புதன், 6 செப்டம்பர், 2017

826. முருகன் - 5

புல்வயல் குமரன்; தேன்மலை ஷண்முகன்
 குருஜி ஏ.எஸ். ராகவன்


 ’திருப்புகழ்’ குருஜி ராகவன்  ‘கல்கி’யில் 2002-  இல் எழுதிய  இன்னொரு கட்டுரை இதோ! ( அவர் எழுதிய மற்ற கட்டுரைகளின் சுட்டிகளைத் தொடர்புள்ள பதிவுகள் என்ற கடைசிப் பகுதியில் பார்க்கலாம்.) 

தலம்தோறும் தமிழ்க் கடவுள் - 26 
  முருகனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர்கள் பாடிய பல நூல்களுள் ஒன்று குமரேச சதகம். குருபாத தாஸர் என்பவர் பாடியது இந்த நூல். சதாகாலமும் முருகனை நெஞ்சில் இருத்திய குருபாததாஸரின் குமரேச சதகப் பாடல்கள், புன்வயல் (திருப்புல் வயல்) என்கிற சிறு கிராமத்திலுள்ள குமரன் மலை முருகனைப் பற்றியவை.

  இத் தலம் புதுக்கோட்டையிலிருந்து பதினோரு கி.மீ. தொலைவில் உள்ளது. ஊருக்குச் சற்று ஒதுக்குப்புறமாகக் குன்றம். குன்றத்துக்கு அணியாக அருள்மிகு தண்டபாணி கோயில். அந்த அணிக்கு மணியாக குருபாததாஸரின் கண்மணியாய்த் திகழ்ந்த முருகன் காட்சி தருகிறான்.

  குன்றின் அடிவார மண்டபத்திலுள்ள மயில் வாகனத்தைக் கடந்து எண்பது படிகள் ஏற வேண்டும். மேற்கு திசை நோக்கிய கோயில். மஹாமண்டபத்து வினாயகரும், விச்வநாதர் விசாலாக்ஷியும் பக்கத்திலேயே நிற்கின்ற வெள்ளி மயில் வாகனத்தைப் பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிலே முருகன் ஆரோகணித்து வந்தானெனில் அந்தக் காட்சி எப்பேர்ப்பட்டதாயிருக்கும் என நம் கற்பனையும் விரிகிறது!

  அர்த்த மண்டபத்தில் ‘மாங்கனிக்காக அரனை வலமது புரிந்த மதகரி’ என்று குருபாததாஸர் பாடிய சின்னஞ்சிறு வினாயகர் இருக்கிறார். உத்ஸவ மூர்த்தியாய் இங்கே நாம் காணும் முருகனின் அழகு மூலவரின் பேரழகுக்குக் கட்டியம் கூறுவது போல் தோன்றுகிறது.


  வினாயகர், மாங்கனிக்காக மாநிலம் சுற்றியவரல்லவா... ஆதலால், மூலஸ்தான முருகனும் தண்டாயுதபாணியாக - பழநி முருகனைப் போலவே ஆண்டிக்கோலத்திலிருக்கிறான்!

  பழனியாண்டி பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்தவன். இந்த குமரன்மலை முருகனோ ஒரு பக்தரின் ஆசையைப் பூர்த்தி செய்ய வந்தவன்.


  ஆண்டுதோறும் பழநி சென்று தரிசனம் செய்து வந்த சேதுபதி என்ற பக்தர், தள்ளாத வயதில் அவ்வாறு போக முடியாமல் மிகவும் வருந்தி முருகனை வேண்டினாராம். பாலமுருகன் அவர் கனவில் தோன்றி புன்வயல் குன்றின் முகட்டில் தாம் இருப்பதாகக் குறிப்புணர்த்தியிருக்கிறார். இருக்கும் இடத்தை அடையாளமிட்டு, ஒரு ‘சங்கஞ்செடி’ப் புதரின் அருகில் தேடும்படி கூறியிருக்கிறார். அங்கே சென்ற சேதுபதி, சங்கஞ்செடியருகே ருத்ராக்ஷமும் திருநீறும் இருக்கக் கண்டு, வியந்து மகிழ்ந்திருக்கிறார்.

  விரைவிலேயே அவ்விடத்தில் கோயில் எழுந்து விட்டது. ஸ்தல விருக்ஷமாக சங்கஞ்செடியே விளங்குகிறது.

  1975இல் சாதுராம் சுவாமிகள் இவ்வாலயத்துக்குக் குடமுழுக்குச் செய்து வைத்தார். நான்கு கால வழிபாடு, காரண ஆகம முறைப்படி இங்கே நடைபெறுகிறது.

  மூலஸ்தானத்து முருகன், மேற்கு திசை நோக்கி நிற்கிறான். சேதுபதியின் கலி தீர அன்று தோன்றியவன், இன்று எண்ணற்ற பக்தர்களின் பிணி தீர்க்கும் பொறுப்பை ஆற்றி வருகிறான்! நோயுற்றவர்கள், குறிப்பாக இளங் குழந்தைகளுக்காக - இங்கே நேர்ந்து கொண்டு காணிக்கை செலுத்துவது வழக்கமாக இருக்கிறது.


  குமரேச சதகத்தில் குருபாததாஸர் பொருத்தமாய்த்தான் பாடி வைத்திருக்கிறார் :

    பூமிக்கோ ராறுதலையாய் வந்து சரவணப் பொய்கை தனில் விளையாடியும்
     .............. ................ .................
    நிதமு மெய்த்துணையாய் விளங்கலா லுலகிலுனை 
     நிகரான தெய்வமுண்டோ! 
மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணிமணி 
மார்பனே வள்ளி கணவா! 
மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு  
மலைமேவு குமரேசனே


  விளையாட்டுப் பிள்ளையாய், அப்படியே அள்ளியணைத்து விடலாம் போன்ற அழகுடன்தானிருக்கிறான் புல்வயல் முருகன். பால் வடியும் முகமும் சற்றே சாய்ந்த தலையுடன், ‘வந்தாயா, வா!’ என்று அழைக்கும் நோக்கும், வேலாயுதமும் நம்மை அரவணைக்கவே காத்திருப்பது போல் துவண்டு நீளும் இடக்கரமும்... அழகுச் சித்திரமாய் ஆட்கொள்கிறான்.
  புல்வயல் மேவு குமரேசனைக் கண்ட வியப்பில் உறைந்து போய்விடாமல் புதுக்கோட்டை அருகே  மற்றொரு தலத்துக்குப் புறப்பட்டுப் போவோம் - ‘தேன் பருகு பூங்கடம் பணி மணி மார்பனே!’ என்றாரல் லவா குருபாததாஸர்? அந்தத் தேனுக்கும் திருமுருகனுக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டே! வள்ளியைக் காண வேடம்  பூண்டு வந்த முருகன் அவள் கையால் வாங்கி வாங்கிச் சாப்பிட்டது தேனுடன் தினைமாவுதானே!

  இந்தக் கதையையும் தேனாய் நம்முள் இனிக்கும் நினைவுகளையும் பறைசாற்றிக் கொண்டு நிற்கும் தேனீ மலையும் புதுக்கோட்டை அருகேதான் இருக்கிறது. நகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் பிரதான சாலையின் ஓரத்திலேயே மலைக்கோயில்.

  சிறு மலைதான். 300 அடி உயரம். 242 படிகள் ஏற வேண்டும்.

  ஏறும் வழியில் அழகிய மண்டபங்கள் இருக்கின்றன. கிழக்கு நோக்கிய கோயிலை மலை உச்சியில் அடைந்தால், அதன் முன்பு ஆலய மணியின் அருகே, வேல்கள் பலவற்றை நிலத்தில் ஊன்றி வைத்திருக்கக் காணலாம். அத்தனையும் அடியார் காணிக்கைகள். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கே வேல் வழிபாடே நடந்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

  மலையுச்சியிலிருந்து பார்த்தால் சுற்றுப்புறம் எங்கும் பசுமையாய், இனிமையாய் காட்சி தருகிறது. மலையின் பெயருக்கு ஏற்ப, அதன் முகட்டிலும் சரிவுகளிலும் நிறைய தேனீக்கள் வீடமைத்துள்ளன.
கோயிலில் ஒரே பிராகாரம்தான். இங்கும் விச்வநாதர், விசாலாக்ஷிதான்.

  கருவறை முருகனைப் பார்த்தால் வைத்த கண்ணை வாங்க முடியாது! ‘பச்சை மயில் வாகனம், பன்னிரு திண்தோள், கச்சைத் திருவரை, செங்கை, ஈராறு அருள்விழி, முகங்கள் ஆறு, விரிகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிகள்’ என்று கந்தர் கலிவெண்பாவில் காணும் வர்ணனை உயிர்ப் பெற்றது போல் இருக்கிறார் இந்த முருகன்.

  மயில்மேவிய முருகனின் இருபுறமும் தேவியர் இருவரும் நின்றகோலத்தில் காட்சி தருகின்றனர்.
இங்கும் வழிபாடும் விசேஷங்களும் சிறப்பாக நடக்கின்றன. பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் அன்று வெகு விமரிசையாக இருக்கும்.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

  என அருணகிரிநாதர் அனுபவித்துப் பாடிய முருகனை நாமும் அனுபவிக்க முற்படலாம். பாடலைக் கேட்கையில் ஆனந்தத் தேன் வந்து பாய்கிறபோது, அதன் பொருளையும் முருகன் அருளையும் உணர உணர உள்ளத்திலும் தேன் வந்து பாயாதோ!


[ நன்றி: கல்கி ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக