திங்கள், 2 ஜனவரி, 2017

சசி -12 : திருட்டுப்போன நகை

 திருட்டுப்போன நகை
 சசி 


''ஏண்டி மங்களம், பக்கத்து வீட்டிலே ஒரே குதூகலமா இருக்காப்போலே இருக்கே! திருட்டுப் போன நகைகள் எல்லாம் ஒரு வேளை அகப்பட்டிருக்குமோ?'' என்று என் சம்சாரத்தைக் கேட் டேன்.

அதற்கு அவள், ''அப்படித்தான் தோண்றது. எதுக்கும், போய் விசாரிச்சுட்டு வாருங்களேன்!'' என்று சொல்லவே, நான் உடனேயே பக்கத்து வீட்டுக்குச் சென்று நண்பர் ஐயாசாமியை விசாரித்தேன்.

அவர் என்னைத் தனியே மாடி அறைக்கு அழைத்துச் சென்று தாழ்ந்த குரலில், ''திருட்டுப் போன நகைகள் ஒண்ணும் அகப்படவே இல்லை, சார்! போனது போனதுதான்!'' என்று தெரிவித்துவிட்டு, ''உங்களைச் சாப்பிடக் கூப்பிட நானே உங்க வீட்டுக்கு வரணும்னு நினைச்சிண்டிருந்தேன். நீங்களே வந்துட்டேள்! இன்னிக்கு என் பிறந்த நாள்! அதைக் கொண்டாடணும்னு என் சம்சாரம் ரொம்பவும் வற்புறுத்தினாள்'' என்று தெரிவித்தார்.

எனக்குச் சிரிப்பு வந்தது. ஏனென்றால், நண்பருக்கும் அவர் சம்சாரத்துக்கும் அவ்வளவாக அந்நியோன்னிய பாவம் வெகு நாளாகவே இருந்து வரவில்லை என்பது எனக்குத் தெரியும் அப்படியிருக்க, அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று அவர் சம்சாரம் வற்புறுத்தினாள் என்று கேள்விப்படும் போது சிரிப்புத்தானே வரும்?

என் சிரிப்பைக் கவனித்த நண்பர், ''நான் சொல்றது உண்மைதான் சார்! அவள் இப்போது அடியோடு மாறிவிட்டாள்!'' என்றார்.

''எதனால்?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

''முன்பு அவளுக்கு என்மீது அவ்வளவு மதிப்போ அக்கறையோ இல்லாததற்கு, நகை நட்டுகள் முதலிய சகல பொருள்களும் அவளுக்கு நிறைய இருந்ததுதான் காரணம். ஏதாவது தேவையாக இருந்தாலல்லவா அதை வாங்கிக் கொடுத்துத் திருப்திப்படுத்தி, மேலும் மேலும் அவள் அன்பைப் பெறமுடியும்!''

''வாஸ்தவந்தான்!''

''ஆனா, இப்போ நிலைமை மாறிப்போயிடுத்து. மறுபடியும் நகை நட்டுகளை நான் வாங்கிக் கொடுக்கணுமோல்லியோ? அதற்காக, அவள் எங்கிட்டே ரொம்ப அன்பு செலுத்துகிறாள்! பாருங்களேன். என் பிறந்த நாளைக் கொண்டாடித்தான் ஆகணும்னு ஒரே பிடிவாதம் பிடிக்கிறாள்!''

''கேட்கிறதுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு, சார்! ஆனால், ரொம்ப நஷ்டத்துக்கப்புறந்தான் இந்த மாதிரி சந்தோஷம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கு, இல்லையா?''

''நகைகள் திருட்டுப் போனதைத்தானே சொல்றேள்?'']

''ஆமாம்!''

''உங்களிடத்திலே உண்மையைச் சொல்றதிலே ஒண்ணும் தப்பு இல்லே. நகைகளை யாரும் வெளியிலேயிருந்து வந்து திருடிண்டு போகல்லே!''

''அப்படின்னா..?''

''நானேதான் ஒரு இடத்திலே மறைத்து வைத்திருக்கேன்! மனைவியினுடைய அன்பை மறு படியும் பெறுவதற்காக அதுமாதிரி செய்தேன்! எப்படி என் சூட்சுமம்?''

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சசியின் சிறுகதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக