செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மையல்: கவிதை

மையல்
பசுபதி


கருமை ஒளிரும் அழகி -- உன்னைக்
. . . கண்ட கண்கள் புனிதம்
பரிசம் தந்தும் அடைவேன் -- உந்தன்
. . . பரிசம் என்றும் வேண்டும்
அருமை அறிந்த ஆண்கள் -- உன்னை
. . . அடையப் போட்டி இடுவர்
பெருமை பிறகு தருவாய் -- என்மேல்
. . . பிறர்பொ றாமை வளரும்


கடையிற் பார்த்த உடனே -- என்னைக்
. . . காதற் தீயில் இட்டாய்
எடைக்குப் பொன்னும் சமமோ -- உன்றன்
. . . எழிலும் ஒளிரக் கண்டேன்
அடைய ஆர்வம் கொண்டேன் -- உன்னை
. . . அணைக்கக் கைது டித்தேன்
தொடையில் உன்னை வைக்க -- அருகில்
. . . துள்ளி ஓடி வந்தேன்


விடியும் காலை வேளை -- உன்னை
. . . விரைந்து வாரி எடுப்பேன்
கடிதில் காப்பி குடித்து -- உடனே
. . . கையில் தூக்கிக் கொள்வேன்
இடியும் புயலும் துச்சம் -- விரியும்
. . . இணையம் என்றன் சொர்க்கம்
மடியில் அமருங் கணினி -- உன்மேல்
. . . மைய லாகி நின்றேன்.

[ 23 ஜூலை, 2000 ‘திண்ணை’ யில் வெளியானது ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

9 கருத்துகள்:

Ramani சொன்னது…

எளிமையான வார்த்தைகளைக் கொண்டு
படிக்கப் படிக்கச் சுகம் தரும் மாச்சீரைக் கொண்டே
படைக்கப் பட்ட கவிதை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

சு.பசுபதி சொன்னது…

உங்கள் ஊக்கமொழிக்கு நன்றி, ரமணி.

AROUNA SELVAME சொன்னது…

கணினி மேல் மையல்....!!

சுவைத்துப் படித்தேன்.
அருமையான கவிதை ஐயா.

சு.பசுபதி சொன்னது…

@AROUNA SELVAME

மிக்க நன்றி, நண்பரே.

Krishnan Balaa சொன்னது…

கவிதை என்றால் என்னவென்று
காட்டும் சொற்கள் எளிமை;இந்தப்
புவியில் அதனைப் படித்துப்பார்த்தால்
புரியும் விதமோ அருமை!தமிழ்ச்
சுவையை உணர்ந்து மேலும்மேலும்
சூட்டும் சொற்கள் புதுமை;இந்த
அவையில் நல்ல தமிழைக் கண்டேன்
அதுதான் உங்கள் திறமை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.9.2012

சு.பசுபதி சொன்னது…

@Krishnan Balaa

உங்கள் ஆசு கவிதைக்கு நன்றி, நண்பரே.

Raj Krish சொன்னது…

அருமையான விருத்தம் அய்யா

மடியில் அரும் கணினி - அதுவே
மையல் கொண்ட கன்னி
அடிக்கும் மனைவி வந்து -வாயால்
. அரற்றுகின்ற போதும்
வடிவம் வயது இன்றி -என்னை
வழிய வைத்துப் பொழுது
விடியும் வரை பெருத்த- இன்பம்
. வாரி வழங்கி மகிழும்

Rajagopalan Vengattaramayer சொன்னது…

Malarin mevum thiruvukku poRaamai thara vandhal
Madiyil amarum kanini!!

usharaja சொன்னது…

இணையம் மோஹம் கவிதை, அமோஹம்!

கருத்துரையிடுக