ஞாயிறு, 5 நவம்பர், 2017

894. கா.சு.பிள்ளை - 1

தமிழுக்குத் தொண்டுசெய்த பிள்ளை
 இரா. நாறும்பூநாதன்  



நவம்பர் 5. கா,சு.பிள்ளையின் பிறந்த தினம்.
==
தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய முன்னோடி கா.சு.பிள்ளை என்ற தமிழறிஞர் என்று சொன்னால் பலரும் புருவத்தை உயர்த்திப் பார்ப்பார்கள். கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்ட அல்லது போதிய வெளிச்சம் விழாத தமிழறிஞர் இவர்.

திருநெல்வேலி டவுண் புட்டாரத்தி அம்மன் கோவில் பக்கம் போய் "இங்கே கா.சு. பிள்ளை இருந்த வீடு எங்கே இருக்கு' என்று கேட்டால் ஒரு நிமிஷம் யோசித்து விட்டு, "எம்.எல். பிள்ளை வீடா அந்தா இருக்கு..' என்று சொல்லும் வயசாளிகள் இன்னும் இருக்கிறார்கள்.

"அது என்ன எம்.எல். பிள்ளை' என்று நாம் கேட்டால், அதுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

"நீங்க ஊருக்கு புதுசு போல.. அவுக அப்பா காந்திமதிநாத பிள்ளையை பி.ஏ. பிள்ளைன்னு தான் சொல்லுவாங்க. அந்தக் காலத்தில் முதன் முதலில் பி.ஏ. பட்டம் வாங்கியவர். அவரோட மகன் கா.சு.பிள்ளை என்ற கா. சுப்ரமணிய பிள்ளை 1917-ஆம் வருஷத்திலேயே முதுகலை சட்டப்படிப்பில் சென்னை மாகாணத்தில் முதல் மாணவராக பாஸ் செய்தவர். அதனால், அவரை எம்.எல். பிள்ளைன்னு தான் இங்கே சொல்வாங்க' என்று பூர்வ சரித்திரம் சொல்வதை கேட்கலாம்.

1888 நவம்பர் 5-ஆம் நாள் திருநெல்வேலியில் காந்திமதிநாத பிள்ளை - மீனாட்சியம்மை தம்பதிக்கு புதல்வராகப் பிறந்த இவர், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். பின்னர் ஷாஃப்டர் பள்ளியில் படித்தார். பள்ளி இடைவேளைகளில், நூலகத்தில் இருக்கும் ஆங்கில செய்தி தாள்களை வேகமாய் வாசிப்பாராம். அதில் வரும் தலையங்கங்களை மனப்பாடமாக உடன் படிக்கும் மாணவர்களிடம் பேசி காட்டுவது இவர் வழக்கமாம்.

மில்டனின் "பாரடைஸ் லாஸ்ட்' 12 பகுதிகளை பாராமல் சொல்லும் திறமை வாய்க்கப்பெற்றவர். தனது தந்தையிடம் மொழியறிவையும், செப்பறை சுவாமிகளிடம் தமிழ் இலக்கணத்தையும் கற்று தேர்ந்தார்.
1906-இல் மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்று, 1908-இல் மாகாணத்தில் முதல் மாணவராக எப்.ஏ. படிப்பில் தேறினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நண்பர்களுடன் இணைந்து "சைவ சித்தாந்த சங்க'த்தை உருவாக்கினார். மாணவர்களுடன் சேர்ந்து பல்வேறு ஆராய்ச்சி உரைகளை நிகழ்த்தினார்.

அக்காலத்தில், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாகூர் சட்ட விரிவுரையாளர் பரிசு அமைத்திருந்தார்கள். அந்தப் பரிசைப் பெற்ற தமிழர் கா.சு.பிள்ளை மட்டுமே. சட்டக்கலை குறித்து 12 சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும். கல்கத்தா பல்கலைக்கழகம் சென்று குற்றங்களின் நெறிமுறைகள் என்ற தலைப்பில் பன்னிரென்று உரைகள் நிகழ்த்தி இந்தப் பரிசினைப் பெற்றார் அவர்.

சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்பது ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் இருந்த காலத்தில், மயிலாப்பூரில் "திருவள்ளுவர் கழக'த்தை ஏற்படுத்தினார். பின்னர், நெல்லை திரும்பி "தமிழ் இலக்கிய வரலாறு' நூலை எழுதினார். இன்றளவும் அது மிக முக்கிய நூலாக விளங்குகிறது.

வரலாறு குறித்தும், சமயம் குறித்தும் இவர் பல நூல்கள் எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கியத்தின் அருமையை மேல்நாட்டவர் உணர, "நீதி நெறி விளக்கம்', "புறநானூற்றுப் பாடல்கள்' போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

"சைவ சித்தாந்தத்தின் இயற்கை தத்துவம்', "தேவாரத்தில் பழைய தெய்வ பனுவல்களிலும் இயற்கை' என்ற தலைப்புகளில் ஆங்கில நூல்களை எழுதி இருக்கிறார்.

திருநெல்வேலி நகராட்சி உறுப்பினராக 1932 முதல் 1937 வரை பணியாற்றினார். நெல்லையப்பர் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தார். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தாலும், தேவாரம் பாடிய பிறகே பக்தர்களுக்கு திருநீறு வழங்க வேண்டும் என்ற நெறிமுறையைக் கொண்டு வந்தார். கோவிலுக்குள் எல்லா சாதியினரும் சென்று வழிபட ஏற்பாடு செய்தார்.

இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த காலத்தில் இவரது மாணவர்களாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த இரா. நெடுஞ்செழியனும், க. அன்பழகனும். திராவிட இயக்க பற்று இருந்தபோதிலும், சமய ஈடுபாட்டின் காரணமாக அவரால், அதில் தொடர்ந்து நிற்க இயலவில்லை. இலங்கைக்கு சென்று பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

1934-இல், நெல்லையில் "சென்னை மாகாண தமிழ் சங்க'த்தின் முதல் மாநாட்டினை நடத்தி, தமிழின் பெருமைகளை ,தமிழரின் பெருமைகளை விளக்கும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இன்றும் "மாநில தமிழ் சங்கம்' நெல்லையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

"செந்தமிழ் செல்வி' இதழில் பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். அதில் இந்து மத அறநிலைய பாதுகாப்பு மசோதா குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் மிக முக்கிய ஆவணமாகும். இந்து மத அறநிலையத்துறை என்பதே அதன்பிறகு உருவாக்கப்பட்ட துறைதான்.
நெல்லை "மணிவாசக மன்ற'த்தின் தலைவராக இருந்து "மணிமாலை' என்ற இதழை நடத்தினார்.

சிறந்த எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுபவராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த பல்கலைப்புலவர் கா.சு. பிள்ளை என்கிற கா. சுப்பிரமணிய பிள்ளை தனது இறுதி காலத்தில், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார்.

வீட்டு வாடகை கொடுக்கக்கூட வழியின்றி, வறுமையில் வாடியநிலையில் தனது 56-ஆவது வயதில் காலமானார்.

திருநெல்வேலியின் பெருமைக்குக் காரணமானவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்த தமிழறிஞர் கா.சு. பிள்ளையை இனியாவது தமிழ்கூறு நல்லுலகம் சற்றே திரும்பி பார்க்கட்டும்.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கா.சு.பிள்ளை
கா. சு. பிள்ளை: விக்கிப்பீடியா

1 கருத்து:

Raveenthiran சொன்னது…

உண்மை பலராலும் அறியப்படாத தமிழ் அறிஞர்களைக் குறித்த தங்கள் பதிவுகள் சுவைக்கத் தக்கன.