வெள்ளி, 20 ஜனவரி, 2017

பெரியசாமி தூரன் - 2

 கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன்
கலைமாமணி விக்கிரமன்



ஜனவரி 20. ம.பெரியசாமி தூரனின் நினைவு தினம்.
===

திலகர் தூவிய விதை, பல தேச பக்தர்களை நாட்டில் உருவாக்கியது. மகாகவி பாரதியார் எழுப்பிய கனல், பல நூறு  இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. தொண்டர் பல்லாயிரம் கூடினர். இந்த இளைஞருள் சிலர் நூற்றாண்டு விழா கொண்டாடும் அளவுக்குச் சாதனை புரிந்தார்கள். அவர்களுள் ம.ப. பெரியசாமித்தூரனை தமிழுலகம் மறக்க முடியாது.

மகாகவி பாரதி மறைந்தபோது கல்லூரி மாணவராக விடுதலை வேட்கையுடன் இருந்த ம.ப. பெரியசாமித்தூரன் தமிழ் இலக்கியத்தில் பன்முகங்களில் தொண்டாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த மஞ்சக்காட்டுவலசு என்ற சிற்றூரில், பழனிவேலப்பக் கவுண்டர் - பாவாத்தாள் தம்பதிக்கு 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிறந்தார். தூரன் என்பது அவர் குலப்பெயர். அதுவே நிலைத்துவிட்டது.

தூரனின் எழுத்தார்வத்துக்கு அவருடைய பாட்டிதான் காரணம். சிறுவயதிலேயே தாயார் மறைந்ததால், தாய்வழிப் பாட்டியிடம் சிலகாலம் வளர்ந்தார். அவர் பாட்டி சொன்ன இதிகாசப் புராணக் கதைகள், நாட்டில் வாழ்ந்த வீர மரபினர் வரலாறுகள்தாம், பிற்காலத்தில குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்தன. பள்ளியில் சிறப்பாகப் படித்த பெ.தூரன், மேல்படிப்புக்குச் சென்னை வந்தார். 1926-1931 வரை மாநிலக் கல்லூரியில் பயின்றபோது மகாத்மா காந்தியின் கொள்கைகள், பேச்சு, நாட்டுப்பற்றுக் கனலை இளைஞர்கள் இதயத்தில் மூண்டெழச் செய்தது. அந்தக் கனலிடைப் புகுந்த தூரன் பி.ஏ. இறுதியாண்டுத் தேர்வை எழுதாமல் புறக்கணித்தார்.

பெ.தூரனின் இதயத்தில் நாட்டுப்பற்றும், இலக்கிய ஆர்வமும்,  "வனமலர்ச் சங்கம்' என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்த வைத்தது. பத்திரிகையாளராக வேண்டும் என்ற துடிப்பும் சேர்ந்தது. "பித்தன்' என்ற இதழைத் தொடங்கினார்.


தமிழ்முனிவர் திரு.வி.க.வின் சாது அச்சுக் கூடத்தில் "பித்தன்' இதழ் அச்சிடப்பட்டது. அதனால் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் தமிழ் இலக்கியங்களைக் கற்கும் ஆர்வமும் ஏற்பட்டது. குறிப்பாக மகாகவி பாரதியாரின் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஈடுபாடு பக்தியாக வளர்ந்தது. அந்த பக்திதான் பிற்காலத்தில் தமிழர்களுக்கு அரிய கருவூலத்தைத் திரட்டித் தர வழி வகுத்தது. பாரதி பணியாற்றிய சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பாரதியார் படைப்புகளைத் தொகுக்கத் தொடங்கினார்.

இளைஞர் பெ.தூரனின் இந்த ஆர்வம் பாரதியின் எழுத்துகள் (உரைநடை - கட்டுரைகள்) பெரும்பாலானவற்றைச் சேகரித்து "பாரதி தமிழ்' என்ற தொகுப்பைப் பிற்காலத்தில் வெளியிட வழிவகுத்தது.


தேசியப் போராட்டம் காரணமாக 1931-இல் பட்டப்படிப்பைத் துறந்தாலும், கோபிசெட்டிப்பாளையம் "வைரவிழா' பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். வாய்ப்பு ஒன்றன் பின் ஒன்றாய் அவரை வந்தடைந்தன.

தேசத் தலைவர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் தொடங்கியிருந்த ராமகிருஷ்ண வித்யாலயத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அந்தச் சூழ்நிலையில் கவிதை, கட்டுரை எழுதும் ஆர்வம் அவருக்கு வளர்ந்தது. பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த பெ.தூரன் தமிழில் பாடல்கள் (கீர்த்தனைகள்) புனையத் தொடங்கினார். பிற்காலத்தில்  இவரது கீர்த்தனைகள், ஸ்வர, தாள இசைக் குறிப்புகளுடன்  தொகுதிகளாக வந்துள்ளன.

கட்டுரை எழுதுவது தனிக்கலை. எந்தப் பொருளைப் பற்றி எழுதுவதானாலும் அவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள வேண்டும். தூரன், ஒவ்வொரு பொருளையும், மனிதரையும், பறவைகளையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால், அவர் எழுத்துகளில் நுணுக்கமாகச் செய்திகள் விவரிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அதைப்பற்றி தூரன் ஆடு மேய்க்கும் சிறுவனுடன் நடத்திய உரையாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.


தூரன் எழுதிய மின்னல்பூ, நிலைப்பிஞ்சு, இளந்தமிழா போன்ற கவிதைத் தொகுதிகள் மறக்க முடியாதவை. 1949-ஆம் ஆண்டு வெளிவந்த "இளந்தமிழா' கவிதைத் தொகுப்பு சிறந்த கவிஞர் என்னும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.

"கதையைப் படிப்பது போலக் கவிதைகளைப் படிக்கக் கூடாது. பலதடவை படிக்க வேண்டும்' என்று அவர் அடிக்கடி கூறும் வரிகள் அவர் சிறந்த ரசிகர் என்பதைத் தெரிவிக்கின்றன. அவை, இன்றைய கவிஞர்கள் சிந்திக்க வேண்டிய கருத்தாகும். கவியரங்குகளில் கவிதையில் ஒரே வரியைத் திருப்பித் திருப்பிச் சொல்வதை அவர் குறிப்பிடவில்லை! சொல்லப் போனால், ரசிகமணி டி.கே.சி. பாணியில் பலமுறை கவிதையைச் சொல்வதால் கவிதை மனதில் ஆழப்பதிந்து விடுகிறது. நயமும் பொருளும் மனதில் பதிகின்றன.

சிறுகதை இலக்கியத்திலும் அவர் தன் முத்திரையைப் பதித்தார். பெரியசாமித்தூரனின் சிறுகதைகள் ஐந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. "கரிசல் மண் கதைகள்', "வண்டல் மண் கதைகள்' தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்தப் பட்டிருக்கின்றன. கொங்கு நாட்டு மணம் கமழச் செய்த எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரத்தைப் பலர் நினைப்பதில்லை. அவருக்குப் பிறகு பெ.தூரன் எழுத்துகளில் அந்த மணம் வீசக் காணலாம். கொங்கு நாட்டுக் கிராம மக்களின் வாழ்க்கை, குணங்கள், அறநெறிகள், மரியாதை கலந்த உரையாடல்கள் அவருடைய கூரிய ஆழ்ந்த பார்வை யாவும் கதை மாந்தர்களில் பிரதிபலிக்கக் காணலாம்.

பெ.தூரன் செய்த மகத்தான பணிகள் இரண்டு. முதலாவது, பாரதியாரின் படைப்புகளைத் தேடிப் பிடித்து "பாரதி தமிழ்' என்ற நூலை வெளியிட்டது. கல்லூரியில் படிக்கும் போதே சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பழைய இதழ்களின் "நெடி-தூசு' இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு, பத்து ஆண்டுகளில் வெளிவந்த பாரதியின் எழுத்துகளைத் தேடிப்பிடித்து ஏறத்தாழ 134 தலைப்புகள் கொண்ட "பாரதி தமிழ்' என்ற நூலை வெளியிட்ட பணி. பாரதி இலக்கிய ஆய்வாளர்களுக்கு அந்தத் தொகுப்பு ஒரு கருவூலம்.

அடுத்த சாதனை, "கலைக் களஞ்சியம்' தயாரித்தது. தமிழ் மொழிக்கே அது தனிப் பெருமை. சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஆ.சிங்காரவேலு முதலியார் "அபிதான சிந்தாமணி' தமிழ்க் கலைக்களஞ்சியம் என்ற பெயரில் கலைக்களஞ்சியம் தயாரித்தார். அதில் பழைய புராணச் செய்திகளுக்கே முதன்மை இடம் தரப்பட்டிருந்தது. மெத்த வளரும் புத்தம் புதுக் கலைகளைத் தமிழிலும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் மேனாள் கல்வி அமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார், "கல்கி' போன்றோரின் அரிய முயற்சியால் "தமிழ் வளர்ச்சிக் கழகம்' என்ற ஓர் அரிய அமைப்பு உருவானது.


ஆங்கில மொழிக்குப் பெருமை சேர்ப்பது அம்மொழியில் மிகத் துல்லியமாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு கலைக்களஞ்சியங்களே! "புக் ஆஃப் நாலெட்ஜ்' "என்சைக்ளோபீடியா', "பிரிட்டானிக்கா' என்றெல்லாம் பெருமையாகப் பேசப்படும் "தகவல் அகராதி' அவற்றுக்கு இணையாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்கத் திட்டமிட்டனர். தமிழ் வளர்ச்சிக் கழகம் பிரதான ஆசிரியராக தூரனை நியமித்தது.

பழந்தமிழ் இலக்கியங்களை ஏட்டுச் சுவடியிலிருந்து தயாரிக்கும் பணியில் உ.வே.சா., ஈடுபட்டதுபோல, அறிஞர் பெரியசாமித்தூரன் பொறுமையுடன், சலிப்பின்றி, ஊக்கத்துடன் கலைக்களஞ்சியத்தைத் தயாரித்ததற்குத் தமிழுலகம் காலா காலத்துக்கும் நன்றி உடையதாக இருக்க வேண்டும். காந்தியச் செல்வர் பொ.திருகூடசுந்தரம் போன்ற அறிஞர்களின் பேருதவியுடன் கலைக்களஞ்சியம் தயாரிக்கப்பட்டது.

"கலைக்களஞ்சியம்' நிறைவேறிய பிறகு, தொடர்ந்து குழந்தைகள் கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. அந்தப் பணியும் தூரனிடமே ஒப்படைக்கப்பட்டது. கலைக்களஞ்சியம் நிறைவடையும் போதே உடல் நலம் குன்றியிருந்த தூரனின் ஆர்வமே குழந்தைகளுக்குக் கலைக்களஞ்சியம் உருவாக்கித் தந்தது.

கவிதைத் தொகுதிகள் நான்கு, சிறுகதைத் தொகுதிகள் மூன்று, கட்டுரைத் தொகுதிகள் மூன்று, நாடகங்கள் ஏழு, தமிழ் இசைக் கீர்த்தனைகள் எட்டு, குழந்தைகளுக்கு பதினைந்து, பாரதி இலக்கியத் தொகுப்பு பதினொன்று, அறிவியல் ஆராய்ச்சி நூல்கள் ஆறு என அவருடைய படைப்புப் பட்டியல் பிரிமிக்க வைக்கிறது.

பத்மபூஷண், கலைமாமணி என்ற பெரும் விருதுகளைப் பெற்ற படைப்பிலக்கியச் சிற்பியும் அறிஞருமான ம.ப. பெரியசாமித்தூரன், 1987-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி தமிழ்த்தாயின் திருவடிகளை அடைந்தார்.

கலைக்களஞ்சியம் உள்ள வரையில் தமிழுலகம் அவரை மறக்காது

தொடர்புள்ள பதிவு:

பெரியசாமி தூரன்

கருத்துகள் இல்லை: