ஞாயிறு, 12 நவம்பர், 2017

902. சுந்தா - 1

"பொன்னியின் புதல்வர்" எழுதிய சுந்தா
கலைமாமணி விக்கிரமன்நவம்பர் 11. எழுத்தாளர் ‘சுந்தா’வின் நினைவு நாள்.
===
’பொன்னியின் புதல்வர்' என்று பெயரிடப்பட்ட அமரர் "கல்கி'யின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று 1976-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த வரலாற்று நூலில் "இந்த வரலாறு தோன்றிய வரலாறு' என்று நூல் எழுதப்பட்ட வரலாற்றை, கல்கியின் புதல்வர் கி.ராஜேந்திரன் ஐந்து பக்கங்களில் சிறந்த, பயனுள்ள தகவல் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ""தினமணி கதிரில், தம் புதுதில்லி வாசத்தின் அனுபவங்களை எழுதத் தொடங்கினார் ஒருவர். அதைப் படித்தவுடன் "அடடா! இவரன்றோ அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதச் சரியான ஆசாமி என்று தோன்றியது'' என்று எழுதியுள்ளார் கி.ராஜேந்திரன். உடனே கி.ராஜேந்திரன் அவருக்குக் கடிதம் எழுதிக் கேட்டவுடன், மகிழ்ச்சியுடன் சம்மதித்தாராம் அவர். அவர்தான் எழுத்தாளர் - கவிஞர் சுந்தா.

 திருநெல்வேலி மாவட்ட மண்ணுக்குத் தனி மகிமை உண்டு. தமிழ் கண்ட தாமிரபரணி என்ற பொருனை, வ.உ.சி. போன்ற அஞ்சா நெஞ்ச சிங்கங்களைப் பெற்றது. ரசிகமணி டி.கே.சி., கு.அருணாசலக் கவுண்டர், பாஸ்கரத் தொண்டைமான், அ.சீ.ரா., ரா.பி.சேதுப்பிள்ளை, திருகூடசுந்தரம், பி.ஸ்ரீ முதலிய பல தமிழ் வளர்த்த பெரியார்களைப் பெற்றெடுத்ததும் திருநெல்வேலியே! சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ்ப் படைப்பாளர்கள் பலரை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அளித்ததும் திருநெல்வேலி சீமைதான்.

 திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில் 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி, இராமசந்திர ஐயர் - ருக்மணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

 "மேலநத்தம் இராமசந்திர ஐயர் மீனாட்சிசுந்தரம்' என்பது சுந்தாவின் முழுப்பெயர். மே.ரா.மீ.சுந்தரம் என்ற பெயரில் நிறைய எழுதினார். தில்லியில் பணியாற்றியபோதுதான் "சுந்தா' என்ற பெயர் பிரபலமானது.
 தொடக்க காலத்தில் கிராம முன்சீப்பாக வேலைக்குச் சேர்ந்தார். பதிமூன்று ரூபாய்தான் சம்பளம். வேலை பார்க்கும்போதே புத்தகம் படிப்பதில் ஈடுபாடு கொண்டார் சுந்தா. திருநெல்வேலி சந்திப்பு - ரயில் நிலையப் புத்தகக் கடையில் அதிக நேரம் இருந்து படிப்பார்.
 திருநெல்வேலியில் இருந்த காலத்தில், ரசிகமணி டி.கே.சி.யைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. பத்திரிகைகளுக்குக் கவிதைகள் எழுதி அனுப்புவார். "கலைமகள்' நடத்திய கவிதைப் போட்டி ஒன்றில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் கிடைத்தது.
 புதிய புத்தகங்களை நிறையப் படித்து வந்த சுந்தா, எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டார். அகராதிகளைச் சேர்ந்து, புதிய புதிய சொற்களைப் படித்து, அதன் பொருளை அறிந்து மற்றவர்களிடம் அந்தச் சொற்களைப் பற்றிப் பேசி ஆராய்வதில் - விவாதிப்பதில் அவருக்கு உற்சாகம் அதிகம்.
 ரசிகமணி டி.கே.சி. பரிந்துரையின் பேரில் திருச்சி வானொலி நிலையத்தில் சுந்தா பணியில் சேர்ந்தார்.


 டி.கே.சி.யின் வட்டத்தொட்டியில் ஏற்பட்ட பழக்கத்தால் ராஜாஜி, மகராஜன், தொ.மு.சி. பாஸ்கரத் தொண்டைமான் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு சுந்தாவுக்கு ஏற்பட்டது. எழுதத் தொடங்கினார். எழுத்திலே இயற்கையாக அமைந்த நகைச்சுவை, இலக்கியக் கவிதைநடை பலரைக் கவர்ந்தது. ஆசிரியர் கல்கியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

 பிறகு, தில்லி வானொலிக்குச் செல்லும்படி நேர்ந்தது. தில்லியில் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில், தமிழ்ச் செய்தி தயாரிப்பதோடு செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.

 "செய்திகள் வாசிப்பது எம்.ஆர்.எம்.சுந்தரம்' என்ற குரலுடன் தொடங்குவதை அன்று கேட்டவர்கள் - அந்தக் குரல் இன்றும் காதில் ஒலித்துக்கொண்டிருப்பதை உணர்வர். திறமை காரணமாக செய்திப் பிரிவில் தலைவராகப் பதவி உயர்வு கிடைத்தது.

 தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றியதோடு தமிழில் புதிய சொல் வடிவங்களைத் தாமே உருவாக்கிப் படிப்பார். "அடிக்கல் நாட்டுதல்', "குழந்தைகள் காப்பகம்' என்று அவர் உருவாக்கிய பல சொற்கள் இன்றும் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துக்காக சுந்தா உருவாக்கிய சொற்றொடர்கள்தாம் "நாம் இருவர் நமக்கு இருவர்', "அதிகம் பெறாதீர், அவதியுறாதீர்' போன்றவை.
 பாரதம் சுதந்திரம் பெற்ற புதிதில் தில்லி வானொலி நிலையத்துக்கு உரையாற்ற மகாத்மா காந்தி வந்தார். படிகளில் ஓரமாக நின்று அதிகாரிகள் அவரை வரவேற்றார்கள். அவர்களுள் ஒருவர் சுந்தா. பாபுஜி படியில் வைத்த கால் சற்றே நழுவ, தடுமாறியபோது அருகிலிருந்த சுந்தா, சட்டென்று காந்திஜியின் கரத்தைப் பற்றி அவர் விழுந்துவிடாமல் தடுத்துப் பிடித்தாராம். அப்போது காந்திஜி, "சுக்கிரியா' (நல்லது செய்தாய்) என்று நன்றி தெரிவித்தாராம். ஆனால் பாதுகாவலர்கள், காந்திஜியைத் தொட்டது தவறு என்று சுந்தாவைக் குற்றம் கூறினார்களாம்.

 புதுதில்லி தமிழர் வட்டாரத்தில் "சுந்தா' என்னும் மூன்றெழுத்துப் பெயர் மிகவும் பிரபலமானது. தில்லி தமிழ்ச்சங்கம் தொடங்கிய காலத்தில் அதன் வளர்ச்சிக்கு உதவியவர்களுள் சுந்தாவுக்கு முக்கிய பங்குண்டு. அந்த நாள்களில் தமிழ்ச் சங்கம் "சுடர்' என்ற அருமையான இலக்கிய இதழ் ஒன்றைத் தயாரித்தது. "சுடர்' தயாரிப்பதில் சுந்தாவின் பங்கு அதிகம்.
 அமெச்சூர் நாடகங்களில் சுந்தா நடித்திருக்கிறார். பாட்டி வேஷம் போட்டிருக்கிறார். குறவன்-குறத்தி நடனம் என்று நகைச்சுவை நாடகங்களும் நடத்தியிருக்கிறார்.

 சுந்தாவின் திறமையையும் ஆங்கிலப் புலமையையும் அறிந்த லண்டன் பி.பி.சி. நிறுவனத்தினர், தமிழோசை நிகழ்ச்சிகளைத் தயாரிக்க மூன்றாண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தனர்.
 சுந்தா, தில்லி வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது, சைக்கிளில்தான் எங்கும் செல்வார். சைக்கிள் மீது அவருக்கு மிகவும் விருப்பம். லண்டன் பி.பி.சி.யில் பணியாற்றும் உத்தரவு வந்தவுடனேயே தனக்கு விருப்பமான சைக்கிளை விற்றுவிட்டார். ஆனால், தில்லி விமான நிலையம் வரையில் சைக்கிளிலேயே பயணித்து "விமான நிலையத்துக்கு வந்து சைக்கிளைப் பெற்றுச் செல்லுங்கள்' என்று விலைக்கு வாங்கியவரிடம் தெரிவித்து அதன்படியே செய்தாராம்.

 வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பதே சுந்தாவின் லட்சியம். பணம் சேர்ப்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. சம்பளத்தை வாங்கி பெட்டியில் வைத்து விடுவார். பெட்டிக்குப் பூட்டு கிடையாது. வீட்டுத் தேவைக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள வீட்டாருக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார்.

 வானொலி நிலையப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, "தினமணி கதிரில்' ஆசிரியராக இருந்த பிரபல எழுத்தாளர் சாவி, தில்லி வாழ்க்கை அனுபவங்களை எழுத சுந்தாவை வற்புறுத்தினார். அதனால் சுந்தா, "தலைநகரில் ஒரு தலைமுறை' என்ற தொடரை எழுதினார். அந்தத் தொடர் கட்டுரை வாசகர் வரவேற்பைப் பெரிதும் பெற்றது. அந்தத் தொடர்தான், "கல்கி' ஆசிரியர் கி.ராஜேந்திரன், அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை சுந்தாவிடம் ஒப்படைக்கச் செய்தது.

 "பொன்னியின் புதல்வர்' என்ற மகத்தான நூல், அமரர் "கல்கி'யின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது. "கல்கி' வார இதழில் நான்கு ஆண்டுகள் எழுதினார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி மிக அதிகம். தான் மிகவும் போற்றிய - விரும்பிய எழுத்தாளர் கல்கியின் வரலாற்றை புதிய முறையில் எழுதினார். ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது வேறு பல செய்திகளைச் சேகரிக்க வேண்டியிருக்கிறது. அதில் விருப்பு வெறுப்பு ஏற்படக்கூடாது.

 கல்கியின் வாழ்க்கை வரலாற்றை 912 பக்கங்களில் எழுதியிருக்கிறார் சுந்தா. இந்த மாபெரும் படைப்பைத் தவிர, "இதய மலர்கள்' என்ற கவிதைத் தொகுப்பும், "கருநீலக் கண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் சிறு சிறு - ஒரு பக்க எழுத்துச் சித்திரங்களை தொடக்கக் காலத்தில் எழுதியிருக்கிறார்.
 சுந்தா, மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

 "பொன்னியின் புதல்வர்' என்ற மகத்தான வரலாற்றை எழுதிய பொருனைச் செல்வர் சுந்தா, 1995-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

தொடர்புள்ள பதிவுகள்:

மே. ரா. மீ. சுந்தரம் : விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக