோரின் தாக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்றாலும், தன் காலத்துப் பதிவாகத் தனித்தன்மையோடு தன் குரலில் சொல்லப் பழகியிருந்தார் அவர்.

 சொந்த மண்ணை விட்டு உத்தியோக நிமித்தமாய் எந்த ஊர் போனாலும் அந்த ஊர் மண்ணின் வாசமும் மனிதர்களின் நேசமும் மறைந்துவிடுவதில்லை. யாதும் ஊராக யாவரும் கேளிராக அமைவதும் கூடச் சொந்த ஊரின் நினைவுப் படிமங்களில்தான். அந்தப் படிமங்களை எழுத்தில் இறக்கி எல்லோர்க்கும் பொதுவாக்கி, மனிதம் பேணிய இலக்கியப் போராளி கந்தர்வன்.

 சொந்த வாழ்வில் கண்ட உண்மைகளை, உணர்ந்த உறவின் வலி(மை)களைத் தமக்கே உரிய பாணியில் எழுத்தில் வார்த்த இவருடைய சிறுகதைகளுள் ஒன்று, ஒவ்வொரு கல்லாய். அப்படிப் பார்த்துப் பார்த்துப் புதுக்கோட்டையில் அவர் கட்டிய வீட்டைப் பூட்டிவிட்டு, மகளின் அன்பு வற்புறுத்தலுக்கு இணங்கித் தமது மனைவி சந்திராதேவியோடு இறுதிக்காலத்தில் சென்னையில் வாசம் புரிந்த கந்தர்வன், சில இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுக் கட்டுரைகள் படித்தார். உடல்நலக் குறைவால் படுக்கையில் விழுந்தபோதும் வீட்டாருக்குத் தெரியாமல் இடையிடையே எழுதி வந்த கந்தர்வன், 22.4.2004 அன்று காலமானார்.

 கலை இலக்கிய இரவுகளில், இயக்கக் கவியரங்குகளில் கம்பீரமாக ஒலித்த கந்தர்வ கானம், நிரந்தரமாக உறைந்துகிடக்கும் நூல்களை எடுத்துப் படிக்கும் எவர்க்குள்ளும் அவரது இதயத்துடிப்பு கவிதைகளை நிரப்பும்; கதைகளை விரிக்கும். காரணம் அவரது வாழ்வியல் சாசனம் அவரது இலக்கியக் களஞ்சியம்!

[ நன்றி : தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கந்தர்வன் : விக்கிப்பீடியாக் கட்டுரை

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

702. வசுமதி ராமசாமி -1

"இலக்கிய நந்தவனத்தில் ஒரு துளசிச் செடி' வசுமதி ராமசாமி!
 திருப்பூர் கிருஷ்ணன்    



ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம்.
====

இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் வை.மு.கோதைநாயகி போல் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு பெயர் வசுமதி ராமசாமி. (தோற்றம்: 21.4.1917, மறைவு: 4.1.2004). கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன.

எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர் வசுமதி ராமசாமி.

தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைப் பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தார். (இறுதி ஆண்டுத் தேர்வின் போது கணவர் மறைந்தது இவரைப் பாதிக்கவே படிப்பைத் தொடரவில்லை.)

தினமணி கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான "காப்டன் கல்யாணம்', சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் கல்கியின் "அலை ஓசை' போலவே குறிப்பிடத்தகுந்த இன்னொரு படைப்பு.


கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் "காப்டன் கல்யாணமும்' விகடனில் வந்தது. ""தில்லானா மோகனாம்பாள் வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?'' என்று எந்தப் பொறாமையும் இல்லாமல் அவர் சொல்லி மகிழ்ந்ததுண்டு. கல்கி எழுத்துகளின் தீவிர ரசிகை. தம் எழுத்தில் தென்படும் மெல்லிய நகைச்சுவைக்குக் கல்கிதான் தமது குரு என்று அவர் சொன்னதுண்டு.

காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். காந்தி சென்ற வழியில் நடந்தவர் மட்டுமல்ல, காந்தி காட்டிய வழியில் நடந்தவரும் கூட.


முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய "இந்திய மாதர் சங்கம்' என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை ஈடுபாட்டோடு நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது.

லால்பகதூர் சாஸ்திரியிடம் யுத்த நிதியாக அந்தக் காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர். மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர். "தேவியின் கடிதங்கள்' என்ற இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் ராஜாஜிதான். ராஜாஜியிடம் மூன்று ஆண்டுகள் உபநிடதமும் கற்றவர்.


சிட்டி, ரா.கணபதி, பரணீதரன் போல இவரும், நூறாண்டுத் தவமுனிவரான காஞ்சிப் பரமாச்சாரியார் மேல் மிகுந்த பக்திகொண்டவர். "இந்தியன் எக்ஸ்பிரஸ்' அதிபர் ராம்நாத் கோயங்கா, பரமாச்சாரியாரை நடமாடும் கடவுள் என்று, தாம் அளித்த "இல்லஸ்டிரேடட் வீக்லி' நேர்காணலில் சொன்னபோது, அந்தக் கருத்தை நூறு சதவிகிதம் ஏற்றவர் வசுமதி ராமசாமி. பரமாச்சாரியார் கட்டளைப்படி, "ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். (அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார். இலவசத் தங்கத் தாலி வழங்கும் தொண்டு தொடர்கிறது.)

காவிரியுடன் கலந்த காதல், சந்தனச் சிமிழ், பார்வதியின் நினைவில், பனித்திரை, ராஜக்கா முதலிய பல சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். "ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்' என்ற ஆன்மிக நூலின் ஆசிரியரும் கூட. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இன்று ஐநூறு மாதக் கூட்டங்களை ஒரு மாதம் கூட விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டிருக்கும் "இலக்கியச் சிந்தனை' அமைப்பின் முதல் கூட்டத்தில் இவரது "சிவன் சொத்து' என்ற கதையைப் பரிசுக் கதையாகத் தேர்ந்தெடுத்தவர் அகிலன்.

சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் இவரும் ஒருவர். பாரத தேவி, ராஜ்ய லட்சுமி போன்ற பெண் முன்னேற்றத்துக்கான பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தவர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார்.

சீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஔவை டி.கே.சண்முகம் இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஔவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.

கணவர் ராமசாமி முன்னணி வழக்கறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். மனைவியின் எழுத்தார்வத்துக்கு உறுதுணையாக இருந்தவர். வசுமதி, கணவர் ராமசாமியைக் கைப்பிடித்தபோது வசுமதியின் வயது பன்னிரண்டுதான். 62 ஆண்டுகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார்.

"அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர். தவிர, இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள். வசுமதி ராமசாமி, தம் குழந்தைகளின் உள்ளத்தில் மட்டுமல்ல, தம்மால் பயன்பெற்ற ஏழைப் பெண்கள் உள்ளங்களிலும் இலக்கிய ரசிகர்கள் உள்ளங்களிலும் நிலையாக வாழ்கிறார்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

வசுமதி ராமசாமி
வசுமதி இராமசாமி : விக்கிப்பீடியாக் கட்டுரை

701. சிறுவர் மலர் -1

வாண்டுமாமா - 1


ஏப்ரல்  21. வாண்டுமாமா ( வி.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பிறந்த நாள்.

( விகடனில் அவர் பணி புரிந்தபோது, அவருக்கு ‘வாண்டுமாமா’ என்று பெயர் சூட்டியவர் ‘மாலி’ )

அவ்வப்போது என்னிடம் இருக்கும்/ கிட்டும் பழைய பாலர் மலர்ப் பகுதிகளை இந்த இழையில் இட நினைக்கிறேன்.

முதலில், ‘சிவாஜி’ இதழில் வாண்டுமாமா 1949-இல் எழுதிய சிறுவர் மலரிலிருந்து சில பக்கங்கள்.










 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]